ராமரை பற்றிய செய்தியை ஒற்றர்களிடம் நானும் கேட்டு அறிந்தேன். நீ கவலைப்பட வேண்டாம். அவர் தர்மம் அறிந்தவர். அவர் அநியாய காரியத்தில் இறங்க மாட்டார். ராமருக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னை ஏன் அவர் கொல்லப் போகிறார்? எதிரி ஒருவன் சண்டைக்கு என்னை அழைக்கும் போது நான் எப்படி செல்லாமல் சும்மா இருக்க முடியும். அதனை விட உயிரை விடுவதே மேல். உனக்காக வேண்டுமானால் சுக்ரீவனின் கர்வத்தை அடக்கி அவனை கொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறேன். அவன் போடும் கூக்குரல் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவனை அடக்கி வெற்றியுடன் திரும்பி வருகிறேன் பயப்பட வேண்டாம். மங்கள வார்த்தைகளை சொல்லி என்னை வழி அனுப்பு என்னை தடுக்காதே என்று சொல்லி கிளம்பினான் வாலி. தாரை கண்களில் கண்ணீருடன் வாலியை வலம் வந்து நடப்பது நல்லதாக நடக்கட்டும் என்ற மங்கள வார்த்தைகளை சொல்லி கவலையுடன் வழி அனுப்பினாள். வாலி சுக்ரீவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்,
ராமர் இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் வாலியை நோக்கி வேகமாக வந்தான். இருவருக்கும் இடையே சண்டை மூர்க்கமாக நடைபெற்றது. சிறிது நேரத்தில் வாலியின் பலம் அதிகரித்தது. சுக்ரீவனின் பலம் குறைய ஆரம்பித்தது. இதனை கண்ட ராமர் இனியும் தாமதித்தால் சுக்ரீவன் தாங்க மாட்டான் என்று எண்ணி தன் அம்பை வாலிக்கு குறி வைத்து விடுத்தார். அம்பு ஆச்சா மரத்தை துளைத்தது போல் வாலியின் வஜ்ரம் போன்ற உடலை துளைத்தது. பட்ட மரம் வீழ்வது போல் வாலி கீழே விழுந்தான். தன் மீது அம்பு ஏய்தது யார் என்று நான்கு பக்கமும் தேடினான் வாலி. அப்போது ராமர் லட்சுமணரன் இருவரும் வாலியின் அருகில் வந்தனர். தன் மீது ராமர் தான் அம்பு ஏய்திருக்கிறார் என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். உத்தம குலத்தில் தசரதரின் புத்திரனாக பிறந்த உனது நற்குணங்களும் ஒழுக்கமும் உலகம் அறிந்தது. நல்ல அரச குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு பாவத்தை செய்து அரச பதவிக்கு தக்தியானவன் அல்ல என்று காட்டிவிட்டாய். நீ முறை தவறி என்னைக் கொன்று பெரும் பாவத்தை செய்து விட்டாய். தர்மத்தை கடைபிடிக்கும் நீ ஏன் இப்படி செய்தாய். உன்னிடமா நான் சண்டையிட்டுக் கொண்டிருந்தேன். நான் மற்றொருவனுடன் மனம் ஒன்றி சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தி விட்டாய். என் முன்பு நின்று என்னுடன் நீ சண்டையிட்டிருந்தால் இந்நேரம் என்னால் கொல்லப்பட்டிருப்பாய். நான் தனிப்பட்ட முறையில் உனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை. உன்னுடைய நாட்டிற்கோ நகரத்திற்கோ நான் எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது என்னைக் கொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று கடுமையான வார்த்தைகளால் ராமரிடம் பேசினான் வாலி.
ராமர் வாலியிடம் பதில் சொல்ல ஆரம்பித்தார். மலைகள் காடுகள் நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு தவறு செய்யும் எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரனான எனக்கு மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் உண்டு. காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக உனது இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும் உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள் மருமகள் சகோதரி சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லை என்றால் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும் எனவே உன்னை கொன்றேன். ஆனால் ஏன் மறைந்திருந்து கொன்றேன் என்பதற்கான காரணத்தை சொல்கின்றேன் கேட்டுக்கொள் என்றார் ராமர்.