ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 213

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

யாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல் இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும்? லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை (தொழில்) அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு ஏதாவது புதிதாக ஒரு பிரச்சனை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் (விரயம்) செய்வதுமாக ஒரு அசுரத் தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைப்படுத்தி பயிர்களுக்கு அந்த மனோசக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது.

உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு. ஆத்மா எத்தனையோ உடலுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆன்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்த பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதா சர்வகாலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும். பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை என்பது எக்காலத்திலும் எந்த மனிதனுக்கும் கிடையாதப்பா. பிர்ச்சனைகளை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதில்தான் வாழ்க்கை நிலை அடங்கியிருக்கிறது. அசைக்க முடியாத இறை பக்தி கொண்ட மனிதனுக்கும் வேறுபாடே அதிகளவு துன்பத்தை பார்க்கும் பொழுது அதனை எப்படி எதிர் கொள்கிறான்? என்பதை பொறுத்துதான். ஒரு வேளை இறைபக்தி இல்லாவிட்டாலும் தன்னுடைய அனுபவ அறிவைக் கொண்டும் தான் கற்ற கல்வியைக் கொண்டும் துன்பங்களை எதிர் கொண்டு வாழ்கின்ற மனிதன் எத்தனையோ மடங்கு மேலப்பா. இறை பக்தி இருந்தும் சோர்ந்து போகின்ற மனிதனை விட. எனவே மன சோர்வு மிகப்பெரிய பிணி. அதற்கு இங்கு வருகின்ற யாரும் இடம் தராமல் இருப்பதே சிறப்பு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 212

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இது போல நலம் நலம் நலமே எல்லா நிலையிலும் எல்லா சூழலிலும் தொடர்ந்து கிட்டிட இறைவன் அருளால் நல்லாசிகள் இத்தருணம் இயம்புகின்றோம். இறைவன் அருளாலே மனிதர்களின் வாழ்விலே பின்னிப் படர்ந்து கிடக்கின்ற கர்ம வினைகள் பெரும்பாலும் பாவங்களே இருப்பதால்தான் அறியாமை அதிகமாக மதியிலே (அறிவிலே) படர்ந்து கிடக்கிறது. அறியாமையை விட மிகப்பெரிய துன்பம் மனிதனுக்கு வேறு எதுவுமில்லை. எல்லாம் அறிந்திருக்கிறோம் என்று அறியாத நிலையிலும் அறிந்தது போல் மனிதன் இருப்பதுதான் அறியாமையின் உச்ச நிலையாகும். அதாவது லோகாய அறிவு என்பது ஒரு நிலை. லோகாய அறிவை நன்றாகக் கைவரப் பெற்ற மனிதன் கூட பல்வேறு தருணங்களில் அந்த அறிவால் பெரிய பலனேதுமில்லாமல் துன்பத்தில் வாழ்வது உண்டு. அதே சமயம் அறிவை செயல்பட விடாமல் முடக்குவதில் ஆசைக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அந்த ஆசைக்கு துணையாக கடுமையான பாசத்திற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு. ஆசையும் பாசமும் மட்டுமா அறியாமைக்கு துணை செய்கிறது?. அதோடு உணர்ச்சி நிலை மிகு உணர்ச்சி நிலை. இவை அனைத்தையுமே கொண்டுள்ள மனிதன் அதிலிருந்து தப்ப இயலாமல் தொடர்ந்து போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறான் அன்றும் இன்றும் என்றும். எனவே தான் ஒரு மனிதன் எப்பொழுதுமே இறை பக்தியோடு சத்தியத்தை விடாது மனசாட்சியோடு தொடர்ந்து தர்ம சிந்தனையோடு வாழ மேற்கூறிய அறியாமை மெல்ல மெல்ல விலகும்.

அறியாமை விலக விலகவே மனிதனுக்கு நிம்மதி பிறக்கும். அது போல் நிலையிலே மனிதன் தன்னையும் தன்னை சேர்ந்த குடும்பத்தாரையும் பாச வலைக்குள் வைத்து பார்க்கும் பொழுதுதான் என் பிள்ளை இப்படி துன்பப்படுகிறானே என் தாய் இப்படியெல்லாம் கடினப்படுகிறாளே என்றெல்லாம் எண்ணி எண்ணி ஒரு மயக்கத்தில் ஆழ நேரிடும். ஆயினும் கூட அந்த பாசம்தான் பெருமளவு குடும்பக் கடமைகளை செய்ய மனிதனுக்கு ஒருவிதத்தில் உதவுகிறது. இருந்தாலும் அதுவே அதிகமாகும் தருணத்தில் அவனை அறியாமையில் வழுக்கி விழ வைக்கிறது. அதை அப்படியே மூன்றாவது மனிதன் மீது பார்க்கும் பொழுது இரத்த சம்பந்தமில்லாத நட்போ உறவோ இல்லாத மனிதரிடம் பார்க்கும் பொழுது அப்படியெல்லாம் ஏற்படாததால் அப்படி ஏற்பட்டு ஒரு மயக்கம் கிட்டாததால் மனிதன் அதனை சாதாரணமாகப் பார்க்கிறான். அவர்களின் துன்பம் மனிதனுக்கு துன்பமாகத் தெரிவதில்லை. அதை அப்படியே இரத்த சம்பந்தம் உடைய உறவுகளோடு பொருத்திப் பார்க்க பழகிவிட்டால் அதுதான் ஞானத்தை நோக்கி செல்கின்ற பாதையாகும். அது எப்படி? சொந்த உறவுகளுக்கும் சொந்த நட்புகளுக்கும் பழகிய உறவுகளுக்கும் துன்பம் என்றால் பார்த்துக் கொண்டு இருப்பதா? என்றால் யாங்கள் அந்த பொருளில் கூறவில்லை. யாராக இருந்தாலும் துன்பம் வந்துவிட்டால் அதனை துடைக்கும் வழியை மேற் கொண்டிட வேண்டும். ஆனால் உள்ளத்தில் பாசமும் ஆசையும் அறியாமையும் வைத்துக் கொண்டு அதனை செய்யாமல் நடுநிலையோடு செய்யப் பழகினால் மனதிலே சோர்வில்லாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். இந்தக் கருத்தை மனதிலே வைத்துக் கொண்டால் வாழ்வு நலமாகும் சுகமாகும் சாந்தியாகும்.

சுலோகம் -110

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-63

கோபத்தினால் அறிவின்மை ஏற்படும். அறிவின்மையால் நினைவு தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவு தடுமாற்றத்தினால் புத்தி அழிவு ஏற்படுகிறது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து வீழ்ச்சி அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதனின் ஆசை மற்றும் அவனது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் கோபத்தினால் அவனுக்கு அறிவு மயக்கம் ஏற்படுகிறது. இதனால் அவனது அறிவு தான் செய்வது மட்டுமே சரியானது என்று எண்ணி மனதில் தோன்றியதெல்லாம் செய்து கொண்டு சரியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறுகிறது. இந்த தடுமாற்றத்தினால் அவனது புத்தி கீழ் நிலைக்கு சென்று அழிய ஆரம்பிக்கின்றது. புத்தி அழிவதினால் மனிதன் தன் நிலையில் இருந்து கீழான நிலைக்கு செல்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -109

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-62

புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அவ்விசயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையிலிருந்து கோபம் வருகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இறைவனின் மீது தனது மனதை வைக்காதவனின் சிந்தனையானது உலகத்தில் உள்ள போகப் பொருட்களின் மீது சென்று கொண்டே இருக்கிறது. அந்த பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதினால் அந்தப் பொருட்களின் மீது பற்று உண்டாகிறது. பற்று உண்டான பின் அவற்றை அனுபவித்து விட வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆசையை அனுபவித்து விட்டால் இதை விட பெரிய ஆசையை அனுபவிக்க வேண்டும் என்று மனமானது மேலும் ஆசைப்படுகிறது. ஆசையை அனுபவிக்க சூழ்நிலை இல்லை என்றாலோ தடங்கல் ஏற்பட்டாலோ அதற்கு காரணமானவர் மீது கோபம் வருகிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -108

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-61

அனைத்து புலன்களையும் தன் வசப்படுத்தி ஒரு முகப்படுத்திய சித்தமுடையவன் என்னையே பரகதியாகக் கொண்டு தியானத்தில் அமர வேண்டும். ஏனெனில் எவனுடைய புலன்கள் வசப்பட்டு இருக்கின்றனவோ அவனுடைய புத்தி உறுதியானதாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

தன் அனைத்து புலன்களையும் தனக்குள் உள்ளிழுத்து தன் வசப்படுத்தியவனின் புத்தியானது உறுதியான வைராக்கியத்துடன் இருக்கும். அந்த உறுதியான வைராக்கியத்துடன் தன் மனதை ஒரு முகப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை காண வேண்டும் என்று தியானத்தில் அமர்ந்தால் தனக்குள் இருக்கும் இறைவனை கண்டு உணரலாம். அப்போது அவனுடைய மனதில் இருக்கும் ஆசைகள் அனைத்தும் அழிந்துவிடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

புத்தி உறுதியாகி தியானத்தில் அமர்பவனுடைய மனம் இறைவனிடம் ஒன்று சேர்கிறது. அப்படி மனதை இறைவனிடம் ஒன்று சேர்த்த சாதகனின் மனமாகிய காற்றும் நெருப்பாகிய இறைவனும் ஒன்று சேர்வதினால் காற்றும் நெருப்பும் சேர்ந்து வைக்கோலை எரிப்பது போல் சாதகனின் மும்மலங்களும் கர்மாக்களும் எரிந்து சாதகன் முக்தி பெறுகிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 211

கேள்வி: தியானம் செய்யும் பொழுது மனம் அலை பாய்கிறது:

இது இயல்புதான். உன்னுடைய எண்ண ஓட்டத்தைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டேயிரு. எண்ணங்களை அடக்க முயன்றால் அது திமிறிக் கொண்டு எழும். எண்ணங்களை கவனிக்கப் பழகு. தானாகவே அனைத்தும் உன்னை விட்டு மெல்ல மெல்ல சென்று விடும். அதற்குத் தான் யாங்கள் (சித்தர்கள்) எடுத்த எடுப்பிலேயே தியானம் குறித்து உபதேசம் செய்யாமல் ஸ்தல யாத்திரை தர்மம் தொண்டு என்று கூறி அதன் மூலம் பாவங்களைக் குறைத்து பாவங்கள் குறைந்த நிலையில் ஒருவன் தியானத்தை செய்ய அமர்ந்தால் அந்த தியானம் சற்று சற்று எளிதாக வசப்படும். பொதுவாக மனிதர்கள் அறிந்திட வேண்டும். நாங்கள் இப்படி கூறுவதால் மனித விஞ்ஞானம் இதனை ஏற்றுக் கொள்ளாது என்றாலும் கூட ஓரளவு புற விஞ்ஞான அறிவும் அக மெய்ஞான அறிவும் ஓரளவு புரிந்த மனிதன் புரிந்து கொள்வான். ஏனைய மனிதர்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வது ஏற்புடையது. அதாவது எத்தனையோ விஷய ஞானங்களை ஆய்வு செய்து இறைவன் அருளால் புறத்தே தன்னை வளர்த்துக் கொண்ட மனித குலம் இந்த பிரபஞ்சம் அனைத்துமே சில விதிகளுக்கு உட்பட்டு இயங்குகிறது என்பதை அடிக்கடி மறந்து விடுகிறது. பிரபஞ்சம் மட்டுமல்லாது இந்த அண்ட சராசரங்களும் பல்வேறு விதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது.

இந்த விதிகளை மீறி மனிதன் எதையாவது செய்ய வேண்டுமென்றால் அதற்கும் அந்த விதிமுறைகளுக்கும் ஒரு தொடர்பும் ஒரு எதிர்சக்தியும் இருக்க வேண்டும். அந்த வகையிலே ஒரு வாகனம் சீராக ஓட வேண்டும் என்றால் அந்த வாகனம் எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வாயு உருளைகள் வடிவம் மிகவும் சிறப்பான முறையிலும் நல்ல முறையிலும் இருக்க வேண்டும். வேகமாக செல்வதற்கென்று வாகனம் வடிவமைக்கப்பட்டால் அதற்குரிய வாயு உருளை அகமில்லாமல் இருக்க வேண்டும். உதாரணமாக அதிக வேகம் என்றால் வாகனத்தின் எடை குறைவாக இருக்க வேண்டும். அதே சமயம் அந்த வாகனம் எந்தளவிற்கு விரைவாக செல்கிறதோ அந்தளவிற்கு செல்லுகின்ற பாதையிலே வாயு உருளையால் உராய்வுத் தன்மை ஏற்படும். இந்த உராய்வு எதிர்விசையை ஏற்படுத்தி வேகத்தை மட்டுப்படுத்தும். அந்த உராய்வு தன்மையை குறைப்பதற்கென்று அந்த வாயு உருளைகள் வடிவமைக்கப் பட்டிருந்தால் அது எதிர் விளைவை குறைவாகத் தரும். அப்படி குறைக்கப்பட வேண்டுமென்றால் அதன் ஒட்டு மொத்த பாகத்திலே ஓடுகின்ற தளத்திலே மிக மிக மிக குறைவான பகுதியே அந்த வாயு உருளை படவேண்டும். அந்த அளவிற்கு அது குறைவாக படும் பொழுதுதான் குறைவான எதிர் விளைவுகள் ஏற்படும். வேகம் மட்டுப்படாது. இதையெல்லாம் தாண்டி ஓடுகின்ற ஓடுதளம் என்பது சமச்சீராக இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பொது விதி. அதே சமயம் வேகம் எந்தளவிற்கு முக்கியமோ அந்த வாகனத்தை சட்டென்று நிறுத்த வேண்டுமென்ற நிலை வந்தால் அந்த சமச்சீரான தளம் அதற்கு பாதகத்தை தந்துவிடும். அதற்காக சற்றே சீரற்ற ஓடுதளத்தை உருவாக்கினால் அது ஓரளவு பாதுகாப்பைத் தந்தாலும் வேகத்தை மட்டுப்படுத்தும்.

இப்படி எல்லாவகையிலும் பார்த்து அதிவிரைவாக ஓடுவதற்கென்று ஒருவகையான ஓடுதளமும் அதற்கேற்ற வாகனமும் அதில் செல்ல வேண்டும். மற்றபடி சராசரி மாந்தர்கள் (மனிதர்கள்) பயணம் செல்கின்ற அந்த பயண ஓடுதளமானது அதிக விரைவை ஏற்க வல்லாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஒரு வாகனம் அதன் உச்சகட்டத்தில் செல்கிறதென்றால் என்ன பொருள்? வாகனம் மட்டும் செல்லவில்லை. வாகனத்தில் செல்கின்ற மனிதர்களும் அதே வேகத்தில்தான் செல்கிறார்கள் என்று பொருள். சட்டென்று வாகனத்தை ஏதாவது ஒரு காரணத்திற்காக நிறுத்தவேண்டிய ஒரு தருணம் வந்துவிட்டால் வாகனத்தின் உள்ளே இருக்கின்ற தடையமைப்பு உள்ளேயிருக்கின்ற மனிதர்களை தடை செய்வதில்லை என்பதால்தான் சிறு விபத்துகளும் பெருவிபத்துகளும் ஏற்படுகின்றன. எப்படிப் பார்த்தாலும் தெளிவற்ற மனிதர்கள் குழப்பமான மனிதர்கள் மூடத்தனமான மனிதர்கள் இருக்கின்ற இந்த பரந்த பகுதியிலே அதிக வேகம் என்பது ஏற்புடையதல்ல. எதிர் நோக்கின்ற வேகத்தை விடவே 60 கல் வேகம் என்பதே அதிகம்தான். இப்படி குறைவாக செல்வதால் என்ன லாபம் வந்துவிடும்? என்றெல்லாம் பாராமல் பாதுகாப்பை மட்டும் கருதி வாகனத்தை இயக்குவதே எம்வழி (அகத்திய மாமுனிவர்) வரும் சேய்களுக்கு (பிள்ளைகளுக்கு) ஏற்புடையதாகும். ஏனென்றால் வாகனத்தின் பாகங்கள் பல்வேறு விதமான முறையிலே ஆய்வு செய்யப்பட்டு வருவதாக மனிதர்கள் எண்ணிக் கொண்டாலும் கூட அதிக அனலும் அதிக உராய்வும் கண்பார்வைக்குத் தெரியாத வெடிப்புகளையெல்லாம் ஏற்படுத்தி திடீர் அழுத்தத்தால் அவைகள் விலகவும் சுயகட்டுப்பாட்டை இழக்கவும் ஏற்புடையதான ஒரு சூழலில்தான் இருக்கிறது. இறைவன் கருணையும் ஒருவனின் ஜாதகப்பலனும் நன்றாக இருக்கும் வரையில் நலமே நடக்கும். எப்பொழுது ஒருவனுக்கு பாவ வினை குறுக்கே வரும்? என்பதை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே இறைவனை வணங்கி அமைதியான முறையில் சாந்தமான முறையில் குறைந்த வேகத்தில் வாகனத்தை இயக்குதலே பொதுவாக அனைவருக்கும் ஏற்புடையதாகும். ஆனால் மனித மனம் இதை எந்தளவு ஏற்கும் எந்தளவு ஏற்காது என்பது எமக்குத் தெரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 210

கேள்வி: திமிரி (வேலூர் மாவட்டம்) ஆலயத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) எவ்வித இடையூறுமின்றி ஸ்தாபிதம் செய்யப்படவும் தீர்த்தத்தின் மகிமை பற்றியும் அந்த குளத்தில் நீராடினால் என்ன பயன்? என்றும் அந்த குளத்திற்கு கரை கட்டும் வேலை விரைவில் நடைபெற தங்கள் ஆசியும் மேலும் இந்த ஆலயத்தின் சிறப்பை இந்த இறைவனின் சிறப்பைப் பற்றியும் சொல்லி அருள வேண்டும்?

இறைவன் பெயர்: அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர்.

திருக்கோவில் உள்ள இடம்: திமிரி வேலூர் மாவட்டம்.

இறைவனின் கருணையைக் கொண்டு முன்பே அன்னவனுக்கு சிலவற்றை இயம்பியிருக்கின்றோம். இறைவன் விருப்பத்திற்கேற்பவே அனைத்தும் நடந்து கொண்டேயிருக்கிறது. எனவே தக்க காலத்தில் த்வஜஸ்தம்பம் (கொடிமரம்) சிறப்பாய் அமையும். ஏன் இத்தனை தடைகள் வருகின்றன. ஏன் ஏக த்வஜஸ்தம்பம் ஆயத்தம் செய்தும் அது பலனளிக்காமல் போனது? என்பதற்கெல்லாம் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. ஆயினும் கூட அன்னவனே அறிவான். ஐயன் (சிவபெருமான்) லிங்க ரூபமாய் வெளிப்பட்டு பல ஆண்டுகள் பூர்த்தியான பிறகே ஏகாந்த ஆலயமும் கலச விழாவும் காண நேர்ந்தது. அதுவும் இறை விருப்பமே. எனவே த்வஜஸ்தம்பமும் தீர்த்த நிலையும் விரைவில் இறைவன் அருளால் நன்றாக தம்மை அமைத்துக் கொள்ளும். இது போல நிலையிலே பொதுவாய் மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களை பயன் படுத்தினாலும் அதனை ஊறு (இடையூறு) செய்யாமல் பயன்படுத்தினால் அது என்றென்றும் அவனுக்கு தொடர்ந்து நலத்தை நல்கும். ஆனால் ஒரு மனிதன் இயற்கை சார்ந்த எந்த விஷயங்களையும் குறிப்பாய் நீர் நிலைகளை பயன்படுத்தும் பொழுது அதனை முறையாக பயன்படுத்தாமல் முறை தவறி பயன் படுத்துவதால் நீர் தோஷத்திற்கு ஆளாகி நீரால் அதிக பாதிப்பு ஒன்று நீர் குறைந்து பாதிப்பு அல்லது நீர் அதிகமாகி பாதிப்பு வருகிறது.

திமிரி ஆலயம் என்று இல்லை. எந்த ஆலயத்திலும் தீர்த்தம் என்பது மிக மிக புனிதமானது உயர்வானது. அதனைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது மனிதனின் கடமை. பல ஆலயங்களில் தீர்த்தம் இருந்த இடமே இல்லாமல் போயிருக்கிறது. இன்னொன்று தீர்த்தம் இருந்தாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் அதனை மனிதன் வைத்திருக்கிறான். எனவே அந்த தீர்த்த தடம் நன்றாய் சுத்தி செய்யப்பட்டு பூரணத்துவம் பெற்றாலும் சிறிதளவு நீரையெடுத்து தெய்வ காரியங்களுக்கு அபிஷேகங்களுக்கு பயன்படுத்துவதே இத்தருணம் ஏற்புடையது. மனிதர்கள் அதிலே நீராடுவதோ வேறு செயல்கள் செய்வதோ ஏற்புடையது அல்ல. அப்படியானால் அடுத்ததொரு ஐயம் வரும். ஒரு மனிதன் இந்த தீர்த்தத்தில் இறங்கி நீராடினால் அதனால் அந்த தீர்த்தம் மாசுபட்டால் அது எப்படி புனித தீர்த்தமாகும் என்று. உண்மையில் தெய்வீகம் சார்ந்த எதனையும் மனிதனால் மாசுபடுத்த முடியாது. ஆனால் மனிதனுக்கு தரவேண்டிய நல்விஷயங்களையெல்லாம் இறைவன் சமயத்தில் மறை பொருளாக வைத்திருக்கிறார். அந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாமல் மனிதன் அதனை தவறாக கையாளும் பொழுது கிடைக்க வேண்டிய நற்பலன் கிட்டாமல் வேறு வேறு பலன்கள் அவனுக்கு வந்துவிடுகிறது. எனவே தீர்த்தம் பாதிக்கப்படும் என்று நாங்கள் அந்த நோக்கில் கூறவில்லை. அவ்வாறு நீராடாமல் இருப்பது தற்சமயம் அங்கு வரும் பக்தர்களுக்கு நன்மையைத் தரும். வேண்டுமானால் தூய சிந்தனையுடன் தூய தேகத்துடன் அந்த தீர்த்தத்தை எடுத்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யும் நோக்கிலே பயன்படுத்தலாமே தவிர மனிதர்களுக்கு அதனை தற்சமயம் பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல. அந்த தீர்த்தம் நன்றாய் பொலிவு பெற்ற பிறகு அந்த தீர்த்தத்தையும் அதுபோல் திமிரி ஐயன் இருக்கும் அந்த தீர்த்த நிலைக்கு அந்த தீர்த்தத்தையே வைத்துக் கொள்ளலாம்.

அருள்மிகு ஸ்ரீ சோம நாத பாஷாண லிங்கேஸ்வரர் கோவிலைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்

சுலோகம் -107

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-60

அர்ஜூனா பற்று அழியாததால் கலக்குபவைகளான புலன்கள் முயற்சியுள்ள புத்தியாலியான மனிதனின் மனதைக் கூட பல வந்தமாக இழுத்துச் சென்று விடுகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தனது புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் தனக்குள் உள்ளிழுத்து வைத்துக் கொண்டு மன உறுதியுடன் இருந்தாலும் மனதில் இருக்கும் ஆசைகளை அழிக்காவிட்டால் எவ்வளவு புத்திசாலியான மனிதனின் மனதைக் கூட புலன்களானது பலவந்தமாக இழுத்துச் சென்று விடும். ஆகவே மனிதன் தன் புலன்களை ஆசைகளின் வழியாக செல்ல விடாமல் உள்ளிழுத்துக் கொண்டதும் தொடர்ந்து தனக்கான யோக சாதனைகளை (எப்படி என்பதை அடுத்த சுலோகத்தில் சொல்கிறார்) செய்து மனதை ஒரு நிலைப்படுத்தி தனக்குள் இருக்கும் இறைவனை உணர முயற்சிக்க வேண்டும் இறைவனை கண்டு உணர்ந்தால் அனைத்து ஆசைகளும் அழிந்து விடும் அதன் பிறகு புலன்கள் மனதை இழுக்க முடியாது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

திருச்செந்தூர் முருகன் பழைய புகைப்படங்கள்

உற்சவர்
கோவில் யானை கோவிலுக்குள் நுழையும் காட்சி

மூன்று தலை நந்தி

கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் புகழ்பெற்ற கோவிலாக விருபாட்சர் கோவிலில் உள்ளது. இங்கு மூன்று தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது. இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் இக்கோவிலின் கோபுரம் மிகவும் உயரமானதாகும்.