சிவ வடிவம் – 52. ஏகபாதமூர்த்தி

சங்கார காலத்தில் சிவ பெருமானால் படைக்கப்பட்ட அனைத்தும் அவருள் ஒடுங்கிய பின் அவர் தனித்து நிற்பதால் சிவபெருமானுக்கு ஏகபாத மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. பேருழிக் காலத்தில் உலகங்களும் உலகங்கத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவ பரம்பொருளுக்குள் ஒடுங்குகின்றன. இறைவனிடம் சரிசமமாக இருக்கும் தேவியும் அவரிடம் ஒடுங்கி விடுவார். அனைத்தும் தனக்குள் ஒடுங்கியதும் சிவபெருமான் ஏகபாத மூர்த்தியாக நிற்கிறார். இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும் வேதங்களும் கூறுகின்றன. எத்தனை சர்வசிருஷ்டி ஊழிக்காலங்கள் வந்தாலும் அனைத்தும் இவரிடமே ஆரம்பிக்கின்றன. இவரிடமே முடிகின்றன. இவரிமிருந்தே அனைத்து விதமான சக்திகளும் பிறக்கின்றன. இவரிடமே தஞ்சமடைகின்றன.

இத்திருவுருவின் வலது கரத்தில் சூலமும் இடது கரத்தில் மழுவும் முன் வலக்கையில் காக்கும் குறிப்பும் இடக்கையில் அருளல் குறிப்பும் இருக்கிறது. இவர் புலித்தோலை அணிந்து மணிகளால் ஆன மாலைகளை அணிந்து சடையில் சந்திரனையும் கங்கையையும் அணிந்து காணப்படுகிறார். விஸ்வகர்மா சிற்ப சாத்திரம் என்ற நூல் ஏகபாதமூர்த்திக்கு 16 கரங்கள் உண்டு என்று சொல்கிறது. கம்பரும் ஸ்ரீவில்லிபுத்தரும் தமது காவியங்களில் ஏகபாதமூர்த்தியின் சிறப்புகளை கூறியுள்ளார்கள். அனைத்துக் காலங்களிலும் எல்லாவுலகமும் இவரது திருவடியின் கீழ் இருப்பதால் இவர் ஏகபாத மூர்த்தி என்று பெயர் பெற்றார். தப்பளாம் புலியூரில் உள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 617

கேள்வி: வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு என்ன?

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் காலகாலம் வாழ்வியல் துன்பங்களுக்கு தீர்வு தேடி மாந்தர்களில் சிலர் எம்மை நாடுவது உண்டு. துன்பங்கள் எல்லாம் ஒரு கணப் பொழுதில் அல்லது விழி மூடி விழி திறப்பதற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே மனிதனின் நோக்கமாக இருக்கிறது. அணுவளவும் துன்பமே இல்லாமல் வாழ வேண்டும். சதாசர்வ காலமும் இன்பமும் சாந்தியும் வாழ்வில் நிலவ வேண்டும் என்பதே மனிதர்களின் எண்ணமாக இருக்கிறது. இதை தவறு என்று நாங்கள் கூற மாட்டோம். ஆனால் இந்த இன்பமும் நிம்மதியும் இந்தந்த விகிதத்தில் தான் இருக்க வேண்டும் என்று மனிதன் எதிர்பார்க்கிறானே. அந்த எதிர்பார்ப்பு தான் குறையாக மாறிவிடுகிறது. எனவே மனிதன் எதிர்பார்க்கின்ற நீடித்த இன்பமும் நிலைத்த சாந்தியும் இறைவனின் பாதாரவிந்தங்களை சரணடைந்து இறையோடு சாயூச்சியமோ சாரூபமோ சாலோகமோ சாமீபமோ ஏதாவது ஒரு ஆன்ம பரிணாம வளர்ச்சி நிலை அடைந்தால் ஒழிய மனிதனுக்கு கிட்டாது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 616

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

உலகியல் வாழ்விற்காக கடுமையாக ஒருவன் போராடக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. கடுமையாக ஒருவன் உழைக்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அந்த செயலின் காரணமாக மறந்தும் பாவத்தை சேர்க்கக்கூடாது என்பதுதான் என்பது கோட்பாடு. கூடுமானவரை யாரையும் பாதிக்காமல் யார் மனதையும் புண்படுத்தாமல் தத்தம் கடமைகளை நேர்மையான ஆற்றி அன்றாடம் இறை நாமாவளியை ஆழ் மன நிலையில் நிறுத்தி சிந்தித்து ஒரு மனிதன் வாழ்ந்தாலே தேடுகின்ற நிம்மதியும் சந்தோசமும் அவனைப் பின் தொடரும். இறைவனின் அருளாசியும் வந்து சேருமப்பா. இதை சரியான விகிதாசாரத்தில் புரிந்து கொண்டு எந்த விதமான காழ்ப்பு உணர்ச்சிக்கும் இடம் தராமல் எம் வழியில் வர முயற்சி செய்தால் இறைவன் அருளை கொண்டு யாமே அதுபோல் மனிதனை கரை சேர்ப்போமப்பா.

சிவ வடிவம் – 51. திரிபாதத்ரிமூர்த்தி

சிவப்பரம்பொருள் பிரம்மன் திருமால் உருத்திரன் என்ற மூம்மூர்த்திகளை உருவாக்கி அவர்களுக்கு படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களை அளிக்கின்றார். பேருழிக் காலத்தில் சிவப்பரம்மொருளால் படைக்கப்பட்ட அனைத்தும் அவர்கள் ஒடுங்கும். மூன்று விதமான தொழில்களை செய்த மும்மூர்த்திகளும் சிவபரம்பொருளில் ஒன்றாக ஒடுங்குவார்கள். உலகை மீண்டும் படைக்க விரும்பிய போது தன்னுள் ஒடுங்கி இருந்த மூவரையும் ஒற்றை காலில் நின்று தனது இதயத்திலிருந்து உருத்திரனையும் தனது வலப்பாகத்தில் இருந்து பிரம்மனையும் தனது இடப்பாகத்திலிருந்து திருமாலையும் தோற்றுவித்தார். அப்போது இருந்த திருவடிவமே திரிபாதத்ரிமூர்த்தி திருத்தோற்றம் ஆகும். திரிபாதத்ரிமூர்த்தி வடிவத்தில் பிரம்மனும் திருமாலும் தனது ஒரு கால்களுடன் சிவப்பரம்பொருளுடன் இணைந்து கொள்வார்கள். சிவப்பரம்பொருளின் ஒற்றை காலுகளுடன் அவர்களின் ஒற்றை கால்களும் சேருவதால் மூன்று கால்கள் ஆகின்றன. அதனால் இந்த திருவடிவத்திறகு ஏகபாதத் திருமூர்த்தி என்று பெயர்.

இவ்வாறு லிங்க புராணமும் ஆதித்ய புராணமும் கூறுகின்றன. மகாபாரதத்தில் இந்த வடிவத்தை பற்றி சிறப்பாக கூறுகின்றது. வலப்புறத்தில் பிரம்மன் கமண்டலமும் ஜெபமாலையுடன் இருக்க இடப்புறம் உள்ள திருமால் சங்கு சக்கரத்துடன் இருப்பார் என்று சிவஞானபோதம் என்ற சைவ சித்தாந்த நூல் இவ்வடிவம் பற்றி கூறுகின்றது. இவரது வடிவத்தை திருஇடைமருதூரில் தரிசிக்கலாம்.

திருமந்திரம்

திருமந்திரம் வரலாறு
திருமந்திரம் பாடல்கள் விளக்கத்துடன்
திருமந்திரம் பாடல்கள் இசை வடிவில்
திருமூலர் வரலாறு
திருமூலர் வழிபாட்டு பாடல் வீடியோவுடன் kvnthirumoolar.com இந்த பக்கத்தின் வலைதளத்தில் பார்க்கலாம்.

திருமந்திரத்தில் வேடம்

“திருமந்திரத்தில் வேடம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 18-06-2023 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

காயத்ரி மந்திரம்

“அறிவோம் காயத்ரி மந்திரம்” எனும் தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 10-12-2022 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.

சிவ வடிவம் – 50. ஏகபாதத்ரிமூர்த்தி

சிவபெருமான் உயிர்களுக்கு அருள்வதற்காகவே பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகிய மும்மூர்த்திகளையும் தோற்றுவித்து படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய முத்தொழிலையும் சேய்விக்கிறார். சிவபெருமானின் இதயத்தில் இருந்து உருத்திரரும் சிவபெருமானின் இடப்பாகத்திலிருந்து பிரம்மாவும் வலப்பாகத்தில் இருந்து திருமாலும் தோன்றினார்கள். கண்களில் இருந்து சூரியனும் சந்திரனும் மூக்கிலிருந்து வாயுவும் கழுத்தில் இருந்து கணேசரும் இதயத்தின் ஒரு பாகத்தில் இருந்து கந்தனையும் தொந்தியிலிருந்து இந்திரன் குபேரன் வருணன் எமன் ஆகியோரையும் பிரத்யங்கத்தில் இருந்து 50 கோடி தேவர்களையும் ரோமங்களிலிருந்து எண்ணிக்கையற்ற முனிவர்களையும் தோற்றுவித்ததாக சிவாகமங்கள் கூறுகின்றன. இவ்வாறு சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் அவரிடமே ஒடுங்குகின்றன. அதனால் அவரால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்தையும் தாங்கும் மூர்த்தியாக அவர் ஒற்றைக்காலில் நிற்கிறார். இதனால் அவர் ஏகபாதத்ரிமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார் என்று ஆகமங்கள் கூறுகின்றன.

தர்மம்

மகாபாரத யுத்தத்தின் முடிவில் பாண்டவர்கள் வெற்றி பெற்று முழு பாரத காண்டத்தின் சக்ரவர்த்தியாக யுதிஷ்டிரர் முடிசூட்டப்பட்டார். பேரரசராக இருந்த யுதிஷ்டிரரை மகரிஷி வேத வியாசர் இமயமலையின் தொலைதூர பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மறைந்திருந்த பெரும் செல்வத்தை அவர்களுக்கு வழங்கினார். அஸ்வமேத யாகங்களில் மிகப் பெரிய யாகத்தை ஒவ்வொரு பாண்டவரும் மூன்று வருடங்களாக தொடர்ந்து பதினைந்து வருடங்களாக யாகம் செய்தார்கள். தேவதைகளும் ரிஷிகளும் பித்ருக்களும் மனிதர்களும் யாகத்தின் பலனைப் பெற்று திருப்தி அடைந்தார்கள். தர்மம் முழு மகிமையுடன் பூமியில் செழித்திருந்தது.

பஞ்ச பாண்டவர்கள் ஐவரும் தனது அரண்மனைக்கு முன்னால் ஒரு பெரிய மேளம் ஒரு மகாபேரி என்ற மேளத்தை நிறுவி எந்த தேவையாக இருந்தாலும் இங்கு வந்து இந்த மேளத்தை அடித்து தன் விருப்பத்தைத் தெரிவிக்கலாம். எங்களால் முடிந்தவரை அதை நிறைவேற்றுகிறோம் என்று தங்களது குடிமக்களுக்கு அறிவித்தார்கள். இதை அறிந்த ஒரு முதிய பிராமணர் சிறிது பொருள் வேண்டி தலைநகரை நோக்கிச் சென்றார். நீண்ட தூரம் பயணித்த அவர் யுதிஷ்டிரனின் அரண்மனையை இரவில் அடைந்தார். மிகுந்த ஆவலுடன் மேளத்தை அடிக்க ஆரம்பித்தார் பிராமணர். உறக்கம் கலைந்த யுதிஷ்டிரன் படுக்கையில் இருந்து எழுந்து யாரோ தனது தேவைக்காக தன்னை அழைப்பதை உணர்ந்தார். மேளம் அடிப்பது எதற்காக என்று விசாரிக்க சில காவலர்களை அனுப்பினார். விரைவில் காவலர்கள் யுதிஷ்டிரரிடம் திரும்பி ஒரு முதியவர் தனிப்பட்ட தேவைக்காக செல்வத்தைப் பெற வந்திருப்பதாக கூறினார்கள். யுதிஷ்டிரர் அதிக தூக்கத்தில் இருந்ததால் நடுஇரவு ஆகி விட்டபடியால் காலையில் அவரது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று பிராமணரிடம் உறுதியளித்து காலையில் வரச் சொல்லி பிராமணரை திருப்பி அனுப்புமாறு காவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

யுதிஷ்டிரரின் செய்தியைக் கேட்ட பிராமணர் ஏமாற்றமடைந்து பீமனின் அரண்மனை முன்பாக இருந்த மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். பீமன் உடனே வெளியே வந்து அந்த முதிய பிராமணருக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். யுதிஷ்டிரரின் அரண்மனை முன்பாக நடந்தவற்றை சொல்லி தனது கோரிக்கையை முன்வைத்தார் பிராமணர். அவருடைய கோரிக்கையைக் கேட்ட பீமன் தற்போது இரவு வெகு நேரமாகி விட்டது. இப்போது கருவூலம் திறந்திருக்காது. உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற காலை வரை காத்திருக்க முடியாது. எனவே இதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தனது விலையுயர்ந்த தங்க காப்பை கழற்றி பிராமணரிடம் ஒப்படைத்தார். விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அந்தத் தங்கக் காப்பைக் கண்ட பிராமணன் மிகவும் மகிழ்ச்சியடைந்து தன் கிராமத்திற்குத் திரும்பினார்.

பீமசேனன் யுதிஷ்டிரனின் அரண்மனையை நோக்கிச் சென்றான். அங்கு சென்றதும் இடைவிடாமல் மகாபேரி மேளத்தை அடிக்க ஆரம்பித்தார். விண்ணை முட்டும் அளவு சத்தத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உணர்ந்து உடனடியாக மேளம் இருக்கும் இடத்திற்கு வந்தார். அங்கு பீமன் மேளத்தை அடிப்பதை பார்த்ததும் ஆச்சரியமடைந்து பீமனிடம் காரணத்தை கேட்டார். ஒரு முதிய பிராமணர் தங்களிடம் உதவி நாடி வந்தார். நாளை காலை திரும்பி வரும்படி கூறினீர்கள். அடுத்த நாள் உயிருடன் இருப்போம் என்று அறிந்த ஒரு மனிதனால் மட்டுமே அவ்வாறு கூற முடியும். தன் தர்மத்தையே ஒரு நாள் தள்ளிப் போட்டீர்கள். அப்படியானால் நீங்கள் நாளை வரை இருப்பீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஞானத்தை பெற்று விட்டீர்கள் என்று பொருளாகிறது. என் அண்ணன் இப்படிப்பட்ட மிகப்பெரிய ஞானியாக இருக்கிறாரே என்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதனால் நான் இந்த மேளத்தை அடிக்கிறேன் என்றான். காரணத்தைக் கேட்ட யுதிஷ்டிரர் குற்ற உணர்வில் ஆழ்ந்தார். தான் எவ்வளவு பெரிய தவறு செய்தேன் என்பதை உணர்ந்தார். பீமனை தழுவிக் கொண்டு நன்றி தெரிவித்ததோடு தர்ம காரியத்தைத் தள்ளிப் போடும் தவறை இனி ஒருபோதும் செய்ய மாட்டேன் என்றார். பீமன் தன் சகோதரனை ஆறுதல்படுத்தி எனது நோக்கம் உங்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. தர்மம் செய்யும் போது ​​ஒருபோதும் தாமதம் இருக்கக் கூடாது என்பதற்காக இதனை செய்தேன் என்று புன்னகை செய்தான். பீமனின் உபதேசத்தால் விழித்துக் கொண்ட யுதிஷ்டிரர் அன்றிலிருந்து தர்மப் பாதையிலிருந்து விலகாமல் இருந்து தர்மராஜா ஆனார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 615

கேள்வி: திருப்பதி பெருபாள் கோயிலில் உள்ள மூலவர் சிலை முருகன் சிலை என்பது பற்றி:

திருப்பதியில் உள்ளது பெருமாள் அல்ல முருகப்பெருமான் என்ற கருத்துக்கு ஞானிகள் பார்வை வேறு. மனிதர்களின் பார்வை வேறு. அங்கு பெருமாளே அவதாரம் எடுத்தது உண்மை. காலப்போக்கில் பிற தெய்வங்களும் அங்கு இடம் பெற்றதும் உண்மை. எனவே திருப்பதியில் பெருமாளின் முன்பு நின்று முருகனாக எண்ணி வணங்கினால் பெருமாள் கோபித்துக் கொள்ளப் போவதில்லை. பெருமாளாக நினைத்து வணங்கினால் முருகனும் கோபித்துக் கொள்ளப் போவதில்லை.