சுலோகம் -123

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-4

கர்மங்கள் செய்ய ஆரம்பிக்காமல் இருப்பதாலேயே மனிதன் செயலற்ற நிலையை அடைவதில்லை. கர்மங்களை செய்யாமல் துறப்பதாலேயே சித்தியை அதாவது சாங்கிய யோகத்தை அடைவதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

கர்மங்கள் செய்தால்தானே பாவம் அல்லது புண்ணியம் வருகிறது. அதனை செய்யாமல் இருந்தால் எதுவுமே வராது அனைத்தையும் துறந்து அமைதியை அடைந்து ஞானத்தை பெற்று இறைவனை அடைந்து விடலாம் என்ற எண்ணத்தில் கர்மங்களை செய்ய ஆரம்பிக்காமல் இருந்தால் அமைதியையும் பெற முடியாது. இவர்கள் ஞான யோகத்தின் வழியாக இறைவனையும் அடைய முடியாது. ஏனெனில் இதனை செய்தால் இது கிடைக்கும் இதனை விட்டால் இது கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்புடன் கர்மங்களை துறப்பதினால் பலன் இல்லை என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -122

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-3

பாவமற்ற அர்ஜூனா இந்த உலகில் இரண்டு வகைகள் கொண்ட நிஷ்டைகள் (வழி முறைகள்) முன்பு என்னால் கூறப்பட்டது. இவற்றில் உலக விஷயங்களில் ஈடுபடாமல் ஞானத்தை பிரதானமாக கொண்டவர்களுக்கு சாங்கிய யோகமும் (ஞானயோகம்) உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு கர்ம யோகமும் அமைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகம் படைக்கப்பட்ட பின் படைக்கப்பட்ட உயிர்கள் அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பலவிதமான தன்மைகளுடன் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப மோட்சத்தை அடைய என்னால் இரண்டு வழி முறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஞான யோகம். இந்த உலக விஷயங்களான பந்தம் பாசம் உறவு செல்வம் என்று எதிலும் ஈடுபடாமல் தான் யார் என்று ஆத்ம விசாரணை செய்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து மோட்சம் அடைபவர்கள். இவர்கள் ஞான யோகத்தின் வழி செல்பவர்கள். இரண்டு கர்ம யோகம். ஆசைகளின் விளைவாக உலக பற்றுகளில் மாட்டிக் கொண்டு புலன்களின் வழியாகச் சென்று உலக விஷயங்களில் ஈடுபட்டு செல்வார்கள். ஆசைகளினால் தனது புலன்களின் வழியாக அவர்கள் சென்றாலும் அதனை பற்றில்லாமல் செல்ல வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டது கர்ம யோகம் ஆகும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

அர்ஜூனனை ஏன் பாவமற்ற அர்ஜூனா என்று கிருஷ்ணர் அழைக்கிறார்?

பாவம் உள்ளவன் இறைவனை அடைய இரண்டில் எந்த வழிமுறையிலும் செல்ல தகுதி அற்றவன் ஆகிறான். அர்ஜூனன் பாவமற்றவன் என்று சொல்வதின் வழியாக நான் செய்கிறேன் என்ற பற்றில்லாமல் கர்ம யோகத்தின் படி யுத்தம் செய்து கர்ம யோகத்தை கடைபிடித்து இறைவனை அடைய தகுதி உடையவன் என்று அர்ஜூனன் புரிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கிறார்.

சுலோகம் -121

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-2

குழப்பமான பேச்சினால் என் புத்தியை தடுமாறச் செய்கிறாய். ஆகையால் எனக்கு நன்மையானது எதுவோ அந்த ஒன்றை தீர்மானமாகச் சொல்லுங்கள்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ என்னிடம் தெளிவாக அறிவுரைகள் சொன்னாலும் அனைத்தையும் கேட்ட என்னுடைய கூர்மையில்லாத புத்தி குழப்பம் அடைந்து உண்மையை அறிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறது. உன்னுடைய அறிவுரையின் படி ஞானம் கர்மம் இரண்டும் ஓரே நேரத்தில் ஒரு மனிதனால் பின்பற்ற இயலாது. இரண்டில் ஒன்றை மட்டுமே கடைபிடிக்க முடியும் என்றால் நான் எதனை கடைபிடித்தால் மோட்சம் பெறுவேன். எனக்கு சரியான வழியைச் சொல்லுங்கள் என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேட்கிறான்.

சுலோகம் -120

பகவத் கீதை 3. கர்ம யோகம் முன்னுரை

சாங்கிய யோகத்தில் கர்மங்களை ஒரு கடமையாகவே செய்ய வேண்டும் என்றும் ஐம்புலன்களையும் அடக்கினால் மன உறுதி பெற்று யோக நிலையில் பரமானந்த நிலையை பெறலாம் என்றும் கிருஷ்ணர் கூறினார். ஆனால் இதன் வழியாக மோட்சத்தை அடையலாம் என்று கிருஷ்ணர் எங்கும் சொல்லவில்லை. அப்படி என்றால் அனைத்தையும் துறந்த ஞானிகளுக்கு மட்டுமே மோட்சம் கிடைக்குமா? குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மோட்சம் கிடைக்காதா? என்று அர்ஜூனனுக்கு சிறிது குழப்பம் உண்டானது. ஆகையால் கர்ம யோகத்தைப் பற்றி அர்ஜூனன் கேட்கும் கேள்விகளுக்கு கிருஷ்ணர் பதில் சொல்கிறார்.

இதில் விதிக்கப்பட்ட கர்மங்களை எப்படி செய்ய வேண்டும்? ஏன் செய்ய வேண்டும்? செய்தால் என்ன நன்மை? செய்யா விட்டால் என்ன தீமை? கர்மம் எவ்வாறு பந்தத்தை ஏற்படுத்தும்? அது எப்படி முக்தியை அளிக்கும்? போன்ற பல கேள்விகளுக்கும் கர்ம யோகம் பற்றிய பல கேள்விகளுக்கும் இந்த அத்தியாயத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் சொல்லப்படுகிறது.

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-1

சுலோகம் -120

ஜனார்த்தனா உனது கருத்தின்படி கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது என்றாகிறது. இவ்வாறு இருக்கும் போது இத்தகைய கொடிய யுத்ததில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்?

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இவ்வளவு நேரம் நீ எனக்கு உபதேசித்ததை சிந்தித்துப் பார்த்தால் உலகப் பற்றுகளில் இருந்து ஐம் புலன்களையும் விலக்கி ஐம்புலன்களையும் அடக்கி மனதை உறுதியுடன் வைத்திருந்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை பெற்று முக்தி பெறலாம் என்று சொல்கிறாய். அப்படி என்றால் நான் முக்தி அடையவதற்கு நீ ஞானம் பெறுவதற்கான வழியை தானே உபதேசிக்க வேண்டும் அதை விட்டு விட்டு இந்த கொடுமையான யுத்தத்தில் ஈடுபடுமாறு என்னை ஏன் கட்டாயப் படுத்துகிறாய்? என்று அர்ஜூனன் கிருஷ்ணரிடம் கேள்வி கேட்கிறான்.

சுலோகம் -119

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-72

அர்ஜூனா இது தான் பிரம்மத்தை அடைந்தவனின் நிலை. இதை அடைந்த பின் யோகி ஒரு போதும் மோகமடைவதில்லை. மேலும் உயிர் பிரியும் நேரத்திலும் இந்த பிரம்ம நிலையிலேயே நிலை பெற்று பிரம்மானந்ததை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மன உறுதியுடையவன் எப்படி இருப்பான் என்று மேலே சொல்லப்பட்ட சுலோகங்களின் படி இருப்பவன் தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து பிரம்ம நிலையை அடைந்து விடுவான். இந்த நிலையை அடைந்தபின் அவனது மனம் ஒரு போதும் கலக்கமடையாமல் எதன் மீதும் ஈர்ப்பு ஏற்படாமல் உறுதியுடனே இருக்கும். அவனது உயிர் பிரியும் நேரத்தில் கூட இந்த உலகத்தை விட்டு செல்கிறோமே என்ற எண்ணமோ எங்கு செல்வோம் என்ற பயமோ இல்லாமல் தனது உடலின் மீதும் பற்று இல்லாமல் பரமானந்தத்தில் இருக்கும் நிலையை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -118

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-71

எந்த மனிதன் அனைத்து விருப்பங்களையும் துறந்து விட்டு மமதை இல்லாதவனாக அகங்காரமற்றவனாக சிறிதளவு ஆசையும் இல்லாதவனாக இருக்கிறானோ அவனே அமைதியை அடைகிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகத்தில் உள்ள அனைத்து போகங்களையும் துறந்து விட்டு நான் எனது என்ற அகங்காரம் ஆணவம் இல்லாமல் சிறிதளவும் ஆசை இல்லாமல் இருக்கும் மனிதன் அமைதியை அடைகிறான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -117

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-70

பல நதிகள் கடலில் வந்து கலந்த போதிலும் அந்த கடல் நீரானது எந்த விதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே உள்ளது. அது போல உலகத்திலுள்ள போகங்கள் அனைத்தும் தன்னுடைய தன்மைக்கு ஏற்றார் போல புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனின் மனமானது அமைதியுடன் இருப்பதில்லை.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

ஒவ்வொரு நதியும் அது ஓடி வரும் வழியில் இருக்கும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப மாசு அடைந்து நிறம் மாறி கடலில் கலக்கிறது. ஆனாலும் கடல் நீரானது தனது தன்மையை மாற்றிக் கொள்ளாமல் தனது தன்மையிலேயே இருக்கிறது. அது போல உலகத்தில் உள்ள போகங்கள் அனைத்தும் அதனுடைய தன்மைக்கு ஏற்ப ஆசைகளை கொடுத்து மாயை ஏற்படுத்தி புலன்களைத் தன் வசப்படுத்தியவனின் மனதில் வந்து சேர்ந்தாலும் அவனது மனமானது அமைதி என்ற தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் அமைதியுடன் இருக்கிறது. ஆனால் போகங்களை விரும்புபவனது மனமானது ஆசைகளின் வழியே சென்று அமைதி இல்லாமல் இருக்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -116

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-69

அனைத்து உயிரினங்களுக்கும் எது இரவு போல இருக்கிறதோ அப்போது மன உறுதியுடையவன் விழித்துக் கொண்டிருக்கிறான். போகங்களை அனுபவிக்க பகலில் எப்போது உயிரினங்கள் விழித்திருக்கின்றனவோ அப்போது மன உறுதியுடையவன் அந்த நேரத்தை இரவு நேரமாக எடுத்துக் கொள்கிறான்.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த சுலோகத்தில் இரவு பகல் என்று குறிப்பிடுவது சூரியன் இருக்கும் பகலையும் சூரியன் மறைந்தவுடன் வரும் இருட்டையோ அல்ல. ஐம்புலன்கள் மனிதனை ஆசையின் பக்கம் இழுத்துச் செல்லும் போது அவன் மாயை என்னும் இருட்டில் மயங்கி அதன் பின் செல்கிறான். ஆனால் மன உறுதியுடையவன் மாயை என்னும் இருட்டில் மயங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றான். அனைத்து உயிரினங்களும் தனது கர்மாக்களை அனுபவிக்கும் போது மகிழ்ச்சி வந்தால் மகிழ்ச்சி அடைந்து கொண்டும் துன்பம் வந்தால் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் மன உறுதியுடையவன் மகிழ்ச்சி துன்பம் எது வந்தாலும் இரவு நேரத்தில் தூங்கும் போது அமைதியாக இருப்பது போல் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருக்கின்றான் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -115

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-68

நீண்ட புஜங்கள் உடையவனே எந்த மனிதனுடைய புலன்கள் புலனுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா விதங்களிலும் மீட்கப்பட்டு விட்டானோ அவனுடைய புத்தி உறுதியானது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

மனிதன் தன்னுடைய பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் ஆகிய ஐந்து புலன்களுக்குரிய போகப் பொருட்களில் இருந்து எல்லா வகைகளில் இருந்தும் ஆசைகளை விட்டு விட வேண்டும். உதாரணமாக கண்ணால் பலவற்றை காணாலாம். ஆனால் எதனைக் கண்டாலும் அதன் மீது பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருக்க வேண்டும். இது போல் ஐந்து புலன்களினாலும் பற்று ஆசை மற்றும் எந்த விதமான சலனமும் ஏற்படாமல் இருந்தால் அவனுடைய புத்தி உறுதியானது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

சுலோகம் -114

பகவத் கீதை 2. சாங்கிய யோகம் 2-67

நீரில் போய்க் கொண்டிருக்கும் ஓடத்தைக் காற்று அடித்துக் கொண்டு போவது போல போகங்களில் சஞ்சரிக்கின்ற புலன்களில் எந்த ஒரு புலனும் மனம் ஒட்டி இருக்கின்றதோ அந்த ஒரு புலன் மனம் வசப்படாத இந்த மனிதனின் புத்தியைக் கவர்ந்து சொல்கிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

உயிர்கள் இறைவனை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பிறவி என்னும் ஓடத்தில் பயணம் செய்யும் போது மனமான காற்றானது தனியாக அமைதியாக பயணிக்கும் போது இறைவனை நோக்கி சென்று கொண்டே இருக்கிறது. ஆனால் மனமான காற்றானது புத்தியுடன் இணைந்தவுடன் ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலன்களுடன் இணைந்தாலும் அது ஆசைகளின் வழி செல்லும் போது புலன்களுடன் இணைந்த மனமானது பெருங்காற்று தன் செல்லும் வழியில் ஓடத்தை இழுத்துச் செல்வது போல் மனிதனின் புத்தியை கவர்ந்து இழுத்துச் செல்கிறது என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.