சுலோகம் -133

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-14

உயிரினங்கள் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவு மழையில் இருந்து உண்டாகிறது. மழை வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வி கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சாப்பிடும் உணவானது இரத்தமாக மாறி இரத்தம் ஆணுக்கு சுக்கிலமாகவும் பெண்ணுக்கு திரோணிதமாகவும் மாறும். இரு உயிரினமும் இச்சையினால் ஒன்று சேரும் போது புதிய உயிரினங்களின் உடல் உருவாகிறது. ஆகவே உயிரினங்களின் உடல் அனைத்தும் உணவில் இருந்து உண்டாகிறது. உணவானது மழையில் இருந்து உண்டாகிறது. மழையானது வேள்வியில் இருந்து உண்டாகிறது. வேள்வியானது உயிர்கள் இயற்றுகின்ற கர்மங்களில் இருந்து உண்டாகிறது.

சுலோகம் -132

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-13

வேள்வியில் மீதமான எஞ்சிய உணவை உண்கின்ற சான்றோர்கள் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஆனால் எந்தப் பாவிகள் தம் உடலைப் பேணுவதற்காகவே உணவை சமைக்கிறார்களோ அவர்கள் பாவத்தை உண்கிறார்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து தன்னலம் கருதாமல் கடமை ஆற்றும் ஒழுக்கங்களில் சிறந்த அறிவார்ந்தவன் இறைவனுக்காக என்றே சமைத்து அதனை இறைவனுக்கு சமர்ப்பித்து விட்டு அதனை இறைவனின் பிரசாதமாக உண்பவன் தனது எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபடுகிறான். ஆனால் ஐம்புலன்களின் ஆசை வழியாக சென்று பார்ப்பது நுகர்வது கேட்பது ருசிப்பது உணர்வது ஆகிய ஏதேனும் ஒன்றினால் ஒரு உணவை சாப்பிட ஆசைப்பட்டோ அல்லது தனது உடல் அழகாக வேண்டும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசையின் வழியாக சென்று உணவை சமைத்து உண்கிறார்கள் பாவத்தை உண்பவர்கள் ஆகிறார்கள் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சமைக்கும் போது ஐந்து வகையான கருவிகளால் பாவம் ஏற்படுவதாக ஆதிசங்கரர் தனது உரையில் கூறிப்பிட்டுள்ளார். அவை 1. அடுப்பு 2. நீர்த்தொட்டி 3. வெட்டும் கருவிகள் 4. அரைக்கும் கருவிகள் மற்றும் துடப்பம். இந்த கருவிகளை உபயோகித்து சமைக்கும் போது நம்மை அறிந்தோ அறியாமலோ கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் இறந்து அதனால் பாவம் சேர்கிறது.

சுலோகம் -131

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-12

வேள்வியினை ஏற்றுக் கொண்ட தேவதைகள் உங்களுக்கு கேட்காமலேயே விரும்பிய போகங்களை நிச்சயமாக கொடுப்பார்கள். இவ்விதம் அவர்களால் கொடுக்கப்பட்ட போகங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யாமல் எவனொருவன் அனுபவிக்கிறானோ அவன் திருடன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

செய்யும் செயல்கள் அனைத்தையும் இறை செயல்களாக எண்ணி செய்து கொண்டிருக்கும் வேள்விகளை ஏற்றுக் கொண்ட இஷ்ட தெய்வம் இந்த உலகத்தில் அனுபவிக்க தேவையான போகங்களான பொன் பொருள் வேலை குடும்பம் மகிழ்ச்சி என்று அனைத்தையும் கேட்காமலேயே வழங்குவார்கள். இந்த போகங்களை அனுபவிப்பவர்கள் இதுவும் இறை செயல் என்று எண்ணாமல் தன்னால் வந்தது என்ற எண்ணத்தில் அனுபவிப்பவன் திருடன் ஆவான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -130

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-11

இந்த வேள்வியினால் அந்த தேவர்களை ஆராதிக்கக் கடவீர்கள். அந்த தேவர்கள் உங்களை கருதக் கடவார்கள். இவ்வாறு பரஸ்பரம் பாவனை செய்வதினால் நீங்கள் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

சுலோகம் -129 இல் உள்ளபடி செய்கின்ற செயல்கள் அனைத்தையும் பரம் பொருளான இறைவனுக்கு அல்லது உங்கள் விருப்ப தெய்வத்திற்கோ அர்பணித்து அந்த செயலின் விளையும் ஏற்படும் நன்மை தீமைகளை அனைத்தையும் இறை செயலாக எண்ணிக் கொண்டு இருந்தால் இதுவே ஒரு வேள்வியாகும். இதன் வழியாகவே இறைவனை (இஷ்ட தெய்வம்) நீங்கள் ஆராதனை செய்தவர்கள் ஆவீர்கள். உங்களது ஆராதனைகளை பரம் பொருளான இறைவன் அல்லது உங்களது இஷ்ட தெய்வம் உங்களது ஆராதனைகளை ஏற்றுக் கொண்டு நன்மைகளை அளிப்பார்கள். இந்த முறைப்படி வாழ்க்கை முழுவதும் வாழ்ந்தால் உயர்ந்த நலத்தை அடைவது மட்டுமின்றி மோட்சத்தையும் அடையலாம் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -129

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-10

கல்பத்தின் ஆரம்பத்தில் பிரஜைகளின் படைப்பு தலைவரான பிரம்ம தேவர் யாகங்களுடன் மக்களை படைத்து விட்டுக் கூறினார். நீங்கள் இந்த வேள்வியின் மூலம் பல்கிப் பெருகுங்கள். இந்த வேள்வி உங்களுக்கு விரும்பிய போகத்தைத் தருவதாக ஆகட்டும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தை படைத்த பிரம்ப தேவர் உயிர்களை படைக்கும் போதே அந்த உயிர்களின் அசைகளுக்கு ஏற்ப அவர்கள் செய்ய வேண்டிய செயல்களையும் கடமைகளையும் படைத்தார். இந்த செயல்களை உயிர்கள் செய்யும் போது நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் அனைத்தும் இறைவன் செயல் என்று இறைவனுக்கு அற்பணித்து செய்வதன் மூலமாக மேன்மை அடைவீர்கள். இவ்வுலகிலும் நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்களுக்கு உங்களுக்கு வந்து சேரும் என்று பிரம்ம தேவர் கூறியுள்ளார் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -128

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-9

யாகம் போன்ற கர்மங்களை தவிர மற்ற கர்மங்கள் செய்வதனால் மூலமாக இந்த மனத சமுதாயம் கர்மங்களால் பந்தப்படுகிறது. ஆகையால் அர்ஜூனா பற்று இல்லாமல் யாகம் செய்வது போல பற்று இல்லாமல் இந்த கடமையை செய்வாயாக.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பற்றில்லாமல் இறைவனுக்காக மட்டுமே என்ற எண்ணத்தில் செயல்களை செய்து அதனை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்வது யாகம் எனப்படும். இந்த யாகத்தை செய்வதினால் உலகத்துடன் பந்தங்கள் ஏற்படுவதில்லை. இறைவனுக்காக மட்டுமே என்று செய்யாத எந்த செயலும் உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. இதன் விளைவாக நல் கர்மாவோ தீய கர்மாவோ ஏற்படுகிறது. அது மேலும் பிறவிகளை உண்டாக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே செய்யும் செயல்களை யாகம் செய்வது போல பற்றில்லாமல் இறைவனுக்காக என்ற எண்ணத்தில் செய்வாயாக என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -127

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-8

உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை செய்வாயாக. ஏனெனில் கர்மங்கள் செய்யாமல் இருப்பதை விட கர்மங்களை செய்வது சிறந்தது. மேலும் கர்மம் செய்யாமல் இருப்பதால் உனக்கு உடலை பராமரிப்பதும் இயலாத செயலாகி விடும்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உனக்கு விதிக்கப்பட்ட விதியின் படி உனது தாய் தந்தை குழந்தைகளை பார்த்துக் கொள்வது முதல் உனக்கு உண்டான தொழிலை அல்லது உனக்கு விருப்பமான தொழிலை நீ செய்தே ஆக வேண்டும். ஏனெனில் நான் ஒன்றும் செய்ய மாட்டேன் என்று சும்மா இருப்பதினால் உனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களை நீ செய்யாத காரணத்தினால் உனக்கு பாவம் வந்து சேரும். மேலும் உன்னை சுற்றி இருப்பவர்கள் எதற்கும் நீ உபயோகமில்லை என்று உன்னை தூற்றி தவறாக பேசுவார்கள். ஆகவே சும்மா இருப்பதை விட உனக்கு ஏற்ற தொழிலை நீ செய்து கொண்டு உனது குடும்பத்தை பார்த்துக் கொள்வது சிறந்தது. எதுவும் செய்யாமல் சும்மா இருப்பதினால் உடலும் உனக்கு ஒத்துழைக்காமல் கெட்டு விடும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -126

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-7

அர்ஜூனா எவனொருவன் தன் இந்திரியங்களை வசப்படுத்திப் பற்றில்லாதவனாக இருந்து கொண்டு தன் கர்மேந்திரியங்களால் கர்ம யோகத்தை கடைபிடிக்கிறானோ அவனே சிறந்தவன்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

அர்ஜூனா எவன் ஒருவன் தன்னுடைய பார்த்தல் பேசுதல் காணுதல் நுகர்தல் கேட்டல் ஆகியவற்றால் ஏற்படும் ஆசைகளின் வழியில் செல்லாமல் அதனை அடக்கி வசப்படுத்தி எதன் மீதும் பற்றில்லாமல் இருந்து கொண்டு வாக்கு கைகள் கால்கள் உடல் கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்து கர்மேந்திரியங்களையும் கர்ம யோகத்தினால் (நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல்) செயல்படுத்துகிறானோ அவனே சிறந்தவனாக இருக்கிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -125

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-6

ஒரு மனிதன் தன்னுடைய கர்ம இந்திரியங்களை வெளித் தோற்றத்தில் அடக்கி வைத்திருப்பது போல் இருந்து கொண்டு மனதினால் அந்த புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவன் பொய்யானவன் ஆவான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உடலின் செயல்களான பார்ப்பது கேட்பது உணர்வது பேசுவது நுகர்வது நடப்பது கைகளால் செய்யபடுபவை போன்ற செயல்களை வெளிப்புற தோற்றத்தில் செயல் படுத்தாமல் இருந்து விட்டு ஆனால் அந்த புலன்களினால் ஏற்படும் இன்பங்களை நினைத்துக் கொண்டே மனதை அடக்கி விட்டேன். அமைதி அடைந்து விட்டேன். ஞானத்தை பெற்று விட்டேன் என்று சொல்பவனின் செயல் ஒன்றும் எண்ணம் வேறுமாக இருக்கிறது. ஆகையால் இவன் பொய்யானவன் ஆவான். மேலும் பாவங்களை செய்தவன் ஆகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -124

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-5

எந்த மனிதனும் எக்காலத்திலும் ஒரு கணம் கூட செயல் புரியாமல் இருப்பதில்லை. ஏனெனில் இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் தொழில் புரிய வைக்கின்றன.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகில் பிறந்தவர்கள் எழுவது உட்காருவது நடப்பது உண்பது தூங்குவது விழிப்பது நினைப்பது சிந்திப்பது என்று எதேனும் ஒரு செயலை செய்து கொண்டே இருப்பார்கள். ஏனெனில் அனைத்து உயிர்களும் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் இயற்கையாகவே ஏதேனும் செயலை மனிதனை செய்ய தூண்டிக் கொண்டே இருக்கும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

ஆனால் இது அஞ்ஞானிகளுக்கு மட்டுமே பொருந்தும். இறைவனை உணர்ந்த ஞானிகளுக்கு பொருந்தாது. இறைவனை உணர்ந்த ஞானிகள் கர்ம யோகத்தின் வழி செல்லாமல் ஞான யோகத்தின் வழியாக செல்வார்கள். இவர்கள் சத்வ ரஜோ தாமஸ குணங்களால் மனம் பாதிக்கப்படாமல் உறுதியான அசையாத மனதை உடையவர்களாக இருப்பார்கள்.

  1. சத்வ குணம் – சாத்வீகம்

சத்வ குண இயல்புகள் – நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம். மன அடக்கம். புலன் அடக்கம். துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை). விவேகம். வைராக்கியம். தவம். வாய்மை. கருணை. மகிழ்ச்சி. நம்பிக்கை பாவம் செய்வதில் கூச்சப்படுதல். தானம் பணிவு மற்றும் எளிமை.

சத்வ குண பலன்கள்

சத்வ குணத்திலிருந்து தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது. பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத் தன்மை பெற்று விழிப்பு நிலையில் மேலுலகங்களை அடைகிறான்.

2. ரஜோ குணம் – இராஜசம்

ரஜோ குண இயல்புகள் – ஊக்கம் ஞானம் வீரம் தருமம் தானம் கல்வி ஆசை முயற்சி இறுமாப்பு வேட்கை திமிர் தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது வேற்றுமை எண்ணம் புலனின்பப் பற்று சண்டைகளில் உற்சாகம் தன் புகழில் ஆசை மற்றவர்களை எள்ளி நகையாடுவது பராக்கிரமம் பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல். பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.

ரஜோ குண பலன்கள்

ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும் செயல் புரிவதில் ஆர்வமும் இன்பப் பற்றும் இறப்பிற்குப் பின் மனித உடலையும் அடைகிறான்.

3. தமோ குணம் – தாமசம்

தமோ குண இயல்புகள் – காமம் வெகுளி மயக்கம் கலக்கம் கோபம் பேராசை பொய் பேசுதல் பிறரை இம்சை செய்தல் யாசித்தல் வெளிவேசம் சிரமம் கலகம் வருத்தம் மோகம் கவலை தாழ்மை உறக்கம் அச்சம் சோம்பல் காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும் பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.

தமோ குண பலன்கள்

தமோ குணத்திலிருந்து சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும் மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்க நிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு மரம் செடி கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.