ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -15

ராமர் தசரதரிடம் தந்தையே வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜ சுகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வனம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். தவசிகள் வாழும் தவ வாழ்க்கையை வாழ விரும்புகின்றேன். தாங்கள் சொல்லும் செல்வமும் சேனை பரிவாரங்களும் தவ வாழ்க்கைக்கு உபயோகப்படாது. நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் காட்டிற்கு கொண்டு சென்றால் யானையை தானாம் செய்த பிறகு அதனை கட்டும் கயிற்றின் மீது ஆசைப்படுவது போலாகும். ஆகையால் மண்வெட்டியும் ஒரு கூடை மட்டும் போதும் அதை மட்டும் கொடுங்கள் எனக்கு போதும் என்றார். கைகேயி சிறிதும் கவலைப்படாமல் ஓடிப்போய் தயாராக இருந்த மண்வெட்டியையும் கூடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். அதனை பெற்றுக்கொண்ட ராமர் தந்தையே நாங்கள் செல்கிறோம். நான் திரும்பி வரும்வரையில் தாய் கௌசலையை இங்கே விட்டு செல்கிறேன் அவர் மிகவும் துக்கத்தில் இருக்கிறாள். எனக்காகவே அவள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினார்கள். தசரதர் தேர் ஒட்டி சுமந்தனை அரைத்து மூவரையும் காட்டின் எல்லைவரை விட்டுவிட்டுவா என்று கண்ணீருடன் சொல்லி ராமர் செல்வதை காண முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டார். அரண்மனை பெண்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். தன் திட்டம் முழுமையடைந்து விட்டதாக கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள்.

ராமர் சென்றதும் தசரதர் நான் எத்தனையோ கன்றுகளை கொன்று தாய் பசுவை இம்சித்திருக்க வேண்டும். அதனாலேயே நானும் கைகேயியின் இம்சையினால் என் மகனை பிரிந்து வாடுகின்றேன் என்று சொல்லி கதறி அழுதார். சுமத்திரையிடம் விடைகொடுக்குமாறு வணங்கினார்கள். சுமத்திரை லட்சுமணனை கட்டி அணைத்து உன் அண்ணனிடம் நீ வைத்துள்ள அன்பை பார்த்து உன்னை பெற்றதன் பாக்கியத்தை அடைந்துவிட்டேன். ராமரை காப்பது உன் கடமை. உன் அண்ணன் அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனும் ஆவான். இது நம் குலத்தின் தருமம். இதனை காப்பாற்றுவாயாக போய் வா லட்சுமணா என்று சுமத்திரை மூவருக்கும் விடைகொடுத்தாள்.

மூவரும் ரதத்தில் ஏறினார்கள். சீதை ராமருடன் காட்டில் இருக்கப்போகின்றோம் என்று சிரிப்பும் சந்தோசமுமாக ஏறினாள். தேரோட்டி சுமந்திரன் ராமரை பார்த்து இப்போது முதல் பதினான்கு வருடம் ஆரம்பம் ஆகின்றது என்று சொல்லி தேரில் ஏறினான். வீதியில் காலை முதல் குதூகலத்துடன் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் இப்போது துக்கத்துடன் இருந்தார்கள். புறப்பட்ட ரதத்தை தடுத்த மக்கள் ராமரை கண்குளிர பார்த்துக்கொள்கின்றோம் சிறிது நேரம் நிறுத்திவைக்கும் படி மக்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். இங்கிருந்தால் மக்களிடம் இன்னும் துக்கம் அதிகமாகும் என்று எண்ணிய ராமர் ரதத்தை வேகமாக செலுத்த உத்தரவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ரதத்தை சுமந்திரன் அரண்மணை வாயியில் இருந்து ரதத்தை வெளியே கொண்டு வந்து வேகமாக செலுத்தினான். தசரதர் வெளியே வந்து ரதம் புறப்பட்டதில் இருந்து கண்ணை விட்டு மறையும் வரை ரதத்தை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.

கங்கை அன்னை

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் முதியவர் ஒருவர் இருந்தார். செருப்பு தைக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அவருக்கு கங்கை நீரை தொடுவதற்கு தடை. அவரால் அருகில் செல்ல முடியவில்லை. தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவார். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை முதியவரிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தார் முதியவர். அரை அணா பணத்தை தூக்கி எறிந்தார் பண்ணிதர். முதியவர் அவரை வணங்கி சுவாமி உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்கியம். உங்கள் காசு எனக்கு வேண்டாம் என்றார். நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்றார் பண்டிதர். அப்படி என்றால் இந்த ஏழைக்கு நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு இந்த பணத்தை சமர்ப்பித்து விடுங்கள் என்றார். சரி என்ற பண்டிதர் இந்த ஓரணாவை வைத்துக்கொண்டு கங்கையில் இறங்கி வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் முதியவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.

ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது. பண்டிதரே எனக்கு மிக்க மகிழ்ச்சி இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான். அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டார். முதியவரிடம் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு போய் மனைவிடம் நடந்ததை சொன்னார், கங்காதேவி தந்த வளையலை மனைவியின் கண்களாங் நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. இந்த ஒரு வளையலை வைத்துக்கொண்டு பிரயோஜனம் இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம் என்றாள். ராஜாவிடம் சென்றார் பண்டிதர். ராஜா வளையலை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.

ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார். அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ராஜாவிடம் இன்னொரு வளையளும் வேண்டுமே என்று கேட்டாள். ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். பண்டிதரை இன்னொரு வளையல் எங்கே அதனை ஏன் தரவில்லை வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடுங்கள். ராணி கேட்கிறாள் என்றார். பண்டிதர் தயங்கினார். ராஜாவுக்கு கோபம் வந்தது. இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் கங்கைக்கரையில் இருக்கும் முதியவரிடம் ஓடினான்.

முதியவர் வழக்கம்போல் கங்கைக் கரைக்கு தூரமாக நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினார். செருப்பு தைக்க தேவையான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார். தன் முன்னே பண்டிதர் ஓடிவந்து வணங்கினார். முதியவருக்கு அதிர்ச்சியுடன் சாமி நீங்க என்ன செய்றீங்க நான் தானே உங்களை எப்பொழுதும் தங்களை வணங்குவேன். நீங்கள் என்னை ஏன் வணங்குகின்றீர்கள் என்று கேட்டார். என்னை மன்னித்து விடு நான் துரோகி. கங்கா மாதா உனக்கு ஒரு பரிசு கொடுத்தாள் என்று நடந்த அனைத்தையும் சொல்லி ராஜாவிடம் இருந்து தன்னை காப்பாற்ற வழி சொல்லுமாறு கேட்டார். முதியவர் கண்ணை மூடினார். தனக்கு அருகே இருந்த செருப்பு தைக்க தேவையான தண்ணீர் பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா அவர் பிழைக்கட்டும் என்று தனது கையை அந்த தண்ணீரில் விட்டார். மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த முதியவரின் தண்ணீர் பாத்திரத்திலிருந்து தோன்றியது. பண்டிதர் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. முதியவரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தார். செய்தி அனைவருக்கும் பரவியது. ராஜாவும் அவர் மனைவியும் ஓடி வந்தார்கள். முதியவரை வணங்கி இத்தொழிலை விட்டுவிட்டு அரண்மனையில் வந்து தங்குமாறு அழைத்தார்கள். என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினார் முதியவர்.

வடக்குநாதர் கோவில்

கேரள மாநிலம் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் வடக்குநாதர் கோவில் உள்ளது. மூலவர் வடக்குநாதர். மூலவர் முழுவதும் நெய்யினால் ஆனவர். மூலவர் வடக்குநாதர் 12 அடி உயரமும் 25 அடி அகலமுடைய நெய்லிங்கமாக எப்போதும் உருகாமல் பாறை போல் இறுகி உள்ளார். எப்போதாவது நெய் உருகி வெளிப்பட்டால் உடனே காணாமல் போய்விடுகிறது. மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்து வருகின்றனர். பன்னீர் சந்தன அபிஷேகம் செய்தாலும் லிங்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. கோடையின் வெப்பமோ ஆரத்தி வெப்பமோ இந்த நெய்யை உருகி விழச்செய்யவில்லை. பூச்சிகள் மூலவரை தாக்காது. மூலவர் மீது உள்ள நெய்க்கு வாசனை கிடையாது. இந்த லிங்கத்தைப் பாதுகாக்கும் வகையில் பெரிய கவசம் சாத்தப்பட்டுள்ளது. கோவில் நான்கு புறமும் பெரிய கோபுரத்துடனான வாசல்களைக் கொண்டிருக்கிறது. வட்ட வடிவத்திலான கருவறையில் வடக்குநாதர் மேற்கு நோக்கிய நிலையில் இருக்கிறார். பின்புறம் அமைந்திருக்கும் சன்னிதியில் பார்வதிதேவி கிழக்கு நோக்கியபடி வீற்றிருக்கிறார்.

கோவில் வளாகத்தில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ராமர் சங்கரநாராயணர் கணபதி ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. இந்த ஐந்து தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக வழிபாடு நடத்தப்படுகிறது. ஆலயத்தில் சிவனின் பூதகணமான சிம்மோதரனுக்கும் கோவிலை நிறுவிய பரசுராமருக்கும் சங்கு சக்கரத்துடன் ஆதிசங்கரருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்து சிவபெருமான் கோவில்களிலும் நந்தி மூலவரை நோக்கியபடி அமர்ந்திருப்பார். திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நந்தி சிவனுக்கு எதிர்புறம் இல்லாமல் விலகி தனி மண்டபத்தில் இருக்கிறார். பிரதோ‌ஷக் காலங்களில் மட்டும் சிவபெருமான் இந்த மண்டபத்தில் எழுந்தருளி நந்தியுடன் பக்தர்களுக்கு அருளுகிறார். அமிர்தம் கிடைக்க தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பைக் கொண்டு கடைந்தார்கள். கடைந்து முடித்ததும் அந்த பாம்பு கோவில் கருவறை முன்பிருக்கும் வாசலில் மணியாக வந்து அமர்ந்துவிட்டது. இதனால் பிரதோ‌ஷக் காலங்களில் இந்த மணியைத் தலைமை அர்ச்சகர் மட்டும் அடித்து ஒலி எழுப்புவார். வேறு யாரும் தொட அனுமதியில்லை.

ஜமதக்னி முனிவர் ரேணுகாதேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் பரசுராமர். சத்ரிய குலத்தவர்கள் மீது கோபம் கொண்ட பரசுராமர் சத்ரிய குலத்தவர்கள் பலரையும் அழித்தார். அதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க நினைத்த பரசுராமர் சிவபெருமானுக்கு கோவில் நிறுவ விரும்பினார். அதற்காகக் கடல் அரசனிடம் சென்ற அவர் சிவபெருமானுக்கு கோவில் கட்ட கடல் பகுதியில் நிலத்தை உருவாக்க உதவும்படி வேண்டினார். கடல் அரசனும் அவர் வேண்டுகோளை ஏற்று பரசுராமரின் கையிலிருந்த வேள்விக்கான பொருள்கள் இருந்த பையை வீசியெறிய சொன்னார். பரசுராமரின் பையை தூக்கி எறிந்தார். கையை விழுந்த இடம் வரை கடல்நீர் பின் வாங்கிப் புதிய நிலப்பரப்பை உருவாக்கிக் கொடுத்தார் கடல் அரசர்.
புதிய நிலப்பரப்பில் ஒரு மேடான இடத்தில் சிவபெருமானுக்கு முதல் கோவில் அமைக்க விரும்பினார் பரசுராமர். அதன்படி வடக்குப் பகுதியில் இருந்த நிலத்தை சிறிய குன்று போல் உயர்த்தி கோவில் அமைக்க முடிவு செய்தார். சிவபெருமானிடம் இந்த இடத்தில் தங்கியிருந்து அதன் மூலம் இப்பகுதியை ஆசீர்வதிக்கும்படி கேட்டுக்கொண்டார் பரசுராமர். சிவன் தனது மனைவி பார்வதி அவரது மகன்களான விநாயகர் மற்றும் சுப்பிரமணியனுடன் பரசுராமரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய இக்கோவிலுக்கு வந்தார். சிவன் இப்போதிருக்கும் திருச்சூர் என்ற இடத்தில் நின்றார். பின்னர் அவரும் அவருடன் வந்தவர்களும் ஒளிமயமாகி மறைந்து விட்டனர். ஒளிமயமான இறைவனை பரசுராமர் ஒரு பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் ஒரு பிரகாசமான சிவலிங்கமாக கண்டார். சிவலிங்கமாக மறைந்திருந்த இறைவனை நெய்யால் குளிர்வித்தார். இதனால் இறைவனின் உருவம் நெய்லிங்கமாக மாறியது. 12 அடி உயரம் 25 அடி அகலம் எனும் அளவில் அமைந்த இந்த லிங்கம் முழுவதும் நெய்யால் ஆனது.

பெரிய ஆலமரத்தின் அடிவாரத்தில் பல காலங்கள் இருந்த சிவலிங்கத்தை அந்நாட்டின் அரசன் மிகவும் வசதியான இடத்திற்கு மாற்றி ஒரு கோவிலில் வைத்து வழிபட முடிவு செய்தார். தெய்வத்தை புதிய இடத்தில் மீண்டும் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டது. சிவலிங்கத்தை எடுக்க ஒரு சிரமம் இருந்தது. ஆலமரத்தின் ஒரு பெரிய பகுதியை வெட்டாமல் லிங்கத்தை அகற்ற முடியவில்லை. மரத்தின் கிளைகளை வெட்டும்போது அதன் ஒரு பகுதி சிலை மீது விழுந்து சிலை சேதமடையும் அபாயம் இருந்தது. ஆட்சியாளருக்கும் மற்றவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியாதபோது யோகதிரிப்பாடு என்பவர் லிங்கத்தை முழுவதுமாக மூடிமறைக்கும்படி லிங்கத்தின் மீது படுத்துக் கொண்டு மரத்தை வெட்டும்படி ஆட்களிடம் கேட்டுக்கொண்டார். வெட்டுதல் தொடங்கியது. அனைவரும் அதிசயிக்கும்படி மரத்தின் ஒரு துண்டு கூட லிங்கத்தின் அருகே எங்கும் விழவில்லை. சிவலிங்கம் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் நிறுவப்பட்டது, அது இப்போது வரை உள்ளது. பின்னர் சாஸ்திரங்களில் வகுக்கப்பட்ட விதிகளின்படி இந்த கோயில் கட்டப்பட்டது.

ஆதிசங்கரரின் தாய் தந்தை இக்கோவிலில் 41 நாட்கள் விரதம் இருந்து பூஜை செய்ததன் பயனாக ஆதிசங்கரர் அவதரித்தார். வடக்குநாதர் கோவில் 7ம் நூற்றாண்டு காலகட்டத்தில் பெருந்தச்சன் என்பவரது காலத்தில் கட்டுமானம் சரி செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவரது காலத்திற்குப் பின் நம்பூதிரிகளின் நிர்வாகத்தின் கீழ் வந்தது. இந்த நம்பூதிரிகளில் இருந்து ஒருவர் யோகதிரிப்பாடு எனும் பெயரில் நிர்வாகத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு நிர்வாகம் நடைபெற்றது. அதன் பிறகு கி பி 981 க்குப் பின் கொச்சியை ஆண்ட மன்னன் ராஜா சக்தன் தம்புரான் என்பவரது காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட்டுக் கோவிலைப் பொதுமக்களே நிர்வகிக்கத் தொடங்கினர். மன்னரின் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருந்த தேக்கு மரக்காட்டை அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அப்பகுதி மக்கள் அங்கிருந்த மரங்களெல்லாம் சிவபெருமானின் சடைமுடியாக இருக்கிறது அதை அழிக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்புகளை மீறி அங்கிருந்த காடு அழிக்கப்பட்டது. காடு அழிக்கப்பட்ட பின் வருடாவருடம் இந்தக் கோவிலில் நாற்பத்தியொரு நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த திருவிழாவை இன்று வரை நடத்த முடியவில்லை. மூலவருக்கு இரவு எட்டு மணிக்கு மேல் நடைபெறும் திருப்புகா வழிபாட்டிற்கு தேவலோகத்தினர் பலரும் வருகின்றனர். அவர்கள் வருகைக்கு இடையூறு எதுவும் இருக்ககூடாது என்பதற்காக இங்கு வந்து வழிபடும் பக்தர்கள் வழிபாட்டிற்கு இடையில் கோவிலுக்கு வெளியேச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இரவு வழிபாடு முடிவடைந்த பின்னரே கோவிலை விட்டு வெளியேற முடியும்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -14

ராமரும் சீதையும் லட்சுமணனும் தசரதரிடம் வீழ்ந்து வணங்கினர். ராமர் தசரதரிடம் பேச ஆரம்பித்தார். தந்தையே சீதையும் லட்சுமணனும் என்னுடன் வருகின்றார்கள். அவர்கள் என்னோடு வரும் முடிவிலிருந்து பின் வாங்க மறுக்கின்றார்கள். நாங்கள் மூவரும் வனவாசம் செல்கிறோம் எங்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார். அதற்கு தசரதர் ராமா கைகேயிக்கு கொடுத்த வரங்களால் நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன். கைகேயியினால் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். அவளால் இந்த பாவ காரியத்திற்கு நான் துணை போவது போல் ஆகிவிட்டது. நாட்டிலிருந்து உன்னை வெளியேற்ற வேண்டிய இந்த அடாத செயலை கனவிலும் நான் நினைத்துபார்க்கவில்லை. கைகேயியிடம் நான் கொடுத்த வரத்திற்கு நான் கட்டுப்பட்டாலும் நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் வாக்கை சத்தியமாக்க வேண்டும் என்று வனம் போக தீர்மானித்துவிட்டாய். நீ உன் பலத்தை பயன்படுத்தி இந்நாட்டின் அரசனாக ஆகியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டார்.

அதற்கு ராமர் இந்த நாட்டை நீங்கள் அரசராக இருந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டிய இந்த அரச பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. என் பலத்தை பயன் படுத்தி அரசபதவியை பெற்றால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சத்தியத்தை இழந்து பொய்யனாகி விடுவீர்கள். உங்கள் சத்தியத்தை காப்பாற்றுவது என் கடமை அதனை மகிழ்ச்சியுடன் செய்துமுடிப்பேன். பதினான்கு வருடம் வனவாசத்தில் இருந்து விரைவில் திரும்பிவருவேன். பரதனை விரைவில் வரவழைத்து அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை ஆசிர்வதித்து உங்களது இரண்டாவது வரத்தையும் நிறைவேற்றுங்கள் என்றார்.

ராமா உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை வைக்கின்றேன். இன்று இரவு தங்கிவிட்டு நாளை அதிகாலை இங்கிருந்து செல்வாய். உன்னை மனதார பார்த்து திருப்தி அடைய விரும்புகின்றேன் என்றார். அதற்கு ராமர் என் தாய்க்கு கொடுத்த வாக்கின்படி நான் மனதால் அரசபதவியை துறந்துவிட்டேன். என் மனம் வனத்தை பற்றி இருக்கிறது. உங்களுடைய மனதில் வருத்தமும் குறையும் வேண்டாம். ஒரு நாள் செல்வதை ஒத்திப்போட்டால் தாய்க்கு நான் கொடுத்த வாக்கை மீறுவது போலாகும். மேலும் நாளை செல்வதனால் அதிகப்படியான பயன்கள் ஏதும் ஏற்படாது. என்னை ஆசிர்வதியுங்கள் நாங்கள் செல்கின்றோம் எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். தருமத்தில் இருந்து பிறழாத உத்தமனே குலத்தின் பெருமையை பெருக்குவாய். பயம் உன்னை விட்டு விலகி நிற்கட்டும். நீ சென்றுவா என்று அனுமதி கொடுத்தார்.

தசரதன் தேரோட்டியான சுமந்தனிடம் நம்முடைய சேனேத்தலைவர்களிடம் சொல்லி சதுரங்க சேனே ஒன்றை உருவாக்கி ராமர் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிடு. மேலும் ராமன் காட்டில் சுகமாக வாழ்வதற்கு தேவையான தனம் தானியம் பணியாட்களுடன் சகல பொருட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துவிடு என்று உத்தரவிட்டார். அருகிலிருந்த கைகேயி சிரித்தாள். ராஜ்யத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் வாரி ராமருடன் கொடுத்தனுப்பி விட்டு மீதி இருப்பதை பரதனுக்கு தருவீர்களா. வரத்தை மிக அழகாக பூர்த்தி செய்கின்றீர்கள் என்றாள்.

தான் என்ற எண்ணம்

நாட்டின் எல்லையில் இருந்தது அந்தத் துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை. நாட்டின் மன்னன் அவ்வப்போது துறவியிடம் வந்து ஆசி பெற்றுச் சென்றான். ஆசிபெற வரும் போதெல்லாம் அரசன் தன்னுடைய அரண்மனையின் சிறப்பு பற்றி பெருமையாக பேசுவான். தன் அரண்மனையை பற்றி மிக பெருமையாக பேசுவார். தனது அரண்மனைக்கு வந்து சில காலம் தங்கிச் செல்லும்படியும் துறவிக்கு அழைப்பு விடுத்தான். கல்வி கேள்விகளில் சிறந்தவன் நல்லாட்சி வழங்குபவன் தரும சிந்தனை கொண்டவன் என பெயர் பெற்ற அந்த அரசனின் பேச்சில் தான் என்ற கர்வம் இருந்ததை அறிந்த துறவி கர்வத்தை அடக்க தீர்மானித்து ஒருநாள் அரண்மனைக்கு சென்றார். அங்கிருந்த காவலர்கள் அவரை அறிந்தவர்கள் என்பதால் துறவியை தடுக்கவில்லை. வணங்கி வழிவிட்டு நின்றார்கள். துறவி நேராக உள்ளே சென்றார். அந்த மாட மாளிகையில் பல நாட்கள் வாழ்ந்தவர் போல் விறுவிறுவென ஒவ்வொரு இடமாக சென்று வந்தார். அரண்மனைக்குள் பணியாற்றிய பணியாளர்கள் காவலர்கள் அதிகாரிகள் என யாரையும் துறவி கண்டு கொள்ளவில்லை. தன்போக்கில் சென்று அரசனின் அறையை அடைந்து அரசனுக்கு முன்னே போய் நின்றார். அவரைக் கண்டதும் மன்னன் மகிழ்ச்சியடைந்தான். வரவேற்று துறவியை வணங்கினான். வாருங்கள் குருவே உங்கள் வருகையால் என்னுடைய அரண்மனை புனிதம் அடைந்தது. முதலில் அமருங்கள் தங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் குருவே உடனே அதனை நிறைவேற்ற காத்திருக்கிறேன் என்றான் அரசன்.

அதற்கு துறவி இந்த விடுதியில் எனக்குத் தூங்குவதற்கு கொஞ்சம் இடம் வேண்டும் என்றார். விடுதி என்று துறவி சொன்னது அரசனுக்கு வருத்தத்தையும் கோபத்தையும் அளித்தது. இவ்வளவு பெரிய அரண்மனையை இந்தத் துறவி விடுதி என்கிறாரே என்று நினைத்தான். கோபத்தை அடக்கிக் கொண்டு குருவே இது விடுதி அல்ல என் அரண்மனை என்றான். அப்படியா சரி நான் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொல். இந்த அரண்மனை இதற்கு முன்னால் யாருக்குச் சொந்தமாக இருந்தது என்றார் துறவி. என் தந்தைக்கு என்றான் அரசன். அவர் எங்கே இப்போது இருக்கிறார் என்று கேட்டார் துறவி. உடனே மன்னன் அவர் இறந்துவிட்டார் என்றான். அவருக்கும் முன்பாக இந்த அரண்மனை யாருக்கு சொந்தமாக இருந்தது என்று கேட்டார் துறவி. என் பாட்டனாருக்கு என்றான் மன்னன். அவர் இப்போது எங்கே என்று கேட்டார் துறவி. அவரும் இறந்துவிட்டார் என்று மன்னன் தெரிவித்தான். துறவி சிறு புன்னகையுடன் அப்படியானால் உன் தந்தை பாட்டனார் இருவரும் இங்கே சில காலம் தங்கியிருக்கிறார்கள். வந்த வேலை முடிந்ததும் கிளம்பிப் போய்விட்டார்கள். அப்படியென்றால் இது விடுதிதானே நீ இதனை அரண்மனை என்கிறாய் என்றார்.

துறவியின் பதிலைக் கேட்டு அரசன் திகைத்துப் போய் நின்றான் அரசன். தான் என்ற கர்வத்தில் என்னுடைய அரண்மனை என்று சொன்னது எவ்வளவு பெரிய தாழ்வான செயல் என்று நினைத்து மனம் தெளிந்தான். துறவிக்கு நன்றி கூற அவன் முன்வந்து நிமிர்ந்து பார்த்தபோது வந்த வேலை நல்லபடியாக முடிந்த திருப்தியில் வெகுதூரம் நடந்து சென்றிருந்தார் துறவி.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -13

ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச உடைகளை களைந்து தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகளை செய்கிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான் லட்சுமணன்.

தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டிருக்கும் கைகேயியின் பிடியில் கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் கௌசலைக்கும் சுமித்ரைக்கும் பணிவிடைகள் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் இங்கிருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.

அண்ணா கைகேயி மாயையால் மயங்கி இருக்கிறாள். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு கௌசலையையும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்க முடியாதோ அது போலவே என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்கமுடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்போதே என்னை தங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்துவிட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.

ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள். ஜனகரின் வேள்விச்சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அம்பாறத்தூணிகள் சூரியனைப்போல ஒளி வீசும் வாள் ஆகியவற்றை வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கின்றோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்திருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.

பூந்தானம் நம்பூதிரி

பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பூந்தானம் நம்பூதிரி என்பவர் சிறந்த குருவாயூரப்பன் பக்தர். இவர் இந்தியாவின் கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் கீழாற்றூரில் வசித்து வந்தார். இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் சந்தனா கோபாலம் ஓதி மூலம் குருவாயூர் இறைவனைப் பாடித்துதித்தார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு வீழா ஏற்பாடு செய்து அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அனைவரும் வந்தனர். ஆனால் விழா ஆரம்பிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. துயரமடைந்த பூந்தானம் குருவாயூர் கோயிலில் தஞ்சம் அடைந்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானத்தின் மடியில் குருவாயூரப்பன் ஒரு குழந்தையாக ஒரு கணம் இருந்து ஆறுதல் படுத்தினார். சிறிய கிருஷ்ணர் நம் இதயத்தில் நடனமாடுகையில் நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா என்று கிருஷ்ணரை தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். இதனை ஞானப்பனா என்னும் நூலில் எழுதியிருக்கிறார்.

அவர் தினமும் தனது ஊரிலிருந்து காட்டு வழியே தொலைதூரம் நடந்து குருவாயூருக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசனம் செய்வார். அவ்வாறு செல்கையில் ஒரு நாள் வழியில் சில கொள்ளைக்காரர்கள் அவரைத் தடுத்துத் தாக்கினர். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயத் தொடங்கினார்கள். அவர் மனமோ தன் விரல்களில் உள்ள மோதிரத்தை அவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று பயந்தது கண்களை மூடி குருவாயூரப்பா குருவாயூரப்பா என்று உரத்துக் கூறினார். சிறிது நேரத்தில் புதியதான மலரின் மணம் காற்றில் வீசியது. கண் திறந்து பார்த்தபொழுது மாங்காட்டச்சன் என்ற திவான் குதிரை மேல் வேகமாக வாளைச் சுழற்றிக் கொண்டு வந்தார். அவரைக் கண்டதும் கொள்ளையர்கள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். மனம் நெகிழ்ந்த பூந்தானம் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்வேன் என்று கேட்டார் அவரும் உன்னுடைய கையில் இருக்கும் மோதிரத்தை எனக்குக் கொடு என்று கூறினார். மோதிரம் களவு போய்விடக் கூடாது என்று பயந்த பூந்தானம் இப்போது தயங்கி திகைத்து செய்வதறியாது அந்த மோதிரத்தை திவானுக்குப் பரிசாக அளித்தார். திவான் அவரைத் தன் குதிரையில் ஏற்றிக் கொண்டு குருவாயூர் எல்லையில் விட்டுவிட்டுச் சென்றார்.

அதே நேரம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய குருவாயூரப்பன் அர்ச்சகரே என் கையில் ஒரு மோதிரம் இருக்கும் அதைப் பூந்தானத்திடம் கொடுத்து விடுங்கள். கொள்ளையர்களிடம் இருந்து அவரைக் காப்பாற்ற மாங்காட்டச்சன் உருவில் சென்று அவரிடம் இருந்து விளையாட்டாக மோதிரத்தைப் பெற்றேன் என்று கூறினார். பூந்தானம் குருவாயூர்க் கோயிலை நெருங்கும்போது அர்ச்சகர் ஓடி வந்து பூந்தானத்தின் காலில் விழுந்தார். தன் கனவில் குருவாயூரப்பான் சொன்னதைக் கூறி மோதிரத்தை அவரிடம் கொடுத்தார். மோதிரத்தைப் பார்த்த பூந்தானத்திற்குப் புல்லரித்தது. முந்தைய இரவு மாங்காட்டச்சனிடம் கொடுத்த அதே மோதிரம்தான் அது தன்னைக் காப்பாற்ற குருவாயூரப்பனே மாங்காட்டச்சனாக வந்ததை எண்ணி ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்.

தனது இறுதிகாலம் வந்ததை உணர்ந்த அவர் தான் சொர்க்கத்திற்கு புறப்பட போவதாகவும் தன்னுடன் வர விருப்பம் உள்ளவர்கள் வரலாம் என்றும் அறிவித்தார். கிராம மக்கள் அனைவரும் மறுத்துவிட்டனர். இறுதியில் நோய்வாய்ப்பட்ட மனைவியை பராமரித்த ஒரு வேலைக்காரி மட்டுமே அவருடைய பரலோக பயணத்தில் அவருடன் சேர்ந்து கொண்டதாக அவரது புராண வரலாறு தெரிவிக்கிறது. ராகவியம், விஷ்ணுவிலாசம் சமஸ்கிருதத்தில் சீதாராகவம் மலையாளத்தில் விஷ்ணுகீதா பஞ்சதந்திரம் ஆகிய நூல்களை இயற்றியிருக்கிறார்.

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -12

ராமரின் பேச்சைக்கேட்ட சீதை பெரும் கோபத்துடன் தர்மம் அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை தருகிறது. கணவன் வேறு மனைவி வேறு என்று தங்கள் பிரித்து கூறிகின்றீர்கள். ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்றால் அப்போது ராமரின் பாதியாக இருக்கும் சீதைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதுவே தர்மம் காட்டிற்கு வந்தால் துக்கப்படுவேன் என்று தாங்கள் எண்ண வேண்டாம் வனவாசத்தை மகிழ்ச்சியுடனேயே அனுபவிப்பேன். உங்களுடன் இருக்கும் போது வனவாசம் என்பது எனக்கு விளையாட்டாகவே இருக்கும். உங்களுடன் இருந்தால் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டு பிரிந்து செல்லாதீர்கள். நீங்கள் என்னை விட்டு பிரிந்தால் மரணித்துவிடுவேன். நீங்கள் செல்லும் காட்டுப்பகுதிக்கு நான் உங்களுக்கு முன்னே சென்று கல் முள் என்று அனைத்தையும் விலக்கி நல்ல பாதையை தங்களுக்கு அமைத்து தருவேன் என்னையும் தாங்கள் அழைத்துச்செல்லுங்கள் என்றாள்.

ராமர் சீதையிடம் காட்டிற்கு நீ என்னுடன் வந்தால் கொடூரமான விலங்குகள் இருக்கும். அரண்மனையில் சுகமாக வாழ்ந்துவிட்டு காட்டில் மண் தரையில் படுக்கவேண்டி இருக்கும். என்று காட்டில் வாழ்ந்தால் வரும் பிரச்சனைகளை சொல்லி வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

சீதையின் கண்களில் நீர் பெருகியது. புலி சிங்கம் போன்ற விலங்குகள் கூட தங்களை கண்டால் தூரமாக விலகிச்செல்லும். தாங்கள் என் அருகில் இருந்தால் நீங்கள் சொல்லும் மழை புயல் காற்று வெயில் என்று அனைத்தையும் என்னால் பொருத்துக்கொள்ள முடியும். நீங்கள் இல்லாமல் இந்த அரண்மணையில் உள்ள சுகங்கள் கூட எனக்கு துக்கமாக இருக்கும். நான் ஜனகரின் மகள். என் தாயும் தந்தையும் எனக்கு கணவன் மனைவிக்கான தர்மத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கணவன் இருக்கும் இடத்திலேயே மனைவி இருக்க வேண்டும் இதுவே தர்மம். கணவன் செல்லும் பாதையை பின்பற்றி செல்ல வேண்டும் இதுவே என் தந்தை எனக்கு சொன்னது. நீங்கள் உங்கள் தந்தையின் வாக்கை நீங்கள் மீற மாட்டீர்கள். அது போல் என் தந்தை எனக்கு சொல்லிக்கொடுத்த தர்மத்தை நான் மீற மாட்டேன். மேலும் ஒரு செய்தியை சொல்கிறேன். நான் குழந்தையாக இருக்கும் காலத்தில் ஜோதிடர்களை வைத்து என் ஜாதகத்தை என் தந்தை கணித்தார். அப்போது அவர்கள் சில வருடங்கள் வனவாசத்தில் இப்பெண் இருப்பாள் என்று சொல்லியிருக்கின்றார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியாது. அதற்கான சூழ்நிலையும் ஏற்படவில்லை. இப்போது சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதனை நான் பயன் படுத்திக்கொள்கிறேன். என்னை தடுக்காதீர்கள். நானும் உங்களுடன் வருவேன் என்று தீர்க்கமாக சொன்னாள் சீதை.

சீதையின் வேண்டுதலை ராமரால் மறுக்க முடியவில்லை. உன்னை அழைத்துச்செல்கிறேன் இருவரும் செல்வோம். உன்னுடைய நகை மற்றும் உனக்கு உரிய பொருள்கள் அனைத்தையும் இல்லாதோர்க்கும் உனது பணியாட்களுக்கும் தானம் அளித்துவிட்டு சாதாராண உடைகளை அணிந்துகொள் இவை அனைத்தையும் விரைவாக செய்துவிடு நாம் விரைவில் அயோத்தியை விட்டு கானகம் செல்லவேண்டும் என்று சீதையிடம் கூறினார். சீதை மகிழ்ச்சியில் திளைத்து தனது உடைமைகளை தானம் கொடுக்க ஆரம்பித்தாள்.

தொடரும்……..

ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -11

லட்சுமணன் பேசியது கௌசலைக்கு ஆறுதலாக இருந்தது. ராமர் கௌசலையிடம் பேசினார். தாயே காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு உதவியாக தாங்கள் இருந்து தந்தையை பார்த்துக்கொள்ளுங்கள். தாங்களும் என்னுடன் வந்துவிட்டால் தந்தை மேலும் வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.

லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோவம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாக இருந்தாலும் அவராக கூறியிருந்தாலும் வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையுன் வாக்கை காப்பாற்றுவது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் இதற்கு ஈடு ஆகாது என்று கௌசலையையும் லட்சுமணனையும் சமாதானப்படுத்தினார் ராமர். கௌசலையிடம் விடைபெற வணங்கினார் ராமர். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமர் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.

சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் இப்போது ராமர் இருந்தார். ராமருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் இருக்கும் வெண்குடை சமாரம் எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தாங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. ராமர் சீதையிடம் பொருமையாக சொல்ல ஆரம்பித்தார். எனது தந்தை கைகேயிக்கு கொடுத்த வரத்தை காப்பாற்ற பதினான்கு வருடங்கள் காட்டிற்கு சென்று தவம் செய்யப்போகிறேன். பரதன் அரசனாகப்போகின்றான். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் ராமர்.