காம்யக வனத்தில் பாண்டவர்கள் தங்கிய போது ஒருநாள் பீமன் அருகில் இருந்த வனத்திற்குள் வேட்டைக்கு சென்றான். காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அடர்ந்த அந்த பகுதிக்குள் கந்தர்வர்கள் சித்தர்கள் தேவ ரிஷிகள் அப்சரஸ்கள் மட்டுமே உலாவும் இடம் அது. காட்டிற்குள் மிகவும் ரம்யமாக இருந்ததால் பீமன் உற்சாகத்தோடு அங்கே சென்று விட்டான். அப்போது அவன் கண்ணில் ஒரு மிகப் பெரிய பாம்பு ஒன்று தென்பட்டது. பாம்பு பீமனை பார்த்ததும் கண் இமைக்கும் நேரத்தில் அது பீமனை தனது உடலால் சுற்றி இறுக்கியது. பலம் மிக்க பீமனால் அதனிடமிருந்து விடுபட முடியவில்லை. பீமன் அதிர்ச்சி அடைந்தான். அப்பாம்பு அவனைப் பிடித்துக் கொண்டதும் அவனிடத்தில் இருந்த வலிமை அனைத்தும் அவனை விட்டு போய் விட்ட அனுபவம் அவனுக்கு உண்டாகியது. நொடிப்பொழுதில் விவேகம் ஒன்று அவன் உள்ளத்தில் உதயமானது. உடல் வலிமை நிலையற்றது. உடல் வலிமையை சார்ந்திருக்க கூடாது என்று எண்ணினான். வலிமையை இழந்தாலும் தைரியத்தை பீமன் இழந்து விடவில்லை.
பாம்பின் வடிவில் இருக்கும் நீ யார் என்னை சுற்றி பிடித்துக் கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய். யுதிஷ்டிரனுடைய தம்பி பீமன் நான் என்று பாம்பிடம் கூறினான். அதற்கு மலைப்பாம்பு நான் மிகவும் பசியோடு இருக்கிறேன் உன்னை சாப்பிட விரும்பி உன்னை பிடித்தேன். ஆனால் உன்னை யாரென்று நீ அறிமுகப்படுத்தியதன் விளைவாக உன்னை சாப்பிட நான் தயங்குகிறேன். நான் நகுஷ மன்னன். இந்திர லோகத்தில் இந்திரனாக பதவி ஏற்றேன். அப்போது சொர்க்க வாசத்தில் மண்ணுலகில் நான் பெற்ற செல்வத்தை முன்னிட்டு எனக்கு கர்வம் உண்டாயிற்று. ஆகையால் அகத்திய மகரிஷி எனக்கு சாபமிட்டார். அவரிட்ட சாபத்தின்படி நான் மண்ணுலகில் நெடுங்காலம் மலைப் பாம்பாக வாழ்ந்திருக்க வேண்டும். அப்பொழுது யுதிஷ்டிரன் என்முன் வந்து என்னுடைய கேள்விகளுக்கு பதில் அளித்து சம்வாதம் செய்து வெற்றி பெறுவான். அதன் விளைவாக எனக்கு விமோசனம் கிடைக்கும். உன்னை நீ அறிமுகப்படுத்தியதன் வாயிலாக என்னுடைய பழைய சம்பவங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது என்று பாம்பு கூறியது.
பீமனை காணாமல் காட்டிற்குள் தேடி பாண்டவ சகோதரர்கள் ஆளுக்கு ஒரு பக்கம் சென்றார்கள். அப்பொழுது யுதிஷ்டிரன் பீமனை தேடிக்கொண்டு அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான். பீமன் மலைப்பாம்பிடம் அகப்பட்டு இருந்த காட்சியை பார்த்து அவன் திகைத்துப் போனான். எனினும் அதிவிரைவில் அவன் தன் மனதை தேற்றிக்கொண்டு அங்கு நிகழ்ந்தவற்றை விசாரித்தான். பாம்பு தன் வரலாற்றை முழுவதுமாக விளக்கியது. மலைப் பாம்பாக இருந்தது தன்னுடைய மூதாதையர் நகுஷன் என்பதையும் ஒரு சாபத்தின் விளைவாக இந்த நிலைக்கு அவன் வந்திருப்பதை அறிந்த யுதிஷ்டிரன் தன்னுடைய மூதாதையராகிய பாம்பின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினான். பிறகு இருவருக்கும் இடையிலான சம்பாஷணை தொடர்ந்தது.