ராமரிடம் சுக்ரீவன் தொடர்ந்து பேசினான். நான் நடந்தவைகள் அனைத்தும் அப்படியே வாலியிடம் சொன்னேன். இந்த ராஜ்யம் உங்களுடையது அதனை பெற்றுக்கொண்டு அரசனாக முடிசூடிக் கொள்ளுங்கள் என்று கூறி உங்களிடம் எப்பொழுதும் போலவே உங்களுக்கு அடிபணிந்து நடந்து கொள்வேன் என்று அவரது காலில் விழுந்தேன். வாலி நான் சொல்வதை நம்பாமல் ராஜ்யத்திற்காக கொல்ல முயற்சிச்தேன் என்று என் மீது பழியை சுமத்தினான். அடுத்த முறை எங்காவது பார்த்தால் கொன்று விடுவேன் என்று சொல்லி நாட்டை விட்டை துரத்தி விட்டான். அணிந்திருந்த உடைகளுடன் அவமானப்பட்டு மனைவியை இழந்து அங்கிருந்து வெளியேறி இங்கு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். என் மீது நம்பிக்கை உள்ள சில வானரங்கள் மட்டும் என்னுடன் வந்து விட்டார்கள். உண்மையை அறியாமல் எனக்கு அக்ரமங்களை செய்த வாலியை வதம் செய்து என்னை காப்பாற்றுங்கள் என்று பேசி முடித்தான் சுக்ரீவன். அனைத்தையும் கேட்ட ராமர் என் அம்பு வாலியின் உடலை துளைக்கும். உனக்கு நான் தந்த உறுதி மொழியை நிறைவேற்றுவேன் கவலைப்படாதே. விரைவில் ராஜ்யத்தையும் உனது மனைவியையும் அடைவாய் என்றார்.
ராமரின் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த சுக்ரீவனுக்கு ராமரின் வீரத்தின் மீது சந்தேகம் வந்தது. ராமரின் பராக்ரமத்தை கொண்டு வாலியை வெல்ல முடியுமா? ஆகாத காரியமாக தோன்றுகிறதே வாலியின் தேகமோ இரும்பை போன்றது. அவனை எப்படி ராமர் அழிப்பார் இவரை விட்டாலும் இப்போது வேறு வழி இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் ராமரை பரிட்சித்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
ராமரிடம் எப்படி இதனை கேட்பது என்று யோசித்தவாறு சமயோசனையுடன் ராமரிடம் மெதுவாக பேச ஆரம்பித்தான். தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் துக்கத்தை போக்கி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய பராக்ரமத்தை நான் அறிவேன். உங்களால் விடப்படும் அம்பு மூன்று லோகங்களையும் அழிக்கும். வாலியின் பராக்ரமத்தை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியது எனது கடமை. ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து தான் பெற்ற வரத்தினால் ஆயிரம் யானைகளின் பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ உனக்கு சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும் என்னிடம் அல்ல. உனக்கு சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு என்று அனுப்பி வைத்தார். இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை உடைத்து பாறைகளை கொம்பால் தள்ளி அட்டகாசம் செய்தான். அதனை பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்கொண்டு நீ ஏன் என்னுடன் சண்டைக்கு நிற்கிறாய். யுத்தத்தில் எனக்கு பயிற்சி கிடையாது. முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்கு சமமான எதிரியுடன் சண்டையிடு என்றார். அப்படியானால் எனக்கு சம்மான எதிரி யார் என்று கூறு இப்போதே சண்டையிட்டு அவனை வெற்றி கொள்ள வேண்டும் என்று மூர்க்கமாக கத்தினான் அசுரன். இதனை கேட்ட ஹிமவான் தெற்கே வாலி என்ற வானரராஜன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் அவனை யுத்தத்திற்கு அழைத்து சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு என்றான்.