சுலோகம் -143

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-24

நான் கர்மங்களை செய்யா விட்டால் இம்மனிதர்கள் அனைவரும் சீர் குலைந்து போவார்கள். நான் சீர் குலைவு செய்பவனாகவும் இவர்களை நானே அழித்தவனாகவும் ஆவேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 142 இல் உள்ளபடி நான் கர்மம் செய்யாமல் இருப்பதை பார்த்து மக்களும் தங்களுக்கு உண்டான கர்மங்களை செய்யாமல் இருந்து விட்டால் இந்த உலகம் சீராக நடைபெறாது. உலக இயக்கம் சீராக இல்லை என்றால் மக்களும் சீர் குலைந்து அழிந்து போவார்கள். இந்த அழிவிற்கு நானே காரணமானவனாக ஆகிவிடுவேன்.

சுலோகம் -142

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-23

ஏனெனில் பார்த்தா நான் கர்மங்களில் ஈடுபடாமல் இருந்தால் பெரிய தீங்கு விளையும். மனிதர்கள் எல்லா விதங்களிலும் என்னுடைய வழியை பின் பற்றுவார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

நான் எந்த விதமான கர்மங்களும் செய்யாமல் இருந்தால் இதனை பார்த்துக் கொண்டிருக்கும் மக்களும் என் வழியை பின்பற்றி ஒன்றும் செய்யாமல் இருந்து விடுவார்கள். உலகம் இயங்குவதை கர்மமே நிர்ணயிக்கிறது. மக்கள் ஒன்றும் செய்யாமல் இருந்து விட்டால் உலக இயக்கம் சீராக நடைபெறாது.

சுலோகம் -141

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-22

அர்ஜூனா எனக்கு மூவுலங்களில் செய்ய வேண்டிய கடமை என்பது ஏதும் கிடையாது. நான் அடையாதது ஏதும் இல்லை. நான் அடையக் கூடியதும் ஏதும் இல்லை. இப்படி இருந்தாலும் எனது கர்மங்களை நான் தொடர்ந்து இயற்றி வருகிறேன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மூன்று உலகங்களான மேலோகம் பூலோகம் பாதாளலோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் நான் செய்தே ஆக வேண்டும் என்ற எனக்கான கடமைகள் என்று எதுவும் இல்லை. ஆசைப்பட்டும் ஆசைப்படாமலும் அடைய வேண்டியது அனைத்தையும் நான் அடைந்து விட்டேன். இனிமேல் நானாக சென்று அடைய வேண்டியது என்றும் எதுவும் இல்லை. ஆனாலும் உலகத்தின் நன்மைக்காக நான் செய்ய வேண்டிய செயல்களை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன்.

சுலோகம் -140

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-21

உயர்ந்த மனிதன் எதைச் செய்கிறானோ ஏனையோரும் அதனையே செய்வார்கள். அவன் எதனைச் சிறந்தது என்று கூறுகிறானோ மனித சமுதாயம் அனைத்தும் அதையே பின்பற்றி நடக்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் உயர்ந்த மனிதர் எதனை செய்கிறாறோ அது சிறந்தது நன்மையானது என்று அவரை நம்பும் மக்களும் அப்படியே செய்வார்கள். அவர் சிறப்பானது இதனை செய்யுங்கள் என்று சொல்லும் கருத்தையும் அப்படியே பின்பற்றி நடப்பார்கள்.

சுலோகம் -139

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-20

ஐனகர் முதலிய ஞானிகளும் பற்றில்லாமல் கர்மங்களை செய்ததின் மூலமாக சிறந்த பேற்றை அடைந்தார்கள். அவ்விதமே உலகத்தின் நலனை நன்கு மனதில் கொண்டு நீயும் கர்மங்களை செய்வது தான் உனக்கு உரிய செயலாகும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

பற்றில்லாமல் தனக்குண்டான கடமையை செய்ததற்காக ஜனகர் போன்றவர்கள் இவ்வுலகத்திலும் மேலுலகத்தில் சிறந்த பேற்றை அடைந்தார்கள். இவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டும் உலகத்தின் நன்மை கருதியும் நீ பற்றில்லாமல் கர்மங்களை செய்வது உனக்கு உரிய செயலாகும்.

சுலோகம் -138

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-19

ஆகவே பற்றில்லாமல் எப்போதும் ஆற்ற வேண்டிய உனது கடமைகளை செய்து கொண்டிரு. ஏனெனில் பற்றில்லாமல் கடமைகளை செய்கின்ற மனிதன் பரமாத்மாவை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா நீ இறைவனை உணர்ந்த ஞானி இல்லை. ஆகவே நீ எதன் மீதும் பற்றில்லாமல் உனக்கான கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இரு. தனக்குண்டான கடமைகளை பற்றில்லாமல் செய்பவன் இறைவனை அடைகிறான்.

சுலோகம் -136

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-17

எந்த மனிதன் ஆத்மாவிலேயே இன்புற்றிருப்பவனாகவும் ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் ஆத்மாவிலேயே மகிழ்பவனாகவும் இருக்கிறானோ அவனுக்குச் செய்ய வேண்டிய செயல் எதுவும் இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எவனொருவன் பேரொளியாக இருக்கும் இறைவன் தான் தனக்குள் ஆத்மாவாக இருக்கிறான் என்பதையும் தான் வேறு இல்லை இறைவன் வேறு இல்லை என்பதை உணர்ந்து ஆத்மாவிலேயே திருப்தி கொண்டவனாகவும் பேரின்பத்தில் சமாதி நிலையில் இருக்கிறானோ அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் என்று இந்த உலகத்தில் எதுவும் இல்லை.

சுலோகம் -137

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-18

அந்த மனிதன் இந்த உலகில் கர்மங்களைச் செய்தாலும் எந்த பயனும் இல்லை. செய்யாவிட்டாலும் எந்த பயனுமில்லை. அவ்வாறே உயிரினங்கள் அனைத்திலும் எதிலுமே அவனுக்குத் தனக்காக ஆக வேண்டியது என்ற தொடர்பு சிறிது கூட இல்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 136 இல் சொல்லப்பட்டபடி குறிப்பிட்டு சொல்லப்படும் மனிதர் இறைவனை தனக்குள் உணர்ந்த ஞானி ஆவார். அவர் எந்த விதமான பயனையும் தனக்காக பெறுவதற்கு கர்மம் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்தாலும் அவருக்கு எந்த விதமான பாவமோ புண்ணியமோ எற்படுவதில்லை. மேலும் தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள அவர் இந்த உலகத்தில் எந்த பொருளையும் சார்ந்து இருக்க வேண்டியதில்லை.

சுலோகம் -135

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-16

பார்த்தா எவனொருவன் இவ்வுலகில் இவ்வாறு சுழழும் வட்டமாக வைக்கப்பட்ட படைப்பு சக்கரத்திற்கு அனுகூலமாக பின்பற்றி தன் கடமையை ஆற்றவில்லையோ புலன்கள் மூலம் போகங்களில் இன்புற்றிருக்கும் அந்தப் பாவ வாழ்க்கை உடையவன் வீணே வாழ்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் 133 மற்றும் 134 இல் உள்ளபடி உலகில் படைப்புகள் வட்டமாக சுழன்று கொண்டே இருக்கிறது. இந்த சுழழும் வட்டத்தை பின்பற்றி எவனொருவன் கர்ம யோகத்தில் ஈடுபட்டு தனக்குண்டான கடமையை செய்யாமல் தனது புலன்களின் வழியாக வரும் போகங்களில் ஈடுபடுகிறானோ அவன் தன் பிறவியை வீணடித்துக் கொண்டு பாவ வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

சுலோகம் -134

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-15

கர்மம் பிரம்மத்தில் இருந்து தோன்றுகிறது என்று உணர்ந்து கொள். பிரம்மம் அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. ஆகையால் எங்கும் நிறைந்த பிரம்மம் வேள்வியில் நிலை பெற்றது .

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்மமானது உயிர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பிரம்மத்தில் இருந்து உருவாகிறது. பிரம்மமானது அமிர்தத்தில் இருந்து தோன்றுகிறது. (அமிர்தம் என்று சொல்லப்படுவது இங்கு வேள்வியாகும்) ஆகையால் பிரம்மமானது சுலோகம் 129 ல் சொல்லப்பட்டபடி மனிதர்கள் தினந்தோறும் செய்யும் கர்மங்களின் வேள்விகளில் நிலை பெற்று இருக்கிறது.