ராமருக்கு சுக்ரீவன் சொன்ன வார்த்தைகள் வேர் போல உள்ளத்தில் பதிந்தது. சீதையின் ஆபரணங்களை கண்ட கலக்கத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்றார். தன் கண்களில் இருந்த நீரை துடைத்துக்கொண்டு சுக்ரீவனை அனைத்துக் கொண்டார். உன்னுடைய சிறந்த நட்பை அடைந்தேன் சுக்ரீவா. சீதை இருக்கும் இடம் அறிந்து கொள்ளும் வழியை நீ யோசித்துச் சொல் உன் யோசனைப்படியே நடக்கின்றேன். அது போல் உன் காரியத்தை என் காரியமாகவே நான் செய்வேன் என்று சத்தியம் செய்கின்றேன். உன் கஷ்டத்தை தீர்க்கும் வழியை சொல் உடனடியாக செய்து முடிக்கின்றேன். நம்முடைய நட்பு என்றைக்கும் பொய்க்காது என்று ராமர் சுக்ரீவனிடம் பேசி முடித்தார். ராமரின் பேச்சைக் கேட்ட சுக்ரீவன் மகிழ்ச்சி அடைந்தான். அவனுடன் இருந்த மந்திரிகளும் படைகளும் தங்களுடைய துயரங்கள் நீங்கியது. சுக்ரீவன் மீண்டும் வானர ராஜ்யத்தை அடைவார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.
ராமரிடம் சுக்ரீவன் தனது அண்ணன் வாலிக்கும் தனக்கும் உண்டான விரோதத்தை விவரமாக சொல்ல ஆரம்பித்தான். வாலி வானர அரசனாக கிஷ்கிந்தை நாட்டை அரசாண்டு வந்தான். மிகவும் வலிமையானவன் பராக்கிரமசாலி. அவரிடம் குறைவில்லாத அன்புடனும் பக்தியுடனும் யுவராஜாவாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்ற அசுரனுக்கும் முன் விரோதம் நீண்ட நாட்களாக இருந்தது. ஒரு நாள் இரவில் மாயாவி கிஷ்கிந்தைக்கு வந்து வாலியை யுத்தத்துக்கு அழைத்தான். மாயாவியின் கர்ஜனையில் கோபம் கொண்ட வாலி மாயாவியை எதிர்க்க அரண்மனையிலிருந்து சென்றார். நானும் அவருக்கு உதவியாக சென்றேன். நாங்கள் இருவரும் வருவதை பார்த்த மாயாவி ஓட ஆரம்பித்தான். நாங்கள் அவனை பின் தொடர்ந்து சென்றோம். காட்டில் இருந்த குகையில் மாயாவி ஒளிந்து கொண்டான். நான் உள்ளே செல்ல முயற்சித்தேன். வாலி என்னை தடுத்து நிறுத்தி நான் ஒருவனே அவனை கொல்ல வேண்டும் நீ இங்கேயே இரு என்று எனக்கு உத்தரவிட்டு என்னை குகைக்கு வெளியில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
குகைக்கு உள்ளே சென்றவன் பல நாட்களாகியும் வெளியே வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று வெளியே கவலையுடன் காத்திருந்தேன். ஒரு நாள் உள்ளே இருந்து பல அசுரர்களின் கத்தும் பெருங்கூக்குரல் கேட்டது. வாலியின் கதறல் சத்தமும் கேட்டது. அதன் கூடவே குகைக்குள் இருந்து ரத்தமாக வெளியே வந்தது. அதனைக் கண்டதும் அசுரர்கள் பலர் சேர்ந்து வாலியை கொன்று விட்டார்கள் என்று எனக்குள் தீர்மானித்துக் கொண்டேன். அண்ணனை கொன்ற அசுரர்களை பழி தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதன்படி அசுரர்கள் குகைக்குள்ளேயே கிடந்து தவிக்கட்டும் என்று ஒரு பெரிய பாறையை வைத்து குகையை மூடிவிட்டு அரண்மனைக்கு கவலையோடு திரும்பினேன். வாலி இறந்து விட்டான் என்ற செய்தியை யாரிடமும் சொல்லாமல் ராஜ காரியங்களை பார்த்து வந்தேன். வாலி எங்கே என்று மந்திரிகள் முதல் அவரது மனைவி வரை அனைவரும் என்னை தொந்தரவு செய்து வாலி இறந்த செய்தியை கேட்டு தெரிந்து கொண்டார்கள். கிஷ்கிந்தை நாட்டில் அரசனில்லாமல் இருக்க கூடாது என்று அனைவரும் என்னை வற்புறுத்தி அரசனாக எனக்கு பட்டாபிஷேகம் செய்து வைத்தார்கள்.
குகைக்குள் பல நாட்களாக நடந்த சண்டையில் மாயாவியையும் அவனது அசுர கூட்டத்தையும் அழித்து விட்டு குகை வாயிலுக்கு வாலி திரும்பி வந்தான். சுக்ரீவா சுக்ரீவா என்று கூப்பிட்டான் நான் அங்கில்லாத படியால் அவரது குரல் எனக்கு கேட்கவில்லை. தனது வலிமையினால் குகை பாறையை உடைத்து விட்டு அரண்மனைக்கு திரும்பி வந்தான். நான் அரசனாக இருப்பதை பார்த்து கோபமடைந்த வாலி என்னை திட்ட ஆரம்பித்தான்.