திரிலோசனதாசர்

திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர் தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர் இறை பக்தி மிக்கவர் பாண்டுரங்கனிடம் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்கள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவர் மன்னரின் அரண்மனைப் பொற்கொல்லராக இருந்தார். மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. மகளுக்கான நகைகளை திரிலோசனதாசர் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பி பொன் மற்றும் நவரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான். திரிலோசனரும் சம்மதித்தார். ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பாண்டுரங்கனை பற்றி பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார். இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது. பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது. அதன் பின்னர் தான் இவருக்கு நகை செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது. நவரத்தினம் பதித்த நகைகளை செய்யும் வேலையில் இறங்கினார். அந்நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை. நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் நகைகளைச் செய்ய முடியவில்லை. மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகி விட்டதா எனக் கேட்டு வந்தார்கள். இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்து விடுவதாகவும் சொல்ல இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடியவில்லை பயந்து போனார் திரிலோசனார். மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார். கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார். அப்போது பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர்கள் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன். மேலும் எதுவும் கேள்விகள் கேட்காமல் மௌனமாகிவிட்டார் திரிலோகரின் மனைவி. திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் மன்னரின் மகளுக்காக அழகிய நகைகளைச் செய்து முடித்தார். அது சந்திரனைப் போல் ஒளி வீசியது. அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். ஒளி வீசும் நகைகளைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன. நகைகள் மிகவும் அழகு என வியந்து பாராட்டினார் மன்னர். இவ்வளவு அழகான நகைகளைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார். திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கன் பொற்காசுகளுடன் வீட்டிற்கு வந்தார். அவற்றை திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து பொற்காசுகளில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார். திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு பொற்காசுகளைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்கவில்லை. கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்.

பாண்டுரங்கனும் சில பக்தர்களை உணவுண்ண அழைத்து வந்தார். தானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார். பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு அடியவர் வேடத்தில் வந்தார். அப்போது திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வேண்டினார். திரிலோசனாரும் கண்களைத் திறந்து அடியவரை பார்த்து இந்த காட்டில் உங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. நான் தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அடியவர் வேடத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் நகைகளை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ந்த மன்னர் அளவுக்கதிகமாக பொற்காசுகள் கொடுத்திருக்கிறார். அந்த பொற்கொல்லார் அடியவர்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். திருப்தியாய் சாப்பிட்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக்காட்டிற்குள் வந்து விட்டேன். விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். உங்களைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது. இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.

பாண்டுரங்கன் வடிவில் இருந்த அடியவர் கூறிய செய்தி திரிலோசனதாசருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நாம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மன்னர் வேறொரு பொற்கொல்லரை வைத்து நகைகளை செய்து வாங்கிக் கொண்டார். இனி நமக்கு பயமில்லை. இனி நாம் நம் வீடு திரும்பலாம் என நினத்தார். அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது. அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார். வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம் சுவாமி எனக்கு உணவளித்த நீங்கள் என்னுடன் என் இல்லம் வரவேண்டும். உங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார். அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார். இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர். அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார். வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக் கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இவ்வளவு மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன எப்படி வந்தது என்று வியப்போடு கேட்டார். அவரின் கேள்வியில் திகைத்துப் போன மனைவி இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் தானே நகைகளை செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த பொற்காசுகளை என்னிடம் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள். அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே? நீங்களும் அவ்விருந்தில் இருந்த பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு எங்கோ சென்றீர்களே? ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள். மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவர் இல்லை. இப்போது திரிலோசனதாசருக்கு நன்கு புரிந்தது. தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்ட போது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து நகைகளைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டு வந்து அளித்துள்ளார் என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

சக்கராங்கிதா லிங்கம்

கர்நாடகாவின் விஜயபுரா பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள சக்கராங்கிதா லிங்கம் என்று அழைக்கப்படும் இந்த லிங்கம் புராதாண பண்டைய லிங்கம் ஆகும். இந்த லிங்கத்தின் மேல் ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. ஸ்ரீசக்கரத்தின் மைய பகுதியில் தேவி லலிதா பரமேஸ்வரி வசிக்கிறாள்.

தூக்கத்தில் அருள் கொடுக்கும் அனுமன்

மகாராஷ்டிராவின் லோனாரில் உள்ள மோத்தா அனுமன் கோவிலில் ஒரு காந்த பாறையால் கட்டப்பட்ட படுத்த நிலையில் ஒரு பெரிய அனுமன் மூர்த்தி உள்ளார். 8 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோவிலில் இருக்கும் அனுமன் ஆரம்பத்தில் இருந்து தூக்க நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார். கண்கள் திறந்த நிலையில் இருந்தாலும் இவர் தூக்கத்தில் இருப்பதாக கோவிலின் புராண வரலாற்றுப்படி சொல்லப்படுகிறது. 8 ஆம் நூற்றாண்டில் லோனார் பள்ளத்தை உருவாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட பாறையில் இருந்து இந்த அனுமனின் சிலை செதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூர்த்தி 9.3 அடி உயரமும் அனுமனின் இடது கால் சனி தேவரின் சிறிய சிலை உள்ளது. இந்த சிலை பல ஆண்டுகளாக சிவப்பு நிற செந்தூரம் பூசப்பட்டிருந்தது. இப்போது செந்தூரம் அகற்றப்பட்டு அனுமனின் அசல் வடிவத்தை காணலாம்.

கந்தகோட்டத்து உற்சவர் முருகன்

கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.

ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.

இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார்.

பேராணந்த ஒளிபொருந்திய உற்சவ முருகரைக் கண்ட கூட்டம் மொத்தமும் பரவசத்தோடு முத்துக்குமாரசுவாமிக்கு அரோஹரா எனக் கூறினார்கள். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம் வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள் புரிவார்.

கும்பேஷ்வர்

மகாராஷ்ரா மாநிலத்தில் சடாரா என்னுமிடத்தில் பழமையான பட்டீஸ்வர் சிவன் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள சிவலிங்கம் கும்பேஷ்வர் பிண்ட் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள சிவ லிங்கத்தைப் பற்றி இந்து வேதங்களிலும் புராணங்களிலும் குறிப்புகள் உள்ளது. இக்கோவிலைப் பற்றி ஸ்ரீ க்ஷேத்ரா பட்டீஸ்வரர் தரிசனம் என்ற வரலாற்று நூல் உள்ளது. இந்த புராதாண சிவலிங்கத்தை சுற்றி கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டது. இந்த கோயிலில் 8 குகைக் கோயில்கள் உள்ளது. இவற்றில் 1000 க்கும் மேற்பட்ட சிவ லிங்கங்கள் உள்ளது. இக்குகைக்குள் நிலத்திற்கு அடியிலும் சிவ லிங்கங்கள் உள்ளது. குகைக் கோயிலில் உள்ள தூண்களில் செதுக்கப்பட்ட பாம்பு மற்றும் சிறிய சிவலிங்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிக்கலான சிற்பங்களைக் கொண்ட மகா சிவலிங்கம் உள்ளது. இக்கோவிலிலுள்ள பல தெய்வங்கள் தனித்துவமாக அழகாக உள்ளது. இந்த தெய்வங்களின் பெயரை இன்னும் முழுமையாக அடையாளம் காணமுடியவில்லை.

அக்னீஸ்வர் மற்றும் இறைவனின் வாகனமான காளை இருவரும் சேர்ந்த உடலுடன் ஒரு சிற்பம் இருக்கிறது. இந்த சிற்பத்தில் முகம் பார்ப்பதற்கு ஒரே முகமாக தோன்றினாலும் நன்றாக பார்த்தால் அக்னீஸ்வரரின் முகமும் காளையின் முகமும் தெரியும். அக்னீஸ்வரரின் எழு கைகளுடனும் இரண்டு கால்களுடனும் காளையின் நான்க் கால்களுடனும் இந்ம சிற்பம் உள்ளது. இந்த உருவத்தை வலிமைமிக்க கடவுள் மனிதர்களுக்குள் நுழைந்தார் என்று ரிக் வேதம் 4.58.3 விவரிக்கிறது. இந்த குகைகளில் நவகிரகத்தின் சிற்பங்களும் உள்ளது. நான்கு முகம் கொண்ட சிவலிங்கம் பல சிற்பங்கள் மத்தியில் முற்றத்தில் உள்ளன. பிரதான அறையின் நுழைவாயிலில் கதவின் இருபுறமும் ஆண் வடிவிலான இறை உருவங்கள் திரிசூலங்களையும் பெண் வடிவிலான இறை உருவங்கள் கங்கா மற்றும் யமுனா தண்ணீர் பானைகளையும் வைத்திருக்கின்றார்கள். சிறிய கட்டைவிரல் ஆணி அளவிலான செதுக்கப்பட்ட சிற்பங்கள் முதல் 2 மீ நீளம் வரையிலான சிற்பங்கள் உள்ளது. கோவிலுக்கு வெளியே திரிமூர்த்தியுடன் ஒரு சிவலிங்கமும் கல்லால் செய்யப்பட்ட இரண்டு பெரிய விளக்குத் தூண்களும் உள்ளது. இங்கு சத்குரு கோவிந்தானந்தசாமி மகாராஜ் மட் என்று அழைக்கப்படும் ஒரு மடம் உள்ளது. பல ஆண்டுகளாக இங்கு வசித்து வரும் ஒரு சில சாதுக்களால் இக்கோவில் பராமரிக்கப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றி உள்ள மலையில் சுமார் 52 வகையான மருத்துவ தாவரங்கள் உள்ளன.

தபகேஸ்வர் குகைக்கோவில்

இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனில் அமைந்துள்ள இக்கோவில் மஹாதேவ் கோவில் என்றும் தபகேஷ்வர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஒரு காட்டாற்றின் கரைப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பிரதான சிவலிங்கம் குகைக் கூரையின் உச்சியில் அமைந்துள்ளது. இக்குகைக்குள் இயற்கையாக அமைந்த சிவலிங்கமும் உள்ளது. இந்த குகைக்கோயிலின் கூரையிலிருந்து சிவலிங்கத்தின் மீது நீர் தொடர்ச்சியாக சொட்டிக் கொண்டே இருப்பதால் தப்கேஷ்வர் கோயில் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. தபக் எனும் சொல்லுக்கு இந்தியில் சொட்டுவது என்று பொருளாகும். இந்த கோயிலைச் சுற்றிலும் நிறைய கந்தக நீரூற்றுகள் உள்ளது. இவற்றில் வெளிப்படும் நீருக்கு மருத்துவக்குணங்கள் உள்ளது.

மகாபாரத புராதாண கதையின் படி துரோணாச்சாரியின் மனைவி கல்யாணிக்கு இந்த குகையில் அஸ்வத்தாமன் பிறந்தார். துரோணாச்சாரியா மிகவும் ஏழ்மை நிலையில் இருந்ததால் தன் மகன் அஸ்வத்தாமாவுக்கு பால் வழங்க முடியவில்லை. அப்போது சிவபெருமான் குழந்தைக்கு பாலை பாய்ச்சி உள்ளார். பாண்டவர்கள் இந்த சிவபெருமானை வழிபட்டு உள்ளார்கள். துரோணாச்சார்யார் அவரது மனைவியான கல்யாணி மற்றும் மகன் அஸ்வத்தாமன் ஆகியோருக்கு இக்கோவிலில் சிற்பம் உள்ளது.

அட்சய திருதியை

காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூரணி தேவி தான் பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்தால் தானே அன்னத்திற்கு அதிபதி என்று சிறு கர்வம் கொண்டாள். அந்த கர்வத்தை போக்குவதற்கு சிவபெருமான் ஒரு சிவயோகியாக தோற்றம் கொண்டு அன்னபூரணியம் வந்து தாயே பசி என்றார்இதை கேட்ட அன்னபூரணி தேவி இலையிட்டு தன்னால் இயன்ற வரை உணவுகள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ இன்னும் இன்னும் என்று கேட்டு வாங்கி உட்கொண்டுக் கொண்டே இருந்தார். அன்னபூரணி உருவாக்கிய உணவுகள் அனைத்தும் பூர்த்தியாக அன்னபூரணி தேவிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற தன்னுடைய அண்ணனாகிய மகா விஷ்ணுவை பிரார்த்தித்து அழைத்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மகா விஷ்ணுவாகிய மாதவன் ஒரு அந்தணர் கோலத்தில் அன்னம் தயார் செய்யும் இடத்திற்கு சென்றார். அங்கு அன்னம் தயார் செய்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை சிவார்ப்பணம் என்று சொல்லிக் கொண்டு தன் திருவாயால் உட்கொண்டார். உடனடியாக மீண்டும் பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.

சிவயோகிக்கு அருகில் இலையிட்டு மகா விஷ்ணுவை அமர்த்தி உணவு பறிமாறினார் அன்னபூரணி தேவி. மகா விஷ்ணு உணவருந்த அமர்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால் சிவயோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவயோகியை வணங்க சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உனக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார். உடனே மகா விஷ்ணு இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எவ்வாறு வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல செயலுக்காக நல்ல மனதுடன் காரியங்களை தொடங்குகிறார்களோ அது இனிதே வளரும் என்று ஆசிர்வதித்தார். அன்று முதல் சித்தரை மாதம் சுக்ல பக்ச திரிதியை நாம் அட்சய திரிதியை திருநாளாக கொண்டாடுகின்றோம்.

ராமரின் முன்னோர்கள்

  1. பிரம்மாவின் மகன் – மரீசீ
  2. மரீசீயின் மகன் – கஷ்யபர்
  3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
  4. விவஸ்வானின் மகன் – மனு
  5. மனுவின் மகன் – இஷ்வாகு
  6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
  7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
  8. புரண்ஜயாவின் மகன் – அணரன்யா
  9. அணரன்யாவின் மகன் – ப்ருது
  10. ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
  11. விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
  12. ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
  13. யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
  14. ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
  15. வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
  16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
  17. த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
  18. ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா
  19. ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
  20. நிகும்பின் மகன் – சன்டஷ்வா
  21. சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
  22. க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
  23. ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
  24. யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
  25. மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
  26. அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
  27. ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
  28. த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
  29. ஷம்பூத்தின் மகன் – அனரண்யா-2
  30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
  31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர்யஷ்வா 2
  32. ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
  33. வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
  34. த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
  35. த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
  36. திரிசங்கு வின் மகன் – ஹரிசந்திரன்
  37. ஹரிசந்திரநநின் மகன் – ரோஹிதாஷ்வா
  38. ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
  39. ஹரித்தின் மகன் – சன்சு
  40. சன்சுவின் மகன் – விஜய்
  41. விஜயின் மகன் – ருருக்
  42. ருருக்கின் மகன் – வ்ருகா
  43. வ்ருகாவின் மகன் – பாஹு
  44. பாஹுவின் மகன் – சாஹாரா
  45. சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
  46. அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
  47. அன்ஷுமனின் மகன் – திலீபன்
  48. திலீபனின் மகன் – பகீரதன்
  49. பகீரதனின் மகன் – ஷ்ருத்
  50. ஷ்ருத்தின் மகன் – நபக்
  51. நபக்கின் மகன் – அம்பரீஷ்
  52. அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
  53. சிந்து த்வீப்பின் மகன் – ப்ரதயு
  54. ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
  55. ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா
  56. சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
  57. ஸூதஸின் மகன் – மித்ரஷா
  58. மித்ராஷாவின் மகன் – சர்வகாமா 2
  59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா3
  60. அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
  61. நிக்னாவின் மகன் – ரகு
  62. ரகுவின் மகன் – துலிது
  63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
  64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு2
  65. ரகுவின் மகன் – அஜன்
  66. அஜனின் மகன் – தசரதன்
  67. தசரதனின் மகன் – ஸ்ரீ ராமர்
  68. ஸ்ரீ ராமரின் மகன்கள் – லவ குசா
  69. குசாவின் மகன் – அதிதி
  70. அதிதியின் மகன் – நிஷதா
  71. நிஷதாவின் மகன் – நலா
  72. நலாவின் மகன் – நபா

அனைத்தும் கிருஷ்ணன் செயல்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.

கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி சிரித்தபடி நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணனுக்கு மட்டும் தெரிந்தது.