பிருஹதஸ்வரர் என்னும் மாமுனிவர் வனவாசத்தில் இருந்த யுதிஷ்டிரனை பார்க்க காம்யக வனத்திற்கு வந்தார். யுதிஷ்டிரன் அவருக்குத் தக்க மரியாதையுடன் வழிபாடுகள் செய்து வரவேற்றான். சூதாட்டத்தில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக் கொண்ட மன்னர்களில் மிகவும் கடைபட்டவன் நான் தான் என்று முனிவரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். அதற்கு முனிவர் சூதாட்ட செயலில் இறங்கி தனக்குத் தானே கேடுகளை வரவழைத்துக்கொண்ட நளனுடைய நிலைமை இதைவிட பரிதாபகரமானது என்றார். பிருஹதஸ்வரர் முனிவர் கெட்டுப்போன நளமகாராஜன் பற்றியும் தமயந்தி மகாராணியை பற்றியும் அவர்களின் வரலாற்றை விரிவாக எடுத்து விளக்கி சொன்னார். பிறகு தன் சொந்த முயற்சியாலேயே நளன் ராஜ்யத்தை மீட்டெடுத்த வரலாற்றைப் பற்றியும் அவர் விளக்கினார். நளனுடைய வீழ்ச்சி கொடியதிலும் கொடியது. அத்தகைய நளனுக்கு விமோசனம் கிடைத்தது என்றால் தனக்கு ஏன் விமோசனம் கிடைக்காது என்று யுதிஷ்டிரன் யோசித்தான். பிருஹதஸ்வரர் நளனைப்பற்றி கூறிய கருத்துக்கள் யுதிஷ்டிரனுக்கு மிகவும் ஊக்கம் தந்தது. தனக்கும் தன் சகோதரர்களுக்கும் நல்ல காலம் வரும் காலத்தை ஆவலோடு எதிர்பார்த்தான். பிருஹதஸ்வரர் யுதிஷ்டிரனிடம் இருந்து விடைபெற்றார்.
அர்ஜுனன் தங்களை விட்டு பிரிந்து போய் நெடு நாட்கள் ஆயிற்று என்று பாண்டவ சகோதரர்கள் அவனைக் குறித்து ஏக்கம் கொண்டனர். அவன் எங்கே போயிருக்க கூடும் என்று அவர்கள் எண்ணிக்கொண்டு இருந்த போது இந்திரனால் அனுப்பப்பட்ட ரோமச மஹரிஷி பாண்டவர்கள் முன் தோன்றினார். தான் இந்திரலோகத்தில் சென்றிருந்த வரலாற்றை விளக்கினார் விண்ணுலகில் அர்ஜுனன் அடைந்து வந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் தெளிவாக விளக்கினார். அதைக்கேட்ட பாண்டவ சகோதரர்களுக்கு மட்டில்லா மகிழ்ச்சி உண்டாயிற்று. புதிய ஊக்கம் அவர்களிடத்தில் உருவெடுத்தது. நெடுநாள் தங்களை விட்டுப் பிரிந்து போயிருந்த சகோதரனைப் பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள அவர்கள் ஆவலுடன் ரோமச மஹரிஷியிடம் கேள்விகள் கேட்டனர். கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் விடை கொடுத்தார் ரோமச மஹரிஷி. இந்திரலோகத்தில் அர்ஜுனன் அடைந்து வந்த பயிற்சிகள் யாவும் பூர்த்தியானவுடன் அவன் திரும்பி தங்களுடன் வந்து சேர்வான். அதற்குள்ளாக நிலவுலகில் பாண்டவ சகோதரர்கள் தீர்த்த யாத்திரை செய்வது நன்மை பயக்கும் என்று விண்ணுலக வேந்தன் இந்திரன் சொல்லி அனுப்பிய செய்தியும் அவர்களுக்கு ரோமச மஹரிஷி கூறினார். தலயாத்திரை போகின்ற அவர்களுக்கு அரிய பெரிய மேலான கருத்துக்கள் உள்ளத்தில் இடம் பெறும் நல்ல எண்ணங்கள் உள்ளத்தை விட்டு அகன்று போவதில்லை. ஆகவே புண்ணிய ஷேத்திரங்கள் தீர்த்த யாத்திரை போகின்ற கருத்தை யுதிஷ்டிரன் மிகவும் வரவேற்றான்.
புண்ணிய பூமியாகிய பாரதத்தில் புண்ணிய க்ஷேத்திரங்கள் ஏராளமாக அமைந்திருக்கின்றன. முனிவர்கள் தவம் செய்த இடம். யோகம் செய்வதற்கு ஏதுவாக இருந்த தபோவனங்கள். ஆத்ம சாதனைகள் பல புரிந்து இறைவனை அடைவதற்கு பயன்பட்ட ஆசிரமங்கள் புண்ணிய நதிக்கரைகள் மலைகள் கோவில் ஆகிய இடங்களுக்கு பாண்டவ சகோதரர்கள் கடினமான விரதம் இருந்து பக்திபூர்வமாக தீர்த்த யாத்திரை செய்தார்கள்.