சிருங்கார நரசிம்மர் செஞ்சு லட்சுமி

அஹோபிலம் பகுதியில் பல நூற்றாண்டுகளாக வாழும் வனவாசி மக்கள் சமுதாயத்தினர் செஞ்சுக்கள் என்று அழைக்கப் படுகின்றனர். உலக நன்மைக்காக செஞ்சுக்களின் குடியில் பிறந்த லட்சுமியை நரசிம்மர் இங்கு வந்து திருமணம் புரிந்ததாக தல புராணம் கூறுகிறது. செஞ்சுலட்சுமி என்ற திருநாமத்துடன் நரசிம்மரின் நாயகியாக அருள்பாலிக்கிறாள். இடம் அஹோபிலம்

அனுமன் மேல் ஸ்ரீராமன்

அனுமனின் மேல் அமர்ந்திருக்கும் கம்பீர தோற்றத்தில் ராமர். ஸ்ரீராமரை சுமந்திருப்பதால் பணிவான பெருமிதத்துடன் அனுமன். இடம்: ஸ்ரீசௌந்திரராஜபெருமாள் கோவில் தாடிக்கொம்பு. திண்டுக்கல் மாவட்டம்.

கூர்ம அவதாரம்

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்க விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்து கடலின் அடியில் அமர்ந்து கொள்ள மந்தார மலையை மத்தாகக் கொண்டும் வாசுகி எனும் நாகத்தை கயிறாகக் கொண்டும் தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடையும் அற்புதமான காட்சி. இடம்: ஹட்கேஷ்வர் மகாதேவ் கோவில். வாட்நகர் குஜராத்.

அமர்ந்த நிலையில் பரமபதநாதர்

ஆதிசேஷன் மேல் அமர்ந்தவாறு பச்சைக்கல்லால் ஆன பெருமாள் பரமபதநாதர் திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இடம்: கரிவரதர் பெருமாள். கரிய மாணிக்க பெருமாள் கோவில் பனம்பாக்கம் கடம்பத்தூர் செஞ்சி.

வாசுகி பாம்பின் மத்தியில் பால கிருஷ்ணன்

இந்த பாம்பு 1800 ஆண்டுகள் பழமையான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய தூணில் செதுக்கப்பட்டுள்ளது. முப்பரிமாண முறையில் இச்சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மத்தியில் மிக சிறு உருவத்தில் பால கிருஷ்ணனை படுத்திருக்கிறார். இடம்: ஜம்புகேஸ்வரர் கோவில். திருவானைக்காவல் திருச்சி.

போகாசன மூர்த்தி

விஷ்ணு ஐந்து தலை அனந்தசேஷ நாகத்தின் மேல் மகாராஜ லீலாசனத்தில் அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்துக் குடையமைத்துள்ளது. விஷ்ணு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மேல் இடக்கை சக்கரத்தையும் மேல் வலக்கை சங்கையும் ஏந்தியுள்ளன. கீழ் இடக்கை இனம் காண முடியாத ஒரு பொருளைப் பற்றியுள்ளது. கீழ் வலக்கை தொடையில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் இருபுறமும் இரண்டு நாகினிகள் ஒயிலாக நின்றவாறு காட்சி தருகிறார்கள். சிற்பத்தின் இடது மூலையில் கருடன் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். பூமாதேவி விஷ்ணுவின் இடது புறத்தில் வலது காலை மடக்கி அமர்ந்த நிலையில் நாகத்தின் மீது சாய்ந்தவாறு காட்சி தருகிறார். இடம்: பாதாமி குடைவரை கோவில். குகை எண் 3.

உக்ரநரசிம்மர்

இந்தத் தூணில் இருக்கிறானா உன் நாராயணன்? என்று இரணியன் தனது கதையால் தூணை அடித்த உடனே தூணைப் பிளந்து கொண்டு வந்த நாராயணனின் அவதாரம் உக்ரநரசிம்மர். இடம் ஸ்ரீபிரஹலாதன் கோவில் அஹோபிலம்.