சந்தான கோபாலகிருஷ்ணன்

இராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய ஆதி ஜகந்நாதர் கோவிலில் உள்ள சந்தான கோபாலகிருஷ்ணன் சந்தனா என்ற சொல்லுக்கு குழந்தை என்று பொருள். குழந்தைகளை விரும்பும் தம்பதிகளுக்கு அருள் பாலிக்கிறார். இடம் திருப்புல்லாணி கோவில், ராமநாதபுரம் மாவட்டம்

ஹரிஹரன் சங்கரநாராயணன்

ஹரி என்றால் திருமால் ஹரன் என்றால் சிவன். சிவனும் விஷ்ணுவும் வேறு வேறு அல்ல என்பதை குறிக்கும் சங்கர தாராயாண சொரூபம். பாதி திருமால் என்றழைக்கப்படும் விஷ்ணு. பாதி சிவனும் ஆக ஒரே உருவத்தில் ஒன்றிணைந்தத் தோற்றம் ஹரிஹரன் ஆகும். இடம் குன்றக்குடி முதல் குடைவரை கோவில் சிவகங்கை மாவட்டம்.

வராஹ அவதாரம்

விஷ்ணுவின் வராஹ அவதார சிற்பம் விதிஷாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 11 மற்றும் 12 நூற்றாண்டு காலச் சிற்பம். இப்போது குவாலியரின் குஜாரி மஹாலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அரண்மனை தோமர் ராஜ்புத் ஆட்சியாளர் மான் சிங் தோமர் தனது மனைவி மிருக்னயனிக்காகக் கட்டப்பட்டது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

வீர சுதர்சன ஆஞ்சநேயர்

கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ளது ஆதனூர். இங்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்ய தேசத்தில் 11 ஆவதாக இருக்கும் ஆண்டளக்கும் ஐயன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்குள் 20 அடி நீளம் 10 அடி அகலம் கொண்ட சிறிய மண்டபத்தில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் சனனதி உள்ளது. மண்டபத்திற்கு சற்று வெளியே ஸ்ரீராமரின் பாதம் பதித்த ஒரு கல் உள்ளது. கருவறையில் வீர சுதர்சன ஆஞ்சநேயர் ஏழடி உயரத்தில் கிழக்கு நோக்கியவாறு வடக்கு நோக்கி நடக்கும் கோலத்தில் காட்சி கொடுகிறார். ஆஞ்சநேயரின் வால் தலைக்கு மேல் சுருள் வடிவில் உயர்த்தி காணப்படுகிறது. வால் சுருளின் மையத்தில் பன்னிரண்டு இதழ்கள் கொண்ட சுதர்சன சக்கரம் அமைந்திருக்கின்றது. அவரது தலையின் மேல் நேர்த்தியாகக் கட்டப்பட்ட கேசத்தின் உச்சியில் ரக்கொடி எனப்படும் ஒரு ஆபரணத்தை அணிந்திருக்கிறார். இரு காதுகளிலும் தோள்களைத் தொடும் அளவு நீளமான குண்டலங்களை தரித்திருக்கிறார். வலது கையை உயர்த்தி அபய முத்திரையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள் தனிச்சிறப்பு மிக்கது நரசிம்ம அவதாரம். இதர அவதாரங்கள் எல்லாம் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க எடுக்கப்பட்டவை. நரசிம்மம் மட்டுமே பக்தனுக்காகவே எடுக்கப்பட்டது. கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண காசியப முனிவர் நாரதர் வருணன் சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டார்கள். இதற்காக அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடிப்பின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர். அந்த தவத்தில் மகிழ்ந்த மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும் தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். திருமால் இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இத்தலம் சுமார் 1100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்கும் என்றும் பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர் பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்த சொரூபமாக மாறி விட்டார் என்றும் வரலாற்று செய்தி இருக்கிறது. இடம் தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் உள்ள கீழப்பாவூர் உள்ளது.

கூர்ம அவதாரம்

ராஜஸ்தான் மாநிலம் பூந்தி என்னும் ஊரிலுள்ள ராணிஜி கி பௌரி கிணற்றில் இறங்குவதற்கு மேலே உள்ள சுவரில் விஷ்ணு பகவானின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதார சிற்பம் உள்ளது.