63. சமணரைக் கழுவேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சமணரைக் கழுவேற்றிய படலம் அறுபத்தி மூன்றாவது படலமாகும்.

திருஞானசம்பந்தர் சொக்கநாதரின் திருவருளால் கூன்பாண்டியனின் வெப்புநோயையும் உடல் கூனினையும் போக்கியதைக் கண்டு மங்கையர்கரசியும் குலச்சிறையாரும் பெரிதும் மகிழ்ந்தனர். மதுரையில் மீண்டும் சைவத்தை தளிர்க்கச் செய்யுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தனர். திருஞானசம்பந்தரும் இறைவனின் திருவருளால் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று அவர்களிடம் கூறி திருக்கோவிலை அடைந்து இறைவனை மனமார வழிபட்டார். திருஞானசம்பந்தர் இறைவனாரிடம் ஐயனே பாண்டிய நாட்டில் மீண்டும் சைவம் தழைத்தோங்க அருள்புரியுங்கள் என்று வேண்டிக் கொண்டார். பாண்டியனின் வெப்புநோயை தீர்ப்பதில் தோல்வியுற்ற சமணர்கள் திருஞானசம்பந்தரை வாதிட்டு வெல்ல முடிவு செய்தனர். மன்னனிடம் இதனைத் தெரிவித்து அவரை வாதப்போருக்கு அழைத்தனர். மன்னனும் இதற்கு உடன்பட்டான். போட்டியின்படி மதுரை நகருக்கு வெளியே அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. சமணர்கள் தங்களின் பாடல்களை பனைஓலை சுவடியில் எழுதி குண்டத்தில் போட்டனர். திருஞானசம்பந்தரும் போகமார்த்த பூண்முலையாள் என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை அக்னியில் இட்டார்.

அக்னி குண்டம் எரிந்து முடிந்ததும் திருஞானசம்பந்தரின் திருநள்ளாற்றுப் பதிகம் எரியாமல் புதுப்பொலிவுடன் இருந்தது. சமணர்களின் பாடல் தீயில் கருகியது. ஆனால் சமணர்கள் சமாதானம் அடையாமல் புனல் வாதத்திற்கு திருஞானசம்பந்தரை அழைத்தனர். அப்போது பாண்டியன் குறுக்கிட்டு வாதத்தில் தோற்றவர்கள் கழுவேற வேண்டும் என்று நிபந்தனை விதித்தான். இருவரும் ஒப்புக் கொண்டனர். வைகை ஆற்றில் சமணர்கள் பனை ஓலையில் எழுதிய தங்களின் பாடல்களை இட்டனர். அச்சுவடிகள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டன. திருஞானசம்பந்தர் தான் எழுதிய வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்ற பதிகத்தை ஆற்றில் போட்டார். திருஞானசம்பந்தரின் ஏடானது வைகை ஆற்று நீரினை எதிர்த்து கிழித்து சென்று சற்று தூரத்தில் மறைந்தது. இதனைக் கண்ட அரசர் சமணர்களிடம் திருஞானசம்பந்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு சைவத்திற்கு மாறினால் கழுவில் ஏற வேண்டாம் என்றார். ஆனால் சமணர்கள் தங்களின் தோல்வியை ஒப்புக் கொண்டு தாங்களாகவே கழுவில் ஏறி தங்களின் உயிரினைத் துறந்தனர்.

ஏடு மறைந்த இடத்தில் வில்வமரத்தின் அடியில் இறைவனார் சுயம்புவாய் தோன்றி இருந்தார். அதனைக் கண்டதும் அங்கிருந்தோர் அனைவரும் அவரை வழிபட்டனர். திருஞானசம்பந்தர் அப்போது வன்னியமும் மத்தமும் என்ற பதிகத்தைப் பாடி இறைவனாரை வழிபட்டார். அப்போது ஒரு முதியவர் வடிவில் இறைவனார் அவ்விடத்திற்கு வந்து திருஞானசம்பந்தரிடம் ஏடுகளை தந்து மறைந்தருளினார். பின்னர் சுந்திரபாண்டியன் அவ்விடத்தில் திருகோவில் ஒன்றினைக் கட்டி சிலகாலம் தங்கியிருந்து இறைவனாரை வழிபட்டான். அவ்விடம் தற்போது திருவேடகம் என்று அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் பாண்டிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்து பல தலங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி மீண்டும் சோழ நாட்டிற்குச் சென்றார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறையருளை யாராலும் எதனாலும் வெற்றி கொள்ள முடியாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 486

கேள்வி: வைராக்யம் மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வழிமுறை:

இறைவன் அருளாலே தொடர்ந்து இதுபோல் நல்விதமாய் மனிதன் போராட கற்றுக் கொள்ள வேண்டும். அயர்ந்து விடக்கூடாது. இறைவனை வணங்குவதோடு சத்தியத்தை பின்பற்றுவதோடு தர்ம காரியங்களை செய்வதோடு தொடர்ந்து எத்தனை துன்பங்கள் வந்தாலும் துவண்டு விடாமல் போராடும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அன்றாடம் தன்னைத்தானே சுய ஆய்வு செய்ய வேண்டும். இன்று எத்தனை செயல்கள் செய்தோம்? அதில் எத்தனை நற்செயல்கள்? எத்தனை அவச்செயல்கள்? இனிமேல் இந்த அவச்செயல்களை செய்யக் கூடாது என்றெல்லாம் சுய ஆய்வு செய்து தன்னைத்தான் நீதிபதியாக குற்றவாளியாக சாட்சியாக அங்கே அவன் தீர்ப்பு வழங்க வேண்டும். இப்படி சுய ஆய்வு செய்து கொண்டே ஒரு மனிதன் வாழ்ந்தால் வைராக்யம் வளர்ந்து விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 485

கேள்வி: கோவில்களில் அபிஷேகம் செய்யப் பயன்படும் பாலை அது கிட்டாதவர்களுக்கு வழங்கலாமே?

இறைவன் அருளாலே யாருக்கு எது தேவையோ அதை தாராளமாக தரலாம். இறைவன் திருமேனியில் அபிஷேகம் செய்வது வீண் என்று எண்ணி அதை ஏழைகளுக்கு கொடுத்தாலும் இறைவன் சந்தோஷம்தான் அடைவார். யாங்களும் திருப்திதான் அடைவோம். ஆனால் ஒன்று. ஒரு குழந்தைக்கு விலையுயர்ந்த ஆடையை அணிகலன்களை பெற்றோர்கள் அணிந்து பார்த்து மகிழ்கிறார்கள். குழந்தைக்கு அதன் மதிப்பு தெரியுமா? அல்லது குழந்தை அதைக் கேட்டதா? குழந்தைக்கு அவையெல்லாம் அணிந்து பார்ப்பதில் அந்த மனிதனுக்கு ஒரு சந்தோஷம் ஒரு திருப்தி. அடுத்ததாக கருங்கல்லாக அல்லது பஞ்சலோக விக்ரகமாக பார்க்கின்ற தன்மை வேறு. அது இறை பரம்பொருள் என்ற எண்ணம் வேறு. அங்கே சாக்ஷாத் இறைவன் இருக்கிறார் அருள் புரிகிறார் அங்கு இருப்பது பரம்பொருள்தான் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் அவையெல்லாம் வீண் என்ற எண்ணம் வருமா? எனவே இது அவனவன் மனோநிலையை பொருத்ததாகும். எதை செய்தாலும் எமக்கு உடன்பாடே. ஆனால் செய்கின்ற மனோதர்மத்தைப் பொறுத்து அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பாண்டியன் சுரம் தீர்த்த படலம் அறுபத்தி இரண்டாவது படலமாகும்.

அரிமர்த்த பாண்டியனுக்குப் பின்னர் அவனுடைய வழித்தோன்றலாக நெடுமாறன் என்னும் கூன்பாண்டியன் மதுரையை ஆண்டு வந்தான். கூன்பாண்டியன் போர்த்திறத்திலும் கல்வி கேள்விகளிலும் சிறந்து விளங்கினான். அவன் முதுகிலிருந்த கூன் காரணமாக அவனது பெயர் மறைந்து காரணப் பெயராலேயே அழைக்கப்பட்டான். மூவேந்தர்களிலும் சிறந்தவனாக விளங்கினான். சோழ அரசனின் மகளான மங்கையர்கரசியாரை மணந்திருந்தான். இவனுக்கு குலச்சிறையார் என்ற சிவனடியார் நல்ல ஆலோசனைகளைக் கூறும் மந்திரியாக அமைந்திருந்தார். கூன்பாண்டியன் காலத்தில் சமண சமயம் மதுரையில் பரவத் தொடங்கியது. அரசனும் சமண சமயத்தால் ஈர்க்கப்பட்டு மக்களையும் சமண சமயத்தைப் பின்பற்றச் செய்தான். இதனால் மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் பெரிதும் வருந்தினர். சொக்கநாதரிடம் சைவம் மீண்டும் தழைக்க அருள்புரிய வேண்டினர். அப்போது ஒருநாள் சோழநாட்டில் இருந்து வந்த வேதியர் ஒருவரை மங்கையர்கரசியாரும் குலச்சிறையாரும் சந்தித்தனர். சோழநாட்டில் ஆளுடைய பிள்ளையார் என்னும் திருஞானசம்பந்தர் பதிகங்கள் பாடி சைவ சமயத்தை பரவச் செய்த செய்தியை அவ்வேதியரின் மூலம் அறிந்தனர். மேலும் அவர் மதுரையம்பதிக்கு வந்து சொக்கநாதரை வழிபட திட்டமிட்டு இருப்பதையும் தெரிந்து கொண்டனர். உடனே ஆளுடைய பிள்ளையான திருஞானசம்பந்தரை மதுரைக்கு விரைந்து வருமாறும் சைவ சமயத்தை மதுரையில் மீண்டும் தழைக்க செய்யுமாறும் வேண்டுகோள் விடுத்து ஓலை எழுதி வேதியரிடம் கொடுத்து அனுப்பினர்.

வேதியரும் திருமறைக்காட்டில் திருநாவுக்கரசருடன் தங்கியிருந்த திருஞானசம்பந்தரிடம் அவ்வோலையைக் கொடுத்தார். அப்போது திருநாவுக்கரசர் தற்போது கோளும் நாளும் நன்றாக இல்லை. ஆதலால் சிறிது காலம் தாழ்த்தி மதுரையம்பதிக்கு செல்லுமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு திருஞானசம்பந்தர் நமசிவாய மந்திரத்தை சொல்லும் சிவனடியார்களை நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்னும் பொருள் கொண்ட கோளறு பதிகத்தைப் பாடி மதுரையம்பதிக்கு விரைந்தார். அங்கு வாகீச முனிவரின் மடத்தில் தங்கி இருந்தார். திருஞானசம்பந்தரின் வரவினை அறிந்த சமணர்கள் அபிசார வேள்வியைத் தொடங்கி கொடிய தீப்பிழம்பினை தோற்றுவித்து திருஞானசம்பந்தரை அழிக்குமாறு ஏவிவிட்டனர். அத்தீயானது திருஞானசம்பந்தர் வாட்டியது. உடனே தன்னுடைய இந்நிலைக்கு காரணம் பாண்டியன் சமணர்களை ஆதரித்ததே. ஆகையால் இத்தீயின் வெப்பமானது பாண்டியனை சென்று அடையுமாறு திருஆலவாய் மேவிய என்னும் பதிகத்தைப் பாடினார். உடனே தீயின் வெப்பமானது வெப்பு நோயாக மாறி பாண்டியனைச் சென்றடைந்து அவனை வாட்டியது. வெப்பு நோயால் வருத்தம் கொண்ட பாண்டியன் சமணர்களை அழைத்து தனக்கு உண்டான இக்கொடிய நோயினை போக்குமாறு வேண்டுகோள் விடுத்தான். சமணர்களும் மயிற்பீலிகளைக் கொண்டு விசிறியும் நீரினைத் தெளித்தும் வெப்புநோயை தீர்க்க முற்பட்டனர். ஆனால் பாண்டியனின் வெப்புநோய் மேலும் அதிகரித்தது.

மங்கையர்கரசியார் திருஞானசம்பந்தர் ஒருவரே உங்களின் வெப்புநோயை தீர்க்க வல்லவர் என்று கூன்பாண்டியனிடம் தெரிவித்தார். வெப்புநோயால் பாதிப்படைந்த கூன்பாண்டியன் அதற்கு சம்மதம் தெரிவித்தான். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியனின் அழைப்பினை ஏற்று அரசனின் இருப்பிடத்திற்கு வந்தார். அங்கிருந்த சமணர்கள் பாண்டியனது வலப்புறத்து நோயை திருஞானசம்பந்தரும் இடப்புறத்து நோயை தாங்களும் போக்குவதாக அறிவித்தனர். உடனே திருஞானசம்பந்தர் தன்னிடமிருந்த திருநீற்றினை எடுத்தார். அதனைக் கண்டதும் சமணர்கள் இது மாயநீறு என்று கூறினர். இதனைக் கேட்டதும் சொக்கநாதரின் திருமடப்பள்ளியிலிருந்து சாம்பலை எடுத்து வரச்சொல்லி திருநீற்றுப்பதிகம் பாடி அச்சாம்பலை திருநீறாகக் கருதி கூன்பாண்டியனின் வலப்புறத்தில் தேய்த்தார். பாண்டியனைப் பற்றி இருந்த வலப்பக்க வெப்பு நோய் நீங்கியது. சமணர்கள் தங்களிடம் உள்ள மருந்தை இடது பக்கம் தேய்த்தனர். இப்போது கூன் பாண்டியனின் நோய் இன்னும் அதிகமானது. உடனே கூன்பாண்டியன் தன்னுடைய இடப்பக்க நோயை போக்குமாறு திருஞானசம்பந்தரிடம் வேண்டுகோள் விடுத்தான். திருஞானசம்பந்தரும் இடபுறமும் திருநீற்றினைத் தடவியதும் வெப்பு நோய் நீங்கியதோடு கூனும் நீங்கியது. பேரழகுடன் திகழ்ந்த அப்பாண்டியன் சுந்திரபாண்டியன் என்று அழைக்கப்பட்டான். சுந்தர பாண்டியனும் திருஞானசம்பந்தருக்கு தக்க உபசரணைகள் மரியாதைகள் செய்து பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக மடத்தில் சேர்த்தான்.  மீனாட்சி சுந்தரேசர் கோயிலுக்கு ஏராளமான பொன் பொருள் ஆடை ஆபரணங்கள் வாகனங்கள் வெகுமதியாகக் கொடுத்தான். சமணர்களை ஊரை விட்டே விரட்டிவிட்டான். சுந்தர பாண்டியன் பெரும் சிவபக்தனாக மாறினான். பாண்டியனும் பாண்டிய நாட்டு மக்களும் சைவசமயத்தைத் தழுவினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

சமண மதத்தில் உள்ள துஷ்டர்களை விரட்டியதையும் சைவத்தை நிலைநாட்டியதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

61. மண் சுமந்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மண் சுமந்த படலம் அறுபத்தி ஒன்றாவது படலமாகும்.

மாணிக்கவாசகரை காப்பாற்றும் நோக்கில் இறைவனார் வைகையில் வெள்ளப் பெருக்கினை உண்டாக்கினார். வைகையில் ஏற்பட்ட வெள்ளமானது ஆற்றின் கரையை உடைத்து வெளியேறத் தொடங்கியது. இதனைக் கண்டதும் காவலர்கள் அரிமர்த்தன பாண்டியனிடம் விவரத்தை எடுத்துரைத்தனர். அரிமர்த்தன பாண்டியனும் குடிமக்களுக்கு ஆற்றின் கரையை அடைக்குமாறு ஆணையிட்டான். அரசாங்க ஏவலர்கள் பாண்டிய நாட்டு குடிமக்களுக்கு ஆற்றின் உடைபட்ட கரையினை அளந்து தனித்தனியே கொடுத்து பெயர்களை பதிவு செய்து கொண்டு அவரவர் பங்கினை அடைக்க உத்தரவிட்டனர். மக்களும் வைக்கோல் பசுந்தளை மண்வெட்டி கூடை ஆகியவற்றைக் கொண்டு தாங்களாகவும் கூலிக்கு வேலையாள் அமர்த்தியும் ஆற்றின் கரையினை அடைக்கத் தொடங்கினர். அப்போது பாண்டிய நாட்டில் தென்கிழக்குத் திசையில் வஞ்சி என்னும் மூதாட்டி பிட்டு விற்று வசித்து வந்தாள். அவள் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டவள். தினமும் தான் செய்யும் முதல் பிட்டினை இறைவனாருக்குப் படைத்துவிட்டு அப்பிட்டினை சிவனடியாருக்கு வழங்கி ஏனைய பிட்டுகளை விற்று வாழ்ந்து கொண்டிருந்தாள். வஞ்சி பாட்டிக்கும் ஆற்றின் கரையை அடைக்குமாறு பாகம் பிரித்துக் கொடுக்கப்பட்டது. வஞ்சியோ மூதாட்டி ஆதலால் தன் பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க தகுந்த கூலியாளைத் தேடிக் கொண்டிருந்தாள். கூலியாள் கிடைக்காததால் வஞ்சி மிகவும் கலக்கமுற்று சொக்கநாதரிடம் ஐயனே நானோ வயதானவள். என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரையை அடைக்க கூலியாள் கிடைக்கவில்லை. ஆகையால் இன்னும் என்னுடைய பங்கிற்கான ஆற்றின் கரை அடைபடாமல் உள்ளது. எனவே அரசனின் கோபத்திற்கு நான் உள்ளாகலாம். ஆதலால் என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்று என்று வேண்டினாள்.

இறைவனார் வஞ்சிக்கு அருள் செய்ய விருப்பம் கொண்டார். ஆதலால் மண் சுமக்கும் கூலியாள் போல் வேடமிட்டு கையில் மண்வெட்டியும் திருமுடியில் கூடையையும் சுமந்து கொண்டு பிட்டு விற்றுக் கொண்டிருக்கும் வஞ்சியின் இடத்தினை அடைந்தார். கூலி கொடுத்து என்னை வேலைக்கு அமர்த்துபவர் உண்டோ என கூவிக்கொண்டு வஞ்சியை நெருங்கினார். உடனே வஞ்சி இறைவனாரிடம் என்னுடைய பங்கான ஆற்றின் கரையை அடைக்க முடியுமா? என்று கேட்டாள். சரி அப்படியே செய்கிறேன். எனக்கு என்ன கூலி கொடுப்பாய்? என்று கேட்டார். அதற்கு பாட்டி என்னிடம் பணம் இல்லை. நான் விற்கும் பிட்டினை உனக்கு கூலியாகத் தருகிறேன் என்று கூறினாள். இறைவனாரும் அதற்கு சம்மதம் தெரிவித்து நீ செய்யும் பிட்டில் உதிர்ந்த பிட்டுக்கள் அனைத்தையும் எனக்கு கொடுத்துவிடு. உதிராத பிட்டுக்கள் அன்னைத்தும் விற்பனைக்கு வைத்துக் கொள் சம்மதமா என்று கேட்டார். பாட்டியும் சம்மதித்தாள். பின்னர் வஞ்சியிடம் நான் தற்போது பசியால் மிகவும் சோர்வாக இருகிறேன். ஆகையால் நீ எனக்கு பிட்டை சாப்பிட கொடு நான் சாப்பிட்டு பசியாறிய பிறகு வைகையை அடைக்கிறேன் என்று கூறினார். வஞ்சியும் அதற்கு சம்மதித்து நான் பிட்டினை செய்கிறேன் நீ அதற்குள் வைகையின் கரையினை அடைக்க நான் வந்தியின் கூலியாள் என பதிவேட்டில் குறித்து வைத்துவிட்டு வா என்று சொல்லி பிட்டினை செய்ய ஆரம்பித்தாள். அன்று சமைத்த பிட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே போனது. விற்பனைக்கு பிட்டு இல்லையே என முகம் சுளிக்காமல் கொடுத்த வாக்கின் படி மகிழ்ச்சியோடு பிட்டை அள்ளி வைத்தாள். இறைவனார் பிட்டை சாப்பிட்டதும் கரையை அடைத்து விடப்பா எனப் பணிவுடன் கேட்டுக் கொண்டாள்.

இறைவனார் கரையை அடைப்பது போல் நடித்துக் கொண்டும் மற்றவர்களுக்கு வேடிக்கை காட்டியும் மரநிழலில் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டும் வஞ்சியிடம் பிட்டை வாங்கி உண்டும் பொழுதைப் போக்கினார். கூலியாட்களின் மேற்பார்வையாளர் இறைவனாரை எழுப்பி விரட்டி விட மீண்டும் வந்தியிடம் சென்று பிட்டை வாங்கித் தின்றுவிட்டு வந்து மரநிழலில் படுத்துக்கொண்டார். கணக்கரிடம் காவலாளிகள் இதனைச் சொல்லும் போது அச்சமயத்தில் அரிமர்த்தன பாண்டியன் அங்கு வந்தான். அனைத்தும் கேட்ட அரசன் தன்னிடம் உள்ள பிரம்பில் படுத்திருந்த இறைவனார் முதுகில் ஓங்கிப் அடித்தார். அந்த அடி உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசியின் முதுகிலும் விழுந்தது. அடித்த அரசனும் ஆ வென அலறினான். வாதவூரரும் வந்தியும் முதுகைத் தடவிக் கொண்டனர். சிரித்துக் கொண்டே இறைவனார் ஒரு கூடை மண் எடுத்து வந்தியின் பங்கில் கொட்டி மறைந்தார். அடுத்த வினாடி வைகை வெள்ளம் அடங்கியது. பிட்டுக்கு மண் சுமக்க வந்தவர் பெருமானே என அனைவரும் உணர்ந்தனர். அரிமர்த்தன பாண்டியன் கூலியாளாக வந்தது இறைவனே என்பதை உணர்ந்தான்.

இறைவனார் அப்போது அசீரீரியாக பாண்டியனே தூயநெறியில் உன்னால் தேடப்பட்ட செல்வம் முழுவதும் என்னுடைய அடியவர்களின் பொருட்டு மாணிக்கவாசகரால் செலவழிக்கப்பட்டது. ஆகையால் யாம் நரிகளை பரிகளாக்கி உம்முடைய இடத்திற்கு அனுப்பினோம். பரிகளெல்லாம் மீண்டும் நரிகளானதால் மாணிக்கவாசகரை நீ தண்டித்தாய். அதனைப் பொறுக்காமல் வைகையை யாம் பொங்கி எழச்செய்து கரையினை உடைக்கச் செய்தோம். வஞ்சியின் கூலியாளாய் வந்து வஞ்சியிடம் பிட்டு வாங்கி உண்டு உன்னிடம் பிரம்படி பட்டோம். நீ மாணிக்கவாசகரின் உள்ளப்படி நடந்து கொண்டு நீதிநெறி பிறழாமல் ஆட்சி செய்து எம்மை வந்தடைவாயாக என்று திருவாக்கினைக் கூறினார். அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரைச் சந்தித்து தன்னை மன்னித்து மீண்டும் அமைச்சர் பொறுப்பை ஏற்க வேண்டினான். மாணிக்கவாசகரோ அதனை மறுத்து தில்லை அம்பலத்திற்குச் சென்று இறைவனை வணங்குவதே தன்னுடைய விருப்பம் என்பதைக் கூறி தில்லைவனம் சென்று பாடல்கள் பாடி மகிழ்ந்து இறுதியில் இறைவனாரின் சோதியில் கலந்தார். இறைவனாரின் ஆணைப்படி சிவகணங்கள் வஞ்சியை சிவலோகத்துக்கு அழைத்துச் சென்றனர். அரிமர்த்தபாண்டியன் சகநாதன் என்னும் புதல்வனைப் பெற்று இறைவனாரின் திருவடியை அடைந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தமக்கு விரையம் ஏற்பட்டாலும் துன்பப்படாமல் மகிழ்ச்சியுடன் கொடுத்த வாக்கை நிறை வேற்ற வேண்டும் அவ்வாறு செய்தால் இறைவன் சிவலோகத்தையும் கொடுப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 484

கேள்வி: நடராஜப் பத்துவில் வரும் கும்பமுனி மச்சமுனி பிரம்மரிஷி கோரக்கர் வள்ளுவர் போகர் இவர்கள் எல்லாம் கூறிடும் வைத்தியம் அல்ல. என் மனது உன்னடிவிட்டு நீங்காது நிலை நிற்க ஏதுளவு புகல வருவாய் இதன் ஞானக்கருத்து என்ன?

இறைவனின் அருளாலே இதுபோல் கூற வருவது என்னவென்றால் நல்விதமாய் பலவற்றை யாங்கள் ஓதினாலும் பிறர் ஓதக் கேட்டாலும் அவை நல்லதோ அல்லது அல்லதோ அவற்றையெல்லாம்விட்டு நான் எண்ணுகின்ற எண்ணங்களில் இருந்தும் என்னை காப்பாற்றி நான் நினைப்பது சரியோ தவறோ அவற்றையும் தாண்டி என்னை நீ ஆட்கொள். சுருக்கமாக கூறப்போனால் நான் புரிந்து கொண்டது சரியோ தவறோ நான் நினைப்பது உண்மையோ பொய்யோ ஆனால் இறைவா என்னை அப்படியே ஏற்றுக்கொள். நான் எப்படியோ அப்படியே புரிந்து ஏற்றுக்கொள் அப்படியே என்னை ஆட்கொள் என்பதுதான் அடிப்படை உண்மையாகும்.

60. பரி நரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பரி நரியாக்கிய படலம் அறுபதாவது படலமாகும்.

இறைவனே குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தார் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் இறைவனின் திருவருளை எண்ணி மகிழ்ச்சியில் திளைத்தார். இறைவனை மனதார துதித்து வழிபட்டார். அன்று சூரியன் மறைந்ததால் பகல் முடிந்து இரவின் அடையாளமாக சந்திரன் தோன்றியது. நடு இரவில் இறைவனின் திருவருளால் குதிரைகளாக மாறிய நரிகள் எல்லாம் பழைய வடிவத்தை அடைந்தன. குதிரைக் கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்ததால் அவைகள் எரிச்சல் அடைந்து ஊளையிட்டன. அரிமர்த்தனனின் குதிரை லாயத்தில் கட்டியிருந்த பழைய குதிரைகளை நரிகள் கடித்துக் குதறின. குதிரைகள் வலி தாங்க முடியால் அலறிச் சாய்ந்தன. இதனால் பேரிரைச்சல் ஏற்பட்டது. குதிரை லாயத்திற்கான பணியாட்கள் பேரிரைச்சலால் கண் விழித்து நடந்தவைகளைப் பார்த்து திகைத்தனர். அரிமர்த்தனனிடம் நடந்தவைகளை கூறச் சென்றனர். அந்நேரம் நரிகள் ஆத்திரத்தில் ஊளையிட்ட வண்ணம் காட்டை நோக்கி ஓடின. நடந்தவைகளை கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரின் மாயச் செயலாலே குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறிவிட்டதாகக் கருதினான். ஆத்திரத்தில் தண்டல்காரர்களிடம் அக்கொடியவன் அரச பணத்தைக் கொள்ளை அடித்துவிட்டு அதனை மறைக்கவே ஏதோ மாயங்கள் செய்து குதிரைகளைக் கொண்டு வந்து அவற்றை நரிகளாக மாற்றி ஏற்கனவே இருந்த குதிரைகளையும் கொல்லச் செய்து விட்டான். ஆதலால் அவனுக்கு சரியான தண்டனை அளித்து அரசப்பணத்தை மீட்டெடுங்கள் என்று கட்டளையிட்டான்.

மாணிக்கவாசகரின் மாளிகைக்கு அரசனின் ஆணையை செயல்படுத்த தண்டல்காரர்கள் சென்றனர். அவர் அங்கு தியானத்தில் இருந்தார். அவரை எழுப்பி நடந்தவைகளைக் கூறி அவரை அழைத்துச் சென்றனர். மாணிக்கவாசகரும் அவர்களுடன் ஏதும் கூறாமல் இறைவனை எண்ணியபடி நடந்து சென்றார். தண்டல்காரர்கள் அவருடைய கை மற்றும் கால்களில் பாங்கற்களை ஏற்றி வைத்து வெற்று உடம்புடன் நண்பகலில் வையை ஆற்று மண்ணில் படுக்கச் செய்தனர். மாணிக்கவாசகர் ஆற்றுமண்ணின் சூடு தாங்காமல் அலறித் துடித்தார். இறைவா இது என்ன சோதனை? என்னைக் காப்பாற்றுங்கள் என்று உருகினார். மாணிக்கவாசகரின் குரல் கேட்டு உருகிய இறைவனார் அவருக்கு அருள் செய்யும் நோக்கம் கொண்டார். இறைவனாரின் திருவருளால் வைகையில் தண்ணீர் வரத் தொடங்கியது. மழை ஏதும் பெய்யாமல் ஆற்றில் தண்ணீர் வருவதைக் கண்டதும் தண்டல்காரர்கள் திகைத்தனர். நேரம் செல்லச் செல்ல வைகையில் தண்ணீர் வருவது அதிகரித்து வெள்ளமாக மாறியது. மாணிக்கவாசகர் இருந்த இடத்தில் மட்டும் வெள்ளம் வராமல் தண்ணீராக மட்டும் வைகை ஓடியது. நடந்தவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கவாசகர் இறைவனாரின் திருவிளையாடலை எண்ணியபடி இருந்தார். நேரம் ஆக ஆக வைகையையின் வெள்ளம் கரையை உடைக்கத் தொடங்கியது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அடியவர்களின் துன்பத்தினை இறைவனார் விரைந்து வந்து தீர்ப்பார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 483

கேள்வி: மனித இனம் எப்படித் தோன்றி உலகம் முழுவதும் பரவியது?

இறைவனின் கருணையாலே நீண்ட நெடும் விடையை தரவேண்டிய வினா இது. இருந்தாலும் கூறுகிறோம். ஆதியந்தமில்லாத பரம்பொருள் வெறும் ஓம்கார சப்தத்தோடு தனித்து அமைதியாய் இருக்கிறது. அது தானே எல்லாமாகவும் இருக்கிறது. வேறு எதுவும் இல்லாத நிலையில் தானாக இருக்கின்ற அதுதான் பலவிதமாக அண்ட சராசரங்களாக பிரிந்து மெல்ல மெல்ல விதவிதமான கிரகங்களாகவும் வேறுவிதமான நிலைகளாகவும் மாறுகிறது. அப்படி மாறிய நிலையிலேயே எந்த உயிரினமும் இல்லாமல் பல்கோடி ஆண்டுகள் கழிந்தன. அதன் பிறகுதான் சிறு சிறு உயிர்கள் தாவரங்கள் பிறகுதான் மனிதர்கள் என்ற நிலைக்கு ஒரு முடிவை எடுத்தது பரம்பொருள். இது ஒரு கணத்தில் ஒரு ஆண்டில் நிகழ்ந்தது அல்ல. ஆனால் விழி மூடி விழி திறப்பதற்குள் செய்யக் கூடிய ஆற்றலைப் பெற்ற பரம்பொருளால் பல ஆண்டுகாலமாக வேடிக்கையாக லீலா வினோதமாக செய்யப்பட்ட ஒரு விஷயமப்பா. இன்னும் இதுகுறித்து நுணுக்கமான வாக்கினை தக்க காலத்தில் உரைக்கின்றோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 482

கேள்வி: பல ஆதிசங்கரர்கள் பல ஔவையார்கள் இருந்தார்களா ?

இறைவனின் கருணையால் உண்மையான முதன்மையான பெயரில் இருப்பது ஒருவர்தான் என்றாலும் அவர்கள் மீது பற்றுகொண்டு இப்பொழுது போல பெயரை சூட்டிக்கொள்வது அந்தக் காலத்திலும் உண்டு. எனவே அப்படி இருந்தது உண்மை. அப்படியிருந்து சிலவற்றை எழுதியிருப்பதும் உண்மை. ஆனால் யாங்கள் எப்பொழுதும் சுட்டிக் காட்டுவதும் கூறுவதும் முதன்மையான நாமம் கொண்டவர்களை குறித்துதான்.

59. நரியை பரியாக்கிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் நரியை பரியாக்கிய படலம் ஐம்பத்தி ஒன்பதாவது படலமாகும்.

இறைவனார் குதிரைகளை அழைத்து வருவதாகக் கூறிய வாக்குறுதியை எண்ணி மாணிக்கவாசகர் குதிரைகளின் வரவிற்காக மதுரையில் காத்திருந்தார். நாட்கள் நகர்ந்தன. குதிரைகள் வந்தபாடில்லை. அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகர் பொய் உரைப்பதாகக் கருதி அவரை தண்டித்து அரசாங்கப் பணத்தை அவரிடம் இருந்து பெறுமாறு தண்டல்காரர்களுக்கு உத்தரவிட்டான். அரசனின் ஆணையை ஏற்று தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரின் வீட்டிற்கு அவரை அழைப்பதற்காகச் சென்றனர். அவர் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். தண்டல்காரர்கள் அரச ஆணையை அவரிடம் தெரிவித்தனர். அதற்கு அவர் எல்லாம் இறைவனின் விருப்பப்படி நடக்கும் என்று எண்ணி அவர்களுடன் சென்றார். தண்டல்காரர்கள் மாணிக்கவாசகரிடம் அரசாங்கப் பணத்தை திரும்ப அளிக்கும்படி வலியுறுத்தி அவரின் முதுகில் பெரிய பாறாங்கற்களை ஏற்றினர். அவருக்கு அது பஞ்சுப் பொதி போல் தோன்றியது. மறுநாள் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு அவரைத் தாக்கினர். அதனையும் பொறுத்துக் கொண்ட மாணிக்கவாசகர் இறைவனிடம் தங்களுடைய திருவாக்கினை பொய்யாக்கமல் விரைவில் குதிரைகளுடன் மதுரைக்கு வாருங்கள் என மனமுருகி வழிபட்டார். இந்நிலையில் ஆடி முடித்து ஆவணி மாதம் பிறந்து விட்டது. இறைவனார் மாணிக்கவாசகருக்கு உதவ திருவுள்ளம் கொண்டார்.

இறைவனார் திருநந்தி தேவரிடம் மாணிக்கவாசகன் குதிரைகளை வாங்கித் தராத குற்றத்திற்காக பாண்டிய‌னின் சிறையில் அவதிப்படுகிறான். அவனுடைய துன்பத்தை போக்குவதற்காக நீயும் நம் பூதகணங்களும் காட்டில் உள்ள நரிகளை பரிகளாக்கி குதிரை வீரர்களாக மதுரையை நோக்கிச் செல்லுங்கள். மதுரைக்கு அருகில் செல்லும்போது யாம் குதிரை வீரனாக வந்து உங்களுடன் கலந்து கொள்வோம் என்று கூறினார். இறைவனின் ஆணையை ஏற்று நந்திதேவரும் பூதகணங்களும் நரிகளை குதிரைகளாக மாற்றி அதன்மீது அமர்ந்து மதுரையை நோக்கி விரைந்தனர். குதிரைகள் மதுரையை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரை விடுவிக்கச் செய்தான். அவருக்கு பரிசுகள் பல வழங்கினான். குதிரைகளின் அணி வகுப்பினைக் காண மணிமண்டபத்திற்கு வந்தான். மக்கள் எல்லோரும் குதிரைகளைக் கண்டு ஆரவாரம் செய்தனர்.

பாண்டியனின் கண்களுக்கு மட்டும் குதிரைகள் புலப்படவில்லை. மாணிக்கவாசகர்தான் ஏதோ தந்திரம் செய்கிறார். ஆகையால்தான் தன் கண்களுக்கு குதிரைகள் புலப்படவில்லை என்று பாண்டியன் கருதி மாணிவாசகரை மீண்டும் சிறையில் அடைத்தான். சற்று நேரத்தில் குதிரை லாயத்தில் ஆயிரக்கணக்கான குதிரைகள் மற்றும் குதிரை வீரர்கள் இருப்பதைக் கண்ட பாண்டியநாட்டு வீரர்கள் அரிமர்த்தனனிடம் விபரத்தைச் சொல்லினர். அங்கு வந்த பாண்டிய‌ன் குதிரைகளைக் கண்டு மகிழ்ந்தான். பின்னர் அருகில் இருந்த குதிரை வீரனிடம் உங்கள் குதிரைப் படைக்கு தலைவன் யார்? என்று கேட்டான். அப்போது வேதமாகிய குதிரையில் அமர்ந்திருந்த இறைவனாரை சுட்டிக் காட்டி இவர்தாம் எம் தலைவர் என்று கூறினான். இறைவனாரைக் கண்டதும் பாண்டியன் அவனையும் அறியாமல் வணங்கினான். அப்போது இறைவனார் குதிரையின் கயிற்றினை பிடித்து பாண்டியனின் கையில் கொடுத்தார்.

சிங்கப் பாய்ச்சல் புலிப்பாய்ச்சல் முயல்பாய்ச்சல் குரங்குப் பாய்ச்சல் அம்புப்பாய்ச்சல் சர்ப்பப்பாய்ச்சல் வாயுப்பாய்ச்சல் என்று பலவகைப் பாய்ச்சல்களுள்ள குதிரைகளை பார்த்துப் பார்த்து வாங்கியதாலேயே தாமதமாகி விட்டது. குதிரை வரவில்லை என்று மந்திரியை தண்டித்தாய். அவரைத் துன்புறுத்தியது என்னை தண்டித்தது போல இருக்கிறது. அவசர புத்திக்காரனான நீ கேட்பார் பேச்சுக் கேட்டு செயல்படும் உனது சுபாவம் கீழ்மையானது. அவருடைய நல்ல குணத்திற்காகத் தான் குதிரையை ஒப்பந்தப்படி உன்னிடம் கொடுக்கிறேன். குதிரைகளை ஒப்படைத்ததாகி விட்டது. இனி குதிரைப் பற்றிக் கேட்கக் கூடாது. இதுவே குதிரை பரிமாற்றத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கம் என்று கூறினார். இறைவனாரின் கூற்றினை ஆமோதித்த அரிமர்த்தன பாண்டியன் இறைவனாருக்கு வெண்துண்டினைப் பரிசளித்தான். இறைவனாரும் தலையில் அதனைக் கட்டிக் கொண்டு அங்கிருந்து தம் பூதகணங்களோடு புறப்பட்டார். பின்னர் மாணிக்கவாசகருக்கு பரிசுகளை அரிமர்த்தன பாண்டியன் வழங்கி அவரை அவருடைய இல்லத்திற்கு வழி அனுப்பி வைத்தான். மாணிக்கவாசகரும் பாண்டியனின் பரிசுகளை தம் சுற்றத்தாருக்கு பகிர்ந்தளித்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன்னை நம்பியவர்களை மேலும் மேல் நிலைக்கு அழைத்துச் செல்ல இறைவன் அவர்களுக்கு பல சோதனைகளை வைப்பார். இறைவனின் சோதனையை பொறுமையுடம் ஏற்றுக் கொண்டால் அவர்களை மேல் நிலைக்கு அழைத்துச் செல்வதுடன் அவர்களின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் படி வெளி உலகிற்கு காட்டுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.