10. மலையத்துவசன் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் மலையத்துவசன் அழைத்த படலம் நூலின் பத்தாவது படலமாகும்.

சுந்தர பாண்டியனார் காஞ்சன மாலைக்காக ஏழு கடல்களை மதுரைக்கு வருவித்து கிணற்றில் இருக்கச் செய்தார். இச்செய்தியை இறைவியான தடாகை காஞ்சன மாலையிடம் தெரிவித்து அவரை கிணற்றில் இருக்கும் கடல் நீரில் நீராட அழைத்தார். தடாகையும் சுந்தர பாண்டியனாரும் கடல் நீர் இருக்கும் கிணற்றின் அருகே வந்து அமந்தனர். தடாகையின் அழைப்பினை ஏற்று காஞ்சன மாலை நீராட கிணற்றின் அருகே வந்து அங்கு கூடியிருந்த முனிவர்களிடம் கடலில் நீராடுவதற்கு ஏதேனும் வழிமுறைகள் உள்ளனவா? என்று கேட்டார். அதற்கு அவர்கள் காஞ்சன மாலையே கணவனுடைய கை மகனுடைய கை பசுவினது கன்றின் வால் இம்மூன்றில் ஏதேனும் ஒன்றினை கையினால் பற்றிக் கொண்டு தீர்த்தத்தில் நீராடுதலே முறை என்று கூறினர். முனிவர்கள் கூறியதைக் கேட்ட காஞ்சன மாலை எனக்கு தற்போது கணவனும் இல்லை. மகனும் இல்லை. நான் கன்றின் வாலினைப் பிடித்து கடலில் நீராடுவேன் என்று மனதிற்குள் எண்ணி வருத்தம் கொண்டாள். பின் தன்னுடைய மன வருத்தத்தினை தடாகையிடம் தெரிவித்து கன்றின் வாலினைப் பற்றிக் கொண்டு நீராடப் போவதைத் தெரிவித்தாள். தாயின் மன வருத்தத்தைக் கேட்ட தடாகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று நீங்கள் என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். தற்போது கடலில் நீராட கணவனும் மகனும் இல்லாத என் தாய் கன்றின் வாலினைப் பற்றி நீராடப் போவதாக கூறுகிறாள். தாங்கள் இதில் ஏதேனும் அவளுக்கு உதவ முடியுமா? என்று வருத்தத்துடன் கேட்டாள்.

தடாகை கூறியதைக் கேட்ட சுந்தரபாண்டியனார் மலயத்துவசனை மனதில் நினைத்தார். மலயத்துவசனும் அவ்விடத்திற்கு வருகை புரிந்தான். பின் பெண் பிள்ளையைப் பெற்றதால் நான் பெற்ற பயன் இது என்று கூறி உலகத்திற்கு இறைவனான சுந்தர பாண்டியனாரை வணங்க முற்பட்டான். இதனைக் கண்ட சுந்தர பாண்டியனார் தங்களுடைய மகளை மணந்ததால் நீங்கள் எனக்கு மாமன் முறை. மாமன் என்பவர் தந்தைக்கு சமமானவர். ஆதலால் என்னை நீங்கள் வணங்குதல் சரியில்லை. அன்பு நிறைந்த மனைவியோடு தீர்த்தத்தில் ஆழ்ந்து நீராடுங்கள் என்று கூறி மலயத்துவசனை ஆரத் தழுவினார். தன் தந்தையைக் கண்டு அன்பு கொண்ட தடாகை அன்பினால் மலயத்துவசனை கட்டி அணைத்துக் கொண்டாள். மலயத்துவசன் உன்னுடைய திருமணத்தை நான் காண இயலவில்லை. ஆனால் இன்று உங்களிருவரையும் கண்டு என் உள்ளம் பேரானந்தத்தில் திளைக்கிறது என்று கூறினான். காஞ்சன மாலையும் தன்னுடைய கணவனுக்கு அருகில் சென்று வணங்கி மலயத்துவசனின் கையினை பற்றிக் கொண்டு நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தை உச்சரித்தபடி கடலில் நீராடினாள். கடலில் நீராடி கரையேறிய காஞ்சன மாலையும் மலயத்துவசனும் இறைவனின் திருவருளால் பந்த பாசம் ஒழித்து மீண்டும் பிறவாமை என்னும் வீடுபேற்றினைப் பெற்றனர்.

சிவலோகத்தில் இருந்து வந்த தேவ விமானத்தில் அவ்விருவரும் ஏறினர். அங்கிருந்தோர் அரஅர என்று துதிக்க தேவ விமானம் மேலெழும்பி சிவலோகத்தை நோக்கிச் சென்றது. இதனைக் கண்ட தடாதகை சுந்தர பாண்டியனாரிடம் சென்று என்னுடைய தாய் ஒரு கடல் நீரில் நீராட விரும்பினார். ஆனால் தாங்கள் ஏழு கடலையும் மதுரைக்கு வரவழைத்தீர்கள். பின் தந்தையையும் வரழைத்து தாய் தந்தையரை நீராடச் செய்து இறுதியில் சிவலோகப் பதவியையும் அளித்தீர்கள். இனி எனக்கு எந்தவித துன்பமும் ஏற்படப்போவதில்லை என்று கூறினார். சுந்தர பாண்டியனாரும் மீனாட்சியின் கருத்தினைக் கேட்டு மகிழ்ந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஏழு கடல் பொய்கை தீர்த்தத்தில் நீராடுபவர்களுக்கு பிறவி இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மனைவியின் நியாயமான ஆசைகளை நிறைவேற்றுவது கணவனின் கடமை என்பதை அனைவரும் உணர இந்த திருவிளையாடலை புரிந்து அனைவரும் அறியச் செய்தார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 428

கேள்வி: பெண் சித்தர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்ன? குறிப்பாக ஆழ்வார்கள் நாயன்மார்களில் கூட பெண் சித்தர்கள் அதிகமாக இல்லையே?

இறைவனின் கருணையாலே கூறுகிறோம். பல பல பல லகரம் கோடி ஆண் சித்தர்களுக்கு ஒரேயொரு பெண் சித்தரே சமம். அப்படி எடுத்துக் கொள்ளலாமே? ஏன் எண்ணிக்கையில் அதிகம் குறைவு என பார்க்க வேண்டும்? ஏனென்றால் எல்லா ஆண் சித்தர்களையும் பெற்றுத் தருவது பெண்மைதானே? எனவே எல்லா நிலைகளிலும் இங்கே பெண் சித்தர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மனித பார்வையில் குறைவு போல் தோன்றுகிறது. வேறு வகையில் கூறப்போனால் சித்தர்களை உருவாக்குவதே பெண்கள்தான் அதாவது சக்திதான். எனவே இன்னொரு வகையில் கூறப்போனால் ஒரு துலாக்கோலிலே ஒரு பக்கம் அதிக அளவு பஞ்சினை பருத்தியினை வைப்போம். இன்னொரு பக்கம் நிறை கல்லை வைப்போம். எது அதிகமாக இருக்கும்? அங்கே பருத்தி எனப்படும் பஞ்சு மூட்டை மூட்டையாக இருக்கும். இந்த அளவு மூட்டைக்கு அதே அளவா எடை கல்லை வைப்பார்கள்? ஆனால் எடை கல் அளவில் சிறியதாக இருந்தாலும் அந்த பஞ்சு மூட்டையின் அளவை அது தீர்மானிக்கிறது அல்லவா? அதைப்போல ஒரேயொரு ஆண்டாள் போதும் அத்தனை ஆண் சித்தர்களையும் சமமாக கருதுவதற்கு. அதைப்போல் ஒரேயொரு ஔவையார் போதும் அனைத்து ஆண் சித்தர்களுக்கும் சமமாக. எனவே பெண் சித்தர்கள் இல்லையென்று கூறவே வேண்டாம்.

பல குடும்பங்களில் நடக்கின்ற கொடுமைகளை பார்க்கும் பொழுது இல்லற பெண் சித்தர்களே அதிகமாக இருக்கிறார்கள். ஏதோ சித்தர்கள் என்றால் சித்து வேலையும் அதிசயங்களையும் செய்தால்தான் சித்தர்கள் என்பது அல்ல. தன் குடும்பத்திற்காக தன்னை சேர்ந்தவர்களுக்காக ஏன்? பொது நலத்திற்காக அனைத்தையும் சகித்துக் கொண்டு யார் இருந்தாலும் சித்தர்களே. எனவே அப்படி நயத்தகு நாகரீகமாக நல்ல எண்ணங்களோடு வாழ்கின்ற பல பெண் சித்தர்கள் இன்றும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல ஆண் சித்தர்களில் மனிதர்கள் அறிந்த சித்தர்கள் இந்த அளவு. அறியாத சித்தர்கள் கோடி கோடி என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 427

கேள்வி: நரம்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர வழிபாடுகள் ஸ்தலங்கள் பற்றி:

எந்தப் பிணியாக இருந்தாலும் ஆற்றொண்ணாத கொடுநோயாக இருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட பாவத்தின் காரணமாக வருவதில்லை. ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலிதான் பல்வேறு விதமான துன்பங்கள் அதிலும் நோய் அதிலும் இன்னவன் குறிப்பிட்ட தந்தி தொடர்பான பிணி. இதுபோல் பிணி தீர ஒரு மனிதன் அவனால் இயன்ற வழிபாடுகளை இல்லத்திலும் எந்த ஆலயத்திலும் செய்யலாம். அடுத்து புதன் சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் சனி சார்ந்த ஸ்தலங்கள் சென்று வழிபாடு செய்வதாலும் இன்னவன் கூறிய நரம்பு தொடர்பான பிணிகள் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோல் ஏழை பிணியாளர்களுக்கு இயன்ற மருத்துவ உதவிகளை நல்விதமாய் அன்பாய் ஆதரவாய் தொடர்ந்து செய்ய இந்தப் பிணி மட்டுமல்லாமல் மற்ற பிணிகளும் கட்டுக்குள் வரும். குறிப்பாக கூற வேண்டுமென்றால் திருவெண்காடு சென்று வழிபாடு செய்வதும் பழனி சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்குவதும் இதுபோல் மதுரை அன்னை மீனாளை வணங்குவதும் (இன்னவன் கூறியதால் குறிப்பிட்ட ஸ்தலங்களை கூறியிருக்கிறோம்) இன்னும் சில ஸ்தலங்கள் சென்று வணங்குவதால் நரம்பு தொடர்பான பிணிகள் குறையும். எனவே நரம்பு தொடர்பான பிணிகள் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள் இதுபோன்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து பலன் அடையலாம். தீவிரமான வழிபாடு ஒரு பிணியை குறைக்கும். ஆனாலும் அந்தப் பிணியோடுதான் அந்தப் பிறவியில் அவன் கடைவரையில் வாழ வேண்டும் என்று பிரம்மன் விதி எழுதியிருந்தால் அதனை மாற்ற யாராலும் முடியாது.

9. ஏழுகடல் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் ஏழுகடல் அழைத்த படலம் நூலின் ஒன்பதாவது படலமாகும்.

இறைவன் சுந்தரபாண்டியனாராக மதுரையின் அரசுப் பொறுப்பை ஏற்று ஆட்சி செய்து கொண்டிருக்கும் காலத்தில் கௌதம முனிவர் மதுரைக்கு வந்து சுந்தரபாண்டியனாரைச் சந்தித்தார். பின் அவர் இறைவியான தடாகையின் தாயான காஞ்சன மாலை தங்கி இருந்த அரண்மனைக்கு வருகை தந்தார். காஞ்சன மாலையும் கௌதம முனிவரை வரவேற்று உபசரித்து அவரை தகுந்த ஆசனத்தில் அமர்த்தினாள். காஞ்சன மாலை கௌதம முனிவரிடம் தவத்தில் சிறந்தவரே என் மகளான தடாதகைக்கு சிறந்த முறையில் திருமணம் முடிந்து ஆட்சி பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டு விட்டது. ஆதலால் பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடையக் கூடிய வழியினை எனக்கு கூறுங்கள் என்று கேட்டாள். அதற்கு கௌதம முனிவரும் காஞ்சன மாலையே நீ செய்த தவத்தின் காரணமாக இறைவியை மகளாகவும் இறைவனையே மருமகனாகவும் பெற்று உள்ளாய். உனக்கு வழிகாட்டும் தகுதி எனக்கு இல்லை. இருப்பினும் வீடுபேற்றினை அடையக் கூடிய வழியை நீ கேட்டதால் உனக்கு நான் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன். அறங்கள் மூன்று வகைப்படும். அவை மன அறம். நா அறம். உடல் அறம். இவை மானதம் வாசிகம் காயகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மூன்று அறங்கள் செய்வதின் வழியாக வீடுபேற்றினை அடையலாம்.  

முதல் வழி: தர்மசிந்தனை. தருமமும் தானமும் செய்தல். பிற உயிர்களின் மீது இரக்கம் கொள்ளுதல். பொறுமை காத்தல். உண்மை பேசுதல். ஐம்பொறிகளையும் அடக்கி ஆளல். நேர்மை. இறைவனை தியானம் செய்தல். தூய்மை பக்தி ஆகியவைகளான மானதம் என்று சொல்லக் கூடிய மன அறம் ஆகும்.

2 வது வழி: மந்திரங்கள் உச்சரிப்பது. இறைவனின் துதிப் பாடல்களைப் பாடுதல். வேத நூல்களைப் படித்தல். மந்திரங்கள் சொல்லி யாகங்கள் செய்தல். திருக்கோவிலை வலம் வருதல். சுவைக்கு அடிமையாகாமல் இருப்பது. எவரையும் தூஷிக்காமல் இருத்தல் ஆகியவைகளான வாசிகம் என்னும் நா அறம் ஆகும்.

3 வது வழி: ஆலயங்களுக்கு சென்று வணங்குதல். ஆலயத் திருப்பணி செய்தல். தல யாத்திரை செல்லுதல். தீர்த்தங்களில் நீராடுவது ஆகியவைகள் காயகம் என்னும் உடல் அறம் ஆகும்.

இதில் உடனே பயனளிக்கக் கூடியது தீர்த்தமாடல் ஆகும். புலனடக்கமும் யாகமும் செய்த பலன் தீர்த்தமாடுதலில் கிடைக்கிறது. வினைகளின் காரணமாக பிறவி என்று ஒன்று இருந்தால் அடுத்தப் பிறவி பெருஞ் செல்வந்தனாக்கும். முற்பிறவிகளில் செய்த பாபங்கள் தொலையும். அத்தனை தீர்த்தங்களிலும் நீராடுவ தென்பது நடக்கக் கூடிய காரியமா? அதனால் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுவது மிகவும் நல்லது என்று கௌதம முனிவர் கூறிச் சென்றார்.

கௌதம முனிவரின் வழிகாட்டுதலை ஏற்றுக் கொண்ட காஞ்சன மாலை கடலில் நீராட விருப்பம் கொண்டாள். ஆதலால் தன்னுடைய விருப்பத்தை தன் மகளான தடாகையிடம் கூறினாள். தடாகை சுந்தரபாண்டியனாரிடம் சென்று கௌதம முனிவரின் வழிகாட்டுதலின்படி பிறவா நிலையாகிய வீடுபேற்றினை அடைய என் தாயான காஞ்சன மாலை கடலில் சென்று நீராட விரும்புகிறாள். ஆனால் மதுரையிலோ கடல் இல்லை. இதற்கு தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். தடாகையின் கோரிக்கையை கேட்ட சுந்தரபாண்டியனார் தடாகை நீ கவலை கொள்ள வேண்டாம். உன் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்கிறேன் என்று கூறி ஏழு கடல்களையும் மதுரையில் எழுந்தருளச் செய்தார். ஏழு கடல்களும் இறைவனின் ஆணைப்படி ஆர்ப்பாரித்து மதுரையின் எழுந்தருளின. ஏழு கடல்களும் மக்களின் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் கடலின் பேரிரைச்சலினை மட்டும் மக்கள் கேட்டனர். கண்ணுக்குத் தெரியாத கடல்களின் பேரிரைச்சல் கேட்ட மதுரை நகர மக்கள் நடுக்கி சுந்தரபாண்டியனாரிடம் சென்று அச்செய்தியைத் தெரிவித்தனர். சுந்தரபாண்டியனார் ஏழு கடல்களையும் மதுரையில் மீனாட்சி கோவின் கீழ்புறத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் செல்ல ஆணையிட்டார். ஏழுகடல்களும் கிணற்றினுள் எழுந்தருளின. பின்னர் மக்கள் கடலின் பேரிரைச்சலைக் கேட்கவில்லை.

மதுரையில் ஏழுகடல்களும் எழுந்தருளியதன் விளைவாக மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்திற்கு எதிரே உள்ள புதுமண்டபத்திற்கு எதிரே உள்ளது விட்டவாசல் தெரு. விட்டவாசல் தெரு வழியில் இடது பக்கம் ஏழு கடல் பொய்கையைப் பார்க்கலாம். இந்த தெருவானது எழுகடல் தெரு என்று இன்றும் அழைக்கப் படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

அனைவரும் வீடு பேறு அடைவதற்கு ஏழு கடல்களை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிணற்றில் அளித்து அருளினார். மேலும் கடலில் நீராடுவது உடலுக்கும் உள்ளத்திற்கும் உறுதியைத் தருவதோடு வீடுபேற்றினையும் அளிக்கும் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

8. அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் அன்னக் குழியும் வைகையையும் அழைத்த படலம் நூலின் எட்டாவது படலமாகும்.

இறைவன் அருளிய வடவைத்தீ என்னும் பசி நோயினால் குண்டோதரன் தடாகை ஏற்பாடு செய்த திருமண விருந்து உணவு முழுவதையும் உண்டான். ஆனாலும் அவனுடைய பசி நோயானது தீராமல் அதிகரித்துக் கொண்டே சென்றது. சொக்கநாதரிடம் சென்று தனது பசி நோயினை போக்கி அருள வேண்டி நின்றான். சொக்கநாதரும் அவன் மீது இரக்கம் கொண்டு உலகிற்கு எல்லாம் உணவளிக்கும் தனது சக்தியான அன்னபூரணியை மனதில் நினைத்தார். உடனே அங்கே தயிர் அன்னத்தினை உடைய நான்கு பெரிய குழிகள் தோன்றின. சொக்கநாதர் குண்டோதரனிடம் பசி நோயால் வாடும் குண்டோதரனே இந்த குழிகளில் உள்ள தயிர் அன்னத்தினை உண்பாயாக என்று அருளினார். இறைவனின் ஆணையின்படி குண்டோதரனும் தன்னுடைய இரு கைகளாலும் அன்னக்குழியில் இருந்த தயிர் அன்னத்தை எடுத்து உண்டான்.

இறைவனின் கருணையால் குண்டோதரனைப் பிடித்திருந்த பசி நோய் மறைந்தது. அன்னக்குழியில் இருந்து உணவினை உண்ட குண்டோதரனின் வயிரானது பருத்து பெரியதானது. உணவினை உண்ட மயக்கத்தால் அவன் பூமியில் வீழ்ந்தான். இங்கும் அங்கும் புரண்டான். சிறிது நேரத்தில் குண்டோதரனுக்கு உண்ட உணவின் காரணமாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. உடனே அவன் மதுரையில் நீர் இருக்கும் இடங்களைத் தேடிபோய் நீரினை அருந்தினான். குண்டோதரனின் தண்ணீர் தாகத்தின் காரணமாக மதுரையின் நீர்நிலைகள் வற்றின. ஆனாலும் அவனுடைய தண்ணீர் தாகம் அடங்கவில்லை. அவன் மீண்டும் சொக்கநாதரை சரணடைந்து உலகினை காத்து அருளும் பெருமானே. அடியேனின் பசி நோய் போய் இப்போது தண்ணீர் தாகம் அதிகரித்துள்ளது என்றான். இங்குள்ள நீர் நிலைகளில் உள்ள நீரினை எல்லாம் குடித்த பின்னும் என்னுடைய தாகம் தணியவில்லை. பசி நோயினை போக்கிய தாங்களே என்னுடைய தாகத்தினையும் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.

சொக்கநாதரும் குண்டோதரனிடம் அன்பு கொண்டு தன் தலையில் சூடியிருந்த கங்கையை நோக்கி பெண்ணே நீ இம்மதுரை மாநகரின் பக்கத்தில் ஒரு பெரிய நதியாக விரைந்து ஓடி வருவாயாக என்று கட்டளை இட்டார். கங்கை சிவபெருமானை நோக்கி முன்னர் பகீரதன் பொருட்டு ஒருமுறை தீர்த்தமாக என்னை அழைத்தீர்கள். இப்போதும் அவ்வாறே அழைக்கிறீர்கள் என்றாள். என்னுள் மூழ்கியவருக்கு பக்தியும் அன்பும் மெய்ஞானமும் வீடுபேறும் பெறுமாறு தாங்கள் எனக்கு திருவருள் புரிய வேண்டும் என்று கங்கை வரம் வேண்டினாள். இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார். உடனே கங்கை அளவற்ற வேகத்துடன் பெரிய நதியாக ஆரவாரத்துடன் பெரிய மரங்களைப் பெயர்த்துக் கொண்டு வந்தது. சிவபெருமான் குண்டோதரனிடம் அந்த நதி நீரில் வை உன்னுடைய கை என்று நீரை பருகக் கட்டளையிட்டார். குண்டோதரனும் ஆற்றின் அருகே சென்று இருகைகளை அந்த நீரில் கை வைத்து வாரிக் குடித்தான். உடனே அவனுடைய தண்ணீர் தாகம் தணிந்தது. குண்டோதரன் கையை வைத்து நீர் குடித்த நதியாதலால் அது வைகை என்று அழைக்கப்பட்டது. தண்ணீர் தாகம் தணிந்த குண்டோதரன் மகிழ்ந்து இறைவனின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். ஆனந்தத்தில் பல பாடல்களைப் பாடினான். அவனது பாடல்களைக் கேட்ட சிவபெருமான் அவனை தனது பூதகணங்களுக்கு தலைமை ஏற்கும் பதவியை அவனுக்கு அருளினார்.

சிவபெருமானின் தலையில் இருந்து இறங்கி வந்ததால் வைகை சிவகங்கை என்று அழைக்கப் படுகிறது. தன்னை பருகுபவர்களுக்கு தெளிந்த சிவஞானத்தை அளிப்பதால் இது சிவஞானத் தீர்த்தம் என்றும் காற்றைப் போல் வேகமாக வருவதால் வேகவதி என்றும் மதுரையை சூழ்ந்து வருவதால் கிருத மாலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை சரண் அடைபவர்களை இறைவன் கட்டாயம் காத்து அருளுவார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார். மேலும் மதுரை நகருக்கு வற்றாத வைகை புண்ணிய நதியை இந்த திருவிளையாடல் மூலம் அளித்து அருளினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 426

கேள்வி: இறை மறுப்பாளர்களும் நீண்ட ஆயுளும் புகழும் பெறுவது எப்படி?

இறை உண்டு என்று கூறிக் கொண்டு தவறான செயலை செய்வதை விட இறைவன் இல்லை என்று கூறிவிட்டு நல்ல தொண்டினை செய்வதை இறைவனே விரும்புகிறார். அடுத்ததாக இறை மறுப்பாளர்கள் அல்லது வேறு தவறான காரியங்களை செய்கின்ற மனிதர்கள் ஒருபுறம் இருக்கட்டும். எத்தனையோ அசுரர்கள் தவமாய் தவமிருந்து இறைவனை நேரில் தரிசனம் செய்து பல வரங்களை வாங்குகிறார்கள். அந்த அசுரன் பிறக்கும் பொழுதே தெரியும் அவன் என்ன செய்யப் போகிறான்? என்று. அவன் எதற்காக தவம் செய்கிறான்? என்றும் தெரியும். வரம் கேட்கும் பொழுதும் இறைவனுக்கும் தெரியும் அவன் எதற்காக வரம் கேட்கிறான்? என்ன செய்வான்? என்று. இதெல்லாம் தெரிந்தும் இறைவன் எதற்காக அவனை அனுமதிக்கிறார்? ஒன்று இந்த உலகத்தில் பல்வேறு விதமான அனுபவங்கள் பல்வேறு ஆத்மாக்களுக்கு ஏற்பட்டு அதன் மூலம் கர்மங்கள் குறைய வேண்டும். விதவிதமான மனிதர்கள் விதவிதமான குணங்கள் கொண்ட உயிரினங்கள் இவைகளை எல்லாம் படைப்பது ஒருவகையில் கர்மக் காரணங்கள் இன்னொரு வகையில் இறைவனின் திருவிளையாடல்.

இன்னொன்று எல்லாம் இந்த உலகத்தில் ஒரே வகையாக இருந்தால் எதையும் பயன்படுத்த முடியாது. பரிபூரண ஞானநிலை பெற்று இறையோடு ஒன்றிவிட்டால் ஒன்றும் தேவையில்லை. இந்த உலகிலே விதவிதமான விஷயங்கள் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. குற்றம் செய்கின்ற ஒருவன் ஒரு பொருளை எடுத்து விடுகிறான். பொருளை இழக்க வேண்டும் அதனால் துன்பப்பட வேண்டும் என்பது பொருளை இழந்தவன் கர்மா. சிறையில் அடைபட்டு துன்பம் அடைய வேண்டும் என்பது இவன் கர்மா. இந்த குற்றவாளியை துரத்தி சென்று பிடிக்க வேண்டும் என்பது தீது அடக்கும் துறை சார்ந்தவனின் கர்மா. இவர்களை பிடித்து நீதிமன்றத்திலே நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். நீதிமன்றம் இயங்க வேண்டும் என்பது அவர்களின் கர்மா. எனவே மின்சாரத்தை கடத்தக் கூடிய பொருள் எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதே மின்சாரத்தைக் கடத்தாத பொருளும் தேவை. மின்சாரத்தை கடத்தாத பொருள் இருந்தால்தான் மின்சாரத்தை கடத்துகின்ற பொருளை நாம் பயன்படுத்த முடியும். எனவே இறைவன் இருக்கிறார் என்று கூறுகின்ற மனிதர்கள் இருக்கின்ற அதே உலகில் இறைவன் இல்லை எனும் மனிதன் இருந்தால்தான் இறைவனின் பெருமையை உணர முடியும். இவையனைத்தும் இறைவனின் லீலையே.

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் நூலின் ஏழாவது படலமாகும்.

சுந்தரேஸ்வரர் மீனாட்சி திருமண நிகழ்விற்கு வந்திருந்த அனைவரும் வெள்ளியம்பலத்தில் நிகழ்ந்த இறைவனாரின் திருநடனத்தினைக் கண்டு களித்தனர். பின்னர் அனைவரும் அறுசுவையுடன் கூடிய திருமண விருந்தினை உண்டனர்.  திருமண விருந்தினை உண்டவர்களுக்கு பாக்கு தாம்பூலத்துடன் பரிசுப் பொருட்களையும் தடாதகை வழங்கினார். அப்போது சமையல்காரர்கள் தடாதகையிடம் விரைந்து சென்று அம்மையே திருமண விருந்திற்கு தயார் செய்த உணவு வகைகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவு கூட காலியாகவில்லை. இப்போது என்ன செய்வது? என்று கேட்டனர். இதனைக் கேட்ட தடாதகைக்கு இத்தனை பேர் உணவு உண்ட பின்னும் திருமண உணவு மீதி இருக்கிறதா என்ற ஆச்சர்ய எண்ணத்தோடு அதிகமாக உணவு ஏற்பாடு செய்திருக்கிறோம் என்ற கர்வமும் தொற்றிக் கொண்டது. சமையல்காரர்கள் கூறியதைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று ஐயனே திருமணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்தனர். அவர்களுக்காக அறுசுவையுடன் கூடிய திருமண விருந்து தயார் செய்யப்பட்டது. அவ்வாறு தயார் செய்யப்பட்ட திருமண விருந்து உணவினை அனைவரும் சாப்பிட்ட பின்பும் ஆயிரத்தில் ஒரு பங்கு உணவு கூட காலியாகவில்லை. வேறு யாரேனும் தங்களைச் சார்ந்தவர்கள் உணவு அருந்தாமல் இருந்தால் அவர்களை உணவு உண்ண அனுப்பி வையுங்கள் என்று பெருமையும் கர்வமும் பொங்க கூறினாள்.

தடாதகை கர்வத்துடன் கூறியதைக் கேட்ட சிவபெருமான் ஒரு திருவிளையாடலை நிகழ்த்த எண்ணினார். அவர் தடாதகையை நோக்கி புன்னகையுடன் உலகில் பெறுதற்கரிய செல்வங்களை எல்லாம் நீ பெற்று உள்ளாய். கற்பக விருட்சமும் உன்னுடைய செல்வ செழிப்பிற்கு முன்பு தோற்றுவிடும். உன்னுடைய செல்வத்தின் அளவினை அறிவிக்கவே இவ்வளவு உணவினை தயார் செய்ய சொல்லியுள்ளாய். ஆனாலும் அறுசுவை திருமண விருந்தினை உண்ண பசியால் களைப்படைந்தோர் யாரும் எம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்பதே உண்மை. நான் இப்போது என்ன செய்வது? என்று கேட்டு விட்டு பின் பக்கத்தில் நின்றிருந்த குண்டோதரனுக்கு வடவைத்தீ என்னும் பசிநோயினை உண்டாக்கினார். பசி நோய் வந்ததும் குண்டோதரன் பசியால் தளர்ந்த உடலுடன் ஐயனே எனக்கு பசிக்கிறது என்றான். இதனைக் கேட்ட இறைவனார் தடாதகை எனது குடையினைத் தாங்கிவரும் இந்த பூதகணத்திற்கு ஒரு பிடி உணவு என்று கூறினார். இதனைக் கேட்ட மீனாட்சி ஒரு பிடி உணவு என்ன வயிறு நிறைய திருமண விருந்தினை குண்டோதரன் உண்ணட்டும் என்று கர்வத்துடன் கூறினாள். குண்டோதரனும் பசியோடு திருமண விருந்து நடைபெறும் இடத்தினை நோக்கிச் சென்றான்.

திருமண விருந்து நடைபெறும் இடத்தினை அடைந்த குண்டோதரன் அங்கிருந்த சமைத்த அறுசுவை உணவுகளை எல்லாம் ஒரு நொடியில் விழுங்கினான். பின் அங்கிருந்த காய்கறிகள் பழங்கள் கரும்பு தேங்காய் அரிசி நவதானியங்கள் சர்க்கரை என கண்ணில் பட்ட எல்லா உணவுப் பொருட்களையும் உண்டான். அப்போதும் அவனின் பசி நோய் தீரவில்லை. இவ்வளவு சாப்பிட்டும் குண்டோதரன் வயிறு ஒட்டிப் போயே இருந்தது.  அவன் வயிற்றில் இருந்த அக்கினி அனைத்து உணவையும் நொடிப்பொழுதில் பஸ்மமாக்கியது. இன்னும் ஏதாவது உண்ணத் தாருங்கள் என்று அங்கிருந்த சமையல்காரர்களிடம் கேட்டான். அதனைக் கேட்ட சமையல்காரர்கள் தடாதகையிடம் குண்டோதரன் உணவுகள் அனைத்தையும் விழுங்கியதையும் இன்னும் உண்ண உணவு வேண்டும் என்று கேட்டதையும் பற்றிக் கூறினர். இதனைக் கேட்ட தடாதகை சுந்தரேசரிடம் சென்று தயங்கியபடி எப்படித் தொடங்குவது என்று தயங்கி நின்றாள். இறைவன் ஒன்றும் தெரியாதவர் போல தடாகையிடம் குண்டோதரன் சாப்பிட்டு முடித்து விட்டானா? மற்ற பூதங்களுக்கு ஆள் அனுப்பி இருக்கிறேன்.  இதோ வந்து விடுவார்கள் சற்று பொறுத்துக் கொள் என்றார் இறைவன். இதனைக் கேட்ட தடாகை ஐயனே நான் என்னுடைய செல்வத்தால் உலகத்தினர் அனைவருக்கும் உணவளிக்க முடியும் என்று கர்வம் கொண்டிருந்தேன். ஆனால் தாங்கள் ஒரு பிடி உணவு சாப்பிடச் சென்ற குண்டோதரனின் பசியை என்னால் போக்க இயலவில்லை. என்னை மன்னியுங்கள் என்று கூறி சிவபெருமானே சரணடைந்தாள்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவியே ஆனாலும் தன் செல்வத்தை எண்ணிக் கர்வம் கொள்ளக் கூடாது கர்வம் கொண்டால் உள்ளதும் அளிந்து போகும் என்ற கருத்தை அனைவருக்கும் அறிந்து கொண்டு யாரும் கர்வம் கொள்ளக் கூடாது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 425

கேள்வி: காரணமின்றி காரியம் இல்லை. இதற்கு இறை விளக்கம் தருக:

இறைவனின் கருணையாலே எல்லா காரியங்களுக்குப் பின்னாலும் காரணம் இருக்கிறது. ஆனால் அந்தக் காரணத்தை மனிதன் ஏற்றுக் கொள்வதுதான் கடினமாக இருக்கிறது. ஏனென்றால் மனிதன் முழுக்க முழுக்க உடல் ரீதியாக வருகின்ற எந்த துன்பத்தையும் அவன் அனுபவித்து தீர்க்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. அது அனுமதிக்கவுமில்லை. ஆனால் உடல்ரீதியாக ஒரு மனிதனுக்கு ஒரு துன்பம் வருகிறது என்றால் அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. புரிவதுபோல் கூறவேண்டும் என்றால் அம்மை நோய் ஒரு குழந்தையை தாக்கிவிட்டால் அது துன்பம். அந்தக் குழந்தை துடிக்கும். பெரியவர்களை தாக்கினாலும் சிறியவர்களை தாக்கினாலும் துன்பம்தான். வெம்மையின் மிகுதியால் இந்தப் பிணி தாக்குவதாக கூறப்படுகிறது. ஒருவித நுண் கிருமியால் இந்த நோய் வருவதாக விஞ்ஞான அறிவு மனிதனுக்கு சொல்லித் தந்திருக்கிறது. இந்த நோய் மனிதனை தாக்கினால் துன்பம். இது மனிதனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் இந்த நோய் ஒரு மனிதனை தாக்கிய பிறகு அந்த மனிதனுக்குள் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெருகுகிறது என்பது உண்மை. இதுவும் விஞ்ஞானம் கூறுகிறது. எனவே எந்தவொரு துன்பத்திற்குப் பின்னாலும் ஒரு மனிதனுக்கு நன்மையை தரக்கூடிய ஒரு நிகழ்வு இருக்கும் என்பதே உண்மையாகும். இதை பொறுமையோடு சிந்தித்துப் பார்த்தால் ஒரு மனிதனுக்கு புரியும். பொறுமை இல்லையென்றால் காரணமில்லாமல் இந்த துன்பம் வந்திருக்கிறது என்பதுபோல் தோன்றும்.

இப்படிக் கூறினால் ஒரு மனிதனுக்கு வேறுவிதமான ஐயம் வரும். எல்லாம் சரி குருதேவா ஒரு தாய் தந்தைக்கு நீண்ட நாட்களாக குழந்தையில்லாமல் இருக்கிறது. பல்வேறு ஆலயங்கள் சென்று பிரார்த்தனை செய்து தர்மங்களை செய்து ஒரு குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். அன்போடும் ஆசையோடும் வளர்க்கிறார்கள். இருபது வயது வளர்ந்த பிறகு அந்தக் குழந்தை திடீரென நோய் வாய்பட்டோ விபத்திலோ இறந்து விடுகிறது. தாய் தந்தைக்கு துக்கம் தாங்க முடியவில்லை. கதறுகிறார்கள் அழுகிறார்கள். இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? இந்த துன்பத்திற்கு என்ன நியாயம் இருக்கும்? இந்த துக்கம் அவர்களைவிட்டு என்றுமே நீங்காதே? இன்னும் இதுபோல பல நிகழ்ச்சிகள் மனித வாழ்க்கையிலே நீக்க முடியாத துன்பமாக இருக்கிறதே? இதை எப்படி எடுத்துக் கொள்வது? இந்த இடத்தில்தான் கர்மாவை ஒரு மனிதன் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்து ஆசையோடும் அன்போடும் வளர்க்கப்பட்ட பிறகு தாய் தந்தையரை விட்டு பிரிகிறது என்றால் அங்கே மூன்று ஆத்மாக்களின் கர்மா இணைக்கப்படுகிறது. அதற்குப் பின்னாலும் பலவிதமான கர்மக் கணக்கு இருந்தாலும் புரிவதற்காக சுருக்கமாக கூறுகிறோம். முதலில் அந்தக் குழந்தையை பிரிந்து துக்கப்பட வேண்டும் என்று அந்த தாயின் கர்மாவும் தந்தையின் கர்மாவும் இருக்கிறது.

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இறைவன் வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் நூலின் ஆறாவது படலமாகும்.

உலகத்தின் இறைவனான சுந்தரேஸ்வரருக்கும் உமையம்மையாகிய தடாதகைக்கும் மதுரையில் திருமணம் இனிது நிறைவேறியது. திருமணம் முடிந்தவுடன் திருமணத்திற்கு வந்திருந்த மன்னர்கள் தேவர்கள் முனிவர்கள் உள்ளிட்ட அனைவரையும் விருந்துக்கு மதுரையின் அரசரான சுந்தரேஸ்வரர் அழைப்பு விடுத்தார். அவரின் அழைப்பினை ஏற்று அனைவரும் பொற்றாமரைக் குளத்தில் நீராடி விருந்து சாப்பிட வந்தார்கள். திருமண விருந்தில் பங்கேற்க வந்தவர்களுள் பதஞ்சலியும் வியாக்கிரதபாதரும் அடங்குவர். இவ்விருவரும் தில்லை பொன்னம்பலத்தில் உள்ள தில்லை அம்பலவாணரின் திருநடனத்தினை வழிபட்ட பின்பு தான் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். இப்போது திருமணத்திற்காக மதுரை வந்திருந்தவர்கள் இறைவனான சுந்தரேஸ்வரரிடம் எங்களின் தந்தையே நாங்கள் பொன்னம்பலத்தில் தாங்கள் ஆடியருளும் திருநடனத்தை தரிசித்த பின்புதான் தினமும் உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுளோம் தற்போது திருநடனத்தை காணாமல் எப்படி உணவருந்த இயலாது என்றார்கள்.

முனிவர்கள் கூறியதைக் கேட்ட சுந்தரேஸ்வரர் உலகம் என்ற மனிதனுக்கு அழகிய தில்லை இதயம் என்றால் மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும். ஆதலால் தில்லை பொன்னம்பலத்தில் நிகழ்த்திய திருநடனத்தை இம்மதுரையில் யாம் செய்து காட்டுவோம் என்று கூறினார். அதனைக் கேட்ட முனிவர்கள் இருவரும் கருணைக் கடலே உலகம் என்ற மனிதனுக்கான ஏனைய உறுப்புக்கள் யாவை? என்று வினவினர். அதற்கு இறைவனார்

மூலாதாரம் கமலாயம் எனப்படும் திருவாரூர். அங்கே நான் தியாகராஜ மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். சுவாதிஷ்டானம் திருவானைக்காவல் அங்கே ஜம்புகேசுவர மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். மணிபூரகம் திருவண்ணாமலை அங்கே அருணாசல மூர்த்தியாய் அருள் புரிகின்றேன். அனாகத சக்கரம் சிதம்பரம் அங்கு நான் சபாபதியாக அருள் புரிகின்றேன். விசுக்திஸ்தானம் தக்ஷிண கைலாசமெனப்படும் திருக் காளஹஸ்தி அங்கே நான் காளத்திநாதனாக அருள் புரிகின்றேன். ஆக்ஞாஸ்தனம் (புருவ மத்தியம்) காசி அங்கே நான் விசுவநாத மூர்த்தியாக அருள் புரிகின்றேன். திருக்கைலாயம் பிரம்மரந்திரம் (சுழிமுனையின் உச்சியாகிய இடம்) அங்கே நான் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனாக அருள் புரிகின்றேன். இம்மதுரை துவாத சாந்தம் (உச்சிக்கு மேற் பன்னிரெண்டு அங்குல அளவில் உள்ள பாகம்) ஆகும் இங்கு சுந்தரேஸ்வரனாக அருள் புரிகிறேன் என்று கூறினார். பின் முனிவர்களோடு திருக்கோவிலினுள் சென்றார். அங்கே பொன்னாலாகிய விமானத்தின் கீழ்புறத்தில் வெள்ளியம்பலம் தோன்றியது. அதன்மேல் மாணிக்க பீடம் ஒன்று தோன்றியது. ஒளி வீசிக் கொண்டிருந்த வெள்ளியம்பல மாணிக்க பீடத்தின் மேல் பாரின் இருளை அகற்றும் ஒளிக்கதிர் போல் அடியர்களின் அஞ்ஞானமாகிய இருளை விரட்டும் பொருட்டு ஞானஒளியின் வடிவாய் சிவபெருமான் தோன்றினார்.

திருநந்தீஸ்வரர் மத்தளம் கொட்ட திருமால் இடக்கை என்னும் இசைக் கருவியை வாசிக்க தும்புரு நாரதர் இருவரும் இசைப்பாட்டு பாடினர். கலைமகள் சுருதி கூட்ட பிரம்மதேவர் யாழினை மீட்டி கீதங்கள் பாடினார். சிவகணங்கள் மொந்தை தண்ணுமை என்னும் கருவிகளை முழங்கினர். இறைவனார் பெரிய விழிகளைக் கொண்ட முயலகன் மேல் அவன் விழிகள் பிதுங்குமாறு முதுகின் மேல் வலது காலினை ஊன்றி காட்சியளித்தார். இறைவனாரின் வலது மேற்கையில் உடுக்கையும் இடது மேற்கையில் தீச்சுவாலையும் காணப்பட்டது. அவரின் வலகீழ்கை அடைக்கலம் தந்தவாறும் இடதுகீழ்க்கை குஞ்சித பாதத்தைக் காட்டியாவாறும் இருந்தன. அவரின் கூந்தல் மற்றும் ஆடைகள் காற்றில் அசைந்தவாறு இருந்தன. அழகிய கண்களைக் கொண்ட உமையம்மை ஒருபுறம் ஒதுங்கி நிற்க அவ்வம்மையைப் பார்த்த வண்ணம் இதழ்களில் புன்னகையை ஏந்தி இறைவனார் திருநடனம் புரிந்தார். சுந்தரேஸ்வரர் ஆடல்வல்லானாக வெள்ளியம்பலத்தில் ஆடிய நடனத்தைக் கண்ட முனிவர்களாகிய பதஞ்சலியும் வியாக்கிரதபாதரும் நெஞ்சுருகி நின்றனர். தங்களின் பிறவிப் பயனை அடைந்துவிட்டோம் என்று எண்ணினர். பதஞ்சலி வியாக்கிரதபாதர் மட்டுமல்லாது திருமணத்திற்கு வருகை புரிந்த பிற முனிவர்கள் அரசர்கள் தேவர்கள் கந்தவர்கள் கிம்புருடர்கள் யோகிகள் உட்பட எல்லோரும் இறைவனாரின் திருக்கூத்தினை கண்டு களித்தனர்.

முனிவர்கள் ஆடல்வல்லானை நோக்கி உலக இயக்கங்களுக்கு காரணமானவரே தாங்களின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்து விட்டோம். அடியேன்களின் வேண்டுகோளினை ஏற்று வெள்ளியம்பலத்தில் தாங்கள் ஆடிய திருநடனத்திற்கு முதல் வணக்கம் என்றனர். ஊழிமுதல்வனே உயிர்களின் பிறவிக்கடலினை தீர்ப்பவனே அடியார்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றி வைக்கும் எங்கள் தந்தையே உங்களுக்கு வணக்கம். இறைவனாரின் இடதுபாகத்தில் உறைந்திருக்கும் உமையம்மைக்கு வணக்கம் என்று பலவாறு போற்றி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினர். இறைவனின் திருநடனத்தினைக் கண்டு மகிழ்ந்து போற்றிய பதஞ்சலி வியாக்கிரதபாதர் ஆகியோர்களை நோக்கி இறைவனார் நல்லது. நீங்கள் விரும்பியது என்ன? என்று வினவினார். அதனைக் கேட்ட இருவரும் எங்களின் இறைவா. தாங்கள் இவ்வெள்ளியம்பலத்தினுள் எப்போதும் திருநடனத்தினை நிகழ்த்தி உயிர்களை மாயையிலிருந்து விடுபடச் செய்து அவைகளுக்கு நற்கதி அளிக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டார்கள். அதற்கு சுந்தரேஸ்வரர் செந்தமிழை வளர்த்து ஓங்கச் செய்யும் இப்பாண்டிய நாடு செய்த தவப்பயனின் காரணமாக நீங்கள் விரும்பிய வரத்தினை அளித்தோம் என்று அருளினார்.

பதஞ்சலி முனிவர் சுந்தரேஸ்வரரிடம் முக்காலமும் ஆனவரே ஆதியே எம்பெருமான தங்களின் திருநடனத்தைக் நேரே கண்டு களித்த அனைவருக்கும் இப்பூமியில் மீண்டும் பிறவாத ஒப்பற்ற சிவகதியை அடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டினார். சிவபெருமானும் அதற்கு இசைந்து அருள்புரிந்தார். இதனைக் கேட்ட சிவகணத்தவர் சிவபெருமானை கொண்டாடி மகிழ்ந்தனர். முனிவர்கள் ஆனந்தம் அடைந்தனர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரையில் வெள்ளியம்பலம் அமைத்து அந்த வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் அமைத்து அதன்மீது இறைவன் திருநடனம் ஆடி உலகிற்கு நன்மை அளித்துள்ளார். அண்டத்திலுள்ள அனைத்திலும் இறைவன் இருப்பது போல் இந்த பிண்டத்திலும் இறைவன் அனைத்து பாகங்களிலும வீற்றிருந்து திருவிளையாடல் புரிகிறார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 424

கேள்வி: வ்யதிபாத யோகம் மற்றும் மூதாதையர் வழிபாடு பற்றி:

இறைவனின் கருணையாலே நல்விதமாய் ஒவ்வொரு குடும்பத்திலும் வாழ்ந்து மறைந்த முன்னோர்களின் சாபங்கள் தோஷங்கள் பாவங்கள் அவற்றையும் அந்த குடும்பத்தில் எந்த ஆத்மா குழந்தையாக பிறக்கிறதோ அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதற்கும் அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்த வகையிலே அந்த வழிமுறையிலே வரக் கூடிய பாவங்களையெல்லாம் குறைத்துக் கொள்ள தோஷங்களை சாபங்களை நீக்கிக் கொள்ள செய்யக் கூடிய விதவிதமான வழிபாடுகள்தான் இன்னவன் கூறியது. இந்த வழிபாட்டோடு பரிபூரண எதிர்கால வழிபாட்டிலே வெறும் சுயநலமாய் இந்த உலக வாழ்விற்காக வாழாமலும் ஒரு மகானும் ஞானியும் இறைவனும் ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும்? என எண்ணுகிறார்களோ அப்படி வாழ்வதற்குண்டான மனோபாவம் வளர்வதற்கு உண்டான வழிபாடும் இவை இரண்டுமே. எனவே பூர்வீக தோஷங்களை பாவங்களை குறைத்துக் கொண்டால்தான் எதிர்கால வாழ்வு செம்மையாக இருக்கும். அதற்குண்டான வழிபாட்டின் தன்மைதான் இரண்டையும் குறிக்கிறது.