மணக்கோலத்தில் சிவனும் உமையவளும். இடம் திருவாலந்துறையார் திருக்கோயில் மகாமண்டபத்தில் நுழைவாயில் வலதுபுறம் அமைந்துள்ளது. கீழப்பழுவூர் அரியலூர் மாவட்டம்.
Month: April 2023
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 525
கேள்வி: லக்னம் என்ற உயிருக்கு ஆறாம் இடத்து அதிபதியாகிய சூரியன் ஒரே சாரத்தில் ஒரே மாதத்தில் இருக்கும் பொழுது ஜாதகனுக்கு தோஷமா? பாவமா?
இறைவன் அருளால் ஜாதக நிலை என்பது மேலெழுந்தவாரியாகக் கூறினால் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாத நிலையாகும். இருந்தாலும் சுருக்கமாக கூறுகிறோம் புரிந்து கொள்ள முயற்சி செய். உதாரணமாக பஞ்சம ஸ்தானத்திலே அரவு (நாகம்-ராகு) இருந்தால் பொதுவாக புத்திர தோஷம் என்று கூறி விடுவார்கள். ஆனால் எத்தனையோ மனிதர்களுக்கு பஞ்சம ஸ்தானத்திலே அரவு இருந்து எந்த விதமான பரிகாரமும் இல்லாமல் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. ஏனென்றால் அப்படி ஒரு பாக்கியம் புண்ணியம் வேறு வகையில் அங்கு இருக்கலாம். அல்லது புத்திரன் பிறந்து அவன் மூலம் துன்பப்பட வேண்டும் என்ற ஒரு தோஷம் அங்கு இருக்கலாம். எனவே தோஷம் பாவம் என்பது ஒன்று கிட்டாமல் போவது மட்டுமல்ல. கிட்டியும் அவனுக்கு துன்பத்தை தந்தாலும் அது தோஷத்தின் விளைவுதான்.
இன்னவன் வினவிய லக்ன பாவத்திலிருந்து ஆறாம் இடத்திற்கு உரிய கிரகம் அல்லது அந்த சாராம்சம் எதனோடு தொடர்பு கொண்டாலும் அதுபோல் அது தோஷத்தைதான் பெரும்பாலும் ஏற்படுத்தும். லோகாய ரீதியாக அது பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட அவன் சற்றியே விழிப்புணர்வு பெற்று ஆன்ம வழியிலே வந்துவிட்டால் அந்த பாதிப்பை குறைத்து விடலாம். என்னவன் குறிப்பாக சூரியனை மையப்படுத்தி கேட்டதால் இது போல் இந்த தோஷத்திற்கு இது பாவமா? தோஷமா? என்று கேட்டால் ஆம் என்று தான் நாங்கள் கூறுவோம். சரியான பிரயாத்தம் சில ஆலயங்களிலே குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தினத்திலே சூரியன் மூலஸ்தானத்தில் உள்ள மூலவரை வணங்கக் கூடிய ஒரு நிலையில் அந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கும். அதுபோன்ற ஆலயத்திற்கு சென்று வழிபடுவதும் சூரியனுக்கு உகந்த நட்சத்திரத்திலே சூரியனுக்கு உகந்த தலங்கள் சென்று வழிபாடு செய்வதும் அதோடு ஆதித்ய ஹ்ருதயத்தை ஓதுவதும் சூரியனுக்கு உண்டான ப்ரீதிகளை எந்தெந்த ஸ்லங்களில் சிறப்பாக செய்ய முடியுமோ அதனை செய்வதும் இதனையும் தாண்டி சூரியனுக்கு காரகத்துவம் உடைய தந்தை அரசு இது தொடர்பான விஷயங்களில் ஒருவனால் என்னென்ன வகையான தொண்டுகளை செய்ய முடியுமோ அதனை செய்வதும் பிராயச் சித்தமாகும்.
ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள்
ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள்
இடம்: ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் சிவாலயம். தூத்துக்குடி.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 524
கேள்வி : கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலின் வெளிபிரகாரத்தில் தாங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அது குறித்து:
இறைவன் அருளால் அங்கு மட்டும் என்று நாங்கள் இல்லையப்பா. எங்கெல்லாம் உள்ளன்போடு நினைக்கிறார்களோ அங்கெல்லாம் நாங்களும் ஏனைய மகான்களும் இருக்கிறோம்.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 523
கேள்வி: பாவங்களைக் கழிக்க வழி தெரியாமல் சுற்றித் திரிந்து எவ்வளவு நஷ்டப்பட முடியுமோ? எவ்வளவு வேதனை பட முடியுமோ? எவ்வளவு தொல்லைகளை அனுபவிக்க முடியுமோ? அவற்றை அனுபவித்து வழி தெரியாமல் இறுதியாக இந்த இடத்தில் நாங்கள் சரணாகதி அடையும் பொழுது நீ வேறு எங்காவது செல்லடா என்றால் நாங்கள் எங்கு செல்வது? பிடித்த இடம் இது ஒன்றுதானே. எனக்கு பிடித்த தகப்பனும் நீதானே. இந்த சூழ்நிலையிலே பல்வேறு குடும்பங்களில் பல பெண்களுக்கு வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. அதற்காக நாங்கள் தங்களிடம் வரும்பொழுது தம்பதி சமைதராக வாகனத்துடன் கூடிய நவகிரகங்களுக்கு அபிஷேகம் அர்ச்சனைகள் செய்ய சொல்கிறீர்கள். நாங்களும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். இந்த நாளில் நீங்கள் ஒரு உறுதி எடுங்கள். எங்களுக்கான சில பாவங்களை நீங்களே ஏற்றுக் கொள்ளுங்கள். எப்படியாவது இந்த பெண்களுக்கு திருமணம் நடத்தி வையுங்கள். அம்மையப்பா அடித்தது போதும் இனி அணைத்திடல் வேண்டும். பொதுவாகவே கேட்கிறேன். இங்கு வந்திருக்கும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடைபெற எப்போது நீங்கள் கருணை காட்டப் போகிறீர்கள்?
பதில்: இறைவன் அருளை கொண்டு என்னவன் கேட்பது எமக்கு விசித்திரமாக இருக்கிறது. திருமணம் நடக்கவில்லை என்பது துயரம் என்று கூறுகிறான். திருமணம் நடந்தவர்களை கேட்டால்தான் தெரியும். திருமணம் நடந்தது துயரமா? நடக்காமல் இருப்பது துயரமா? யாரையாவது கேட்டு பாரப்பா திருமணம் நடந்த அனைவருமே ஏன் திருமணம் நடந்தது? என்று தான் எண்ணுகிறார்கள். எனவே யாராவது ஒருவனுக்கு திருமணம் நடக்கவில்லை என்றால் இறைவன் அருள் அவனுக்கு இருக்கிறது. இருந்து விட்டுப் போகட்டுமே ஒருவனை இடர்படுத்துவதில் உனக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்று தெரியவில்லை. இறைவன் அருளாலே நன்றாக புரிந்து கொள்ளப்பா. திருமணம் என்ற ஒரு நிகழ்வு யார் யாருக்கு என்று நடைபெற வேண்டுமோ அந்த தினத்தில் கட்டாயம் நடைபெறும். இங்கே வந்து வாக்கை கேட்டு திருமணம் ஆகியவர்களில் கூட பலரும் கருத்தொத்து வாழவில்லை. காரணம் களத்திர ஸ்தானத்தில் தோஷம். தோஷத்தின் தாக்கம் இருக்கும் வரையில் ஒன்று திருமணம் தள்ளிக் கொண்டு செல்லும் அல்லது திருமணம் நடந்தாலும் திருப்தியான நிலை இருக்காது. திருமணம் நடக்கவில்லை அது நடந்தது தான் ஆக வேண்டும். அது துன்பமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்கிறோம் என்று எண்ணக்கூடிய ஆண்கள் பெண்கள் நாங்கள் அடிக்கடி கூறுவதாக இவன் கூறுகிறான். நவகிரக தம்பதியரை வணங்க வேண்டும் என்று அதற்காக விநாயகரை வணங்கினால் விநாயகர் திருமண நடத்தி தர மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை. ஆஞ்சநேயரை வணங்கினால் அவர் அருள்பாலிக்க மாட்டார் என்று நாங்கள் கூறவில்லை.
திருமண தோஷம் இருந்தவர்களின் ஜாதகத்தை நன்றாக பார்த்தாலே ஓரளவு கோள்நிலை அறிந்தவனிடம் சென்று காட்டினால் தெரியும் என்ன காரணம் என்று. அதற்கெல்லாம் பரிகாரமாகத்தானே சித்தர்களை நாடி வந்திருக்கிறோம்? இவர்கள் ஏதாவது வழி செய்ய கூடாதா? எங்கள் பாவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டால் பாவங்களை ஏற்றதால்தான் அனைவரின் முன் அமர்ந்து யாம் வாக்கை கூறிக் கொண்டிருக்கிறோம். மனிதரிடம் பேசுவதே நாங்கள் செய்த பாவம் என்று தான் இதுவரை எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதை நகைப்புக்காக கூறவில்லை. மனித ரீதியாகவே கூறுகிறோம். மனிதர்களில் மிக உயர்ந்த பதவியில் ஒருவன் இருப்பதாக கொள்வோம். கோடி கோடியாக தனம் வைத்திருப்பதாக கொள்வோம். அவனை அழைத்து இதோ சாலையோரத்தில் உடலெங்கும் நோய் பற்றி ஒருவன் படுத்திருக்கிறானே? இறுதி நாளை எண்ணிக்கொண்டு இருக்கிறானே அவனோடு கை குலுக்கி கட்டிப்பிடித்து உறவாடுவாயா என்று கேட்டால் யாராவது செய்வானா? மனிதன் செய்ய மாட்டானப்பா. நாங்கள் இறைவனை அருளாணைக்காக இந்த மனித ஆத்மாக்கள் எல்லாம் இறைவனின் படைப்பு தானே மாயையில் சிக்கி தடுமாகிறது. இந்த மாயையை அகற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் இறையருளால் போராடிக் கொண்டிருக்கிறோம். எனவே உன் சேயவளும் அல்லது இங்கு இருக்க கூடிய சேய்களும் திருமணம் ஆகவில்லையென்றால் இப்பொழுது உறுதியாக கூறுகிறோம். கட்டாயம் திருமணம் நடக்கும். இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் மனித ரீதியாக சில எதிர்பார்ப்புகளை எல்லாம் தள்ளி வைத்து ஒரு மனிதன் திருமணம் என்ற பந்தத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறைவனோ நாங்களோ ஜாதியை மதத்தை படைக்கவில்லை. நாங்கள் இந்த பிரிவில் இருக்கிறோம். இந்த பிரிவில் தான் பெண் வேண்டும் ஆண் வேண்டும் என்று என் முன்னே எவன் வந்தாலும் அதை நாங்கள் செவியில் ஏற்றுக்கொள்ள மாட்டோம். என் பொண்ணோ பிள்ளையோ வேறொரு பிரிவை சேர்ந்த ஒரு பெண்ணை ஒரு ஆணை விரும்புகிறது. அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்றால் அதை நாங்கள் கேட்க மாட்டோம். மனிதனும் மனிதனும் தான பார்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். மனிதனும் விலங்கும் திருமணம் செய்தால் தான் அது கலப்பு மணம் என்று கூறலாம். ஒரு மனிதன் இன்னொரு மனித இனத்திலே பிறந்த பெண்ணையோ ஆணையோ திருமணம் செய்து கொள்வதில் எத்தனை இடர்பாடுகளையும் தடைகளையும் மனிதன் போட்டு வைத்திருக்கிறான். இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? மனிதன் தான் அறியாமையிலிருந்து வெளியே வர வேண்டும். என் பெண் படித்திருக்கிறாள் மிகப்பெரிய பதவியில் இருக்கிறாள் எனவே அவளுக்கு தகுந்தார் போல் பிள்ளையை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை பெண்ணை பெற்றவர்களும் பெண்ணும் விட்டு விட வேண்டும். என் பிள்ளை படித்திருக்கிறான் மிகவும் வசீகரமாக இருக்கிறான். மிக உயர்ந்த பதவியில் இருக்கிறான். கடல் தாண்டி பெரிய நிறுவனத்தில் இருக்கிறான். லகரம் லகரம் ஊதியம் பெறுகிறான். எனவே அதற்கு ஏற்றார் போல் தான் பெண்ணை பார்ப்பேன் என்ற கோட்பாட்டை ஒரு மனிதன் விட வேண்டும். இதையெல்லாம் எங்களால் விட முடியாது. நாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் விதி அப்படித்தான் வேலை செய்யும். முதலில் மனித ரீதியாக முரண்பாடுகளை களைந்து விட்டால் அடுத்த கணம் திருமணம் நடக்கும். ஆனால் திருமணம் நடப்பது என்பது அல்ல பிரச்சனை. அங்கே மனம் ஒத்து எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்பது தான் பிரச்சனை.
இப்பொழுது கூறுகிறோம். ஏழாம் இடத்தையும் எட்டாம் இடத்தையும் உற்றுப் பார்த்தாலே பலரின் திருமண இலட்சணம் நன்றாகவே தெரியும். எனவே திருமணம் தாமதமாகிறது என்று வருந்த வேண்டாம். பின்னால் தெரிய வரும் தாமதமானதை விட நடக்காமல் இருப்பதே மேல் என்று ஒவ்வொரு மனிதர்களும் உணர்வார்கள். இருந்தாலும் திருமண தோஷம் குறைவதற்கு எத்தனையோ ஆலயங்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் மிக எளிமையாக சுக்ர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை தோறும் அதிகாலை எழுந்து இல்லத்தை சுத்தி செய்து சுக்கிரனுக்கும் மற்ற கிரகங்களுக்கும் முறையான வழிபாட்டை செய்வதும் அதோடு மகாலட்சுமிக்கு முறையான வழிபாட்டை செய்வதும் 120 தினங்கள் இல்லத்திலே மனம் ஒன்றி இவ்வாறு வழிபாடுகள் செய்வதும் அந்த 120 தினங்களுக்குள் முடிந்தவர்கள் ஏழை ஆண் பெண் திருமணத்திற்கு முடிந்த உதவிகள் செய்தால் கட்டாயம் விதி மீறி 120 தினங்களுக்குள் திருமணம் நடக்கும் திருமணம் நடக்கும். அதைத்தான் நாங்கள் கூற முடியும் அந்த திருமணம் எதிர்பார்த்த விதமாக நடக்குமா? என்றால் அது அவனவன் தலையெழுத்தை பொறுத்தது.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 522
கேள்வி: பில்லி சூனியம் ஏவல் உண்டா? இருந்தால் இவற்றிற்கு பரிகாரம் என்ன?
இறைவனின் அருளால் இது குறித்து பலமுறை விளக்கம் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னவன் பொருட்டு கூறுகிறோம். வேதத்திலே அதர்வண வேதம் என்ற ஒன்று இருக்கிறது. அதிலேயே இது குறித்து நிறைய விளக்கங்கள் இருக்கிறது .பொதுவாக அடுப்பு எரிக்க பயன்படுத்தப்படும் நெருப்பு கூரையை எரிக்க பயன்படுத்துவது போல வனாந்திரங்களில் (காடுகளில்) முனிவர்கள் தனிமையிலே தவம் செய்யும் பொழுது விலங்குகளாலும் கள்வர்களாலும் தமக்கு இடர்பாடு தொல்லைகள் ஏற்படாமலிருக்க தன்னைச் சுற்றி ஒரு காப்பு கட்டி கொள்வார்கள். அதற்காகத்தான் இது போன்ற மந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனாலும்கூட மனிதர்களின் சுயநலமும் பேராசையும் இது போன்ற மந்திரங்களை தீமைக்கு பயன்படுத்தி பிறரை இடர்படுத்துகிறான்.
இது போன்ற மந்திரப் பிரயோகங்களை கற்றவர்கள் மிகவும் குறைவு. இவற்றால் பாதிப்பு என்பது உண்மை என்றாலும்கூட ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி அதனால் பாதிக்கப்பட வேண்டும் என்ற திசா புத்தி ஒருவன் ஜாதகத்தில் இருந்தால் தான் அந்த பாதிப்பு இருக்கும். ஆனால் ஒரு மனிதன் என்ன எண்ணுகிறான்? அடுத்தடுத்து இரண்டு மூன்று துன்பங்கள் வந்து விட்டாலே யாராவது செய்வினை செய்து இருக்கிறார்களோ? என்று அஞ்சுகிறான். இந்த அச்சத்தை அரைகுறையாக அறிந்தவர்கள் பயன்படுத்திக் கொண்டு அவனிடமிருந்து பொருளை பறித்து விடுகிறார்கள். எனவே இப்படி ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது குறித்து மனிதன் அஞ்சாமல் முன்பு கூறியது போல நேர்மையான முறையில் உலக வாழ்வை நடத்திக் கொண்டே இறை வழிபாட்டை செய்து கொண்டே தர்மத்தை அதிகப்படுத்திக் கொண்டால் இது போன்ற பாதிப்புகள் ஒரு மனிதனுக்கு வராது.
இருந்தாலும் குறிப்பாக இதுபோன்ற பாதிப்பு இருக்கிறது. இதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் அன்னை பிரத்யங்கிரா வழிபாட்டை செய்து நலம் பெறலாம். நரசிம்மர் வழிபாட்டை செய்து நலம் பெறலாம். சரபேஸ்வரர் வழிபாட்டை செய்து நலம் பெறலாம். அதுபோல் பரசுராம தேசத்திலே அன்னையை (சோட்டானிக்கரை பகவதி) நாடி சென்று குறிப்பாக பௌர்ணமி தினங்களிலே வழிபாடு செய்து நலம் பெறலாம். இது போன்ற வழிபாடுகளில் தீவிரமாக கவனம் செலுத்துவதும் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தமது இல்லங்களில் இப்பொழுது உரைத்த தெய்வங்களை நாமங்களை பயன்படுத்தி யாகங்கள் செய்வதும் இது போன்ற தீய சக்தியிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும்.
இறைவன் அருளால் மனிதனுக்கு தெரிந்த நியாயம் மனிதனுக்குத் தான் நியாயமாகத் தெரியும். இறைவனுக்கு அது நியாயமாகத் தெரியாது. மனிதனுக்கு உண்மையிலேயே நியாயமாகத் தெரிந்தாலும் நான் நல்லவனாக தானே இருக்கிறேன். நான் தொடர்ந்து துன்பத்திலே இருக்கிறேன் எனக்கு வர வேண்டிய நியாயமான பங்கு வரவில்லையே? கிடைக்க வேண்டிய நியாயம் கிடைக்கவில்லையே? என்று மனிதன் வேண்டுமானால் வேதனைப் படலாம். நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனாலும் இறைவன் நியாய தராசிலே ஒருபொழுதும் தவறு நிகழ்வதில்லை. காரண காரியம் இல்லாமல் எந்த துன்பமும் யாருக்கும் வருவதில்லை. இருந்தாலும் இன்னவன் போன்று இருப்பவர்களுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் ஏதாவது ஒரு ஆலயம் சென்று முருகாப் பெருமானை நல்ல முறையிலே வழிபாடு செய்து வணங்கிக் கொண்டே இருந்தால் நல்ல பலன் உண்டு. சிறுவை என்றொரு ஸ்தலத்திற்கு முடிந்த பொழுது சென்று வழிபாடு செய்து வந்தாலும் நல்ல பலன் ஏற்படும்.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 521
கேள்வி: தீட்டு என்ற ஒன்று இருக்கிறதா? தீட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை யார் வகுத்தார்?
பதில்: இறைவனின் அருளால் ஒவ்வொரு மனிதனையும் புத்தியை தீட்டு. அறிவைத் தீட்டு. ஞானத்தை தீட்டு என்றுதான் நாங்கள் கூறுகிறோம். உள்ளம் சுத்தமாக இருக்கும் நிலையில் நாங்கள் புற சுத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இருந்தாலும் கூட இன்னவள் கூறியது போல மாதாந்திர விலக்கு என்பது பெண்களுக்கு அதிக அளவு உடல் சோர்வை தரக்கூடியது. அந்த நிலையில் பெண்கள் ஓய்வாக இருப்பது அவசியம் என்பதால் ஓய்வாக இருக்கும்படி பணிக்கப்பட்டார்கள். இதை ஒதுக்கி வைப்பதாக எண்ணி விடுதல் கூடாது. அதற்காக ஓய்வாக இருந்து கொண்டு மானசீகமாக இறைவனை வணங்க கூடாது என்பது இல்லை.
இதுபோல் மனரீதியாக ஒரு மனிதன் பரிசுத்தமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாகவும் சுத்தமாக இருந்தால் அது புத்துணர்ச்சியை தரும் என்பதால் உடல் உள்ளம் இரண்டுமே சுத்தமாக இருப்பது மிக மிக அவசியமாகிறது. இன்னொன்றை மனிதன் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனின் படைப்புகளில் எதையும் குறையாக நாங்கள் பார்ப்பதில்லை. இருந்தாலும் உடல் நலம் கருதியும் உடல் சோர்வை கருதியும் சிலவற்றை வகுத்து தந்திருக்கிறோம். எனவே இதை குற்றமாகவோ தோஷமாகவோ பார்க்காமல் உடல் நலம் கருதி கூறப்பட்டது என்று எடுத்துக் கொள்வது ஏற்புடையதாக இருக்கும்.
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 520
புற்றுநோய் எதனால் வருகிறது? இதற்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?
இறைவனின் அருளால் இது குறித்தும் பலமுறை கூறியிருக்கிறோம். பாவத்தின் தன்மை இதுதான். இதனால்தான் இந்த நோய் வருகிறது இந்த துன்பம் வருகிறது என்று கூற இயலாது. ஒட்டுமொத்த பாவங்களின் விளைவுதான் கடுமையான பிணி. இருந்தாலும் பிறவி தோறும் புற்று (புற்றுநோய்) மனிதன் மீது பற்று வைக்கிறது என்றால் அந்த அளவிற்கு அவன் பாவம் தொடர்கிறது என்பது பொருளாகும். புற்று மட்டுமல்ல எல்லா வகையான நோய்களுக்கும் மனித ரீதியான காரணங்கள் வேறு. மகான்கள் ரீதியான காரணம் வேறு. வெளிப்படையாக ஒரு கிருமியால் அல்லது வெள்ளை அணுக்கள் அளவிற்கு அதிகமாக உற்பத்தியாவதால் இந்த நோய் வருவதாக கூறினாலும் கூட இதுபோல் பல்வேறு பிறவிகள் பிறந்து பல்வேறு மனிதர்களின் குடும்பத்தை நிர்கதியாக்கி நீர்மூலமாக்கி பல குடும்பங்களை வாழ விடாமல் அவர்களை மிகவும் இடர்படுத்தி பல மனிதர்களின் வயிற்றெரிச்சலை யார் ஒருவன் வாங்கிக் கொள்கிறானோ அவனுக்கு புற்று பிறவிதோறும் பற்று வைக்கும்.
இதற்கு மட்டுமல்ல எல்லா பிணிகளுக்கும் மருந்து இருக்கிறதப்பா. அப்பா கொல்லி மலையிலும் சதுரகிரி மலையிலும் ஆனால் புண்ணியமும் இறைவனின் அருளும் இருப்பவனுக்கு மட்டும்தான் அந்த மருந்து கிடைக்கும். அந்த மருந்து கிடைத்தாலும் அவனுக்கு நல்லதொரு வேலையை செய்யும். இருந்தாலும் கூட பிரார்த்தனை எந்தளவிற்கு ஒரு மனிதன் மனம் நெகிழ்ந்து செய்கிறானோ அந்த அளவிற்கு நலன் கிடைக்கும்.
திமிரி பாஷனா ஐயனே முழுமதி தினம் சென்று வணங்கி அந்த தீர்த்தத்தை உண்மையான அன்போடு சிறிதளவு பருகுவதும் பழனி முருகன் திருமேனி சந்தனத்தை சிறிதளவு பருகுவதும் தூய்மையான கலப்பில்லாத வெள்ளி உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு சிறிய பாத்திரத்தில் நல்ல விதமான சிறியாநங்கை எனப்படும் மூலிகை சாற்றை அதிகாலை வெறும் வயிற்றில் ஏற்பதும் இதற்கு தக்க வழியாகும். ஆனாலும் கூட உணவு முறையிலே தேங்காய் எனப்படும் உணவை தொடர்ந்து அதனை அனலில் வட்டாமல் அப்படியே உண்டு வருவதும் அதோடு வெள்ளையோரின் காய்கறியான செந்நிறத்தில் இருக்கக் கூடிய செந்நிற நீர்க் காயை அதிகம் ஏற்பதும் அதன் சாறை பருகுவதும் எம் நாமத்தில் உள்ள கீரையை ஏற்பதும் இதற்கு தக்க மாற்றாக இருக்கும். வருமுன் காக்கலாம். வந்த பிறகு இதற்கு தீர்வு என்பது இறைவன் கையில் தான் இருக்கிறது. பாதிக்கப்பட்ட மனிதன் இறைவனிடம் மன்றாடி அந்த தீர்வை பெற்றுக் கொள்வதுதான் எளிய வழியாகும்
திமிரி பாஷனா ஐயனைப் பற்றி அறிந்து கொள்ள கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யவும்.
மகிஷாசுரமர்த்தினி
8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகிஷாசுரமர்த்தினி இடம்: விருபாக்ஷா கோவில் பட்டடக்கல் கர்நாடக மாநிலம்
ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 519
கேள்வி: இராகு திசை சனி திசை அங்காரக திசைகளில் குழந்தைகள் பெற்றோர்கள் பேச்சைக் கேட்காமல் தீய வழிகளில் செல்கிறார்கள். இதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்: இறைவனின் கருணைக் கொண்டு நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது நவகிரகங்கள் நேர்மையான அதிகாரிகள் என்று வைத்துக் கொள்ளலாம். எந்த கிரகத்தையும் தீயகிரகம் என்றும் அசுப கிரகம் என்றும் கூறுதல் மகாபாவம். அவரவர்கள் கடமையை இறைவனின் அருளாணைக்கேற்ப செய்கிறார்கள். ஆக ஒருவனின் விதிப்படி எதை அவன் நூகர வேண்டுமோ அது அவனுக்கு வருகிறது. வெற்றியும் புகழும் நல்ல சுகமும் கிடைக்கும் பொழுது இவையெல்லாம் வேண்டாம் என்று யாரும் கூறுவதில்லை. அதே மனிதனுக்கு திசை மாற்றங்கள் அந்தர மாற்றங்கள் ஏற்பட்டும் பொழுது சில மாறுபட்ட நிகழ்வுகள் துன்பங்கள் நிகழும் பொழுது இறைவா என்னால் தாங்க முடியவில்லை. கிரகங்கள் என்னை பாடாய் படுத்துகிறது என்று புலம்புகிறான். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்ற வழக்கு (சொல்) இருக்கிறது. நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன் ஜென்ம பாவ புண்ணியத்திற்கேற்ப கிரகங்கள் செயல்படும் தருணம் ஒரு மனிதனின் அறியாமையில் அமர்ந்து கொண்டுதான் செயல்பட முடியும். எனவேதான் ஒரு மனிதன் இறைவனை நோக்கி இறைவா எனக்கு செல்வத்தை கொடு இறைவா. எனக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடு இறைவா. என் கடனை தீர்த்துவிடு இறைவா. என் பிள்ளைகள் நன்றாக வாழ வை என்று கேட்பதைவிட இறைவா என் அறியாமையை நீக்கிவிடு இறைவா. எனக்கு தெய்வீக ஞானத்தை கொடு என்று வேண்டிக் கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் அதிலையே தீர்த்துவிடும்.
யோகிக்கும் கிரக பலன்களால் நன்மை தீமைகள் உண்டு. மனிதனுக்கும் உண்டு. அஞ்ஞானிக்கும் உண்டு. ஞானி துன்பங்களால் கலங்க மாட்டான். அஞ்ஞானிதான் கலங்குகிறான். இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக முடியாது என்பதற்காகத்தான் சில வழிமுறைகளை கூறுகிறோம். பொதுவாக நாங்கள் நேரிய (நேரான) வழியைத்தான் காட்டுவோம். ஆனாலும் கூட கிரகங்களால் மனிதர்கள் அவஸ்தைக்கு ஆளாகி துன்பத்திலே ஆழ்ந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் சில குறுக்கு வழிகளை கூறுகிறோம்.
எத்தனையோ விளக்கங்கள் கூறினாலும் இன்னவன் வினவியதுபோல ஏழரை சனியின் பலனும் அட்டம சனியின் பலனும் அர்த்தாட்டம சனியின் பலனும் ஏனைய இராகு கேது திசைகளும் பொத்தாம் பொதுவாக தீங்கைதான் தருகிறது என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம். நல்ல ஞானத்தையும் நல்ல அனுபவத்தையும் கூட அதன் மூலம் மனிதன் கற்றுக் கொள்ளலாம். இந்த இடத்திலே சுருக்கமாக நாங்கள் கூறுவது என்னவென்றால் இது போன்ற தருணங்களில் மனிதன் கூடுமானவரை மனதை தளர விடாமல் அன்றாடம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று ஒரு நெய் தீபமாவது ஏற்ற வேண்டும். நாங்கள் கூறுவது குறைந்தபட்சம். அது கூட இயலாதவர்கள் இல்லத்திலேயே உடல் சுத்தி உள்ளம் சுத்தி செய்து குறைந்தபட்சம் இரண்டரை நாளிகை இயன்ற வழிபாடுகளை செய்ய வேண்டும். குறிப்பாக நவகிரக அதிதெய்வ வழிபாடுகளை செய்ய வேண்டும். அடுத்ததாக இது போன்ற ஒரு சூழல் உள்ளவர்கள் சற்றே பொருளாதாரம் உள்ளவர்கள் குடும்பத் தேவைக்காக ஒரு இல்லத்தை புதிதாக வாங்குவதோ வாகனத்தை வாங்குவதோ போன்ற செயல்களில் ஈடுபடாமல் அப்படி வாங்கியதாக எண்ணிக் கொண்டு அந்த தனத்தை எல்லாம் தக்க ஆலயத்திற்கோ தக்க ஏழைக்கு தர்மமாக கொடுத்துவிட்டால் கட்டாயம் கூறுகிறோம் இதுபோன்ற திசா புத்திகளில் ஒரு மனிதனை துன்பங்கள் அதிக அளவில் தாக்காது.
சுருக்கமாக கூறுகிறோம் ஒருவனிடம் சில லகரங்கள் தனம் இருக்கிறது. அவன் ஒரு இல்லம் வாங்க வேண்டும் என்று எண்ணுகிறான். அதை நாங்கள் தவறு என்று கூறவில்லை. சுயமாக இல்லம் இருந்தால் வசதி என்று அவன் எண்ணுகிறான். ஆனால் அப்பொழுது அதை செய்ய உகந்த காலம் அல்ல. அவன் இல்லம் வாங்கினால் என்னவாகும்? எல்லா சிக்கல்களும் தொல்லைகளும் அந்த இல்லத்தால் வரும். அந்த தனமும் தேவை இல்லாமல் விரையம் ஆகும். ஆனால் அதே தருணத்தில் அந்த தனத்தை சுபா விரயம் தர்ம விரயம் செய்து விட்டால் பாவங்களும் குறையும். அந்த திசா புத்தி அந்தரம் முழுவதும் பெரிய அளவிலே அவனுக்கோ அவன் குழந்தைகளுக்கோ அபாயம் வராமல் இருக்கும். இது ஒன்றுதான் சுருக்கமான வழிமுறையாகும். ஆனால் மனிதன் என்ன எண்ணுகிறான். அன்றாடம் திறமையாக வாழ்கிறேன் என்று தனத்தை சேர்த்து வைத்துக் கொள்கிறான். கனகத்தை (தங்கம்) சேர்த்து வைத்துக் கொள்கிறான். விலை ஏறுகிறது என்று மேலும் மேலும் ஆங்காங்கே மனைகள் வாங்குகிறான். இதை தவறு என்று கூறவில்லை. ஆனால் எமது வழியில் வரவேண்டும் கிரகங்களால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச தேவைகளோடு வாழ்ந்து கொண்டு ஏனைய தேவைகளை எல்லாம் யார் யாருக்கு தேவையோ அவர்களுக்கு தாராளமாக பெருந்தன்மையோடு அளித்து விட்டால் கட்டாயம் யாம் இறைவனால் இறைவன் அருளால் கூறுகிறோம். ஏழரை சனியோ அட்டமா சனியோ அர்த்தாட்டமா சனியோ அல்லது வேறு இவள் கூறியது போல உகந்தது அல்லாத திசா புத்திகள் ஏற்புடையது அல்லாத திசா புத்திகள் எந்தவிதமான கெடு பலனையும் மனிதனுக்கு செய்யாது. தர்மத்தின் உச்ச நிலைக்கு எவன் செய்துவிட்டானோ அவரிடம் கிரகங்கள் தன்னுடைய அருளாணையை இறைவன் அருளாணையை முழுமையாக செலுத்தாது. அவனுக்கு துன்பம் வரும். ஆனால் அதை தாங்குகின்றது அவன் செய்த தர்மம் என்பதால் அந்த துன்பத்தை அவன் உணர இயலாமல் போய்விடும்.