ராமரிடம் வாலி பேச ஆரம்பித்தான். தங்களிடம் 2 வரங்கள் கேட்கின்றேன் தாங்கள் கொடுக்க வேண்டும். முதலாவது என் தம்பி சுக்ரீவன் சில நேரங்களில் மதி மயக்கத்தில் மறந்து உங்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தவறக் கூடும். அதைப் பெரிதாகக் கொள்ளாமல் அவனை மன்னித்து விடுங்கள். கோபத்தில் என் மீது செலுத்திய அம்பை அவன் மீது செலுத்த வேண்டாம். அதைத் தாங்கும் ஆற்றல் அவனுக்கு இல்லை. சுக்கிரீவனை உங்கள் தம்பி லட்சுமணனைப் போல ஏற்றுக் கொண்டு பாசமும் பரிவும் காட்டுங்கள். இரண்டாவது என் மகன் அங்கதனை உங்களிடம் அடைக்கலம் வந்தவானாக ஏற்றுக்கொண்டு ஆதரவு அளியுங்கள். அனுமனை உங்கள் வில்லைப் போல வலிமையுள்ள துணைவனாய் ஏற்றுக்கொள்ளுங்கள். இவர்கள் துணையோடு சீதையைத் தேடி அடையுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் வாலி. ராமனின் மதிப்பில் வாலி மிக உயர்ந்து நின்றான்.
ராமர் தனது உடைவாளை அங்கதனிடம் தந்து அவனை பெருமைப் படுத்தினார். வாலியிடம் நீ செய்த பாவத்திற்கு தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விட்டாய் என்று ராமர் உறுதியளித்தார். அனுமன் அழுது கொண்டிருந்த தாரைக்கு அறுதல் சொன்னார். வாலி நிச்சயமாக நல்ல மேலுலகம் அடைவார். ஆகையால் வாலியைப்பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. வாலிக்கு சரியானபடி காரியங்களை செய்து விட்டு அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்வோம். அதனை கண்டு மகிழ்வோம். அங்கதனுக்கு புத்திகூறி வளர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருக்கிறது. கவலையை விட்டு சிறிது சாந்தமாக இருங்கள் என்று கூறினார். அதற்கு தாரை இனி இவ்வுலகத்தில் எனக்கு வேண்டியது ஒன்றுமில்லை. சுக்ரீவன் தனது மகனைப் போலவே அங்கதனை பார்த்துக் கொள்வான். ஆயிரம் அங்கதன் வந்தாலும் அது வாலிக்கு சமமாக இருக்காது. நான் வாலியுடன் மேலுலகம் செல்கிறேன் என்றபடி அழுது கொண்டே இருந்தாள். வாலியைக் கொன்ற ராமரின் மேல் எந்த கோபத்திற்கான அறிகுறியும் தன் முகத்தில் இல்லாமல் ராமரை நோக்கி சென்றாள் தாரை.
ராமரிடம் தாரை பேச ஆரம்பித்தாள். தாங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவர். முக்காலமும் அறிந்தவர். உயர்ந்த தர்மங்களை கடைபிடிப்பவர். பூமியை போல் பொறுமை மிக்கவர். மனித உடலுக்கான இயல்பான பண்புகளை ஒதிக்கி தள்ளி வைத்து விட்டு தெய்வீகமான பண்புகளுடன் இருக்கின்றீர்கள். மேலுலகம் சென்ற வாலி அங்கு என்னை தேடி அலைவார். நானில்லாமல் அவரால் இருக்க முடியாது. மனைவியை பிரிந்த ஒருவர் எவ்வளவு மன வேதனையுடன் இருப்பார் என்று தங்களுக்கு தெரியும். எந்த அம்பினால் வாலியை கொன்றீர்களோ அதை அம்பினால் என்னையும் கொன்று விடுங்கள். அவர் இருக்குமிடம் நானும் செல்கிறேன். நாங்கள் இருவரும் மேலுலகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போம். உத்தமமான தாங்கள் எப்படி ஒரு பெண்ணை கொல்வது இது மாபெரும் பாவம் என்று எண்ணாதீர்கள். இங்கு பாவத்திற்கு இடமில்லை. என்னை கொன்றால் அதற்கான பாவம் தங்களை வந்து சேராது. உலகத்து ஞானிகளின் கருத்துப்படி கணவனிடம் மனைவியை கொடுக்கும் பெண் தானத்தை விட உயர்ந்த தானம் வேறு ஒன்றும் இல்லை. தாங்களும் அந்த அறநெறிப்படி மேலுலகம் செல்லும் என் கணவரிடம் என்னை கொடுத்து விடுங்கள். இப்படி தானம் செய்வதினால் தங்களுக்கு எந்த பாவமும் வராது. வாலி இல்லாமல் இந்த உலகத்தில் என்னால் உயிர் வாழ முடியாது. சில நாட்களில் நான் இறந்து விடுவேன். இப்போதே நீங்கள் என்னை கொன்று பெண் தானம் செய்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தாள் தாரை.