பத்மநாப முனிவர் என்பவர் தினமும் ஒரு குறிப்பிட்ட குளத்தில் குளித்து விட்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். 12 ஆண்டுகள் கடந்தன. அவரது தவத்தின் பயனாக ஒருநான் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றியது. அங்கே வெங்கடாஜலபதி காட்சியளித்தார். பத்மநாபா இந்த குளக்கரையில் தங்கியிருந்து தினமும் என்னை வழிபட்டு வா. உரிய காலத்தில் என்னை வந்து சேரும் பாக்கியம் பெறுவாய் என்று வரம் அளித்துவிட்டு மறைந்தார். ஒரு நாள் அவர் குளக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த போது மனிதர்களை பிடித்து தின்னும் ஒரு அரக்கன் அவரை பிடிக்க வந்தான். வெங்கடேச என்னைக் காப்பாற்று என்று பெருமாளை சரணடைந்தார் முனிவர். பெருமான் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்களின் தலையைப் பறித்தது. சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர் என் உயிர் காத்த சக்கரமே இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படியே அந்த குளத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர் வந்தது. திருப்பதி மலையில் இந்த தீர்த்தம் இருக்கிறது. பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே சக்கர தீர்த்தத்தில் தீர்த்தமாடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்கிறது இத்தல புராண வரலாறு.
திருமலா பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது சக்ர தீர்த்தம். பிரம்மோத்ஸவ விழாவின் போது வெங்கடேஸ்வராவின் உற்சவர் சிலை இங்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். வராஹ புராணத்தின் படி ஷேஷாசல மலைத் தொடரில் உள்ள ஏழு முக்கிய முக்தி பிரதா தீர்த்தங்களில் சக்ர தீர்த்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீர்த்தத்தின் அருகில் சிறிய சிவ லிங்கம் வினாயகர் உள்ளார்கள்.
பிரபஞ்சத்தில் உள்ள மூன்றரை கோடி புண்ணிய நீரோடைகளும் இந்நாளில் சக்கர தீர்த்தத்தில் வந்து வசிப்பதாக ஆகமங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் சூரிய மாதத்தின்படி துலா மாசத்தில் நிகழும் மார்கசிர்ஷ சுக்ல துவாதசியில் சக்ர தீர்த்த முக்கொடி என்ற திருவிழா நடைபெறுகிறது திருப்பதி கோயிலில் இருந்து பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் புனித மேளம் மற்றும் பாரம்பரிய இசை முழங்க சக்கர தீர்த்தத்தை அடைவார்கள். பின் சக்ர தீர்த்தத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுதர்ஷன சக்ரத்தாழ்வாருக்கு அபிேஷகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். ஸ்ரீவாரி ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை செய்வார்கள்.