ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 225

கேள்வி: அகத்தியர் வழிபட்ட ஸ்தலங்கள் கையாலயத்திலிருந்து கன்னியாகுமரி வரை:

இறைவன் அருளைக் கொண்டு யாம் கூறுவது யாதென்றால் இந்த அகிலாண்ட லோகம் அண்ட சராசரங்கள் அனைத்தையுமே யாம் ஸ்தலமாகத்தான் (பரமாகத்தான்) பார்க்கிறோம். இங்கு எதைப் பார்த்தாலும் எமக்கு இறையாகத்தான் தெரிகிறது. மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குதான் ஆலயம் என்ற ஒரு இடம். எம்மைப் போன்ற நிலையை எய்து விட்டவர்களுக்கு பார்க்குமிடமெங்கும் நீக்கமற தெரிவது இறையொன்றுதான். எனவே அந்த இறை இந்த ஆலயத்தில் மட்டும்தான் இருக்கிறது. நான் சென்று வணங்கியது இங்குதான். எனவே நீங்களும் சென்று வணங்குங்கள். உங்களுக்கும் நல்லது நடக்கும் என்பது போன்ற போதனைகளை ஒரு பொழுதும் யாம் (அகத்திய மாமுனிவர்) கூறவிரும்பவில்லை. அப்படிக் கூறியிருந்தால் அப்படியாவது ஆலயம் செல்ல வேண்டுமே என்கிற நோக்கில்தான். அந்த வகையில் பார்க்கப் போனால் எல்லா ஸ்தலங்களுக்கும் மனிதர்கள் பார்வையில் கூறப்போனால் இந்த மண்ணுலகிலே அனைத்து இடங்களுக்கும் ஏன்? ஆழி (கடல்) தாண்டியும் கூட யாங்கள் சென்று யாங்கள் என்றால் எம் போன்ற அனைத்து சித்தர்களும் சப்த ரிஷிகளும் சென்று வழிபட்டிருக்கிறோம். வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். இனியும் வழிபட இருக்கிறோம். எனவே இந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் அல்லது அந்த ஆலயம் ஒன்றுதான் நாங்கள் சென்ற ஆலயம் என்று யாரும் எடுத்துச் சொல்லத் தேவையில்லை. ஏதோ அறிந்தோ அறியாமலோ ஒருவன் ஒரு லிங்கத்தையோ அல்லது பரம் பொருளின் வேறு வடிவத்தையோ வைத்து சிறு பூஜை செய்தாலும் அந்த பூஜை ஆத்மார்த்தமாக இருந்தால் அங்கும் நாங்கள் சென்று வழிபாடு செய்ய சித்தமாக இருக்கிறோம். எனவே எல்லா ஆலயங்களும் யாம் சென்ற ஆலயங்கள்தாம். இதில் எந்தவிதமான பேதமும் இல்லையப்பா.

கேள்வி: அகத்தியர் சிலா ரூபம் பிரதிஷ்டை செய்ய ஆசிகள்:

மனிதரிலே ஓரளவு பக்குவம் அடைந்த மனிதனைப் பார்த்து உனக்காக சிலை வைக்கிறோம். நீ அனுமதி கொடு. நாங்கள் எல்லாம் வணங்குகிறோம் என்றால் அவனே வெட்கப்படுவானப்பா. எம்மிடமே இது குறித்து கேட்டால் நாங்கள் என்ன பதில் கூறவது?

மால்யவந்த ரகுநாதசுவாமி

கர்நாடாக ஹம்பி இந்த இடத்திற்கு ராமர் லட்சுமணன் வந்தபோது ராமருக்கு தாகமாக இருந்தது குடிக்க தண்ணீர் இல்லை. எனவே லட்சுமணன் தனது அம்பால் ஒரு பெரிய பாறாங்கல் மீது ஒரு அம்பு எய்தினான். பாறை 2 ஆக பிளவுபட்டு அந்த பாறையின் நடுப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்தது. அதன் இருபுறமும் பிற்காலத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்து மால்யவந்த ரகுநாதசுவாமி கோவில் கட்டப்பட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 224

கேள்வி: தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் வாசி யோகம் பயிற்றுவிக்கும் ஆசிரியரை நியமித்து பொது மக்களுக்கு நோய் நீக்கும் யோக முறைகளை சொல்லித்தர அனுமதி அளிக்க வேண்டும்?

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகிறோம். இன்னவனின் வினாவிற்கு அவன் கூறியதை அதாவது வாசியை திருப்பி வாசித்தால் அதே பிராணாயாமம் அப்பா. வாசியை திருப்பித் திருப்பி வாசி. அதே பிராணாயாமம். இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். எமை (அகத்திய மாமுனிவர்) நோக்கி வருகின்ற மனிதர்கள் பெரும்பாலும் கான பிம்பப் பேழையிலே (TV) எங்களை வைத்து கற்பனா கதையெல்லாம் பிம்பமாக்கிக் காட்டுகிறார்களே? அதை எண்ணியும் அதனை இயம்புங்கால் நல்விதமாய் காதைகளை(கதைகளை) வாசித்து வாசித்து அந்தக் காதைகளில் உள்ளவற்றைப் போலவே தொடர்ந்து இது போல எம் வாழ்க்கையிலும் சித்தர்கள் தலையிட்டு அனைத்தையும் தீர்த்து வைப்பார்கள் என்று நம்பிக்கையோடு வருகிறார்கள். தவறொன்றுமில்லை. இருந்தாலும் எப்படி படிப்படியான ஒரு முன்னேற்றமோ அஃதாெப்ப மழலை தன் மழலை மாறாத நிலையிலே கல்வி கற்க முனையும் பொழுது அந்த மழலையின் மன நிலைக்கு ஏற்ப வித்தைகள் அங்கே பயிற்று விக்கப்படுகின்றனவோ அதைப் போலதான் எம்மிடம் வருகின்ற மனிதர்களின் மனோ நிலையை அறிந்துதான் யாங்களும் வாக்கைக் கூறுகிறோம். இந்த நிலையிலே இங்கு வருகின்ற மாந்தர்களின் பூர்வீக பாவங்கள் குறைந்தால் ஒழிய வாசி யோகமோ அது தொடர்பான எந்த ஒரு சாகா கலையும் சித்திப்பது என்பது மிக மிக அரிது. இல்லையென்றால் ஆங்காங்கே மனிதர்கள் பயிற்றுவிப்பதாக கூறப்படுகிறதே? அங்கு சென்று வேண்டுமானால் கடுகளவு அறிந்து கொள்ளலாம். எனவே பாத்திரத்தை சுத்தி செய்யாமல் பாலைக் காய்ச்சினால் பால் திரிந்து விடுமப்பா. எனவே தான் எம்மைப் பொறுத்துவரை எம்மை(அகத்திய மாமுனிவர்) நாடி வருகின்ற மனிதனுக்கு யாங்கள் இப்படியெல்லாம் கடுமையான யோகப் பயிற்சியையெல்லாம் கூறாமல் இதுபோல் மிக எளிதான பக்தி மார்க்கத்தையும் அதோடு சார்ந்த தர்மத்தையும் கூறுகிறோம். இப்பொழுதும் கூறுகிறோம் இனியும் கூறுவோம் முன்பும் கூறினோம்.

நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அவரவர் மனம் அவரவர் விதிப்படி செயல்பட்டு விட்டுப் போகட்டும். ஆனால் விதி மாற வேண்டும். எங்கள் மதியில் நிம்மதி அமர வேண்டும் என்று இந்த ஜீவ அருள் ஓலை முன்னே வருகின்ற மனிதன் 100 க்கு 100 விழுக்காடு யாம் கூறுவதை உளமார ஏற்றுக் கொண்டால் கட்டாயம் படிப்படியான முன்னேற்றம் இறைவனருளால் கிட்டுமப்பா. எனவே யாமே தக்க காலமறிந்து எம்மிடம் வருகின்ற மாந்தர்களுக்கு இதுகாலம் இவன் லோக வாழ்க்கையில் நுகர்ந்து வந்த துன்பங்கள் போதும். இனி யோக வாழ்க்கையை நோக்கி செல்லலாம் என்ற ஒரு நிலை வரும் சமயம் யாமே அது குறித்து போதிப்போம். சிலருக்கு போதித்தும் இருக்கிறோம். ஆனால் போதித்தும் பலன் ஏதுமில்லை. மீண்டும் மீண்டும் லோகாயம் நோக்கிதான் மனம் ஓடிக் கொண்டே இருக்கிறது. எனவே பற்றற்ற தன்மை வராத வரை பெருந்தன்மையான குணம் வளராத வரை என் வீடு என் மக்கள் என் மனைவி என் ஆஸ்தி என்கிற எண்ணம் விட்டுப் போகாத வரை வாசி யோகம் எவருக்கும் சித்திக்காதப்பா.

சுலோகம் -120

பகவத் கீதை 3. கர்ம யோகம் முன்னுரை

சாங்கிய யோகத்தில் கர்மங்களை ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்றும் ஐம்புலன்களையும் அடக்கினால் மன உறுதி பெற்று யோக நிலையில் பரமானந்த நிலையை பெறலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். ஆனால் இதன் வழியாக மோட்சத்தை அடையலாம் என்று கிருஷ்ணர் எங்கும் சொல்லவில்லை. அப்படி என்றால் அனைத்தையும் துறந்த ஞானிகளுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்குமா? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மோட்சம் கிடைக்காதா? என்று அர்ஜூனனுக்கு சிறிது குழப்பம் உண்டானது. ஆகையால் கர்ம யோகத்தைப் பற்றி அர்ஜூனன் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதில் சொல்கிறார்.

இதில் விதிக்கப்பட்ட கர்மங்களை எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? செய்யா விட்டால் என்ன தீமை? கர்மம் எவ்வாறு பந்தத்தை ஏற்படுத்தும்? அது எப்படி முக்தியை அளிக்கும்? போன்ற பல கேள்விகளுக்கும் கர்ம யோகம் பற்றிய பல கேள்விகளுக்கும் இந்த அத்தியாயத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்படுகிறது.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-1

சுலோகம் -120

ஜனார்த்தனா உனது கருத்தின்படி கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்றாகிறது. இவ்வாறு இருக்கும் போது இத்தகைய கொடிய யுத்ததில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ எனக்கு உபதேசித்ததை சிந்தித்துப் பார்த்தால் உலகப் பற்றுகளில் இருந்து ஐம் புலன்களையும் விலக்கி ஐம்புலன்களையும் அடக்கி மனதை உறுதியுடன் வைத்திருந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை பெற்று முக்தி பெறலாம் என்று சொல்கிறாய். அப்படி என்றால் நான் முக்தி அடையவதற்கு நீ ஞானம் பெறுவதற்கான வழியை தானே உபதேசிக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த கொடுமையான யுத்தத்தில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 223

ஆதிக்கும் ஆதியான இறைபாதம் வணங்கி போற்றி அறிவிப்பேன் சிலவாக்கு இத்தருணம். அகத்தில் நுணுக்கமாய் கருத்தினை பதிய வைத்துவிடு. அறிவதை தெளிவாக உள் உணர்ந்து அறியவில்லை என்றால் எமது (அகத்திய மாமுனிவர்) வாக்கின் அர்த்தங்கள் விபரீதமாகுமப்பா. மனதை ஒரு நிலைபடுத்தியே எமது வாக்கினை அறிய வேண்டும். ஏற்றம் பெற ஏற்றம் பெற கர்மம் தொலைய பல தடங்கள் தரிசிப்பதும் தர்மங்கள் செய்வதும் என்றென்றும் சிறப்புதான் உயர் சிறப்புதான் எக்காலமும். காலகாலம் பல்வேறு மகான்கள் வழிபட்ட தடங்கள் (வழிகள்) சென்று வணங்குவதும் சிறப்புதான். அப்பனே (மகனே) எத்தனை தெய்வீக அருள் பெற்ற மாந்தன்(மனிதன்) ஆயினும் இறையை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் ஆயினும் எத்தருணமும் எக்காலமும் தடங்கள் சென்று வணங்குவது சிறப்பாம். ஏனைய குழும அமைப்பில் வழிபாடுகள் செய்தாலும் பித்ருக்கள் தோஷ நிவர்த்தி செய்தாலும் தெய்வ தீவிலும்(இராமேஸ்வரம்) தடத்திலும் ஏற்பதும் சிறப்பாம். செப்புவேன் எம்மாந்தன் ஆயினும் இறை தடமோ தெய்வீக வழிபாட்டு கூடமோ அமைத்து அமைத்து அமைத்து எத்தனை தான் சிறப்பாக வழிபட்டாலும் எத்தகைய அமைப்பு தன்னிலே சதம் சதம் (நூற்றுக்கு நூறு) பிராயசித்தங்கள் எடுபடாது. அப்பனே மாந்தர்கள் எத்தனை ஞான உபதேசத்தை செய்தாலும் கேட்டாலும் மனம் கொள். சதம் சதம் (நூற்றுக்கு நூறு) அகத்தில் சத்தியமும் தெளிவும் உடைய எத்தகைய ஆன்மீக மாந்தனும் (மனிதனும்) இன்றைய அண்டத்தில் இல்லையப்பா. ஆட்சி வழி மாந்தர்களோடு எவ்வித தொடர்பும் எந்த நிலையில் எதற்காக வைத்தாலும் அங்கே ஆன்ம ஞானம் கறைபடுகிறதப்பா.

அதிகாரம் உள்ள மாந்தனையோ (மனிதனையோ) ஆட்சி வழி மாந்தனையோ ஆன்ம வழி அமைப்பில் சேர்த்தால் சேர்த்தால் அது அமைப்பு சிதறுண்டுதான் போகுமப்பா. எந்தநிலையிலும் தான் (நான் என்ற எண்ணம்) தோன்றக் கூடாது. தோன்றினால் இறைவன் தோன்ற மாட்டான். குற்றமோ பாவமோ செய்வது மாந்தர்களின் (மனிதர்களின்) இயல்புதான். பாதகமில்லை. பாதகம் அதில் இல்லையப்பா. செய்வதை உணர்ந்து திருந்தாமல் இருப்பதே பாதகமப்பா. பகருங்கால் லக்கினத்தை ராசியை திருட்டிக்க (பார்க்க) பாலனே பொன்னன் திருட்டிருக்க இத்தகு மாந்தர்கள் (மனிதர்கள்) எம்வழி வரத்தக்கவர்கள். பகருவேன் ஏனையோர் இது போல் இருந்தால் இறை கருணை பெறலாம். பகருவேன் ஏக ஏக மாந்தனுக்கும் சரியோ தவறோ தனி தனி உணர்வு உண்டு. தனித்தனி கருத்து உண்டு உண்டு என்பதால் அதனை ஏளனம் செய்வதில் எவருக்கும் லாபமில்லை. உணர்ந்து உரைக்க வேண்டினால் மட்டுமே அறஉரை உரைக்க வேண்டும். நல் உணர்வு அற்றோர் இறை அருளினால் மட்டுமே நன்மையை உணர் இயலும் இயலும். தீமையை விலக்க இயலும் இயலும். உயர்ந்ததை பேச இயலும் இயலும். உன்னதத்தை உன்னதமாய் உரைக்க இயலும் இயலும். உள்ளத்தில் உறுதியும் திடமும் அறமும் கொண்டு வாழ இயலும்.

சுலோகம் -119

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-72

அர்ஜூனா இது தான் பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. இதை அடைந்த பின் யோகி ஒரு போதும் மோகமடைவதில்லை. மேலும் உயிர் பிரியும் நேரத்திலும் இந்த பிரம்ம நிலையிலேயே நிலை பெற்று பிரம்மானந்ததை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மன உறுதியுடையவன் எப்படி இருப்பான் என்று மேலே சொல்லப்பட்ட சுலோகங்களின் படி இருப்பவன் தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து பிரம்ம நிலையை அடைந்து விடுவான். இந்த நிலையை அடைந்தபின் அவனது மனம் ஒரு போதும் கலக்கமடையாமல் எதன் மீதும் ஈர்ப்பு ஏற்படாமல் உறுதியுடனே இருக்கும். அவனது உயிர் பிரியும் நேரத்தில் கூட இந்த உலகத்தை விட்டு செல்கிறோமே என்ற எண்ணமோ எங்கு செல்வோம் என்ற பயமோ இல்லாமல் தனது உடலின் மீதும் பற்று இல்லாமல் பரமானந்தத்தில் இருக்கும் நிலையை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

அனுமன்

கர்நாடகா ஹம்பி துங்கபத்திரா நதிக்கரையில் காணப்பட்ட அனுமானின் அழகிய மூர்த்தி. ராமாயண காலத்தில் ஹம்பி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டன. இங்கே தான் ராமர் அனுமான் மற்றும் பிற வானராங்களை சந்தித்து தனது படையை உருவாக்கினார்.

சுலோகம் -118

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-71

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமதை இல்லாதவனாக அகங்காரமற்றவனாக சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ அவனே அமைதியை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் உள்ள அனைத்து போகங்களையும் துறந்து விட்டு நான் எனது என்ற அகங்காரம் ஆணவம் இல்லாமல் சிறிதளவும் ஆசை இல்லாமல் இருக்கும் மனிதன் அமைதியை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 222

கேள்வி: ஆலய கோபுரம் பற்றி:

இறைவன் அருளால் ஆலயம் ஆகமங்கள் என்பது மகான்களாலும் ஞானிகளாலும் வகுக்கப்பட்டு மயன் மற்றும் விஸ்வகர்மாக்களால் அவை படி எடுக்கப்பட்டு பின்னாளில் மனிதர்களுக்கு உரைக்கப்பட்டது. எனவே மனிதன் குடி இருக்கின்ற மனை சாஸ்திரம் என்பது வேறு. இறை அருள் நிரம்பி இருப்பதாக கருதப்படுகின்ற ஆலய சாஸ்திரம் வேறு. சில விஷயங்களில் ஒத்து வந்தாலும் பல விஷயங்களில் ஆகம விதிகள் வேறு. ஆனால் கலிகாலத்தில் மனிதரிடம் நல் தன்மை விட தீய தன்மை அதிகரித்து கொண்டே வருவதால் ஆலய விதிமுறைகள் மீறப்பட்டு மறக்கப்பட்டு வருவதால் மனிதனுக்கு கிடைக்க வேண்டிய நல்ல ஆற்றல்கள் கிடைக்காமல் போகிறது. தோஷங்கள் அதிகமாகிறது. பொதுவாக பொது விதி மனிதன் நடப்பதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் பயன்படுத்தப்படும் சாலையானது அகலமாகவும் நல்ல முறையிலே இருப்பதோடு மட்டுமல்லாமல் அந்த சாலையை விட பல மடங்குதான் ஆலயமும் மனிதன் குடி இருக்கும் இல்லமும் உயரமாக இருக்க வேண்டும். எங்காவது அந்த சாலை உயரமாகவும் ஆலயம் அந்த சாலையின் உயரத்தை விட பள்ளமாகவும் இருந்தால் கட்டாயம் அப்பகுதியில் இறையின் அருளாட்சி என்பது குறைவு என்று புரிந்து கொண்டு இதை தக்க முறையில் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

பிரகாரங்கள் முறையாக வகுக்கப்பட்டு 1 3 5 7 என்று பிரதானமாக ஒற்றை படையில் வைப்பது ஒரு வகையான ஆகமம். அதை போல் அஷ்ட திக்கு பாலகர்களையும் அந்தந்த திசைகளில் முறையாக பிரதிஷ்டை செய்து அங்கு பரிபாலனம் செய்யும் வண்ணம் வைக்கப்பட வேண்டும். இவை பல ஆலயங்களில் பின்பற்றப்படுவதில்லை. ஆலயம் என்பது முன்புறம் சென்றுவிட்டு அதே புறம் தான் வர வேண்டும் என்பது விதி. நான்கு புறம் மட்டுமல்ல அஷ்ட திக்குகளும் பாதை வைக்கலாம் தவறோன்றுமில்லை. ஆனால் காலப் போக்கில் இந்த முறை மறைந்து பின்னர் பாண்டிய காலத்தில் நான்கு முறையும் சோழர் காலத்தில் பிரதானமாக ஒரு வாயில் மட்டுமே திறக்கப்பட்டு மூடப்பட்டது. இந்த விதி எதனால் மீறப்பட்டது என்றால் பாதுகாப்பு கருதி எல்லா புறத்திலும் பாதை இருந்தால் அங்கே பாதுகாப்பு பணிகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதால் பிற்காலத்தில் அந்தந்த வாயில்களெல்லாம் மூடப்பட்டு பிரதான வாயில் மட்டும் மூலஸ்தானத்தை நோக்கி உள்ள வாயில் மட்டும் திறக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் மனிதர்களாக தன் ஆட்சிக்காக சொந்த நலனுக்காக மீறப்பட்ட விஷயங்கள். உண்மையான ஆகமம் என்றால் ஒரு ஆலயத்திற்கு குறைந்தபட்சம் நான்கு புற வாயில்கள் இருக்க வேண்டும். கட்டாயம் ஆலயத்தை சுற்றி நெருக்கமாக வீடுகளோ அங்காடிகளோ (கடைகளாளோ) கட்டாயம் இருக்கவே கூடாது. ஆலயத்தை சுற்றி பிரதானமாக சாலைகளும் கட்டாயம் பசு மடமும் அந்த ஆலயத்தை சுற்றி அகலமான வீதிகளும் அந்த வீதிகளில் தேரோட்டம் வருவதற்கு உண்டான அந்த சூழல் இருக்க வேண்டும். இதுபோல ஆலயத்தில் உள்ள ராஜகோபுரம் உயர்ந்தும் மூலஸ்தான கோபுரம் சற்றே சாய்ந்து இருப்பதும் ஒரு பொதுவான விதி.

இன்னொன்று இந்த நிலை மாறி சில ஆலயங்களில் மூலஸ்தான கோபுரம் உயர்வாகவும் பிரதானமான ராஜகோபுரம் சற்றே உயரம் குறைவாகவும் கட்டப்படுகிறது. இது வேறு விதமான விதிமுறைகளில் உட்பட்டதாகும். இருந்தாலும் இது போன்ற பிரதான ராஜ கோபுரத்தை தொடர்ந்து அடுத்தடுத்து செல்லும் பொழுது ஒற்றைப் படை முறையே பின்பற்றப்படுவதுண்டு. 1 3 5 7 என்று எத்தனை எண்ணிக்கையில் வேண்டுமானாலும் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இறுதியாக மூலஸ்தான கோபுரம் அமைக்கப்படலாம். எனவே இந்த நிலையோடு நீ கூறியபடி பிரகாரங்களும் அமைக்கப்பட்டு அது எந்த அளவு ஆகமத்தை பின்பற்றப்பட்டு இருக்கிறது எத்தனை அடுக்குகள் கொண்ட கோபுரம் என்பதை மேலே உள்ள கலசம் அந்த எண்ணிக்கையில் இருந்து குறிப்பாக உணர்த்தும். ஆனால் பல இடங்களில் அந்த விதியும் மீறப்பட்டு இருக்கிறது. உதாரணமாக ஒரு பிரதான ராஜகோபுரத்திலே ஒன்பது அடுக்குகள் கொண்ட சாளரங்கள் துணை கோபுரங்களாக இருக்கும் பட்சத்திலே மேலே ஒன்பது கலசங்கள் வைக்கப்பட வேண்டும். அடுத்த கோபுரத்தில் மூன்று சாளரங்கள் துணை கோபுரங்களாக இருந்தால் மூன்று கலசங்கள் வைக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி எல்லாம் பல இடங்களில் இன்று பின்பற்றபடுவதில்லை. எப்படி விஞ்ஞானப்படி ஒரு அலையை கிரகிக்க முறையான அளவுகளில் அந்த அலைஉறிஞ்சி குழலை(ஆன்டெனா) அமைக்கிறார்களோ அப்படி முறை மீறி எல்லாமே உலோகம் தானே என்று எப்பிடி வைத்தால் என்ன என்று வைத்தால் முழுமையான முறையில் அதாவது முழுமையாக அந்த அலையை உள்வாங்க முடியாது. அதே போல பிரபஞ்ச ஆற்றலை விதிமுறைகள் மீறி கட்டப்படும் ஆலயங்களால் முழுமையாக உள்ளே வாங்க இயலாது. அங்கே வருகின்ற நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களால் இறை அருள் பரவுமே தவிர அங்கு உள்ள ஆகம விதிகள் மீறப்படுவதால் அங்கு எந்த நோக்கத்திலே அது கட்டப்பட்டதோ அந்த நோக்கம் காலப் போக்கிலே சிதறுண்டு போகும்.