அஷ்டதிக் பாலகர்கள்

இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி பகவான், வருண பகவான், வாயு பகவான், குபேரன், ஈசானன் ஆகிய எட்டுபேரும் அஷ்ட திக் பாலகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எட்டு திசைகளுக்கு உரிய காவலர்கள் ஆவார்கள். வலது கை கீழேயும் இடது கை மேலேயும் வைத்து நடுவில் வாஸ்து புருஷன் இருக்கிறார். இடம் ஹளேபிடு ஹொய்சலேஸ்வரர் கோவில் கர்நாடகா.

1. கிழக்கு திசை அதிபதி இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் தனது வாகனமான ஐராவத யானை மீது அமர்ந்திருக்கிறார்.

2. தென்கிழக்கு திசை அதிபதி அக்னி தனது மனைவி சுவாஹா தேவியுடன் தனது வாகனமான ஆட்டுகிடா மீது அமர்ந்திருக்கிறார்.

3. தெற்கு திசை அதிபதி எமன் தனது மனைவி குபேரஜாயையுடன் தனது வாகனமான எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

4. தென்மேற்கு திசை அதிபதி நிருதி தனது மனைவி கட்கியுடன் தனது வாகனமான பிரேதம் வாகன மீது அமர்ந்திருக்கிறார்.

5. மேற்கு திசை அதிபதி வருணன் தனது மனைவி வருணியுடன் தனது வாகனமான மகரத்தின் மீது அமர்ந்திருக்கிறார்.

6. வடமேற்கு திசை அதிபதி வாயு மனைவி வாயுஜாயையுடன் தனது வாகனமான மான் மீது அமர்ந்திருக்கிறார்.

7. வடக்கு திசை அதிபதி குபேரன் தனது மனைவி யட்சியுடன் தனது வாகனமான நரன் மீது அமர்ந்திருக்கிறார்.

8. வடகிழக்கு அதிபதி ஈசானம் மனைவி ஈசானஜாயையுடன் தனது வாகனமான காளை மீது அமர்ந்திருக்கிறார்.

சனிபகவான்

கொடுமுடி மகுடேசுவரர் கோயில் என்றும் திருப்பாண்டிக் கொடுமுடி கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற சிவன் கோயில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. இத்தல சிவன் மீது திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மூவரும் பாடல்கள் பாடியுள்ளார்கள். இக்கோயிலில் சனிபகவான் காகத்தின் மேல் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் அமர்ந்த கோலத்தில் வலது கையில் திரிசூலத்தை ஏந்திய நிலையில் எழுந்தருளி அருள்கிறார்.

வாயுபகவான்

அஷ்டதிக் பாலகர்களில் ஒருவரான வாயுபகவனின் புடைப்புச் சிற்பம். காற்றின் கடவுள் வாயுபகவான் தன் மனைவி வாயுஜாயை உடன் அங்குசம் ஏந்தி தன் வாகனமான மானின் மீது அமர்ந்துள்ளார். இடம் அரகேஸ்வரர் கோயில். கர்நாடக மாநிலம் சாமராசநகர் மாவட்டம் ஹோல் சூலூரில் உள்ள வில்.

இரட்டை நந்தி

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டரில் உள்ள சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயில் இங்கு 2500 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆலயத்தில் இரண்டு நந்திகள் ஒன்றன்பின் ஒன்றாக இருக்கின்றன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இல்லை. உடைந்த நிலையில் காணப்படுகிறது.

ஒரு முறை விவசாயி ஒருவரின் நிலத்தில் மாடு ஒன்று மேய்ந்தது. ஆத்திரமடைந்த விவசாயி அந்த மாட்டின் காதையும் கொம்பையும் வெட்டினார். மறுநாள் கோவிலுக்குச் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த கற்சிலையான நந்தியின் கொம்பும் காதும் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. வந்தது. தெய்வ நந்தி என்பதை அறியாமல் செய்த தவறுக்கு விவசாயி வருந்தினார். அதற்கு பிராயச்சித்தமாக புதிய நந்தி சிலை ஒன்றை பழைய நந்தி சிலையின் பின்பாக பிரதிஷ்டை செய்தார்.

சூரிய பகவான்

தேரோட்டி அருணா ஏழு குதிரைகள் கொண்ட தேரை ஓட்ட தேரில் இரண்டு தாமரை மலர்களை ஏந்தியபடி அமர்ந்திருக்கும் சூரிய பகவான். தேர் வேகமாக செல்வதை குறிக்கும் வகையில் சூரிய தேவனின் பின்னால் பறக்கும் அவரின் வஸ்திரம். இடம் வாராஹி தேயுலா கோவில். ஒடிசா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோவிலுக்கு வடக்கே 30 கிமீ தொலைவில் உள்ள சௌராஷி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பம்.

ஆதிசேஷன்

ஆதிசேஷன் தான் குழந்தை செல்வத்தை பெற ஓர் முனிவரின் அறிவுறுத்தலின்படி மகா சிவராத்திரி நன்னாளில் நான்கு காலங்களிலும் சிவபூஜை செய்ய எண்ணினான். அதன்படி முதல் காலத்தில் கும்பகோணம் குடந்தைக் கீழ்க்கோட்டம் நாகநாதசுவாமி திருக்கோவிலிலும் இரண்டாம் காலம் திருநாகேஸ்வரதிலும் மூன்றாவது காலத்தில் திருப்பாம்புரம் திருத்தலத்திலும் நான்காம் காலத்தில் நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வர சுவாமியை வழிபட்டு பின் தனியாக லிங்கப் பிரதிஷ்டை செய்து தீர்த்தம் அமைத்து வழிபட்டு வந்தார். இறைவனும் மனமிரங்கி ஆதிசேஷனுக்கு காட்சியளித்து பிள்ளை வரமளித்தார். நாகர்களின் குலம் செழிக்க காரணமான இந்த ஊருக்கு அவர்களது பெயராலே நாகப்பட்டிணம் என வழங்கலாயிற்று.

இறைவன் அருளால் ஆதிஷேசன் ஓர் பெண் குழந்தையை பெற்றார். அக்குழந்தை வளர்ந்து பருவம் எய்திய போது மூன்று தனங்களுடன் இருப்பதை அறிந்து மன வேதனை கொண்டு இறைவனிடம் முறையிட்டார். அப்போது அசரீரியாக ஆதிசேஷனே வருந்தாதே அப்பெண்ணிற்கு உரிய மணாளனே அவள் காணும் பொழுது மூன்றாவது ஸ்தனம் மறையும் என ஒலித்தது. ஆதிசேஷனின் மகளான நாககன்னிகை காயாரோகண சுவாமியையும் நீலாயதாட்சி அம்மனையும் நாள்தோறும் வழிபட்டு வந்தாள். ஒரு நாள் தேவ தீர்த்தக்கரையில் சோழர் குலத்தில் உதித்த அரசகுமாரன் சாலிசுகனை கண்டபோது அவள் மூன்றாவது தனம் மறையவே இவனே தனது மணாளன் என உணர்ந்து தன் பெற்றோரிடம் தெரிவித்தாள். சாலிசுகனை நாக லோகத்திற்கு வரவழைத்து தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தார் ஆதிசேஷன். இடம்: காயாரோகணேசுவரர் கோவில் நாகப்பட்டிணம்.

மிருதங்கம் வாசிக்கும் நந்திகேஸ்வரர்

சிவனின் இந்தக் காளை வாகனம் கைலாசத்தின் காவல் தெய்வம். தர்மத்தின் தத்துவமாக சிவபெருமானின் முன் அமர்ந்திருக்கிறார். 10 ஆம் ஆண்டு முதலாம் இராஜராஜனால் கட்டப்பட்ட பஞ்சேஷ்டி அகஸ்தீஸ்வரர் கோயிலின் ராஜகோபுரத்தில் செதுக்கப்பட்ட நந்திதேவரின் அரிய காளை மாட்டு தலையும் மனித உடலும் கொண்ட நந்திகேஸ்வரர் சிற்பம். வலது மேல் கரம் திரிசூலத்தை ஏந்தியும் இடது மேல் கரம் உடுக்கை ஏந்தி உள்ளதையும் கீழ் வலது மற்றும் இடது கைகள் மிருதங்கம் வாசிக்க 4 கைகளுடன் இந்த சிற்பம் உள்ளது. ஊர் திருவள்ளூர்.

தி மிஸ்டெரியஸ் லாங்மென் குகைகள்

சீனாவின் ஹெனான் மாகாணத்தின் புராதன நகரமான லுயாங்கின் தெற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் லாங்மென் குகைகளில் இச்சிலை கம்பீரமாக நிற்கிறது. 2000 ஆம் ஆண்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக பதிவுசெய்யப்பட்டது. 2300 க்கும் மேற்பட்ட குகைகள் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த சிலைகள் உள்ளது. வட வேய் வம்ச காலத்தில் சுமார் 493 ஆம் ஆண்டு இந்த குகைகளின் உருவாக்கம் துவங்கியது. பல்வேறு வம்சங்களை கடந்து வந்த ஒரு முயற்சி தொடர்ந்த்து நடைபெற்றது. இந்த குகைகள் ஒவ்வொன்றும் வெறும் 2 சென்டிமீட்டர் அளவுள்ள சிறிய விவரங்கள் முதல் 17 மீட்டருக்கு மேல் இருக்கும் சிலைகள் வரை சிற்பங்களை மறைக்கின்றன. 800 கல்வெட்டுகளுக்கும் மேற்பட்ட வீடுகள் இங்கு அடங்கியுள்ளது. இந்த கல்வெட்டுகளில் இருந்து அவற்றின் வரலாற்று கவிதைகள் அரசின் செயல்பாடுகள் மற்றும்அந்த கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ளலாம்.

இரண்டு தலையுடன் அக்னிபகவான்


பஞ்சபூதங்களகளில் ஒருவரும் அட்டதிக்கு பாலகர்களில் தென்கிழக்குத் திசைக்கு உரியவரான இரண்டு தலைகள் கொண்ட அக்னிபகவான். துணைவியான சுவாகா தேவியுடன் ஆடு வாகனத்தின் மீது அமர்ந்துள்ளார். 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம்.