சுலோகம் -122

பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-3

பாவமற்ற அர்ஜூனா இந்த உலகில் இரண்டு வகைகள் கொண்ட நிஷ்டைகள் (வழி முறைகள்) முன்பு என்னால் கூறப்பட்டது. இவற்றில் உலக விஷயங்களில் ஈடுபடாமல் ஞானத்தை பிரதானமாக கொண்டவர்களுக்கு சாங்கிய யோகமும் (ஞானயோகம்) உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களுக்கு கர்ம யோகமும் அமைகிறது.

இந்த சுலோகத்தின் கருத்து என்ன?

இந்த உலகம் படைக்கப்பட்ட பின் படைக்கப்பட்ட உயிர்கள் அவர்களின் ஆசைகளுக்கு ஏற்ப பலவிதமான தன்மைகளுடன் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அவர்களின் தன்மைக்கு ஏற்ப மோட்சத்தை அடைய என்னால் இரண்டு வழி முறைகள் உருவாக்கப்பட்டன. ஒன்று ஞான யோகம். இந்த உலக விஷயங்களான பந்தம் பாசம் உறவு செல்வம் என்று எதிலும் ஈடுபடாமல் தான் யார் என்று ஆத்ம விசாரணை செய்து தனக்குள் இருக்கும் இறைவனை உணர்ந்து ஞானத்தை அடைந்து மோட்சம் அடைபவர்கள். இவர்கள் ஞான யோகத்தின் வழி செல்பவர்கள். இரண்டு கர்ம யோகம். ஆசைகளின் விளைவாக உலக பற்றுகளில் மாட்டிக் கொண்டு புலன்களின் வழியாகச் சென்று உலக விஷயங்களில் ஈடுபட்டு செல்வார்கள். ஆசைகளினால் தனது புலன்களின் வழியாக அவர்கள் சென்றாலும் அதனை பற்றில்லாமல் செல்ல வேண்டும் என்று இவர்களுக்கு சொல்லப்பட்டது கர்ம யோகம் ஆகும் என்று அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் உபதேசம் செய்கிறார்.

இந்த சுலோகத்தில் ஒரு கேள்வி:

அர்ஜூனனை ஏன் பாவமற்ற அர்ஜூனா என்று கிருஷ்ணர் அழைக்கிறார்?

பாவம் உள்ளவன் இறைவனை அடைய இரண்டில் எந்த வழிமுறையிலும் செல்ல தகுதி அற்றவன் ஆகிறான். அர்ஜூனன் பாவமற்றவன் என்று சொல்வதின் வழியாக நான் செய்கிறேன் என்ற பற்றில்லாமல் கர்ம யோகத்தின் படி யுத்தம் செய்து கர்ம யோகத்தை கடைபிடித்து இறைவனை அடைய தகுதி உடையவன் என்று அர்ஜூனன் புரிந்து கொள்ளும் வகையில் கிருஷ்ணர் அவ்வாறு அழைக்கிறார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.