உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 20 அடி நீளத்தில் விக்கிரகமாக அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார். இவர் கிரனைட் கல்லால் செதுக்கப்ட்டுள்ளார். இக் குடைவரை கோவில் கி.பி 4 முதல் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் விஷ்ணுவின் வரலாற்றைப் பற்றி உள்ளது. இரண்டாம் தளம் 9 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 17 மீட்டர் நீளமும் உள்ள மண்டபத்தையும் தென்முனையில் 4 மீட்டர் சதுரமான சிறிய அறையையும் வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு மூலவரான அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார்.
மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. இந்த குடைவரை கோயில்களிலிருந்து தக்காணத்தை ஆண்ட கொண்டவீடு அரசர்களின் கோட்டைக்கும் மங்களகிரி மலைக்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கும் ரகசிய பாதைகள் இருந்ததற்கான சுவடுகள் தெரிகிறது. இந்த பாதைகளைப் பயன்படுத்தி அரசர்கள் எதிரிகள் அறியாவண்ணம் தமது படை வீரர்களை போர்க்களங்களுக்கு அனுப்பினார்கள். தற்போது இந்தச் சுரங்கப் பாதைகள் பாழடைந்து மூடப்பட்டுள்ளன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.