இறைவன் கருணையாலே விதியை ஒதுக்கி வைத்துவிட்டு மகான்களால் எதையும் கூற இயலாது. இருந்தாலும் மனிதர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக சிலசமயம் சில விதமான வாக்குகளை (ஜீவநாடி வாக்கு) யாங்கள் கூறுகிறோம். ஆனாலும் ஒரு மனிதனின் மதி எந்தளவிற்கு பக்குவப்பட்டு இருக்கிறதோ எந்தளவு பாவங்களற்ற நிலையில் இருக்கிறதோ அந்தளவுதான் இறைவனருளால் யாங்கள் கூறுகின்ற வாக்கினை சரியாக புரிந்துகொள்ள இயலும். பக்குவமற்ற பாவங்கள் நிறைந்த ஆத்மாக்களுக்கும் எத்தனை கீழிறங்கி வாக்குகளைக் கூறினாலும் அர்த்தம் அனார்த்தமாகத்தான் புரியும். நாங்கள் கூறுவதை சரியாக புரிந்துகொள்ள இயலாது.
இறைவனருளாலே எத்தனை விதமான பாவங்களின் தாக்கத்தால் பிறவிகள் எடுத்த ஆத்மாக்களுக்கு எத்தனையோ விதமான வழிமுறைகள் இருந்தாலும் பாவங்கள் நீங்க வேண்டும் அதே சமயம் அந்த பாவங்கள் மீண்டும் பற்றிவிடக்கூடாது என்பதை மட்டும் மையமாகக் கொண்டு இறைவனருளாலே இந்த ஜீவ அருள் ஓலையில் யாம் எத்தனையோ விதமான நுணுக்கமான வாக்குகளை கூறியிருக்கிறோம். சுருக்கமாக அதை செய் இதை செய் என்று கூறாமல் தர்மத்தை பிடித்துக்கொள் அது பாவத்திலிருந்து உன்னை விடுவிக்கும் என்று பலமுறை பலருக்கு பலமாகக் கூறியிருக்கிறோம். ஆனாலும் பலரில் சிலருக்கும் சிலரில் சிலருக்கும் அந்த சிலரில் சிலருமேதான் மதியில் பட்டு அந்த வழியில் வருவதற்கு விதி அனுமதி தந்திருக்கிறது என்பதே மெய்யிலும் மெய்யாகும். இன்னும் எத்தனையோ விதமான உண்மைகளை நாங்கள் வெளிப்படையாகக் கூறுவது என்பது அத்தனை நாகரீகமாக இராது. எனவே யாங்கள் மெளன தவத்தை தொடர்வதே இறைவன் இட்ட கட்டளையாக இருக்கிறது.
இறைவன் அருளாலே விதி வலிமையாக இருக்கும் பொழுது இறைவனே தோன்றி வழிகாட்டினாலும் அது மாந்தர்களின் (மனிதர்கள்) செவியில் ஏறாதப்பா. எனவே இத்தருணம் எத்தனையோ நுணுக்கமான கருத்துக்களை யாங்கள் கூறி உன் மூலமாக சிலருக்கு விளங்க வைக்கலாம் என்றாலும்கூட அதுவும் விதிவழி ஏற்புடையதாக இராது. எனவே நேர்மையான பிராத்தனைகளை உண்மையான தர்மத்தினை கூடுமானவரை சத்தியத்தினை கடைபிடிப்பதை தவிர இத்தருணம் வேறு வழி ஏதுமில்லையப்பா.
கேள்வி: ஐயனே கொசு. இது மனிதனை தூங்கவிடாமல் பாடாய்படுத்துகிறது? பல்வேறு விதமான நோய்களை பரப்புகிறது. சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். கால் நடைகளுக்கும் தொல்லை தருகின்றது. கொசுக்களை முற்றிலும் அழிக்கவே மனிதன் முற்படுகிறான். பல மேலை நாடுகளில் கொசுக்களை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். கொசுவும் இறைவனின் படைப்புகளில் ஒன்று. அவற்றை கொள்ளாமல் எங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழி? அல்லது மருந்துகள் மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்தால் பாவம் சேருமா?
இறைவன் அருளால் இப்பொழுதும் கூறுகிறோம் இனியும் கூறுவோம் இன்னும் கல்பகோடி ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இப்படிதானப்பா இருக்கும். சரியான அறிவுத்திறன் இல்லாமலும் அறியாமையும் இறையியலை ஆன்மீக இயலை சமுதாய இயலோடு குழப்பிக் கொண்டும் (இருக்கிறார்கள்) சமுதாய அறிவை இறைவனோடும் குழப்பிக் கொண்டும் இருக்கிறார்கள். நேர்மையான அறிவுத்திறன் வெளிப்படாதவரை மேல்நாட்டுக்கு ஈடாக இங்கு வளர்வது என்பது கடினம். அறிவுள்ளவர்களையும் நல்லவர்களையும் மதிக்கின்ற நிலைமை வரவேண்டும். அடுத்ததாக இவன் கூறிய சிறிய உயிரினம் மனிதனுக்கு தீங்கு செய்வதை நாங்கள் மறுக்கவில்லை. இதுவும் மீண்டும் ஒருவகை கர்மபாவம். அது ஒருபுறம் இருக்கட்டும். இறைவனை நம்ப வேண்டாம் கர்மாவை நம்ப வேண்டாம். இவனே கூறிவிட்டான் மேலை தேசங்களில்(வெளிநாடுகளில்) இவையெல்லாம் இல்லையென்று. இங்கு மட்டும் ஏன் இருக்கிறது? சுகாதாரம் என்ற உணர்வு இங்கு யாருக்கும் அடிப்படையில் வளர்வதில்லையே ஏன்?
நன்றாக கவனிக்க வேண்டும் எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலை பெருக்கி கோலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்குதான் இருக்கிறது. சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்கு போதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம் இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது. முதலில் மனித மனம் சுத்தமானால் இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும் நீ கூறிய சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன் உருவாக்குவார். அதுபோன்ற உயிரினங்கள் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கிறது. ஒரு நன்மையையும் செய்வதில்லை என்று கூறகிறான். மனிதன் மட்டும் பிற உயிரினங்களுக்கும் இந்த பூமிக்கும் நன்மையா செய்து கொண்டிருக்கிறான்? மனிதன் செய்கின்ற செயல் ஏதாவது பிற உயிரினங்களுக்கும் இந்த பூமிக்கும் நீர்வள ஆதாரத்திற்கும் பஞ்சபூதங்களுக்கும் நன்மையைத் தரும் செயல்களா? எவையெல்லாம் இந்த பூமியை மாசுப்படுத்துமோ அதை செய்யக்கூடாது என்ற அறிவு வந்த பிறகும் சுயநலத்திற்காக செய்கிறான். எந்தப் பொருளையெல்லாம் பயன்படுத்தினால் மண் வளம் பாதிக்கப்படும் என்று அறிந்தபிறகும் அதை பயன்படுத்துகிறான். இவையெல்லாம் யார் குற்றம்?
இப்பொழுது பக்தி வழிக்கும் வருகிறோம். வழக்கம் போல் தன்வந்திரி வழிபாடு தன்வந்திரி பூஜை இயன்றால் தன்வந்திரி யாகம் இல்லம் தோறும் கலப்பில்லா சாம்பிராணி நறுமணப்புகை செய்வதோடு பேய்ப்புடலை என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இதோடு நிலவேம்பு மிளகு கீழ்காய் நெல்லி என்ற மூலிகை சேர்த்து எங்கள் நன்மைக்காக உங்களை பயன்படுத்துகிறோம். எனவே எங்களை மன்னியுங்கள் என்று மானசீகமாக மன்னிப்பை வேண்டி பிராத்தனை செய்துவிட்டு அன்றாடம் கலுவத்தில் இட்டு கஷாயமாக செய்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் வராது குறையும் மட்டுப்படும்.
கேள்வி: ஒரு ஜபமாலையைக் கொண்டே எல்லா மந்திரங்களையும் ஜெபிக்கலாமா? அல்லது ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு ஜபமாலை வேண்டுமா?
ஒரே வகையான மாலையை வைத்து தாராளமாக உருவேற்றலாமப்பா குற்றம் ஏதுமில்லை. ஆனால் சாஸ்திர ரீதியாக ஒரு விளக்கத்தைக் கூறுகிறோம். நவகிரக மணிமாலை என்ற ஒன்று இருக்கிறது. இதை பலரும் அறிய வாய்ப்பில்லை. அதாவது அந்தந்த நவகிரகங்களுக்கு உரிய நவரத்தினங்களை மாலையாக வைத்துக் கொண்டு அந்தந்த கிரகத்தை ப்ரீதி செய்யும் வண்ணம் அந்த கிரகத்தின் மூலமந்திரம் காயத்ரி மந்திரம் அல்லது தமிழ்வழி பாக்கள் என்று எதையாவது உருவேற்றினால் அதனால் மனிதனுக்கு சிறிது கூடுதல் பலன் உண்டு.
கேள்வி: இறைநீதியை புரிந்து கொள்ள முக்தி அடைவதுதான் வழியா?
இறைவன் கருணையைக் கொண்டு இறைவனை பற்றியும் இறைவனின் நிலை குறித்தும் அல்லது இவன் கூறியது போல் இறை நீதி என்ற கொள்கை குறித்தும் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதலில் ஒரு மனிதன் இதுவரை சேர்த்த பாவங்களையெல்லாம் அனுபவித்து தீர்க்க வேண்டும் அல்லது கூடுமானவரை தான தர்மங்களாலும் வழிபாட்டாலும் வேறு ஸ்தல யாத்திரைகளாலும் தீர்க்க வேண்டும். பாவங்கள் கடுகளவு இருந்தாலும் கூட இவன் கூறுவது போல பரிபூரணமாக இறைவனை புரிந்து கொள்ள முடியாது. எனவே இறைவனை புரிந்து கொள்ளவோ அல்லது முக்தி போன்ற நிலையை அடைவது குறித்தோ ஆய்வு செய்வதற்கு முன்னால் முதலில் உலகியல் ரீதியான கடமைகளை நேர்மையாக ஆற்றிக் கொண்டே சேர்த்த பாவங்களையெல்லாம் நல்ல விதமாக கழித்து தர்மத்தால் குறைத்துக் கொண்டே வந்தால் தாராளமாக பாவங்கள் குறைய குறைய குறைய குறைய அனைத்தும் உள்ளத்தில் தெள்ளத் தெளிவாக புலப்படத் துவங்கும்.
கேள்வி: சர்ப்ப சாந்தி என்றால் என்ன? அதற்கு விளக்கம்:
இறைவனின் கருணையால் ஆங்காங்கே நாகதோஷ பூஜைகள் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. சர்ப்ப சாந்தி யாகம் என்றெல்லாம் கூட நாங்களும் கூறுகிறோம். இதுகுறித்து முன்னரே கூறியிருக்கிறோம். நாகங்களை அல்லது பாம்பு இனங்களைக் கொன்றால் தோஷம் ஏற்படும் என்கிற தவறான கருத்து மனிதரிடையே எப்பொழுதுமே நிலவி வருகிறது. பாம்பைக் கொன்றால்தான் தோஷம் என்றால் பசுவைக் கொன்றால் தோஷமில்லையா? ஆட்டைக் கொன்றால் தோஷம் வராதா? ஆட்டை அக்னி பகவானின் வாகனம் என்று கூறத்தெரிகிறது. ஆனாலும் அதே அக்னிக்கு இரையாக்கி அதை உண்ணவும் தெரிகிறது மனிதனுக்கு. இந்த நிலையிலே ஜாதகரீதியாக கடுமையான பாவத்தின் உச்சத்தைக் காட்டத்தான் நாகம் எனும் பாம்பை அடையாளப் படுத்தினார்கள். இந்த தோஷத்தைக் குறைப்பதற்காக வேதத்தில் முறையாக கூறப்பட்ட மந்திரங்களை உருவேற்றி நன்றாக கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று மண்டலம் (144 நாட்கள்) ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தில் (கோவிலில்) ஒரு குடும்பம் யாகம் செய்ய வேண்டும். அந்த மூன்று மண்டலமும் அந்த ஸ்தலம் தொடர்பான பூஜைகளை பூஜைக்குண்டான செலவினங்களை அக்குடும்பம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது போக பல்வேறு தான தர்மங்களையும் நாங்கள் கூறுகின்ற மற்ற விஷயங்களையும் பின்பற்ற வேண்டும். இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லை என்பது எமக்கும் தெரியும்.
எனவே மிக எளிய வழியாக நவகிரக காயத்ரி மந்திரத்தையோ அல்லது தமிழ் வழிபாடுகள் செய்தோ குறிப்பாக இராகு கேதுவை குறிப்பாக அதிகமாக வழிபாடு செய்து இராகுவின் அதிதெய்வமான துர்க்கையையும் கேதுவின் அதிதெய்வமான விநாயகப் பெருமானையும் வழிபட்டு வரவேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். ஒவ்வாமை நோய் கொண்ட ஏழை நோயாளிகளுக்கு அதிக மருத்துவ உதவிகளை செய்தால் கட்டாயம் அது உண்மையான சரப்பசாந்தி பூஜையாகும். மற்றபடி வெள்ளியால் ஒரு நாகத்தை செய்து அதன் தலையிலே சிறிதளவு பாலை ஊற்றி அப்படியே எடுத்து சென்று ஆழியில் (கடலில்) அல்லது காணிக்கைப் பேழையில் (பெட்டியில்) விட்டால் மட்டுமே தோஷம் போய்விடாது. இவையெல்லாம் மனிதர்கள் பிழைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு விஷயம். இதை முறையாக செய்ய வேண்டும். இந்த பூஜையின் செயல்பாட்டை நாங்கள் குறை கூறவில்லை. காலம் இல்லை என்றும் கூட்டம் அதிகமாக இருக்கிறதென்றும் மந்திரங்களை குறைத்துக் கூறுவதோ அல்லது அவசர அவசரமாக பூஜை செய்வதினாலோ யாருக்கும் எந்த பலனும் கிட்டுவதில்லை. எனவே இதை நன்றாக புரிந்து கொண்டு தர்மத்தில் நாட்டம் கொண்டு சுயமாக பக்தி சிந்தனையை வளர்த்துக் கொண்டு ஒரு மனிதன் வாழ்ந்தால் எல்லா தோஷங்களும் குறைந்துவிடும்.
கேள்வி: நவராத்திரியின் 9 தினங்களும் கொலு பொம்மைகளை அடுக்கி பூஜை செய்யும் முறை எப்போது ஆரம்பமானது? நவராத்திரியின் தாத்பரியம் என்ன?
இவற்றை தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம். அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தொடர்ந்து நவராத்திரி பூஜை என்பது மிக மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு் முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும் தமக்குள் சக்தியை வளர்த்துக் கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இந்த நிலையிலே ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடை தானம் அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும் தர வேண்டும் என்கிற தாத்பரியம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
ஒரு காலத்திலே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெறமாட்டார்கள். அப்படி பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்க மாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது? பூஜை பிரசாதம் என்றுதான் தர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டு வழிபாடுகளும் பூஜைகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் நவராத்ரியின் பரிபூரண பூஜைகள் எல்லாம் வழக்கொழிந்து போய் வெறும் ஆர்பாட்டம் மட்டுமே இப்பொழுது ஆங்காங்கே நடக்கிறது. அங்கே யாகங்கள் கூட்டு பிராத்தனை செய்ய வேண்டும். குறிப்பாக நாக தோஷம் களத்திர தோஷம் செவ்வாய் தோஷம் போன்ற பல்வேறு தோஷங்கள் கொண்ட ஆண்களும் பெண்களும் இந்த பூஜை செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக இளம்பெண்கள் மாலை பொழுதிலே ஒன்றுகூடி நல்ல முறையிலே அன்னையின் நாமத்தை உருவேற்றுவது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்குவதற்கு மிகவும் உதவும். இது போன்ற பூஜைகள்தான் கலாசாரத்தையும் பக்தியையும் சமூக மேம்பாட்டையும் வளர்க்கக் கூடியது. ஆனால் அதில் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு மனிதன் வெறும் தவறான புற சடங்கை மட்டும் பார்த்தால் குழப்பம்தான் எதிரொலிக்கும்
கேள்வி : பற்றுகள் அகல ஒரு மனிதன் எந்தெந்த விதமான பாவங்களை தவிர்க்க வேண்டும்?
எந்த பாவத்தையும் செய்யாமல் இருப்பதே ஏற்புடையது. ஏனென்றால் இந்த பாவத்திற்கு இதுதான் காரணம் என்று கூறிவிட்டால் அந்த பாவத்தை மட்டும் (நான்) செய்யவில்லை என்றெல்லாம் கூறி மனிதன் தப்பித்துவிட முடியாது. ஒரு பாவம் என்பதை விட அது ஏற்படுத்தும் விளைவு எத்தனை மனிதர்களுக்குள் எத்தனை காலம் ஏற்படுத்துகிறது? அதனால் அந்த சந்ததிகள் எத்தனை ஆண்டுகள் பாதிக்கப்படுகிறார்கள்? என்பதையெல்லாம் கணக்கிலே வைத்து பிறகு அதன் விளைவாகத்தான் அந்த பிறவியின் இறுதியிலும் அடுத்தடுத்த பிறவிகளிலும் விதி அந்த பாவத்தை செய்ய மனிதனுக்கு அந்த எதிர்விளைவுகளை தருகிறது. எனவே குறிப்பிட்ட என்று இல்லாமல் எப்பொழுது ஒன்று தவறு என்று மனசாட்சி உறுத்துகிறதோ அப்பொழுதே அதனை செய்யாமல் விட்டுவிடுவதே சிறப்பு.
கேள்வி: நீங்கள் முன்பு சொன்ன வேடியம் என்ற ஊரில் நாகதோஷத்திற்கு எப்படி பரிகார பூஜைகள் செய்ய வேண்டும்?
எந்த ஆலயமாக இருந்தாலும் இயன்ற வழிபாடுகளை செய்யலாம். இதுதான் செய்ய வேண்டும் என்று நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. வாய்ப்பு உள்ளவர்கள் அபிஷேகம் செய்யலாம். அதற்கான சூழல் இல்லையென்றால் நறுமண மலர்மாலை சாற்றலாம். அங்குள்ள ஏழ்மையான மனிதர்களுக்கு இயன்ற உதவிகளை செய்யலாம். அமைதியாக அமர்ந்து பிராத்தனை செய்வதுதான் முக்கியம். வைராக்யமும் இறையருளும் இருந்தால் ஒரு பிறவியில்கூட சாத்தியம்தான். அதனை ஏன் சிந்தனையிலே குழப்பமாக வைத்துக் கொள்ள வேண்டும்? இந்தப் பிறவியில் இறைவன் அருள்வார் என்று எண்ணி முயற்சி செய்தால் தவறொன்றுமில்லையே.
கேள்வி: ஓதிமலை (கோயம்புத்தூர் மாவட்டம்) ஆண்டவனுடைய தத்துவத்தை சொல்லி அருளுங்கள்
மெய்யாக பரமனுக்கு பாலன் (முருகப்பெருமான்) உபதேசம் செய்கின்ற அந்த ஓதிய தன்மையை அடையாளம் காட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் பிற ஆலயங்கள் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டன. இவை ஆதிகாலத்து ஆலயம். இங்கு சென்று ஒருவன் இறை நினைவோடு வணங்குகிறானோ இல்லையோ இந்த தேகத்தை அசதியாக்கி தேகம் வேதனைப்பட்டாலும் பாதகமில்லை என்று அனுதினமும் ஒருமுறையாவது மேல் ஏறி கீழிறங்கினால் இப்படி ஏக (ஒரு) வருடம் இருந்தால் அவன் உடலைவிட்டு பல பிணிகள் போய் விடும். இந்த நிலையிலே ஐம்புலனும் அடங்க வேண்டும் என்று வினவுபவர்கள் இங்கு சென்று கார்த்திகை நட்சத்திரம் நடக்கின்ற காலத்திலும் சஷ்டி காலத்திலும் பரணி காலத்திலும் அவரவர் ஜென்ம நட்சத்திர காலத்திலும் உபவாசம் இருந்து முருகப்பெருமானின் சஷ்டி கவத்தையோ கந்த குரு கவத்தையோ அல்லது அறிந்த பிற மந்திரத்தை மனதிற்குள் செபித்து அந்த ஆலயத்தில் முடிந்தவரை அன்று முழுவதும் இருந்து பிறகு இறுதியாக பிரசாதம் ஏற்று கீழே வருவது கட்டாயம் ஞான மார்க்கத்திற்கு அற்புதமான வழியைக் காட்டும். இல்லை லோகாய மார்க்கம்தான் இப்போழுது எனக்கு தேவை என்று எண்ணக்கூடிய மனிதர்கள்கூட இங்கு சென்று தாராளமாக வேண்டியதைப் பெறலாம். அங்கு அமர்ந்து மனதார ஒரு நோக்கத்தை வைத்துவிட்டு வந்தால் கட்டாயம் அது நிறைவேறுவதை மனிதர்கள் அனுபவத்தில் காணலாம். பட்சிகள் (பறவைகள்) வடிவிலும் இந்த விலங்குகள் வடிவிலும் அங்கு இன்றும் முனிவர்கள் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் அங்கு அரூப நிலையிலே மகான்களும் ஞானிகளும் இருந்து கொண்டு இருக்கிறார்கள். யாமும் அங்கிருந்தும் இங்கிருந்தும் (01/05/2015) வாக்கை கூறிக்கொண்டே இருக்கிறோமப்பா.
ஓதிமலைமுருகன் கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி: வலிப்பு நோய் எதனால் வருகிறது? அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? எந்தெந்த கோவில்களுக்கு செல்ல வேண்டும்?
இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலமுறை கூறியதை மீண்டும் நினைவூட்டுகிறோம். ஒரு குறிப்பிட்ட பிரச்சனைக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட துன்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட பாவம் மட்டுமே காரணம் என்று கூற இயலாது. ஒட்டுமொத்த பாவங்களின் விளைவுகள் எல்லா வகையான துன்பங்களின் நிலையாகும். இந்த நிலையிலே இருந்தாலும் சில குறிப்பிட்ட பாவங்களுக்கு குறிப்பிட்ட நோயோ அல்லது குறிப்பிட்ட விதமான துன்பமோ வருவது இயல்பாகும். அதை தனித்தனியான மனித ஆத்மாவின் கர்ம கணிதத்தை வைத்துத்தான் யாங்கள் தீர்மானிப்போம். இருந்தாலும் பொதுவாக வாயில்லா ஜீவன்கள் எனப்படும் விலங்குகளை இடர்படுத்துவது. குறிப்பாக வேடிக்கையாகவோ அல்லது விலங்குகளை துன்புறுத்தி அதனால் இன்பம் காண்கின்ற பழக்கம் பொதுவாக மனித குலத்திற்கு உண்டு. தன்னைப் போல் உள்ள மனிதனையே இடர்படுத்தி இன்பம் காண்கின்ற மனிதன் விலங்குகளை மட்டும் விட்டு வைப்பானா என்ன? அப்படி விலங்குகளுக்கு தாங்கமுடியாத துன்பத்தைத் தந்து அதன் மூலம் தான் இன்பம் அடைகின்ற மனிதனுக்கு இன்னவன் கூறிய நோய் (வலிப்பு நோய்) கட்டாயம் பிறவி தோறும் தொடரும். எனவே விலங்குகளை பாதுகாக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் குறிப்பாக பசுக்கள் தானம் பசுக்களை பராமரிக்கும் அமைப்புகளுக்கு உதவி செய்வதும் (பசுக்களுக்கு உதவி செய் என்றால் அதற்காக வேறு விலங்குகளுக்கு உதவி செய்யாதே என்று பொருளல்ல. இதனை ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ள வேண்டும்) பிற உயிர்களை நேசிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொண்டு தன் ஊன் வளர்க்க பிற உயிரை கொல்லாதிருக்கின்ற எண்ணத்திற்கு மனிதன் வந்துவிட்டாலே கடுமையான பிணிகள் அவனை அணுகாது அவனைவிட்டு விலகுமப்பா. இந்ந தர்மகாரியங்களில் ஈடுபடுவதோடு பாழ்பட்ட ஆலயங்கள் சென்று உழவாரப் பணிகள் செய்வதும் அதற்கு முடிந்த பூஜைகளை தொடர்வதும் இதற்கு தக்க பிராயச்சித்தமாகும்.
ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செய்து வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டுவாசிகளில் ஒருவன் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன் தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி கேட்டான். தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது சகாவின் நிலையைக் கண்டு கதறி அழுதான். இதற்குள் கோபம் தணிந்த முனிவரிடம் மற்றொரு ஆள் சாபத்தை நீக்குமாறு வேண்டினான். அதற்கு முனிவர் எனக்கு சாபம் கொடுக்கத் தெரியுமே தவிர சாபத்திலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குரு சுசாந்தரிடம் அதைக் கற்று வருகிறேன். நீ அதுவரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்து வா என்று சொல்லிவிட்டு தன் குரு சுசாந்த முனிவரைத் தேடிச் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார். மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால் உன் தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம் என்றார். அதற்கு இணங்காமல் வேறு யோசனை சொல்லும்படிக் கேட்டார் சுதீவர்.
குரு சுதீவரிடம் விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தில் இருப்பவன். அவனிடம் சென்று அவன் புண்ணியத்தில் ஒரு பகுதியை தானமாகப் பெற்றுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டுவாசியை உயிர்ப்பிக்கலாம் என்றார். சுதீவர் அந்த மாதவனைத் தேடிச் சென்றார். செல்லும் வழியில் மிக அழகான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகில் மயங்கிய சுதீவர் அவளையே உற்றுப் பார்த்தார். அதனால் கோபமடைந்த அந்தப் பெண் முனிவரான நீ என் போன்ற பெண்ணை இப்படி உற்றுப் பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டாள் சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று. அடி பெண்ணே உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? நீ அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய் என்று சபிக்க அந்தப் பெண்ணும் அவ்வாறே மாறிவிட்டாள். பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடைந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழி கேட்டார். அதறகு அந்த இளைஞன் மாதவனுடைய பெண் மிக அழகானவள் அதனால்தான் அவன் வீட்டுக்கு வழி கேட்கிறாயா? உன்னைப் போன்ற முனிவருக்கு இது தேவையா? என்று திமிராகக் கேட்டான். அவனை ஊமையாக வேண்டும் என்று சுதீவர் சபித்துவிட்டு ஒருவாறு மாதவனின் வீட்டைக் கண்டு பிடித்து அங்கு சென்றார் சுதீவர்.
மாதவன் சுதீவரை வரவேற்று அமரச் செய்தார். என் குருவான சுசாந்தர் தங்களை ஒரு புண்ணியவான் என்றார். நீங்கள் அப்படி என்ன தவம் செய்து என் குருவே புகழும்படி புண்ணியம் சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். காலையில் எழுந்து என் நித்திய கடன்களை முடித்து விட்டு வீட்டு வேலைகளிலும் வெளி வேலைகளிலும் பங்கேற்கிறேன். எல்லாருக்கும் என்னாலான உதவிகளைச் செய்கிறேன். கோபம் பொறாமை ஆசை இவற்றை விட்டொழித்து மனதினாலும் வாக்கினாலும் உடலினாலும் பலருக்கும் நன்மை புரிகிறேன் என்றார் மாதவன். பூஜை புனஸ்காரம் தவம் இவை எதுவுமே செய்யாமல் இவனுக்கு எப்படி புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணத்துடன் சுதீவர் நீங்கள் கடவுளை தியானம் செய்வது கிடையாதா? என்றார். கடவுள் என்னிலும் இருக்கிறார். மற்றவர்களிடமும் இருக்கிறார். சகல உயிர்களிலும் உறைகிறார். அவரைத் தனியாக பூஜையோ தியானமோ ஏன் செய்ய வேண்டும்? மற்றவர்களுக்கு உதவி செய்தாலே அது கடவுளுக்காக செய்யப்படும் பூஜை தியானம் தவம் அனைத்தும் ஆகும் என்றார் மாதவன்.
சுதீவருக்கு மாதவன் தன்னை ஏளனம் செய்கிறார் எனத் தோன்றியது. நான் செய்யும் தவமெல்லாம் வீண் வேலை என்று பொருட்படச் சொல்கிறீர்களா என்று கோபத்துடன் சுதீவர் கேட்டார். அதற்கு மாதவன் நான் உங்களைப் பற்றியோ உங்கள் தவத்தைப் பற்றியோ குறை கூறவில்லை. நான் என்னுடைய கருத்தைக் கூறுகிறேன் என்றார் பணிவுடன். கோபத்துடன் குதித்து எழுந்தார் சுதீவர். உன்னைப் போன்ற நாஸ்திகனை மன்னிக்கவே கூடாது. இந்த நிமிடத்திலிருந்து நீ கண்பார்வை இழந்து நடக்க முடியாமல் படுக்கையில் வீழ்வாய் என்று சாபமிட்டார். ஆனால் மாதவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை. மீண்டும் மாதவன் பணிவுடன் சுவாமி நீங்கள் சாந்தம் அடையுங்கள். உங்களைப் போன்ற மகான் கோபம் அடையும்படி நான் பேசியது தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார். மாதவா என் சாபம் உனக்குப் பலிக்கவில்லை. நீ என்ன மகாத்மாவா என்றார் கோபத்துடன் சுதீவர். அப்படியில்லை சுவாமி காட்டுவாசி அழகான இளம்பெண் வழியில் கண்ட இளைஞன் ஆகியோருக்கு நீங்கள் சாபம் கொடுத்து தங்கள் தவவலியை இழந்து விட்டீர்கள். எனக்கு மட்டுமில்லை இனி நீங்கள் யாருக்கு சாபம் கொடுத்தாலும் அது பலிக்காது. போகட்டும் நீங்கள் என்னிடம் பெற வந்த புண்ணியத்தின் ஒரு பகுதியை உங்களுக்கு இப்போது நான் அளிக்கிறேன். அந்தப் புண்ணியத்தினால் நீங்கள் சாபமிட்டவர்கள் எல்லாருக்கும் இந்தக் கணத்திலிருந்து சாபம் நீங்கிவிடும். உங்கள் தவவலிமையை இந்த வினாடியிலிருந்து நீங்கள் மீண்டும் பெற்று விட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இப்போது எனக்கு சாபம் கொடுக்கலாம் அது பலிக்கும் என்றார்.
சுதீவர் தனது செய்கைகளினால் வெட்கமடைந்தார். தனக்கு அறிவைப் புகட்டிய மாதவனுக்கு நன்றி கூறிவிட்டு மவுனமாக தன் குருவைத் தேடிச் சென்றார். வரும் வழியில் தான் சாபமிட்டவர்கள் மறுபடியும் தன் நிலைக்கு மாறி இருப்பதை அவர் கண்டார். தனது குரு சுசாந்தரிடம் நடந்தவற்றைக் கூறி அதற்கு விளக்கம் கேட்டார். தவத்தினால் பல சக்திகளை அடையலாம். ஆனால் தன் கடமையைச் சிறப்பாக செய்பவனும் பிறருக்கு உதவி செய்வதையே லட்சியமாகக் கொண்டவனுமான ஒரு மனிதன் ஒரு தவயோகியை விட அதிகப் புண்ணியம் செய்தவன் ஆகிறான் என்றார். சுதீவர் மேலும் ஒரு சந்தேகம் வந்தது. தனது குருவிடமே கேட்க முடிவு செய்தார். குருவே இப்போது மாதவன் தான் செய்த புண்ணியத்தை தானம் செய்து விட்டான். ஆகையால் அவனுடைய சக்தியும் குறைந்து விடும் அல்லவா? என்று கேட்டார். மற்றவர்களுக்காகத் தன் புண்ணியத்தையே தானம் செய்தால் அதுவே பெரிய புண்ணியம். மாதவனின் சக்தி குறையவில்லை. முன்னைவிட இப்போது அதிகமாகி விட்டது என்றார் சுசாந்த முனிவர். குருவே முன்னைவிட என் தவவலிமையை அதிகமாக்குவேன். நான் மீண்டும் காட்டுக்குத் தவம் புரியச் செல்கிறேன் என்று கூறி விடை பெற்றார் சுதீவர்.