ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 345

கேள்வி: பித்ரு கடன் கொடுப்பது எப்படி?

வழக்கமான பூஜை வழிபாடுகளோடு நிறைய ஏழைகளைத் தேடிச் சென்று தர்மம் செய்வதுதான் பித்ரு வகை தோஷங்களையும் கடனையும் நிவர்த்தி செய்யும். கால பைரவருக்கு நெய் தீபம் நிறைய ஏழைகளுக்கு வயிறார உணவு வேறு உதவிகள் விலங்கினங்களுக்கு உணவு வேறு உதவிகள் இதோடு மாதம் ஒரு முறை ராமேஸ்வரம் போன்ற ஜோதிர் லிங்க ஸ்தலங்களுக்குச் சென்று முறையான வழிபாடு அன்ன சேவை போன்றவை. அதோடு மட்டுமல்லாது வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தில யாகத்தை உட்பிரிவுகளோடு குறைந்த பட்சம் 2000 மந்திர ஜெபத்தோடு செய்வது நல்லது. அதோடு பசுமாடுகள் தொடர்பான தர்மங்களை செய்வது பித்ரு கடனைக் குறைக்கும்

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 344

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மரணம் என்பது மனிதப் பார்வையிலே துக்கமாக இருக்கலாம். இருக்கத்தான் வேண்டும். அப்படித்தான் இருப்பதாகவே மனிதனுக்கு அது உணர்த்தப்பட்டுள்ளது. மரணம் என்பது முடிவாக மனிதனுக்குத் தெரிகிறது. அதை அப்படி பார்ப்பதை விட நாங்கள் அடிக்கடி கூறுகின்ற உதாரணத்தை வைத்துப் பார்த்தால் மிக எளிதாகப் புரியும். ஆனாலும் இது மனிதனுக்கு வேதனை தரக்கூடிய உதாரணமாக இருக்கலாம். அதே சமயம் எல்லா மரணத்திற்கும் இந்த உதாரணத்தை பொருத்திப் பார்க்கக் கூடாது.

கூடுமானவரை பல புண்ணியங்களை செய்கின்ற மனிதன் பலருக்கும் நல்லதை செய்கின்ற மனிதன் மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யாக மெய்யைப் பேசி மெய்யாக நடந்து இறை பக்தியோடு அடக்கத்தோடு ஒழுக்கத்தோடு வாழ்கின்ற மனிதன் சட்டென்று மரணித்தால் அட்டா இத்தனை நல்லவன் இறந்து விட்டானே? எத்தனையோ தீய செயல்களை செய்கின்ற இன்னொரு மனிதன் வாழ்வாங்கு வாழ்கிறானே? என்று ஒப்பிட்டு பார்ப்பது மனிதர்களின் இயல்பு. ஆனால் இது போன்ற தருணத்தில் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு சிறைச் சாலையிலே பல்லாண்டுகள் சிறையில் வாட வேண்டும் என்று தண்டனை பெற்ற ஒருவன் நன்னடத்தை காரணமாக முன்னதாகவே சிறையை விட்டு வெளியே வருவது போல் பல ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் வாடுகின்ற ஒரு மனிதன் சில நாட்கள் மட்டும் தண்டனை பெற்று வெளியே போகும் கைதியைப் பார்த்து என்னப்பா நீ பெரிதாக குற்றம் செய்யவில்லையா? என்னைப் பார்த்தாயா? நான் எத்தனை பெரிய குற்றம் செய்து விட்டு ஆண்டாண்டு காலம் சிறையில் இருக்கிறேன். நீ எதற்கு இத்தனை குறுகிய காலத்தில் வெளியே செல்கிறாய்? உனக்கென்ன அத்தனை அவசரமா ? ஏன் நீ பெரிய குற்றமாக செய்யமாட்டாயா? என்று கேட்டால் அது எப்படியிருக்குமோ அப்படித்தான் சட்டென்று நல்லவன் மரணித்தால் இவன் மாண்டு விட்டானே என்று மற்றவர்கள் விசனம் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

இப்படிக்கூறினால் மனிதனுக்கு இன்னொரு ஐயம் எழும். அது சரி அவனை சார்ந்த குடும்பம் என்னாவது அவன் மீது அதீத பற்றும் பாசமும் கொண்ட உறவும் நட்பும் வேதனைப்படுமே? என்றெல்லாம் பார்த்தால் அது சூட்சும கர்மக் கணக்கிற்குள் செல்லும். எனவே மேலெழுந்தவாரியாக மனிதன் புரிந்து கொள்வதை விட ஆழ்ந்து ஆழ்ந்து சென்று புரிந்து கொள்ள முயற்சி செய்திட வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 343

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

பரம்பொருளின் திருவடிக்கு சரணம் சரணம். பாரண்டப் பெருவெளிக்கு சரணம் சரணம். பக்கத் துணையாய் இருக்கின்ற அப்பொருளுக்கு சரணம் சரணம். பார் (உலகம்) முழுதும் ஆட்சி செய்யும் சக்திக்கு சரணம் சரணம். பகலென்ன? இரவென்ன? இதுதாண்டி நிற்கின்ற பொருளுக்கு சரணம் சரணம். பாவத்தோடு புண்ணியத்தை கலந்து நுகரும் ஆத்மாவிற்கு என்றென்றும் தோன்றாத் துணை நிற்கும் அச்சக்திக்கு சரணம் சரணம் சரணம் சரணம் சரணம். இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புகின்றோம் இத்தருணம். இயம்புங்கால் இதுபோல் குழுமியுள்ள சேய்களுக்கு இறையருளால் நல்லாசி இத்தருணம் இயம்புகிறோம். இறைவனின் கடாட்சத்தால் இச்சேய்கள் யாவும் நலம் பெற வளம் பெற வாழ்த்துகிறோம். இயம்புங்கால் நலமில்லா வினைகள் யாவும் பிறவிகள் தோறும் சேர்த்ததாலே நலமில்லா வாழ்வு இப்பிறவியில் அடைந்த சேய்களுக்கு இனி காலம் நலம் நடக்க இறையருளால் வாழ்த்துகிறோம். இயம்புங்கால் தர்மத்தை மறவாமல் சத்தியத்தை விடாமல் சரணாகதி பக்தியைத் தொடர சேய்கள் அனைவருக்கும் நலம் நடக்கும் என இறைவனருளால் வாழ்த்துகிறோம். இறைவனின் பெரும் கருணையைப் பெற இதுபோல் ஒரு மனிதன் எப்படி நடந்து கொண்டால் இறைவனுக்கு இட்டமாய் (இஷ்டமாய்) இருக்குமோ அதுபோல் இச்சேய்கள் நடக்க நடக்க முயல விதி தாண்டி அதுபோல் இறைவழி வர இதுபோல் உணர்வுகளை வென்று அறிவுமயமாய் இறை நோக்கி செல்ல இறையருளால் இத்தருணம் வாழ்த்துகிறோம் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 342

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

உள்ளபடி உள்ளத்திலே உண்மையிருந்தால் அணுவளவும் எதற்காகவும் (சுயநலமோ பொது நலமோ) உள்ளத்திலும் தெளிவு இருக்கும். அது வதனத்திலும் (முகத்திலும்) தெரியுமப்பா. உள்ளத்திலே ஒன்றை வைத்து அதை உதடு வழியாக சொல்ல முடியாமல் தவிக்கும் போதுதான் மனிதனுக்கு பல்வேறு சங்கடங்கள் வருகின்றன. ஏன்? உண்மையை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அதன் ஆழமான தாக்கத்தை யாரும் விரும்புவதில்லை. உண்மையல்ல என்றாலும் சிலவற்றை மனிதன் விரும்புகிறான். உண்மையைக் கூறினால் இவனுடன் நமக்குப் பகை வந்து விடுமோ? நமக்கு வர வேண்டிய நன்மைகள் குறைந்து விடுமோ? என்ற அச்சம் மனிதனுக்கு இருக்கிறது. அதே சமயம் அதை சொல்லவும் முடியாமல் உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் ஒரு மனிதன் ஆழ்கிறான். மற்றொரு மனிதன் தர்ம சங்கடப்படுவதை அறிந்த பிறகு மற்றொரு மனிதன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும். ஆனாலும் அப்படி யாரும் ஒதுங்குவது கிடையாது. அல்லது புரிந்து கொள்வதும் கிடையாது. அறியாமையும் இதற்கு ஒரு காரணம். ஆயினும் கூட உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல கடை வரையில் அவனை சுட்டுக் கொண்டுதான் இருக்கும். எனவே விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழக வேண்டும். இடையிலிருந்து துவங்கினால் அதற்கு அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே அறத்தில் மிகப்பெரிய அறம் உண்மை பேசுவதாகும்.

உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான். என்றாலும் உண்மையை உண்மையாக நன்மையாக பேச வேண்டும். உண்மையைக் கூறுகிறேன் என்று யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும் நாங்கள் எம்முன்னே அமரும் சில மனிதருக்கு மௌனம் காக்கிறோம் என்றால் உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள். எம்முன்னே அமர்ந்து கொண்டு எனக்கு சாமி வருகிறது எனக்குள் அம்பாள் இறங்கிப் பேசுகிறாள் என்றால் அது அபத்தம் பொய் என்று எமக்கும் தெரியும். ஆனால் அது அபத்தம் பொய் என்று சொன்னால் வந்தவனுக்கு வதனம் வாடிவிடும். முகம் கோணி விடும். அவனை நம்பி வந்த கூட்டம் மிகவும் எரிச்சலடையும். பிறகு தேவையில்லாத விவாதங்கள் வரும். அதனால்தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே அனைத்திற்கும் சம்மதம் என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம். ஜீவ அருள் நாடி என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதைக் கேட்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட மழை நீர் வேண்டுமென்றால் நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல் நிமிர்த்து வைத்து மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப் போல எம்முன்னே அமர்பவருக்கு பக்குவம் தெளிவு இல்லாமல் இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்? என்று விமர்சிப்பதால் பாவங்கள் சேர்வதைத் தவிர கர்மாக்கள் குறைவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 341

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் இயம்பிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும் சித்தர்கள் இயம்பிக் கொண்டே இருக்கட்டும். யாம் என்ன கூறினாலும் மனிதர்கள் அவனவன் மதி வழியே மதியை பிடித்திருக்கும் விதி வழியேதான் செல்வேன் எனும் பொழுது யாம் வழி காட்டுவதைத் தவிர வேறு எதுவும் மனிதர்கள் வாழ்விலே குறுக்கிட்டு திசை திருப்ப இயலாது. யாம் ஒரு மனிதனின் வாழ்விலே குறுக்கிட வேண்டுமென்றால் இறைவனின் அனுமதியும் அருளும் மட்டுமல்லாமல் அந்த மனிதனுக்கு அந்த அளவிற்கு பக்குவமும் பெருந்தன்மையும் சூழ்ச்சி கபடம் சூது சுயநலமில்லாமல் இருந்திட வேண்டும். இதை வைத்து பார்க்கும் பொழுது நாடி மூலம் சித்தர்களை நாடிக் கொண்டிருக்கும் பல மனிதர்களில் சிலருக்கு வாழ்விலே நல்ல பலன்களும் பலருக்கு நல்ல பலன்கள் நடவாமல் போவதற்கும் காரணமே அவனவன் அடிப்படை குணம்தான்.

இதுபோல் நிலையிலே யாம் கூறுவதை கூறிக் கொண்டே இருப்போம். எமை நாடுகின்ற மாந்தர்கள் எமை நாடி எமது அருளாசியை பெற்றுக் கொள்வதோடு நாங்கள் கூறுகின்ற நல் அறிவை நல் உபதேசத்தை பின்பற்றினால்தான் முழுமையான பலன் உண்டு. ஆனால் நாடி வாசிக்கின்ற இந்த ஸ்தானத்திலே அமரும் பொழுது மட்டும் பவ்யமாக அமர்வதும் பேசும் பொழுது உயர்ந்த கருத்துக்களை பேசுவதும் விவாதம் செய்யும் பொழுதும் பிறருக்கு போதனை செய்யும் பொழுதும் தர்மத்தையும் சத்தியத்தையும் போதனை செய்து தான் அதனை பின்பற்றாமல் இருந்தால் அதனால் பலனேதுமில்லை. இதைதான் எமை நாடும் மாந்தர்களுக்கு பலமுறை பலவிதமாக நயத்தகு நாகரீகம் என்ற அளவிலே சுட்டிக் காட்டுகிறோம். ஆனால் பலன்கள் என்பது மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. தன்முனைப்பு சினம் ஆற்றாமை சோர்வு இதுபோன்ற எந்த எண்ணங்களும் இல்லாமல் உற்சாகமாக நேர்மையான வழியிலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் பிறரை பாதிக்காத வகையிலே வாழ்க்கையை நடத்திக் கொண்டு அவனவன் கடமையை செய்து கொண்டு இறைவன் வழியில் சத்திய வழியில் தர்ம வழியில் எவன் நடக்கிறானோ அவனுக்கு யாம் என்றும் தோன்றாத் துணையாக இருப்போம். ஆனாலும் கூட எல்லோரும் அப்படி நடப்பார்கள் என்று எண்ணி நாங்கள் வாக்கினைக் கூறவில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 340

கேள்வி: இறை கூட இருந்தாலும் நவகிரகங்கள் தம் வேலையை செய்யும் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் எல்லா கிரகங்களுக்கும் சாந்தி செய்ய வேண்டுமா? எந்த திசை நடக்கிறதோ அதற்கு பரிகாரம் செய்தால் போதுமா? எந்தெந்த பாவங்களுக்கு எவ்வளவு தர்மம் செய்யவேண்டும்?

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இன்று பல இல்லறமே துறவறமாகத் தானப்பா தென்படுகிறது. கணவன் மனைவி இருவருமே ஒரே இல்லில் (வீட்டில்) இருக்கிறார்கள். ஆனால் ஒன்றாக இருக்கிறார்களா? என்றால் அது வினாக்குறிதான் ஐயம்தான். எனவே இல்லறத்திலிருந்தே துறவறத்தை இயல்பாகவே விதி உருவாக்கி விட்டது. இவையெல்லாம் வேண்டாம் என்று துறவுக்கு ஒருவன் செல்கிறான். ஆனால் அங்கு சென்ற பிறகு இக்கரை பச்சையாகத் தெரிகிறது. அவன் ஒரு இல்லறவாசியாக மாறி விடுகிறான். எனவே விதிதான் அங்கும் வேடிக்கை காட்டுகிறது. அப்பனே நன்றாக புரிந்துகொள். நவகிரகங்களுக்கோ அல்லது பிற தேவதைகளுக்கோ இறைவனுக்கோ சாந்தி செய்வது என்றால் என்ன? குடம் குடமாக குருவிற்கு பாலை ஊற்றி அபிஷேகம் செய்து கொண்டைக்கடலை மாலையை போட்டு விட்டால் குரு அருள்வார் என்றால் ஒரு மனித ரீதியான மந்திரிக்கும் அரசனுக்கும் தெய்வத்திற்கும் என்னப்பா வேறுபாடு? பிறகு எதற்கு நாங்களே இதையெல்லாம் கூறுகிறோம்? இறை வழிபாடு என்பதே ஒரு மனிதனை பக்குவப்படுத்துவதற்காக. இறை நம்பிக்கை இல்லாத மனிதனுக்குக்கூட தெரியும். இறைவன் என்றால் எப்படி? என்று கேட்டால் விளக்கம் கூறுவான். அன்பு என்றால் எப்படி? என்று கேட்டால் விளக்கம் கூறுவான். அன்பு நிறைந்தவர் கருணை நிறைந்தவர். எத்தனை தவறுகளை நாங்கள் செய்தாலும் மன்னிப்பார். எல்லா ஆற்றலும் கொண்டவர் என்று. இப்படி உயர்ந்த தத்துவமாக விளங்கக்கூடிய இறைவனை அந்தந்த மனிதனின் மனோபாவத்திற்கு ஏற்ப அவன் வழிபட்டுவிட்டு போகட்டும். அப்படி வழிபட வழிபட எதை நீ எண்ணுகிறாயோ அதைப் போலவே ஆகிவிடுவாய் என்பது போல அந்த உயர்ந்த விஷயத்தை நினைக்க நினைக்க நினைக்க சிறிதளவாவது அந்த (இறைத்) தன்மை தன்னிடம் வராதா? என்பதற்கு ஏற்பதான் இறை வழிபாடு.

இரண்டாவதாக இப்படி உயர்ந்த விஷயத்தை செய்து கொண்டே தவறுகள் செய்தால் அவன் மனசாட்சி உறுத்தும். ஒருபுறம் இறைவனை வணங்குகிறோம். இறைவனின் நாமாவளியைக் கூறுகிறோம். மறுபுறம் இப்படி கீழ்த்தரமாக நடந்து கொள்கிறோமே? என்று அவன் மனம் அவனுக்கு சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும். இவையெல்லாம் ஓரளவு நல்வினை இருப்பவர்களுக்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே நவகிரகங்களுக்கு பொதுவாக பரிகாரம் என்ற பெயரிலே அபிஷேகம் ஆராதனை நறுமண மாலை என்று எதை வேண்டுமானாலும் விருப்பம்போல் செய்யலாம். ஆனால் அவற்றோடு நாங்கள் முன்பு கூறியது போல நவகிரகங்களுக்கு பரிகாரம் அந்த அளவில் மட்டும் நின்று விடாமல் நிறைய தர்ம காரியங்களை இயன்றவர்கள் செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னிடம் பணியாற்றும் ஒரு பணியாளனுக்கு உரிய தக்க ஊதியத்தை தராமல் ஆலயம் சென்று எத்தனைதான் லகரம்(லட்சம்) லகரம்(லட்சம்) செலவு செய்தாலும் இறைவனருள் கிட்டாதப்பா. நவகிரக வழிபாட்டிலே எந்தெந்த நவகிரகம் எந்தெந்த தொழிலுக்கு காரகத்துவம் பெற்றிருக்கிறது என்று பார்த்து அப்படி பார்க்கும் பொழுது அந்த தொழில்களிலே ஏழ்மை நிலையில் இருக்கக் கூடிய மனிதர்களுக்கு இயன்ற உதவி செய்தாலும் நவக்ரக பரிகாரம்தானப்பா.

நவக்கிரக வழிபாட்டிலே எந்தெந்த நவகிரகம் எந்தெந்த தொழிலுக்கு காரகத்துவம் பெற்றிருக்கிறது என்று பார்த்து அப்படி பார்க்கும் பொழுது அந்த தொழில்களிலே ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு இயன்ற உதவி செய்தாலும் நவகிரக பரிகாரம் தானப்பா. இதுபோல் நவக்ரக மந்திரங்களைக் கூறுவது வழிபாடு செய்வது என்பதிலே அதும் அடங்கி விடுகிறது. பொதுவாய் தர்மம் செய்வதும் ஆலயங்களுக்கு தொண்டுகள் செய்வதும் போக குறிப்பாய் குரு என்றால் குரு நிலையில் அல்லது உபதேசத்தை தொண்டாகக் கொள்ளக் கூடிய எத்தனையோ மனிதர்கள் ஏழ்மையில் வறுமையில் எதாவது ஒரு காரணத்திற்காக இருக்கலாம். அவர்களைத் தேடிப் பார்த்து அவர்களுக்கு வேண்டியதை செய்து தந்தால் கட்டாயம் குருவின் பார்வை கிட்டுமப்பா. அதுபோல் ஒரு சிறிய தொழில் செய்யும் மனிதனைப் பார்த்து அவனுடைய தொழிலுக்கு ஏற்ப நன்றான ஊதியத்தை இன்னும் இரு மடங்காக்கித் தந்தாலும் அதுபோல் கிரகத்தின் அருள் கிட்டுமப்பா. எனவே எப்படி பார்த்தாலும் ஒருபுறம் இறைவனை வணங்குவதோடு இன்னொருபுறம் அள்ளி அள்ளி தந்து கொண்டே சென்றால் போதும் வேறு எந்த பரிகாரமும் அங்கு தேவையில்லை.

அபிவிருத்தி என்று நீ எதனைக் கூறுகிறாய்? பல மனிதர்கள் வந்தால் அது அபிவிருத்தியா? அந்த இடம் என்னவாகும்? எனவே மனிதர்கள் போகாமல் ஒரு ஆலயம் இருக்கிறதென்றால் மனிதர்கள் கால் படாமல் ஒரு மலை இருக்கிறதென்றால் அது இப்பொழுதே அபிவிருத்தியாகத்தான் இருக்கிறது என்று பொருள். இன்றைய தினம் சதுரகிரி என்னவாகியிருக்கிறது என்று நான் சொல்லித் தெரிய வேண்டாம். அதைப் போல்தான் ஆப்பூர். எனவே அமைதியான முறையிலே அங்கு சித்தர்கள் அரூப நிலையிலும் பாறை வடிவிலும் மண்ணின் அடியிலும் இன்றும் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். மனிதர்களின் ஆர்பாட்டங்கள் அவர்களின் தவத்திற்கு இடையூறாக அமையும். அதுபோன்ற மகான்களின் ஞானதவம்தான் இந்த உலகை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனையோ அமைதியான மலைகள் தெய்வீகத் தன்மையோடு ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் தக்க ஆத்மா வர வேண்டுமென்றால் அந்த சூழலுக்கு ஏற்ப அந்த சித்தர்களே இறை அனுமதி பெற்று வரவழைப்பார்கள். எல்லோரும் செல்லக் கூடிய நிலைக்கு ஒரு வசதியான சூழலை ஏற்படுத்தி விட்டால் அங்கும் அனர்த்தம்தான் நிலவும். எனவே அமைதியாக இருப்பதே பல்வேறு தருணங்களில் எம்மைப் பொறுத்த வரை ஏற்புடையது.

விலங்குகளின் பாஷை இன்று வரை மனிதனால் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது. விலங்குகளில் ஒலி மொழி என்ற ஒன்று இருக்கிறது. அதைப் போல் விலங்குகளின் (மனிதன் தன் செவியால் கேட்க முடியாத) ஒலி சக விலங்குகள் மட்டும் புரிந்து கொள்ளக் கூடிய நிலையில் இருக்கும். ஒரு யானையானது கிட்டத்தட்ட 40 காத தூரம் தாண்டி இன்னும் அதனையும் தாண்டி இருக்கக் கூடிய இன்னொரு யானைக்கு இங்கிருந்தே தகவல் அனுப்பவல்லது. இவற்றையெல்லாம் மனிதன் புரிந்து கொள்வது என்பது கடினம். விருக்ஷங்கள் (மரங்கள்) சக விருக்ஷங்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்படி எத்தனையோ விதமான எண்ணங்களை பரிமாறிக் கொள்ளக் கூடிய மொழி முறைகளோ. ஒலி முறைகளோ சைகை முறைகளோ இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் நீ கூறிய இந்த தமிழ் மொழி. இது எல்லா இடங்களிலும் இருந்தாலும் இங்குதான் பிரதானமாக இருக்கிறது. இன்னும் மேலே செல்ல செல்ல ஒலியால் யாரும் எண்ணங்களை வெளியிடுவதில்லை. மனதிலே எண்ணுகின்ற எண்ணம் அடுத்த நிலையில் உள்ள ஆத்மாவிற்கு மனதிலே செய்தியாக பரிமாறப்படுகிறது. அப்படிதான் பார்வை மூலமும் எண்ணங்களின் மூலமாகவும் மட்டுமே செய்திகள் பரிமாறப்படுகிறதே தவிர வாயைத் திறந்து ஒலி எழுப்பி பரிமாறப்படுவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 339

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

அன்று இன்று நாளும் என்று என்று வாழும் தொன்று தொட்டு இருக்கும் வினை வந்து செயல் முடிக்கும் உயிருக்கு காப்பாக இருந்து காக்கும். அது எது? எது அது? அது எது? என்று அதுவே படித்துக் கொண்டு அதுவே பார்த்துக் கொண்டு அதுவே கேட்டுக் கொண்டு அதுவே பேசிக் கொண்டு அதுவே இருந்து கொண்டு இருக்கிறதே? அது எது? அதுவா? அவனா? அவளா? அதுபோல் கூறுங்கால் அறிவை ஞானமாக்குதல் ஞானத்தை மெய் ஞானமாக்குதல் அப்படி ஆக்குகின்ற முயற்சியே அதற்கு செலவிடப்படும் நாழிகையே அருள் காலமாகும். அதுபோல் மாந்தன் (மனிதன்) தேகம் வேறு தேகத்தின் உள்ளே குடி இருக்கும் ஆத்மா வேறு. இரண்டும் ஒன்றல்ல என்ற உணர்வைப் புரிந்து கொண்டு எப்படி யாம் அடிக்கடி உரைக்கிறோமோ (அதாவது ஒரு லிகிதமானது (கடிதம்) பாதுகாப்பாக உரிய இடம் சென்று அடைவதற்கு ஒரு உறை போல) இந்த ஆத்மா வினைப் பயனை நுகர்ந்து தனக்குள்ளே மெய் ஞானத்தை உணர்ந்து இறை நோக்கிச் சென்று இறையின் திருவடியை அடையும் வரை தேகம் கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் தேகத்தையே நான் என்னும் அறியாமைதான். இத்தனை துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆக இதுபோல் கருத்தைத்தான் நாம் அன்றுதொட்டு வலியுறுத்துகிறோம். அன்றுதொட்டு இன்றுதொட்டு தொன்றுதொட்டு வலியுறுத்தும் கருத்துக்களும் இதேதான். எனவே இதனை புரிந்தவர்கள் மேலும் புரிந்து கொள்ளலாம். என்ன நினைத்தும் புரியாதவர்கள் விட்டு விடலாம். காலமே அவர்களுக்கு புரிய வைக்கும். அதுபோல் வந்திருக்கும் சேய்கள் அனைவருக்கும் நல்லாசி.

இதுபோல் சேய்களும் (பிள்ளைகளும்) இதே தினம் இதே விண்மீன் (நட்சத்திரம்) இதே வாரம் இதுபோல் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னே அமர்ந்து இருந்தவர்கள்தான். அதே ஆத்மாதான். தேகம் மாறி இருக்கிறது. இந்த பூமியின் அமைப்பு மாறி இருக்கிறது. யாம் உற்று நோக்கும் போது பல வனாந்திரங்கள் நகரங்களாக மாறி இருக்கிறது. மனிதனின் ஆடைகள் மாறி இருக்கின்றன. மனிதன் கையாளும் கருவிகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஒன்றே ஒன்று. மனிதன் அப்போது இருந்த மாதிரிதான் இன்றும் இருக்கிறான். அன்று போல்தான் இன்றும் இந்த உலக வாழ்க்கையில் அஞ்சிக் கொண்டே இருக்கிறான். சுயநலம் பேராசை தன்முனைப்பு தனம் இவற்றிலேயே சிக்கி மாய்கிறான். என்றாலும் இதுபோல் நிலையிலே குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று எமக்கு நன்றாகத் தெரியும். எம் சேய்களிடம் இருக்கின்ற குற்றங்களை தவிர்த்து இப்பொழுது வினாக்களுக்கு அனுமதி தருகிறோம். எதற்கு இறை அனுமதி தருகிறதோ அதற்கு பதில் தருகிறோம்.

வள்ளல் கர்ணன்

தர்மாத்மா என்று இந்த உலகத்தாரால் புகழப்படுகின்ற பாண்டவர்களின் மூத்த சகோதரர் தர்மர் யார் எதைக் கேட்டாலும் தந்து கொண்டே இருக்கிறார். அவரின் சகோதரர்களும் யார் என்ன கேட்டாலும் தானம் செய்கிறார்கள். இன்னும் கூறப் போனால் துரியோதனனும் யார் கேட்டாலும் எதை கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க அனைவரையும் விட கர்ணனைதான் பொதுமக்கள் அனைவரும் வள்ளல் என்று கூறுகிறார்கள். அனைவரையும் விட கர்ணன் எப்படி உயர்வாக இருக்க முடியும்? இன்னும் கூறப் போனால் துரியோதனனுக்கு உட்பட்ட ஒரு சிறு ராஜ்ஜியத்தைதான் கர்ணன் ஆண்டு கொண்டு இருக்கிறான். கர்ணனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் ஒரு வகையில் பார்த்தால் துரியோதனன் தந்ததுதான். கர்ணன் தருவதை எல்லாம் ஒரு வார்த்தைக்கு கொடை என்றாலும் துரியோதனனுக்குதான் அந்தப் புகழ் போய் சேர வேண்டும்? சராசரியான மனிதர்கள் வேண்டுமானால் இப்படி புரியாமல் பேசலாம். ஆனால் கிருஷ்ணரும் கர்ணனை வள்ளல் என்றே சொல்கிறார். ஏன் அப்படி என்று பாண்டவர்கள் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர் கர்ணனும் வள்ளல் மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை அனைவருக்கும் காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

கிருஷ்ணர் சில தினங்கள் கழித்து உடலெல்லாம் தளர்ந்த ஒரு வயோதிகராக துரியோதனன் சபைக்கு வந்து மன்னா துரியோதனா உன் புகழ் கேட்டு இருக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார். பெரியவரே தாராளமாக கேளுங்கள். எதை வேண்டுமானாலும் தருகிறேன். உலக நன்மைக்காக நான் மாபெரும் வேள்வி ஒன்று செய்ய இருக்கிறேன். அந்த வேள்விக்கு வேண்டிய விருக்ஷங்களை (மரங்களை) நீ தர வேண்டும். எத்தனை வேண்டுமானாலும் என் அரண்மனையில் இருந்தும் சேமிப்புக் கிடங்கில் இருந்தும் எனக்கு உட்பட்ட வனங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே என் வீரர்களை உம்மோடு அனுப்புகிறேன் என்றான் துரியோதனன். அதற்கு இப்பொழுது வேண்டாம். நாளை வேள்வி என்றால் அதற்கு இரு தினங்கள் முன்பாக வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி முதியவர் சென்று விட்டார். இதே பெரியவர் துரியோதனனை பார்த்த பிறகு தருமரை அர்ஜுனனை ஏனைய அரசர்களை பார்த்து கேட்கிறார். அனைவரும் உடனே தருவதாக கூறினாலும் தேவையான பொழுது நான் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார். இறுதியாக கர்ணனிடம் சென்று கேட்க கர்ணனும் உடனே தருவதாக கூற உடனே வேண்டாமப்பா. வேண்டும் பொழுது நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். அப்படி சென்று வந்த மறு தினத்தில் இருந்து தொடர்ந்து விடாமல் சில தினங்கள் வருணனின் பொழிவு நிகழ்ந்தது.

தேசம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக மாறியது. பிறகு ஒரு தினம் மழை நின்றது. ஆனால் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. பொது மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அந்தந்த தேச அரசர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த முதியவர் துரியோதனனிடம் சென்று துரியோதனா அன்று சொன்னேனே உலக நன்மைக்காக வேள்வி செய்யப் போகிறேன் என்று. ஆமாம் நாளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருக்ஷங்களைக் கொடு என்றார். துரியோதனனுக்கு சரியான சினம் வந்து விட்டது. பெரியவரே ஏதாவது சிந்தனை இருக்கிறதா உமக்கு? இத்தனை தினங்களாக எங்கே போயிருந்தீர்கள்? தேசத்தில் நடந்தது உமக்கு தெரியாதா? ஒரே மழை வெள்ளம். இப்பொழுது எல்லா மரங்களும் நனைந்து இருக்கும். எப்படி அவை வேள்விக்குப் பயன்படும்? அன்றே தருகிறேன் என்று சொன்னேனே. ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? இப்படி காலமில்லா காலத்தில் வந்து கேட்டு என்னை இடர் படுத்துகிறாயே? போ போ என்று சொல்லி விட்டார்.

ஏனைய அனைத்து அரசர்களும் இதே பதிலையே கூற இறுதியாக கர்ணனை பார்க்க வந்தார். அந்தப் பெரியவர் கர்ணனைப் பார்த்துக் கேட்ட பொழுது பெரியவரே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறீர்கள். தேசமெங்கும் வெள்ளமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் நீர் நிறைந்து மரங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அன்றே தந்திருப்பேன். நீங்களும் வேள்வி செய்திருக்கலாம். இறைவனின் சித்தம் அவ்வாறில்லை போல் இருக்கிறது. கொடுக்க முடியாத ஒரு சூழல் வந்து விட்டதே. என்ன செய்வது? இறைவா எனக்கு வழி காட்டு என்ற கர்ணனுக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. தன் சேவகர்களை எல்லாம் அழைத்து என் அரண்மனையில் உள்ள அனைத்து மரங்களையும் கதவுகளையும் (இடித்து பெயர்த்து) இந்தப் பெரியவருக்குத் தந்து விடுங்கள் என்று கூறிவிட்டான். அவ்வளவுதான். அந்த செய்தி பரவிய பிறகு அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். கர்ணா ஏன் உனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது? ஒருவர் என்னிடம் வந்து உதவி கேட்கிறார். அந்த உதவியை தரக் கூடிய வாய்ப்பு சாதாரண நிலையில் அமையவில்லை. ஆனால் வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இப்பொழுது வேள்விதான் முக்கியம். பெரியவருக்கு கொடுத்த வாக்குதான் முக்கியம். உலக நன்மைதான் முக்கியம். நான் என்ன அரண்மனையில் பிறந்தவனா? அரண்மனையில் வளர்ந்தவனா? இடையில் வந்ததுதானே இந்த வாழ்வு? நான் எங்கு வேண்டுமானாலும் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் வேள்வி குறிப்பிட்ட தினத்தில் நடந்தாக வேண்டும். எனவேதான் இந்த முடிவு என்று கூறி அரண்மனையை இடிக்க முற்பட்ட போது அந்தப் பெரியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக உருவெடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியம்.

கிருஷ்ணா நீங்கள்தான் முதியவராக வந்தவரா? ஆமாம். நான்தான் வந்தேன். இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்குமே? எதற்காக கர்ணனை வள்ளல் என்று உலகம் கூறுகிறது? நானும் ஏன் கூறுகிறேன்? என்று. எல்லோரும் தருகிறீர்கள். ஆனால் எந்த நிலையில் தருகிறீர்கள்? அவனவன் சுகமாக இருந்து கொண்டு தன்னுடைய நிலைமையை விட்டுக் கொடுக்காமல் தரத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் தன் வாழ்வே அஸ்தமித்தாலும் பாதகமில்லை. தான் இருக்கின்ற இல்லமே போனாலும் பாதகமில்லை. தருவது என்று வந்து விட்டால் உயிர் என்ன? உடல் என்ன? உடைமை என்ன? எதுவாக இருந்தால் என்ன? தரக்கூடிய வகையில் எது இருக்கிறது என்று பார்த்து அதை எத்தனை கடினம் என்றாலும் அதைத் தந்தால் எத்தனை துன்பம் வந்தாலும் தருவேன் என்று எவன் முடிவு எடுக்கிறானோ அவன்தான் வள்ளல். மற்றவர்களை எல்லாம் வேண்டுமானால் உதவி செய்பவர்கள் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூற இதையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

இப்படியொரு தர்மசங்கடமான சூழலில் எங்களையெல்லாம் ஆட்படுத்திவிட்டு மழையையும் பொழிய வைத்து (மரங்களை) கேட்டால் எப்படி கண்ணா? நாங்கள் என்ன தரக் கூடாது என்ற எண்ணத்திலா சொன்னோம்? மரங்கள் ஈரமாக இருக்கிறதே. எப்படி வேள்விக்குத் தருவது என்றுதானே சங்கடப்பட்டோம். தரக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்று கூற கண்ணபரமாத்மா எல்லோரும் பொறுமையோடு இருங்கள். மீண்டும் உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் கர்ணன்தான் வள்ளல் என்பதை என்று கூறிச் சென்று விட்டார். சில நாட்கள் சென்ற பிறகு இப்பொழுது வெளிப்படையாகவே அனைவரையும் அழைத்து இப்பொழுது ஒரு சோதனை செய்யப் போகிறேன். இந்த சோதனையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவனையே இனி நானும் வள்ளல் என்று அழைப்பேன். உலகமும் வள்ளல் என்று அழைக்கும் என்று கூற என்ன? என்று எல்லோரும் கேட்க இப்பொழுது இந்த பரந்த பாரத மண்ணிலே இருக்கின்ற இமய மலையைவிட உயரமான தங்க மலை ஒன்றை நான் தோற்றுவிக்கப் போகிறேன். இந்த தங்க மலையை பாண்டவர்களுக்கு ஒன்றும் கௌரவர்களுக்கு ஒன்றும் கர்ணனுக்கு என்று ஒன்றும் தந்து விடுகிறேன். நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் யார் முதலில் அதனை தானம் செய்து பூர்த்தி செய்கிறார்களோ அவன்தான் வள்ளல் என்று கூறி சென்று விட்டார். இப்பொழுது பாண்டவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கௌரவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கர்ணனுக்கு ஒரு மலை கிடைத்தது. சரி நாளை காலையில் இருந்து தானத்தை ஆரம்பிப்போம் என்று அனைவரும் சென்று விட்டார்கள்.

மறுநாள் மாலை நெருங்கும் பொழுது கண்ண பரமாத்மா முதலில் துரியோதனனை பார்க்க வருகிறார். அங்கே கால்வாசிதான் தானம் நடந்து இருந்தது. முக்கால் பாகம் அப்படியே இருந்தது. என்ன துரியோதனா? இன்னுமா முடியவில்லை? சூரியன் மறையப் போகிறதே? என்று கண்ணன் கேட்க நாங்கள் கொடுக்கவில்லை அல்லது மறுக்கிறோம் என்று எண்ணாதே. எங்களுக்கு அவகாசம் போதவில்லை. இன்னும் சில மாதங்கள் கொடு. எப்படியாவது தந்து விடுகிறோம் பார் ஆயிரக்கணக்கான ஆட்கள் மலையின் மீது அமர்ந்து வெட்டி வெட்டி வருகின்ற ஏழைகளுக்கு அள்ளி தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீயே பார்க்கிறாய் அல்லவா? என்றார் துரியோதனன். அவகாசம் எல்லாம் தர முடியாது துரியோதனா. இன்று சூரியன் மறைவதற்குள் நீ கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கண்ணன். இதற்குள் வாய்ப்பே இல்லை கண்ணா. நாங்கள் தோற்றதாகவே இருக்கட்டும். ஆனால் பாண்டவர்கள் நிலையை பார்க்க வேண்டும். அழைத்து போ என்று கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கும் இதே நிலைதான். கால் பாகம் கொடுத்து விட்டு முக்கால் பாகம் அப்படியே இருக்க என்ன தர்மா? அர்ஜுனா? இன்னும் தரவில்லையா? என்று கண்ணன் கேட்க தந்து கொண்டுதான் இருக்கிறோம் கண்ணா. ஆனால் அவகாசம்தான் போதவில்லை. ஓரிரு மாதங்கள் கொடுத்தால் நாங்கள் பூர்த்தி செய்து விடுவோம் என்றார்கள் பாண்டவர்கள். அதெல்லாம் முடியாது கொடுத்த அவகாசம்தான். சூரியன் மறைவதற்குள் கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்ணன் கூற எங்களால் முடியாது. ஆனால் கர்ணனின் நிலையை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூற கண்ண பரமாத்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்.

அங்கே கர்ணனுக்கென்று கொடுத்த மலை அப்படியே இருந்தது. நாங்களாவது கால் பாகம் கொடுத்து இருந்தோம். ஆனால் கர்ணனோ ஒன்றுமே கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? பொறுமையாக இருங்கள். கர்ணனிடமே கேட்போம் என்று கூறி கர்ணனை அழைத்து வர செய்து கர்ணா நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? என்ன செய்தேன்? கர்ணன். ஆளுக்கொரு தங்க மலை கொடுத்தேன் அல்லவா? கொடுத்தீர்கள். மற்றவர்கள் எல்லாம் அதில் கால் பாகமாவது கொடுத்து விட்டார்கள். ஆனால் உன் மலை அப்படியே இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார் கண்ணன். யார் மலையை கொடுத்தது? என்று கேட்டார் கர்ணன். நான் கொடுத்தேனே என்றார் கண்ணன். எப்பொழுது கொடுத்தீர்கள்? என்று கேட்டார் கர்ணன். நேற்று கொடுத்தேன் என்றார் கண்ணன். நீங்கள் கொடுத்த மறுகணம் ஒரு ஏழை வந்தார். இந்தா வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டேன். இப்பொழுது எப்படி அது என்னுடையது ஆகும் என்றார் கர்ணன். பார்த்தீர்களா இவன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். உங்கள் சிந்தனை எப்படி போனது? இவன் சிந்தனை எப்படி போனது? என்று கண்ணன் கூற உடனே அதையும் மறுத்தார்கள் சிலர்.

நாங்கள் பலருக்கும் பயனுள்ளதாக கொடுத்தோம். கர்ணனோ ஒருவனுக்குதானே கொடுத்தான் என்று பதில் கூற கர்ணா இதற்கு என்ன பதில் கூறுகிறாய்? என்று கண்ணன் கேட்க மிக மிக தூர தேசத்தில் இருந்து இந்த ஏழை வந்திருக்கிறான். அவன் தேசம் முழுவதும் வறுமை வாட்டுவதாக சொன்னான். உடனே இந்தா இதை வைத்துக் கொண்டு உன் வறுமையையும் உன் தேசத்தின் வறுமையையும் நீக்கிக் கொள் என்று அப்பொழுதே மலையை கொடுத்து விட்டு இந்த விஷயத்தையே மறந்து விட்டேன் என்று கர்ணன் கூற இப்பொழுது ஓரளவு அனைவருக்கும் புரிந்தது.

இந்த கதையின் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வள்ளல் தன்மை என்றால் என்ன? என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப் படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப் பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார். அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பு அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல். இதனை கர்ணன் கடைபிடிப்பதால் கர்ணனை அனைவரும் வள்ளல் என்று அழைக்கிறார்கள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 338

கேள்வி: சுவாரஸ்யமான நீதிக்கதை ஒன்றைக் கூறுங்கள் ஐயனே?

இறைவன் அருளால் எத்தனையோ விதமான விளக்க கருத்துக்களை எல்லாம் யாம் (அகத்திய மாமுனிவர்) பலமுறை பலருக்குக் கூறியிருக்கிறோம் அப்பா. இதுபோல் கூறியது கூறல் என்றாலும் கூட நல்ல விஷயங்களை மீண்டும் மீண்டும் கூறுவது தவறல்ல என்பதால்தான் முன்பே இந்த உலகிலே உலவி வரும் சில கதைகளை நாங்கள் நினைவூட்டுகிறோம். சிலவற்றை கதை என்றும் பலவற்றை நடக்கக் கூடாத சம்பவம் என்றும் மனிதன் எண்ணுகிறான். பல நல்ல விஷயங்களை போதிக்கின்ற அவை கதை மட்டுமல்ல. உண்மையாக ஒரு காலத்தில் நடந்த நிகழ்வுதான். காலம் மாற மாற அந்த நிகழ்வுகளையெல்லாம் மனித சமுதாயம் மறந்து கதையாகவே அவற்றை பாவிக்கத் துவங்கி விடுகிறது. இதுபோல் நிலையிலே நலமாய் நலமாய் உயர்ந்த எண்ணங்களோடு யார் வாழ்ந்தாலும் கூட ஏதாவது ஒரு சிறு பாவம் குறுக்கிட்டால் எத்தனை உயர்ந்த மனிதனும் சமயத்தில் சராசரி எண்ணங்களுக்கு ஆட்பட்டு விடுகிறான். அதே சமயம் சராசரியாக இருக்கின்ற மனிதர்கள் கூட சில புண்ணியத்தின் காரணமாக உயர்ந்த குணங்கள் பெற்று வாழ வேண்டிய ஒரு சூழலுக்கு ஆட்படுகிறான். எனவே யாரையும் சராசரியாக பார்க்கக் கூடாது. இது போன்ற கருத்துக்களை வைத்துத்தான் பல்வேறு விதமான நீதிக் கதைகள் அமையப் பெற்றது என்றாலும் அவற்றில் பல உண்மையில் ஒரு காலத்தில் நிகழ்ந்ததுதான். பொதுவாக தர்மத்தை மையப்படுத்தி நாங்கள் இந்த ஓலையிலே (ஜீவநாடியிலே) கூறுவதால் தர்மம் குறித்த ஒரு நிகழ்வை பாரதத்தில் இருந்து கூறுகிறோம்.

இந்த சம்பவத்தை மக்களுக்கு எடுத்துக் காட்டவே ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நடத்திய ஒரு நாடகம் என்றே பொருள் கொள்ள வேண்டும். இதுபோல நிலையிலே கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்து பலரும் கேட்க அதுபோல் வினாவை கிருஷ்ண பரமாத்மா செவியில் வாங்கி மௌனமாக இருக்க ஒரு சமயம் அர்ஜுனனே ஏன்? தர்மரே? ஏன்? துரியோதனன் கூட கேட்க அனைவரின் சந்தேகத்தை நீக்க கிருஷ்ண பரமாத்மா முடிவு செய்தார். அனைவருக்கும் வந்த சந்தேகம் என்ன தெரியுமா? கிருஷ்ணா பரந்தாமா இந்த உலகிலே இப்பொழுது உள்ள ஏராளமான ராஜ்ஜியங்களும் அதை அடக்கி ஆளக் கூடிய மன்னர்களும் பெருநில மன்னர்களும் குறுநில மன்னர்களும் ஏன்? செல்வந்தர்கள் என்று பெரும்பாலும் இந்த நிலத்திலே அனைவருமே யார் வந்து என்ன உதவி கேட்டாலும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஏன்? தர்மாத்மா என்று இந்த உலகத்தாரால் புகழப்படுகின்ற எங்கள் மூத்த சகோதரர் தர்மர் கூட யார் கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். யானும் ஏனைய சகோதரர்களும் கூட அவ்வாறுதான் இருக்கிறோம். இன்னும் கூறப் போனால் எமக்கு எதிரியாய் இருந்தாலும் கூட துரியோதனனும் யார் கேட்டாலும் எதை கேட்டாலும் தந்து கொண்டுதான் இருக்கிறார். நிலைமை இவ்வாறு இருக்க எங்கள் அனைவரையும் விட கர்ணனைதான் பொதுமக்கள் அனைவரும் வள்ளல் என்று கூறுகிறார்கள். எங்கள் அனைவரையும் விட கர்ணன் எப்படி உயர்வாக இருக்க முடியும்? இன்னும் கூறப் போனால் துரியோதனனுக்கு உட்பட்ட ஒரு சிறு ராஜ்ஜியத்தைதானே அவன் ஆண்டு கொண்டு இருக்கிறான். கர்ணனிடம் உள்ள செல்வங்கள் எல்லாம் ஒரு வகையில் பார்த்தால் துரியோதனன் தந்ததுதான். கர்ணன் தருவதை எல்லாம் ஒரு வார்த்தைக்கு கொடை என்றாலும் துரியோதனனுக்குதானே அந்தப் புகழ் போய் சேர வேண்டும்? சராசரியான மனிதர்கள் வேண்டுமானால் இப்படி புரியாமல் பேசலாம். நீ பேசலாமா? என்று கேட்க கிருஷ்ண பரமாத்மா புன்னகை பூத்த முகத்துடன் பொதுமக்கள் கூறும் அதே கருத்தைத்தான் யானும் வழிமொழிகிறேன்.

நீங்கள் அனைவரும் தரலாம். நான் குறை கூறவில்லை. ஆனால் கர்ணன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல் என்று கூற அனைவருக்கும் குழப்பமும் சந்தேகமும் வந்து விட்டது. எங்களுக்கு நிரூபணம் இல்லாமல் இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூற பொறுமையோடு இருந்தால் நான் நிரூபித்துக் காட்டுகிறேன். கர்ணனும் வள்ளல். மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாதமா கூறுகிறார்.

கர்ணனும் வள்ளல். மற்றவர்களும் வள்ளல். ஆனால் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக கர்ணன் எவ்வாறு இருக்கிறான்? என்பதை காட்டுகிறோம் என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். அவ்வாறு கூறிய பிறகு சில தினங்கள் கழித்து கிருஷ்ணர் உடலெல்லாம் தளர்ந்த ஒரு வயோதிகராக துரியோதனன் சபைக்கு வந்து மன்னா துரியோதனா உன் புகழ் கேட்டு இருக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு உதவி வேண்டும் என்றார். பெரியவரே தாராளமாக கேளுங்கள். எதை வேண்டுமானாலும் தருகிறேன். உலக நன்மைக்காக நான் மாபெரும் வேள்வி ஒன்று செய்ய இருக்கிறேன். அந்த வேள்விக்கு வேண்டிய விருக்ஷங்களை (மரங்களை) நீ தர வேண்டும். எத்தனை வேண்டுமானாலும் என் அரண்மனையில் இருந்தும் சேமிப்புக் கிடங்கில் இருந்தும் எனக்கு உட்பட்ட வனங்களில் இருந்தும் எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதே என் வீரர்களை உம்மோடு அனுப்புகிறேன் என்றான் துரியோதனன். அதற்கு இப்பொழுது வேண்டாம். நாளை வேள்வி என்றால் அதற்கு இரு தினங்கள் முன்பாக வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி முதியவர் சென்று விட்டார். இதே பெரியவர் துரியோதனனை பார்த்த பிறகு தருமரை அர்ஜுனனை ஏனைய அரசர்களை பார்த்து கேட்கிறார். அனைவரும் உடனே தருவதாக கூறினாலும் தேவையான பொழுது நான் வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விடுகிறார். இறுதியாக கர்ணனிடம் சென்று கேட்க கர்ணனும் உடனே தருவதாக கூற உடனே வேண்டாமப்பா. வேண்டும் பொழுது நானே வந்து பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி சென்று விட்டார். அப்படி சென்று வந்த மறு தினத்தில் இருந்து தொடர்ந்து விடாமல் சில தினங்கள் வருணனின் பொழிவு நிகழ்ந்தது.

தேசம் எங்கும் ஒரே வெள்ளக்காடாக மாறியது. பிறகு ஒரு தினம் மழை நின்றது. ஆனால் வெள்ளம் மெல்ல மெல்ல வடியத் தொடங்கியது. பொது மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு அடையாமல் இருக்க அந்தந்த தேச அரசர்கள் ஈடுபட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த முதியவர் துரியோதனனிடம் சென்று துரியோதனா அன்று சொன்னேனே உலக நன்மைக்காக வேள்வி செய்யப் போகிறேன் என்று. ஆமாம் நாளை செய்யலாம் என்று இருக்கிறேன். விருக்ஷங்களைக் கொடு என்றார். துரியோதனனுக்கு சரியான சினம் வந்து விட்டது. பெரியவரே ஏதாவது சிந்தனை இருக்கிறதா உமக்கு? இத்தனை தினங்களாக எங்கே போயிருந்தீர்கள்? தேசத்தில் நடந்தது உமக்கு தெரியாதா? ஒரே மழை வெள்ளம். இப்பொழுது எல்லா மரங்களும் நனைந்து இருக்கும். எப்படி அவை வேள்விக்குப் பயன்படும்? அன்றே தருகிறேன் என்று சொன்னேனே. ஏன் வாங்கிக் கொள்ளவில்லை? இப்படி காலமில்லா காலத்தில் வந்து கேட்டு என்னை இடர் படுத்துகிறாயே? போ போ என்று சொல்லி விட்டார்.

ஏனைய அனைத்து அரசர்களும் இதே பதிலையே கூற இறுதியாக கர்ணனை பார்க்க வந்தார். அந்தப் பெரியவர் கர்ணனைப் பார்த்துக் கேட்ட பொழுது பெரியவரே ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த உதவியை கேட்கிறீர்கள். தேசமெங்கும் வெள்ளமாக இருக்கிறது. எல்லா திசைகளிலும் நீர் நிறைந்து மரங்கள் எல்லாம் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அன்றே தந்திருப்பேன். நீங்களும் வேள்வி செய்திருக்கலாம். இறைவனின் சித்தம் அவ்வாறில்லை போல் இருக்கிறது. கொடுக்க முடியாத ஒரு சூழல் வந்து விட்டதே. என்ன செய்வது? இறைவா எனக்கு வழி காட்டு என்ற கர்ணனுக்கு சட்டென்று ஒரு சிந்தனை தோன்றியது. தன் சேவகர்களை எல்லாம் அழைத்து என் அரண்மனையில் உள்ள அனைத்து மரங்களையும் கதவுகளையும் (இடித்து பெயர்த்து) இந்தப் பெரியவருக்குத் தந்து விடுங்கள் என்று கூறிவிட்டான். அவ்வளவுதான். அந்த செய்தி பரவிய பிறகு அனைவரும் அங்கு வந்து விட்டார்கள். கர்ணா ஏன் உனக்கு இவ்வாறு ஒரு சிந்தனை வந்தது? ஒருவர் என்னிடம் வந்து உதவி கேட்கிறார். அந்த உதவியை தரக் கூடிய வாய்ப்பு சாதாரண நிலையில் அமையவில்லை. ஆனால் வாய்ப்பே இல்லை என்று கூற முடியாது. இப்பொழுது வேள்விதான் முக்கியம். பெரியவருக்கு கொடுத்த வாக்குதான் முக்கியம். உலக நன்மைதான் முக்கியம். நான் என்ன அரண்மனையில் பிறந்தவனா? அரண்மனையில் வளர்ந்தவனா? இடையில் வந்ததுதானே இந்த வாழ்வு? நான் எங்கு வேண்டுமானாலும் ஒண்டிக் கொள்ளலாம். ஆனால் வேள்வி குறிப்பிட்ட தினத்தில் நடந்தாக வேண்டும். எனவேதான் இந்த முடிவு என்று கூறி அரண்மனையை இடிக்க முற்பட்ட போது அந்தப் பெரியவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவாக உருவெடுத்தார். அனைவருக்கும் ஆச்சரியம்.

கிருஷ்ணா நீங்கள்தான் முதியவராக வந்தவரா? ஆமாம். நான்தான் வந்தேன். இப்பொழுது அனைவருக்கும் புரிந்து இருக்குமே? எதற்காக கர்ணனை வள்ளல் என்று உலகம் கூறுகிறது? நானும் ஏன் கூறுகிறேன்? என்று. எல்லோரும் தருகிறீர்கள். ஆனால் எந்த நிலையில் தருகிறீர்கள்? அவனவன் சுகமாக இருந்து கொண்டு தன்னுடைய நிலைமையை விட்டுக் கொடுக்காமல் தரத்தான் எண்ணுகிறீர்கள். ஆனால் தன் வாழ்வே அஸ்தமித்தாலும் பாதகமில்லை. தான் இருக்கின்ற இல்லமே போனாலும் பாதகமில்லை. தருவது என்று வந்து விட்டால் உயிர் என்ன? உடல் என்ன? உடைமை என்ன? எதுவாக இருந்தால் என்ன? தரக்கூடிய வகையில் எது இருக்கிறது என்று பார்த்து அதை எத்தனை கடினம் என்றாலும் அதைத் தந்தால் எத்தனை துன்பம் வந்தாலும் தருவேன் என்று எவன் முடிவு எடுக்கிறானோ அவன்தான் வள்ளல். மற்றவர்களை எல்லாம் வேண்டுமானால் உதவி செய்பவர்கள் என்று மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்று கிருஷ்ண பரமாத்மா கூற இதையும் ஒரு சிலர் ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள்.

இப்படியொரு தர்மசங்கடமான சூழலில் எங்களையெல்லாம் ஆட்படுத்திவிட்டு மழையையும் பொழிய வைத்து (மரங்களை) கேட்டால் எப்படி கண்ணா? நாங்கள் என்ன தரக் கூடாது என்ற எண்ணத்திலா சொன்னோம்? மரங்கள் ஈரமாக இருக்கிறதே. எப்படி வேள்விக்குத் தருவது என்றுதானே சங்கடப்பட்டோம். தரக் கூடாது என்ற எண்ணம் இல்லை என்று கூற கண்ணபரமாத்மா எல்லோரும் பொறுமையோடு இருங்கள். மீண்டும் உங்களுக்கு நிரூபணம் செய்கிறேன் கர்ணன்தான் வள்ளல் என்பதை என்று கூறிச் சென்று விட்டார். சில நாட்கள் சென்ற பிறகு இப்பொழுது வெளிப்படையாகவே அனைவரையும் அழைத்து இப்பொழுது ஒரு சோதனை செய்யப் போகிறேன். இந்த சோதனையில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவனையே இனி நானும் வள்ளல் என்று அழைப்பேன். உலகமும் வள்ளல் என்று அழைக்கும் என்று கூற என்ன? என்று எல்லோரும் கேட்க இப்பொழுது இந்த பரந்த பாரத மண்ணிலே இருக்கின்ற இமய மலையைவிட உயரமான தங்க மலை ஒன்றை நான் தோற்றுவிக்கப் போகிறேன். இந்த தங்க மலையை பாண்டவர்களுக்கு ஒன்றும் கௌரவர்களுக்கு ஒன்றும் கர்ணனுக்கு என்று ஒன்றும் தந்து விடுகிறேன். நாளை காலை சூரிய உதயத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்திற்குள் யார் முதலில் அதனை தானம் செய்து பூர்த்தி செய்கிறார்களோ அவன்தான் வள்ளல் என்று கூறி சென்று விட்டார். இப்பொழுது பாண்டவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கௌரவர்களுக்கு ஒரு மலை கிடைத்தது. கர்ணனுக்கு ஒரு மலை கிடைத்தது. சரி நாளை காலையில் இருந்து தானத்தை ஆரம்பிப்போம் என்று அனைவரும் சென்று விட்டார்கள்.

மறுநாள் மாலை நெருங்கும் பொழுது கண்ண பரமாத்மா முதலில் துரியோதனனை பார்க்க வருகிறார். அங்கே கால்வாசிதான் தானம் நடந்து இருந்தது. முக்கால் பாகம் அப்படியே இருந்தது. என்ன துரியோதனா? இன்னுமா முடியவில்லை? சூரியன் மறையப் போகிறதே? என்று கண்ணன் கேட்க நாங்கள் கொடுக்கவில்லை அல்லது மறுக்கிறோம் என்று எண்ணாதே. எங்களுக்கு அவகாசம் போதவில்லை. இன்னும் சில மாதங்கள் கொடு. எப்படியாவது தந்து விடுகிறோம் பார் ஆயிரக்கணக்கான ஆட்கள் மலையின் மீது அமர்ந்து வெட்டி வெட்டி வருகின்ற ஏழைகளுக்கு அள்ளி தந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நீயே பார்க்கிறாய் அல்லவா? என்றார் துரியோதனன். அவகாசம் எல்லாம் தர முடியாது துரியோதனா. இன்று சூரியன் மறைவதற்குள் நீ கொடுத்தே ஆக வேண்டும் என்றார் கண்ணன். இதற்குள் வாய்ப்பே இல்லை கண்ணா. நாங்கள் தோற்றதாகவே இருக்கட்டும். ஆனால் பாண்டவர்கள் நிலையை பார்க்க வேண்டும். அழைத்து போ என்று கண்ணனை அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்கள். அங்கும் இதே நிலைதான். கால் பாகம் கொடுத்து விட்டு முக்கால் பாகம் அப்படியே இருக்க என்ன தர்மா? அர்ஜுனா? இன்னும் தரவில்லையா? என்று கண்ணன் கேட்க தந்து கொண்டுதான் இருக்கிறோம் கண்ணா. ஆனால் அவகாசம்தான் போதவில்லை. ஓரிரு மாதங்கள் கொடுத்தால் நாங்கள் பூர்த்தி செய்து விடுவோம் என்றார்கள் பாண்டவர்கள். அதெல்லாம் முடியாது கொடுத்த அவகாசம்தான். சூரியன் மறைவதற்குள் கொடுத்தே ஆக வேண்டும் என்று கண்ணன் கூற எங்களால் முடியாது. ஆனால் கர்ணனின் நிலையை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கூற கண்ண பரமாத்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அங்கு செல்கிறார்.

அங்கே கர்ணனுக்கென்று கொடுத்த மலை அப்படியே இருந்தது. நாங்களாவது கால் பாகம் கொடுத்து இருந்தோம். ஆனால் கர்ணனோ ஒன்றுமே கொடுக்கவில்லை. இதற்கு என்ன சொல்கிறாய் கிருஷ்ணா? பொறுமையாக இருங்கள். கர்ணனிடமே கேட்போம் என்று கூறி கர்ணனை அழைத்து வர செய்து கர்ணா நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? என்ன செய்தேன்? கர்ணன். ஆளுக்கொரு தங்க மலை கொடுத்தேன் அல்லவா? கொடுத்தீர்கள். மற்றவர்கள் எல்லாம் அதில் கால் பாகமாவது கொடுத்து விட்டார்கள். ஆனால் உன் மலை அப்படியே இருக்கிறதே? ஏன்? என்று கேட்டார் கண்ணன். யார் மலையை கொடுத்தது? என்று கேட்டார் கர்ணன். நான் கொடுத்தேனே என்றார் கண்ணன். எப்பொழுது கொடுத்தீர்கள்? என்று கேட்டார் கர்ணன். நேற்று கொடுத்தேன் என்றார் கண்ணன். நீங்கள் கொடுத்த மறுகணம் ஒரு ஏழை வந்தார். இந்தா வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டேன். இப்பொழுது எப்படி அது என்னுடையது ஆகும் என்றார் கர்ணன். பார்த்தீர்களா இவன்தான் வள்ளல்களுக்கெல்லாம் வள்ளல். உங்கள் சிந்தனை எப்படி போனது? இவன் சிந்தனை எப்படி போனது? என்று கண்ணன் கூற உடனே அதையும் மறுத்தார்கள் சிலர்.

நாங்கள் பலருக்கும் பயனுள்ளதாக கொடுத்தோம். கர்ணனோ ஒருவனுக்குதானே கொடுத்தான் என்று பதில் கூற கர்ணா இதற்கு என்ன பதில் கூறுகிறாய்? என்று கண்ணன் கேட்க மிக மிக தூர தேசத்தில் இருந்து இந்த ஏழை வந்திருக்கிறான். அவன் தேசம் முழுவதும் வறுமை வாட்டுவதாக சொன்னான். உடனே இந்தா இதை வைத்துக் கொண்டு உன் வறுமையையும் உன் தேசத்தின் வறுமையையும் நீக்கிக் கொள் என்று அப்பொழுதே மலையை கொடுத்து விட்டு இந்த விஷயத்தையே மறந்து விட்டேன் என்று கர்ணன் கூற இப்பொழுது ஓரளவு அனைவருக்கும் புரிந்தது. எனவே இந்த கதையின் நிகழ்வை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் வள்ளல் தன்மை என்றால் என்ன? என்று எடுத்துக் கொள்ள வேண்டும். எனக்கு வேண்டும் என்று எடுத்து வைத்துக் கொண்டு தருவது ஒரு சராசரி நிலைமை. எனக்கு இல்லை என்றாலும் நாளை நான் கடுமையாக பாதிக்கப் படுவேன் என்றாலும் தன்னுடைய குடும்பம் பாதிக்கப் பட்டாலும் என்ன நிலைமை ஏற்பட்டாலும் பாதகமில்லை. இன்று இந்த கணம் குறிப்பாக யாருக்காவது பயன்படும் என்றால் உடனடியாக அதை தருவதை தவிர வேறெதுவும் இல்லை. அடுத்த கணம் உயிர் இருக்குமோ இருக்காதோ? நாளை நடப்பதை யார் அறிவார். அடுத்த கணம் மனம் மாறலாம். எனவே சட்டென்று உடனடியாக தந்துவிட வேண்டும். யோசித்து தந்தால் அது தர்மம் அல்ல. அந்த தர்மத்தில் குறை வந்துவிடும். ஒருவன் வாய்விட்டு உதவி என்று கேட்ட பிறகு தருவது கூட சற்றே குறைந்த தர்மம்தான். பிறர் குறிப்பு அறிந்து எவன் கொடுக்கிறானோ அவன்தான் உயர்ந்த தர்மவான். உயர்ந்த வள்ளல்.