யுதிஷ்டிரனுக்கு அர்ஜுனன் கற்றுக்கொண்ட ஆற்றல் வாய்ந்த தெய்வீக அஸ்திர சாஸ்திரங்களையும் அவற்றை உபயோகிக்கும் முறையையும் தெரிந்து கொள்ளும் ஆவல் உண்டாயிற்று. ஆகவே அர்ஜுனனிடம் அதைப் பற்றி விளக்கமாக கூறுமாறு கேட்டுக் கொண்டான். அர்ஜுனன் தான் கற்றுக்கொண்ட தெய்வீக அஸ்திர சஸ்திர வித்தைகளையும் அதை உபயோகிக்கும் முறையையும் அதன் சக்திகளையும் விளக்க ஆயத்தமானான். அப்பொழுது அங்கு நாரத மகரிஷி பிரசன்னமாகி ஓர் எச்சரிக்கை செய்தார்.
இயற்கையின் வல்லமைகள் அனைத்தையும் மண்ணுலகவாசிகள் அறிந்தவர்கள் அல்லர். அப்படி அறிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. வலிமையற்ற மனிதன் ஒருவனிடம் இந்த அஸ்திர சாஸ்திரங்களின் வல்லமை விளக்கப்பட்டால் அவன் அவைகளை முறையாக கையாள இயலாமால் தவிப்பான். அல்லது அந்த சக்திகளை துஷ்பிரயோகம் செய்வான். தெய்வீக ஆயுதங்கள் மன சக்தியை அடிப்படையாகக் கொண்டவை. அவை மண்ணுலக்கு உரியவைகள் அல்ல. அந்த அஸ்திரத்தில் அமைந்திருக்கும் சக்தி அளப்பரியதாகும்.
அந்த ஆயுதங்களின் வேகத்தை தங்குவதற்கு ஏற்ற வலிமை மண்ணுலகில் இல்லை. வெறும் பயிற்சி முறையில் அவைகளை கையாண்டு பார்த்தாலும் மண்ணுலகம் தாங்காது. ஆகையால் தான் அவைகளின் பயிற்சி பெறுவதற்கு என்று அர்ஜுனன் மண்ணுலகில் இருந்து பிரித்தெடுத்து தேவேந்திரன் விண்ணுலகிற்கு அழைத்துச் சென்றான். இத்தகைய தெய்வீக அஸ்திரங்களுக்கு உரியவனாக அர்ஜுனன் ஒருவன் மட்டுமே உள்ளான். முற்றிலும் அவசியம் ஏற்பட்டாலொழிய அந்த அஸ்திரங்களை அவன் கையாளலாகாது. முற்றிலும் சுதாரிக்கக்கூடிய சாதாரண சந்தர்ப்பங்களில் அவைகளை பிரயோகிக்கும் எண்ணமே அர்ஜுனனின் உள்ளத்தில் உதயம் ஆகாது. அத்தகைய மன உறுதி படைத்தவன் அர்ஜுனன். ஆகையால் இந்த தெய்வீக அஸ்திரங்களை பற்றி பேச வேண்டாம் என்று அவர் நாரதர் எச்சரிக்கை செய்தார்.
பாண்டவர்கள் வனவாசத்தில் பிரவேசித்து பத்து ஆண்டுகள் ஆகியது. கஷ்ட நேரம் என கருதப்பட்ட இந்த பத்து ஆண்டு வனவாசத்தை பாண்டவர்கள் ஆத்ம பலத்தை பெருக்குவதற்கு நன்கு பயன்படுத்தி கொண்டார்கள். அதன் அறிகுறியாக பத்து ஆண்டுகள் விரைவாக சென்றது. பத்ரிகாஸ்ரமத்தின் மகிமையும் எழிலும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஆகையால் அந்த இடத்தை விட்டு காலி செய்துவிட்டு வேறு இடம் செல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை. ஆயினும் செய்து முடிக்க வேண்டிய ஏனைய முக்கியமான காரியங்கள் பாக்கி இருந்ததால் எஞ்சி இருக்கும் இரண்டு வருடங்களை போக்குவதற்கு அவர்கள் காம்யக வனத்திற்கு திரும்பிப் வந்தார்கள்.