தேவாரம் பாடப்பெற்ற சிவ தலம் # 258 திருவான்மியூர்

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் 258 வது தேவாரத்தலம் திருவான்மியூர். புராணபெயர் திருவான்மீகியூர். மூலவர் மருந்தீஸ்வரர், பால்வண்ணநாதர். உற்சவர் தியாகராஜர். இத்தலத்தில் இறைவன் தீண்டாத் திருமேனியாய் மேற்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்பாள் திரிபுரசுந்தரி, சொக்க நாயகி. தலவிருட்சம் வன்னி. தீர்த்தம் பஞ்சதீர்த்தம். மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கிழக்கில் 7 நிலை இராஜகோபுரம் அதையடுத்து 5 நிலை இரண்டாவது கோபுரம் மற்றும் மேற்கில் ஒரு 5 நிலை கோபுரம் அமைந்துள்ளன. கிழக்கிலுள்ள இராஜ கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு விசாலமான திறந்த வெளியும் வலது புறத்தில் தியாகராஜ மண்டபமும் இடது பறத்தில் கோவில் தீர்த்தமும் உள்ளது. நேரே சென்று 2-வது கோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் கிழக்கு வெளிப் பிரகாரம் அடையலாம். அதில் வலது புறம் அம்பாள் திரிபுரசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் விநாயகர், முருகன் சந்நிதிகள் காணப்படுகின்றன. மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. மேற்கில் உள்ள சிறிய வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறம் கருவறை உட்பிரகாரம் மேற்குச் சுற்றில் கஜலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் செல்வ முத்துக்குமாரசாமி சந்நிதிகளும், வலதுபுறம் விநாயகர் சந்நிதி, நால்வர் சந்நிதியும் உள்ளன. வடக்குச் சுற்றில் உற்சவ மூர்த்திகள் மண்டபம், அடுத்து நடராஜர் சந்நிதியும் அதையடுத்து 108 சிவலிங்கங்கள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளதையும் காணலாம். வடக்குச் சுற்றின் முடிவில் தெற்கு நோக்கிய காலபைரவர் சந்நிதி உள்ளது. கிழக்குச் சுற்றில் வரிசையாக உள்ள கேதாரீஸ்வரர், இராமநாதேஸ்வரர், சுந்தரேஸ்வரர், அருணாசலேஸ்வரர் மற்றும் ஜம்புகேஸ்வரர் சந்நிதிகள் உள்ளது. தெற்குச் சுற்றில் 63 நாயன்மார்களின் உருவச் சிலைகள் உள்ளன. கருவறை சுவற்றின் வெளிப்புறம் வடக்கில் பிரம்மா, துர்க்கை, கிழக்கில் மஹாவிஷ்ணு, தெற்கில் தட்சிணாமூர்த்தி, கணபதி கோஷ்ட மூர்த்தங்களாக காட்சி தருகின்றனர்.

ஒருசமயம் தேவலோகத்தைச் சேர்ந்த காமதேனு பிரம்மரிஷியான வசிஷ்டரிடம் சற்று அவமரியாதையாக நடந்து கொண்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் நீ பூவுலகில் பசுவாகப் பிறப்பாய் என்று சாபமிட்டார். தன் தவறை உணர்ந்து வருந்திய காமதேனு வசிஷ்டரிடம் மன்னிப்பு கேட்டு சாப விமோசனத்துக்கான வழியைக் கேட்க திருவான்மியூரில் எழுந்தருளியிருக்கும் சுயம்பு லிங்கத்திற்கு தினமும் பால் சொரிந்து அபிஷேகம் செய்து வா. சாப விமோசனம் கிட்டும் என்று கூறினார். அதன்படியே செய்து ஈசன் அருளால் சாப விமோசனம் பெற்றது காமதேனு. பசு பால் சொரிந்து சிவலிங்கம் வெண்ணிறமாகக் காட்சி தந்ததால் இவர் பால்வண்ணநாதர் என்று பெயர் பெற்றார். அதுபோலவே இத்தலத்திற்கு வந்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு உலகத்திலுள்ள அனைத்து வகையான நோய்கள் பற்றியும் அதைப் போக்கும் மருந்துகள் பற்றியும் ஈசன் உபதேசித்தருளினார். அதன் காரணமாகவே மருந்தீஸ்வரர், ஔஷதநாதர் (ஔஷதம்- மருந்து) என்று இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார். சூரியனும் சந்திரனும் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளதால் இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் உள்ள வன்னி மரமே இத்தலத்தின் தல விருட்சமாகும். இந்த வன்னி மரத்தினடியில் தான் அகத்தியருக்கு இறைவன் திருமணக் காட்சி கொடுத்துள்ளார். வான்மீகி முனிவர் முக்திப் பேறு வேண்டி நாரதரின் ஆலோசனைப் படி இத்தலம் வந்து இந்த வன்னி மரத்தடியில் தான் சுயம்பு லிங்கத்தைக் கண்டெடுத்து வழிபட்டுள்ளார். அகத்திய முனிவருக்காக ஒரு முறையும் வான்மீகி முனிவருக்காக ஒரு முறையும் ஆக இரண்டு முறை இறைவன் இந்த வன்னி மரத்தடியில் காட்சி கொடுத்துள்ளார்.

கயிலை மலையில் சிவன் பார்வதி திருமணம் நடைபெறும் சமயம் திருமணத்தைக் காண எல்லோரும் அங்கு கூடியதால் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய சிவபெருமான் அகத்திய முனிவரை தென்திசை அனுப்பினார். தென்புலம் சென்றால் தன்னால் தெய்வத் திருமணத்தைக் காண இயலாமல் போய்விடுமோ என்று சிவனிடம் முறையிட இறைவனும் அகத்தியர் விரும்பும் போது திருமணக் கோலம் காட்டி அருளுவதாக கூறினார். அதன்படி திருவான்மியூர் தலத்தில் அகத்தியர் வந்த போது திருமணக் கோலம் காட்டி அருளினார். அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்த போது வயிற்று வலியினால் அவதிப்பட்டார். இறைவன் அகத்தியருக்கு காட்சி கொடுத்து மருந்துகள் பற்றியும் அதன் உபயோக முறைகளைப் பற்றியும் உபதேசம் செய்து அருளினார். அதனாலேயே இறைவன் மருந்தீஸ்வரர் என்ற பெயருடன் இத்தலத்தில் அறியப்படுகிறார். வசிஷ்டமுனிவர் செய்த சிவபூஜைக்காக இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை கருடனுடன் அனுப்பி வைத்தான். பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்யவே கோபம்கொண்ட முனிவர் அதனை புனிதத்தன்மை இழந்து காட்டுப்பசுவாக மாறும்படி சபித்தார். கலங்கிய காமதேனு தனக்கு விமோசனம் கேட்க இத்தலத்தில் வன்னி மரத்தடியில் சுயம்புலிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டு என்றார். அதன்படி இங்கு வந்த காமதேனு சுயம்புவாய் இருந்த சிவன் மீது தினசரி பால் சுரந்து விமோசனம் பெற்றது. இதனால் இங்குள்ள இறைவன் பால்வண்ணநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி திருந்தி தனது பாவங்கள் போக இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒருமுறை அவர் சிவனை தரிசிக்க வந்தபோது அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது இங்கிருந்த லிங்கத்தை அறியாமல் மிதித்ததில் சுவாமியின் மேனியில் தடம் பதிந்தது. இன்றும்கூட சுவாமியின் தலையிலும் மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது. தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு சிவன் வன்னி மரத்தினடியில் காட்சி தந்தார். வால்மீகி இறைவனை தரிசித்து சுயம்புலிங்கத்தை பெற்றார். அது இன்றும் ஆலயத்தின் வெளிப்புறம் கிழக்கு கடற்கரை சாலையின் ஆரம்பத்தில் மார்க்கெட் அருகே இருக்கும் வால்மீகி முனிவரின் ஜீவசமாதியில் இருக்கிறது. பிரகாரத்தில் அகத்தியருக்கும் வால்மீகிக்கும் சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது. இந்த இடத்தில் தற்போதும் பங்குனி பிரம்மோற்ஸவத்தின் போது அகத்தியருக்கு காட்சி தந்த வைபவ நிகழ்ச்சி நடக்கிறது. இங்கிருக்கும் மருந்தீஸ்வரர் ஆரம்பத்தில் கிழக்கு நோக்கியே இருந்தார். அபயதீட்சிதர் எனும் பக்தர் ஒருவர் சுவாமியை வழிபட வந்தபோது கடும் மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படவே அவரால் நீரைக்கடந்து சுவாமியைக்காண வரமுடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியை தரிசிக்க இயலவில்லை.. வருத்தம்கொண்ட அவர் சிவனே உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால் இங்கு சிவன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும் முருகன் விநாயகர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். இந்த மருந்தீஸ்வரர் ஆலயம் ஏழாம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. சோழர் கால கல்வெட்டுகள் 16 உள்ளது. இதில் ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன. வான்மீகி முனிவர், அகத்தியர், பிருங்கி முனிவர், சூரியன், வேதங்கள், தேவர்கள், காமதேனு வழிபட்டுள்ளனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் பாடல்கள் பாடியுள்ளனர்.

சுலோகம் -10

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #10

பாட்டனார் பீஷ்மரால் காக்கப்படும் நமது படைகளை பாண்டவர்களால் எந்த விதத்திலும் வெல்ல முடியாது. பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை நாம் எளிதில் வெல்லலாம்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: தன் படைகளை பாண்டவர்களால் வெல்ல முடியாது என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

கௌரவர்கள் தங்களின் படைக்கு சேனாதிபதியாக பீஷ்மரை நியமித்திருந்தார்கள். பரசுராமரே வந்தாலும் அவரை எதிர்க்க கூடிய வல்லமை பெற்றவர் பீஷ்மர். அடுத்து பாண்டவர்களின் படைகளில் உள்ள மகாரதர்களின் எண்ணிக்கையை விட கௌரவர்களின் படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அடுத்து பாண்டவ படைகளை விட 4 அக்ரோணிப் படைகள் அதிகமாக உள்ளது என்ற காரணத்தினால் கௌரவ படைகளை வெல்ல முடியாது என்று நம்பினான். வீரர்களின் எண்ணிக்கை மற்றும் படைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பாண்டவர்களை எளிதில் வென்று விடலாம் என்று துரியோதனன் நம்பினான். அதனாலேயே யுத்தம் ஆரம்பிக்கும் முன்பே தனது தந்திரத்தினால் பல அரசர்களையும் வீரர்களையும் தனது பக்கம் சேர்த்துக் கொண்டான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: பீமனால் காக்கப்படும் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று துரியோததன் எதன் அடைப்படையில் நம்பினான்?.

பாண்டவர்களின் படைக்கு சேனாதிபதியாக திருஷ்டத்யும்னனையும் படைகளை காப்பதற்கு பீமனை காப்பாளனாக நியமித்திருந்தார்கள். பீமன் உடல் வலிமை பெற்றிருந்தாலும் பீஷ்மரோடு ஒப்பிட்டு பார்க்க முடியாதவன். படைகளில் மகாரதர்களின் எண்ணிக்கை குறைவாகவும் படைகளும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருந்த காரணத்தால் பாண்டவர்களின் படையை எளிதில் வெல்லலாம் என்று நம்பினான். பாண்டவர்கள் யுத்தத்தை வெல்வதற்கு கிருஷ்ணரையும் தங்களின் தவ வலிமையையும் நம்பினார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 37

கேள்வி: ஆஞ்சிநேயர் பற்றி?

ஆஞ்சிநேயர் இறைவனின் அம்சம். சாக்சாத் சிவபெருமானின் சக்தி தான் மால்தூதன் (ஆஞ்சிநேயர்). ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல ஜடாயு என்ற பட்சி (பறவை) வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார். இவரின் சகோதரர் சம்பாதி என்ற பட்சியும் ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.

கேள்வி: அபிஜித் காலம் எது?

உச்சி பொழுதிற்கு சற்று முன் உள்ள சிறப்பான நாழிகைதான் இது.

கேள்வி: கனவில் சிவலிங்கம் தோன்றுகிறது. பல விக்கிரங்களும் தோன்றுகின்றன?

சுப பலன்தான். இறை படங்களையோ ரூபங்களையோ ஸ்தலங்களையோ (கோவில்) பசு மயில் கருடன் அன்னப்பறவை புறாக்கள் போன்றவைகளையோ கனவில் பார்ப்பது நன்மையையே தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 36

கேள்வி: பிரளயம் பற்றி?

ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தமிழகத்தில் ஒருமுறை ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பொழுது தொடர்ந்து மழை பெய்தது. பிரளயம் என்றால் உலகமே அழிந்து விடாதப்பா. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படும். அப்போதெல்லாம் அரங்கத்திலே இருந்து அரங்கனை பூஜை செய்யும் பாக்கியத்தை இங்கு வந்து செல்லும் பலரும் பெற்று இருக்கிறார்கள். ஒரு முறை அரங்கனுக்கு தளிகை ஏதும் செய்ய இயலாத சூழல் ஏற்பட்ட போது அவரவர்கள் தம் வீட்டிலே உள்ள தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து இதுதான் இருக்கிறது என்று கொடுத்து அதை ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்துப் படைக்க அதை பால் சாதமாக அரங்கன் மாற்றி அருளினார். அப்படி அரங்கனை சோதித்தவர்களில் எம் சேய்களும் உண்டு.

கேள்வி: கஞ்சமலை பற்றி?

பல்வேறு மகான்களும் ஞானிகளும் இருந்த இடம். அரூபமாக இன்னும் இருக்கின்ற இடம். பல்வேறு மூலிகைகளும் ஏராளமான இரும்பு தாதுக்களும் இருப்பதால் இந்த மூலிகைகளில் அயச்சத்து (இரும்புச் சத்து) அதிகமாக இருக்கும். குறிப்பாக முழுமதி (பெளர்ணமி) தினங்கள் இங்கு செல்ல ஏற்ற தினமாகும்.

கேள்வி: உச்சிஷ்ட கணபதியின் தாத்பரியம் என்ன?

இனி பிறவி வேண்டாம் என்ற தன்மையை அளிப்பதுதான் இதன் தாத்பரியம். ஞான மார்க்கம் யோக மார்க்கம் மட்டும் வேண்டும் அல்லது வாக்கு பலிதம் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய ஒன்று.

சுலோகம் -9

பகவத் கீதை – 1. அர்ஜூன விஷாத யோகம் #9

இன்னும் எனக்காக உயிராசையை விட்ட பல சூரர்களான வீரர்கள் பலவிதமான அஸ்திர ஆயுதங்களுடன் தயாராக நிற்கின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தில் திறமை பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்த சுலோகத்தில் முதல் கேள்வி: சூரர்களான வீரர்கள் என்று துரியோதனன் யாரை குறிப்பிடுகின்றான்?

சல்லியன் பாஹ்லீகர் பகதத்தன் கிரதவர்மா ஜயத்ரதன் இவர்கள் மகாரதர்கள் ஆவார்கள் இவர்கள் தங்கள் உயிர் இருக்கும் வரை தனக்காக போராடுவார்கள் என்று துரியோதனன் துரோணரிடம் குறிப்பிடுகின்றான்.

இந்த சுலோகத்தில் 2 வது கேள்வி: சல்லியன் யார்?

நகுலனுக்கும் சகாதேவனுக்கும் தாயாக இருந்தவள் மாத்ரி. அவளுடைய சகோதரன் சல்லியன் மத்ர தேசத்தை ஆண்டு வந்தான். யுத்தத்தில் தன்னுடைய சகோதரியின் செல்வர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஒரு பெரிய சேனையை திரட்டிக்கொண்டு பாண்டவர்கள் முகாம் அமைத்து இருந்த உபப்பிளவிய நகரை நோக்கி வந்து கொண்டிருந்தான். சல்லியன் பெரும் படையுடன் வரும் பாதையில் தங்கப் போகும் இடங்கள் அனைத்திலும் அவர்கள் வருவதற்கு முன்பே துரியோதனன் அருமையான கொட்டகைகளை அமைத்து சல்லியனுக்கு வழிநெடுக உபசாரங்களும் உணவும் வழங்கினான். இத்தகைய அரிய பெரிய ஏற்பாடுகள் வசதிகள் எல்லாம் தன்னுடைய சகோதரியின் செல்வன் யுதிஷ்டிரன் செய்து வைத்திருந்தான் என்று சல்லியன் எண்ணினான். பணிவிடை செய்தவர்களிடம் அழைத்து தக்க முறையில் சன்மானம் செய்தாக வேண்டும். உங்களுடைய அரசரிடம் அனுமதி பெற்று வாருங்கள் என்றான். வேலையாட்கள் ஓடிச்சென்று துரியோதனனிடம் எடுத்துரைத்தார்கள். துரியோதனன் சல்லியனை அணுகி என்னுடைய உபசாரத்தை நீங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டதே முன்னிட்டு நான் பெருமகிழ்வு அடைகிறேன் என்றான். இத்தகைய அரிய பெரிய உபசாரங்கள் எல்லாம் எதிர்க்கட்சி மன்னனிடம் இருந்து வந்தது என்று சல்லியன் எதிர்பார்க்கவில்லை. இதற்கு கைமாறாக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்து சொல் என்று துரியோதனனிடம் சல்லியன் கேட்டான். துரியோதனனுடைய சூழ்ச்சி முற்றிலும் வெற்றிபெற்றது. அக்கணமே நீங்களும் உங்களுடைய பெரிய சேனையும் இனி வரப்போகும் யுத்தத்தில் தயவு பண்ணி என்னுடன் சேர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் இதுவே தங்களிடம் வேண்டுகின்ற சன்மானம் ஆகும் என்று துரியோதனன் சல்லியனிடம் கூறினான். கொடுத்த வாக்கின் படி சல்லியன் கௌரவர்களுக்காக போரிட சம்மதித்தான்.

சல்லியனும் அவருடைய சேனேயும் போரில் உதவி செய்வார்கள் என்ற எண்ணத்தில் பாண்டவர்கள் இருந்தார்கள். ஆனால் சல்லியன் தனக்கு வழியில் நிகழ்ந்த இக்கட்டையும் தர்ம சங்கடத்தையும் எடுத்து விளக்கினான். பாண்டவர்கள் பெரிதும் திகைத்துப் போயினர். இடி விழுந்தது போல் இருந்தது அவர்களுக்கு இந்த செய்தி. எதிர்பாராத வண்ணம் துரியோதனனுக்கும் சல்லியனுக்கும் நிகழ்ந்த யுத்த ஒப்பந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய சங்கடத்தில் இருந்தார்கள். இதைக் குறித்து யுதிஷ்டிரன் ஆழ்ந்து எண்ணிப் பார்த்தான். அதன் பிறகு தன்னுடைய மாமாவிடம் தன்னுடைய வேண்டுதலை தெரிவித்தான். எப்பொழுதாவது கர்ணனுக்கு சல்லியன் சாரதியாக அமைய வேண்டிய நெருக்கடி யுத்தத்தில் வந்து அமைந்தால் அப்போது அர்ஜூனனுடைய பராக்கிரமத்தை கர்ணனிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உபகாரம் அவர்கள் அடைந்துள்ள நஷ்டத்துக்கு ஈடு செய்யும். சல்லியனும் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.

இந்த சுலோகத்தில் 3 வது கேள்வி: பாஹ்லீகர் யார்?

பாக்லீகர் சந்தனுவின் இளைய சகோதரர் ஆவார். இவர் பாண்டவர் மற்றும் கௌரவர்களுக்கு பெரும் பாட்டன் ஆவார். இவர் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தவர். இவர் திருதராட்டிரனின் ஆலோசகராகவர். மகாபரத யுத்தத்தில் பீமனின் கையால் இறந்தார்.

இந்த சுலோகத்தில் 4 வது கேள்வி: பகதத்தன் யார்?

பிராக்ஜோதிசம் என்ற நாட்டின் அரசராக இருந்தவன். மிகவும் வயதானவர் வயது முதிர்வு காரணமாக நெற்றியின் தோல்கள் மடிப்புகளாக கீழே தொங்கிக்கொண்டிருந்தன. அவை தன் கண்களை மறைக்காமல் இருக்க அவற்றைத் தூக்கித் துணியால் கட்டிக்கொண்டு யுத்தத்தில் கலந்து கொண்டான் பகதத்தன். அவனது யானை சுப்ரதீகம் வீரத்தில் அவனுக்கு இணையானது. பாண்டவப் படைகளை ஏறி மிதித்துக் கூழாக்கியது. பகதத்தன் விடுவித்த சக்தி ஆயுதத்தைக் கண்ணன் தன் மார்பில் ஏற்றதாலேயே அர்ஜூனன் உயிர் பிழைத்தான். மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: கிரதவர்மா யார்?

யாதவ குலத்தைச் சேர்ந்த மன்னன். தனது நாராயணி படையுடன் கௌரவர்களுக்காக போரிட்டவன். போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன். அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் சிகண்டி மற்றும் திரௌபதியின் ஐந்து மகன்களை படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன். போரின் முடிவில் நாடு திரும்பி வந்தபோது தனது யாதவ குலத்தைச் சேர்ந்த மற்றொரு மன்னனான சாத்யகியால் கொல்லப்பட்டான்.

இந்த சுலோகத்தில் 5 வது கேள்வி: ஜயத்ரதன் யார்?

சிந்து ராஜ்யத்தின் அரசன் ஜயத்ரதன். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனும் ஆவான். பாண்டவர்கள் மீது கொண்ட விரோதம் கொண்டவன்.
மகாபாரத யுத்தத்தில் பதினான்காம் நாள் இறுதியில் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் ஜயத்ரதன் இறந்தான். (கீழ்கண்ட லிங்கில் ஜயத்ரதனின் முழுமையான வரலாறு உள்ளது. இதனை க்ளிக் செய்து ஜயத்ரதன் வரலாற்று முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.)

ஜயத்ரதன்

ஜயத்ரதன்

சிந்து ராஜ்யத்தின் அரசன் விருத்தக்ஷத்ரன். அவனுடைய மகன் ஜயத்ரதன். ஜயத்ரதன் திறம் வாய்க்கப் பெற்றவனாக வடிவெடுத்த பொழுது ராஜ்யத்தை அவனிடம் ஒப்படைத்து விட்டு தவ வாழ்க்கையில் ஈடுபட்டான் விருத்தக்ஷத்ரன். தன்னுடைய தவத்தில் ஜயத்ரதன் பற்றிய உண்மை ஒன்றை ஞானதிருஷ்டியில் கண்டார். உலக பிரசித்தி பெற்ற போர் வீரன் ஒருவன் ஜயத்ரதன் தலையை கொய்து கொல்வான் என்பது அவர் பெற்ற ஞானக்காட்சி. அதை அறிய வந்த விருத்தக்ஷத்ரன் இறைவனிடம் தவம் புரிந்து தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோ அவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும் என்று வரம் பெற்றான் விருத்தக்ஷத்ரன். ஜயத்ரதன் கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவனும் ஆவான்.

பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும் போது திரௌபதிக்கு துணையாக சில பெண்கள் இருந்தபடியால் பாண்டவர்கள் ஐவரும் வேட்டையாட வனத்திற்குள் சென்றிருந்தனர். அப்பொழுது ஜயத்ரதன் காம்யக வனத்தை தாண்டி தன் போக்கில் சென்று கொண்டிருந்தான். அப்போது திரௌபதியை பார்த்ததும் அவன் சிறிதும் நாணமின்றி அவளிடம் தனது காதலை தெரிவித்தான். திரௌபதி பாண்டவர்களின் மனைவி என்று தன்னை அவனுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு அவனுடைய செயல் முற்றிலும் சரியானது இல்லை என்று திரௌபதி தெரிவித்தாள். ஆனால் அவள் கொடுத்த விளக்கத்திற்கு ஜயத்ரதன் செவி சாய்க்கவில்லை. நாடோடிகளாகிய பாண்டவர்கள் அவளை மனைவியாக வைத்திருக்க தகுதியற்றவர்கள் என்றும் நாடாளும் வேந்தன் என்னும் முறையில் எந்த பெண்ணை வேண்டுமானாலும் தனக்கு மனைவியாக எடுத்துக் கொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்றும் பேசினான். அதைத் தொடர்ந்து இருவருக்குமிடையில் கைசண்டை நிகழ்ந்தது. திரௌபதி ஜயத்ரதனை கீழே தள்ளினாள். ஆயினும் அவனுடைய வலிமையினால் திரௌபதியுடைய கைகளையும் கால்களையும் கட்டி தன் ரதத்தில் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். திரௌபதிக்கு துணையிருந்த பெண்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏதோ அசம்பாவிதம் நிகழ்வதாக பாண்டவர்கள் உணர்ந்தனர். எனவே அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து திரும்பினர். திரௌபதியை காணவில்லை நடந்தவற்றை விளக்கமாக அங்கிருந்த பெண்கள் எடுத்துக் கூறினார். அக்கணமே சகோதரர்கள் ரதம் போன வழியில் விரைந்து ஓடினார். ஜயத்ரதனை பிடித்து நிறுத்தினர். அவனுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. சிறிது நேரத்தில் ஜயத்ரதனை தோற்கடிக்கப்பட்டான். பீமன் அவனை கீழே போட்டு மிதித்தான். ஜயத்ரதனுக்கு மயங்கி விழுந்தான். அவன் மயங்கி கிடந்த பொழுது ஐந்து சிறு குடுமி வைத்து அவனுடைய தலை முடி வெட்டப்பட்டது. அதன் விளைவாக அவனுடைய தோற்றம் பரிதாபத்துக்கு உரியதாயிற்று. சிறிது நேரத்திற்கு பிறகு அவனுக்கு மயக்கம் தெளிந்தது. அப்பொழுது அவன் ஒரு கால்நடை போன்று கயிற்றால் கட்டப்பட்டு இருப்பதை அறிந்தான்.

பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.

ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவன் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. நீ செய்த தவத்தின் பலனாக ஒரே ஒரு நாள் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணரை தவிர்த்து போர் களத்தில் ஜயத்ரதன் யாரை வேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவாய். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அந்த நாளையும் நீயே தேர்வு செய்து கொள்ளலாம் என்று வரம் கொடுத்தார் சிவன். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.

மகாபாரத யுத்தம் ஆரம்பித்தது. யுத்தத்தில் பத்ம வியூக அமைப்பை துரோணர் அமைத்திருந்தார். இதனை கண்ட யுதிஷ்டிரர் கலக்க முற்றார். ஆபத்து மிக வாய்ந்த பத்ம வியூகம் பாண்டவர்களின் படைகளை விரைவில் அழித்துவிடும். இந்த நெருக்கடியில் அபிமன்யு தன் திறமையை கையாண்டு பத்ம வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். பாண்டவர்களின் துர்பாக்கிய வசத்தால் அபிமன்யுவை பின்பற்றி ஏனைய போர்வீரர்கள் உள்ளே நுழைய இயலவில்லை. அபிமன்யு உள்ளே நுழைந்ததும் பத்மவியூகம் மூடிக்கொண்டது. ஏனைய போர்வீரர்கள் இந்த வியூகத்திற்குள் நுழைய முடியாதவாறு ஜயத்ரதன் தன் வரத்தின் சக்தி கொண்டு வியூகத்தின் நுழைவை மறைத்தான். அன்று முழுவதும் வீரியம் நிறைந்த போராட்டமே கழிந்தது ஆயினும் ஜயத்ரதனை வெல்ல பாண்டவ போர் வீரர்களுக்கு இயலவில்லை. சிவன் கொடுத்த வரத்தை இப்போது ஜயத்ரதன் பயன்படுத்தி பீமன் நகுலன் சகாதேவன் யுதிஷ்டிரர் அபிமன்யுவிற்கு உதவி செய்யாதவாறு தடுத்தான். இறுதிவரை வீரத்தோடு போர் புரிந்த அபிமன்யுவின் தேகத்தை துரோணர் கிருபர் கர்ணன் ஜயத்ரதன் ஆகியோர் செலுத்திய அம்புகள் துளைத்தது. அபிமன்யு தரையில் வீழ்ந்து வீர மரணம் எய்தினான். தென்திசையில் சம்சப்தர்களை அழித்துத் திரும்பிய அர்ஜூனன் காதில் இச்செய்தி விழ அவன் மயங்கி விழுந்தான். கிருஷ்ணரின் ஸ்பரிசம் பட்டு எழுந்த அர்ஜுனன் மகனின் உடலை கட்டி தழுவி அழுதான். மகனின் மரணத்திற்கு மூலக் காரணம் ஜயத்ரதன் என அறிந்து ஜயத்ரதனை நாளை சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வேன் தவறினால் அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கிருஷ்ணன் மீது ஆணை என்று சபதம் செய்தான்.

அர்ஜுனனின் சபதம் ஒற்றர்களின் வழியாக ஜயத்ரதனின் செவிகளுக்கு எட்டியது. சபதத்தைக் கேட்ட ஜயத்ரதன் போர்க்களத்தை விட்டு தன் நாட்டிற்கு ஓடிவிடலாமா என யோசித்தான். அது வீரனுக்கு அழகில்லை என்று மற்றவர்கள் தடுத்தனர். கௌரவர்கள் ஒன்று கூடி ஜயத்ரதனை காப்பாற்ற திட்டம் தீட்டினார்கள். சூரிய அஸ்தமனம் முடியும் வரை ஒரு மலை குகைக்குள் ஜயத்திரதனை மறைத்து வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அப்போது ஜயத்ரதன் துரோணரைப் பார்த்து நீங்கள் அனைவருக்கும் சமமாக தான் வில்பயிற்சி அளித்தீர்கள் ஆனால் அர்ஜூனன் போல் மற்றவர்கள் சிறக்கவில்லையே ஏன் என்று கேட்டான். அதற்கு துரோணர் அர்ஜூனன் தவ வலிமை உடையவன். ஆகவே மேம்பட்டு விளங்குகிறான். அவனுடைய தவ வலிமை என்னிடம் மட்டுமல்ல கௌரவ படையில் யாரிடமும் இல்லை. அவனை எதிர்க்கும் சக்தி படைத்தவர் இருவர் மட்டுமே இருக்கின்றனர். ஒருவர் இப்போது அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர். மற்றவர் விதுரர் அவர் துரியோதனனின் அறிவற்ற செயலால் போரில் பங்கேற்கவில்லை. மேலும் கிருஷ்ணர் அவன் தேருக்கு சாரதியாய் இருக்கிறார். எனவே இந்த யுத்தத்தை பொறுத்த வரை அவன் வெல்ல முடியாதவன் என்றார். மறுநாள் யுத்தம் ஆரம்பித்தது.

அர்ஜூனன் போர்க்களம் எங்கும் ஜயத்ரதனை தேடினான். ஜயத்ரதனை கிடைக்கவில்லை. மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. எவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான் துரியோதனன். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். துரியோதனன் தன் திட்டம் வென்றதாக கூறி ஆனந்தம் அடைந்தான். சூரியன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொள்ள ஆயத்தமாய் இருந்தான். கௌரவ படைகள் வெற்றி அடைந்து விட்டதாக ஆர்பரித்தனர். திரும்பிய திசை எங்கும் கௌரவ படையின் வெற்றி முழக்கம். பாண்டவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். கிருஷ்ணர் தன்னுடைய யோக சக்தியின் மூலம் சுதர்சன சக்கரத்தை கொண்டு சூரியனை மறைத்தார். சூரியன் மறைந்து விட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது. பாண்டவர்கள் பதறினர். மனம் உடைந்தான் அர்ஜுனன். அபிமன்யுவை நினைத்து கண்ணீர் சிந்தினான். கிருஷ்ணர் மேல் தான் செய்த சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான். மௌனம் சாதித்தார் கிருஷ்ணர். அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காண ஜயத்ரதனும் ஆவலோடு மலை முகட்டின் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தாது கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாக நின்று கொண்டான் ஜயத்ரதன். பாண்டவர்கள் தன்னை அவமானப்படுத்தியதற்காக பழி தீர்த்து விட்டதாக எண்ணி பூரிப்படைந்தான். பாண்டவர்கள் வேதனையுடன் காணப்பட்டனர். ஆனால் எல்லாம் அறிந்த கிருஷ்ணரோ தன் லீலையை நிகழ்த்த காத்துக் கொண்டிருந்தார். கிருஷ்ணரின் பாதங்களை வணங்கினான். அப்போது கிருஷ்ணர் அர்ஜுனா காண்டீபத்தை உன் கையில் ஏந்தி தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றை நாணேற்றிய வண்ணம் அக்னியை வலம் வா என்றார்.

அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கிருஷ்ணர் தன் லீலையை ஆரம்பித்தார். சுதர்சனச் சக்கரம் சூரியனை விட்டு நகர்ந்தது இருள் என்னும் மாயை மறைந்து மேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசியது. கண்ணன் தன் சுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை அனைவரும் புரிந்துகொண்டனர். அர்ஜுனன் கண்களில் தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான். அர்ஜுனா அதோ ஜயத்ரதன் நாணேற்றிய அஸ்திரத்தை விடுத்து அவன் தலையைக் கொய்து வனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற மடியில் விழச் செய் என்று ஆணையிட்டார் கிருஷ்ணர். கண்ணிமைக்கும் நேரத்தில் காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்து விண்ணிலே தூக்கிச் சென்று வனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணி மடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன். உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது. விருத்தக்ஷத்ரன் பெற்ற வரத்தை பற்றிய ரகசியத்தை கிருஷ்ணன் ஒருவரே அறிந்திருந்தார். அர்ஜுனனை காப்பாற்றும் பொறுப்பை கிருஷ்ணன் ஏற்றிருக்கின்றார். ஆகையால் அர்ஜுனன் உயிர் பிழைத்தான். பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கிருஷ்ணரை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான். சபதத்தை முடித்தான் அர்ஜுனன். மகாபாரத யுத்தத்தில் பதினான்காம் நாள் இறுதியில் ஜயத்ரதன் கிருஷ்ணரின் வழிகாட்டுதலோடு அர்ஜூனன் கையால் இறந்தான். விருத்தக்ஷத்ரன் தன் மகனுக்காக தான் பெற்ற வரமே அவனை அழித்துவிட்டது.

ருத்ராட்சம்

முன்னொரு காலத்தில் நாரத முனிவருக்கு ஒரு பழம் கிடைத்தது. அப்பழத்தை அவர் மகாவிஷ்ணுவிடம் காண்பித்து இது என்ன பழம் இப்பழத்தை இது வரை நான் பார்த்ததில்லையே என்று கேட்டார். அதற்கு மகாவிஷ்ணு பூர்வ காலத்தில் திரிபுராசுரன் என்ற அரக்கன் இருந்தான். அவன் பிரம்மனிடம் வரம் பெற்று சர்வ வல்லமை படைத்தவனாக இருந்தான். அந்த கர்வத்தினால் அனைத்து தேவர்களையும் துன்புறுத்தினான். அப்பொழுது தேவர்கள் அனைவரும் எம்மிடம் வந்து அந்த அரக்கனை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நான் அனைவரையும் அழைத்துக் கொண்டு சிவபெருமானிடம் சென்று முறையிட்டோம். அப்பொழுது சிவபெருமான் தேவர்கள் அனைவரின் சக்தியையும் ஒரே சக்தியாக மாற்றி ஒரு வல்லமை படைத்த ஆயுதம் ஒன்றை உண்டாக்கினார். அந்த ஆயுதத்தின் பெயர் அகோரம் ஆகும். தேவர்களை காக்க திரிபுராசுரனை அழிக்க கண்களை மூடாமல் பல 1000 ஆயிரம் வருடம் அகோர அஸ்தர நிர்மாணத்திற்காக சிவபெருமான் (தியானம் தவம்) சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது மூன்று கண்களையும் அவர் பல ஆண்டுகள் மூடாமல் இருந்ததால் மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் சிந்தியது. அந்த கண்ணீர் பூமியில் விழுந்து ருத்ராட்சமரமாக உண்டானது. அந்த ருத்ராட்சம் மரத்தில் இருந்து விழுந்த பழம்தான் இது என்று மகாவிஷ்ணு நாரதரிடம் கூறினார்.

ருத்ராட்சத்தை பக்தியுடன் அணிபவர்களை சிவன் எப்பொழுதும் தன் கண் போலக் காப்பாற்றுவார். ருத்ராட்சம் அணிந்தால் மனமும் உடலும் தூய்மை அடைந்து நல்வழி நற்கதி முக்திக்கு வழிநடத்தும். ஆமாம் ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். எல்லா நேரத்திலும் அணிந்திருக்கலாம். நீர் பருகும் போதும் உணவு உண்ணும் போதும் தூங்கும் போதும் இல்லறத்தில் ஈடுபடும் போதும் பெண்கள் மாதவிடாய் காலத்திலும் இறப்பு வீட்டிற்கு போகும் போதும் எல்லாக்காலத்திலும் ருத்ராட்சம் அணிந்திருக்கலாம் என்று சிவபுராணம் தெரிவிக்கிறது. சிறுவர் சிறுமியர் ருத்ராட்சம் அணிவதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்தால் தீர்க்க சுமங்களியாக மஞ்சள் குங்குமத்தோடு வாழ்வார்கள். இதனால் அவர்களுடைய கணவருக்கும் தொழிலில் மேன்மையும் வெற்றியும் இல்லத்தில் லட்சுமி கடாசமும் நிறைந்திருக்கும். எல்லா காலத்திலும் எல்ல வயதினரும் எல்லா நேரங்களிலும் அணிந்து கொண்டே இருக்கலாம் இதனால் பாவமோ தோஷமோ கிடையாது. ருத்ராட்சம் அணிபவர்கள் மது அருந்துதல் புகை பிடித்தல் புலால் உண்ணுதல் போன்றவற்றை விட்டுவிட வேண்டும். ருத்ராட்சம் நீரில் மூழ்கினால் அது நல்ல ருத்ராட்சமாகும் மிதந்தால் அது போலி.

ருத்ராட்சம் பெண்கள் அணியக்கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது அது உண்மையா? பெண்களின் பெருந்தெய்வமாக விளங்குபவள் ஆதிபராசக்தி அவள் ருத்ராட்சம் அணிந்திருப்பதை கொந்தளகம் சடை பிடித்து விரித்து பொன்தோள் குழை கழுத்தில் கண்டிகையின் குப்பை பூட்டி என்று அருணாசல புராணம் பாடல் எண் 330 விவரிக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 35

கேள்வி: தீபத்தில் முகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா?

பலமுறை உரைத்திருக்கிறோம். முகங்கள் அதிகமாக அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும் ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு.

கேள்வி: 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி?

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால் அத்தருணம் பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டாலோ (வழிபாடு) செய்தால் அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதை விட ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: என் உறவினர் ஒருவர் தன் மனைவி தன்னை மதிப்பதே இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்?

இந்த உலகத்தில் அவனுக்கு மட்டும்தானா இந்த நிலை? எத்தனையோ ஆண்கள் மனைவியை மதிப்பதில்லை. இதற்கு நவகிரக காயத்ரி அதிதெய்வ காயத்ரி சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்யச் சொல்.

துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சீரஞ்சிவியாக வாழும் மரணமில்லாதவன் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன். பரத்வாஜ முனிவரின் மகன் துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும் முனிவர் சரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. எனவே துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்து அவர் முன் தோன்றிய சிவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சீரஞ்சிவியாக வாழும் அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சீரஞ்சீவியாக சாகா வரம் பெற்ற குழந்தை பிறக்க சிவன் வரம் அளித்தார். குழந்தை பிறந்ததும் குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் குழந்தைக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த திவ்ய அஸ்திரமோ அஸ்வத்தாமனை கொல்ல முடியாது. துரோணரை அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு குருவாக நியமித்தார் பீஷ்மர்.

பாண்டவர் கொளரவர்களோடு அஸ்வத்தாமனும் அரிய வித்தைகளை துரோணரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அது மட்டுமின்றி தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் சத்ரிய குலத்தின் சிம்ம சொப்பனம் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டான். தன் தந்தை துரோணர் அர்ஜூனன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதை அஸ்வத்தாமனால் தாங்க முடியவில்லை. அஸ்வத்தாமனை பாண்டவர்கள் ஏளனம் செய்யும் போதெல்லாம் துரியோதனன் அவனுக்கு துணை நின்றான். அதுவே துரியோதணனுக்கு அவரை நெருக்கமான நண்பனாக மாற்றியது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது தன் சிறு வயது நண்பன் கிருஷ்ணனை பார்க்கச் சென்றான் அஸ்வத்தாமன். அவனை வரவேற்ற கிருஷ்ணன் என்ன வேண்டும் கேள் நண்பனே என்று கேட்க தங்களுடைய சுதர்சனச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும் என்று கேட்கிறான். சிரித்தவாரே எடுத்துக்கொள் என கிருஷ்ணர் சொல்ல அதை எடுக்கிறான் அஸ்வத்தாமன். எவ்வளவு முயன்றும் அதை அஸ்வத்தாமனால் அசைக்க கூட முடியவில்லை. இதனைக் கண்ட கிருஷ்ணர் சிரித்தபடியே எதற்காக உனக்கு இது தேவை நண்பனே என்று கேட்டார். வரும் காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும் அதில் நான் துரியோதனனை காக்க வேண்டும். பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் இருக்கும் வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆகவே கிருஷ்ணா உம்மை வதைக்கவே உமது சுதர்சன சக்கரம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மெய்சிலிர்த்து போகிறார் கிருஷ்ணர். உன் நட்பின் இலக்கணம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா சுதர்சன சக்கரத்தை வைத்து கொண்டு என்னை கொல்ல இயலாது. ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் அழித்து உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாராயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன் என்று வரமளித்தார் கிருஷ்ணர். தன் தந்தை துரோணாச்சாரியார் மூலம் ஈடு இணையற்ற அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை கற்றுக் கொண்டான் அஸ்வத்தாமன். அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வண வேத மந்திரங்களை உருவேற்றி காளி தேவிக்கு சமர்பணம் செய்து வேதத்தின் வித்தகனாக விளங்கினான். அஸ்வத்தாமனின் பக்தியால் அவனுக்கு தரிசனம் கொடுத்த அன்னை காளிதேவி மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திரத்தை வரமாக அளிக்கிறாள். ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் இந்திரஜித் மகாபாரதத்தில் அர்ஜூனன் அஸ்வத்தாமன் ஆகிய மூவர் மட்டுமே இந்த ஆயுதத்தில் ஞானம் பெற்றவராவர்கள் ஆவார்கள். மற்ற அஸ்திரங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. மிகுந்த பேரழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். பிரம்மாஸ்த்திரம் பெற்றவன். நாராயண அஸ்திரம் பெற்றவன். பாசுபதாஸ்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவனாவான்.

மகாபாரத யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றுவிட்டான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 34

கேள்வி: 18 சித்தர்களும் முக்கியமான (சிதம்பரம் பழனி போன்ற) ஸ்தலங்களில் அடங்கியிருப்பதாக பெரியோர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் பழனிக்கு செல்லும் மக்கள் முருகனை மட்டும் வணங்குகிறார்கள். போகரை வணங்குவதாக எனக்கு தெரியவில்லை இது ஏன்?

இறைவன் அருளால் புரிந்து கொள்ள வேண்டும். 18 சித்தர்கள் என்பது தவறான வழக்காகும். பதி எனப்படுவது இறைவனை குறிக்கக்கூடியது. பதி எண் சித்தர்கள் பதியாகிய இறைவனை சதாசர்வகாலம் எண்ணக்கூடிய அனைவருமே சித்தர்கள்தான். இது மருவி 18 என்று ஆகிவிட்டது. அடுத்தாக சித்தர்கள் அடங்கியிருப்பதாக கூறப்படும் அதாவது ஜீவ அருட் பீடம் என்று எம்மாலும் ஜீவ சமாதி என்று மனிதர்களாலும் கூறப்படுகின்ற எல்லா இடங்களிலும் அவ்வாறு இருப்பதல்ல. பின் அந்த வழக்கம் எவ்வாறு ஏற்பட்டது? என்றால் அதுபோன்ற ஸ்தலங்களில் சித்தர்கள் பல காலம் தங்கி இறை தொண்டும் மக்களுக்கு சேவையும் செய்திருப்பார்கள். இன்னொன்று வேருக்கு நீர் ஊற்றினாலே அது விருட்சத்தின் (மரத்தின்) எல்லா பகுதிகளுக்கும் செல்லும். மூலவராகிய இறைவனை வணங்கினாலே அது சித்தர்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே போகனை வணங்கவில்லை என்பதை குற்றமாக கொள்ள வேண்டாம் என்றாலும் அதுபோன்ற இடங்களில் தனியாக ஒரு சித்த சன்னதி இருந்தால் கட்டாயம் சென்று வணங்குவது நல்ல பலனைத் தரும். மேலும் நெறிப்படுத்த மனிதனுக்கு உண்மையை உணர்த்த அந்த சித்தர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை யாம் இத்தருணம் இயம்புகிறோம்.

கேள்வி: சஹஸ்ர லிங்கம் லிங்கம். இதில் எது சிறந்தது?

வைரம் வைடூரியம் இரண்டில் எது உயர்வு? கனகம் கனகத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள் இதில் எது உயர்வு? எனவே அனைத்தும் உயர்வுதானப்பா. இருக்கின்ற பரம்பொருளை எதன் வழியாக மனிதன் பார்க்க விரும்பினாலும் பார்க்கின்ற மனிதனின் மனோபாவம் சரியாக இருந்தால் அவன் கல்லிலும் கடவுளைக் காணலாம். மனோபாவம் சரியில்லையென்றால் கடவுளே எதிரில் வந்து நின்றாலும அவனுக்கு கல்லாகத்தான் தெரியும். இரண்டுமே உயர்வுதான்.