திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடிக்கு அருகிலிருக்கிறது தாமோட்டூர் கிராமம். இங்குள்ள பசுமை படர்ந்த பயிர் நிலங்களுக்கு நடுவில் கம்பீராக வீற்றிருக்கிறது தாய்தெய்வச்சிலை. கோயில் இல்லை. கோபுரமும் இல்லை. சிலை வழிபாடு நடக்கிறது. 10 அடி உயரம் இருபுறமும் கைகள் போன்ற அமைப்பு வட்டமான தலைப் பகுதியுடன் தாய்தெய்வத்தின் தோற்றம் இருக்கிறது. பெண்களே வளமைக் குரியவர்கள். அதனாலேயே தாய்தெய்வம் என்று சங்க காலத்தில் பெண்களை முன்னிலைப் படுத்தியிருக்கிறார்கள். மூன்றாயிரம் ஆண்டுகள் தொன்மையான இந்தச் சிலை சிந்துசமவெளி நாகரிகத்துக்கு இணையானதொரு பண்டைய கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போவதாக சொல்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள். உள்ளூர் மக்கள் இதை கூத்தாண்டவர் என்ற பெயரில் வழிபடுகிறார்கள்.