வைஷ்ணவ யக்ஞம் இனிதாக அஸ்தினாபுரத்தில் நிறைவேறியது. யாகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அரசர்கள் அனைவரும் பரம திருப்தி அடைந்தனர். ஆயினும் இந்திரப்பிரஸ்தத்தில் யுதிஷ்டிரன் செய்த ராஜசூய யாகத்திற்கு இணையாகது என்பது வந்திருந்த அறிஞர்கள் கருந்தாக இருந்தது. வந்திருந்த மன்னர்கள் அனைவரும் முறைப்படி கௌரவிக்கப்பட்டு திருப்தியாக திருப்பி அனுப்பப்பட்டனர். யக்ஞம் சிறப்பாக நிறைவேறுவதற்கு கர்ணன் எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக இருந்த படியால் துரியோதனன் கர்ணனை மனமாற பாராட்டி தனது நன்றியை கூறினான். அப்போது கர்ணன் தன் உயிர் வாழ்ந்திருக்கும் காலம் எல்லாம் துரியோதனனுக்கு பணிவிடை செய்வேன் என்றும் அர்ஜுனனைக் கொல்லும் வரையில் தான் மது மாமிசம் அருந்த போவதில்லை என்று கர்ணன் விரதம் பூண்டான். இத்தீர்மானம் தக்க வேவுக்காரர்கள் மூலம் பாண்டவர்களுடைய காதுக்கு இச்செய்தி எட்டியது.
கர்ணன் மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய விரதம் எடுத்துக் கொண்டான். தன்னிடத்தில் இருப்பவற்றை யார் தானமாக கேட்டாலும் அதை அவர்களுக்கு அக்கணமே எடுத்துக் கொடுத்து விடுவேன் என்பது அப்பொழுது அவன் எடுத்துக்கொண்ட விரதம் ஆகும். அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் அவன் கொண்டிருந்த இந்த விரதமே கர்ணன் சிரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாகும்.
துர்வாச மகரிஷி அஸ்தினாபுரத்தில் துரியோதனனை வந்து சந்தித்தார். இந்த மகரிஷி பல ஆண்டுகளுக்கு முன்பு பாண்டவர்களின் தாயாகிய குந்திதேவி சிறுமியாய் இருந்த பொழுது நாம் விரும்பிய தேவதையை தன்னிடத்தில் ஆவாஹனம் பண்ணி கொள்ளும் சக்தி வாய்ந்த மந்திரத்தை உபதேசித்திருந்தார். இம்மகரிஷி 10000 சிஷ்யர்களுடன் அஸ்தினாபுரத்தில் துரியோதனனிடம் விருந்தோம்பலை எதிர்பார்த்து நின்றார். முன்கோபமே வடிவெடுத்த முனிவரை திருப்திபடுத்த துரியோதனன் விரும்பினான். அவரை திருப்திப்படுத்தவில்லை என்றால் அவர் கோபித்துகொண்டு யாரையும் சாபம் அளிக்கும் வல்லமை அவரிடம் இருந்தது. அவரிடம் இருக்கும் தெய்வீகத்தன்மையை துரியோதனன் நன்கு அறிந்திருந்தான். ஆகையால் மிகவும் ஜாக்கிரதையாக பக்தி பூர்வமாக துரியோதனன் அவருக்கு பணிவிடை பண்ணினான். துரியோதனன் புரிந்த பணிவிடைக்கு துர்வாச மகரிஷி பரம திருப்தி அடைந்தார். அவனுக்கு வேண்டிய வரத்தை கேட்கலாம் என்று துரியோதனனிடம் அவர் மகிழ்வுடன் கேட்டார். தனக்கு வாய்ந்த இந்த சந்தர்ப்பத்தை துரியோதனன் நன்கு பயன்படுத்திக் கொண்டான்.
தாங்கள் குருவம்சத்தின் ஒரு பகுதியாகிய கௌரவர்களிடம் தங்களின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டீர்கள். அதுபோல் காம்யக வனத்தில் இருக்கும் குரு வம்சத்தின் இன்னொரு பகுதியாக இருக்கும் பாண்டவர்களின் இருப்பிடம் செல்ல வேண்டும். அங்கு திரௌபதி எவ்வளவு பேர் வந்தாலும் அனைவருக்கும் உணவு கொடுத்து விருந்தோம்பல் செய்யும் சக்தியை பெற்றிருக்கின்றாள். பாண்டவர்கள் அனைவரும் நண்பகல் உணவு சாப்பிட்ட பின்பு அவர்களிடம் நீங்கள் உங்கள் விருந்தோம்பலை கேட்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான்.