சிவ வடிவம் – 8. உமேசமூர்த்தி

சிவபெருமான் வெண்ணீறு பூசிய மேனியுடன் மான் மழு அஞ்சேல் அபயம் தாங்கிய நான்கு கரங்களுடன் சுகாசனத்தில் அமர்ந்திருக்க அருகே உமாதேவி குவளை மலர் ஏந்தி அமர்ந்திருக்க உமையவளை அணைத்தபடி அருட்காட்சி அளிப்பது உமேசமூர்த்தி வடிவமாகும்.

நான்முகன் தன்னுடைய படைத்தல் தொழிலுக்கு உதவியாக நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பதைக் கண்ட அவர்கள் நால்வரும் படைப்பு தொழிலை செய்ய விருப்பம் கொள்ளாமல் ஞானத்தினை அடைய விரும்பினார்கள். எனவே ஞானத்தினை கற்க சிவபெருமான் இருக்கும் கையிலை நோக்கி சென்றார்கள். திருமாலும் பிரம்மனும் தம்பதியர்களாக இருப்பது போல் தாமும் உமையுடன் இருப்பதைக் கண்டால் நால்வருக்கும் ஞானம் அடையும் அவர்களின் எண்ணம் ஈடேராது என எண்ணிய சிவபெருமான் தன் அருகே இருந்த உமையையும் சேர்த்து சுற்றியிருந்த அனைவரையும் தன் நெற்றிக் கண்ணால் பார்க்க அனைவரும் எரித்து சிவபெருமானிடம் ஒடுங்கினார்கள். பின் ஞானத்தை தேடி தன்னிடம் வந்த நால்வருடன் தனித்து அமர்ந்து நால்வருக்கும் ஞானத்தினை வழங்கினார். பின்பு தனது இடத்தோளைப் பார்த்தார். அதில் இதுவரை சிவபெருமானோடு ஒன்றியிருந்த உமையம்மை வெளிப்பட்டு சிவபெருமானின் இடப்புறம் அமர்ந்தாள். இருவரும் சேர்ந்து அருள் செய்ய சிவபெருமானிடம் ஒடுங்கிய அனைவரும் வெளிப்பட்டார்கள். அனைவரும் இருவரையும் வணங்கி நின்றனர். இருவரது அகமும் மகிழ்ந்ததால் அவர்கள் அனைவரும் கேட்ட வரத்தினைக் கொடுத்தார்கள். உலகமே செழித்தது. உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் படைத்து காத்து துயர்துடைத்து அனைத்தையும் வாழ வைக்கும் சக்தியாக உமையவள் சிவபெருமானின் இடது பாகத்தில் வீற்றிருந்த கோலத்தைக் கண்டு ஆனந்தப்பட்டனர். சிவபெருமானது பெயரில் உமையவளின் பெயரும் சேர்ந்து உமேச மூர்த்தி ஆனது.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயிலில் மூலவர் இம்மூர்த்தியின் திருப்பெயரிலேயே இருக்கிறார். கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடைமருதூர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உட்பட பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் உள்ளது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 571

கேள்வி: சில சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் சிறப்பானது என்று சொல்லப்படுவது பற்றி:

இறைவனை உள்ளன்போடு ஒரு மனிதன் இப்பொழுதெல்லாம் வணங்குகிறானோ எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வணங்குகிறானோ அப்படி வணங்குகின்ற அந்த குணம் கொண்ட மனிதன் மனித நேயத்தையும் மறக்காமல் இருக்கிறானோ மனித நேயத்தோடு தான் கடமைகளையும் சரிவர ஆற்றுகின்றானோ அப்படி வாழ்கின்ற மனிதனுக்கு எல்லா காலமும் பிரதோஷம்தான். எல்லா காலமும் சதுர்த்திதான். எல்லா காலமும் அவனைப் பொறுத்தவரை மார்கழி மாதம்தான். எல்லா காலமும் சிவராத்திரிதான். எல்லா காலமும் நவராத்திரிதான். எனவே இது போன்ற திதியின்படி நட்சத்திரத்தின்படி சில விசேஷங்கள் வகுக்கப்பட்டது. அன்றாவது ஒரு மனிதன் தன் புறக் கடமைகளை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இறை வழியில் செல்லட்டுமே என்பதற்காகத்தான். எனவே எல்லா தினங்களும் சிறப்பான தினங்களே. ஒரு மனிதனை நடந்து கொள்வதை பொறுத்து.

சிவ வடிவம் – 7. சுகாசனமூர்த்தி

சிவபெருமான் சுகாசன நிலையில் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் உமாதேவியாருக்கு விளக்கிய திருக்கோலமாகும். சுகாசனர் வடிவத்தில் இடக் காலை மடக்கி வைத்து வலக் காலை தொங்கவிட்டு சிவபெருமான் அமர்ந்திருக்கிறார். நல்லிருக்கை நாதர் என்ற தூய தமிழ் பெயரும் உள்ளது.

வெள்ளி மலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் ஜோதி மயமான சிவபெருமான் நடு நாயகனாக வீற்றிருக்க அவரைச் சுற்றிலும் மும்மூர்த்திகளும் தேவகணங்களும் தேவர்களும் முனிவர்களும் அமரர்களும் அவரை வழிபட்டபடி இருப்பார்கள். சிவபெருமானிடம் வேண்டிய வரங்களைக் கேட்க அவரும் வேண்டும் வரங்களை தந்தபடியே இருப்பார். உமாதேவியார் இறைவனின் தாள் பணிந்து எம்பெருமானே சிவாகமங்களின் உண்மைகளை விளக்கங்களையும் எனக்கு புரியும் படி தாங்கள் கூற வேண்டும் என்று கேட்டார். உடனே சிவபெருமான் சிவாகமங்களின் உண்மைகளையும் விளக்கங்களையும் ஐவகை பந்த பாசங்களின் நிலையையும் அவற்றை நீக்கினால் கிடைக்கும் நன்மைகளையும் சிவாகமங்கள் பற்றிய அனைத்து வினாக்களுக்கும் சுகாசன நிலையில் அமர்ந்த படி விடையளித்தார். சுகாசன நிலையில் சிவகாமங்களைப் பற்றி விளக்கிய காரணத்தால் இவர் சுகாசன மூர்த்தி என்ற பெயரை பெற்றார். சுகா என்பது மனம் மற்றும் உடலின் மகிழ்ச்சியான நிலையைக் குறிக்கிறது. ஆசனம் என்பது யோகத்தில் அமரும் ஒரு உடல் நிலையைக் குறிக்கிறது. மகிழ்ச்சியாக யோகத்தில் அமர்ந்த நிலையில் உமாதேவியாருக்கு இறைவன் உபதேசித்துள்ளார். இவரது கரங்கல் மான் மழு உள்ளது.

சுகாசன மூர்த்தி சீர்காழி திருத்தலத்தில் உள்ளார். தஞ்சை கலைக்கூடத்தில் சுகாசன மூர்த்தி உள்ளார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 570

கேள்வி: விநாயக சதுர்த்தி தீபாவளி பற்றி சொல்லுங்கள் ஐயனே?

எல்லா பூஜைகளுமே மனித நேயத்தையும் மனிதர்கள் தமக்குள் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற உத்வேகத்தையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது கால ஓட்டத்தில் வெறும் ஆடம்பரமாகவும் அனாவசிய செலவுகளை ஏற்படுத்தக் கூடிய ஒரு நிலையாகவும் மாறிவிட்டது வருத்தத்திற்குரியது.

சிவ வடிவம் – 6. உமாமகேசமூர்த்தி

முதற்பெரும் தம்பதியரான உமையும் சிவனும் அருகருகே திருக்கைலையில் அமர்ந்தருளும் திருக்கோலமே உமாமகேசத் திருக்கோலம் ஆகும். உமா மகேசுரர் ஒரு முகமும் நான்கு கைகளையும் கொண்டிருப்பவர். சிவபெருமானே உலக உயிர்கள் அனைத்திற்கும் தந்தையாவார். அது போல உமாதேவியே உலகத்திலுள்ள அனைத்து உயிர்களுக்குமே தாயாவார். அவர் தன்னுடைய இறைவனாகிய சிவபெருமானின் என்னப்படியே அனைத்துச் செயல்களையும் செய்து வருகின்றார். பூவிலிருந்து மணத்தையும் நெருப்பிலிருந்து புகையையும் எப்படி பிரிக்க முடியாதோ அதுபோல் இவர் சிவத்திடம் ஐக்கியமாகி பிரிக்க முடியாதபடி இருப்பவள். கருணையே வடிவான இவர் ஐவகை செயல்களுக்காய் ஐவகை பேதங்களாக மாறியுள்ளார். முறையே

  1. பராசக்தி- இவர் பரமசிவத்திலிருந்து 1001 கூறு கொண்டவர்.
  2. ஆதிசக்தி – பராசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  3. இச்சா சக்தி – ஆதிசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  4. ஞானசக்தி – இச்சா சக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.
  5. கிரியாசக்தி – ஞானசக்தியில் 1001 கூறு கொண்டதாகும்.

இதில் பராசக்தி பக்குவமடைந்த ஆன்மாக்களை அனுக்கிரகிக்கிறவள். ஆதிசக்தி நம்மிடமுள்ள ஆணவங்களைப் போக்கி பக்குவ நிலையைக் கொசடுப்பவர். ஞானசக்தி ஞானத்தை ஊட்டி நம்மிடம் ஞானத்தை ஒளிரும் படி செய்பவர். இச்சா சக்தி திருஷ்டித் தொழில் செய்து நம்மை சிருஷ்டிப்பவர். கிரியாசக்தி உலகப் படைப்பை செய்பவர். மேற்க்கண்ட இந்த ஐந்து சக்திகளும் ஒன்றினைந்து ஒரு செயல் செய்யும் போது ஒன்றாகி சதாசிவமூர்த்தியாகி விடுகின்றது. எனவே சிவனும் சக்தியும் பிரிக்க முடியாத ஒன்று.

முன் காலத்தில் ஒரு யுகத்தில் அரக்கன் ஒருவன் பூமியில் அட்டகாசம் செய்து வந்தான். அங்கு வசித்து வரும் உயிர்களை வதை செய்து மகிழ்ந்தான். ஒரு கட்டத்தில் பூமியையே தூக்கிக் கொண்டு போய் பாதாளத்தில் ஒளித்து வைத்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். உலகைக் காக்கும் மகாவிஷ்ணுவானவர் கூர்ம அவதாரம் எடுத்து பாதாளத்தில் போய் பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். பூமாதேவிக்கு மீண்டும் இப்படி ஒரு சோகம் நடக்காமல் இருக்க திருமால் அவளுக்கு ஒரு உபாயம் கூறினார். பூமாதேவியே சிவனிடம் ஒரு வரம் கேள். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய் என்றார். அதன்படி வழிபாட்டிற்கு இடத்தைத் தேடினாள் பூமாதேவி. பூமாதேவி திருவீழிமிழலைக்கு வடமேற்கே திருமால் சொன்னபடி ஒரு அற்புத இடத்தைக் கண்டாள். அங்கே அரச மரம் இருந்தது. பிரம்மனால் எற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம் தூய்மையாக இருந்தது. தான் வணங்க வேண்டிய இடம் இதுவென உணர்ந்தாள் பூமாதேவி. தேவ சிற்பியான விஸ்வகர்மா அங்கே முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தான். அதில் மகிழ்ந்த பூமாதேவி உரிய முறைப்படி நாள்தோறும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்தாள். பூசையில் மகிழ்ந்த உமாமகேஸ்வரர் தரிசனம் தந்து பூமாதேவி கேட்ட வரத்தை அருளினார்.

கோனேரிராஜபுரம் உமாமகேசுவரர் கோயில் மற்றும் மீனாட்சியம்மன் கோவில் ஆகிய பல பழமை வாய்ந்த கோயில்களில் இம்மூர்த்தியின் திருவுருவம் அமைக்கப்பட்டு உள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக்கயிலை செல்லும் முன் வழிபட்ட திருவஞ்சைக் களத்தப்பர் கோயில் (கொடுங்களூர் பகவதி கோயில் அருகில் உள்ளது). இந்தக் கோயிலின் வடக்கு உள் பிராகாரத்தில் உமாமகேஸ்வரர் சந்நிதி உள்ளது. கேரளாவில் அநேக கோயில் களில் உமாமகேச வடிவங்கள் ஓவியமாகவும் சிற்பமாகவும் காணப்படுகின்றன. குருவாயூர் அருகே மம்மியூர் சிவாலயத்தில் உமாமகேசர் திருவுருவம் வண்ண ஓவியமாகத் திகழ்கிறது. நேபாளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வர வடிவங்கள் விசேஷமானவை. இவை ரூபமண்டலம் விஷ்ணு தர்மோத்தரம் முதலான நூல்களில் கூறியுள்ளபடி அமைந்துள்ளன. உயர்ந்த பீடத்தில் சிவபெருமான் வீற்றிருக்க அவருக்கு இடப் புறம் சாய்ந்து அமர்ந்திருக்கிறாள் உமாதேவி. சில கோயில்களில், கருவறை விமானத்திலும் உமாமகேச வடிவங்களைக் காணலாம்.

டெல்லி அருங்காட்சியகத்தில், சாளுக்கியர் காலத்து உமாமகேஸ்வரர் வடிவம் ஒன்று உள்ளது. மைசூரை ஆட்சி செய்த ஹைதர்அலி ஒரு புறம் உமாமகேசர் வடிவமும் மறுபுறம் ஹை என்ற எழுத்தும் பொறிக்கப்பட்ட தங்க நாணயங்களை வெளியிட்டிருக்கிளார். 3 கிராம் எடையுள்ள அந்த நாணயம் ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் உமாதேவியை மடி மீது அமர்த்தியபடி சிவபெருமான் காட்சி தருகிறார். சோழர்கள் காலத்தில் உமாமகேசர் திருவுருவங்களை தங்கத்தால் செய்து வழிபட்ட வழக்கம் இருந்து என்பதை திருவிடைமருதூர் கல்வெட்டில் காண முடிகிறது.

அரோகரா என்ற சொல்லின் பொருள்

ஹர ஹரோ ஹரா என்ற மந்திரத்தின் சுருக்கமே அரோகரா ஆகும். அரன் என்றால் காப்பவன். ஹர என்றால் நீக்குபவன். அரோகம் என்றால் நோயில்லாமல். அரோகரா என்றால் இறைவனே நோய் நொடிகளை நீக்கி துன்பங்களில் இருந்து காத்து நற்கதி அருள்வாயாக என்பதாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 569

கேள்வி: கர்மா வாசனை இல்லாது போக வேண்டும்.

ஆகுமப்பா உந்தனுக்கு. கர்மா வாசனை இல்லாது போக வேண்டும். அதுபோலத்தான் வாழ்வை நீ எதிர்கொள்ள வேண்டும். அறிந்திடுவாய் எமது வழியில் தொடர்வது என்பது நன்மையே என்றாலும் அதுபோல் உணர வேண்டும். பல்வேறு பேச்சுக்கள் ஏச்சுக்கள் அவமானங்களை தாண்டித்தான் எமது வழி தொடர வேண்டுமப்பா. விசனங்கள் (துன்பம் பேராசை) இல்லாது வாழ வேண்டும். விளக்கங்கள் புரிந்தாலும் புரியாவிட்டாலும் நன்மைகளை தொடர வேண்டும்.

வாழ்த்துவோம் தர்ம வழி சத்திய வழி வழுவாது (தவறாமல்) நடக்க வேண்டும். அறிவாயே அங்ஙனம் நடக்கும் பொழுது பல்வேறு இடர்கள் எதிர்பட்டாலும் தர்ம வழி மாறாது நடக்க வேண்டும். வேண்டுமே. தர்மத்தின் வழி செல்ல செல்ல கர்மத்தின் வலி குறையுமப்பா. மனிதர்கள் வாக்குகளை குறித்து எண்ண வேண்டாம். மனிதன் பலகீனமானவன். கர்மத்திற்கு உட்பட்டவன். பக்குவம் அடையாதவன். பக்குவம் அடையாத மனிதர்கள் எது உரைத்தாலும் அதை நீ செவியில் ஏற்க வேண்டாம். உன் பொருட்டு அனைவருக்கும் யாம் இயம்புவது என்னவென்றால் எமது வாக்கை கேட்பதாலேயே ஒரு மனிதன் மேன்மை அடைய இயலாது. இது போல் இவனுக்கெல்லாம் சித்தர்கள் என்றென்றும் வாக்கு உரைக்கின்றார்களே? ஆயினும் இவனுக்கெல்லாம் வாக்கு உரைத்தாலும் இவன் பிறர் மனம் புண்படவும் சித்தர்களுக்கு விரோதமாகவும் நடக்கிறானே. இதுபோல் இன்னவனுக்கு எதற்கு சித்தர்கள் வாக்கு உரைக்க வேண்டும் என்று எண்ணுதல் கூடாது. யாராக இருந்தாலும் இறைவன் கட்டளைப்படி வாக்கு உரைத்து அவனின் மன நிலையை மாற்றி நல்வழியில் திருப்ப வேண்டும் என்பதற்காக நல்லோர் நல்லோர் அல்லாதோர் அனைவருக்கும் பல்வேறு சூழலில் வாக்கு உரைக்க வேண்டியுள்ளது. உள்ளதே உள்ளபடி கூறி வாழுங்கால் (வாழ்ந்தால்) என்றென்றும் வெற்றியும் தன்னம்பிக்கையும் உண்டாகும். உள்ளதை கூறாது அல்லதை கூறுங்கால் தொடர்ந்து பாவச் சேற்றிலே ஆழ்ந்து ஆழ்ந்து துன்பப்பட நேரிடும். உரைத்திடுவோம் எவன் எப்படி வாழ்ந்தாலும் அது குறித்து கவனம் செலுத்தாது உண்மையை நன்றாக ஆய்ந்து உணர்ந்து சிந்தித்துப் பேசி உள்ளதைக் கூறி நல்லதை செய்து வாழுங்கால் நலம் தொடரும்.

உரைத்திடுவோம் எவ்வாறெல்லாம் வாழாத மனிதனுக்கு நல்விதமான வாழ்வு இருப்பது போல் தோன்றும். அப்படி தோன்றினாலும் அது நீடிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தெள்ளிய நெஞ்சத்திலே நல்ல விதைகளை ஊன்றி ஊன்றி தெளித்துவிட்டால் காலப்போக்கிலே அந்த நல்வித்துக்கள் எல்லாம் முளைத்து நல் விருட்சங்களாகி நல் கனிகளை தரும். அந்த கனிகள் மூலம் மேலும் மேலும் பல வித்துக்கள் உருவாகும். எனவே இது குறித்தும் கலங்காது உன்னால் இயன்ற தர்மங்களை பிரார்த்தனைகளை செய்து வாழ்ந்து வா. என்றென்றும் நலம் தொடரும் உன்னை ஆசிகள் சுபம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 568

கேள்வி: சத்சங்கத்திற்கு ரிஷிகளின் சித்தர்களின் ஆசீர்வாதம் கிடைத்ததா?

இறைவன் கருணையால் சப்தரிஷிகளும் அங்கு தான் இருந்தார்கள். ஆனால் சத்சங்கத்திற்கு வந்திருந்தவர்களில் எத்தனை பேர் இதை உணரக் கூடிய நிலையில் இருந்தார்கள்? இதோ கலைக் காட்சிக்கு வருவது போலத்தான் வந்தார்கள். இதை நாங்கள் குற்றம் என்று கூறவில்லை. அவர்களையும் பண்படுத்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே பொருள். வேறு எதுவும் வேண்டாமப்பா. இறையிடமும் என்னிடமும் வரும்பொழுது மட்டும் மனிதன் தன் சிந்தனா சக்தியை ஒதுக்கிவிட்டு வந்தால் நாங்கள் அவர்களை மேலே ஏற்றுவதற்கு மிகவும் எளிதாக இருக்கும். ஆனால் ஏமாறும் இடத்திலே அறிவை பயன்படுத்தாத மனிதன் எம்மிடம் வரும்போது மட்டும்தான் ஏன்? எதற்கு? எப்படி? இதை எப்படி ஏற்பது? இதற்கும் நடைமுறைக்கு முரணாக இருக்கிறதே? இப்படி எல்லாம் நடந்தால் உடனடியாக நட்டம் வருகிறதே? என்றெல்லாம் மிகப்பெரிய வேதாந்தி போல் சிந்திக்கிறான். இல்லை இல்லை அவன் விதி அப்படி அவனை சிந்திக்க வைத்து படுபாதாளத்தில் தள்ளுகிறது.