பாண்டவ சகோதரர்கள் ஜயத்ரதனை கைது செய்து யுதிஷ்டிரனுடைய முன்னிலைக்கு அழைத்துச் சென்று என்ன தண்டனை அளிக்கலாம் என்று யுதிஷ்டிரனுடைய அனுமதியை நாடி நின்றனர். பீமன் ஜயத்ரதனை கொல்வதற்கு யுதிஷ்டிரன் அனுமதி கொடுக்குமாறு கேட்டான். அதற்கு யுதிஷ்டிரன் குற்றங்கள் பல ஜயத்ரதன் செய்திருக்கின்றான். எனினும் இவன் நமக்கு மைத்துனன் ஆகிறான். காந்தாரியின் கடைசி குழந்தையாகிய துஸ்ஸாலாவுக்கு இவன் கணவன். அந்த முறையை முன்னிட்டு இவனை மன்னித்து இவன் உயிரை காப்பாற்ற நாம் கடமைப்பட்டிருக்கிறோம் என்று கூறி அவனை விடுதலை செய்தான்.
ஜயத்ரதன் அவமானத்தால் தலையை தொங்க போட்டுக்கொண்டு தன்போக்கில் போனான். அவன் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிப் போகாமல் கங்கைக் கரையோரம் சென்று சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தான். நாட்கள் பல கழிந்து போயின. சிவபெருமானும் அவன் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் என கேட்டார். அதற்கு ஜயத்ரதன் வரும் காலத்தில் வரும் யுத்தத்தில் பாண்டவர்களை கொல்வதற்கு ஏற்ற வல்லமையை தனக்கு தர வேண்டும் என்று சிவபெருமானிடம் வரம் கேட்டான். அதற்கு சிவனார் பாண்டவர்களை கிருஷ்ணன் காப்பாற்றுகிறான் ஆகையால் அவர்களை வெல்ல யாராலும் முடியாது. உனக்கு நாம் ஒரு சிறிய உபகாரம் செய்ய முடியும். சிறிது நேரத்திற்கு அவர்களை சமாளிக்கும் திறமை உனக்கு வந்தமையும். அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாது என்று கூறிவிட்டார். சிறிதளவேனும் சிவபெருமான் தனது பிரார்த்தனைக்கு செவி சாய்த்தது குறித்து ஜயத்ரதன் மகிழ்ச்சி அடைந்தவனாய் கங்கை கரையில் இருந்து தனது நாட்டுக்கு புறப்பட்டு போனான்.
12 வருட வனவாசம் முடிவுறும் தருவாயில் இருந்தது. இன்னும் சில நாட்களில் அது முற்றுப் பெற்றுவிடும். அப்போது ஒருநாள் காம்யக வனத்தில் சென்று கொண்டிருந்த பிராமணன் வருவன் தன்னுடைய அரணிக்கட்டையை மானிடம் இழந்துவிட்டான். அரணிக்கட்டை மான் ஒன்றின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. பயந்து போன மான் ஓட்டம் பிடித்து வனத்திற்குள் சென்றது. ஏமாற்றமடைந்த பிராமணன் பாண்டவர்களிடம் ஓடி வந்து அந்த மானிடம் இருந்து அரணிக்கட்டையை மீட்டெடுத்து தரும்படி கேட்டுக்கொண்டார். அக்கணமே பாண்டவ சகோதரர்களும் அந்த மானை பின்தொடர்ந்து ஓடினர். அது அவர்களை வனத்திற்குள் நெடுந்தூரம் ஓடும்படி செய்து மாயமாய் மறைந்து போயிற்று. பசியாலும் தாகத்தாலும் சகோதரர்கள் வாடி போயினர். அனைவரும் ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தனர். பிராமணன் ஒருவனுக்கு நாம் உதவி பண்ண முடியாது போய்விட்டது. நாம் தர்மத்திலிருந்து பிசகியுள்ளோம் என்றான் சகோதரர்களில் ஒருவன்.
குறிப்பு – ஆதிகாலத்தில் யாகம் செய்யும் வேதப் பிராமணர்கள் அரணிக்கட்டை வைத்திருப்பார்கள். அரணிக்கட்டை என்பது இரண்டு கட்டைகள் இருக்கும். அதில் ஒரு கட்டையின் குழியில் இன்னொரு கட்டையை வைத்து தயிர் கடைவது போல கடைவார்கள். தீப்பொறி எழும். அந்த தீயை யாகத்திற்கு பயன்படுத்துவார்கள்.