திரேதாயுகத்தில் முரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களையும் தவம் இயற்றும் முனிவர்களையும் மிகவும் கொடுமை படுத்தி வந்துள்ளான். அவனது தொல்லைகள் தாங்க முடியாத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அரக்கனை அழிக்க தன் சுதர்சன சக்கரத்துடன் போருக்கு புறப்பட்டு சென்றார். திருமாலை எதிர்க்க வந்த அரக்கன் சுதர்சன சக்கரம் தன்னை நோக்கி வருவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டான். பின்னர் மாயா வடிவில் வந்து போரிடுவான். இப்படி மாறி மாறி ஒழிவதும் போரிடுவதுமாக இருந்த அரக்கன் பகவான் முன்பு எதிர்க்க முடியாமல் சோர்ந்து போனான்.
வத்திகிரி ஆஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அரக்கன் திருமாலை திடீரென்று தாக்க முற்பட்டான். ஆனால் அந்த நொடியில் லோக மாயன் மகாமாயன் மாயவண்ணன் என்ற பல பெயர்களைக் கொண்ட மாயக்காரன் மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு பெண் வடிவம் தோன்றி அவ்வரக்கனை கொன்றது. அந்த பெண் வடிவம் திருமாலின் மாயா சக்தியாகும். இதை கண்ட பகவான் மிகவும் மகிழ்ந்து யோகமாயாவிற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மாயாசக்திக்கு ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்ட அன்றைய நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாகும். முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்து திருமாலை துதித்து போற்றினர் கொண்டாடினர். இதனால் இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றனர்.
இந்த ஏகாதசிதான் முக்கோடி வைகுண்ட ஏகாதசி யாகும். இந்நாளில் தேவர்களுக்கும் வெற்றியும் மகிழ்வும் தந்த மகாவிஷ்ணு வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வணங்கி பூஜை செய்தால் இறைவனை அடையத் தடையாக இருக்கின்ற அனைத்து தீய அரக்கனையும் அழித்து வெற்றியை நல்குவார்.