ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 18

கேள்வி: ஐயனே ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்? ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது?

இறைவன் அருளைக் கொண்டு இதை முழுக்க முழுக்க இறைவன் தான் முடிவெடுப்பார். ஆணும் பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே என்னென்ன வகையான நிலையிலே அந்த பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார்.

எப்படி முடிவெடுக்கிறார்?

அந்த குடும்பம் புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றார் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரகநிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றார் போல் தான் அந்த ஆணும் பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்ச ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரகநிலைக்கு தகுந்தாற் போல் உள்ள கால சூழலில் முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம் இடையிலும் நடக்கலாம் இறுதியிலும் நடக்கலாம்.

இந்த நிலையிலே சில மிக விஷேசமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்றுவிட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து நான் இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லை வேறு எங்காவது என்னை அனுப்புங்கள் என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதோப்ப நிலையில் அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம் உள்ளே இருக்கின்ற ஆத்மா பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா ஆண் ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம் பெண் ஆத்மா அங்கு பிரச்சனை இல்லை. ஆண் பிண்டம் ஆண் ஆத்மா அங்கும் பிரச்சனை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 17

கேள்வி: அசைவ உணவு ஏற்பதனால் வரும் தீமைகள் என்ன? சைவ உணவின் நன்மைகள் என்ன?

இறைவன் கருணையால் மிக எளிமையாக மனிதன் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட இதற்கும் வாத பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒரு மனிதன் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தன்னை விட வலு குறைந்த உயிரினங்களைக் கொன்று தின்கிறான். இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது ஒரு அரக்கனோ அல்லது மனிதனை விட பல மடங்கு வலு பெற்ற ஒரு மனிதனோ வந்து இன்று முதல் என் உடல் ஆரோக்கியத்திற்காக மனித உடலை தின்னும் நிலை எனக்கு வந்துவிட்டது. எனவே இன்று முதல் வீட்டிற்கு ஒருவன் தன்னை தியாகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என் வீரர்கள் வந்து அழைத்து செல்வார்கள் என்று கூறினால் அந்த மனிதனை எத்தனை மனிதர்களால் ஒத்துக் கொள்ள முடியும்? நியாயம் என்று கூற முடியும்? தன்னை யாரும் இடர்படுத்தக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதன் தான் பிறரை இடர்படுத்தக் கூடாது என்ற ஒரு சிந்தனைக்கு வர வேண்டுமல்லவா? எனவே தன்னுடைய உடலை வளர்ப்பதற்கு பிறரின் உடலை வருத்தித்தான் அந்த செயலை செய்ய வேண்டுமென்றால் அதைவிட பட்டினி கிடந்து உயிரை விடலாம். அது ஒரு மனிதனுக்கு உயர்ந்த நிலையை நல்கும் இறையருளை தரும். எனவே இது குறித்து பல்வேறு நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. அறங்களில் மிகச்சிறந்த அறம் கொல்லாமை. அறியாமையால் செய்துவிட்டால் அதை அறிந்த பிறகு மெல்ல மெல்ல அதனை விட்டுவிடுவது மிகச்சிறந்த தொண்டாகும். இறைவன் அருளை பெறுவதற்கு மிக எளிய பூஜையாகும். இதை நிறுத்துவிட்டாலே மிகப்பெரிய பாவம் சேராமல் ஒரு மனிதன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக யாரிடமாவது விவாதம் செய்தால் தாவர இனங்களுக்கும் உயிர் இருக்கிறதே அதை உண்ணலாமா? அதில் பாவம் வராதா? என்று அடுத்த வினா எடுத்து வைப்பான். கடுமையான உடல் உழைப்பு செய்பவனுக்கு உடல் களைத்து விடுகிறது. எனவே மாமிசத்தை உண்டால் தான் உடலுக்கு வலிமை என்று அவன் கூறுவான். இது போன்ற உயிர்க் கொலைகளை செய்யக்கூடிய தேசத்தில் உள்ளவர்கள் நன்றாகத் தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்கு எந்த கஷ்டமும் வரவில்லையே? என்று வினவுவான். நன்றாக கவனிக்க வேண்டும். தாவர இனங்களை உண்பதால் பாவம் வராது என்று நாங்கள் கூறவில்லை. குறைந்தபட்ச பாவம் வரத்தான் செய்யும். அதனால்தான் பிறவியே வேண்டாம் என்று இறைவனிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மனிதனாக பிறவி எடுத்து விட்டாலே எத்தனைதான் நேர்மையாக வாழ்ந்தாலும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்து தான் ஆக வேண்டும். எனவே அதனையும் தாண்டி பல கோடி மடங்கு புண்ணியத்தை செய்தால் இந்த பாவம் நீர்த்து போகும். ஆனால் முன்னர் சொன்ன உயிர்க்கொலை பாவம் நீர்த்துப் போகாது. அவ்வளவே மன்னிக்ககூடிய பாவம் மன்னிக்க முடியாத பாவம் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத பாவம் இறையால் மன்னிக்கப் படலாம். சில பாவங்கள் இறையால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவே தெரிந்தும் எதற்கு (இறையால்) மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை ஒரு மனிதன் செய்ய வேண்டும்?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 16

கேள்வி : சிசு ஹத்தி (குழந்தை கொலை) பற்றி

சிசு ஹத்தி என்று மனித குழந்தையை மட்டும் நீ கூறுகிறாய். கொடுமையான சிசு ஹத்தி என்று எத்தனையோ இருக்கிறது தெரியுமா? மிக மிக இளம் தளிராக இருக்கின்ற பசுமை மாறாமல் இருக்கின்ற ஒரு சிறு இலையை கிள்ளினால் ஆயிரத்து எட்டு சிசுவை கொன்றதற்கு சமம் தெரியுமா? ஒரே ஒரு மலர் மொட்டை ஒருவன் கொய்தால் அது பத்தாயிரத்து எட்டு பிறந்த குழந்தையை கொல்வதற்கு சமம். இப்படியானால் பார்த்துக் கொள் ஒரு மனிதன் எத்தனை வகையான சிசு ஹத்தி பாவத்தை சுமந்து கொண்டு செல்கிறான். இதனையும் மீறி மனிதன் ஜீவித்து இருக்கிறான் என்றால் இறைவனின் பெரும் கருணையால் தான். எனவே குழந்தை பூமிக்கு வந்த பிறகு கொன்றால் தான் பாவம் கருவிலே கொன்றால் பாவம் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். எந்த நிலையிலும் அது பிரம்ம ஹத்தி தோஷமாக உருவெடுத்து மனிதனை வாட்டிக் கொண்டு தான் இருக்கும். எனவே விழிப்புணர்வோடு இருந்து இதிலிருந்து மனிதன் தன்னை தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அறியாமல் செய்திருந்தால் எத்தனை ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்க முடியுமோ ஆதரித்து இந்த தோஷத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். எத்தனை பசுவோடு கன்றுகளை தானம் அளித்து இந்த தோஷத்தை குறைத்து கொள்ள வேண்டுமோ குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு சிவாலயங்களில் நெய் தீபம் ஏற்றி குறைத்துக் கொள்ள வேண்டுமோ குறைத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைக்கு பிறகும் நிரந்தரமாக பூஜிப்பதற்கு ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். இதுபோல் செய்வதோடு ஆயிரமாயிரம் விருட்சங்களை (மரங்களை) தானம் செய்வதும் அதை நட்டு பாரமரித்து நிழல் தரும் விருட்சங்களாக மாற்றுவதும் என்று ஒரு தொண்டை செய்தால் இந்த ஹத்தி தோஷம் நீங்கி விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 14

கேள்வி: திருவண்ணாமலையின் சிறப்பு பற்றி

அனைவரும் அறிந்த ஒன்று தான் அக்னி ஸ்தலம். அதோடு மட்டுமல்லாமல் பாவ வினைகளையெல்லாம் எரிக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பல ஸ்தலங்கள் சென்று வழிபட முடியாத மனிதர்கள் சில ஸ்தலங்கள் சென்றால் பல ஸ்தலங்கள் சென்ற பலன் உண்டு என்று கூறுவதுண்டு. அதுபோன்ற ஸ்தலங்களில் சிறப்பான ஸ்தலம். நினைத்தால் முழு எண்ணங்களோடு நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில் மட்டுமில்லாமல் இன்றும் அரூப நிலையிலும் ரூப நிலையிலும் எண்ணற்ற சித்தர்கள் நடமாடிக் கொண்டு இருக்கக் கூடிய ஸ்தலங்களில் இந்த ஸ்தலமும் ஒன்று. இந்த இடத்திலே ஒரு மனிதன் செய்கின்ற நல்வினைகள் பல மடங்காகப் பெருகும். தீ வினைகளும் பல மடங்காகப் பெருகும்.

கேள்வி : சிவனை வணங்கும் போது

சிவனை வணங்கும் போது அம்பாளுக்கு உரிய பூரம் நட்சத்திரத்திலும் அம்பாளை வணங்கும் போது சிவனுக்குரிய ஆருத்ரா (திருவாதிரை) நட்சத்திரத்திலும் வணங்குவது சிறப்பு.

கேள்வி: காஞ்சிபுரம் அத்திவரதர் பற்றி

நீர் தொடர்பான கண்டங்கள் விலகி விடும். சந்திர தோஷங்கள் இருந்தால் விலகிவிடும். மேலும் சந்திரனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

கேள்வி: கோடி ஹத்தி பெருமாள் பற்றி (அருள்மிகு மகாலட்சுமி சமேத வான்முட்டி பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறை.)

ஹத்தி தோஷம் நீக்கக்கூடிய ஸ்தலம். முற்பிறவியில் கொலை அல்லது கொலைக்கு சமமான பாவங்கள் செய்த மனிதர்கள் எல்லாம் இங்கு உழவார பணியும் மற்ற தொண்டுகளும் செய்தால் அந்த பாவங்கள் எல்லாம் விலகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 13

கேள்வி: சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் பற்றி

இறைவன் அருளாலே ராகுவின் பிடியில் தற்சமயம் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. கூடவே சுக்ரனின் பிடியில் இருப்பதால்தான் இச்சமயம் உலகிலே பல்வேறு மருத்துவ முறைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லா முறைகளும் சித்த முறையிலிருந்து புறப்பட்டது தான் என்பதால் நாங்கள் ஆங்கில முறைக்கு எதிரானவர்கள் அல்ல. எனவே சர்க்கரை நோய் குறைபாடு உள்ளவர்கள் தாராளமாக ஆங்கில மருத்துவத்தை பின்பற்றலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிணி வாழ்நாளில் ஒருமுறை வந்து விட்டால் முற்றிலும் அகற்றி விட முடியாது. ஆனால் உணவு பழக்கங்களினாலும் யோகாசனங்களினாலும் உடற்பயிற்சியினாலும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். சிறுகுரிஞ்சானோடு நில வேம்போடு வெந்தயத்தையும் சேர்த்து அதிகாலையிலே ஏக (ஒரு) தினம் விட்டு ஏக தினம் மிகச்சிறிய அளவிலே உண்டு வந்தால் நன்மையைத் தரும். ஆனால் எத்தனை மருத்துவம் செய்தாலும் கூட இவற்றோடு மிக மிக மிக மிக உயர்வான முறையிலே இனிப்புகளை செய்து அவைகளை உண்ண முடியாத ஏழைகளுக்கு பாதிக்கப்பட்டவன் அவனவன் கையால் பவ்யமாக சென்று தொடர்ந்து தானமாக அளித்துக் கொண்டே வந்தால் இந்த நோய் கட்டுக்குள் இருக்கும். தரம் குறைந்த விலை மலிவான உணவுப் பொருள்களை அளிப்பதால் பாவங்கள் நீங்குவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்துவிடும் என்பதையும் ஏற்கனவே இருக்கின்ற புண்ணியங்கள் குறைந்துவிடும் என்பதையும் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 12

கேள்வி : நிம்மதி வேண்டும் வழிகாட்டுங்கள்

மதி படைத்த யாருக்காவது நிம்மதி இருக்கிறதா? மதி எனும் பொழுதே அங்கே விதி வந்து விடுகிறது.

விதி மதியை ஆட்சி செய்யும் பொழுது நிம்மதி இருக்காது. மதி விதியை ஆட்சி செய்தால் நிம்மதி வரும். மதி விதியை ஆட்சி செய்யட்டும். என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிந்து செய். எண்ணங்களற்ற நிலைக்கு மனதை கொண்டு போவதின் அடிப்படைதான் பூஜை பிராத்தனை மந்திரம் ஜபம். எண்ணங்கள் தான் ஒரு மனிதனுக்கு பாரமாகவும் சுமையாகவும் சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. எனவே மனதை வெறுமையாக்கு. வாயை மெளனமாக்கு. மனமும் மெளனமாக இருக்க வேண்டும். வாயும் மெளனமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பூரண அமைதி நிலவும். பூரண சாந்தி நிலவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 11

கேள்வி: குருவருள் கிடைக்க வழிகாட்டுங்கள்

குருவை தேடி அலைபவர்கள் குருவருள் வேண்டும் என்பவர்கள் ஒன்பது முக தீபத்தை குரு தட்சிணாமூர்த்திக்கு புனர்பூச நட்சத்திர நாளில் ஏற்றி அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

கேள்வி: பாம்பை அடித்தால் மட்டும் நாகதோஷம் ஏற்படுமா?

விஷம் என்றால் என்ன? பயம் என்ற ஒரு பொருள் உண்டு. பிறருக்கு நஞ்சை உணவிலே கலந்து கொடுப்பவனுக்கும் நஞ்சு கலந்த வார்த்தையை பேசி நயவஞ்சகமாக ஏமாற்றியவர்களுக்கும் ராகு கேது மூலம் சில கெடுபலன்கள் வர வேண்டும் என்பது தான் நாக தோஷமே ஒழிய வெறும் நாகத்தை அடித்தால் மட்டும் அல்ல.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 10

கேள்வி: தூக்கம் வராமல் இருப்பதற்கு என்ன காரணம்?

எவன் ஒருவன் பிறர் நித்திரையை (தூக்கம்) கலைக்கும் வண்ணம் குலைக்கும் வண்ணம் செயல்பட்டானோ அவனுக்கு பிறவி தோறும் நித்திரை சுகம் கிட்டாதப்பா. இதற்கு வழக்கமான பிராத்தனை, தர்மங்களோடு சயன பண்டங்கள் எனப்படும் பாய் போர்வை போன்றவற்றை ஏழை எளியோர்க்கு தானம் செய்வது ஏற்புடையது. பொதுவாக அட்டாமதிபதி பஞ்சத்தில் அமர்ந்தால் நித்திரை சுகம் கெடுமப்பா. விரையாதிபதி வலுத்தாலும் அது சுகாதிபதியோடு சம்பந்தப்படாமல் இருந்தாலும் கூட நித்திரை சுகம் கிட்டாதப்பா. எதன் மீது நித்திரை என்பதல்ல அது மனம் சார்ந்தது. கல்லிலும் மேட்டிலும் கூட ஒருவன் உறங்குவான். சயன பண்டங்கள் குளிர் சாதன வசதிகள் இருந்தும் கூட ஒருவனுக்கு உறக்கம் வராது. எனவே தனக்கு உறக்கம் வரவில்லையே என்பதை விட எத்தனை பேர் உறக்கத்தை நாம் எந்த பிறவியில் கெடுத்தோம் என்பதை உணர்ந்து தன்னை திருத்திக் கொண்டால் நித்திரை சுகம் அவனுக்கு கிட்டும். இது தர்ம வழி அற வழி.

மருத்துவ ரீதியாக தூய்மையான தேனை அருந்துவதும் அலோபதிலே அன்னம் ஏற்றுவிட்டு காலாற நடை பயிற்சி செய்வதும் கிழக்கு திசையிலும் மேற்கு திசையிலும் தலை வைத்துப் படுப்பதும் மிகச் சிறந்த வழிகளாகும். மருதோன்றி இலையை சிரசின் அருகே வைக்கலாம். குளிர்ந்த நீரிலே ஸ்நானம் செய்யலாம். எல்லாவற்றையும் விட எப்படி பாதரக்ஷையை (காலணி) வீட்டிற்கு வெளியே விட்டு உள்ளே வருகிறாயோ அப்படி எல்லா எண்ணங்களையும் தூக்கி எறிந்துவிட்டு இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் உறக்கம் வருமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 9

கேள்வி : கோவிலை வணங்கும் முறை பற்றி கூறுங்கள்

நீ பக்தி பூர்வமாக கேட்பதால் உரைக்கிறோம். மற்றபடி பாவனை பக்தியை தாண்டிய நிலைதான் இறை. பூரணமான அன்பிற்கும் பக்திக்கும் முன்னால் சாஸ்திர சம்பிரதாயங்கள் அடிபட்டுப் போய்விடுகின்றன. விதி முறைகளே இறையை காட்டாது. விதிமுறைகளின் படியும் இறைவனை அடையலாம் என்பதை தெரிந்து கொள். முதலில் ஆலயம் சார்ந்த குளத்தில் ஸ்நானம் செய். ஆடவர்கள் (ஆண்கள்) கட்டாயம் மேல் ஆடை அணியக் கூடாது. திருநீறு அல்லது திருமண் அணிய வேண்டும். ஆடை தூய்மை ஆக இருக்க வேண்டும். கூடுமானவரை பருத்தி ஆடைகள் நல்லது. பிறகு ராஜ கோபுரத்தை நன்றாக தரிசித்து வணங்க வேண்டும். உள்ளே சென்று முதலில் த்வஜ ஸ்தம்பம் அதன் அடியில் உள்ள விநாயகனை வழிபட்டு விட்டு ரிஷபத்தை வழிபட்டு த்வார சக்திகளை வணங்கி மூல ஸ்தானம் செல்ல வேண்டும். பிறகு அந்தந்த பரிவார தேவதைகளை வணங்கி பிறகு அன்னையை வணங்கி கடைசியாக நவக்ரகங்களை வணங்கிவிட்டு மீண்டும் த்வஜ ஸ்தம்பத்தின் அடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்க வேண்டும். பிறகு ஏகாந்தமாய் (தனிமையாய்) ஒரு இடத்திலே அமர்ந்து மனம் ஒன்றி இறையை எண்ணி தியானம் செய்ய வேண்டும். பிறகு பதற்றமின்றி எழுந்து ஆலயத்தை அண்ணாந்து வணங்கி வெளியே வர வேண்டும்.