பகவத் கீதை 3. கர்ம யோகம் 3-40
புலன்கள் மனம் புத்தி இவையெல்லாம் இந்தக் காமத்தின் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இந்தக் காமம்தான் மனம் புத்தி புலன்களைக் கொண்டு ஞானத்தை மறைத்து மனிதனை மோகத்தில் உட்படுத்துகிறது.
இந்த சுலோகத்தின் கருத்து என்ன?
பார்த்தல் கேட்டல் சுவைத்தல் நுகர்தல் உணர்தல் என்ற ஐம்புலன்கள் மற்றும் மனம் புத்தி ஆகிய இந்த மூன்றும் மனிதனின் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பதால் இதில் ஆசைகள் தனது இருப்பிடமாக இருந்து கொண்டு செயல்படுகிறது. இந்த ஆசை தனது இருப்பிடமான புலன்கள் மனம் புத்தி வழியாக செயல்பட்டு ஞானத்தை மறைத்து உண்மை எது என்று தெரிந்து கொள்ள விடாமல் மனிதனை மயக்கத்தில் வைக்கிறது.
ஆசைகள் ஐம்புலன்கள் மனம் புத்தியின் வழியாக மனிதனிடம் போகங்களில் சுகம் உள்ளது என்று ஆசைகாட்டி மனித சக்திகளை மங்கச் செய்து பாவச்ல செயல்களில் ஈடுபடுத்தி மனிதனை வீழ்ச்சி அடையச் செய்கிறது. ஆகவே இறைவனை அடைய விரும்பும் மனிதன் ஐம்புலன்கள் மனம் புத்தி ஆகியவற்றிலிருந்து வரும் ஆசைகளை உடனடியாக விரட்டி அடித்து அழித்து விட வேண்டும். இயலவில்லை என்றால் செயல்பட விடாமல் தடுத்து வைக்க வேண்டும். இந்த ஆசைகள் வீட்டிற்குள் புகுந்து விட்ட பகைவனைப் போல் மனித பிறவி என்ற விலை மதிப்பற்ற செல்வத்தை வீணடித்து விடும்.