சிவ வடிவம் – 18. கங்காதரமூர்த்தி

சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது

திருக்கைலையில் பார்வதி தேவி சிவபெருமானின் இரு கண்களையும் விளையாட்டாய் பற்றினார். உடன் உலக உயிர்கள் அனைத்திற்கும் அளவிலாத துன்பம் ஏற்பட்டது. அதனால் உலகம் முழுவதும் பேரிருள் சூழ்ந்தது. இதனையறிந்த சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அனைவரையும் காத்தார். ஒளி வந்ததால் அனைத்து உயிர்களும் துன்பம் நீங்கி இன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானைப் போற்றினர். இதனைக் கண்ட பார்வதி தேவி அவசரமாக தன் கைகளை நொடிப் பொழுதில் எடுத்தார். இதனால் இவரது பத்து கைவிரலில் இருந்த வியர்வைத் துளிகள் பத்தும் கங்கையாக மாறி மூவுலம் முழுவதும் பரவி பெருத்த சேதத்தையும் அழிவையும் உண்டாக்க முன்னேறியது. இதனைக் கண்ட மூன்று உலகத்தினரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் அவ்வெள்ளத்தை அடக்கி அதனை தனது சிரசில் ஓர் திருமுடியில் தரித்தார். அனைவரும் சிவபெருமானைப் போற்றித் துதித்தனர். நான்முகன் இந்திரன் திருமால் ஆகிய மூவரும் சிவபெருமானிடம் சென்று இறைவா பார்வதி தேவியின் கைவிரல் வியர்வையால் உண்டான கங்கை பெரும் புனிதமானது. அதை உங்கள் திருமுடியில் தரித்ததால் அது மேலும் புனிதமடைகிறது. அத்தகைய புனிதப் பொருளை எங்களுக்கும் கொஞ்சம் கொடுத்தருள வேண்டும் என்றனர். அதன்படியே இந்திரன் தனது அமராவதி நகருக்கும் நான்முகன் தனது மனோவதி நகருக்கும் திருமால் தனது வைகுண்டத்திற்கும் கங்கையைக் கொண்டு சேர்த்தனர். பிற்காலத்தில் பகிரதன் தன் தவத்தினால் இந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டு வந்தான்.

கங்கை வெள்ளத்தின் வேகத்தை குறைத்து தனது சடைமுடியின் ஒர் திருமுடியில் தாங்கியிருப்பதால் சிவபெருமானுக்கு கங்காதர மூர்த்தி என்ற பெயர் ஏற்பட்டது. கங்காதர மூர்த்தியை தரிசிக்க இமயத்திற்கு தான் செல்ல வேண்டும். இமயமலையே கங்காதர மூர்த்தியின் இருப்பிடமாகும். அங்கு செல்ல இயலாதவர்கள் இருந்த இடத்திலேயே கங்காதர மூர்த்தியை மானசீகமாய் வணங்கி வழிபடலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 581

கேள்வி: கோவிலில் உழவாரப் பணி செய்யும் போது செடி கொடிகளை அகற்றினால் தோஷமா?

இதை கூறும் போதே இது பாவம் தான் என்றாலும் இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையை பெறுவதால். அந்த செயல் அந்த செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை. ஒரு ஆட்டையோ மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது அது பரிபூரணமாக மரித்து விடுகிறது. ஆனால் செடி கொடிகளை அகற்றும் போது அதன் அடிவேரோ மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால் அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால் இதனால் வரக்கூடிய தோஷம் மன்னிக்கப் படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால் தான் பிறவியற்ற தன்மை வேண்டும் என்று கூறுகிறோம். ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளைப் பொருத்தவரை வீட்டைச் சுற்றிலும் சிறியா நங்கை போன்ற மூலிகைகளை வளர்த்தால் பூச்சிகள் வராது. வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால் ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக அந்த தோஷமானது மன்னிக்கப்படும்.

சீதளாதேவி அம்பாள்

தேவர்களுக்கு தொல்லை கொடுக்க எண்ணிய அசுரர்கள் தங்கள் குரு சுக்கிராச்சாரியார் உதவியுடன் தீய சக்திகளை ஏவி விட்டனர். இதனால் தேவர்கள் கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டார்கள். அவர்களின் உடலில் அம்மை கொப்புளங்கள் ஏற்பட்டன. தேவலோக வைத்தியர்களான அஸ்வினி தேவர்கள் அளித்த வைத்தியம் பலன் தரவில்லை. எனவே சிவபெருமானை சரணடைந்து தங்களை நோயில் இருந்து காக்கும்படி வேண்டினர். தேவர்களின் துன்பத்தைப் போக்க சிவன் தனது ஜடையில் இருந்த சந்திரனிடமிருந்தும் கங்கையிடமிருந்தும் பேரொளியை தோற்றுவித்தார்.

பார்வதியின் அம்சமாக தோன்றிய அந்த ஒளி சீதளாம்பிகை என்று பெயர் பெற்று அம்பாளாக வடிவெடுத்தது. அந்த அம்பாளின் சிரசு முறத்தினாலும் கையில் குடம் மற்றும் துடைப்பத்துடன் கழுதை வாகனத்தில் காட்சி கொடுத்தாள். இந்த தேவியை வழிபடுவதற்காக சில மந்திரங்களை தேவர்களுக்கு கற்றுக் கொடுத்தார் சிவன். சீதளாஷ்டகம் எனப்படும் இந்த மந்திரத்தைக் கூறி அம்பாளை வழிபட்டால் வெப்ப நோய் தீரும் என அருள்பாலித்தார். சீதளா என்றால் சமஸ்கிருதத்தில் குளிர்விப்பவர் என்று பொருள். தேவர்களும் அதுபோல் மந்திரத்தை சொல்லி சீதளாதேவியை வழிபட்டு தங்களின் துன்பத்தை போக்கிக் கொண்டார்கள். லலிதா சகஸ்ர நாமத்தில் அம்பாளின் ஆயிரம் பெயர்களைச் சொல்லி வணங்கும் போது சீதளாயை நமஹ என்ற பெயரும் வருகிறது. கழுதை என்பது அனாயசமாக பெரும் பொதியை சுமக்க வல்லது. அதுபோல் தன்னிடம் சரணடைபவர்களின் சுமையை தனதாகக் கருதி விரும்பி ஏற்கிறாள் அன்னை என்பதை அந்த வாகனம் உணர்த்துகிறது.

ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள சக்ஷூ (CHAKSHU) என்ற கிராமம் மற்றும் ராஜஸ்தான் குஜராத் உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பாலைவனப் பகுதியிலும் வெப்பம் அதிகமாக தாக்கும் பகுதியிலும் கோடை துவங்கும் காலத்தில் சீதளாதேவிக்கு மிகவும் விமரிசையாகக் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது. கோடை காலத்தில் வெப்ப நோயான அம்மை மக்களைத் தாக்கும். அதிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அம்பாளை வழிபடுவார்கள். தமிழகத்தில் ரூபங்களில் சில வேற்றுமைகளுடன் சீதளாதேவிக்கு மாரியம்மன் என்ற பெயரில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. இங்கும் கோடை காலங்களில் வெப்பத்தினால் வரும் நோயிலிருந்து தங்களை காத்துக் கொள்ள அதிகமாக திருவிழாக்கள் நடத்தப்படுகிறது.

பிருங்கி முனிவர்

உலகிலேயே மூன்று கால்களை உடைய பிருங்கி முனிவர் சிவபெருமானை தவிர பிற தெய்வத்தை வழிபட மாட்டேன் என்கிற கொள்கை கொண்டவர். இவர் நாள்தோறும் சிவனை மட்டும் வழிபட்டு வந்தார். அருகில் உள்ள அம்பாளை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை. இதைக்கண்ட சக்தி சிவனிடம் முறையிட்டாள். நாம் ஒரே உருவமாய் நிற்போம் என்று கூறி அம்மையப்பனாய் நின்றனர். அன்று பூஜைக்கு வந்த பிருங்கிரிஷி அம்மையும் அப்பனும் ஓர் உருவாய் இருப்பதைக் கண்டு யோசித்து பின்னர் வண்டு உரு எடுத்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதை கண்ட சக்தி பிருங்கியின் உடற்பாகத்தில் உள்ள தனது கூறாகிய சக்தியை நீக்கினாள். அதனால் வலிமை இழந்த பிருங்கி தடுமாறினார். சிவபெருமான் வலிமையுள்ள மூன்றாவது கால் ஒன்றை கொடுத்து அருளியதோடு முனிவரே சக்தியில்லையேல் சிவன் இல்லை என்பதை உணர்ந்திர்ப்பாய். சிவசக்தி வழிபாடே சிறந்தது என்றார். அறியாது நான் செய்த இத்தவறுகளை மன்னித்தருள்வாய் என்று சக்தியிடம் பிருங்கி முனிவர் மன்னிப்பு கோரினார். அறியாமல் செய்த தவறை மன்னித்தேன் என அன்னையும் அருள் வழங்கினார். பிருங்கி முனிவரின் சிற்பம் இருக்கும் இடம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் காஞ்சிபுரம்.

சிவ வடிவம் – 17. சண்ட தாண்டவ மூர்த்தி

திருவாலங்காட்டில் மகிமையை உணர்ந்த சுனந்த முனிவர் அங்கு தனக்கு தாண்டவ நடத்தை இறைவன் காட்ட வேண்டிய தவமியற்றினார். அப்போது சிவபெருமானின் கைவிரலில் உள்ள கார்கோடகன் பாம்பு அவரது திருவிரலில் விஷம் கக்கியது. இதனைக் கண்ட இடபம் நீ செய்த தீமைக்காக திருக்கைலையை விட்டு நீங்குமாறு கார்கோடகனிடம் கூறியது. கார்கோடகனும் பயந்து சிவனிடம் முறையிட்டது. உடன் சிவபெருமான் திருவாலங்காட்டில் தவமியற்றும் சுனந்தருடன் சேர்ந்து சண்ட தாண்டவத்தை தரிசித்த உடன் கைலை வருவாயாக என்றார். திருவாலங்காடு சென்ற கார்கோடகன் சுனந்தருடன் சேர்ந்து தவமியற்றியது. அப்போது சும்பன் நிசும்பன் எனும் இரு அசுரர்கள் அனைவரையும் கொடுமைபடுத்தி வந்தார்கள். இதனைக் கண்ட தேவர்கள் பார்வதி தேவியிடம் முறையிட்டனர்.

பார்வதியும் சப்தமாதர்கள் சிவகணங்களுடன் சாமுண்டி என்ற சக்தியாக மாறி அவர்கள் இருவரையும் கொன்றனர். அவர்களிருவரின் சகோதரியான குரோதி என்பவளின் மகன் இரத்த பீசன். அவனது ஒவ்வொரு சொட்டு இரத்தமும் நிலத்தில் விழுந்தால் அதுவொரு இரத்தபீசனாக மாறிவிடும். இத்தகைய வரம் பெற்ற அவனை அழிக்க வேண்டி பார்வதி காளி தேவியை தோற்றுவித்தாள். காளி அவனது ஒரு சொட்டு இரத்தம் கூட நிலத்தில் சிந்த விடாமல் பருகி அவனை அழித்தாள். போர் நல்லபடியாக முடிந்தது. அசுரனின் மாமிசத்தையும் இரத்தத்தையும் குடித்ததால் காளிதேவி யாருக்கும் அடங்காமல் வனங்களில் அரசாட்சி புரிந்து வந்தார். அவ்வாறே திருவாலங்காடு வந்து சேர்ந்தார். அங்கு வந்த காளி அட்டகாசத்தை ஆரம்பித்தார். இதனை அறிந்த சிவபெருமான் பைரவராக மாறி காளிதேவியிடம் போர் புரிந்தார். காளி தேவி தோற்று விட்டார். காளி தேவி தோற்றதும் நடனப் போர் புரிய பைரவரை அழைத்தார். பைரவரும் சம்மதித்து தேவர்களின் வாத்திய இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார். நவரசங்கள் ததும்ப இருவரும் சலைக்காமல் ஆடினர். இந்த சண்ட தாண்டவம் நடை பெறும் போது சிவனின் குண்டலம் கீழே விழ அதைத்தன் காலால் எடுத்துக் காதில் பொருத்தினார். போட்டி நடனம் ஆடிய காளி வெட்கத்துடன் தன் தோல்வியை ஒப்புக்கொண்டாள். சுனந்தர் கார்கோடகன் உட்பட அனைத்து தேவர் முனிவர்களுக்கும் எல்லாக் காலமும் காணும்படி தாண்டவக் கோலத்தை அருளினார்.

கும்பகோணம் பேருந்து நிலையம் அருகேயுள்ளது கீழ்க் கோட்டம். இறைவன் பெயர் நாகநாதர் இறைவி பெயர் பெரியநாயகி ஆவார். இங்குள்ள நடராஜ மண்டபத்திற்கு பேரம்பலம் என்று பெயர். இங்கு உள்ள மூர்த்தியை வணங்கி சிவ தியானம் செய்தால் தாண்டவ ஒலி கேட்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 580

கேள்வி: அபிராமி பட்டர் அம்மையை நோக்கி கேள்வி கேட்கிறாரே?

பாவமே செய்யாமல் வாழக் கற்றுக் கொண்டு விட்ட பிறகு இறைவனிடம் வினா தொடுக்கலாம். அவரை வம்புக்கு இழ்ழுக்கலாம். நம்மிடமே பல குறைகள் இருக்கும் பொழுது எந்த நம்பிக்கையில் இறைவனிடம் விவாதம் செய்ய இயலும்?

வினாயகர்

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள துலிஸ்கையோ கிராமத்தில் அமைந்துள்ளது இந்த விநாயகர். இந்த 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலை மூன்று மீட்டர் உயரமுடைய ஒற்றைக்கல்லில் செதுக்கப்பட்டது.

சிவ வடிவம் – 16. சதா நிருத்த மூர்த்தி

சதா என்றால் எப்போதும் என்று பொருள். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். சிவபெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என ஐந்து தொழில்களையும் நடனம் ஆடியபடி சதாசர்வ காலமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். இறைவனின் இந்த திருநடன உருவத்திற்கு நடராஜர் என்று பெயர். இந்த திருநடன உருவத்தினை உமையம்மை இடமிருந்து தரிசிக்கும் பொழுது சிவகனங்களும் தேவர்களும் நந்தி தேவரும் வாத்தியங்களில் இசையை ஒலித்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த திருவுருவம் சதாநிருத்த மூர்த்தி ஆகும்.

சிவபெருமான் டமருகம் தாங்கிய கரத்தினால் படைத்தலும் அமைந்த கரத்தினால் காத்தலும் மழு தாங்கிய கரத்தினால் அழித்தலும் முயலகன் முதுகில் ஊன்றிய திருப்பாதங்களால் மறைத்தலும் அனவரத நடனம் புரியும் அடிப் பாதத்தினால் அருளலும் புரிகின்றார்.

சிதம்பரத்திலுள்ள பொன்னம்பலத்தில் சிவபெருமான் எப்பொழுதும் ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டேயுள்ளார். இங்கு இறைவனைக் கூத்தபிரான் என்றும் இறைவிக்கு சிவகாம சுந்தரி என்றும் பெயர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 579

கேள்வி: 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி:

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால் அத்தருணம் பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடு பாட்டோடு வழிபாடு செய்தால் அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதை விட ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்.