அமுதத்திற்காக தேவர்களும் அசுரர்களும் இணைந்து மந்திர மலையை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் கொண்டு பாற்கடலை கடைந்தார்கள். மந்திர மலையானது பாற்கடலினுள் மூழ்க தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்திர மலையை தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலை கடைந்தனர். நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது. அவ்விஷம் தேவர்களையும் அசுரர்களையும் துரத்தியது. எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். விஷத்தைக் கண்டு பயம் கொண்ட அனைவரும் சிவபெருமான் இருக்கும் கைலாயத்திற்கு சென்றார்கள். கைலாயத்தினை வலம் வருகையில் எதிராக வந்து அந்த விஷம் விரட்டியது. மறு திசையில் சென்றார்கள். இவ்வாறான வலம் வரும் முறை சோம சூக்தப் பிரதட்சணம் என்று அழைக்கப்படுகிறது. அந்த விஷத்தினால் உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தேவர்களும் அரக்கர்களும் இன்னபிற தேவகனங்களும் அழிய நேரிடும் என்பதால் அனைவரும் சிவபெருமானிடம் தங்களை காக்குமாறு வேண்டினார்கள்.
சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க ஆலகால விஷத்தை உண்டார். அவருடைய கழுத்துக்கு கீழே விஷம் இறங்காமல் இருக்க பார்வதி தேவி சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி நீலகண்டமாக உருவாகியது. அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை. எனினும் ஒரு திருவிளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கி மயங்குவது போல் உமா தேவியின் மடியில் மௌனமாய் படுத்தார். இதனைக் கண்ட தேவர்கள் அன்று முழுவதும் உறக்கம் உணவின்றி அவரை அர்ச்சித்து இருந்தனர். அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறு நாள் துவாதசியில் தேவர்கள் பாராயணம் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவபெருமான் சூலம் உடுக்கை சகிதம் ஒரு சாம காலம் சந்தியா தாண்டவம் திருநடனம் ஆடினார். இவ்வடிவம் சந்த்யான்ருத்த மூர்த்தி எனப்படுகிறது.
திருநடனம் ஆடிய காலம் பிரதோஷ காலமாகும். பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை வரும் திரயோதசியை மாத பிரதோஷம் காலமாகும். வருடத்திற்கு ஒரு முறை வரும் மகா சிவராத்திரி வருடப் பிரதோஷ காலமாகும்.
இறைவனின் கருணையால் சர்ப்ப தோஷம் நீங்குவதற்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜை யாகம் மற்றும் சர்ப்ப தோஷ நிவர்த்தி தரும் சில ஆலயங்கள் சென்று சில குறிப்பிட்ட பூஜைகள் செய்வது என்றெல்லாம் சில வழிமுறைகள் இருக்கின்றன. எனவே இங்கே சர்ப்பம் என்பது ஒரு அடையாளம். குறியீடு மனிதர்கள் காலாகாலமாக நம்புவதைப் போல நாகங்களை கொன்றதால் அல்லது கொல்வதால் மட்டும் இந்த நாக தோஷம் ஏற்பட்டு விடுகிறது என்பது ஒரு தவறான கருத்தாகும். அப்படியானால் ஆட்டையும் மாட்டையும் கொன்றால் தோஷம் வராதா? எந்த உயிரை கொன்றாலும் பாவம்தான் தோஷம்தான். அதற்கு எத்தனை அடிப்படை நியாய வாதங்கள் கற்பித்தாலும் அது பாவமாகத்தான் வரும். எனவே பின் நாகம் அல்லது நாக தோஷம் என்று எதற்காக அதனை ஒரு குறியீடாக ஜாதகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் உச்ச கட்ட பாவத்தின் அடையாளம் நாக தோஷம்.
அதே போல பிரம்மஹத்தி எனப்படுவது மேலோட்டமாக பார்த்தால் பிரம்மாவை யாராவது ஹத்தி செய்ய இயலுமா? ஒருவேளை அப்படி ஹத்தி செய்தால் அது எந்தளவுக்கு பாவமாக இருக்குமோ அந்த அளவுக்கு பாவம் என்பதன் அடையாளம் தான் இந்த வார்த்தை. எனவே இது போன்ற சொல்லாடல்களை எல்லாம் நேருக்கு நேர் பொருள் கொள்ளாமல் நிறைய பாவங்கள் அந்த ஜாதகத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு நிறைய தர்ம காரியங்கள் முதலில் செய்ய பழக வேண்டும். அதன் பிறகு மெல்ல மெல்ல தல யாத்திரைகள் செல்ல பழக வேண்டும். ஏனென்றால் இந்த பாவங்கள் ஒரு பிறவியில் ஏற்பட்டிருக்காது. பல்வேறு பிறவிகளில் ஏற்பட்டு ஏக்தாவது ஒரு பிறவியில்தான் அதை நிவர்த்தி செய்வதற்கு வாய்ப்பை கிரகங்கள் மூலம் இறைவன் அனுமதி தருவார். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்த ஆத்மா எந்தெந்த ஊரில் பிறந்திருக்கும்? எந்தெந்த வகையான பிறப்பை எடுத்திருக்கும் என்பதெல்லாம் தெய்வீக சூட்சுமம். எனவே பல்வேறு நாடு நகரங்களுக்கு சென்று அங்கு உள்ள ஆலயங்களில் வழிபாடு செய்து அந்த ஆலயத்தை சுற்றி உள்ள ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து ஆலயத்திலேயே தொண்டு செய்யும் அந்த ஊழியர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து அந்த ஆலய திருப்பணிக்கு உதவிகளை செய்து இப்படியெல்லாம் சிறிது சிறிதாக பாவத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.
இன்னொரு வகையில் பசுக்கள் காப்பகங்கள் சென்று முடிந்த உதவிகள் செய்வதும் பசுக்களை தானமாக தருவதும் பசுக்களை பராமரிக்கும் குடில்களுக்கு சென்று இயன்ற உதவிகளை செய்வது என்று ஒரு புறமும் இன்னொரு புறம் எல்லா வகையான தர்ம காரியங்களையும் அவனவன் சக்திக்கேற்ப செய்வதுமாக இருக்க வேண்டும். எனவே இப்படியே நாக தோஷத்தின் குறியீடாக நாகத்தை வைத்த நிலையிலேயே ஒரு சில தருணங்களிலே மெய்யான நாகத்தை வைத்து பூஜை செய்கின்ற காலமெல்லாம் இருந்தது. ஆனால் பொதுவாக மக்கள் அஞ்சுவார்கள் என்பதால் தான் அந்த குறியீட்டை பஞ்சலோகத்திலோ கனகத்திலோ அல்லது வெள்ளியிலோ செய்து அதற்கு அபிஷேக ஆராதனை செய்து அதனை இவ்வாறு செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய வேண்டும் என்றெல்லாம் முறையை பின்பற்றப்பட்டன. ஆனால் எம்மை பொறுத்தவரை அப்படி செய்வத விட நாக தோஷத்திற்கு நாங்கள் முன்பு கூறிய தர்ம காரியங்களையும் தல யாத்திரைகளையும் செய்து கொண்டே நாக தோஷ நிவர்த்தி தலங்கள் சென்று முடிந்த பூஜைகள் செய்து கொண்டு ராகுவிற்கும் கேதுவிற்கும் ராகுவின் அதிதெய்வமான துர்க்கைக்கும் கேதுவின் அதிபதியான விநாயகருக்கும் என்னென்ன வகையான வழிபாடுகள் அபிஷேக ஆராதனைகள் செய்ய முடியுமோ அன்றாடமோ சப்த தினத்தில் ஏக தினமோ பட்சமோ திங்கள் ஒரு முறையோ செய்து கொண்டே இருப்பதும் இவை எதுவுமே செய்ய முடியாத மனிதர்கள் இல்லத்தில் அமைதியாக அமர்ந்து வாய்ப்பு உள்ள பொழுது நவகிரக காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் அதி தெய்வ காயத்ரியை 27 எண்ணிக்கை குறையாமலும் இதையெல்லாம் தாண்டி குறிப்பாக நாக தோஷம் கேது தோஷம் என்பதால் ராகு கேது காயத்ரி மூல மந்திரங்களையும் துர்க்கை விநாயகர் காயத்திரி மூல மந்திரங்களை அதிக பட்சம் தினத்திற்கு எத்தனை உருவேற்ற இயலுமோ அப்படி உருவேற்றுவதும் அந்த தோஷத்தை குறைக்கின்ற பக்தி பூர்வமான வழிகளாகும்.
குறிப்பாக எல்லா வகை தர்மங்களிலே பிணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் புற்று நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் ஒவ்வாமை நோயால் அவதிப்படும் ஏழைகளுக்கு முடிந்த உதவிகளை செய்வதும் விஷம் முறிவு மருந்தை தானமாக தருவதற்கு ஏற்பாடு செய்வதும் இந்த தோஷத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள நல்ல வாய்ப்பாக இருக்கும்.
வெறும் வெள்ளியில் ஒரு நாகத்தில் செய்து வைத்து ஏதோ மாண்டூகம் கத்துவதை போல ஒரு சில மந்திரங்களை கூறி அதன் தலையில் சில மலர்களை இட்டு சில துளி பாலையும் இட்டு அதை ஆழியிலோ நதியிலோ கரைத்து விட்டால் நாக தோஷம் போய் விடும் என்றால் மிக எளிதாக எல்லோரும் இந்த முறையை பின்பற்றலாம். இது ஒரு குறியீடு அடையாளம் இருந்தாலும் நாங்கள் கூறியவற்றோடு இப்பொழுது இவ்வாறு இந்த நாகங்கள் யாரேனும் கையில் வைத்திருந்தால் எக்தாவது ஆலயத்தின் காணிக்கை பேழையில் இட்டு விடலாம். அது ஆலய தொண்டிருக்கு பயன்படட்டும். இல்லை அந்த வெள்ளியை உபயோகமாக தானமாக மாற்றி ஏழைகளுக்கு தக்க மருத்துவ உதவியாக செய்யலாம். இதுதான் முறையான நாத தோஷ நிவர்த்திக்கு உண்டான வழிமுறைகளாகும்.
கின்னரர் என்பவர்கள் இந்து தொன்ம இயலின்படி இடுப்பிற்கு கீழ் பறவை உருவமும் இடுப்பிற்கு மேல் மனித உருவமும் கொண்ட ஆண் மற்றும் பெண் பாலினத்தவர்கள். இந்து மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களில் கின்னரர்களின் உருவச் சிலைகளும் புடைப்புச் சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படுகிறது. இடம் போரோபுதூர் கோவில். மத்திய ஜாவா மாகாணம் இந்தோனேசியா.
கேள்வி: ஐயனே பரமாத்மாவுடன் இந்த ஜீவாத்மா இரண்டற கலக்க எந்தெந்த நிலைகளை கடக்க வேண்டும்? ஒவ்வொரு படியிலும் எத்தனை அபாயங்கள் இருக்கின்றன? அவற்றை கடந்து வரும் உபாயங்களையும் கூறுங்கள்:
இறைவன் அருளால் இதுவும் மனிதனுக்கு மனிதன் வேறுபடுமப்பா. ஒருவனுக்கு கூறுகின்ற முறை இன்னொருவனுக்கு பெரும்பாலும் பொருந்துவதில்லை. இதில் ஆசாரம் வாமாசாரம் என்று இரண்டு முறைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் நாங்கள் யாருக்கும் வாமாசாரத்தை கூறுவதில்லை. ஏனென்றால் வாமாசாரத்தில் நன்மையை விட தீமைகள் எதிர் விளைவுகள் அதிகமாக இருப்பதால் அதை கூறுவதில்லை. ஆனால் வாமாசார முறையை ஒருவன் சரியாகப் புரிந்து கொண்டு விட்டால் நீ கூறுவது போல பல படிகளை இன்னும் கூறப்போனால் குறுக்கு வழியிலே இறைவனை உணரக்கூடிய ஒரு நிலை வாமாசாரம். இருந்தாலும் இவற்றை சொல்லளவில் தெரிந்துகொள். செயலளவில் தெரிந்து கொள்ள வேண்டாம்.
இன்னொன்று ஆசார பூஜைகள் பல செய்து கொண்டே தர்மங்கள் செய்து கொண்டே தல யாத்திரைகள் செய்து கொண்டே ஒருவன் இல்லற கடமைகளையும் நேர்மையாக நடத்திக் கொண்டே மனைவி அல்லது மனைவியாக இருக்கப்பட்டவள் கணவனுக்கு வேண்டிய கடமைகளை செய்து கொண்டே கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுக்கு வேண்டியவற்றை நல்ல முறையில் செய்து கொண்டே தாராளமாக இறைவனை அடையலாம். ஆனாலும் கூட இதில் உள்ள படிகளில் எல்லாம் மனிதன் ஏறி போக வேண்டுமே தவிர அமர்ந்து விடக்கூடாது. இதில் சிக்கல் என்னவென்றால் மனிதன் அமர்ந்து விடுகிறான். ஆங்காங்கே அமர்ந்து கொண்டே இருப்பதால்தான் அந்த நிலையிலையே அவனுக்கு பிறவி பூர்த்தி அடைந்து விடுகிறது.
ஒரு மனிதன் நீண்ட தூர பயணத்தை துவங்குவதாக கொள்வோம். ஒரு நகரத்திலிருந்து ஆயிரம் கல் தொலைவில் உள்ள இன்னொரு நகரம் நோக்கி ஒரு பொது வாகனத்தில் பயணம் செய்வதாக கொள்வோம். இடையிடையே சிறு ஊர்களும் நகரங்களும் வரும். ஆனால் அவன் இறங்க மாட்டான். ஏனெனில் அவன் எந்த நகரம் அல்லது எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறானோ அந்த ஊர் வரும் வரை பயணத்தை நிறுத்த மாட்டான் அல்லவா? அதுபோல ஆத்மா எனப்படும் பயணி தேகம் எனப்படும் வாகனத்தில் ஏறி இறைவன் என்னும் ஊரை அடைவதற்கான பிறவி என்னும் பயணத்தை துவக்கியிருக்கிறது. இடையிலே மண் ஆசை பெண்ணாசை பொன்னாசை பதவி ஆசை இந்த உலக ஆசை இது போன்ற ஊர்கள் குறுக்கிட்டாலும் அங்கெல்லாம் கவனத்தை திசை திருப்பாமல் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தால் கட்டாயம் இந்த படிகளை எல்லாம் ஒரு மனிதன் எளிதில் தாண்டி விடலாம்.
அறிவு பூர்வமாக சிந்திக்கும் பொழுது ஒன்று உலகியல் ரீதியாக வேண்டும். தேவை என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கலாம். ஆனால் அந்த தேவை உடலை காப்பதற்கும் அந்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மட்டும் இருந்தால் போதும். அதனையும் தாண்டி தேவையில்லை என்கின்ற நிலைக்கு ஒரு மனிதன் தன்னை ஆட்படுத்திக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெறும் உடல் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அவன் கவனம் திசை திருப்பி பரவாத்மாவை நோக்கி ஜீவாத்மா செல்வது தடைபட்டுக் கொண்டே இருக்கும். அப்படி வரக்கூடிய தடைகளை எல்லாம் ஒரு மனிதன் ஈஸ்வர தியானம் அதாவது இறை தியானம் மூலம் மெல்ல மெல்ல வெல்லலாம். இதற்கு தர்மமும் சத்தியமும் பக்க பலமாக இருக்கும். எனவே மிக எளிய வழி எத்தனையோ தர்மங்கள் செய்தாலும் எத்தனையோ புண்ணிய காரியங்களை செய்தாலும் எத்தனையோ தல யாத்திரை செய்தாலும் கூட அவனுடைய ஆழ் மனதிலே அவனுடைய அடி மனதிலே நீங்காத ஒரு இடமாக இறைவனை அடைந்தே தீருவேன் என்று உறுதியான எண்ணத்தோடு இருந்தால் அவன் எதை செய்தாலும் அது குறித்து அவன் பாதிக்கப்படாமல் இருப்பான்.
அதாவது ஒருவன் எங்கிருந்தாலும் எந்த சூழலில் இருந்தாலும் அவனுடைய ஆழ்மனதிலேயே ஈஸ்வர சிந்தனை அசைக்க முடியாமல் இருந்தால் அந்த ஜீவாத்மா மிக எளிதில் பல படிகளை தாண்டி விடும். ஆனால் அடிப்படையிலேயே எந்த எண்ணம் இல்லாமலும் பரிபூரண சரணாகதி பக்தி இல்லாமலும் இருக்கின்ற மனிதனுக்கு தடுமாற்றங்கள் வரத்தான் செய்யும். அது போன்ற தருணங்களிலே குழப்பம் கொண்டிடாமல் கீழே விழுந்தாலும் விழுவது இயல்பு என்று மீண்டும் மீண்டும் எழுந்து அமர்ந்து இறைவா என்னை காப்பது உன் பொறுப்பு என்றெண்ணி இறைவனை நோக்கி மனதை விரைவாக பயணம் செய்வதற்கு உண்டான முயற்சியிலே இறங்குவதே மனிதனுக்கு உகந்த கடமையாகும். இதை செய்தால் ஜீவாத்மா எளிதில் பரமாத்மாவை அடையும்.
பாம்புகளுக்கு பயப்படுவது போல நடித்து பாம்பை அடக்கி தனக்கு ஆபரணங்களாக ஏற்றுக் கொண்ட சிவ வடிவம் புஜங்கத் ராசமூர்த்தி எனப்படுகிறது.
தில்லை காடுகளை சுற்றியிருந்த தருகா வனத்தில் வீடுகளமைத்து வாழ்ந்து கொண்டிருந்த அந்தணர்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் கற்றுத் தெளிந்த வித்தகர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்யும் யாகமும் யாகத்தில் சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் சர்வ வல்லமையுடன் பலிப்பதைக் கண்டு தெய்வங்களை விட மந்திரங்களே உயர்ந்தவை என்றும் இறைவனை மந்திரத்தாலேயே கட்டிவிடலாம் என்று செறுக்குடன் இருந்தார்கள். அவர்களது துணைவியர்களோ இறைவனை விட தங்களது கற்பே சிறப்புடையது என்ற எண்ணத்தில் வாழ்ந்து வந்த்தார்கள். அவர்களுக்கு நல்லறிவை புகட்ட எண்ணிய சிவபெருமான் திருமாலை அழைத்து பார்ப்பவர் மயங்கும் பெண்மை அழகுடன் விளங்கும் மோகினியின் அவதாரத்தை எடுக்க வைத்துத் தாமும் பார்த்தவரை வசீகரித்து விடும் ஆண்மை அழகுடன் விளங்கிய பிக்ஷாடனர் அவதாரம் எடுத்துக் கொண்டார். பிக்ஷாடனர் அவதாரத்தில் உடலில் துணியின்றி நிர்வாணமாகவும் வலது கையில் ஒரு பிச்சையோடும் எடுத்துக் கொண்டு மோகினி பின்தொடர்ந்து வர தருகா வனத்தை அடைந்தார்.
தருகா வனத்தில் வந்திறங்கிய பிக்ஷாடனர் அங்கு இருக்கும் ஆசிரமங்களை நோக்கிச் சென்று அனைத்து வீட்டின் கதவையும் தட்டி பிச்சை கேட்டார். பிச்சை போட வெளியே வந்த அந்தணர்களின் பத்தினிகள் பிக்ஷாடனரின் அபூர்வ அழகைக் கண்டு அவரின் மேல் அளவிடமுடியாத அளவு மோகம் கொண்டு அவரின் பின்னாலேயே செல்ல ஆரம்பித்தனர். அதே சமயம் அந்தணர்கள் வீற்றிருந்த யாக சாலைக்குச் சென்ற மோகினியும் அங்கே யாகத்தில் மூழ்கியிருந்த அந்தணர்களை மயக்கி விட்டாள். அவர்களும் அவளின் பேரழகில் மயங்கி அவளைப் பின் தொடர்ந்தார்கள். மோகினியைப் பின் தொடர்ந்த அந்தணர்கள் பிக்ஷாடனரை வந்தடைந்ததும் அங்கே தங்களின் துணைவியர்கள் அனைவரும் ஒரு பேரழகனின் பின்னால் வருவதைப் பார்த்து அதிர்ச்சியில் மோகினியின் மேலிருந்த மயக்கம் தெளிந்தார்கள். மயக்கம் தெளிந்து தங்களின் கோலத்தையும் தங்களின் மனைவிகளின் கோலத்தையும் பார்த்தவர்கள் தாங்க முடியாத கோபம் அடைந்து தங்களின் ஆச்சாரத்தைக் கலைத்த மோகினியையும் தங்களின் மனைவிகளின் கற்பை கலங்கப்படுத்திய பிக்ஷாடனரையும் பலவாறாக சபிக்க ஆரம்பித்தார்கள். அவர்களின் சாபங்கள் அனைத்தும் இறைவனை என்ன செய்யும்? அவர் புன்முறுவல் மாறாமல் இருந்ததைப் பார்த்து இன்னும் கோபம் கொண்ட அந்தணர்கள் அவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்து தங்களின் மந்திரங்களால் பஞ்ச நாகங்களை உருவாக்கி அவரை நோக்கி ஏவினார்கள்.
இறைவன் அருகில் அந்த பாம்பு தன்னுடைய பற்களில் கடும் விஷத்துடன் சீறி வந்தது. இறைவன் பாம்பிற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு பஞ்ச நாகங்களில் ஒன்றை தன் இடுப்பில் ஆரமாகவும் இரண்டை தோள்களிலும் இரண்டை கால்களில் சிலம்பாகவும் அணிந்து கொண்டார். புஜங்கம் என்றால் பாம்பு. திராசம் என்றால் பயப்படுதல். பாம்பை தனது உடலில் ஏற்றுக் கொண்ட போது புஜங்கத் ராசமூர்த்தி என்று பெயர் பெற்றார்.
பெரும்புலியூர் கோயிலில் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார்.
புஜங்கம் என்றால் பாம்பு. லளிதம் என்றால் அழகு ஆபரணம் என்று பொருள். பாம்புகளுக்கு அபயமளித்து பாம்பை தனக்கு அழகுடன் ஆபரணமாக அணிந்ததினால் இப்பெயரைப் பெற்றார்.
காசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும் வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்ற போட்டி ஏற்பட்டது. அப்படி அழகானவள் மற்றவளுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் கணவரான காசிபரை நாடினார். கணவரோ கத்துருவே அழகி என்று கூறினார். இதன் விளைவாக வினத்தை சிறையில் அடைக்கப்பட்டார்.
வினதையின் இளைய மகன் கருடன் இந்த செய்தியை அறிந்து தன் தாய் இந்த அடிமைத் தளையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என தன் பெரியம்மாவிடம் கேட்டார். அதற்கு கத்துரு தேவலோகத்திலுள்ள அமிர்தம் கொண்டு வந்தால் உன் தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கின்றேன் எனக் கூறினாள். கருடன் தேவலோகத்தில் அமிர்த கலசத்தை காவல் புரிந்தவர்களுடன் போரிட்டு வென்று அமுத கலசத்தை கைப்பற்ற முயற்சித்தான். அப்போது திருமால் அவனை எதிர்த்தார். இருவருக்கும் நடந்த சண்டையில் திருமாலால் கருடனை வெற்றி கொள்ள முடியவில்லை. அப்போது கருடனின் வீரத்தைப் பாராட்டிய திருமால் உனக்கு வேண்டும் வரம் கேள் எனக் கேட்டார். கருடன் சிரிப்புடன் நீ யார் எனக்கு வரம் தருவதற்கு நான் உனக்கு வரம் தருகின்றேன் கேள் என ஆணவத்துடன் கூறினான். சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய திருமால் பாம்புகளுக்கு அமுதம் கொடுக்க கூடாது. மேலும் நீ எனக்கு வாகனமாக இருக்க வேண்டும் என்று இரு வரம் கேட்டார். கருடன் தன் அகந்தை அழிந்து திருமாலை வணங்கி அமிர்தத்தை பெற்று தன் அன்னையை அடிமை தளையிலிருந்து மீட்டார். தன்னிடம் இருந்த அமிர்தத்தை பாம்புகளுக்கு கொடுக்காததினால் பாம்புகளால் கருதப்பட்டான். அமுத கலசத்தை கொண்டுவந்து தன் தாயை விடுவித்தான். பின்னர் சிவபூஜை செய்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றுப் பின்னர் திருமாலின் வாகனமானார்.
கருடன் அமிர்தம் கொடுக்காததினால் கோபம் கொண்ட நாகங்கள் சிவபூஜை செய்து தங்களுக்கு அழியா புகழும் கருடனிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும் வேண்டினர். உடன் சிவபெருமானும் வேண்டிய வரத்தைக் கொடுத்து விட்டு நாகங்களை தன்னுடலில் ஆபரணமாக அணிந்து கொண்டார். பாம்புகளுக்கு அபயமளித்ததால் சிவபெருமானுக்கு புஜங்கலளித மூர்த்தி என்னும் பெயர் ஏற்பட்டது. இறைவனது ஐந்து தொழில்களில் காத்தல் என்பது இருவகைப்படும். இன்பக்காத்தல் துன்பக்காத்தல் எனப்படும். உயிர்கள் செய்த வினைக்கு ஏற்ப இன்பப் பயன்களைக் கொடுத்து அவ்வுயிர்களுக்கு அருளுதல் அறக் கருணையாகிய இன்பக்காத்தல் எனப்படும். ஆன்மாவைக் குறிக்கும் குறியீட்டுப் பொருளான பாம்பினைக் கையில் ஏந்தி அதனை மகிழ்வுறச் செய்யும் வகையில் ஆடும் நடனமே புஜங்கலளித நடனமாகும்.
சிவபெருமான் நாகங்களின் மீது நடனமாடிய திருக்கோயில் திருப்பெரும்புலியூர். இங்கு புஜங்கலளிதமூர்த்தி உள்ளார்.
இறைவனின் அருளைக் கொண்டு இயங்குவது யாதென்றால் இதுபோல் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர்நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்கு தான் அவனைப் பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை. மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி. எல்லாமே எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒரு விதமாகவும் நடைமுறை செயல்கள் வேறு விதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக தோன்றும். எனவே இப்படி இந்த உலகையும் உலகை சுற்றியுள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படித்தான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் பொழுது ஒருவன் வருத்தப்படுகிறானே அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உளைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்களையும் மாற்று. தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று. என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகாத்திரமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அதுதான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு அடித்தளமாக அமையும்.
இதுபோல் எங்கள் அடிக்கடி கூறுவது போல் உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்து எடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்தோ அல்லது சிறிது மோரை சேர்த்தோ அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்பகோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் புதிதாக உப்பை சேர்க்காமல் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அதுபோல அந்த உப்பின் தன்மையை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய விளைகள் அவனை தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும். பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதனால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதில் வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.
நான்கு கரங்கள் கொண்ட விநாயகர். சந்நியாசத்தின் உருவகமாக தனது நெற்றியில் மூன்றாவது கண்ணுடன் ஒரு முனிவரின் புலித் தோலை அணிந்துள்ளார். 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர் சிலை. இடம் வியட்நாமில் உள்ள டா நாங் நகர். சாம் சிற்ப அருங்காட்சியகம்.
சிவபெருமான் காளையின் மீது சாய்ந்தபடி இடக்காலை ஊன்றி வலக்காலை ஒய்யாரமாக தாங்கியபடி நிற்கும் வடிவம் இடபாந்திகராகும். அறவெள்விடைக்கு அருளிய வடிவம் என்ற வேறு பெயரும் உள்ளது.
கிருத யுகம் துவாபர யுகம் த்ரேதாயுகம் கலியுகம் என்று நான்கு யுகங்கள். இதற்கு சதுர் யுகம் என்று பெயர். மொத்தம் 43 லட்சத்து 21000 மனித வருடங்கள். அது போல 1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல். அதே மாதிரி இன்னொரு ஆயிரம் சதுர் யுகங்கள் ஒரு இரவு. இரண்டும் சேர்த்தால் பிரம்மாவின் வாழ்கையில் ஒரு நாள். இந்தக்கணக்கின் படி பிரம்மாவுக்கு நூறு வயது முடிந்தால் அது பிரம்மாவின் ஆயுட்காலமாகும். பிரம்மாவின் ஒரு ஆயுட்காலம் விஷ்ணுவிற்கு ஒரு நாள் ஆகும். ஆக விஷ்ணுவிற்கு நூறு வயது கழிந்தால் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் அழியும் என்பது கணக்கு. அழியும் ஊழிக் காலத்தில் உமையுடன் சேர்ந்து திருநடனம் புரிவார் சிவபெருமான். இக்கணக்கினால் தர்ம தேவதை வேதனை கொண்டது. ஊழிக் காலத்தில் தானும் அழிய வேண்டி வருமே என்ன செய்வது என்று சிந்தித்தது.
சிவபெருமானிடம் சரணடைவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று சிவனை சரணடைந்தது. இடபமாக மாறி தர்ம தேவதை சிவனின் முன்பு நின்றது. ஐயனே நான் இறவாமலிருக்க வேண்டும். எப்பொழுதும் தங்கள் வாகனமாக நானிருக்கவும் ஆசி கூறுங்கள் என்றது. தருமத்தினை உலகிற்கு உணர்த்த கிருதயுகத்தில் நான்கு கால்களுடனும் திரேதாயுகத்தில் மூன்று கால்களுடனும் துவாபர யுகத்தில் இரண்டு கால்களுடனும் கடைசியாக கலியுகத்தில் ஒரு காலுடனும் தோன்றி தர்மத்தினை நிலைநாட்டுவாய். மேலும் எப்பொழுதும் என்னை நீ பிரியாமல் இருப்பாய் எனது வாகனமாகும் பேற்றையும் நீயேப் பெறுவாய் என்று திருவாய் எழுந்தருளினார்.
கும்பகோணம் அருகே உள்ள திருவாவடுதுறை மாசிலாமணிஸ்வரர் கோயிலில் இடபாந்திக மூர்த்தி உள்ளார்.