அர்ஜுனனுடைய உதவியால் மயன் என்னும் அரக்கன் உயிர் பிழைத்தான். அதற்கு தக்கதொரு கைமாறு செய்ய மயன் விரும்பினான். தங்களுக்கு ஏதேனும் செய்ய விரும்புகிறேன் என்று அர்ஜுனனுடைய அனுமதியை வேண்டி நின்றான். தங்களுக்கு என்ன தேவை கேளுங்கள் என்றான். அதற்கு அர்ஜுனன் பிறருக்கு செய்யும் பணிவிடைக்கு கைமாறாக எதையும் ஏற்றுக் கொள்ளுதல் இல்லை என்பது நான் கடைபிடிக்கும் கோட்பாடு ஆகும். ஆகையால் உன்னிடமிருந்து எம்மால் எதையும் ஏற்க இயலாது என்று கூறிவிட்டான். ஆனால் மயன் விட்டபாடில்லை மிகவும் வற்பறுத்தினான். அதற்கு அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துதல் பொருட்டு மயனே கிருஷ்ணனிடம் அனுப்பி வைத்தான். கிருஷ்ணன் மயனை யுதிஷ்டிரனிடம் அனுப்பி உன்னுடைய ஆசையை யுதிஷ்டிரன் வழியாக தீர்த்துக்கொள்ளுமாறு அனுப்பி வைத்தார். கடைசியாக மயன் யுதிஷ்டிரன் முன்பு வந்து தான் ஒரு கைதேர்ந்த சிற்பி என்றும் என்னுடைய சிற்பத் திறனுக்கு அறிகுறியாக இந்த இந்திரப் பிரஸ்தத்தில் சபா மண்டபம் ஒன்று அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று பணிவுடன் வேண்டினான். வேண்டியவர்க்கு வேண்டியதை வழங்கும் யுதிஷ்டிரன் சபா மண்டபம் அமைக்க அனுமதி கொடுத்தான். அந்த மண்டபம் எப்படி இருக்க வேண்டும். அதன் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பது அனைத்தும் மயன் விருப்பப்படியே நடக்கட்டும் என்று யுதிஷ்டிரன் கூறிவிட்டான். நல்ல நாள் அன்று சபா மண்டபம் அமைக்கும் பணி துவக்கப்பட்டது.
கிருஷ்ணன் இந்திரப் பிரஸ்தத்திற்கு வந்து நெடு நாள் ஆயிற்று. எனவே தன்னுடைய மைத்துனர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு துவாரகை கிளம்ப ஆயத்தமானார். பாண்டவர்களுக்கு அவனை விட்டு பிரிய மனம் இல்லை. வருத்தத்துடன் நின்றிருந்தனர். மானசீகமாக தான் எப்பொழுதும் அவர்களோடு இருந்து வருவதாக பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினான். பின்பு எப்பொழுதெல்லாம் கிருஷ்ணரின் தேவை ஏற்படுமோ அப்போது அழைத்தால் உடனடியாக அவர்களின் முன்னிலையில் வருவதாக கிருஷ்ணன் வாக்கு கொடுத்தான். இரு தரப்பிற்கும் இடையில் இத்தகைய உடன்படிக்கை ஏற்பட்ட பின்பு அவ்விடத்தை விட்டு கிருஷ்ணன் புறப்பட்டுச் சென்றான்.
மயன் தன்னுடைய சிற்ப வேலைக்காக கைலாய கிரிக்கு வடபுறத்தில் இருந்த பிந்துசரஸை நோக்கி சென்றான். அங்கு அமைந்திருந்த ரத்தினங்களையும் ஏனைய அரிய பெரிய பொருட்களையும் ஏராளமாக சேகரித்துக் கொண்டு அவன் திரும்பி வந்து சேர்ந்தான். கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கொண்டு சபா மண்டபம் கட்டுவதற்கு பயன்படுத்தினான். பீமனுக்கு அவன் பெரிய கதை ஒன்றும் கொண்டு வந்து சேர்த்தான். அர்ஜுனனுக்காக தேவதத்தம் எனும் சங்கையும் எடுத்து வந்திருந்தான். 14 மாதங்களில் அந்த அரிய சபா மண்டபம் கட்டும் வேலை பூர்த்தியாயிற்று. சபா மண்டபம் அதிசயங்களுள் தலைசிறந்த அதிசயமாக இருந்தது. அந்த வேலைப் பாட்டை காண்பதற்கு அக்கம் பக்கத்தில் இருந்து ஏராளமான அரசர்கள் வந்தார்கள். ஆனால் கௌரவர்கள் மட்டும் அந்த இடத்தை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. பொறாமையே அதற்கு காரணமாக இருந்தது.
தொடரும்……………