கைலாசமலையை தூக்கிய ராவணன்

சிவனும் பார்வதியும் கைலாச மலையில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த கைலாச மலையை ராவணன் தனது அகங்காரத்தினால் தூக்க முயற்சிக்கிறார். சிவபெருமான் தன்கால் கட்டை விரலால் லேசாக அழுத்த மலைக்கு அடியில் ராவணன் சிக்கி துன்பப்படுகிறான். இறுதியில் தன்னுடைய அகங்காரம் சென்றவுடன் இறைவனை புகழ்ந்து பாடல்கள் பாட இறைவன் அவருக்கு ஒரு வெல்ல முடியாத வாள் மற்றும் சக்தி வாய்ந்த ஆத்மலிங்கத்தை வழங்கி ஆசிர்வதித்தார். இந்த வரலாறு கர்நாடாக மாநிலம் ஹொய்சளேஸ்வரர் கோவிலில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

காளிங்கநர்த்தனம்

கிருஷ்ணர் யமுனை ஆற்றில் வாழ்ந்து வந்த காளிங்கன் எனும் நாகத்தின் மீது ஆடிய நடனத்தினைக் குறிக்கும் சுதைச்சிற்பம். இடம் ஹசராராமர் கோவில் ஹம்பி கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 408

கேள்வி: ஸ்வஸ்திக் சின்னத்தை மனதில் எண்ணும் போது நம்மை எதிர்க்கும் நபர் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கை பற்றி:

இறைவனின் கருணையாலே ஓம்காரத்தையும் நினைத்து பிரார்த்தனை செய்தால் பலனுண்டு. இதுபோல் சேவற்கொடியை வேலினை நினைத்துக் கொண்டு பிரார்த்தனை செய்தாலும் பலனுண்டு. இங்கு எந்த இலச்சினை (சின்னம்) என்பது முக்கியமல்ல. மனோபாவம்தான் முக்கியம். எனவே எந்த மனோபாவத்தில் பிரார்த்தனை செய்கிறாயோ அதை உறுதியோடு உள்ளன்போடு நம்பிக்கையோடு செய்தால் கட்டாயம் பலனுண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 407

கேள்வி: மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாளின் மகிமை :

இதுபோல் கண் நோய் என்றால் மனிதனுக்கு புறக்கண்தான் ஞாபகம் வருகிறது. மனிதனிடம் இருக்கக்கூடிய அகக்கண்ணை திறந்து அவன் ஞானக்கண்ணை திறந்து உண்மையான வாழ்க்கை எது? இறைவனை புரிந்துகொள்வது எப்படி? என்று வழிகாட்டக்கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று. கேதுவின் தாக்கம் கடுமையாக இருப்பவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் இதும் ஒன்று. உலகியல் ரீதியாக கூறப்போனால் புறக்கண்ணில் நீண்டநாள் பிரச்சினை இருப்பவர்கள் சென்று வணங்கக் கூடிய ஆலயங்களில் இதும் ஒன்று.

மலையடிப்பட்டி கண் திறந்த பெருமாள் ஆலயத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 406

கேள்வி: விதிக்கு எதிரான போர்தான் பிராயச்சித்தம். அப்படியென்றால் போர் புரிபவன்தானே ஜெயிக்க வேண்டும்? ஆனால் எதிராளிதானே ஜெயிக்கிறார் எப்பொழுதும்?

நோய்க்கு எதிரிதான் மருந்து. எல்லா மருந்தும் எல்லா நேரமும் நோயை குணப்படுத்தி விடுகிறதா? இதுபோல் இறையருளால் யாங்கள் கூறவருவது யாதென்றால் விதிக்கு எதிராக மனிதன் நல்ல வழியில் போரிட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும். விளைவுகளைக் குறித்து அவன் கவலைப்படாமல் தான் அறிந்த நல்ல வழிமுறைகளை செய்து கொண்டே வர (விதி என்று நாங்கள் கூறுவது விதியால் வருகின்ற துன்பங்களை) விதியால் வருகின்ற துன்பங்கள் ஒருநாள் விலகித்தான் போகும். அது ஒரு நாளில் நடக்குமா? ஓரிரு ஆண்டுகளில் நடக்குமா? சில ஆண்டுகள் கழித்து நடக்குமா? என்பது அந்த விதியின் வலிமையையும் அந்த வலிமையைத் தாண்டி அவன் போர் புரிகின்ற திறமையையும் பொறுத்தது ஆகும்.

சிற்பம்

ஒரு பெண் ஒரு கருவியில் வேலை செய்வது போலவும் இன்னொருவர் கைப்பேசியில் பேசுவது போலவும் உள்ள இந்த சிற்பம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மொபைல் மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களை எல்லாம் அன்றைய சிற்பங்களில் மிகவும் துல்லியமாக உருவாக்கி உள்ளார்கள் நமது முன்னோர்கள். அவர்கள் எதிர்காலத்தை அறிந்தவர்களாகவும் கற்பனையில் அதி நவீனமானவர்களாகவும் கலாச்சாரத்தில் மிகவும் தெய்வீகமானவர்ளாகவும் இருந்துள்ளனர். குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா அருகே சத்ருஞ்சய மலையில் அமைந்துள்ள பாலிதானா ஜெயின் கோவிலில் இந்த சிற்பம் உள்ளது.

தியான நிலையில் உள்ள சிவன்

ஹாவேரியில் உள்ள சித்தேசுவரன் கோவிலின் ஷிகாராவில் 11ஆம் நூற்றாண்டு கல்யாண சாளுக்கிய சிற்பத்தில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட தியான நிலையில் உள்ள சிவன். இடம் சித்தேசுவரன் கோவில். ஆவேரி மாவட்டம். கர்நாடக மாநிலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 405

கேள்வி: கர்மயோகம் பற்றி கர்மயோகி எப்படி இருப்பார்:

அவனவனுக்கு உகந்த கடமைகளை நல்விதமாக செய்து அவனவன் உணர்ந்து கொண்ட நன்மைகளை தொடர்ந்து செய்து கொண்டே ஒரு நன்மையை ஒரு நற்காரியத்தை செய்ய ஆற்றலிருந்தும் செய்ய வாய்ப்பிருந்தும் வசதியிருந்தும் சூழலிருந்தும் செய்யாமல் போகாமல் கட்டாயம் செய்வதும் செய்ய முடியாத நிலையிலும் நற்காரியங்களை செய்வதும்தான் எம்மை பொறுத்தவரை நல்ல கடமையாளி நல்ல கர்மயோகியாகும்.

அனுமன்

ராம தூதுவனாக ராவணனிடம் சென்ற அனுமன் தனது வாலை ஆசனமாக உருவாக்கி ராவணனுக்கு சரி சமமாக அமர்ந்திருக்கும் காட்சி. இடம் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம் தாடிபத்ரியில் உள்ள சிந்தல வெங்கடரமண சுவாமி கோயில்