தசரதசக்ரவர்த்தியும் ராஜகுமாரர்கள் தங்கள் துணையுடன் அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அயோத்தியை முழுவதுமாக அலங்கரித்தார்கள். பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது அயோத்தி. மக்கள் அனைவரும் ஊருக்கு சிறிது தூரத்திற்கு முன்பே சென்று மேளதாளத்துடன் சங்கொலி முழங்க ஆடல் பாடலுடன் அனைவரையும் வரவேற்றார்கள். அரண்மனைக்கு வந்த திருமண தம்பதிகளை கௌசலை சுமித்ரை கைகேயி மூவரும்
வரவேற்றார்கள். அரண்மனைக்கு வந்ததும் கைகேயின் தந்தை கேகய நாட்டு மன்னர் கோமன் தசரதரிடம் பரதன் தன்னுடைய மனைவியுடன் கேகய நாட்டில் சிறிது காலம் தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்று வைத்தார். தசரதரும் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். பரதனையும் அவனுடன் இணைபிரியாமல் இருக்கும் சத்ருகனனையும் கேகய நாட்டிற்கு தசரதர் அனுப்பிவைத்தார். அவர்களை கைகேயின் சகோதரன் யுதாஜித் என்பவன் அழைத்துச்சென்றான்.
பரதன் சென்றதும் ராமரும் லட்சுமனணும் அன்னைக்கு தேவையான பணிவிடைகளையும் குருவுக்கு தேவையான பணிவிடைகளையும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப மிகவும் கவனத்துடன் செய்துவந்தார்கள். நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தையின் அறிவுறைப்படி ராமரும் லட்சுமனனும் செய்தார்கள். ராமரின் நற்குணங்களால் தசரதர் மகிழ்ச்சி அடைந்தார். நான்கு குமாரர்களில் ராமர் தசரதரின் அன்புக்குரியவராக இருந்தார்.
ராமரும் சீதையும் அயோத்தியில் பன்னிரன்டு ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்துவிட்டார்கள். சீதை தன்னுடைய நற்குணங்களாலும் பேரழகினாலும் அனைவராலும் கவரப்பட்டாள். ராமர் சீதை மேல் வைத்த அன்பைவிட இருமடங்கு சீதை ராமரின் மேல் அன்பு வைத்திருந்தாள்.
பால காண்டம் முற்றியது. அடுத்து அயோத்தியா காண்டம்.