ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -9

நான்கு குழந்தைகளுக்கும் விஸ்ரவஸ் பெயர் வைத்தார். முதல் குழந்தை பத்து தலைகளுடன் பிறந்ததால் தசக்ரீவன் என்று பெயர் வைத்தார். அடுத்த குழந்தை மலை போல் பெரிய உருவத்துடன் இருந்ததால் அவனுக்கு கும்பகர்ணன் என்று பெயர் வைத்தார். மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு சூர்ப்பணகை என்று பெயர் வைத்தார். நான்காவது குழந்தைக்குக்கு விபீஷணன் என்று பெயர் வைத்தார் விஸ்ரவஸ். தசக்ரீவன் கொடூரமான சுபாவத்துடன் வளர்ந்தான். கும்பகர்ணன் மதம் பிடித்தவன் போல திரிந்து தர்ம வழியில் சென்ற மகரிஷிகளை தின்று வளர்ந்தான். விபீஷணன் தர்மாத்மாவாக தினமும் தர்மத்தை அனுசரித்து வளர்ந்தான்.

குபேரன் ஒரு முறை புஷ்பக விமானத்தில் தனது தந்தையைக் காண வந்தான். அவனுடைய தேஜஸைப் பார்த்த கைகயி தசக்ரீவனிடம் பேச ஆரம்பித்தாள். உனது தந்தையின் சகோதரனான அந்த குபேரனைப் பார். மூன்று உலகத்திற்கும் தனாதிபதியாக இருக்கிறார். அவரின் தேஜஸ் எப்படி இருக்கிறது என்று பார். அவரின் சகோதரனான உனது தந்தையைப் பார். இருவரும் ஒளிச் சுடராக இருக்கிறார்கள். தசக்ரீவா இவர்களைப் போலவே நீயும் மேன்மையடைய வேண்டும். நீ அளவில்லாத பலம் உடையவன். உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை. முயற்சி செய்து குபேரனுக்கு சமமானவன் என்றும் அனைவரும் பெருமைப்படும்படி செய் என்று கட்டளையிட்டாள். தாயின் இந்த வார்த்தையைக் கேட்ட தசக்ரீவன் குபேரன் மீது பொறாமை கொண்டு தாயே நான் உங்களுக்கு சத்யம் செய்து தருகிறேன். என் சகோதரன் குபேரனை விட மேன்மையானவன் ஆவேன். என் ஆற்றலினால் குபேரனையும் மிஞ்சுவேன். கவலையை விடுங்கள் இனி இந்த வருத்தம் உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிய தசக்ரீவன் தன் உடன் பிறந்த கும்பகர்ணன் விபீஷணனுடன் கடுமையாக தவம் செய்ய முடிவு செய்தான். தவத்தினால் நாம் விரும்பிய வரங்களைப் பெற்று தாயின் ஆசையை நிறைவேற்றி சுகமாக வாழலாம் என்று முடிவு செய்த மூவரும் கடும் விரதங்களோடு கோகர்ண ஆசிரமத்தை வந்து சேர்ந்தார்கள்.

தர்ம மார்கத்தை நன்றாக தெரிந்து கொண்டும் விதி முறைகளை கேட்டறிந்தும் மூவரும் தங்களது தவத்தை ஆரம்பித்தார்கள். அதன் படி கும்பகர்ணன் வெயில் காலத்தில் வெயிலின் மத்தியிலும் மழை நாட்களில் வீரஆசனம் போட்டு அமர்ந்து கொட்டும் மழையில் அசையாமல் மனதை ஒரு நிலைப்படுத்தி நின்றான். குளிர் காலத்தில் நீருக்குள் நின்று தவம் செய்தான். இது போல பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். தர்மாத்மாவான விபீஷணன் ஐயாயிரம் ஆண்டுகள் ஒரு காலில் நின்று தவம் செய்தான். இவன் விரதம் முடியும் காலத்தில் அப்சரப் பெண்கள் நடனமாடினார்கள். தேவர்கள் மகிழ்ந்து பூமாரி பொழிந்தார்கள். இதன் பின் ஐயாயிரம் வருடங்கள் சூரியனை உபாவாசித்து தலைக்கு மேல் கைகளைத் தூக்கியபடி நின்று தன் கொள்கையில் திடமாக இருந்து தவம் செய்தான். இவ்வாறு விபீஷணன் தவம் செய்து சொர்க்கத்தில் இருந்த தேவர்களை மகிழ்வித்தான். தசக்ரீவன் பத்தாயிரம் வருடங்களும் ஆகாரம் இன்றி தன் தலையிலேயே அக்னி வளர்த்து ஹோமம் செய்தான். ஒவ்வோரு ஆயிரம் வருடங்கள் முடிவில் தன்னுனைய பத்து தலைகளில் ஒவ்வொன்றாக வெட்டி ஹோம அக்னியில் போட்டு தவம் செய்தான். ஒன்பதாயிரம் வருடங்களில் அவனது ஒன்பது தலைகளையும் அக்னியில் சேர்ந்து விட்டான். பத்தாயிரம் வருடங்கள் ஓடி விட்டன. பத்தாயிரம் வருட முடிவில் மீதியிருந்த ஒரு தலையையும் வெட்டி அக்னி ஹோமத்தில் போட முற்பட்ட பொழுது பிரம்மா தேவர்கள் கூட்டத்தோடு அவர்கள் மூவருக்கும் காட்சி கொடுத்தார்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -8

ராமரிடம் அகத்தியர் தொடர்ந்து பேசினார். இது தான் ராமா ராட்சசர்கள் வளர்ந்த கதை அடுத்து ராவணன் பிறந்தது பற்றிச் சொல்கிறேன். அவன் மகன் இந்திரஜித்தின் சிறப்பையும் சொல்கிறேன் கேள். வெகு காலம் பாதாளத்தில் ஒளிந்து வாழ்ந்த சுமாலியும் மால்யவனும் விஷ்ணுவின் மேல் கொண்ட பயத்தால் அங்கேயே இருந்து விட்டார்கள். இலங்கை நகரத்தை தன் வசப்படுத்திக் கொண்ட குபேரன் தன் உறவினர்களுடன் அங்கு வசிக்கலானான். சில காலம் சென்றது. சுமாலி லட்சுமிக்கு இணையான அழகுடைய தனது மகளுடன் மெதுவாக இந்த பூலோகத்தை சுற்றிப் பார்க்க வந்தான். அப்போது குபேரன் புஷ்பக விமானத்தில் தன் தந்தையான விஸ்வராஸைக் காண்பதற்காக செல்வதைக் கண்டான். அமரர்களுக்கு இணையான தேஜசுடன் சுதந்திரமாக செல்லும் குபரனை நினைத்தபடியே தன் இருப்பிடத்திற்கு வந்தான் சுமாலி. இந்த கஷ்டத்திலிருந்து நாம் மீண்டு எப்படி குபேரனேப் போல நல்ல கதியை அடைவது என்று யோசிக்கலானான். தன் மகள் கைகயியை பார்த்து உனக்கு திருமணம் செய்து கொடுக்கும் வசதி எனக்கு இல்லை. என்னிடம் பயந்து கொண்டு யாருமே உன்னை வரன் கேட்டு வரவில்லை. லட்சுமி தேவி போல குணமும் அழகும் உனக்கு இருந்தும் உன்னை தகுந்த இடத்தில் திருமணம் முடித்துக் கொடுக்க முடியாமல் தவிக்கிறேன். பெண் மகவைப் பெற்ற எல்லோருக்கும் உள்ள கவலை தான் இது. நீ புலஸ்தியன் குலத்தில் பிறந்த குபேரனின் தந்தையான விஸ்ரவஸ் என்பவரிடம் நீயாகச் சென்று கேட்டு திருமணம் செய்து கொள். உனக்கு பிறக்கும் குழந்தைகள் மகா தேஜசுடன் வலிமையாக கம்பீரத்துடன் இந்த குபேரனுக்கு சற்றும் குறைவில்லாமல் புகழுடன் விளங்குவார்கள் என்றான். இதைக் கேட்ட பெண் தன் தந்தையிடம் உள்ள மரியாதை காரணமாக தானே விஸ்ரவஸ் இருக்கும் இடம் நாடிச் சென்றாள்.

விஸ்ரவஸ் தவம் செய்து கொண்டிருந்தார். புலஸ்தியரின் குமரனான விஸ்ரவஸ் யாகம் செய்து மூன்று அக்னிகளுக்கு மேலாக நான்காவது அக்னி போல தைஜசுடன் இருப்பதைக் கண்டாள். நேரம் காலம் எதுவும் யோசிக்காமல் பயங்கரமான அந்த வேளையில் தந்தை சொன்னது ஒன்றே மனதில் மேலோங்கி இருக்க அவரருகில் சென்று நின்றாள். பூர்ண சந்திரன் போன்ற அழகிய முகம் உடைய பெண் கால் கட்டை விரலால் பூமியில் கோலம் போட்டபடி நின்றவளைப் பார்த்த விஸ்ரவஸ் அவள் வந்த நோக்கத்தை அறிந்து கொண்டு அவளை யார் என்று விசாரித்தார். பெண்ணே நீ யாருடைய மகள்? இங்கு ஏன் வந்தாய்? என்ன காரியம்? விவரமாக சொல் என்றார். கை கூப்பியபடி அவள் பதில் சொன்னாள். பிரம்ம ரிஷியே நான் எனது தந்தையின் கட்டளைப்படி இங்கு வந்திருக்கிறேன். எனது பெயர் கைகயி. உங்கள் தவ வலிமையால் மற்றவைகளை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள் என்றாள். விஸ்ரவஸ் சிறிது நேரம் தியானம் செய்து அனைத்தையும் தெரிந்து கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தார். நீ இங்கு வந்ததும் உனது குல விருந்திக்காகத் தான் வந்திருக்கிறாய் என்பதை அப்போதே புரிந்து கொண்டேன். இப்போது எனது தியானத்தில் மீதி அனைத்தையும் தெரிந்து கொண்டேன். இன்றைய நாள் மற்றும் நேரத்தை கணக்கிட்டுப் பார்த்தால் உனக்கு பிறக்கும் குழந்தைகள் பயங்கரமான வடிவமும் பயங்கர குணமும் செயலும் கொண்ட ராட்சசர்கள் பிறப்பார்கள் உனக்கு சம்மதமா என்று கேட்டார். அதற்கு அவள் இது போன்ற புத்திரர்கள் எனக்கு வேண்டாம். உங்களைப் போன்ற பிரம்ம ரிஷி போல் புத்திரர்கள் வேண்டும் என்று வேண்டினாள். இதைக் கேட்டு விஸ்ரவஸ் உனக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள் அவர்களில் கடைசி மகன் மட்டுமே எனது குலம் விளங்கச் செய்யும் தர்மாத்மாவாக இருப்பான் என்று அருளி அவளை ஏற்றுக் கொண்டார்.

விஸ்வரஸ் கைகதி தம்பதிகளுக்கு சிறிது காலத்திற்கு பிறகு தாமிர நிறம் உடைய உதடுகளும் பெரிய வாயுடனும் பத்து தலைகளுடனும் இருபது கைகளுடனும் தலை மயிர் நெருப்பு போல பிரகாசிக்க முதல் மகன் பிறந்தான். அவன் பிறந்த சமயம் நெருப்பை உமிழும் குள்ள நரிகள் அங்கு திரிந்தன. சூரியன் பிரகாசம் இன்றி காணப்பட்டது. கர்ண கொடூரமாக மேகம் இடித்தது. 2 வதாக பெரிய பற்களுடன் நீல மலை போன்ற உருவத்துடன் ஒரு ராட்சசன் பிறந்தான். மூன்றாவதாக விகாரமான முகத்துடன் ஒரு ராட்சசி பிறந்தாள். நான்காவதாக ஒரு குழந்தை அழகுடன் பிறந்தது. அப்போது ஆகாயத்தில் தேவர்கள் துந்துபி முழங்கி கொண்டாடினார்கள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -7

விஷ்ணு தேவர்களுக்கு துணையாக வருவார் என்று தெரிந்தும் தங்களது பலமும் கர்வமும் ராட்சசர்களை தேவலோகத்திற்கு அளவற்ற தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்ல வைத்தது. மாலியும் சுமாலியும் மால்யவானும் படைக்குத் தலைமை தாங்கி முன்னால் சென்றனர். வெற்றி நிச்சயம் என்ற கோஷம் செய்து கொண்டு நம்பிக்கையோடு மால்யவானை தலைவனாகக் கொண்டு ராட்சச வீரர்கள் தேவலோகத்திற்குள் சென்றனர். ராட்சசர்கள் கோலாகலமாக வருவதை பார்த்த தேவ தூதர்கள் ஓடிச் சென்று விஷ்ணுவிடம் தெரிவித்தனர். விஷ்ணு ஆயிரம் சூரியன் போன்று ஒளி வீசிய கவசத்தை அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் மலை போன்ற சுபர்ணன் எனப்படும் கருடனின் மேல் ஏறி ராட்சசர்களை வதம் செய்யப் புறப்பட்டார். தேவரிஷிகள் கந்தர்வர்கள் யட்சர்களும் சேர்ந்து கொண்டு விஷ்ணுவை துதித்து பாடினார்கள். விஷ்ணு தன் பாஞ்ச ஜன்யத்தை எடுத்து ஊதி ஒலி எழுப்பி யுத்தம் செய்ய ஆரம்பித்தார். விஷ்ணுவின் ஆயுதங்களுக்கு ராட்சசர்கள் சளைக்காமல் பதில் அடி கொடுத்தனர். நெருப்பு பரவுவது போல தாக்கும் அஸ்திரங்களை பிரயோகித்தனர். விஷ்ணு ராட்சச படைகளுடன் யுத்தம் செய்வதை பார்க்க நீல மலையிலிருந்து கற்கள் உருண்டு கீழே விழுவது போல இருந்தது. மலை போன்ற சரீரம் உடைய ராட்சசர்கள் அந்த மலைகளில் இருந்து வரும் கற்களில் அடிபட்டு விழுந்ததைப் போல அடுத்தடுத்து விழுந்தார்கள். விஷ்ணுவின் சங்கு நாதமா அல்லது அவரது அம்பிலிருந்து எழும் நாணின் சத்தமா இல்லை இறந்து விழும் ராட்சசர்களின் அலரல் சத்தமா என்று ஒன்றும் புரியாமல் ராட்சசர்கள் குழம்பி நின்றார்கள்.

விஷ்ணு செலுத்திய பாணங்கள் ராட்சசர்களை விரட்டி அடித்தது. ஆயிரக்கணக்கான ராட்சசர்கள் மடிந்து விழவும் மாலி தானே முன் நின்று விஷ்ணுவை எதிர்க்க ஆரம்பித்தான். மாலியைக் கண்ட விஷ்ணு தன் வில்லை எடுத்து அம்புகளால் அவனைத் தாக்கி தனது சக்கரத்தை எறிந்தார். சூரிய மண்டலம் போல பிரகாசித்த அந்த சக்கரம் மாலியின் தலையை துண்டித்து விழச் செய்தது. மாலி இறந்ததும் சுமாலி விஷ்ணுவை எதிர்க்க ஆரம்பித்தான். வெறி பிடித்தவன் போல யுத்தம் செய்த சுமாலி இறுதியில் விஷ்ணுவிடம் தோல்வி அடைந்து பின் வாங்கினான். பின் வாங்கிய ராட்சசர் படைகளை விஷ்ணு துரத்தி துரத்தி அழித்தார். மாலி விஷ்ணுவால் தாக்கப்பட்டு அழிந்தான் சுமாலி தோல்வி அடைந்து இலங்கைக்கு ஓடி விட்டான் என்ற வருத்தத்துடன் தன் இருப்பிடம் சென்ற மால்யவான் மீண்டும் போர்க்களம் வந்து சேர்ந்தான்.

விஷ்ணுவாகிய நீங்கள் யுத்த தர்மத்தை மீறி விட்டீர்கள். யுத்தம் செய்ய விருப்பமின்றி பயந்து சென்ற என் வீரர்களை தாக்கி விட்டீர்கள். இதோ நான் தயாராக வந்திருக்கிறேன். என் மேல் உங்கள் பலத்தை காட்டுங்கள் என்றான். அதற்கு விஷ்ணு தேவர்களுக்கு நான் அபயம் அளித்திருக்கிறேன். அவர்கள் உங்களிடம் பயந்து நடுங்குகிறார்கள். ராட்சசர்களை அழித்து தேவர்களை காப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறேன். அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் நான் அங்கு உங்களைத் தேடி வந்து அழிப்பேன் என்றார். இந்த வார்த்தைகளால் கோபமடைந்த மால்யவான் தன் மணியோசையுடைய சக்தி ஆயுதத்தை விஷ்ணுவின் மீது எறிந்தான். ஆயுதம் விஷ்ணுவின் மார்பில் உரசியது. அப்போது தன் முஷ்டியினால் அவரது வாகனமான கருடனை தாக்கினான் மால்யவன். கருடன் மகா கோபம் கொண்டு இறக்கைகளை அடித்துக் கொண்டு வேகமாக பறந்தது. இறக்கையில் கிளம்பிய காற்று பெரும் புயல் காற்றில் உலர்ந்த இலைகள் பறப்பது போல ராட்சசர்களைத் தூக்கி அடித்தது. கருடனின் இறக்கைகள் அடித்து உண்டாக்கிய பெரும் காற்றில் மால்யவான் வீசியெறியப்பட்டு இலங்கையை வந்தடைந்தான். தோல்வி அடைந்து விட்டோம் என்ற அவமானம் வெட்கம் அவனைப் பிடுங்கித் தின்றது. விஷ்ணுவின் மேல் வந்த பயத்தினால் இனி இலங்கையில் இருக்க முடியாது என்ற நிலையில் மால்யவன் சுமாலி இருவரும் இலங்கையில் இருக்கும் அனைவருடனும் அந்த நகரத்தை காலி செய்து கொண்டு பாதாளம் சென்று விட்டார்கள். ராமா நீ வதம் செய்த ராவணனை விடவும் இவர்கள் பலம் மிகுந்தவர்கள். சுமாலி, மால்யவான், மாலி இவர்கள் ராவணனின் முன்னோர்கள். இப்படித் தான் இலங்கை நகரம் உருவாகி பின்பு காலியானது என்று ராமரிடம் கூறினார் அகத்தியர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -6

ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் இந்த மூன்று ராட்சசர்களால் வதைக்கப்பட்டார்கள். இதனால் வருந்தி பயந்து நடுங்கி ரிஷிகளும் முனிவர்களும் தேவர்களும் சிவனை சரணடைந்தனர். பிரம்மா கொடுத்த வரத்தினால் கர்வம் தலைக்கேறி சுகேசனின் மூன்று மகன்களும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள். யாரரென்றும் பார்க்காமல் எல்லோரையும் வம்புக்கு இழுத்து அடித்துக் கொல்கிறார்கள். வருபவர்களுக்கு அடைக்கலமாக இருக்கும் எங்களின் ஆசிரமங்கள் இப்பொழுது யாரையும் காப்பாற்ற இயலாத இடமாகி விட்டது. நான் தான் விஷ்ணு நான் தான் ருத்ரன் நான் பிரம்மா என்றும் யமன் வருணன் சந்திரன் சூரியன் அனைவரும் நாங்களே என்று சொல்லிக் கொண்டு மாலி சுமாலி மால்யவான் மூவரும் அட்டகாசம் செய்கிறார்கள். இறைவனே பயத்தில் வாடும் எங்களுக்கு அபயம் தர வேண்டும். தேவர்களுக்கு எதிரிகளான இவர்களை அழிக்க தகுந்த உருவம் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று வேண்டினார்கள். அதற்கு சிவன் என்னால் நேரடியாக அவர்களை வதம் செய்ய முடியாது. அவர்கள் அப்படிப்பட்ட வரத்தை தானமாக பெற்றிருக்கிறார்கள். அவர்களை அழிக்க உங்களுக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன். நீங்கள் நேராக விஷ்ணுவிடம் செல்லுங்கள். அவர் தான் இந்த ராட்சசர்களைக் அழிக்க சக்தி வாய்ந்தவர். ஏதாவது செய்து உங்களுக்கு உதவி செய்வார் என்று சொல்லி அனுப்பி வைத்தார். சிவனை வாழ்த்தி தேவர்கள் கூட்டம் விஷ்ணு இருந்த இடம் வந்து சேர்ந்தனர்.

விஷ்ணுவை வணங்கி மூன்று ராட்சசர்களிடம் தாங்கள் படும் துன்பங்களை விவரித்து எங்கள் நன்மைக்காக அவர்களை அழித்து விடுங்கள் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்ட விஷ்ணு அனைவருக்கும் அபயம் அளிக்கிறேன் என்றார். சுகேசனும் அவனுடைய புத்திரர்களும் பிரம்மாவிடம் வரம் பெற்றதும் அவர்கள் செய்யும் அட்டகாசங்களை நான் அறிவேன். எல்லையை மீறும் அவர்களின் கர்வத்தை அடக்குவேன். ரிஷிகளே முனிவர்களே தேவர்களே கவலையின்றி போய் வாருங்கள் என்று விஷ்ணு சொல்லி அனுப்பினார். அவர்களும் விஷ்ணுவை புகழ்ந்தபடி திரும்பிச் சென்றனர். மூன்று ராட்சசர்களில் ஒருவனான மால்யவான் நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்டான். உடன் பிறந்த மற்ற இருவரிடமும் இது பற்றி விவாதித்தான். தேவர்களும் ரிஷிகளும் சிவனிடமும் விஷ்ணுவிடமும் எங்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று சொல்லி அழுது நம்மை அழிக்கச் சொல்லி வேண்டியிருக்கிறார்கள். அனைவரும் வேண்டிக் கொண்டதால் நம்மை அழிப்பதாக விஷ்ணு சொல்லியிருக்கிறார். இதனால் இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும் என்றான். மூவரும் சேர்ந்து ஆலோசித்தார்கள்

மாலியும் சுமாலியும் மால்யவானுக்கு மந்த்ராலோசனை சொன்னார்கள். நமது விருப்பம் போல ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெற்றோம். அதைக் காப்பாற்றியும் வருகிறோம். வியாதியில்லாத ஆரோக்யமான வாழ்வும் பெற்றோம். தேவர்களை அடக்கி நமது வலிமையினால் வெற்றி கொண்டோம். அதனால் நமக்கு மரண பயம் கிடையாது. விஷ்ணுவினால் மட்டுமல்ல ருத்ரனோ இந்திரனோ யமனோ யாராக இருந்தாலும் நம் முன்னால் யுத்த பூமியில் நிற்க கூட பயப்படுவார்கள். விஷ்ணுவுக்கு நம்மிடம் பகை எதுவும் இல்லை. இந்த தேவர்கள் விஷ்ணுவின் மனதை கலைத்திருக்கின்றனர். அதனால் நாம் உடனே அந்த தேவர்களையே அடிப்போம் என்று முடிவு செய்தார்கள். உடனே எல்லா வீரர்களையும் திரட்டி பெரும் சேனையோடு கோஷம் செய்தபடி இலங்கையை விட்டு கிளம்பி தேவ லோகத்தை முற்றுகையிட்டனர். ராட்சசர்களை இந்த உலகத்தில் இல்லாமல் செய்ய வேண்டும் இதற்கு விஷ்ணு நமக்கு துணை இருப்பார் என்று தேவர்கள் முடிவு செய்து தாங்களும் யுத்தத்திற்கு தயாரானார்கள். தேவலோகம் சென்று சேரும் முன்னதாகவே யுத்தம் ஆரம்பித்தது. யுத்தத்தினால் மலைகள் அசைந்து ஆடின. மேகம் இடி இடிப்பது போல முழக்கம் செய்தது. பயங்கரமான தோற்றத்துடன் குள்ள நரிகள் ஊளையிட்டன. நெருப்பை உமிழும் முகத்தோடு கழுகுகள் வட்டமிட்டன. மின்மினி பூச்சிகள் வட்டமாக சக்கரம் போல ராட்சசர்களின் தலை மேல் ஆகாயத்தில் கூடின. பலவிதமான அபசகுனங்கள் ராட்சசர்களுக்கு தெரிந்தது இவைகளை அலட்சியம் செய்த ராட்சசர்கள் மேலும் தேவலோகத்திற்கு மேலும் முன்னேறிச் சென்றனர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -5

சுகேசனுக்கு தேவவதியை விதி முறைப்படி கந்தர்வன் திருமணம் செய்து கொடுத்தான். சுகேசன் வரங்களும் செல்வங்களும் பெற்று மூவுலகிலும் அதிக மதிப்புடன் இருந்ததால் தேவவதி அவனுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள். தேவவதிக்கு மால்யவான் சுமாலி மாலி மூன்று பிள்ளைகள் பிறந்தனர். மூவரும் பலசாலிகளாக வளர்ந்தனர். அவர்கள் மூவரும் தந்தையைப் போலவே வரங்களும் செல்வங்களும் பெறுவதற்கு கடினமான நியமங்களை ஏற்று தவம் செய்தனர். அவர்களின் தவம் மூவுலகையும் தகிக்கச் செய்தது. இதனால் தேவ ராட்சச மனிதர்கள் யாவரும் பாதிக்கப்பட்டனர். பிரம்மா அவர்களின் முன்பு தோன்றி என்ன வரம் வேண்டும் கேளுங்கள் என்றார். சிரஞ்சீவியாக இருந்து நெடுநாள் வாழ வேண்டும். எதிரிகளை எப்பொழுதும் வெற்றி பெற வேண்டும். விஷ்ணுவுக்கு நிகராக எதையும் சாதிக்கும் வல்லமை உடையவர்களாக வேண்டும் என்று வரம் கேட்டார்கள். பிரம்மாவும் சம்மதித்து வரமளித்துச் சென்றார். மூவருக்கும் வரம் கிடைத்ததும் இவர்கள் இரவு பகல் இன்றி தேவர்களை வாட்ட ஆரம்பித்தனர். இவர்களைக் கண்டு ரிஷிகளும் சாரணர்களும் தேவலோக வாசிகளும் பயந்து நடுங்கினர். தங்களைக் காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என்று தவித்தனர். அந்த சமயம் விஸ்வகர்மாவை மூவரும் சந்தித்தார்கள். சிற்பிகளுக்குள் சிறந்தவர் நீங்கள். எங்களுக்கு வீடுகள் கட்டித் தர வேண்டும். தற்சமயம் பலத்துடன் செல்வாக்குடன் இருப்பதால் எங்களுக்கு தகுதியாக நகரத்தை அமைத்து அதில் வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.

தேவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தாங்கள் அவர்களுக்கு நகரத்தை நிர்மாணித்து வீடுகள் கட்டிக் கொடுத்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களுக்கும் அது போல நகரத்தை நிர்மாணித்து வீடுகள் கட்டிக் கொடுங்கள் என்றார்கள். விஸ்வகர்மாவும் சமுத்திரக் கரையில் இந்திரனுடைய அமராவதி நகரத்திற்கு இணையாக கடல் நான்கு புறமும் சூழ்ந்திருந்த இடத்தில் த்ரிகூட மலையின் சிகரத்தையடுத்த சுஷேண மலையின் மேல் நகரம் அமைத்துக் கொடுத்தார். நகரத்திற்குள் ஆந்தைகள் கூட நுழையாதபடி பாதுகாப்பாகவும் செல்வச் செழிப்புடனும் வீடுகளை கட்டினார். மூவரிடமும் வந்த விஸ்வகர்மா இலங்கை என்ற இந்த நகரை நிர்மாணித்து விட்டேன் இதில் நீங்கள் வசிக்கலாம். இதுவும் இந்திரனின் அமராவதிக்கு இணையானதே என்றார். நூற்றுக் கணக்கான மாளிகைகள் உறுதியாக அமைக்கப்பட்டு கம்பீரமாக நின்றன. மூவரும் இந்த நகரத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டனர். செல்வச் செழிப்புடன் அனைத்து வசதிகளுடன் இருந்த இலங்கையின் கோட்டையைக் கண்டு அனைவரும் மலைத்து நின்றார்கள். இலங்கை நகரத்தை மூவரும் தலைமை நகரமாகக் கொண்டு தங்களைச் சார்ந்த ராட்சசர்களுடன் வசிக்க ஆரம்பித்தனர்.

இலங்கை நகரின் அழகைப் பார்க்க நர்மதா என்ற கந்தர்வ பெண் அங்கு வந்தாள். அவளுக்கு ஹ்ரீ ஸ்ரீ கீர்த்தி மூன்று பெண்கள் இருந்தார்கள். மூவரும் ஒத்த அழகும் தேஜஸும் உடையவர்கள். இவர்களை இலங்கைக்கு தலைவர்களாக இருந்த மால்யவான் சுமாலி மாலி என்ற மூன்று ராட்சசர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தாள். மூவரும் மனைவியருடன் சுகமாக இருந்தனர். முதல் ராட்சசனான மால்யவனுக்கு வஜ்ர முஷ்டி, விரூபாக்ஷன், துர்முகன், சப்தகர்னோ, யக்ஞ கோபன், மதோன்மத்தன் என்ற பிள்ளைகளும் அனலா என்ற ஒரு பெண்ணும் பிறந்தார்கள். 2 வது ராட்சசனான சுமாலிக்கு பிரஹஸ்தன், அகம்பனன், விகடன், கால கார்முகன், துர்ம்ராக்ஷன், தண்டன், சுபார்ஸ்வன், ஸம்ஹ்ராதி, பிரகஸன், பாஸ கர்ணன் என்று பிள்ளைகளும் ராகா, புஷ்போத்கடா, கைகயி கும்பீனஸீ என்ற பெண்களும் பிறந்தார்கள். 3 வது ராட்சசனான மாலிக்கு அனிலன், அனலன், ஹரன், ஸம்பாதி என்ற பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்கள் அனைவரும் வளர்ந்ததும் இந்திரனையும் ரிஷிகளையும் நாகர்களையும் யக்ஷர்களையும் துன்புறுத்துவதை விளையாட்டாகக் கொண்டனர். இதற்கு அவர்களின் தந்தையும் உதவியாக இருந்து மகிழ்ந்தார்கள். இவர்களின் பலமும் வீர்யமும் அவர்கள் கண்களை மறைத்து அகங்காரத்தினால் அலைந்தார்கள். காற்றைப் போல உலகை சுற்றி வந்து காலனைப் போல் யுத்தம் செய்தார்கள். முனிவர்கள் ரிஷிகள் செய்யும் யாக காரியங்களைத் தடுத்து பெரும் மகிழ்ச்சியடைந்தவர்களாக திரிந்தனர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -4

ராமர் அகத்தியர் பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் நிறுத்தி ஒரு கேள்வி கேட்டார். ராட்சசர்கள் இலங்கைக்கு எப்பொழுது வந்தார்கள்? ராவணன் வருவதற்கு முன்பே இலங்கை இருந்தது என்பது இப்பொழுது தாங்கள் சொல்லி தான் தெரியும். புலஸ்திய வம்சத்தில் தான் ராட்சசர்கள் தோன்றினார்கள் என்பது கேள்விப் பட்டிருக்கிறோம். பிரகலாதன் விகடன் ராவணன் கும்பகர்ணன் ராவண புத்திரர்களை விட இவர்களது முன்னோர் பலசாலிகளாக இருந்தார்களா? இவர்களுக்கு முன்னோர் யார்? அவர்கள் எப்படி தோன்றினார்கள்? விஷ்ணுவிற்கு பயந்து எதனால் இலங்கையை விட்டு ஓடினார்கள் விவரமாக சொல்லுங்கள் என்று கேட்டார். ராமரின் கேள்விக்கு அகஸ்தியர் தொடர்ந்து பதில் கூறினார்.

பிரம்மா உலகத்தை படைக்க ஆரம்பித்த பொழுது தண்ணீரைப் படைத்தார். தண்ணீரில் தோன்றி வாழும் உயிரினத்தையும் அதற்கு அனுசரணையாக மற்ற ஜீவராசிகளையும் படைத்தார். இந்த ஜீவ ராசிகள் தங்களை படைத்தவரை வணங்கி நின்றன. பசி தாகம் ஏற்பட்டால் நாங்கள் என்ன செய்வோம் என்று அந்த ஜீவராசிகள் கேட்டன. பிரம்மா சிரித்துக் கொண்டே உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து என்ன செய்வீர்கள் என்று கேட்டார். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்று சிலரும் யாகம் செய்வோம் என்று சிலரும் பதில் கூறினார்கள். எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்று சொன்னவர்கள் ராட்சசர்களாகவும் யாகம் செய்கிறோம் என்று சொன்னவர்கள் யட்சர்கள் ஆவீர்கள் என்றார் பிரம்மா. எங்களை நாங்களே காப்பாற்றிக் கொள்வோம் என்ற குழுவில் இருந்தவர்களில் ஹேதி ப்ரஹேதி என்ற இருவர் ராட்சசர்களின் தலைவர்கள் ஆனார்கள். ப்ரஹேதி என்பவன் வனம் சென்று தவம் செய்தான். ஹேதி என்பவன் மணந்து கொள்ள ஒரு பெண்ணைத் தேடி அலைந்தான். இறுதியில் காலனின் சகோதரி பயா என்பவளின் தோற்றம் மிகவும் பயங்கரமாக இருந்தது இருந்தாலும் அவளை மணந்து கொண்டான் ஹேதி.

இருவருக்கும் வித்யுத்கேசன் என்ற மகன் பிறந்தான். அவன் பெயரும் புகழும் பெற்று வளர்ந்தான். அவன் பகல் நேர வெயில் போல் மிகவும் பிரகாசமாக தேஜஸோடு இருந்தான். அவன் பெரியவன் ஆனதும் அவனுக்கு ராட்சசி பௌலோமி என்பவளை திருமணம் செய்து வைத்தார் அவனது தந்தை. சிறிது காலம் சென்றது. பௌலோமிக்கு அழகான குழந்தை பிறந்தது. அவனுக்கு சுகேசன் என்று பெயரிட்டார்கள். குழந்தையின் குரல் இடி இடிப்பது போல இருந்தது. ஒரு சமயம் குழந்தை அழுதது. குழந்தையை கவனிக்காமல் அந்த ராட்சசி தன் கணவனுடன் பேசிக் கொண்டிந்தாள். அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த பார்வதி பரமேஸ்வன் இதனைக் கேட்டனர். பார்வதி கருணையுடன் குழந்தையை பார்க்கவும் அவன் உடனடியாக வளர்ந்து பெரியவனாகி விட்டான். பரமேஸெவரன் பார்வதியை வணங்கி நின்றான் அவன். பார்வதியின் வேண்டு கோளுக்கிணங்க பரமேஸ்வன் அவனை அமரனாக்கி அந்த ராட்சசனுக்கு ஒரு ஊரையும் கொடுத்தார். பரமேஸ்வரனின் அருளைப் பெற்ற அந்த குழந்தைக்கு பார்வதியும் ஒரு வரம் கொடுத்தாள். அவனது குலத்தினர் கர்ப்பமடைந்த உடனேயே பிரசவித்து குழந்தை பிறந்து சிறிது காலத்திலேயே வளர்ந்து பெரியவர்கள் ஆவார்கள் என்ற வரத்தை கொடுத்தாள். சுகேசன் என்ற அந்த ராட்சசன் தனக்கு கிடைத்த வரத்தினால் கர்வம் அடைந்தான். தன் விருப்பம் போல சுற்றித் திரிந்தான். செல்வமும் சேர இந்திரனை போல் வாழ்ந்தான். சுகேசன் என்ற ராட்சசன் பரமேஸ்வரன் பார்வதியால் வரங்கள் கிடைக்கப் பெற்று இந்திரனைப் போல் இருப்பதைக் கண்ட க்ராமணீ என்ற கந்தர்வன் தனது இரண்டாவது மகளான தேவவதியை மணம் செய்து கொடுக்க முன் வந்தான். அந்த பெண் ரூபத்தில் மற்றொரு லட்சுமி போல இருந்தாள்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -3

புலஸ்தியரின் மகனான விஸ்ரவஸ் சத்யவானாக சீலனாக சாந்த குணத்துடன் வாழ்ந்து வந்தான். இதையறிந்த பரத்வாஜர் என்னும் முனிவர் தன் மகள் தேவ வர்ணினி என்பவளை மணம் செய்து கொடுத்தார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. எல்லா விதமான பிரம்ம குணங்களும் நிறைந்த குழந்தையைக் கண்டு புலத்தியர் மிகவும் மகிழ்ந்தார். நன்மை தரும் விதமான புத்தி இயல்பாகவே உடையவனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். தேவ ரிஷிகளுடன் கலந்து ஆலோசித்து குழந்தைக்கு வைஸ்ரவனன் என்ற பெயர் வைத்த புலத்தியர் இவனும் தந்தையைப் போலவே தவ சீலனாக இருப்பான் என்று ஆசிர்வதித்தார். வைஸ்ரவன் வளர்ந்து பெரியவன் ஆனான். உயர்ந்த தர்மம் எதுவோ அதை கடைபிடிக்க வேண்டும் என்று தீர்மானித்து கடும் தவம் செய்து வந்தான். உக்ரமான விரதங்களை சங்கல்பம் செய்து கொண்டு ஆயிரம் வருடங்கள் தவம் செய்தான். சில நாட்கள் தண்ணீர் மட்டுமே உணவாகவும் பின் காற்றை மட்டும் உணவாகவும் பின் அதுவும் இல்லாமல் ஆகாரமே இல்லாமல் என்று ஆயிரம் வருடங்கள் செய்த தவம் ஒரு வருடம் போல சென்றது.

வைஸ்ரவனின் ஆயிரம் வருட தவத்தில் மிகவும் மகிழ்ந்த பிரம்மா அவனுக்கு தரிசனம் கொடுத்தார். உன் தவச் சிறப்பைக் கண்டு மெச்சுகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள் என்றார். பிரம்மாவை எதிரில் கண்ட வைஸ்ரவணன் நான் லோக பாலனாக ஆக வேண்டும். செல்வத்தைக் காப்பாற்றுபவனாக உயர்ந்த பதவி வேண்டும் என்றான். பிரம்மாவும் அப்படியே ஆகட்டும் நானே நான்காவது லோக பாலனை நியமிக்க எண்ணியிருந்தேன். இந்திரன் வருணன் யமன் இவர்களுக்கு சமமான அந்தஸ்தை பெறுவாய் என்று ஆசிர்வதித்து செல்வத்துக்கு அதிபதியான தனாதிபதி (தனத்தின் அதிபதி) என்ற பதவியை ஏற்றுக் கொள். இந்திரன் வருணன் யமன் குபேரன் என்ற நால்வரும் லோக பாலர்களாக விளங்குவீர்கள் என்றார். பிரம்மா வைஸ்ரவனுக்கு சூரியன் போல பிரகாசமான புஷ்பக விமானத்தை பரிசாக அளித்தார். இது உனக்கு வாகனமாக இருக்கட்டும் என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றுச் சென்றார்.

வைஸ்ரவனன் தனது தந்தையான விஸ்ரவஸ்யை வந்து வணங்கி எனக்கு தேவையான வரங்களை பிரம்மாவிடம் கேட்டு பெற்றுக் கொண்டேன். பிரம்மா என்னை தனாதிபதி ஆக்கி விட்டார். நான் வசிக்க தகுந்த இடமாக ஒன்று சொல்லுங்கள். அங்கு எந்த பிராணிக்கும் எந்த விதமான தொந்தரவும் ஏற்படக் கூடாது என்றான். விஸ்ரவஸ் சற்று யோசித்து விட்டு தென் சமுத்திரக் கரையில் திரிகூடம் என்று ஒரு பர்வதம் உள்ளது. அதன் மேல் விசாலமாக இந்திரனின் நகரம் போலவே இலங்கை என்ற நகரம் ரம்யமாக அமைந்துள்ளது. தேவலோகத்து விஸ்வகர்மா இந்திரனுக்கு அமராவதியை கட்டிக் கொடுத்தது போல இதனை ராட்சசர்களுக்கு என்று கட்டியிருக்கிறார். தங்கத்தால் செய்யப்பட்ட தூண்கள் தங்கத்தில் வைடூரியம் இழைத்து செய்யப்பட்ட தோரணங்கள் என்று செல்வச் செழிப்புடன் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்ட நகரம் அது. இந்த இலங்கை நகரம் நீ வசிக்க ஏற்றது. அங்கிருந்த ராட்சசர்கள் அனைவரும் விஷ்ணுவிற்கு பயந்து ஓடி விட்டார்கள். யாரும் இல்லாததால் அந்த நகரம் தற்போது சூன்யமாக இருக்கிறது. தற்சமயம் இலங்கைக்கு உரிமையாளன் தலைவன் என்று யாரும் இல்லை. அந்த இடத்தில் நீ சௌக்யமாக வசிக்கலாம். போய் வா உனக்கு மங்களங்கள் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுப்பினார். வைஸ்ரவணன் இலங்கையை தன்னுடையதாக்கிக் கொண்டு மலையின் உச்சியில் தன் விருப்பமானவர்கள் ஆயிரக்கணக்கானோர் உடன் வர மகிழ்ச்சியுடன் ஆட்சியை ஆரம்பித்தான். அவனுடைய ஆட்சியின் கீழ் யாவரும் மன நிறைவோடு இருந்தனர். நான்கு பக்கமும் சமுத்திரம் சூழ்ந்த அந்த நகரத்தில் இருந்து கொண்டு அவ்வப்பொழுது புஷ்பக விமானத்தில் தாய் தந்தையரைக் காண வந்து கொண்டிருந்தான். தேவ கந்தர்வர்கள் இவனுடைய குணத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் வாழ்த்தினர்.

தொடரும்………..

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி -2

ராமரிடம் அகத்தியர் பேச ஆரம்பித்தார். இந்திரஜித் யாராலும் வெல்ல முடியாத பலம் அவனுக்கு எப்படி வளர்ந்தது என்பதை நான் சொல்கிறேன். அதற்கு முன் ராவணனின் பிறப்பு அவன் யாரிடம் எப்படி வரம் பெற்றான் என்பதை சொல்கிறேன் கேட்டுக் கொள் என்று ராவணனின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தார் அகத்தியர். முன்பு க்ருத யுகத்தில் பிரம்மாவின் மானச புத்திரனாகத் தோன்றியவர் புலஸ்தியர். அவர் குணம் தர்மம் சீலம் இவைகளில் அதிக பலசாலியாக இருந்து பிரம்ம ரிஷி என்ற பட்டத்தை பெற்றார். தன் குணங்களால் எல்லோருக்கும் பிரியமானவராக இருந்தார். இமய மலைச் சாரலில் த்ருண பிந்து என்ற ராஜரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று சில நாட்கள் தங்கினார். அங்கு வசிக்கும் பொழுது தன் தவத்தை தொடர்ந்தும் வேதங்களில் படித்ததை மனனம் செய்யும் முறையையும் கவனமாக செய்து வந்தார். அச்சமயம் த்ருணபிந்து ராஜரிஷி மகளை சந்திக்க அவளது தோழிகளான சில தேவலோகத்துப் பெண்கள் அந்த ஆசிரமத்திற்கு வந்தனர். வந்தவர்கள் அதன் அழகில் கவரப்பட்டு ஆடிப்பாடி இன்பமாக இருந்தனர். தவம் செய்யும் முனிவருக்கு இது இடையூறாக இருந்தது. இதனை அப்பெண்கள் அறியாமல் தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர். தனது தவத்திற்கு இடையூராக இருந்த பெண்களின் மீது கோபம் கொண்ட முனிவர் பெண்களில் யார் என் முன் வந்தாலும் அவள் கர்பிணி ஆவாள் என்று சபித்தார். இதைக் கேட்ட பெண்கள் ப்ரும்ம ரிஷியின் சாபம் என்பதால் பயந்து ஓடி விட்டனர்.

த்ருண பிந்துவின் மகள் இதனை அறியாமல் தனது தோழிகளின் வரவை எதிர்பார்த்து அங்கு நடமாடிக் கொண்டிருந்தாள். அதே சமயம் புலஸ்தியர் வேதங்களை சொல்லிக் கொண்ருந்தார். வேதங்கள் கேட்கும் சத்தம் வரும் இடத்தை நோக்கி அவள் சென்று புலஸ்தியரின் முன்பு அவள் நின்றதும் அவளின் உடல் வெளுக்க ஆரம்பித்தது. கர்பத்துடன் உடல் மாற்றம் அடைந்தாள். தன் சாபம் என்ன எதனால் இந்த உரு மாற்றம் என்பது புரியாமல் நடுங்கினாள். தந்தையிடம் சென்று அழுது கொண்டே தனக்கு என்னவோ ஆகி விட்டது என்றாள். த்ருண பிந்து மகளைப் பார்த்து திகைத்து எங்கு சென்றாய் என்ன நடந்தது என்று கேட்டார். அதற்கு அவள் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை அப்பா. நான் புலஸ்தியர் இருக்கும் இடத்தின் அருகே எனது தோழிகளை தேடிக் கொண்டு சென்றேன் அங்கு தோழிகள் யாரையும் காணவில்லை. அங்கேயே சற்று நேரம் தேடிக் கொண்டு நின்றேன். புலத்தியர் அங்கு வேதங்களை ஓதிக் கொண்டிருந்தார். வேதங்களை கேட்டுக் கொண்டே அவரின் முன்பு போய் நின்றேன். திடீரென்று இது போல என் உடல் மாற்றமடைந்து விட்டது. உடனே பயந்து ஓடி வந்து விட்டேன் என்றாள். த்ருண பிந்து தன் தவ வலிமையால் நடந்ததை அறிந்து கொண்டார்.

த்ருண பிந்து தன் மகளை அழைத்துக் கொண்டு புலஸ்தியர் தவம் செய்யும் இடத்திற்கு வந்தார். புலஸ்தியரைப் பார்த்து பிரம்ம ரிஷியே இவள் எனது மகள். நல்ல குணங்களுடன் சீலமாக வளர்க்கப் பட்டவள். இவளை தங்களுக்கு தானமாக தருகிறேன். உங்களுடைய யாகத்திற்கும் தவத்திற்கும் உதவி செய்து பணிவிடை செய்வாள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நடந்ததை தனது தவ வலிமையில் தெரிந்து கொண்ட புலஸ்தியரும் த்ருண பிந்துவின் மகளே ஏற்றுக் கொண்டார். சில நாட்களில் அவளுடைய சீலமும் அவள் கவனத்துடன் நடந்து கொண்டதும் புலத்தியருக்கு திருப்தியை உண்டாக்கியது. இதனால் மகிழ்ந்த புலத்தியர் அவளது மனக் கவலையை போக்க எண்ணி அவளிடம் பேச ஆரம்பித்தார். உனது குணம் மற்றும் பணிவிடைகளால் நான் மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு பிறக்கப் போகும் குழந்தை பௌலஸ்த்யன் என்ற பெயருடன் எனக்கு சமமான ஆற்றலுடன் பெயர் பெற்று விளங்குவான். நான் வேதம் சொல்லி நீ கேட்டதால் விஸ்ரவஸ் (வேதங்களை நன்கு கேட்டவன்) என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்குவான் என்றார். இதைக் கேட்டவள் மன நிம்மதியடைந்து நாளடைவில் விஸ்ரவஸ் என்ற மகனைப் பெற்றாள். விஸ்ரவஸ் கல்வியில் சிறந்தவனாகவும் எல்லா ஜீவன்களையும் சமமாக காணும் மனப் பான்மையுடனும் விரதங்களை கடைபிடித்தும் ஆசாரங்களுடன் தன் தந்தையைப் போலவே தவம் செய்து மூவுலகிலும் பெயரும் புகழும் பெற்று வளர்ந்து வந்தான்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் பகுதி – 1

ராமர் அரசனானதும் அவருக்கு வாழ்த்துக்கள் சொல்வதற்காகவும் ராவணனை அழித்ததற்காக அவரை பாரட்டுவதற்காகவும் நான்கு திசைகளில் இருந்தும் முனிவர்கள் பலர் அயோத்திக்கு வந்தார்கள். அரசவைக்கு வந்த முனிவர்களுக்கு தக்க மரியாதை அளித்து அமர வைத்தார் ராமர். பொன் வேலைப் பாடமைந்த விரிப்புகளில் சிலரும் குசம் என்ற புல்லைப் பரப்பி சிலரும் மான் தோல் விரித்து சிலரும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு அமர்ந்தார்கள். ராமர் வந்தவர்களின் நலத்தை விசாரித்தார். அனைவரும் நலமாக உள்ளதாக தெரிவித்து ராமரை பாராட்டி வாழ்த்தினார்கள்.

ராமரிடம் அகத்தியர் பேச ஆரம்பித்தார். தேவர்களாலும் வெல்ல முடியாத ராட்சசர்களின் அரசன் ராவணனை அழித்து விட்டாய். மிகப் பெரிய வீரனை வென்று வெற்றி வாகை சூடியவனாக உன்னைக் காண்கிறோம். சகோதரன் லட்மணனுடனும் சீதையுடனும் நலமாக திரும்பி வந்து பரதன் மற்றும் சத்ருக்கனனுடன் சேர்ந்தது விட்டாய் மிக்க மகிழ்ச்சி. கும்பகர்ணன், பிரஹஸ்தன், விரூபாக்ஷன், மகோதரன், அகம்பனன் ஆகிய ராட்சசர்கள் மிகப்பெரிய உடலமைப்பை கொண்டவர்கள். அவர்களை வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டி விட்டாய். கும்பனும், நிகும்பனும் சிறந்த வீரர்கள் ஆவார்கள். யுத்தம் என்றாலே மதம் கொண்டு வரும் காலாந்தகன், யமாந்தகர்கள், யக்ஞ கோபன், தூம்ராக்ஷன் ஆகிய இவர்கள் சாஸ்திரம் நன்றாக அறிந்தவர்கள். இவர்களை அழிப்பது மிகவும் கடினமானது. இவர்களையும் உனது காலனுக்கு சமமான அம்புகளால் அடித்து வீழ்த்தினாய். மகா மாயாவியான இந்திரஜித் யாராலும் வெற்றி பெற முடியாது என்ற வரத்தை பெற்றவன். அவனை நீ அழித்ததும் யுத்தத்தில் ராமர் வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கை பல முனிவர்களுக்கு வந்தது. இதனால் இனி ராட்சசர்களால் எந்தத் தொல்லையும் இல்லை என்று அவர்கள் நிம்மதி அடைந்தனர். அனைத்தும் முடிந்ததும் உன்னிடம் சரணடைந்த விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி விட்டாய். தர்மத்தின் படியே நடந்து உனது பராக்கிரமத்தை காட்டி தீயவர்களை அழித்து அனைவருக்கும் நன்மை செய்து தர்மத்தை காத்து விட்டாய் என்று ராமரை வாழ்த்தினார் அகத்தியர்.

ராமர் அகத்தியரிடம் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது தங்களிடம் கேட்கிறேன் என்று தனது கேள்வியை கேட்க ஆரம்பித்தார். தேவர்களும் வெல்ல முடியாத கும்பகர்ணன் அழிந்தான். யுத்தத்தில் மதம் பிடித்தவர்களாக செயல்படும் தேவாந்தகன் நராந்தகர்கள் அழிந்தார்கள். மேலும் பல வலிமையான ராட்சசர்கள் அழிந்தார்கள். இவர்கள் எல்லாம் ஒவ்வொருவராக அழியும் போது மகிழ்ச்சி அடையாத முனிவர்கள் இந்திரஜித்தை அழித்ததும் வெற்றி பெற்றோம் என்று ஏன் மகிழ்ந்தார்கள். இந்திரஜித் அழிந்தாலும் மூன்று உலகங்களையும் வென்ற ராவணன் ராட்சசர்களுக்கு தலைவனாக இருக்கிறான். அவனை அழிப்பதற்கு முன்பாக ஏன் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்திரஜித்தை மட்டும் வீரனாக தாங்கள் புகழ்ந்து பேசுவதற்கு என்ன காரணம். யுத்த களத்தில் ராவணனை விட இந்திரஜித் எப்படி வலிமையுள்ளவனாக இருந்தான். இந்திரனையும் வெற்றி பெறும் அளவிற்கு அவனுக்கு ஆற்றல் எப்படி கிடைத்தது. பல வலிமையுள்ள அஸ்திரங்களை வைத்திருந்தான் இந்திரஜித். அதனை அவன் எப்படிப் பெற்றான். அவனுக்கு ஏதேனும் விசேச தன்மைகள் இருக்கிறதா என்று தயவு செய்து பதில் சொல்லுங்கள். இந்த கேள்விக்கான பதிலை நான் அரசனாக தங்களிடம் கட்டளையிட்டு கேட்கவில்லை. சாதாரண மனிதனாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்கிறேன். இதில் ரகசியம் ஏதேனும் இருக்கிறது சொல்லக்கூடாது என்று இருந்தால் சொல்ல வேண்டாம் தங்களை நான் வற்புறுத்தவில்லை என்று அகத்தியரிடம் பேசி முடித்தார் ராமர்.

ராமாயணம் 7. உத்தர காண்டம் முன்னுரை பகுதி – 2

ராமர் யுத்தம் முடிந்ததும் ராமேஸ்வரத்திற்கு வந்து சிவ பூஜை செய்த பிறகே அயோத்திக்கு சென்றார் என்ற உண்மைச் செய்தி ஒன்று உள்ளது. இந்த செய்தி வால்மீகி எழுதிய ராமாயணத்திலும் இல்லை கம்பர் எழுதிய கம்பராமாயணத்திலும் இல்லை. ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் ஆரம்பித்த போது முதலில் கங்கை கரையைத் தாண்டி குகனின் இருப்பிடத்தில் இருக்கும் போது அங்கு வந்து சந்தித்த பரதன் ராமரை மீண்டும் அயோத்திக்கு அழைத்தான். ராமர் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக வர மறுத்து விட்டார். அதற்கு பரதன் பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் முடிந்த அடுத்த நாளே ராமர் அயோத்திக்கு திரும்பி வர வேண்டும் என்ற வரத்தை வாங்கினான். ராமர் தான் கொடுத்த வாக்குப்படி வரவில்லை என்றால் தன் உடலை விட்டு இறந்து விடுவேன் என்று ராமரிடம் சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான். யுத்தம் முடிந்து ராமர் சீதையை அடைந்ததும் பதினான்கு ஆண்டு வனவாச காலத்தின் இறுதி நாட்கள் வந்துவிட்டது. பரதனிடம் கொடுத்த வாக்குப்படி உடனடியாக அயோத்திக்குத் திரும்ப வேண்டியது இருப்பதால் ராமர் இலங்கையில் இருந்து நேராக புஷ்பக விமானத்தில் அயோத்தியின் எல்லையில் இருக்கும் கங்கை கரைக்கு வந்து விட்டார். அயோத்திக்குத் திரும்பியதும் அனைவரது விருப்பத்தின்படி பட்டாபிஷேகத்தை ஏற்றுக் கொண்டு அரசனாக பதவி ஏற்றுக் கொண்டார்.

ராமர் அரசனாக பதவி ஏற்றதும் முதலில் மக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்த பிறகு தனக்கும் தனக்காக யுத்தம் செய்தவர்களுக்கும் செய்ய வேண்டியதைப் பற்றி சிந்தனை செய்தார். யுத்தத்தில் பலர் இறப்பதற்கு காரணமாக தானும் லட்சுமணனும் வானரங்களும் விபீஷணனும் இருந்தபடியால் அனைவருக்கும் பலவிதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன என்பதை அறிந்து கொள்கிறார். அவற்றை போக்குவதற்காக பூஜைகளை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பூஜைகளை செய்வதற்கான குறிப்பிட்ட நாளையும் நேரத்தையும் வேதத்தில் உள்ள ஆகமங்களின் படி செய்ய அதற்காக பணிகளை மேற்கொண்டார். இதற்காக தனது நண்பர்களான சுக்ரீவனையும் விபீஷணனையும் ராமேஸ்வரத்திற்கு வரவேண்டும் என்று செய்தி சொல்லி அனுப்பினார்.

ராமரிடம் யுத்தம் செய்து அழிந்த ராவணனின் குணங்கள் கெட்டுப் போய் கீழானதாக இருந்ததே தவிர அவன் சிவன் மீது கொண்ட பக்தியும் அவன் செய்த பூஜைகளும் அவனது பலமும் மிகவும் உயர்வானதாகவே இருந்தது. அதனால் ராவணனை அழித்த ராமருக்கு மூன்று விதமான தோஷங்கள் தொற்றிக் கொண்டன. அவை பிரம்ம ஹத்தி தோஷம், வீர ஹத்தி தோஷம் மற்றும் சாயா ஹத்தி தோஷம் ஆகும். ராவணன் சிறந்த சிவபக்தன். முறையாக வேதங்களை கற்று ஆகமங்களின் படி தினந்தோறும் யாகங்களை செய்தவன். அவனை ராமர் அழித்ததால் பிரம்ம ஹத்தி தோஷம் ராமருக்கு ஏற்பட்டது. பிரம்ம ஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்த ராமர் ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கார்த்த வீர்யார்ஜூனன் மற்றும் வாலி என்ற இருவரைத் தவிர தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்ட மிகச்சிறந்த வீரன் ராவணன். ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு வீர ஹத்தி தோஷம் உண்டானது. வீர ஹத்தி தோஷம் நீங்க வேதாரண்யம் (திருமறைக்காடு) தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர். மூன்றாவதாக சாயா என்றால் பிரகாசமான ஒளி என்று அர்த்தம். சாயா என்பது கீர்த்திக்குரிய எந்தக் குணத்தையும் குறிக்கும். ராவணனுக்கு உருவத்தில் கம்பீரமும், வேத சாஸ்திரப் படிப்பும், சங்கீத ஞானமும், சிவ பக்தியும் ஆகிய பல சாயாக்கள் இருந்ததால் அவனை அழித்ததில் ராமருக்கு சாயா ஹத்தி தோஷம் உண்டாயிற்று. சாயா ஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரம் தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமர்.

ராமர் தன்னுடைய பிரம்ம ஹத்தி தோஷம் விலகுவதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட ராமேஸ்வரத்திற்கு தனது நண்பர்களான சுக்ரீவன் அனுமன் விபீஷணன் ஆகியோருடன் வந்தார். கடற்கரையில் சிவ பூஜை செய்வதற்காக குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக காசியில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வரும்படி அனுமனிடம் கேட்டுக் கொண்டார் ராமர். ராமரின் கட்டளையை நிறைவேற்ற அனுமன் காசி நோக்கிப் புறப்பட்டார். அனுமன் காசியில் இருந்து சிவ லிங்கம் கொண்டு வருவதற்கு வெகு நேரம் ஆகியது. குறிப்பிட்ட காலம் முடிவதற்கு முன்பாக சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார் ராமர். அவரது எண்ணத்தை புரிந்து கொண்ட சீதை கடற்கரை மணலிலேயே ஒரு சிவலிங்கத்தை செய்தாள். அந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு வழிபாடும் செய்து முடித்தார் ராமர். இந்த லிங்கமே தற்போது ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் வருந்தினார். அதனால் அந்த மணல் லிங்கத்தை அங்கிருந்து தனது வலிமையான வாலால் எடுக்க முயன்றார் அனுமன். இந்த முயற்சியில் தோல்வியுற்ற அனுமனுக்கு அவரது வால் அறுந்தது. அதனால் வருத்தமடைந்த அனுமனிடம் ராமர் தனக்காக மிகவும் சிரமப்பட்டு லிங்கத்தை கொண்டு வந்ததற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர் கொண்டு வந்த காசி லிங்கத்திற்கு முதல் பூஜை நடந்த பிறகே தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு பூஜைகள் நடக்கும் என்று ஆறுதல் கூறினார். அந்த லிங்கம் தற்போது ராமேஸ்வரத்தில் ராமநாதருக்கு வடது புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டு காசி விஸ்வநாதர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ராமேஸ்வரத்தில் தினந்தோறும் அதிகாலையில் காசி விஸ்வநாதருக்கு முதல் பூஜை செய்த பின்னரே ராமர் பிரதிஷ்டை செய்த ராமநாதருக்கு பூஜைகள் செய்யப்படுகிறது. ராமருடன் பல இடங்களுக்கு சென்ற சுக்ரீவன் விபீஷணன் உட்பட யுத்தம் செய்து தோஷங்கள் உள்ள அனைவரும் ராமரின் கட்டளைப்படி பூஜைகள் செய்து தங்களது தோஷங்களை போக்கிக் கொண்டார்கள்.

உத்தர காண்டம் முன்னுரை முற்றுப் பெற்றது.