மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -5

இந்திரன் அர்ஜூனனிடம் தெய்வீக ஆயுதங்களை உபயோகிக்கும் முறையை கற்றுக்கொள்ள ஐந்து வருட காலம் இந்திரலோகத்தில் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். அர்ஜூனனும் தனது சகோதரர்களுக்கு தாம் இங்கு பாதுகாப்பாக இருப்பதை தெரியப்படுத்தி விட்டால் ஐந்து வருடகாலம் இங்கு இருப்பதாக உறுதியளித்தான். மேலும் லலித கலைகள் மற்றும் நடனம் சங்கீதத்திலும் அவன் பயிற்சி பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேவலோகத்தில் கலைகள் யாவற்றிலும் சிறந்தவரான சித்திரசேனன் என்பவரிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் இந்திரலோகத்தில் அர்ஜுனன் நலமாக இருக்கிறான் என்ற செய்தியை பாண்டவர் சகோதரர்களுக்கு தெரிவிப்பதற்காக லோமஸ ரிஷி இந்திரனால் மண்ணுலகிற்கு அனுப்பப்பட்டார். ஐந்து வருடகாலம் பயிற்சிகள் யாவும் முற்றுப் பெற்ற பிறகு சித்திரசேனன் அர்ஜுனனை ஒரு நெருக்கடியான சோதனைக்கு ஆளாக்கினார்.

ஊர்வசி என்பவள் தேவலோகத்துப் பெண் அவள் எப்பொழுதும் தேவலோகத்தில் இருப்பவள். அவளுடைய அசாதாரணமான அழகை கண்டு விண்ணவர்களையும் மண்ணுலகத்தவரையும் காம வலையில் மயக்கி அவர்களை சோதனைக்குள்ளாக்குவது அவளது வேலை. அர்ஜுனனை காதல் வலையில் அகப்படும் தூண்டுதல் வேலைக்கு அந்த தேவலோக பெண் நியமிக்கப்பட்டாள். அவளும் அதற்கு இசைந்தாள். ஆனால் அர்ஜுனன் அவளை தன் அன்னையாக போற்றி வழிபட்டான். அதனால் அவளுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வி அடைந்தது. இத்தகைய தோல்வி அவளுக்கு நிகழ்ந்தது இதுவே முதல் தடவை ஆகவே அவள் மிகவும் கோபத்திற்கு ஆளானாள். அத்தகைய கோபத்துடன் அவள் அர்ஜுனனை ஒரு பேடுவாக மாறிப்போகும் படி சாபமிட்டாள். பெண்களுக்கு முன்னிலையில் அவன் நடனம் புரிந்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். இதுவே அப்பெண் அர்ஜுனனை கிட்ட சாபமாகும்.

அர்ஜுனன் திகைத்துப் போனான். தன்னுடைய தந்தையான இந்திரனிடம் தனக்கு நிகழ்ந்த பரிதாபகரமான நிலையை தெரிவித்தான். இந்திரன் ஊர்வசியை தன் முன்னிலைக்கு வரவழைத்தான். அவளின் சாபம் வீண் போகாமல் சாபத்தில் ஒரு சிறிய மாறுதலை அமைக்கும்படி இந்திரன் வேண்டினான். அதன் விளைவாக ஒரு திருத்தம் செய்தாள். சாபத்திற்கு ஆளான அர்ஜூனன் தேவை ஏற்படும்பொழுது அந்த சாபம் அவனை ஒரு ஆண்டுக்கு மட்டும் வந்து பிடித்துக் கொள்ளும். அதன் பிறகு மீண்டும் பழைய உருவத்திற்கு அர்ஜூனன் மாறி விடுவான். இந்த சாபத்தை அக்ஞான வாசத்தின் போது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திரன் அர்ஜுனனுக்கு ஆறுதல் கூறினான். இது சாபம் போன்று தென்பட்டாலும் ஒரு வருட அக்ஞான காலத்தில் மறைந்திருக்க நல்ல வாய்ப்பு என்று கருதி அர்ஜூனன் ஏற்றுக்கொண்டான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்திருக்கும் ரிஷிகளிடத்தில் காணப்படும் தெய்வீகத் தன்மை வாய்ந்த புலனடக்கத்தை பெற்றுருப்பதாக இந்திரனும் சித்திரசேனனும் அர்ஜூனன் பெரிதும் பாராட்டினர்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -4

வியாசரின் அறிவுரைக்கு ஏற்ப யுதிஷ்டிரன் அர்ஜுனனை அரிய பெரிய செயலை செய்து முடிப்பதற்காக அவனை அனுப்பி வைத்தார். அர்ஜுனன் இமாலயத்தின் உட்பகுதியில் இருந்த இந்திரகிலம் என்னும் இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அங்கு இந்திரன் வயது முதிர்ந்த பிராமண வடிவத்தில் வந்து அர்ஜுனனிடம் மகாதேவனாகிய சிவனை நோக்கி கடும் தவம் புரியும் படி அறிவுறுத்தினார். அர்ஜுனன் புரிந்த தவம் மிகமிகக் கடினமானது. அவனுடைய கடினமான தவத்தின் போது கட்டுப்பாடின்றி காட்டுப் பன்றி ஒன்று அவன் மீது பாய்ந்தது. தன்னை காக்கும் பொருட்டு அம்பு ஒன்றை அவன் விலங்கின் மீது எய்தான்.

அதே வேளையில் வேடன் ஒருவன் தன் அம்பை அந்தப் பன்றியின் மீது எய்தான். வேட்டைக்காக வாய்ந்த பன்றியை தானே கொன்றதாக இருவரும் சண்டையிட்டனர். சண்டை பயங்கரமான விற்போராக வடிவெடுத்தது. அர்ஜுனன் அப்போராட்டத்தில் முற்றிலும் தோற்கடிக்கப்பட்டான். ஆனால் அதை முன்னிட்டு அவனுடைய ஊக்கம் குறையவில்லை. சிவலிங்கம் ஒன்றை களிமண்ணால் செய்து வைத்துக் கொண்டு சிவபூஜை பண்ணினான். பூமாலை ஒன்று அந்த லிங்கத்திற்கு சாத்தினான். தான் வெற்றி அடைய வேண்டுமென்று சிவனாரிடம் முழு மனதுடன் பிரார்தனை பண்ணினான். இப்பொழுது புதிய ஆற்றல் பெற்றவனாக சண்டையில் மீண்டும் ஈடுபட ஆயுத்தமானான்.

அப்போது அவன் சிவலிங்கத்திற்கு சாத்திய பூமாலை அந்த வேடன் கழுத்தில் அணிந்திருந்தை கண்டு வேடனாக வந்தவன் யார் என்பதை அக்கணமே அர்ஜூனன் அறிந்துகொண்டான். சிவனார் தாமே வேடனாக வேடம் தாங்கி வந்து இருக்கிறார் என்று அறிந்து அடிபட்ட மரம் போல் வீழ்ந்து வணங்கினான். இறைவனார் அவனை வாரி எடுத்து தழுவிக்கொண்டார். இறைவன் புரிந்த செயல் விஜயனை உண்மை விஜயன் ஆகவே ஆக்கிவிட்டது வெற்றிவீரன் என்பது விஜயன் எனும் சொல்லின் பொருள். அர்ஜூனனுடைய வல்லமையை ஆராய்ச்சி செய்த பார்த்த பிறகே பாசுபத அஸ்திரத்தை சன்மானமாக அவனுக்கு சிவபெருமான் வழங்கினார். இறைவன் கொடுத்த அந்த ஆயுதத்தை அர்ஜுனன் பணிவோடு ஏற்றுக்கொண்டான் இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த யமன் வருணன் மற்றும் தேவர்கள் அவரவர்களுக்குரிய ஆயுதங்களையும் அர்ஜுனனுக்கு கொடுத்தார்கள்.

இந்திரனுடைய ஆணையின் படி அவனுடைய சாரதி மாதலி ரதவிமானத்தில் அங்கு வந்து இறங்கி அர்ஜுனனை அவனுடைய தந்தையின் தேவலோகத்திற்கு அழைத்தான். அர்ஜூனனும் அந்த அழைப்புக்கு இணங்கி ரதத்தில் ஏறிக்கொண்டான். ரதம் மேலே கிளம்பியது. பல நட்சத்திர மண்டலங்களையும் தாண்டி அமராவதி என்னும் இந்திரனுடைய அற்புதமான நகரத்தை ரதம் சென்றடைந்தது. தேவர்கள் அர்ஜுனனை மரியாதையுடன் வரவேற்று அவனுடைய தெய்வீக தந்தை இந்திரனிடம் அழைத்துச் சென்றனர். இந்திரன் தன்னுடைய மண்ணுலக மைந்தனை விண்ணுலகத்தில் தனக்கு சமமாக தன்னுடைய சிம்மாசனத்தில் தனக்கு பக்கத்தில் அமரச் செய்தான். மண்ணுலக மைந்தன் அழகிலும் விண்ணுலக நடைமுறையிலும் தன்னுடைய தந்தைக்கு நிகராக திகழ்ந்தான்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -3

காம்யக வனத்தில் வனவாசத்தை அமைதியோடு ஏற்றுக்கொண்ட பாண்டவர்கள் இப்பொழுது அதை முற்றிலும் தங்களுடைய ஆன்ம பலத்திற்க்கான பயிற்சிக்கு பயன்படுத்தினார்கள். வசதி நிறைந்த மாளிகை வாழ்க்கைக்கும் கஷ்டம் நிறைந்த வன வாசத்துக்கும் இடையில் அவர்கள் எந்தவிதமான வேற்றுமையையும் கொள்ளவில்லை. ஆயினும் திரௌபதி தன் கணவரின் போக்கை அறிந்து கொள்ள திரௌபதியால் இயலவில்லை. இளையவர்கள் நால்வரும் யுதிஷ்டிரனுடைய சொல்லிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். தீங்கை எதிர்ப்பது க்ஷத்திரிய தர்மம் ஆகும். ஆனால் யுதிஷ்டிரனோ தன்னுடைய பகைமை பங்காளிகள் தன் மீது சுமத்திய கஷ்ட திசைகளை அமைதியாக ஏற்றுக்கொண்டான். கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் கொள்வது க்ஷத்திரியனுக்குரிய ஆயுதமாகும். ஆனால் அத்தகைய கோபங்கள் எதையும் யுதிஷ்டிரன் கொள்ளவில்லை. மிகவும் அமைதியாகவே இருந்தான். திரௌபதியால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன் கணவரிடம் இருந்த இத்தகைய சிறுமைக்கு காரணம் என்னவென்று அவள் பணிவுடன் யுதிஷ்டிரனிடம் கேட்டாள். அவள் கேள்விக்கு அவளுடைய குற்றச்சாட்டிற்கு பீமனும் துரௌபதியுடன் சேர்ந்து கொண்டான்.

நாம் அனுபவிக்கின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம் நானே என்பதை ஒத்துக்கொள்கிறேன். நம் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவர் சொற்படி நாம் எப்படி நடக்குமோ அதே விதத்தில் பெரியப்பாவாகிய திருதராஷ்டிரருடைய சொல்லுக்கு அடிபணிந்து நடக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். சூதாட்டத்தில் எனக்கு விருப்பம் இருக்கிறது என்று பெரியப்பாவுக்கு தெரியும். அவர் அதை பயன்படுத்தி நாம் அனைவரையும் இந்த கதிக்கு ஆளாகியிருக்கிறார். பதிமூன்று வருட காலம் வனவாசத்தில் இருக்க வேண்டுமென்ற அவர் விதித்திருக்கின்ற நிபந்தனைக்கு நான் உட்பட்டுள்ளேன். இப்பொழுது என் போக்கை நான் மாற்றிக் கொண்டால் அது சத்தியத்திலிருந்து பிசகுவதாகும். உயிர் போவதாக இருந்தாலும் நான் அப்படி செய்யமாட்டேன். இந்த 13 வருட காலம் வனவாசம் பூர்த்தியாகட்டும். அதன் பிறகு நீங்கள் உங்கள் விருப்பப்படி நடந்து கொள்ள நான் அனுமதிக்கிறேன். இப்பொழுது நமக்கு வாய்த்துள்ள துன்பத்தை பொறுமையாக சகித்துக் கொள்ள வேண்டும். இந்த பதிமூன்று வருட காலத்தில் நாம் புரிகின்ற தவத்தின் வாயிலாக சூதாடிய பாவத்திற்கு விமோசனம் தேடிக் கொள்வோம். இந்த விஷயத்தில் நாம் எல்லோரிடத்திலும் மன ஒருமைப்பாடு அமைந்திருப்பது மிகவும் முக்கியமாகும். என்று யுதிஷ்டிரன் கூறினான். அதைக் கேட்ட சகோதரர்களும் திரௌபதியும் யுதிஷ்டிரனுடைய தீர்மானத்திற்கு முற்றிலும் இசைந்தனர்.

பாண்டவ சகோதரர்கள் கலந்தாலோசித்துக் கொண்டிருக்கும் பொழுது வியாச பகவான் அவர்கள் முன்னிலையில் எழுந்தருளினார். அவருடைய வருகை பாண்டவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டுபண்ணியது. அவரை வரவேற்று அவருக்கு உரிய மரியாதை செய்தனர். போர் நடை பெறுவது உறுதி என்றும் தன் கட்சிக்கு அரசர்களை சேர்த்துக்கொள்வதில் துரியோதனன் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறான். பீஷ்மரும் துரோணரும் அவன் பக்கத்தில் இருந்து போர் புரிய இசைந்து உள்ளார்கள். அவர்களுக்கு நெருங்கிய நண்பன் கர்ணன். இம்மூவரும் பரசுராமருடைய மாணாக்கர்கள். ஆகையால் துரியோதனன் பக்கம் அமைந்திருக்கின்ற சக்தி மிக்க ஆள்பலம் மிகவும் அதிகமாகும். இந்த காரணங்களை முன்னிட்டு பாண்டவர்களும் தங்களை பலப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அர்ஜுனன் வடதிசை நோக்கிச் சென்று தெய்வீக ஆற்றல் படைத்த அஸ்திரங்களை தேடிக் கொள்வது அவசியம் என்று அவர்களுக்கு புத்திமதி கூறிவிட்டு வியாசர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -2

விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்கு சென்று அவர்களுடன் சிறிது நாட்கள் இருந்தார். சில வாரங்கள் சென்றன. திருதராஷ்டிரனுக்கு விதுரர் சொன்னதில் உண்மை இருக்கிறது என்று எண்ணி விதுரரை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைத்தார். விதுரர் பாண்டவர்களை பார்க்க காம்யக காட்டிற்குச் சென்று அஸ்தினாபுரத்திற்கு திரும்பி வந்ததை அறிந்த துரியோதனன் விதுரர் பாண்டவர்களை மீண்டும் அஸ்தினாபுரத்திற்கு வரவழைக்க சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்கிறார் என்று எண்ணினான். இந்த முயற்சி நிறைவேறினால் பாண்டவர்கள் மீண்டும் திரும்பி வந்து கௌரவர்களை தங்கள் பின்னணியில் இருக்கச் செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. ஆகையால் எதிரிகளாக இருக்கும் பாண்டவர்களை காட்டிலேயே வைத்து கொன்று விட்டால் பிறகு எதிர்ப்பு இல்லாமல் இருக்கும் என்று துரியோதனன் சதி ஆலோசனை செய்தான்.

வியாசர் துரியோதனன் முன் தோன்றி பாண்டவர்களை அழிக்க மடமே நிறைந்த முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் மீறி செய்தால் சூழ்ச்சிகள் யாவும் நிறைவேறாது என்றும் அவனுக்கு எச்சரிக்கை செய்தார். அடுத்தபடியாக வியாசர் திருதராஷ்டிரனிடம் சென்று சுய அழிவுக்கு உண்டான சூழ்ச்சிகளில் துரியோதனன் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும் அவன் செய்யும் காரியங்களுக்கு தடைகள் போட வேண்டும் என்று திருதராஷ்டிரனுக்கு புத்தி புகட்டினார்.

மைத்ரேய மகரிஷி நாடு முழுவதும் தீர்த்தயாத்திரை சென்று கொண்டிருந்த பொழுது காம்யக வனத்தில் வசித்து வந்த யுதிஷ்டிரனைச் சந்தித்தார். அஸ்தினாபுரத்தில் நிகழ்ந்த பகடை விளையாட்டின் மூலம் நடந்த அனைத்து விளைவுகளையும் கேட்டு அறிந்தார். பீஷ்மரும் திருதராஷ்டிரர் போன்ற பெரியவர்கள் இப்பாவச்செயல் நடைபெறுவதற்கு எவ்வாறு இடம் கொடுத்தார்கள் என்று அந்த முனிவர் வியந்தார். மகரிஷி அடுத்தபடியாக துரியோதனனை சந்தித்தார். பாண்டவர்களை அழிப்பதற்கு எந்த செயலில் ஈடுபட வேண்டாம் என்று அவனுக்கு புத்தி புகட்டினார். ஆனால் தற்பெருமையே வடிவெடுத்த துரியோதனன் தன் தொடைகளை தட்டி அவரை ஏளனம் பண்ணினான். இந்த செயலைக் குறித்து கோபம் கொண்ட மைத்ரேய மகரிஷி போர்க்களத்தில் பீமனுடைய கதையினால் உன் தொடைகள் தூளாக்கப்பட்டு மாண்டு போவாய் என்று சாபமிட்டார்.

கிருஷ்ணர் திருஷ்டத்யும்னன் மற்றும் பல உறவினர்கள் காம்யக வனத்தில் இருக்கும் பாண்டவர்களை பார்க்க வந்தனர். உறவினர்கள் அனைவரும் வந்தது பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் ஓரளவு ஆறுதலை கொடுத்தது. பரிதாபகரமான பாங்கில் திரௌபதி கண்ணீர் வடித்து நடந்த அனைத்தையும் கிருஷ்ணனிடம் கூறினாள். திரௌபதி கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்ட கிருஷ்ணன் வினைப்பயனிலிருந்து பொல்லாத கவுரவர்கள் ஒருபொழுதும் தப்பித்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் தக்க சமயத்தில் இந்த அடாத செயலுக்கு பழி வாங்கப்படுவார்கள் என்னும் உறுதிமொழியை திரௌபதியிடம் கொடுத்தார். தன் தங்கை சுபத்திரையையும் அவளுடைய மகன் அபிமன்யுவையும் தன்னுடைய சொந்த பாதுகாப்பில் வைத்திருக்க கிருஷ்ணன் ஏற்பாடு செய்தார். அதே விதத்தில் திருஷ்டத்யும்னன் தன் தங்கை திரௌபதியின் மகன்களாகிய உப பாண்டவர்கள் ஐவரையும் தன் பாதுகாப்பில் வைத்திருக்க ஏற்பாடு செய்தான்

மகாபாரதம் 3. வன பருவம் பகுதி -1

காம்யக வனத்திற்கு சென்ற பாண்டவர்கள் தங்கி வாழ்வதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து கொண்டார்கள். தினந்தோறும் முனிவர்களும் சான்றோர்களும் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து இவர்களை சந்தித்து கொண்டிருந்தனர். வருகின்றவர்களுக்கு தக்க முறையில் உணவு செய்து வைத்து உபசரிக்கும் பிரச்சனை ஒன்று உண்டாயிற்று. உலகனைத்துக்கும் உணவை கொடுக்கும் சூரிய பகவானிடம் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை யுதிஷ்டிரன் பக்திபூர்வமாக தெரிவித்தான். அவனுடைய பிரார்த்தனைக்கும் தவத்திற்கும் சூரியநாராயணன் இணங்கி அவனுக்கு ஓர் அட்சய பாத்திரத்தை கொடுத்தார். அன்றைக்கு உரிய உணவு வகைகளை சமைத்து அவைகளை அப்பாத்திரத்தில் போடுவது திரௌபதியின் கடமையாகும். அதன் பிறகு எத்தனை பேர் வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் உணவை பாத்திரத்திலிருந்து அவள் எடுத்து வழங்கிக் கொண்டே இருப்பாள். உணவு வளர்ந்து கொண்டே இருக்கும்.

அதன் பிறகு யுதிஷ்டிரனின் தம்பிகள் நால்வருக்கும் அதிலிருந்து அவள் உணவு எடுத்துக் கொடுப்பாள். பீமனுக்கு ஏற்ற பெரும் உணவும் அதில் வளர்ந்து கொண்டே இருந்தது. தம்பிமார்கள் நால்வரும் உணவருந்திய பிறகு யுதிஷ்டிரன் உண்பான். இறுதியாக திரௌபதியும் உணவு உண்பாள். அதன் பிறகு அட்சயபாத்திரம் அன்றைக்கு காலியாகிவிடும் உணவை வளர்க்கும் சக்தி அன்றைக்கு அத்துடன் முடிவுறும். அதன் பிறகு அந்த சக்தி அடுத்த நாள் தான் வரும். பாண்டவர்கள் வனவாசம் இருக்கும் 12 வருடங்களுக்கு அட்சயபாத்திரம் இதன்படி உணவு வழங்கும் தன்மையை வைத்திருக்கும். பாண்டவர்களுக்கு இறைவன் அருளை சார்ந்திருந்த வனவாசமும் இனிதே நடைபெற்று வந்தது.

அஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரர் விதுரரிடம் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து மக்களின் மனப்பான்மை எப்படி இருக்கிறது என்று கேட்டார். அதற்கு விதுரர் பாண்டவர்கள் காட்டிற்கு சென்றது குறித்து பொதுமக்களிடம் திருப்தி ஏதுமில்லை. அதிருப்தி மட்டுமே உள்ளது. துரியோதனனின் ஆட்சியை விட யுதிஷ்டிரரின் ஆட்சி மேலானது என்று மக்கள் பாண்டவர்களிடம் அன்பு வைத்திருக்கின்றனர். துரியோதனனிடம் மனஅமைதி இல்லை. அச்சம் அவனுடைய உள்ளத்தை உறுத்திக் கொண்டிருக்கிறது. காட்டில் பாண்டவர்கள் வருந்திக் கொண்டிருப்பதற்கு ஏற்ப கௌரவர்களுடைய பாவம் இங்கு அதிகரிக்கும். பாண்டவர்களை திருப்பி அழைத்து அவர்களுடைய ராஜ்யத்தை அவர்களுக்கே திருப்பி ஒப்படைப்பதே பொருத்தமானது. அப்படி செய்யாவிட்டால் கௌரவர்கள் பாண்டவர்களால் அழிந்து போவது நிச்சயம் என்று விதுரர் திருதராஷ்டிரரிடம் கூறினார்.

விதுரர் இவ்வாறு கூறியது திருதராஷ்டிரருக்கு பிடிக்கவில்லை. பாண்டவர்களுக்கு விதுரர் நன்மை செய்கிறார். கௌரவர்களுக்கு எதிரியாக இருக்கிறார் என்று எண்ணிக்கொண்டார். அவருடைய எண்ணத்திற்கேற்ப கோபத்தோடு நாடு கடத்தப்பட்டவர்களிடத்தில் உனக்கு அன்பு மிக அதிகமாக இருக்கும் என்றால் நீயும் அவர்களோடு போய் சேர்ந்து கொள்ளலாம். எங்களோடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்று திருதராஷ்டிரர் கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.