ராமர் சுக்ரீவனுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க முடிவு செய்தார். துந்துபி அரக்கனின் உடலைப் போல் 10 மடங்கு பெரிய பொருள் ஒன்றை ராமர் தனது கால் கட்டை விரலால் நெம்பி தூக்கி எறிந்தார். இந்த மரம் பத்து யோசனை தூரம் சென்று விழுந்தது. பிறகு தன்னுடைய வில்லில் அம்பை தொடுத்தார். சுக்ரீவன் காட்டிய மிகப்பெரிய ஆச்சா மரத்தை நோக்கி அம்பு எய்தார். அம்பு அந்த மரத்தையும் அதன் பின்னால் இருந்து மேலும் ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு மரங்களையும் ஒன்றாக துளைத்து வெளியே வந்து மீண்டும் ராமரின் அம்பாரிக்குள் வந்து விட்டது. இதைக்கண்ட சுக்ரீவன் பரவசமடைந்தான். வாலியின் வஜ்ஜிரம் போன்ற உடலை ராமரின் அம்பு துளைக்கும் என்று நம்பினான். உங்கள் பராக்கிரமத்தை கண்ணார கண்டேன் என்று ராமரின் கால்களில் விழுந்து வணங்கினான். வாலியை அழித்து என்னைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன் என்றான்.
ராமரிடம் சூக்ரீவன் வாலியை பற்றிய வேறொரு முக்கியமான செய்தியை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சிவனை நோக்கி பெரும் தவங்கள் செய்திருக்கின்றான். கயிலையிலுள்ள சிவபெருமானின் அருளைப் பெற்றவன். முன்பொரு முறை அமிர்தம் பெறுவதற்க்கு பாற்கடலை கடையும் போது வாலி தேவர்களுக்கு உதவி செய்தான். அதனால் பஞ்ச பூதங்களின் வலிமையையும் பெற்றான். தனது தந்தையான இந்திரனிடம் இருந்து வாலி ஒரு வரத்தை பெற்றிருக்கின்றான். அந்த வரத்தின்படி வாலியுடன் யுத்தம் செய்பவர்களின் சக்தியில் பாதி சக்தி வாலிக்கு சென்றுவிடும். அதனால் மிகச்சிறந்த சிவபக்தனும் வலிமையும் அதிகாரமும் கொண்ட ராட்சசர்களின் தலைவனான ராவணன் கூட வாலி இருக்கும் பக்கம் வருவதில்லை. நீங்கள் வாலியின் மீது அம்பு எய்ய அவன் எதிரே நின்றால் வாலி பெற்ற வரத்தின்படி உங்களின் சக்தி பாதி வாலிக்கு சென்று விடும். ஏற்கனவே வாலி மிகவும் பராக்கிரமசாலி உங்களின் பாதி சக்தியும் வாலியுடன் சேர்ந்தால் அவன் இன்னும் பராக்கிரமசாலியாகி விடுவான். அதன் பிறகு அவனை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி முடித்தான். அதற்கு ராமர் வாலியின் உடலை எனது அம்பு துளைத்து அழிக்கும் சந்தேகமோ பயமோ வேண்டாம் என்றார். ராமரின் வார்த்தைகளை கேட்ட சுக்ரீவனுன் அப்போதே வெற்றி பெற்றுவிட்டதை போன்று பூரிப்படைந்தான்.
ராமரிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். முதலில் வாலியைக் கொன்று பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும். சுக்ரீவன் அரசனாவான். அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை உள்ள வானரர் படைகள் ஒன்று சேர்வார்கள். (எண்ண முடியாத எண்ணிக்கையில் அடங்காத மிகப்பெரிய கூட்டம் ஒரு வெள்ளமாகும்) அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைத்தால் விரைவில் சீதையை கண்டு பிடித்து விடலாம் என்றார். ராமரும் அனுமன் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டார். அனுமன் தன் துணை அமைச்சர்களான தாரன் நீலன் நளன் ஆகியவர்களோடு ராமருக்கு வழிகாட்ட அனைவரும் வாலியின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள். கிஷ்கிந்தை காட்டுப் பகுதிக்கு வந்ததும் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று சுக்கிரீவன் ராமனை நோக்கிக் கேட்டான். நீ வாலியை யுத்தத்திற்கு கூப்பிடு. நீங்கள் இருவரும் போர் செய்யும் போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன் என்று ராமர் கூறினார். (ராமர் ஏன் இப்படி கூறினார் என்பதற்கான காரணம் பின் வரும் பகுதியில் வரும்) சுக்கிரீவன் தனது பயத்தை நீக்கி ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான்.