பகவத்கீதையும் கிருஷ்ணரும்

ஒரு ஏழை பிராமணன் கங்கைக் கரையில் மனைவியோடு வசித்து வந்தான். தினமும் கீதை பாராயணம் செய்து விட்டு பிட்சை எடுத்து கிடைத்ததை மனைவியிடம் கொடுத்து சமைக்க சொல்லி அன்றைய உணவை கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து விட்டு இருவரும் சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் கீதையைப் பாராயணம் செய்யும் போது ஒன்பதாம் அத்தியாயத்தில் யோக க்ஷேமம் வஹாம்யஹம் என்று வந்தது. இதனை படித்ததும் அவனுக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் கோடானு கோடி பேர் இருக்கிறார்கள். அவ்வளவு பேரையும் கிருஷ்ணன் எப்படி நான் ரட்சிக்கிறேன் என்று சொல்கிறான். தானே ஒவ்வொருவரின் துன்பத்தையும் அறிந்து நேரில் சென்று போக்குவது என்பது நடக்காத காரியம். எல்லோரின் துன்பத்தையும் கிருஷ்ணன் தனி ஒருவனாக எப்படி சுமப்பான்? அவர்களை துன்பத்திலிருந்து எவ்விதம் காப்பாற்றுவான்? நான் பாதுகாக்கிறேன் என்றால் என்ன அர்த்தம் என்று திரும்பி திரும்பி கீதையை படித்தும் அவருக்கு விளங்கவில்லை. இதை விடக்கூடாது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்து அந்த சுலோகத்தின் அருகில் x என்ற குறியிட்டை போட்டுவிட்டு புத்தகத்தை மூடினார். ஜால்ராவையும் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வழக்கம் போல பிட்சைக்கு கிளம்பினான். அன்று யாரும் அவனுக்கு உணவு தானியங்கள் என்று எதுவும் பிட்சை அளிக்கவில்லை. ஜால்ராவை வைத்து பாடிக் கொண்டே சென்றான்.

பிராமணன் ஊருக்குள் அலைந்து கொண்டிருந்த சமயம் ஒரு சிறு பையன் பிராமணன் வீட்டு கதவைத் தட்டினான். பிராமணன் மனைவி வாசல் கதவை திறந்த போது அந்த சிறுவன் தலையிலிருந்து ஒரு பெரிய மூட்டையை இறக்கி வைத்தான். இதனை கண்ட அவன் மனைவி யாரப்பா நீ? என்ன இதெல்லாம்? தவறான இடத்திற்கு வந்து விட்டாய் போல இருக்கிறது என்றாள். அதற்கு அந்த சிறுவன் இல்லேம்மா. நான் அருகில் வசிக்கிறேன். இது என் குருநாதர் வீடு. அவர் எனக்கு கட்டளை இட்டிருக்கிறார். அந்த கட்டளையின் படி உணவிற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களும் கொண்டு வந்திருக்கிறேன் என்றான். நான் உன்னை பார்த்ததில்லை. அவருக்கு தெரியாமல் இதை நான் வாங்க மாட்டேன். இதெல்லாம் வேண்டாம் அவருக்கு தெரியாமல் வாங்கினால் அவர் என்னை கோபிப்பார் என்றாள். அம்மா உங்களுக்கு நான் இங்கே வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் என் குருநாதருக்கு தெரியும். இதோ பாருங்கள் அவர் சொன்னதும் இந்த நான் மூட்டையை சுமந்து கொண்டு மெதுவாக நடக்கிறேன் என்று என் முதுகில் இடது பக்கமும் வலது பக்கமும் பலமாக அடித்திருக்கிறார் பாருங்கள் என்றான். முதுகில் x போல் அடித்தற்கான தழும்பு இருந்தது. அவள் திகைத்தாள் கணவர் ஏன் இவ்வாறு இந்த சிறுவனிடம் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணியபடி நீ உள்ளை வா என்று அந்த சிறுவனை உள்ளே அழைத்து முதுகில் எண்ணெய் தடவி அவனுக்கு உணவளித்தாள். அவர் வரும் வரை ஓய்வெடு என்றாள். அவன் பூஜை அறையில் போய் படுப்பதாக சொல்லி உள்ளே சென்றான்.

பிராமணர் உணவு சமைக்க பிட்சை எதுவும் கிடைக்காமல் களைப்பாக வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் அவரை பேச விடாமல் ஒரு சிறுவனிடம் இப்படியா கொடுமைப்படுத்தி அடிப்பீர்கள் என்று அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன உளற்றுகிறாய் என்றார். அவரிடம் நடந்த அனைத்தையும் சொல்லி மேலும் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். பிராமணருக்கு தலை சுற்றியது. எனக்கு சிஷ்யனா? நான் சாமான் கேட்டேனா? அவனை அடித்தேனா? என்னம்மா உளறுகிறாய். நீ சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை என்றார். அதற்கு அவள் அந்த சிறுவன் முதுகை காட்டினான். அதில் x போல் அடித்த அடையாளம் இருந்தது. அவன் முதுகில் எண்ணெய் தடவினேன். சிறுவன் பொய் சொல்லவில்லை என்றாள். அதற்கு பிராமணர் என் கிருஷ்ணன் மீது ஆணையாக சொல்கிறேன். எனக்கு அவனைத் தெரியவே தெரியாது நான் அடிக்கவில்லை என்கிறார். அதற்கு அவள் இதோ பூஜை அறையில் தான் அந்த சிறுவன் இருக்கிறான் போய் பாருங்கள் என்றாள்.

பிராமணர் பூஜை அறைக்கு ஓடினார். வீடு முழுதும் தேடினார். சிறுவனைக் காணவில்லை. பிராமணருக்கு புரிந்துவிட்டது வந்தது கிருஷ்ணன் தான். வீட்டில் நிறைய உணவுப் பொருட்களை கொடுத்து தன் வறுமை நீக்கி கிருஷ்ணன் லீலை புரிந்திருக்கிறார். கிருஷ்ணரின் மீது நன்றியோடு கீதை புத்தகத்தை எடுத்து மறுபடியும் பாராயணம் செய்ய பக்கத்தை புரட்டினார். காலையில் அவர் சந்தேகத்தோடு போட்ட x குறியைக் காணவில்லை. கோடானு கோடி மக்களின் துன்பத்தை தீர்க்க நான் அருகிலே இருப்பேன் என்று சொல்கிறாயே. உன்னால் அது எப்படி சாத்தியம் என்று உன்னை சந்தேகப்பட்டேனே. உன்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்று எனக்கு புரிய வைத்தாய். கீதையும் நீயும் வேறல்ல என்பதைக் காட்ட கீதையில் நான் போட்ட x குறியை உன் முதுகில் தாங்கி வந்து என் சந்தேகத்தை தீர்த்து என் அகக் கண்ணை திறந்தாய் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு என்று பிரார்த்தனை செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 347

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் பலர் எண்ணலாம் எப்பொழுது வந்தாலும்  நலமான வாழ்வு உண்டு. நலமான எதிர்காலம் உண்டு. அச்சம் வேண்டாம். கலக்கம் வேண்டாம். கவலை வேண்டாம் என்று சித்தர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் கூட இதுபோல் உலகத்தில் அவ்வாறு எல்லா வகையிலும் நிம்மதியாக சந்தோஷமாக வாழ முடிவதில்லையே? பின் சித்தர்கள் ஆசிகள் கூறுகிறார்களே? பின் அது அவ்வாறு நடை முறையில் காண முடியவில்லை? என்று பலரும் ஐயமும் குழப்பமும் ஏன்? எங்கள் மீது விரக்தியும் கொண்டுதான் வாழ்கிறார்கள். நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது போல் இந்த உலகத்தில் ஒவ்வொரு ஆன்மாவும் பிறவி எடுத்ததின் நோக்கம் பூர்வீக பாவங்களைக் கழிப்பதற்கும் புதிதாக பாவங்களை சேர்த்துக் கொள்ளாமல் வாழ்வதற்குமே. அதாவது இது முற்றிலும் மனித பிறவிக்கு 100 க்கு 100 விழுக்காடு பொருந்தும். ஆயினும் கூட எண்ணற்ற பாவங்களை பிறவிகள் தோறும் இது ஆன்மாவிற்கு தான் செய்தது அல்லது செய்து கொண்டிருப்பது பாவம். இதனால் மற்றவர்களுக்கு துன்பமும் துயரமும் மன வேதனையும் ஏற்படும் என்பதை இறைவன் பெருங்கருணை கொண்டு கால அவகாசம் கொண்டு உணர்த்தவே எண்ணுகின்றார். இல்லையென்றால் எல்லோரும் கூறுவது போல தவறு செய்யும் பொழுதே ஒரு மனிதனை தடுத்து விடலாமே? தண்டித்து விடலாமே? என்ற பார்வையிலே பார்த்தால் இறைவன் எண்ணினால் அவ்வாறும் செய்யலாம்தான். ஏன்? அதை விட படைக்கும் பொழுதே எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். நல்லதையே எண்ண வேண்டும் நல்லதையே உரைக்க வேண்டும் நல்லதையே செய்ய வேண்டும் என்று  எல்லாம் வல்ல இறைவன் எண்ணினால் அது மிக எளிதாக நடக்குமே?. ஆனால் அவ்வாறு இல்லாமல் இதுபோல் நிலையிலே மனிதர்களுக்கு எல்லா வகையான சுதந்திரங்களையும் தந்து அவனை பல்வேறு தருணங்களில் அவன் போக்கிலே விட்டு இது நல்லது இது தீயது இது தக்கது இது தகாதது என்று அவனையே சிந்தித்துப் பார்க்க வைத்து இயல்பாக ஒருவன் நல்லவனாக மாற வேண்டுமே தவிர தண்டனைக்கு பயந்தோ அல்லது தன்னை கண்காணிக்கின்றான் ஒருவன் அதாவது தான் கண்காணிக்கப் படுகிறோம் என்பதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அச்சத்தினாலோ அல்லது வேறு ஏதாவது உபாதை ஏற்பட்டு விடும் என்பதற்காகவோ ஒருவன் நல்லவனாக இருப்பது என்பது இறைவனை பொருத்தவரை ஏற்புடையது அல்ல.

தங்கம் என்றால் அதன் இயல்பு எந்த நிலையிலும் மாறாதது. அதைபோல மனிதன் என்றால் தர்மத்திலும் சத்தியத்திலும் எப்பொழுதும் வழுவாமல் இருக்க வேண்டும். அந்த இயல்புதன்மை ஒரு ஆன்மாவிற்கு எப்பொழுது வரும்? ஏற்கனவே சேர்த்த பாவங்கள் அவனை நல்ல பாதையில் செல்ல விடாது. அந்த பாவங்களை  கழிக்க இறைவன் கருணை கொண்டு ஏதாவது ஒரு பிறவியிலே சில நல்ல விஷயங்களை செய்வதற்குண்டான வாய்ப்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது சில நல்லவர்களின் தொடர்பை ஏற்படுத்தித் தருவார் அல்லது நல்ல தாய் தந்தையர்களுக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டிய சூழ்நிலையை அப்படியொரு வாய்ப்பை தந்தருள்வார். அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் மெல்ல மெல்ல மேலேற வேண்டும். அதாவது எத்தனையோ கணக்கற்ற பிறவிகளை பிறந்து பிறகு இறந்து பிறகு பிறந்து பிறகு இறந்து அவையெல்லாம் நினைவுப்பதிவில் இருந்தும் இல்லாமல் போனது போல இந்த உலக வாழ்க்கையே நிஜம். இந்த தேகம் நிஜம். இந்த தேகம் சார்ந்த சுகத்திற்காகத்தான் பாடுபட வேண்டும். இந்த லோகாய விஷயங்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று சராசரி குணம் கொண்டு வாழ்கின்ற மனிதன் இறைவனின் கருணையால் ஏதாவது ஒரு பிறவியிலே மெல்ல மெல்ல இவையெல்லாம் பொய். இதனைத் தாண்டி மெய்யான விஷயம் ஒன்று இருக்கிறது. அதனை நோக்கி செல்ல வேண்டும். இந்த தேகம் என்பது ஆன்மாவிற்கு ஒரு கூடு போன்றது. இன்னும் கூறப்போனால் ஆன்மா இந்த தேகத்திற்குள் சிறை வைக்கப் பட்டிருக்கிறது. அந்த ஆன்மா விடுதலை பெற வேண்டுமென்றால் இந்த தேகத்தைவிட்டு செல்வதோடு மீண்டும் ஒரு தேகத்திற்குள் புகாமல் இருப்பதற்கு என்ன வழி? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி சிந்தித்து சிந்தித்து சிந்தித்து சிந்தித்து கடைத் தேறியவர்களே மகான்களும் ஞானியர்களும் சித்த புருஷர்களும் ஆவர்.

இதற்காகத்தான் இத்தனை விதமான வழிபாடுகளும் சாஸ்திரங்களும் விதவிதமான ஆலயங்களும் மரபுகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் காலப் போக்கில் என்னவாயிற்று? இந்த மரபையும் சாஸ்திரத்தையும் பிடித்துக் கொண்ட மனிதன் அதன் உண்மைத் தத்துவத்தை உணராமல் அல்லது உணர ஒரு முயற்சி செய்யாமல் இருந்து விட்டான். தேர் இழுக்கவேண்டும் என்பதை கற்றுக் கொண்ட மனிதன் தன் உடலில் இருக்கக் கூடிய குண்டலினி எனும் தேரை கீழிருந்து மேலே பிரயாசைபட்டு ஐம்புலன்களையும் ஒன்றாக்கி பிற இச்சைகளை எல்லாம் விட்டுவிட்டு மேலே இழுக்கவேண்டும் என்பதை விட்டு விட்டான். தீர்த்தமாடுதல் என்றால் உள்ளே சுரக்கும் அமிர்தத்தைத் தூண்டிவிட்டு அதை சுவைத்து உள்ளே இருக்கும் ஆன்மாவை உள்ளே சுரக்கும் அமிர்தத்திலே நீராட வைக்கவேண்டும் என்ற உண்மையை மறந்து விட்டு ஆங்காங்கே இருக்கின்ற நீர் நிலைகளுக்கு சென்று தேகத்தையே சுத்தி செய்து கொண்டிருக்கிறான். தேகத்தைப் போற்ற வேண்டும். தேகத்தை நன்றாக பேண வேண்டும். தேகத்தை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதல்ல. யாங்கள் அடிக்கடி கூறுவதுபோல 100 ஆண்டுகள் மேலும் வாழ்வதற்கு என்ன வழியோ அதனை தேகத்திற்கு ஒருவன் செய்து கொள்ளலாம் தவறில்லை. ஆனால் அடுத்த கணம் மரணம் வந்தாலும் ஏற்க மனதையும் தயாராக வைத்திருக்க வேண்டும். உடம்பு 100 வயதையும் தாண்டி வாழ்வதற்குண்டான பயிற்சியை மேற்கொண்டு வஜ்ர தேகமாக மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும். மனது எப்பொழுது மரணம் வந்தாலும் அதை ஏற்கும் நிலைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும். இதுதான் சித்தர்களின் வழியாகும்.

இதுபோல் சுயநலமற்று பந்த பாசங்களில் சிக்காமல் கடமைகளில் இருந்து தவறாமல் கடமைகளை செய்கிறேன் என்று பாசத்தில் வழுக்கி விழாமல் கடமைகளை செய்கிறேன் என்பதற்காக நேர்மை தவறாமல் ஒருவன் தன்னையும் பாதுகாத்துக் கொண்டு தன் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு மனதை இறைவனின் திருவடியை நோக்கி வைத்துக் கொண்டு சதாசர்வகாலம் அந்த இறை சிந்தனையிலே
வாழ வேண்டும். ஏன்? ஒருவன் எதை எண்ணுகிறானோ அதுவாகவே மாறிவிடுகிறான். இந்த கருத்து பல மனிதர்கள் அறிந்ததே. அதைப் போல நீக்கமற நிறைந்துள்ள எங்கும் வியாபித்துள்ள பெரும் கருணை கொண்ட அந்த பரம்பொருளை எண்ண எண்ண எண்ண எண்ண ஒரு மனிதனுக்கு தவறு செய்யக் கூடாது பாவங்கள் சேர்க்கக் கூடாது என்கிற நினைவு இருந்து கொண்டே இருக்கும். இந்த நினைவு இருக்கும் வரையில் ஒரு மனிதன் கூடுமானவரை சரியான வழியில் சென்று கொண்டே இருப்பான். பாவங்கள் செய்வதால் ஒரு ஆன்மாவை மனித தேகம் எடுக்க வைத்தோ அல்லது விலங்கு தேகம் எடுக்க வைத்தோ கடுமையாக தண்டிப்பதில் இறைவனுக்கு என்ன லாபம்? ஒரு மனிதன் கண்ணீர் சிந்தினால் அதனால் இறைவனுக்கு எதாவது லாபமா? மூதுரை (பழமொழி) ஒன்று இருக்கிறதல்லவா நன்றும் தீதும் பிறர் தர வாரா என்று. ஒருவன் நுகர்வதெல்லாம் அவன் என்றோ செய்தவைதான். இன்றொருவன் எல்லா வகையிலும் நிம்மதியாக வாழ்கிறான் என்றால் அவன் அதற்கேற்றாற்போல் முந்தைய பிறவிகளில் உழைத்திருக்கிறான் என்று பொருள். ஒருவன் எல்லா வகையிலும் நிம்மதியிழந்து வாடுகிறான் என்றால் அதற்கேற்றாற்போல் அவன் விதைகளை விதைத்திருக்கிறான் என்பது பொருளாகும்.

இப்பொழுது எதை யாங்கள் கூற வருகிறோம் என்றால் சித்தர்கள் நல்லாசிகள் தந்தாலும் வாழ்வு நன்றாக இருக்கும் இறைவனருளால்  என்று கூறினாலும் கூட எங்கள் வாழ்வு நன்றாக இல்லையே என்று இங்கு வந்து போகின்ற மனிதர்கள் எண்ணுவது எதைக் குறிக்கிறது? என்றால் அறியாமையைக் குறிக்கிறது. ஏனென்றால் லோகாய வாழ்விலே ஒருவனுக்கு எத்தனை செல்வத்தைத் தந்தாலும் எத்தனை மாளிகைகளைத் தந்தாலும் எத்தனை கோடி கோடியாக தனத்தைத் தந்தாலும் அவன் விரும்புகின்ற எந்த விஷயத்தைத் தந்தாலும் அது பதவியோ அவன் ஆசைப்படுகின்ற பெண்களோ அல்லது நிறைய தங்கமோ எதைத் தந்தாலும்கூட ஒரு மனிதனால் நிம்மதியாக சந்தோஷமாக வாழ இயலாது. தொடர்ந்து ஒருவன் செய்கின்ற பக்தியும் தொண்டும்தான் நேர்மையான வழியில் சேர்த்த செல்வத்தை பிறருக்கு பயன்படுமாறு அள்ளி அள்ளி அள்ளி அள்ளி வழங்குகின்ற தடைபடாத தர்ம குணத்தினால் மட்டும்தான் ஒருவனுக்கு நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். சேர்ப்பதல்ல சுகம். சேர்த்து வைப்பதல்ல சுகம். இருப்பதையெல்லாம் தந்து கொண்டேயிருப்பதே சுகம். இழக்க இழக்கதான் மனிதன் பெறுகிறான் என்பதை மனிதன் மறந்து விடக்கூடாது. எதையெல்லாம் ஒரு மனிதன் இழக்கிறானோ நியாயமான விஷயங்களுக்கு எதையெல்லாம் ஒரு மனிதன் கொடுக்கிறானோ தன்னையே எப்பொழுது இழக்கிறானோ அப்பொழுதுதான் அவனுக்கு இறைவனின் பரிபூரண கருணை கிட்டும். அதை விட்டு எனக்கு இந்த செல்வம் வேண்டும் எனக்கு இந்தவகையான வசதியான வாழ்வு வேண்டும் என்று இறைவனை நோக்கி வேண்டுவதால் பயனொன்றுமில்லை.

ஒருவேளை இவையெல்லாம் இறைவன் தரலாம். ஆனால் ஒரு மனிதன் கேட்கின்ற லௌகீக விஷயங்களால் லௌகீக வசதிகளால் சில காலமோ அல்லது சில நாழிகையோ வேண்டுமானால் அவன் சுகமாக நிம்மதியாக இருக்கலாம் அல்லது அப்படி இருப்பது போல் ஒரு மாயத்தோற்றம் ஏற்படலாம். நிரந்தர நிம்மதியும் நிரந்தர சந்தோஷமும் பற்றற்ற தன்மையும் யோகாசனத்தால் தன் தேகத்தை வஜ்ரமாக ஆக்கி வைத்துக் கொள்வதிலும் சுவாசப் பயிற்சியை தடையற்று செய்து சுவாசத்தை ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்வதும் பிறகு தன்னிடம் இருப்பவற்றை எல்லாம் தேவையான மனிதர்களுக்கு தேவையான பொழுது அவன் வாயைத் திறந்து கேட்கும் முன்னே குறிப்பறிந்து தருவதும் அப்படி தந்து விட்ட பிறகு எவன் பெற்றானோ அவனுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் நடந்து கொள்ளாமல் அதாவது ஒருவனுக்கு ஒரு உதவியை செய்ய வேண்டியது. பிறகு நான் உனக்கு இந்த உதவியை செய்திருக்கிறேன் செய்திருக்கிறேன் என்பது போல் அவனுக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பது. இது போன்ற உதவியை செய்வதற்கு ஒரு மனிதன் செய்யாமலேயே இருக்கலாம். எனவே உதவியை செய்து விட்டு பிரதிபலன் எதிர்பார்ப்பது கூட அந்த உதவிக்கு ஒரு களங்கத்தை ஏற்படுத்தியது போல் ஆகும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு மனிதன் வழங்கிக் கொண்டே இருத்தல் என்பதே இறைவனின் அருளையும் ஏன்? இறைவனின் தரிசனத்தையும் பெறுவதாகும். எனவே கொடுப்பது ஒன்று மட்டும்தான் இறைவன் கருணையை எளிதில் பெறுவதற்குண்டான வழியாகும்.

ஏது ஏதோ மந்திரங்களை வாயில் நுழையாமல் கடினப்பட்டு கற்றுக் கொள்வதாலோ புரியாத அர்த்தம் கொள்ள இயலாத மந்திரங்களை கூறுவதாலோ மட்டும் இறைவனருள் கிட்டாது. அவையெல்லாம் ஒரு அடிப்படை பாடமாகும். இறைவன் அருளைப் பெற வேண்டும். எதற்காக பெற வேண்டும்? எல்லாவகையிலும் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே? பிறரை நிம்மதியாக வாழ வைத்தால் ஒருவனுக்கு நிம்மதி தானாக வந்துவிடும். பிறர் கண்ணீரை ஒருவன் துடைத்தால் அவன் கண்ணீர் இறைவனால் துடைக்கப்படும். பிறர் புன்னகைக்கு ஒருவன் வழிவகுத்தால் இவன் நிரந்தரமாக புன்னகைக்க இறைவன் ஏற்பாடு செய்வார். இதுதான் அடிப்படை ஆன்மீகமாகும். இதனைப் புரிந்து கொண்டு விட்டால் எமது வாக்கும் வாக்கின் போக்கும் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 346

கேள்வி: முக்தி என்றால் என்ன? முக்தி ஸ்திதி என்றால் என்ன? அதற்குரிய சாதனைகள் என்னென்ன? ஒரு சாதகன் எந்தெந்த சாதனைகளைப் பின்பற்ற வேண்டும் ?

இறைவனின் கருணையால் இயம்புவது யாதென்றால் முத்தி என்றால் என்ன? முற்றிய நிலை என்று கொள்ளலாம். ஒரு வகையான ஒரு உயர்வான நிலை என்றும் கொள்ளலாம். சிப்பி என்ற கூட்டுக்குள் விழுகின்ற தூய நீர் முற்றி முத்து ஆவது போல. இதுபோல் தேகம் என்னும் சிறிய கூட்டுக்குள் அடைபட்டு அடைபட்டு பிறவிகள் எடுத்து எடுத்து மாயா வாழ்வில் சிக்கி உழன்று உழன்று தவிக்கின்ற ஆத்மாக்கள் அதிலிருந்து விடுபட்டு ஒரு முற்றிய நிலை. அந்த நிலையை நோக்கி செல்லுதல் அல்லது அடைதல் முக்தி எனலாம்.

விடுதல் அது நீழ்ச்சி பெற்று அது வீடுபேறு ஆயிற்று. விடுதல் என்றால் எதிலிருந்து? எவையெல்லாம் மனிதனுக்கு முதலில் இன்பமாய் தோன்றி பிறகு நிரந்தர துன்பத்தைத் தருகிறதோ அவை அனைத்திலிருந்தும் மனிதன் விடுபட வேண்டும். எல்லாவற்றிலிருந்தும் விடுபடக் கூடிய மனோபாவத்தை அந்த மனோநிலையை வைராக்கியம் கொண்டு எவனொருவன் வளர்த்துக் கொள்கிறானோ இதுபோல் ஒவ்வொரு மனிதனும் துயிலும்பொழுது கனவு காண்கிறான். ஆனால் என்றாவது காண்பது கனவு என்று உணர்கிறானா? கனவிலே அச்சமூட்டும் நிகழ்வு என்றால் அஞ்சுகிறான். மகிழ்வைத் தரும் நிகழ்வு என்றால் மகிழ்கிறான். அதைக் காணும் பொழுது கனவு என்று உணராமல் விழித்த பிறகுதான் கனவு என்று உணர முடிகிறது. ஆனால் அதை இப்படியே என்றென்றும் விழிப்பு நிலையிலேயே இருந்து உணர்ந்து பார்க்கின்ற ஒரு கலை அதாவது வாழும் பொழுதே இவ்வாழ்க்கை மெய்யல்ல பொய். வினைகளை நுகரத்தான் இந்த வாழ்வு.

இப்பொழுது நடப்பதும் பார்ப்பதும் சொப்பனம். விழிப்பு நிலை ஜாக்ரதா நிலை என்பது வேறு என்பதை உணர்ந்து இந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே வினைகளை நுகர்ந்து கொண்டே இடைவிடாத  இறை சிந்தனையோடு எவனொருவன் அந்தப் பரம்பொருளை நோக்கி செல்கின்ற முயற்சியை விடாது செய்கிறானோ அப்படி செய்கின்ற அந்த மனிதனின் ஆத்மாவிற்கு இறுதி நிலையில் கிட்டுகின்ற ஒரு முற்றிய நிலை முக்தி நிலை. இதற்கு வைராக்யமும் பற்றற்ற தன்மையும் 100 க்கு 100 விழுக்காடு சத்தியமும் தர்மமும் தேவை. இதனை விட்டுவிட்டு வேறு எத்தனை மந்திரங்களை ஒருவன் உருவேற்றினாலும் மனம் பக்குவப்படாத நிலையில் இந்த முக்தி என்கிற ஒரு உயர் நிலையை அடைவது கடினம்.

அனுமனின் வாலில் மணி

ராமன் சீதையை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் உயரமானவை குட்டையானவை என்று பல வகை இருந்தது. அதில் சிங்கலிகா என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை இருந்தது. இதில் ஆயிரம் வானரங்கள் இருந்தன. இந்த வானரங்கள் கூட்டமாக சென்று எதிரியின் படை வீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப் புறப்படும் வீரர்களை வழியனுப்பும் போது அவர்கள் குடும்பத்தார்களின் கண்களில் கண்ணீர். அவர்கள் உயிருடன் பத்திரமாக திரும்பி வர வேண்டுமே என்ற கவலையில் இருந்தார்கள். அதைக் கவனித்த ராமன் அவர்களிடம் கூறினார் யாரும் கவலைப்பட வேண்டாம். என் படை வீரர்களை பத்திரமாக திருப்பிக் கொண்டு வந்து சேர்ப்பது என் பொறுப்பு என்றார்.

ராமருக்கும் ராவணனுக்கும் போர் ஆரம்பமானது. கடும் போர் நடந்து கொண்டிருந்தது. ராவணனின் படையில் பல முக்கியமான வீரர்களும் படைத் தலைவர்களும் மடிந்தார்கள். தூங்கிக் கொண்டிருந்த தன் தம்பி கும்பகர்ணனை எழுப்பி போரிடச் சொன்னான் ராவணன். ராட்சசனைப் போல் இருந்தாலும் கும்பகர்ணன் மிகவும் நல்லவன். கும்பகர்ணன் இந்த போர் வேண்டாம் நீங்கள் சீதையைக் கடத்தியதற்காக ராமனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்கவில்லை. வேறு வழியின்றி அண்ணனின் ஆணைப்படி போருக்குப் புறப்பட்டான் கும்பகர்ணன். கும்பகர்ணனின் ராட்சத உருவத்திற்கு ஏற்றாற் போல் அவனது தேரும் மிகப் பெரியதாக இருந்தது. தேரின் முன்புறம் பெரிய பெரிய மணிகள் தொங்கிக் கொண்டிருந்தன. போர் தொடங்கி சிறிது நேரத்தில் ராம பாணத்திற்கு பலியானான் கும்பகர்ணன். தேரிலிருந்து சாயும் போது கும்பகர்ணனின் கை பட்டு ஒரு மணி கழன்று கீழே விழந்தது. கீழே விழுந்த மிகவும் பெரிய பாரமான மணி போரிட ஒன்றாக ஓடிக் கொண்டிருந்த ஆயிரம் வானரங்கள் மேல் விழுந்து அவர்களை மூடி விட்டது. திடீரென்று தங்கள் மேல் எதையோ வைத்து மூடிவிட்டதைப் போன்று உணர்ந்த வானரங்கள் பயந்து விட்டன. ஒரே இருட்டு. நல்ல வேளை மணி விழுந்த இடம் கரடு முரடாக இருந்ததால் சுவாசிக்க காற்று வந்தது. சில மணி நேரங்கள் ஆன பிறகும் அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஒரு வானரம் சொன்னது இந்த சுக்ரீவனை நம்பி வீணாகப் போய் விட்டோம். நாம் எல்லோரும் சாகப்போவது உறுதி என்றது. சுக்ரீவனும் அனுமனும் ஒன்றும் செய்யப் போவதில்லை நம்மைக் காப்பாற்ற நம் தலைவிதி இப்படியே கிடந்து சாக வேண்டியதுதான் சொன்னது இன்னொரு வானரம். ராமன் சொன்னாரே போருக்கு புறப்பட்டவர்களை எல்லாம் பத்திரமாக உயிரோடு திரும்ப கொண்டு வந்து சேர்ப்பது அவர் பொறுப்பு என்றாரே அவர் என்ன செய்தார் இன்னொரு வானரம் சொன்னது. இதைக் கேட்ட மற்ற வானரங்களும் ஆமாம் ஆமாம் என்றன. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர்களில் ஒரு மூத்த வானரம் எல்லோரையும் அதட்டியது. முதலில் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதை நிறுத்துங்கள். நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள். எல்லோரும் கண்களை மூடிக்கொண்டு ராமனை மனதில் நினைத்துக் கொண்டு ராம் ராம் ராம் என்று ஜெபம் செய்யுங்கள். ராமன் நம் எல்லோரையும் நிச்சயம் காப்பாற்றுவார் என்று சொன்னது. எல்லா வானரங்களும் அப்படியே செய்தன.

ராமரால் ராவணனும் கொல்லப்பட்டான் போர் முடிந்தது. சீதையை மீட்டதும் அயோத்திக்கு திரும்ப ஆயுத்தமானார்கள். அப்போது ராமன் சொன்னார் சுக்ரீவா நம் படையில் எல்லோரும் பத்திரமாக இருக்கிறார்களா. பார்த்து எண்ணிக் கொண்டு வா என்றார். அதற்கு சுக்ரிவன் எண்ணி விட்டேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் மற்றும் ஒரு முறை சரியாக எண்ணி வா என்றார் ராமன். ராமனின் ஆணைப்படி மற்றொருமுறை எண்ணிவிட்டு வந்த சுக்ரீவன் சொன்னான். தங்கள் ஆணைப்படி இன்னொரு முறை எண்ணினேன். ஆயிரம் சிங்கலிகர்கள் மட்டும் காணவில்லை என்றார். உடனே ராமர் அனுமா நீயும் என்னுடன் வா. நாம் அந்த ஆயிரம் வானரங்களை தேடுவோம் என்றார் ராமன். அனுமனும் ராமனும் வானர்களைத் தேடி போர்க்களத்தில் நடந்தார்கள். பல இடங்களில் மடிந்து கிடந்த படை வீரர்கள் உடைந்து கிடந்த தேரின் பாகங்கள் அம்புகள் கேடயங்கள் என்று எல்லாவற்றையும் கிளறிப் பார்த்தார் அனுமன். சிங்கலிகர்கள் தென்படவில்லை. திடீரென்று ராமன் ஒரு இடத்தில் நின்றார். அனுமா அங்கே பார். ஒரு பெரிய மணி தெரிகிறது என்றார். ராமன் சொன்னது புரிந்து விட்டது அனுமனுக்கு. இருவரும் அந்த இடத்திற்கு விரைந்தார்கள். சஞ்சீவி பர்வதத்தையே தன் ஒரு கையால் தூக்கிக் கொண்டு பறந்த அனுமன் தன் வாலின் நுனியை அந்த மணியின் வளையத்தில் நுழைத்து தூக்கினான். அனுமன் மணியைத் தாக்கியதும் அதன் கீழ் ஆயிரம் சிங்கலிகர்கள் கண்களை மூடிக்கொண்டு கைகூப்பியபடி ராமநாமம் ஜபித்துக் கொண்டிருந்தன. பல மணி நேரத்திற்குப் பின் வெளிச்சமும் காற்றும் பட்டதும் கண்களைத் திறந்தன வானரங்கள். எதிரே ஸ்ரீராமனும் அனுமனும் நின்றிருந்தார்கள். வரிசையாக கை கூப்பியவாறு நின்று கொண்டிருந்த வானரங்கள் கண்ணீருடன் ராமரிடம் பிரபுவே என்ன நடந்தது என்று தெரியாமல் இருட்டில் பயந்து அடைந்து கிடந்த நாங்கள் ஏதேதோ தவறாகப் பேசி விட்டோம். உங்கள் மேலேயே சந்தேகப்பட்டு விட்டோம். எங்களை மன்னித்து அருள வேண்டும் என்று சொல்லி ஆயிரம் வானரங்களும் ராமனின் பாதங்களில் விழுந்து வணங்கின. அதைக்கேட்டு புன் முறுவல் செய்த ராமன் எல்லா வானரங்களையும் தன் கையால் தடவிக்கொடுத்தார்.

ராமன் அனுமனைப் பார்த்து சொன்னார் அனுமா வாலில் பளபளக்கும் மணியுடன் நீ இப்படி நிற்கும் காட்சி எவ்வளவு சுந்தரமாக இருக்கிறது தெரியுமா? இந்தக் கோலத்தில் உன்னை தரிசிப்பவர்களுக்கு பக்தி ஞானம் வைராக்கியம் கிட்டும் என்று வாழ்த்தினார். கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாடு இந்த மூன்று மாநிலங்களிலும் பல ஊர்களில் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் விக்கிரகங்களிலும் வாலில் மணி தொங்கி கொண்டிருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 345

கேள்வி: பித்ரு கடன் கொடுப்பது எப்படி?

வழக்கமான பூஜை வழிபாடுகளோடு நிறைய ஏழைகளைத் தேடிச் சென்று தர்மம் செய்வதுதான் பித்ரு வகை தோஷங்களையும் கடனையும் நிவர்த்தி செய்யும். கால பைரவருக்கு நெய் தீபம் நிறைய ஏழைகளுக்கு வயிறார உணவு வேறு உதவிகள் விலங்கினங்களுக்கு உணவு வேறு உதவிகள் இதோடு மாதம் ஒரு முறை ராமேஸ்வரம் போன்ற ஜோதிர் லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று முறையான வழிபாடு அன்ன சேவை போன்றவை. அதோடு மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தில யாகத்தை உட்பிரிவுகளோடு குறைந்த பட்சம் 2000 மந்திர ஜெபத்தோடு செய்வது நல்லது. அதோடு பசுமாடுகள் தொடர்பான தர்மங்களை செய்வது பித்ரு கடனைக் குறைக்கும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 344

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மரணம் என்பது மனிதப் பார்வையிலே துக்கமாக இருக்கலாம். இருக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இருப்பதாகவே மனிதனுக்கு அது உணர்த்தப்பட்டுள்ளது. மரணம் என்பது முடிவாக மனிதனுக்குத் தெரிகிறது. அதை அப்படி பார்ப்பதை விட நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணத்தை வைத்துப் பார்த்தால் மிக எளிதாகப் புரியும். ஆனாலும் இது மனிதனுக்கு வேதனை தரக்கூடிய உதாரணமாக இருக்கலாம். அதே சமயம் எல்லா மரணத்திற்கும் இந்த உதாரணத்தை பொருத்திப் பார்க்கக் கூடாது.

கூடுமானவரை பல புண்ணியங்களை செய்கின்ற மனிதன் பலருக்கும் நல்லதை செய்கின்ற மனிதன் மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யைப் பேசி மெய்யாக நடந்து இறை பக்தியோடு அடக்கத்தோடு ஒழுக்கத்தோடு வாழ்கின்ற மனிதன் சட்டென்று மரணித்தால் அட்டா இத்தனை நல்லவன் இறந்து விட்டானே? எத்தனையோ தீய செயல்களை செய்கின்ற இன்னொரு மனிதன் வாழ்வாங்கு வாழ்கிறானே? என்று ஒப்பிட்டு பார்ப்பது மனிதர்களின் இயல்பு. ஆனால் இது போன்ற தருணத்தில் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு சிறைச் சாலையிலே பல்லாண்டுகள் சிறையில் வாட வேண்டும் என்று தண்டனை பெற்ற ஒருவன் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே சிறையை விட்டு வெளியே வருவது போல் பல ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் வாடுகின்ற ஒரு மனிதன் சில நாட்கள் மட்டும் தண்டனை பெற்று வெளியே போகும் கைதியைப் பார்த்து என்னப்பா நீ பெரிதாக குற்றம் செய்யவில்லையா? என்னைப் பார்த்தாயா? நான் எத்தனை பெரிய குற்றம் செய்து விட்டு ஆண்டாண்டு காலம் சிறையில் இருக்கிறேன். நீ எதற்கு இத்தனை குறுகிய காலத்தில் வெளியே செல்கிறாய்? உனக்கென்ன அத்தனை அவசரமா ? ஏன் நீ பெரிய குற்றமாக செய்யமாட்டாயா? என்று கேட்டால் அது எப்படியிருக்குமோ அப்படித்தான் சட்டென்று நல்லவன் மரணித்தால் இவன் மாண்டு விட்டானே என்று மற்றவர்கள் விசனம் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இப்படிக்கூறினால் மனிதனுக்கு இன்னொரு ஐயம் எழும். அது சரி அவனை சார்ந்த குடும்பம் என்னாவது அவன் மீது அதீத பற்றும் பாசமும் கொண்ட உறவும் நட்பும் வேதனைப்படுமே? என்றெல்லாம் பார்த்தால் அது சூட்சும கர்மக் கணக்கிற்குள் செல்லும். எனவே மேலெழுந்தவாரியாக மனிதன் புரிந்து கொள்வதை விட ஆழ்ந்து ஆழ்ந்து சென்று புரிந்து கொள்ள முயற்சி செய்திட வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 343

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பரம்பொருளின் திருவடிக்கு சரணம் சரணம். பாரண்டப் பெருவெளிக்கு சரணம் சரணம். பக்கத் துணையாய் இருக்கின்ற அப்பொருளுக்கு சரணம் சரணம். பார் (உலகம்) முழுதும் ஆட்சி செய்யும் சக்திக்கு சரணம் சரணம். பகலென்ன? இரவென்ன? இதுதாண்டி நிற்கின்ற பொருளுக்கு சரணம் சரணம். பாவத்தோடு புண்ணியத்தை கலந்து நுகரும் ஆத்மாவிற்கு என்றென்றும் தோன்றாத் துணை நிற்கும் அச்சக்திக்கு சரணம் சரணம் சரணம் சரணம் சரணம். இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகின்றோம் இத்தருணம். இயம்புங்கால் இதுபோல் குழுமியுள்ள சேய்களுக்கு இறையருளால் நல்லாசி இத்தருணம் இயம்புகிறோம். இறைவனின் கடாட்சத்தால் இச்சேய்கள் யாவும் நலம் பெற வளம் பெற வாழ்த்துகிறோம். இயம்புங்கால் நலமில்லா வினைகள் யாவும் பிறவிகள் தோறும் சேர்த்ததாலே நலமில்லா வாழ்வு இப்பிறவியில் அடைந்த சேய்களுக்கு இனி காலம் நலம் நடக்க இறையருளால் வாழ்த்துகிறோம். இயம்புங்கால் தர்மத்தை மறவாமல் சத்தியத்தை விடாமல் சரணாகதி பக்தியைத் தொடர சேய்கள் அனைவருக்கும் நலம் நடக்கும் என இறைவனருளால் வாழ்த்துகிறோம். இறைவனின் பெரும் கருணையைப் பெற இதுபோல் ஒரு மனிதன் எப்படி நடந்து கொண்டால் இறைவனுக்கு இட்டமாய் (இஷ்டமாய்) இருக்குமோ அதுபோல் இச்சேய்கள் நடக்க நடக்க முயல விதி தாண்டி அதுபோல் இறைவழி வர இதுபோல் உணர்வுகளை வென்று அறிவுமயமாய் இறை நோக்கி செல்ல இறையருளால் இத்தருணம் வாழ்த்துகிறோம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 342

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

உள்ளபடி உள்ளத்திலே உண்மையிருந்தால் அணுவளவும் எதற்காகவும் (சுயநலமோ பொது நலமோ) உள்ளத்திலும் தெளிவு இருக்கும். அது வதனத்திலும் (முகத்திலும்) தெரியுமப்பா. உள்ளத்திலே ஒன்றை வைத்து அதை உதடு வழியாக சொல்ல முடியாமல் தவிக்கும் போதுதான் மனிதனுக்கு பல்வேறு சங்கடங்கள் வருகின்றன. ஏன்? உண்மையை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அதன் ஆழமான தாக்கத்தை யாரும் விரும்புவதில்லை. உண்மையல்ல என்றாலும் சிலவற்றை மனிதன் விரும்புகிறான். உண்மையைக் கூறினால் இவனுடன் நமக்குப் பகை வந்து விடுமோ? நமக்கு வர வேண்டிய நன்மைகள் குறைந்து விடுமோ? என்ற அச்சம் மனிதனுக்கு இருக்கிறது. அதே சமயம் அதை சொல்லவும் முடியாமல் உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் ஒரு மனிதன் ஆழ்கிறான். மற்றொரு மனிதன் தர்ம சங்கடப்படுவதை அறிந்த பிறகு மற்றொரு மனிதன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் அப்படி யாரும் ஒதுங்குவது கிடையாது. அல்லது புரிந்து கொள்வதும் கிடையாது. அறியாமையும் இதற்கு ஒரு காரணம். ஆயினும் கூட உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல கடை வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழக வேண்டும். இடையிலிருந்து துவங்கினால் அதற்கு அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அறத்தில் மிகப்பெரிய அறம் உண்மை பேசுவதாகும்.

உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான். என்றாலும் உண்மையை உண்மையாக நன்மையாக பேச வேண்டும். உண்மையைக் கூறுகிறேன் என்று யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் நாங்கள் எம்முன்னே அமரும் சில மனிதருக்கு மௌனம் காக்கிறோம் என்றால் உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள். எம்முன்னே அமர்ந்து கொண்டு எனக்கு சாமி வருகிறது எனக்குள் அம்பாள் இறங்கிப் பேசுகிறாள் என்றால் அது அபத்தம் பொய் என்று எமக்கும் தெரியும். ஆனால் அது அபத்தம் பொய் என்று சொன்னால் வந்தவனுக்கு வதனம் வாடிவிடும். முகம் கோணி விடும். அவனை நம்பி வந்த கூட்டம் மிகவும் எரிச்சலடையும். பிறகு தேவையில்லாத விவாதங்கள் வரும். அதனால்தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே அனைத்திற்கும் சம்மதம் என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம். ஜீவ அருள் நாடி என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதைக் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட மழை நீர் வேண்டுமென்றால் நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல் நிமிர்த்து வைத்து மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப் போல எம்முன்னே அமர்பவருக்கு பக்குவம் தெளிவு இல்லாமல் இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்? என்று விமர்சிப்பதால் பாவங்கள் சேர்வதைத் தவிர கர்மாக்கள் குறைவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 341

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் சித்தர்கள் இயம்பிக் கொண்டே இருக்கட்டும். யாம் என்ன கூறினாலும் மனிதர்கள் அவனவன் மதி வழியே மதியை பிடித்திருக்கும் விதி வழியேதான் செல்வேன் எனும் பொழுது யாம் வழி காட்டுவதைத் தவிர வேறு எதுவும் மனிதர்கள் வாழ்விலே குறுக்கிட்டு திசை திருப்ப இயலாது. யாம் ஒரு மனிதனின் வாழ்விலே குறுக்கிட வேண்டுமென்றால் இறைவனின் அனுமதியும் அருளும் மட்டுமல்லாமல் அந்த மனிதனுக்கு அந்த அளவிற்கு பக்குவமும் பெருந்தன்மையும் சூழ்ச்சி கபடம் சூது சுயநலமில்லாமல் இருந்திட வேண்டும். இதை வைத்து பார்க்கும் பொழுது நாடி மூலம் சித்தர்களை நாடிக் கொண்டிருக்கும் பல மனிதர்களில் சிலருக்கு வாழ்விலே நல்ல பலன்களும் பலருக்கு நல்ல பலன்கள் நடவாமல் போவதற்கும் காரணமே அவனவன் அடிப்படை குணம்தான்.

இதுபோல் நிலையிலே யாம் கூறுவதை கூறிக் கொண்டே இருப்போம். எமை நாடுகின்ற மாந்தர்கள் எமை நாடி எமது அருளாசியை பெற்றுக் கொள்வதோடு நாங்கள் கூறுகின்ற நல் அறிவை நல் உபதேசத்தை பின்பற்றினால்தான் முழுமையான பலன் உண்டு. ஆனால் நாடி வாசிக்கின்ற இந்த ஸ்தானத்திலே அமரும் பொழுது மட்டும் பவ்யமாக அமர்வதும் பேசும் பொழுது உயர்ந்த கருத்துக்களை பேசுவதும் விவாதம் செய்யும் பொழுதும் பிறருக்கு போதனை செய்யும் பொழுதும் தர்மத்தையும் சத்தியத்தையும் போதனை செய்து தான் அதனை பின்பற்றாமல் இருந்தால் அதனால் பலனேதுமில்லை. இதைதான் எமை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை பலவிதமாக நயத்தகு நாகரீகம் என்ற அளவிலே சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் பலன்கள் என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தன்முனைப்பு சினம் ஆற்றாமை சோர்வு இதுபோன்ற எந்த எண்ணங்களும் இல்லாமல் உற்சாகமாக நேர்மையான வழியிலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் பிறரை பாதிக்காத வகையிலே வாழ்க்கையை நடத்திக் கொண்டு அவனவன் கடமையை செய்து கொண்டு இறைவன் வழியில் சத்திய வழியில் தர்ம வழியில் எவன் நடக்கிறானோ அவனுக்கு யாம் என்றும் தோன்றாத் துணையாக இருப்போம். ஆனாலும் கூட எல்லோரும் அப்படி நடப்பார்கள் என்று எண்ணி நாங்கள் வாக்கினைக் கூறவில்லை.