ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 167

கேள்வி: இறைவனின் கருவறையை புகைப்படம் எடுப்பது குற்றமா?

முழுக்க முழக்க தவறு என்று கூற முடியாது. புற செயல்கள் இறையை எதுவும் செய்ய முடியாது. ஆனால் சில வகையான கட்டுப்பாடுகள் இருப்பதால்தான் சில ஒழுங்குகள் ஆலயத்தில் பின்பற்றப்படுகிறது. பல்வேறு ஆலய நிர்வாகங்களே இவ்வாறு நிழற்படத்தை எடுத்து வியாபாரம் செய்கிறது. என்றாலும் நீதி மாறும் போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அந்தந்த சூழலைப் பொறுத்து இதனை பின்பற்றிக் கொள்ளலாம். சித்தர்களைப் பொறுத்தவரை மனிதனின் கேவலமான எண்ணங்கள் குறுக்கு புத்தி சுயநலம் இவைதான் தோஷத்தையும் பாவத்தையும் உண்டாக்கக் கூடியவை. எனவே உள்நோக்கமும் தீய எண்ணங்களும் இல்லாத அனைத்து செயல்களும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

சுலோகம் -95

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-48

அர்ஜூனா பற்றினை நீக்கி வெற்றி தோல்விகளை சரிசமமாக எண்ணி தொழில்களை செய். நடுநிலையான எண்ணத்துடன் தொழில்களை செய்வதே யோகம் எனப்படும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த ஒரு செயல் செய்தாலும் அதன் விளைவாக வரும் பலனான வெற்றியையும் தோல்விகயையும் சரிசமமாக எண்ணி தொடர்ந்து செயல்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். வெற்றி வந்தால் மகிழ்வதும் தோல்வி வந்தால் துயரப்படாமலும் விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையான மனதுடன் இருக்க வேண்டும். இவ்வாறு இருப்பது யோகம் எனப்படும் இந்த யோகத்தில் இருந்து நீ உன் கடமையை செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

108 திவ்யதேசத்தில் 2 வது திருக்கோழி

திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளே உள்ளது. இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயார் திருமணக் கோலத்துடன் கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி எனும் திருநாமங்களுடன் அருள் பாலிக்கிறார். தீர்த்தம் கமலபுஷ்பகரணி. மூலவரின் விமானம் கமலவிமானம் எனப்படுகிறது. உறையூரானது பண்டைக்காலத்தில் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இதன் பெருமை பல இடங்களில் கூறப்படுகிறது. புராண பெயர்கள் மேலும் குக்கிடபுரி கோழியூர் வாரணபுரி திருமுக்கீசுரம். கமலவல்லி நாச்சியார் அவதரித்த தலம் என்பதால் இங்கு அவளே பிரதானம். இவளது பெயரால் இத்தலம் நாச்சியார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் எம்பெருமானுடன் கலக்கும் பேறு பெற்றவராகவும் விளங்கிய திருப்பாணாழ்வார் அவதரித்தத் திருத்தலம் இது. நாயன்மார்களில் புகழ்ச்சோழர் மற்றும் கோச்செங்கன் சோழர் பிறந்ததும் இங்குதான். இத்திருக்கோயிலில் திருப்பாணாழ்வாருக்குத் தனி சன்னதி உள்ளது. பிரகாரத்தில் நம்மாழ்வார் ராமானுஜருக்கு சன்னதிகள் உள்ளன.

கோயில் கோபுரம் 5 நிலை உடையது. மூலஸ்தானத்தில் அழகிய மணவாளப் பெருமாளும் கமலவல்லி தாயாரும் திருமணக் கோலத்தில் நின்றபடி காட்சி தருகின்றனர். ரங்கநாதரே தாயாரை மணந்து கொண்டால் இங்கு சுவாமி தாயார் இருவரும் அவரை பார்த்தபடி வடக்கு திசை நோக்கியிருக்கின்றனர். மூலஸ்தானத்தில் தாயார் மட்டுமே உற்சவராக இருக்கிறாள். பெருமாள் உற்சவர் இல்லை. பொதுவாக பெருமாள் தலங்களில் குங்கும பிரசாதம் கொடுப்பார்கள். ஆனால் இங்கு சந்தன பிரசாதம் தருகின்றனர். இவளுக்கு படைக்கப்படும் நைவேத்யத்தில் காரத்துக்காக மிளகாய் வத்தல் சேர்க்காமல் மிளகு சேர்க்கப்படுகிறது.

முன்பொரு காலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இந்த நகரைத் தலை நகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன். அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் பெரும்பேறாகக் கருதி வந்தான். ஆன்னலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பெரும் கவலையோடிருந்தான். வைகுந்தத்தில் குடிகொண்டுள்ள எம்பெருமான் அவன் அன்பைக் கருதி அவனுக்கு திருவருள் செய்ய எண்ணம் கொண்டார். தம் பிராட்டியையே அவனுக்கு மகளாகப் பிறக்க அருளினார். பிராட்டியும் மனம் மகிழ்ந்து உறையூரில் தாமரை ஓடையில் தாமரை மலரில் சிறு குழந்தையாக அவதரித்தார். வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அக்குழந்தையைக் கண்டெடுத்தான். அதற்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தையும் நன்கு வளர்ந்து மணப்பருவம் எய்தியது. ஒருநாள் கமலவல்லி தம் தோழிகளுடன் வனத்திற்கு உலாவச் சென்றாள். அப்போது அரங்கநாதன் அங்கு தம் குதிரை மீது ஏறி வேட்டைக்கு வந்தார். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும் கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள். தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான். மனம் வருந்தினான். எம்பெருமானிடம் முறையிட்டான். அவன் கனவில் தோன்றிய பெருமாள் யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். நீ உன் மகளை எம் சன்னதிக்கு அழைத்து வா யாம் அவளை ஏற்றுக் கொள்கிறோம் என்று திருவாய் மலர்ந்து அருளினார். மன்னன் மனம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார். மன்னனும் அவனுடன் வந்திருந்த மற்றவரும் காணக் கிடைக்காத அக்காட்சியைக் காணும் பேறு பெற்றனர். அதன் பிறகு நந்தசோழன் திருவரங்கக் கோவிலுக்குக் கணக்கற்றத் திருப்பணிகள் பல செய்தான். பின்னர் உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக ஒரு பெரிய கோவில் அமைத்தான். திருவரங்கத்தின் அரங்கநாதனே அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு அழகிய மணவாளன் எனும் திருநாமம் கொண்டார். இந்நிகழ்ச்சி துவார யுகத்தின் இறுதியில் நடந்தது என்று புராண வரலாறு சொல்கிறது.

துவார யுகம் முடிந்ததும் கலியுகம் தோன்றிய காலத்தில் உறையூரில் மண் மழை பெய்தது. அதனால் இந்த உறையூரே மூழ்கிப் போனது. அதன் பிறகு ஒரு சோழமன்னன் இத்திருக்கோயிலைக் கட்டி இங்கு திருமணக் கோலத்தில் அழகிய மணவாளனையையும் கமலவல்லியையும் அமைத்தான் என்று கூறப்படுகிறது. அம்மன்னன் பெயர் அறிய முடியவில்லை. ஒரு முறை உறையூரை ஆண்ட ஆதித்தசோழன் பட்டத்து யானை மீது உலா வந்தான். அப்போது அவனுக்கு இவ்வூரின் பெருமையை உணர்த்த இறைவன் எண்ணினார். அவர் வில்வ மரத்தின் நிழலின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை ஏவினார். அது மிக வேகத்துடன் பறந்து சென்று அந்தப் பட்டத்து யானையை எதிர்த்துப் போர் புரிந்துத் தன் அலகினாலும் கால்களினாலும் யானையின் கண்களைக் குத்திக் குருடாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதை எம்பெருமானின் அருள் என்று உணர்ந்த ஆதித்தசோழன் அக்கோழியின் பெயரால் இவ்வூருக்குத் திருக்கோழி எனப்பெயரிட்டான்.

வைகுண்ட ஏகாதசியன்று அனைத்து வைணவத் தலங்களிலும் சொர்க்கவாசலைக் கடந்து பெருமாள் வரும் வைபவம் நடைபெறும். ஆனால் இக்கோவிலில் மட்டும் இதிலிருந்து மாறுபட்டு தாயார் சொர்க்கவாசல் கடக்கும் நிகழ்ச்சி மாசி மாத தேய்பிறை ஏகாதசி நாளில் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியன்று இங்கு சொர்க்கவாசல் திறப்பதில்லை. வழக்கமான பூஜைகள் மட்டுமே நடைபெறும். மாசி மாத தேய்பிறை ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அனைத்து பெருமாள் தலங்களில் வைகுண்ட ஏகாதசியின் போது சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால் இத்தலத்தில் தாயார் மட்டும் தனியே சொர்க்கவாசல் கடக்கிறாள். இங்கே பகவானுக்குரிய எல்லா வழிபாடுகளும் இந்த கமலவல்லித் தாயாருக்கு நடக்கிறது.

ஸ்ரீரங்கத்தில் நடக்கும் பங்குனி விழாவின் போது உற்சவர் நம்பெருமாள் ஒருநாள் இத்தலத்திற்கு எழுந்தருளி நாச்சியாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். கமலவல்லி பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்தார். எனவே ஆயில்ய நட்சத்திரத்தில் இவ்விழா நடக்கிறது. அன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் இருந்து நம்பெருமாள் பல்லக்கில் காவிரிக்கரையில் உள்ள அம்மா மண்டபம் காவிரி குடமுருட்டி நதிகளைக் கடந்து இக்கோயிலுக்கு வருகிறார். அப்போது இவ்வூர் பக்தர்கள் வழிநெடுகிலும் வாழை மரங்கள் கட்டி வாசலில் கோலம் போட்டு மணமகனுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர். கோயிலுக்கு வரும் சுவாமி மூலஸ்தானம் எதிரே நின்று தாயாரை அழைக்கிறார். பின்பு பிரகாரத்தில் உள்ள சேர்த்தி மண்டபத்திற்கு செல்கிறார். அதன்பின் தாயாரும் சேர்த்தி மண்டபத்திற்கு சென்று சுவாமியுடன் சேர்ந்து மணக்கோலத்தில் இரவு சுமார் 11 மணி வரையில் காட்சி தருகிறார். பின்னர் தாயார் மூலஸ்தானத்திற்கு திரும்ப சுவாமி மீண்டும் ஸ்ரீரங்கம் செல்கிறார்.

திருமங்கையாழ்வார் ஒரே ஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவரும் கோழி என்று இவ்வூரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே இவர் உறையூரையும் தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் இவரை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லையே இவர் பல்லாண்டு வாழ்க கடல் வண்னம் கொண்டவராகவே இவர் தோன்றுகிறார். ஒரு திருக்கையில் சக்கரத்தையும் மற்றொரு கையில் சங்கினையையும் தரித்துக் கொண்டிருக்கிறாரே இவரது அழகை நான் என்னென்று சொல்வேன்? என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார். கரிகால் சோழன் நலங்கிள்ளி குலோத்துங்க சோழன் கிள்ளிவளவன் முதலானோர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். குலசேகரப்பெருமாள் சேர சோழ பாண்டிய நாடுகளை ஆண்ட போது இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார் எனபது அவர் பாசுரத்தால் அறிய முடிகிறது.

தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 266 திருஅஞ்சைக்களம்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 266 வது தேவாரத்தலம் திருஅஞ்சைக்களம். புராணபெயர் திருவஞ்சைக்குளம், கொடுங்கலூர். மூலவர் அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர். இங்கு இறைவன் மிகச்சிறிய சுயம்பு லிங்கமாக அருளுகிறார். இறைவன் தரைமட்டத்திற்கு மேல் சில அங்குல உயரமே உள்ளார். அம்பாள் உமையம்மை. தீர்த்தம் சிவகங்கை. தலமரம் சரக்கொன்றை. தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். கேரள பாணியில் கோயில் அமைந்துள்ளது. கோயில் வாசல் மேற்கு நோக்கி உள்ளது. துவஜஸ்தம்பத்தில் அஷ்ட வித்யேஸ்வரர்களின் உருவங்கள் உள்ளன. உள்ளே குளம் உள்ளது. கேரள முறையைப் பின்பற்றி இத்தலத்திலும் வெடிவெடித்துப் பிரார்த்தனை செய்யும் வழக்கமுள்ளது. கோஷ்டமூர்த்த அமைப்பு இல்லை. விமானத்தில் யோக நரசிம்மர் உக்கிரரூபத்தில் உள்ளார். இங்குள்ள நடராஜர் சேரமான் பெருமாள் பூசித்தது. பஞ்சலோகச்சிலை. இதன் கீழ் திருவஞ்சைக் களத்து சபாபதி என்றெழுதப்பட்டுள்ளது.

கிழக்கு ராஜகோபுர முன்புறத்தில் நுழையும்போது பக்கக்கற்சுவரில் யானை உருவங்கள் வெளியிலிருந்து கோயிலுக்குள் செல்வது போலவும் எதிர்சுவரில் கோயிலிலிருந்து வெளியே வருவது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலுக்குச் செல்லும் போது வீதியின் நடுவில் உள்ள பெரிய மேடைக்கு யானை வந்த மேடை என்று பெயர். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானை வந்து சுந்தரரைக் கயிலாயத்திற்கு ஏற்றிச் சென்ற மேடை ஆகையால் இந்த பெயர் வந்தது. கேரள வழிபட்டு தந்திரமுறையில் இத்திருக்கோயிலில் வழிபாடுகள் நடந்தாலும் வருடத்தில் ஒருநாள் சுந்தரர் கயிலை சென்ற ஆடி மாதம் சுவாதி நட்சத்திரம் நாளில் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை நடைபெறுகின்றது. ஏகாதசருத்ரம் சங்காபிஷேகம், ம்ருத்யுஞ்சஹோமம் இக்கோயிலில் நடைபெறுகிறது. சேரநாட்டை ஆண்டு வந்த பெருமாக் கோதையார் என்ற மன்னன் சிறந்த சிவபக்தன் திருவஞ்சிக்குளம் உமாமகேஸ்வரர் மேல் தீராக் காதல் உடையவன். அவன் உள்ளத் தூய்மையுடன் சிவனை வணங்கும்போதெல்லாம் தில்லை அம்பலக்கூத்தனின் சிலம்பொலி கலீர் கலீரெனக் கேட்கும். சிலம்பொலி நாதம் கேட்டபின்பே மன்னன் அமுதுண்ணுவது வழக்கம்.

ஒரு நாள் மன்னன் இறைவனை வழிபடும் போது சிலம்பொலி கேட்கவில்லை. மன்னன் திகைப்படைந்தான் தன் பக்தியில் குறை நேர்ந்துவிட்டதோ அதனால்தான் சிலம்பொலி கேட்கவில்லையோ எனக் கருதி தன் உடைவாளால் தன்னுயிரை மாய்த்துக்கொள்ளத் துணிந்தான். அப்போது சிலம்பொலி அதிர சேரமான் முன்பு ஈசன் தோன்றி வருந்தாதே மன்னா என் பக்தன் சுந்தரன் தேனினும் இனிய பாடல்களால் தினமும் என்னை அபிஷேகம் செய்வான். இன்று அதில் நான் மெய் மறந்து விட்டேன். எனவே தான் சிலம்பொலி கேட்க சற்று தாமதமாகி விட்டது என்றார். ஈசனின் இதயத்தையே உருக்கும் பாடல்களைப் புனையும் இத்தகையதோர் சிறப்புமிக்க சிவனடியாரை அறியாது போனோமே என்றெண்ணிய மன்னன் தில்லை சென்று அம்பலவாணரைத் தரிசித்தான். பின் திருவாரூர் சபாபதியைத் தரிசித்துவிட்டு சுந்தரரின் இல்லம் தேடிச் சென்றான். அவருடன் நட்பு கொண்டு அளவளாவி மகிழ்ந்தான். சேரன் தனது பூர்வீகமான திருவஞ்சிக்குளத்துக்கு வருமாறு சுந்தரருக்கு அழைப்பு விடுத்தான். அவரது அழைப்பை ஏற்று திருவஞ்சிக்குளம் சென்று சிறிது காலம் அங்கு கோயில் கொண்டுள்ள ஈசனை ஆராதித்து மகிழ்ந்தார் சுந்தரர். பின் சேரமன்னனுடன் தன் நாடு திரும்பிய சுந்தரர் தொண்டை மண்டலம் பாண்டிநாடு என பல சிவத் தலங்களையும் தரிசித்து விட்டு மீண்டும் திருவஞ்சிக்குளம் சென்றார்.

சுந்தரரை மன்னன் மேளதாளங்களுடன் வரவேற்று. யானை மீது அமரச் செய்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அரியணையில் அமர்த்தி பாத பூஜை செய்து கவுரவித்தான். சுந்தரரும் அங்கேயே தங்கி மலைநாட்டுப் பதிகள் பல கண்டு வழிபட்டார். சுந்தரர் கயிலை செல்ல வேண்டிய நேரம் வந்தது. அங்குள்ள இறைவனிடம் இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி தலைக்கு தலை மாலை என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். சேரமன்னன் தன் உள்ளுணர்வால் சுந்தரர் விண்ணிலேறி கயிலை செல்வதைக் கண்டான். உடனே இந்த தலத்தில் இருந்து தன் குதிரையில் ஏறியமர்ந்து அதன் காதில் நமசிவாய எனும் ஐந்தெழுத்தை ஓத குதிரை விண்ணில் சென்ற யானையைத் தொடர்ந்து சென்றது. சுந்தரர் சென்று கொண்டிருக்கும் போதே பாடல்கள் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். சேரமன்னனும் கயிலாயம் சென்றடைந்தார் இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார். இத்தலம் கழறிற்றறிவார் நாயனாரின் அவதார மற்றும் முத்தித் தலமாகும். இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வம். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. சுந்தரர் பாடல்கள் பாடியுள்ளார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 166

கேள்வி: தமிழ் வருடப் பிறப்பு பற்றி?

தமிழாகட்டும் இந்திய பாரத பாரம்பரியமாகட்டும். அனைத்துமே ஜோதிட இயலோடு தொடர்பு உடையது. சித்திரை மாதம் வெயில் தகிக்கிறது என்றால் மேஷத்திலே சூரியன் உச்சம் என்று பொருள். கடகத் திங்கள் (மாதம்) ஆடி ஆனியிலே படிப்படியாக குறைகின்ற வெயில் மீண்டும் ஆவணியிலே விஸ்வரூபம் எடுக்கும். அங்கே சிம்மத்திலே ஆட்சி பெறுகிறது. இப்படி வருகின்ற சூரியனானது துலாத்திலே வலு பெறுகிறது. ஐப்பசியில் சூரியன் வலுகுறைந்து நன்றாக மழை பெய்கிறது. இந்த அடிப்படையில்தான் தமிழிலே பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. வருடங்களும் அவ்வாறுதான். தமிழ் வருடம் என்று கூறிக் கொண்டு பிற வட மொழிக்கலப்பு அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் கூட இதுவும் தமிழ் தான். ஏனென்றால் தமிழில் இருந்துதான் வடமொழிக்கு பல சொற்கள் போயிருக்கிறது. எனவே ஏனைய இலக்கணங்கள் வசதி சூழ்நிலைக்கேற்ப எப்படி பேசினால் எழுதினால் எளிதோ அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட மொழி இலக்கணமாகும். ஆனால் தமிழ் மொழியிலே கூடுதலாக இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு தமிழைப் பேசினாலே அது சுவாசப் பயிற்சிக்கு சமம். தமிழ் இலக்கணத்தைப் பற்றிக் கூறினால் எத்தனையோ அதிசயங்கள் அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பாவது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம். என்றெல்லாம் அளந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல தமிழ் மொழியிலே காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. எனவேதான் உலகத்திலே எந்த மொழியிலும் ழ கரம் என்ற உச்சரிப்பு கிடையாது.

மூன்று இனமாக பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும்? என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு. இவ்வாறு மனதிலே இலக்கணத்தை வைத்து யாரும் பாடல்களை புனையவில்லை. அவை தானாக வந்து அமைந்து விட்டன. உதாரணமாக ஒரு வெண்பா பாடலை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் சாதாரணமாகத் தோன்றும். ஆனால் உள்ளே மிகப்பெரிய ஞானக் கருத்தெல்லாம் அடங்கியிருக்கும். சமையல் பாட்டுக்களாய் தோன்றுவதெல்லாம் மையல் பாட்டாகவும் இருக்கும். ஞானப்பாட்டாகவும் இருக்கும்.

சுலோகம் -94

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-47

தொழில் செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அவற்றின் பயன்களில் எப்போதுமே உனக்கு அதிகாரமில்லை. எனவே அந்தப் பலன்களின் மீது விருப்பம் கொள்ளாதே. இதன் காரணமாக தொழில் செய்யாமலும் இருக்காதே.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்ய உனக்கு அதிகாரமுண்டு. ஆனால் செய்யும் தொழிலுக்காக பலனை நீ எதிர்பார்த்தால் அதனை நீ அனுபவிப்பவனாக மாறிவிடுவாய் மேலும் அது உன்னை சம்சார பந்தத்தில் பிணைத்து வைத்து விடும். அப்படி நீ இருகக் கூடாது. ஏனென்றால் பலனை எதிர்பார்த்து செயல்களை புரிபவன் அதன் பலனை அனுபவிக்க மீண்டும் மீண்டும் பிறப்பான். இப்போது ஒரு சிந்தனை தோன்றும். செயலை செய்து அதற்கான பலனை எதிர் பார்ப்பதை விட செயலை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று தோன்றலாம். ஆனால் விதிக்கப்பட்ட தொழிலை செய்யாமல் போனால் அந்த செயலை செய்ய வேண்டி மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியது இருக்கும். ஆகவே அர்ஜூனா உனக்கு விதிக்கப்பட்ட தொழிலில் எந்த பலனையும் எதிர்பார்ப்பில்லாமல் செய்து முடிப்பாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

அருணகிரிநாதர்

அருணகிரிநாதர் தமிழ் நாட்டில் கிபி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து முருகக் கடவுள் மீது பாடல்கள் எழுதி புகழ் பெற்ற அருளாளர் ஆவார். இவர் திருவண்ணாமலையில் பிறந்தவர். இவர் தமிழ் மொழி வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவரைப் போல் ஆயிரக்கணக்கான இசைச் சந்தங்களிலே பாடியவர் வேறு யாரும் இல்லை. கருத்தாழமும் சொல்லழகும் இசைத்தாளச் செறிவும் நிறைந்தது இவரது பாடல்கள். அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16000 பாடல்களை இயற்றினார். அவற்றுள் சுமார் 2000 பாடல்கள் மட்டும் இன்று வரை பாடப்படுகின்றன. அவரது பாடல்கள் நல்லொழுக்கம் மற்றும் நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வழியைக் காட்டுகின்றன. இவருடைய மூதாதையர்கள் தற்போதைய பங்களாதேஷ் ராஜசாகி மாவட்டம் வரேந்திர கிராமத்திலிருந்து 11ம் நூற்றாண்டில் பிரபுடேவ மன்னன் காலத்தில் இங்கு குடியேறியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்து வந்த திருவெண்காடாருக்கும் முத்தம்மைக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர் வைத்தார்கள். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால் முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும் ஓர் ஆண் மகன் வேண்டும் என்று நாள் தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள். முத்தம்மை செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளால் மூத்த பெண் ஆதிலட்சுமிக்கு நான்கு வயதாக இருக்கும் போது முத்தம்மைக்கு இரண்டாவது ஆண் குழந்தை ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண் குழந்தை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்தம்மை. அக்குழந்தைக்கு அருணாச்சலேஸ்வர மலையின் பெயரை வைத்து அருணகிரி என்று பெயரிட்டாள் முத்தம்மை. அருணகிரியின் கைகளில் ஆறு விரல் இருந்தன. அதனால் முருகப் பெருமானின் ஆறு தலைகளையும் அவருக்குரிய சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தினையும் நினைவுறுத்துவது போல இருந்தது.

அருணகிரி பிறந்த மகிழ்ச்சியில் காசி யாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. சிறிது நாளில் கடுமையாக நோய் வாய்ப்பட்டாள் முத்தம்மை. தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்து கொண்ட முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். மரணம் நெருங்கிய காலத்தில் தன் மகள் ஆதிலட்சுமியை அழைத்தாள் முத்தம்மை. மகளே ஆதி என்ற உனது பெயரைப் போலவே ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது. நான் சேர்த்து வைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்று கூறிய முத்தம்மை அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதிலட்சுமியின் கரத்தில் வைத்தாள். ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன் என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் முருகன். முத்தம்மையின் முகத்தில் புன்னகை மலர்ந்து முக்தியடைந்தாள்.

அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள் ஆதிலட்சுமி. தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்தாள் ஆதி. அருணகிரியே சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார் ஆதி. அருணகிரிநாதர் சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருந்தார். இந்த செய்தி தெரிந்தும் ஆதிலட்சுமி அம்மையார் விரைவில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். இளமையிலேயே திருமந்திரம் தேவாரம் திருமுருகாற்றுப்படை திருக்குறள் காரிகை ஆகிய தமிழ் நூல்களைப் படித்து அதில் புலமை பெற்றிருந்தார். உலா ஏசல் கலம்பகம் கோவைசிந்து தூது பரணி மடல் மாலை எனப்படும் நூல் வகைகளைப் பயின்றும் காம சாஸ்திர நூல்களை ஆராய்ந்தும் புலமை வாய்ந்து கவிபாடும் திறம் உடையவராயிருந்தார். உரிய வயதில் திருமணத்தை அவருக்கு செய்து வைத்தார் அவரது சகோதரி ஆதிலட்சுமி. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும் விதி வசத்தால் வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாய்ச் தனது சொத்தையும் இழந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாக சொத்தை இழந்ததோடு பெரும் நோயும் வந்து சேர்ந்தது அருணகிரிக்கு. அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட கட்டிய மனைவியைக் நெருங்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்கினார். இதனால் இவர் சகோதரி தன்னை நெருங்குமாறு கோபத்துடனும் வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைத் தடுத்து ஆட்கொண்டார்.

அருணகிரிநாதரை தடுத்தாட் கொண்டது அருணாசலேஸ்வரர் என்றும் முருகக் கடவுள் என்றும் இரு வேறு கருத்துக்கள் உள்ளது. அந்தப் பெரியவர் அவருக்கு முருகக் கடவுளைப் பற்றிச் சொல்லி சரவணபவ ஆறெழுத்து மந்திரத்தையும் அதன் உட்பொருளையும் சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி முருகனைப் போற்றிப் தவவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். குழப்பத்தோடு இருந்த அருணகிரிநாதர் பெரியவர் சொன்னது சரியாகக் கேட்கவில்லை. ஒரு பக்கம் பெரியவரின் பேச்சு மறுபக்கம் குழப்பமான மனது. தவத்தினால் மனம் சற்றுத் தெளிவடைகிறது என நினைத்தால் மீண்டும் மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. தவம் வரவில்லை என்ன செய்யலாம்? குழப்பத்திலும் கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரிநாதர் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்த போது இரு கரங்கள் அவரைத் தாங்கி காப்பாற்றின. திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யார் எனப் பார்க்க முருகர் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில் வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்தார். முருகன் அவரை அருணகிரிநாதரே என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே சரவணபவ என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து யோக மார்க்கங்களும் மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படி அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது. நாதர் என்ற பட்டத்தைப் பெற்ற அருணகிரி அன்று முதல் அருணகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

அருணகிரிநாதர் உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்றதும் முருகனை இரு கரம் கூப்பித் தொழுதார். அப்போது முருகர் அருணகிரிநாதரே இந்தப் பிறவியில் இன்னும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய் என்று அருளினார். முருகனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும் பாடல் புனையும் வழி அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். அப்போது முருகர் யாமிருக்க பயமேன் அஞ்சேல் என்று சொல்லி முத்தைத் தரு பத்தித் திருநகை என பாடல் பாடுமாறு ஆரம்பத்தை எடுத்துக் கொடுத்து விட்டு முருகர் மறைந்தார். முருகர் வந்து உபதேசம் செய்து சென்ற பின்னர் திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மௌனமாக தவம் செய்து வந்தார் அருணகிரிநாதர். தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். சிறிது நாளில் அவரது உடம்பில் இருந்த நோய்கள் அனைத்தும் மறைந்து விட்டது. இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரிநாதரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க அருணகிரிநாதருக்கும் அரசனுக்கும் நட்பு உண்டானது.

அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் உண்டான நட்பு அரண்மனையின் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானுக்கு பொறாமையை உண்டாக்கியது. தேவியின் பக்தனான சம்பந்தாண்டான் தேவியின் குமாரனனான முருகனை பாடி தொழுது வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் பொறாமை குணம் அதிகமாகி மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான் சம்பந்தாண்டான். அரசரிடம் நேரடியாக சென்றவன் அருணகிரிநாதரைப் பற்றி பேச ஆரம்பித்தான். அரசே நான் உங்கள் நெருங்கிய நண்பன். உங்கள் நன்மையே நாடுபவன். உங்களுக்கு நல்லதேயே செய்ய நினைக்கிறேன். அருணகிரிநாதர் பற்றி நீங்கள் சரிவர தெரியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர்கள். இந்த நட்பு வேண்டாம். பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தவன் அந்த அருணகிரிநாதர். உற்றார் உறவினர்கள் அனைவரும் அவனை கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாய வித்தையால் இப்போது அனைத்து வியாதிகளும் மறைந்திருக்கலாம். சித்து வேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு முருகன் நேரில் வந்தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தான் நான் முருகனுக்கு அடிமை என்று சொல்லித் திரிகின்றான். அவன் பேச்சை நம்பவேண்டாம் என்று சொன்னான்.

அருணகிரிநாதரின் ஆன்ம பலத்தையும் அவரின் பக்தியையும் யோக சக்தியையும் அரசர் நன்கு உணர்ந்திருந்தார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும் அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம் பேசிய அரசர் நீங்கள் பெரிய தேவி உபாசகர் என்பதை நான் அறிவேன். அருணகிரிநாதர் பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல் பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த கால வாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் நிரூபிக்க முடியுமா? என்று கேட்டான் அரசன். சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக மன்னா தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதே போல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்ய வேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும் சம்மதமா? என்று சவால் விட்டான். அரசனும் தேவி தரிசனம் ஒருபக்கம் இன்னொரு பக்கம் முருகன் தரிசனம் சம்மதமே என்று சொன்னான் அரசன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப்பட்டது. என் முருகன் என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியை வரவழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவியது.

அருணகிரிநாதரை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று எண்ணிய சம்பந்தாண்டான் தன் தவ வலிமையால் தேவியிடம் அருணகிரிநாதரை வெற்றி பெற அருளவேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு தேவியோ உனது தவ வலிமை அனைத்தையும் நீ வீணடித்து விட்டாய். ஆகவே இனி உனக்கு எமது காட்சி கிடைக்காது என்று அசீரிரியாக பதில் அளித்தாள். உடனே சம்பந்தாண்டான் தேவியிடம் ஒரு சிறு விண்ணப்பம் வைத்தான். அருணகிரிநாதர் நாளை முருகனை அழைத்துப் பாடும் போது முருகனை உனது அன்பினால் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அருணகிரிநாதரின் புகழை உலகறியச் செய்ய நினைத்த தேவி இதற்கு சம்மதித்தாள்.

அருணகிரிநாதர் அரசர் சொல்லி அனுப்பிய இடத்திற்கு வந்தார். அனைவரும் அங்கு கூடி விட்டார்கள். தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவி தான் அழைத்ததும் வந்து விடுவாள். முதலில் அருணகிரிநாதரை முருகரின் தரிசனத்தை கிடைக்க செய்யுங்கள் என்றான். அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரிநாதர் முருகரை நினைத்து திருப்புகழ் பாடினார். முருகரை தேவி தன் அன்பானால் பிடித்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆகையால் முருகர் தரிசனம் அங்கு கிடைக்கவில்லை. முருகர் ஏன் வரவில்லை என்று தன் ஞான திருஷ்டியில் கண்டு கொண்ட அருணகிரிநாதர் சம்பாந்தாண்டானின் சூழ்ச்சியை அறிந்து கொண்டார். முருகனை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காட்சி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும் இறைவன் திருவருளால் காட்சி கிடைக்கும் என்றும் சொல்லி விட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். அருணகிரிநாதர் பக்திப் பரவசத்துடன் மனமுருகி மயிலை துதித்துப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம் மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. அருணகிரிநாதரின் மகிமையை அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இப்போது சம்பந்தாண்டானின் முறை வந்தது. சம்பந்தாண்டான் எவ்வளவோ முயற்சித்தும் தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான்.

அருணகிரிநாதர் தொடர்ந்து தல யாத்திரையாகத் தமிழ்நாட்டில் உள்ள தலங்களைத் தரிசித்து அங்குள்ள முருகப் பெருமான் மேல் திருப்புகழ் பாக்களைப் பாடி வந்தார். வயலூருக்கு வருமாறு ஆணையிட்ட முருகனை வயலூர் சென்று தரிசித்தார். விராலிமலைக்கு வருமாறு கூறி வழியையும் காண்பித்தார். அத்தலத்தையும் அருணகிரிநாதர் சென்று வணங்கினார். முருகனை நாடி திருப்பரங்குன்றம் வந்தார். மனமுருகி வழிபட்டபின் திருச்செந்தூர் வந்தார். திருச்செந்தூர் செல்லும் வழி காடாக இருந்ததால் மயில் அவருக்கு வழி காட்டியது. செந்திலாண்டவன் அவருக்கு நடராஜரைப் போல திருத்தாண்டவம் ஆடினார். ஆறுபடை வீடுகள் தவிர தமிழகத்தில் சுமார் 200 தலங்களைத் தரிசித்து வடநாடு ஈழநாடு முதலிய பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகனைத் தரிசித்தார்.

அருணகிரிநாதர் ஒவ்வொரு ஊராக சென்று கொண்டிருக்கும் போது இடையில் வந்த தென்பெண்ணையாற்றின் வளங்கொழிக்கும் நடுநாட்டில் சனியூர் என்ற ஊரில் ஒரு வைணவப் பெரியார் இருந்தார். அவர் பெயர் வில்லிபுத்தூரார். இவர் சந்தக்கவி பாடுவதில் வல்லவர். வியாச பாரதக் கதையை தமிழில் மணிப்பிரவாள நடையில் எழுதி பெரும் புகழ் பெற்றவர். வரபதியாட் கொண்டான் என்ற கொங்கு நாட்டு அரசனின் அரசவைப் புலவராக வீற்றிருந்து அரசர்க்குரிய அனைத்து மரியாதைகளுடன் வரகவி என்று மக்களால் போற்றப்பட்டவர் இப்படி தனக்கு ஏற்பட்ட புகழால் கல்விச் செருக்குண்ட வரகவி தம்மிடம் வாதுக்கு வருபவர்களை வென்று கவிபாடி காது அறுப்பார். இவர் அருணகிரியாரின் அருட்செயல்களைக் கேட்டு பொறாமை அடைந்தார். கவிஞர்களின் காதுகளை அறுக்கும் அடாத செயலைக் கேட்டறிந்த அருணகிரியார் வருத்தப்பட்டார். இச்செயல் இனி நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்ற கருணையினால் வில்லிபுத்தூராரை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். மன்னர்கள் கூடிய பேரவையில் அருணகிரநாதருக்கும் வில்லியாருக்கும் பல்வேறு வகையான வாதங்கள் நடந்தன. ஒரு முடிவுக்கு வர இயலாத நிலையில் ஒருவர் பாட மற்றொருவர் பொருள் கூறவேண்டும் என்ற நிபந்தனை ஏற்பட்டது. பொருள் சொல்ல முடியாதவர் தோற்றவராவர் என முடிவு செய்யப்பட்டது. முதலில் அருணகிநாதர் கந்தர் அந்தாதி என்ற பிரபந்தம் பாடினார். ஒவ்வொரு பாடலுக்கும் வில்லியார் பொருள் விளக்கம் கூறிவந்தார். 54-ஆம் பாடலகிய

திதத்தத்தத் தித்தக திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதிதித்த தேதுத்த தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாத திதேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே என்ற பாடலுக்கு பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் திகைத்தார். பாடல் முழுவதும் தகர வர்க்கத்தால் ஆனது இப்படி ஒரு பாடல் இருக்காது இது பொய் பாடல் என்று வில்லிபுத்தூரார் கூறினார். இது மெய்ப்பாடலே இப்பாடலின் விளக்கத்தை கற்றோர் ஏற்றுக் கொள்ளுமாறு அருணகிரிநாதர் எடுத்துரைத்தார். அரசவை அருணகிரியாரைப் பாராட்டியது. வில்லிபுத்தூரார் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு காதருக்கும் கருவியை அருணகிரியாரிடம் கொடுத்து தன் காதை அறுக்குமாறு செருக்கு அழிந்து பணிந்து நின்றார். கருணைமிகுந்த அருணகிரிநாதர் அவ்வாறு செய்யவில்லை. இனி எங்கும் யாரையும் வாதுக்கு இழுத்து காதை அறுக்காதீர்கள். நன்று தமிழ்ப்பணி செய்வீர் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு கிளம்பினார். அன்று முதல் காதறுக்கும் தொழிலைக் கைவிட்டார் வில்லிபுத்தூரார். கருணைக்கு அருணகிரி என மக்களால் போற்றப்பட்ட அருணகிரிநாதர் மீண்டும் திருவண்ணாமலை வந்தடைந்தார்.

அருணகிரிநாதரிடம் தோல்வி அடைந்த சம்பந்தாண்டான் அவரை பழி வாங்கத் துடித்தான். அந்த நேரத்திற்காக காத்திருந்தான். சில ஆண்டுகளில் மன்னன் பிரபுடதேவனின் கண் பார்வையில் கோளாறு ஏற்பட்டது. அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சம்பந்தாண்டான் தேவலோகத்தில் உள்ள பாரிஜாத மலரை கொண்டு வந்தால் மன்னனுக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்றான். அதோடு அந்த மலரை கொண்டு வரும் ஆற்றல் அருணகிரிநாதருக்கு மட்டுமே இருப்பதாகவும் கூறினான். உடனே அருணகிரிநாதரை அழைத்த மன்னன் தேவலோகம் சென்று பாரிஜாத மலரை கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட அருணகிரிநாதர் திருவண்ணாமலை பேக் கோபுரத்துக்கு சென்றார். அங்கு தவத்தில் ஆழ்ந்தார். பிறகு கூடு விட்டு கூடு பாயும் சக்தி மூலம் தனது உயிரை உடம்பில் இருந்து பிரித்தார். அங்கு இறந்து கிடந்த கிளி உடம்பில் உயிரை செலுத்தி தேவலோகத்துக்கு பறந்து சென்றார். இதையெல்லாம் மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்த சம்பந்தாண்டான் சடலமாக கிடந்த அருணகிரிநாதரின் உடலை அரசனிடம் காண்பித்து அருணகிரிநாதர் இறந்து விட்டார் என்று கூறி அனைவரையும் நம்ப வைத்தான். அரசனும் உண்மை அறியாது அவ்வுடலைத் தகனம் செய்தான். பாரிஜாத மலருடன் திரும்பிய அருணகிரிநாதர் தம் உடலை காணாது தேடினார். தன் உடல் அழிக்கப்பட்டதை கடவுள் செயலாகக் கருதினார்.

அருணகிரிநாதர் கிளி உருவத்தில் சென்று மன்னனிடம் பாரிஜாத மலரை கொடுத்தார். அப்போது அவர் மன்னிடம் நான் இறைவனிடம் சுகபதம் (முக்தி) வேண்டினேன். எனக்கு சுக (கிளி) உருவம் கொடுத்து விட்டார் என்றார். அதன்பிறகு கிளி உருவிலேயே கோபுரத்தில் அமர்ந்து கந்தர் அந்தாதி திருவகுப்பு மற்றும் கந்தர் அனுபூதியை அருணகிரிநாதர் பாடினார். ஒரு ஆனி மாதம் மூல நட்சத்திரம் கூடிய பவுர்ணமி நாளில் முருகனின் திருவடியை அருணகிரிநாதர் அடைந்தார். அவரது ஆன்மாவை தாங்கியிருந்த கிளி உண்ணாமுலை அம்மன் கையில் போய் அமர்ந்து விட்டதாகவும் திருத்தணியில் உள்ள முருகன் கையில் அமர்ந்ததாகவும் இருவேறு கருத்துக்கள் உள்ளது. திருவண்ணாமலை தலத்தில் அருணகிரிநாதர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குதித்த போது முருகரால் தாங்கி பிடிக்கப்பட்ட இடத்தில் கோபுரத்து இளையனார் என்ற பெயரிலும் கம்பத்தில் முருகர் காட்சியளித்த இடத்தில் கம்பத்து இளையனார் என்றும் முருகனுக்கு சன்னதிகள் அமைந்துள்ளன.

அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ் பாடல்கள் பல ஆண்டுகளாக இங்கும் அங்கும் எனச்சில ஓலைச் சுவடிகளில் பிரதி இருந்தன. 1871 இல் வ.த. சுப்ரமணிய பிள்ளை ஒரு மாவட்ட நடுவராக பணியாற்றியவர். அவர் சிதம்பரம் சுற்றுப்பயணத்தில் இருந்த போது அதிகாலை பண்டாரம் ஒருவரால் ஒரு திருப்புகழ் பாடலின் வரிகளை கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். பாடலால் ஈர்க்கப்பட்ட அவர் திருப்புகழ் பாடல்களின் முழுத் தொகுப்பையும் தேடும் பணியை மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எழுத்தோலை சுவடிகள் உள்ளிட்ட திருப்புகழ் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து இரண்டு தொகுதி நூல்களாக வெளியிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு செங்கல்வராய பிள்ளையால் விளக்கம் எழுதப்பட்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. திருப்புகழை மக்களிடையே பரவச் செய்தவர்களில் ஒருவர் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் ஆவார். திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் கண்ணப்ப நாயனார் திருமழிசை ஆழ்வார் முதலிய அடியார்கள் குறித்தும் திருப்புகழில் அருணகிரிநாதர் குறிப்பிட்டுள்ளார்.

அருணகிரிநாதர் இயற்றியவை

கந்தர் அந்தாதி 102 பாடல்கள்
கந்தர் அலங்காரம் 108 பாடல்கள்
கந்தரனுபூதி 52 பாடல்கள்
திருப்புகழ் 1307 பாடல்கள்
திருவகுப்பு 25 பாடல்கள்
சேவல் விருத்தம் 11 பாடல்கள்
மயில் விருத்தம் 11 பாடல்கள்
வேல் விருத்தம் 11 பாடல்கள்
திருவெழுகூற்றிருக்கை

திருப்போரூர் கந்தசாமி

திருப்போரூர் கந்தசாமி

முருகப்பெருமான் அசுரர்களை எதிர்த்து நிலம் ஆகாயம் கடல் ஆகிய மூன்று பகுதிகளில் நின்று போரிட்டு வெற்றி கண்டார். அசுரர்களின் கர்மத்தை நிலத்தில் நின்று போரிட்டு திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அடக்கி வெற்றி பெற்றார். அசுரர்களின் மாயையை கடலில் நின்று போரிட்டு திருச்செந்தூரிலே வெற்றி கண்டார். அசுரர்களின் ஆணவத்தை விண்ணில் நின்று போரிட்டு திருப்போரூரில் வெற்றி கொண்டார். முருகன் யுத்தம் புரிந்த இடம் ஆகையில் யுத்தபுரி என்று அக்காலத்தில் பெயர் பெற்றது. சமராபுரி போரிநகர் என்ற வேறு பெயர்களும் இந்த இடத்திற்கு உண்டு. அசுரர்களுடன் முருகப்பெருமான் போரிட்டபோது மாய வித்தைகள் மூலம் மறைந்திருந்து அசுரர்கள் போர் புரிந்தனர். இதனை தனது ஞான திருஷ்டியாலும் பைரவரின் துணையோடும் கண்டறிந்த முருகப்பெருமான் அசுரர்களை சம்ஹாரம் செய்தார். மறைந்திருந்த அசுரர்கள் முருகப் பெருமானின் கண்களில் அகப்பட்ட இடமே கண்ணகப்பட்டு (கண் அகப்பட்டு) என்ற இடமாக திருப்போரூர் அருகில் உள்ளது. இந்த ஊரில்தான் திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலை நிர்மாணித்த மகான் சிதம்பர சுவாமிகளின் திருமடம் அமைந்துள்ளது. பல யுகங்களுக்கு முன்னால் நடந்த பிரளயத்தால் ஆறு முறை இங்கு உள்ள முருகன் கோவில் அழிவைச் சந்தித்து இருக்கிறது என்று கோவில் புராண வரலாறு உள்ளது. தற்போது ஏழாவது முறையாக மீனாட்சி அம்மனின் அருளாலும் முருகனின் அருளாலும் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

சிதம்பர சுவாமிகள் சாந்தலிங்க அடிகளின் மாணவர். இவர் மதுரையில் தியானத்தில் இருந்த போது அழகிய மயிலொன்று தோகை விரித்து ஆடுவதைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது தியானத்தில் மீனாட்சி அம்மன் தோன்றி மதுரைக்கு வடக்கே காஞ்சிக்கு கிழக்கே வங்க கடலோரம் யுத்தபுரி என்னும் தலம் அமைந்துள்ளது அங்கே குமரக் கடவுளின் திருவுருவம் பனைமரக் காட்டிற்குள் புதையுண்டு கிடக்கிறது. அதைக் கண்டெடுத்து அழகிய திருக்கோயில் நிர்மாணித்து முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவா. அந்த ஆலயத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். மதுரையில் இருந்து மீனாட்சி அம்மன் காட்டிய திசையில் பயணித்து தற்போது திருப்போரூர் என்று அழைக்கப்படும் இடத்தை அடைந்தார் சிதம்பர சுவாமிகள். அங்கு இருந்த பனை மரக்காட்டிற்குள் ஒரு வேம்படி விநாயகர் ஆலயம் இருந்தது. அதன் அருகில் ஒரு பெண் பனை மரத்தின் அடியில் ஒரு பனை மரத்தில் செய்த பாத்திரத்தில் சுயம்பு மூர்த்தியாக கந்தப்பெருமான் காட்சியளிப்பதைக் கண்டு மகிழ்ந்தார். சுயம்பு முருகப்பெருமானை அங்குள்ள வேம்படி விநாயகர் கோயிலில் வைத்து பூஜைகள் செய்து வந்தார். ஒரு நாள் அந்த சுயம்பு வடிவ கந்தப்பெருமானின் உருவில் இருந்து முருகப்பெருமான் தோன்றி சிதம்பர சுவாமிகளின் நெற்றியில் திருநீறு அணிவித்து சிவாயநம என்று ஓதி மறைந்தார். அப்போது சிதம்பர சுவாமிகளுக்கு ஒரு கோயிலின் தோற்றமும் அதன் ஒவ்வொரு அங்கங்களும் துல்லியமாக மனத்திரையில் பதிந்தது. இது இறைவனின் திருவருள் இங்கே கோவில் கட்ட வேண்டும் இது இறைவன் ஆணை என்பதை உணர்ந்தவர் மனதில் தோன்றிய கோயில் தோற்றத்தையே ஆலயமாக எழுப்பும் விதத்தில் திருப்பணி ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

திருப்போரூர் பகுதியை அப்போது ஆட்சி செய்து வந்த ஆற்காடு நவாப் மன்னனின் மனைவி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அவர்கள் சிதம்பர சுவாமிகளின் தெய்வீக சக்தியை உணர்ந்து இங்கு வந்தபோது சிதம்பர சுவாமிகள் நவாப் மனைவிக்கு திருநீறு பூச அவரது வயிற்று வலி நீங்கியது. மகிழ்ச்சி அடைந்த நவாப் திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் எழுப்பும் முருகன் கோயிலுக்காக 650 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார். முருகன் அருளால் தனது மனத்திரையில் தோன்றியபடியே அழகிய திருக்கோயிலை கட்டி முடித்தார் சிதம்பர சுவாமிகள். அதுவே இன்றைய திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில் ஆகும். கோவிலின் அருகில் இருந்த ஒடையை குளமாக மாற்றினார். இக்குளத்தில் இருக்கும் நீரானது இது வரை வற்றியது இல்லை. பனை மரத்தடியில் முருகன் இருந்த பனை பாத்திரத்தை தற்போதும் வைத்துள்ளனர். நைவேத்தியத்திற்கான அரிசியை இதில்தான் வைத்துள்ளனர்.

கிழக்குப் பார்த்த ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் கருவறையில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு அபிஷேகம் கிடையாது. பிரதான பூஜைகள் அனைத்தும் ஆமை வடிவத்தின் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சுப்பிரமணியர் யந்திரத்திற்கே நடைபெறுகிறது. இந்த யந்திரத்தில் முருகனின் 300 திருப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முருகனுக்கு பூஜை நடந்தபின் இந்த யந்திரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகள் நடக்கும். பிரம்மாவைப் போல் அவருக்குரிய அட்சர மாலை மற்றும் கண்டிகையும் சிவனைப் போல் வலது கையால் ஆசிர்வதிக்கும் அபயஹஸ்த முத்திரையும் பெருமாளைப் போல் இடது கையை தொடையில் வைத்து ஊருஹஸ்த முத்திரையும் என மும்மூர்த்திகளின் அம்சமாக கந்தசாமி முருகன் அருள்பாலிக்கிறார். சுவாமிக்கு எதிரே ஐராவதம் (வெள்ளையானை) வாகனமாக உள்ளது. இந்த கோயிலின் தல மரம் வன்னி மரம் ஆகும். கோவிலின் தெற்கே உள்ள குளத்தின் பெயர் வள்ளையார் ஓடை என்னும் சரவணப் பொய்கை ஆகும்.

கோவிலில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திரு வடிவம் வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் உள்ளார். கோவில் வெளிப்பிரகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனிச் சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோயிலில் பைரவர் நாய் வாகனம் இல்லாமல் தனிச்சன்னிதியில் மூலவர் கந்தசுவாமியை பார்த்த வண்ணம் உள்ளார். கொடிமரம் கோபுரத்திற்கு வெளியே இருக்கிறது. வள்ளி தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. முருகன் சன்னதி கோஷ்டத்தில் பிரம்மாவின் இடத்தில் பிரம்ம சாஸ்தா (முருகனின் ஒரு வடிவம்) இருக்கிறார். இங்கு நவக்கிரக சன்னதி கிடையாது. முருகன் சன்னதி சுற்றுச்சுவரில் முருகரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. கையில் வில்லேந்தி மயில்மேல் காலை வைத்தபடி சம்ஹார முத்துக்குமார சுவாமிக்கும் இங்கு சிலை உள்ளது. கோயில் பிரகாரத்தில் வான்மீகநாதர் சிவலிங்க சன்னதி உள்ளது. இவருக்கு துணைவியான அம்பாள் பக்தர்களுக்கு புண்ணியம் கிடைக்க காரணமாக இருப்பதால் இவருக்கான புண்ணிய காரணியம்மன் என்று பெயர். ஓம்கார அமைப்பில் அமைந்த இக்கோயில் சுவாமியை தரிசித்துவிட்டு வெளியேறும்போது சன்னதியிலிருந்து பார்த்தால் முன்னால் செல்பவர்களின் முதுகு தெரியாதபடி நுட்பமாக கட்டப்பட்டுள்ளது.

முருகனைப் போற்றி சிதம்பர சுவாமிகள் 726 பாடல்கள் பாடினார். தனது குருவான சாந்தலிங்க அடிகளின் நூல்களுக்கு உரைகள் எழுதி உள்ளார். உபதேச உண்மை உபதேசக் கட்டளை திருப்போரூர் சந்நிதி முறை தோத்திர மாலை திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் முதலியனவும் திருப்போரூர் முருகன் மீது கிளிப்பாட்டு குயில்பாட்டு தாலாட்டு திருப்பள்ளிஎழுச்சி ஊசல்தூது என பல பாடல்கள் பாடியுள்ளார். இவருக்கு கோவிலுக்குள் சன்னதி உள்ளது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு குருபூஜை வைபவம் நடக்கும். கோவிலின் சாலையின் மறுபுறமுள்ள பிரணவ மலை என்றும் சிவன் மலை என்றும் அழைக்கப்படும் சிறு குன்றின் மேல் அருள்மிகு கைலாசநாதர் பாலாம்பிகை கோவிலை வடிவமைத்த சிதம்பர சுவாமிகள் அந்த கோவிலின் பிரகாரத்தில் பாதாளத்தில் சுரங்கபாதை அமைத்து அதில் சமாதி அடைந்தார்.

அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தலம் பற்றி பாடல் பாடியுள்ளார். அவர் கந்தசுவாமியை சகல வேதங்களின் வடிவம் எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் சுவாமிக்கு வேதஉச்சியாக சுவாமி என்றும் பெயருண்டு. அனைத்து வேதங்களுக்கும் தலைமையாக இருப்பவர் என்பது இதன்பொருள். கந்தசஷ்டி விழா இங்கு விசேஷமாக நடக்கும். இவ்வேளையில் கஜமுகன் பானுகோபன் சிங்கமுகன் சூரபத்மன் அஜமுகி தாரகன் ஆகிய அசுரர்களை வதம் செய்வார். மாசி பிரம்மோற்ஸவத்தின் போது முருகன் பிரம்மாவிற்கு பிரணவ உபதேசம் செய்யும் வைபவம் நடக்கும். முருகன் வாய் மீது கை வைத்துள்ள சிவனின் மடியில் அமர்ந்து உபதேசம் செய்யும் சிலையும் இங்குள்ளது. இவ்வேளையில் மகாவிஷ்ணு விநாயகர் நந்தி பிரம்மா இந்திரன் ஆகியோரும் உடனிருப்பர்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 165

கேள்வி: திருப்பதி பயணம் எப்போது மேற்கொள்வது?

எதனையும் ஓரளவுக்கு மேல் திட்டமோ தீர்மானமோ செய்யாதே. இறைவா வேங்கடவா எங்களை அழைத்துச் செல் என்று கூறு. இன்று போனால் கூட்டம் இருக்குமே? நாளை போனால் கூட்டம் இருக்குமே? என்றெல்லாம் எண்ணாதே. கூட்டத்தில் இடிபட்டு வேதனைப்பட்டு தரிசனம் செய்வது கூட சில கர்மாக் கழிவுகள் காரணமாகத்தான். அந்த சந்நிதானத்தில் நீ என்று நிற்க வேண்டும் என்பதை அந்த வேங்கடவன் தீர்மானித்து விட்டான். தினத்தை நீங்கள் தீர்மானிக்க வேண்டாம்.

கேள்வி: ராவணனின் பத்தினி மண்டோதரியைப் பற்றி?

மண்டோதரி சிறப்பிலும் சிறப்பான நங்கை நல்லாள். இன்னொன்று தெரியுமா? ராவணனின் தவசக்தி அவனை காத்ததைவிட மண்டோதரியின் பிராத்தனை தான் அவனை கடைசி வரை காத்து நின்றது. மண்டோதரி ராவணனைப் பார்த்து கூறுகிறாள் ராவணனே அசுரனே பலகீனனே பலம் வாய்ந்தவனே இறையருள் பெற்றவனே வாலிப வயதிலே இளம் வயதிலே நீ எப்படி வாழ்ந்து இருந்தாலும் கூட அது இளமையின் வேகம் என்று அனைவரும் மன்னித்து இருப்பார்கள். ஆனால் இஷ்டம் போல் வாழ வேண்டிய வயதிலே மனதை அடக்கி கடுமையான தவம் செய்து இறையை கண்டு உணர்ந்தாய். ஓரளவு வரமும் பெற்றாய் தெளிந்தாய். ஆனால் எப்பொழுது கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டுமோ அப்பொழுது கட்டுப்பாடுடன் வாழாமல் வாங்கிய வரத்தை எல்லாம் இழந்து நிற்கிறாயே? என்று கூறினாள். எனவே மண்டோதரியின் பக்தி நெறியும் கற்பு நெறியும் உயர்ந்தது. அதே போல் தான் தாரையும் (வாலியின் மனைவி). இவர்களால்தான் அவர்கள் கைப்பிடித்த கணவன்மார்களுக்குப் பெருமை.