விஸ்வம் – விஷ்ணு சகஸ்ரநாமம்

நர்மதை நதிக்கரையோரம் அமைந்த கிராமத்தில் சிறந்த பண்டிதராக விளங்கிய பிராமணர் ஒருவர் இருந்தார். அவர் இதரா என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஐத்ரேயா என்ற பிள்ளை பிறந்தது. அவனுக்கு ஐந்து வயது ஆனவுடன் அவனுடைய தந்தை உபநயனம் செய்து வைத்தார். பிராமணர் தன் பையனுக்கு வேதங்கள் கற்றுத் தருவதற்கு முன் விஷ்ணு சஹஸ்ர நாமத்தைக் கற்றுத் தர விரும்பினார். தன் பிள்ளைக்கு முதல் ஸ்லோகமான விஸ்வம் என்பதில் ஆரம்பித்தார். பிறகு 2 ஆவது ஸ்லோகமான விஷ்ணு என்று கூற பிள்ளையோ விஸ்வம் என்றே திரும்பக் கூறினான். பிராமணர் எத்தனை முறை சொல்லிக் கொடுத்தாலும் பிள்ளையோ விஸ்வம் என்ற வார்த்தையையே மீண்டும் கூறினான். சரி மறுநாள் மீண்டும் சொல்லிக் கொடுக்கலாம் என்று நினைத்தார் பிராமணர். ஆனால் அடுத்த நாளும் அப்படியே தொடர்ந்தது. பல நாட்கள் அவர் முயன்றும் விஸ்வம் என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையும் பிள்ளைக்கு வரவில்லை. பல நாட்கள் ஓடின. பிள்ளையைச் சரி செய்ய முடியாததால் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார் இந்த பிராமணர். இந்த இரண்டாவது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தன. இருவருமே வேதங்களை நன்றாக படித்து ஓதி வளர்ந்தார்கள்.

இந்த இரண்டு பிள்ளைகளுடைய வேதங்களைக் கேட்பதற்காகப் பலரும் திரண்டு வந்தனர். இதனால் பிராமண குடும்பத்திற்குப் பணம் புகழ் மேன்மை எல்லாம் வந்து சேர்ந்தது. முதல் பிள்ளையான ஐத்ரேயனோ யார் அவனிடம் என்ன கேள்வி கேட்டாலும் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையே கூறி வந்தான். அவனுடைய தாயான இதராவிற்கு மனம் மிகவும் வருத்தப்பட்டது. தன் வயிற்றில் பிறந்த பிள்ளை மன வளர்ச்சி குன்றியவன் போல் இருக்கிறான். ஆனால் இளையவளின் பிள்ளைகளோ நன்கு வேதம் படித்த பண்டிதர்களாக இருக்கிறார்களே என்று விரக்தியுற்று ஒரு நாள் தன் பிள்ளையிடம் கோபமாக நீ முட்டாள். நீ பிறந்தது எனக்கு வெட்கக்கேடு. முனிவர்கள் வம்சத்தில் பிறந்தும் உனக்கு விஸ்வத்தைத் தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை என்று பேசிவிட்டாள். ஐத்ரேயன் தன் தாயைப் பார்த்து விஸ்வம் என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டான். அவன் வீட்டை விட்டே வெளியே சென்று விட்ட நிலையில் ஐத்ரேயனுடைய இரு சகோதரர்களும் வேதத்தைச் சொல்ல முற்படும்போது அவர்களால் வார்த்தைகளை உச்சரிக்க முடியவில்லை. பேசவே முடியாத ஊமைகளாகி விட்டனர். அந்நிலையில் அவர்கள் வீட்டிற்குச் சில திருடர்கள் வந்து பொருட்களைத் திருடிச் சென்று விட்டனர். அந்த வீட்டுப் பிராமணருக்கு அதிர்ச்சியாக இருந்தது. திடீரென்று ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று சிந்தித்து பார்த்தார் அவருக்கு விடை கிடைக்கவில்லை.

வசிஷ்ட முனிவரை அதிர்ஷ்டவசமாக அடுத்த நாள் சந்தித்தார். நடந்ததை எல்லாம் அவரிடம் கூறினார். அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் உனக்கும் உன் மனைவிக்கும் ஐத்ரேயனுடைய பெருமை தெரியவில்லை. அவன் முன் ஜென்மத்தில் ஒரு முனிவனாக இருந்தவன். அவனுடைய யோகத்தை முடிக்கவே உனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறான். ஐத்ரேயன் விஸ்வம் என்ற ஒரே வார்த்தையைக் கூறியதற்குக் காரணம் விஸ்வம் என்ற வார்த்தையின் முழு பொருளையும் அவன் உணர்ந்து விட்டான். மனதாலும் உடலாலும் ஆன்மாவாலும் மிகச் சிறந்த ஒன்றே விஸ்வம். வாசு தேவனை இந்த வார்த்தை குறிக்கும். விஸ்வத்தை முழுமையாகப் உணர்ந்து கொண்டால் பகவானே விஸ்வம் என்பதை நன்கு அறிந்து கொண்டால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. விஷ்ணு சகஸ்ர நாமத்தின் மொத்த ஸ்லோகத்தை படித்தால் உணர வேண்டியதை ஐத்ரேயன் முதல் ஸ்லோகமான விஸ்வத்திலேயே உணர்ந்து விட்டதினால் வேறு வார்த்தையை அவன் சொல்வதில்லை. அதிலேயே லயித்து இருந்தான்.

விஸ்வம் என்ற வார்த்தையில் பகவானை முழுமையாகப் புரிந்து கொண்ட உன் பிள்ளை அதையே அடிக்கடி கூறியதன் மூலம் அவனுடைய பக்தியால் உன் குடும்பத்தில் செல்வம் புகழ் எல்லாம் நிறைந்து இருந்தது. அவன் வீட்டை விட்டு வெளியேறிய உடன் உங்களுடைய நல்லவைகள் அனைத்தும் விலகி விட்டன. முதலில் அவனை வீட்டிற்கு அழைத்து வர முயற்சியுங்கள் என்றார். பிராமணரும் உடனடியாகத் தன் பிள்ளையைத் தேடிக் கண்டு பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து அவனுடைய மகிமையை தன் மனைவியிடமும் கூறினார். ஐத்ரேயன் வீட்டிற்குள் நுழைந்து விஸ்வம் என்று கூறியதும் அவனுடைய இரு சகோதரர்களுக்கும் பேச்சு வந்துவிட்டது. மேலும் திருடு போன பொருட்களைத் திருடர்களே திருப்பிக் கொண்டு வந்து சேர்த்து விட்டனர். விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையினால் எல்லாம் நடந்தது.

வசிஷ்டரிடம் விஸ்வம் என்ற வார்த்தையின் மகிமையை கேட்டுத் தெரிந்து கொண்ட வேத வியாசர் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் ஆயிரம் நாமங்களில் விஸ்வத்தை முதலாக வைத்தார். இதனை யுத்தகளத்தில் பீஷ்மர் தருமருக்கு உரைத்தார். விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அழைக்கப்படும் பகுதி மகாபாரதத்தில் பீஷ்மர் போர்க்களத்தில் யுதிஷ்டிரருக்கு சொன்ன ஆயிரம் விஷ்ணுவின் நாமங்கள் கொண்ட ஒரு அத்தியாயம் ஆகும். இது மகாபாரதம் ஆனுசாஸனிக பர்வத்தில் உள்ள 149 ஆவது அத்தியாயமாக அமைந்துள்ளது. சகஸ்ரம் என்றால் ஆயிரம். நாமம் என்றால் பெயர். சகஸ்ரநாமப் பகுதி மட்டும் ‘அனுஷ்டுப்’ என்ற வடமொழி யாப்பு வகையிலுள்ள 107 சுலோகங்களையும் அவைகளுக்கு முன்னும் பின்னும் ஏறக்குறைய 40 சுலோகங்களையும் கொண்டது.

ரங்மகால்

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு விருந்தாவன் என்ற வேறு பெயரும் உள்ளது. இந்த இடம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடம் ஆகும். இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்கே பிகாரி கோயிலும் ரங் மகாலும் முக்கிய இடமாகும். புராண காலக் கோயிலான இக்கோயில் 1864 ஆம் ஆண்டில் மறுசீரமைத்து கட்டப்பட்டது. மூலவர் ராதா கிருஷ்ணன். கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட லலிதா என்று அழைக்கப்படும் குளம் கோயிலில் உள்ளது.

துறவி ஹரிதாஸ் என்பவர் கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடும் காட்சியை காண வேண்டும் என்று கடுமையான தவத்தை செய்தார். அவரது தவத்தின் பலனாக கிருஷ்ணர் ராதை கோபியர்களுடன் நடனமாடியபடி காட்சி கொடுத்தார். கிருஷ்ணரிடம் இங்கேயே இருந்து தங்களைக் காணவரும் அனைவருக்கும் இக்கட்சியை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் துறவி ஹரிதாஸ். அவரது வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர் ஆணவம் அகங்காரம் இல்லாமல் தன்னை காண வரும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பேன் என்று அவருக்கு அருளினார். அதன்படி இன்னும் தகுதி உடையவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னாளில் அவரை வழிபட வேண்டி பக்கதர்ளுக்காக கிருஷ்ணரின் சிலை உருவாக்கப்பட்டடு ஒரு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயில் அரண்மனை போல் பிரம்மாண்டமாக உள்ளது.

இக்கோயில் உள்ள நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். நீர் இல்லாத நிலையில் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகவே காணப்படுகிறது. பங்கே பிகாரி என்றால் வளைந்து மகிழ்பவர் என்று பொருள். பெயருக்கு ஏற்றார்போல் இந்த காட்டில் இருக்கும் அனைத்து மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தரையை நோக்கியபடி வளைந்தே காணப்படுகிறது. இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் உயரம் குறைவாகவே வளர்கிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என புராண வரலாறு சொல்கிறது. இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. கட்டிலுக்கு அருகில் இரவு உணவாக ஒரு கலசத்தில் நீரும் இனிப்பும் வைக்கப்படுகிறது. உணவிற்குப் பின் கிருஷ்ணர் போட்டுக் கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது. காலையில் எழுந்ததும் கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும் வைக்கப்படுகிறது. அர்ச்சகர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு ரங் மஹால் மற்றும் நிதிவனின் பிரதான கதவுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டு காலையில் மட்டுமே திறக்கப்படும். தினமும் காலையில் பார்க்கும் போது கட்டில் படுக்கையில் யாரோ தூங்கியது போல ஒழுங்கற்றதாக கலைந்து கிடக்கும். இனிப்புகள் மற்றும் வெற்றிலைகள் யாரோ ஓரளவு சாப்பிட்டது போலவும் வேப்ப மரக் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது போலவும் இருக்கும்.

கோயிலில் இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள் பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் மயில்கள் வசிக்கின்றன. பகலில் இந்த காட்டுப் பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் இந்த கோயிலை திறந்து பார்க்கும் போது கட்டிலில் உள்ள துணிகள் கலைந்து காணப்படுகிறது. தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்து வருகிறது. இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும் அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் கருதப்படுகிறது. பல காலங்களாக இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இக்கோயிலுக்குள் இரவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அத்துமீறி நுழைய முயற்சித்த பலருக்கு கண் பார்வை போயிருக்கிறது. பலர் மன நிலை பாதித்திருக்கிறார்கள். இக்கோயில் இருக்கும் காட்டின் எல்லையில் சில வீடுகள் உள்ளது. இவர்கள் இரவில் தங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடி விடுகிறார்கள். பலர் வீடுகளுக்கு ஜன்னலே இல்லாமல் கட்டிருக்கிறார்கள். இக்காட்டில் எல்லையில் வசிப்பவர்கள் இக்காட்டில் இருந்து இரவு நேரத்தில் நடனமாடும் சத்தம் கேட்பதாக கூறுகிறார்கள்.

சக்கர தீர்த்தம்

பத்மநாப முனிவர் என்பவர் தினமும் ஒரு குறிப்பிட்ட குளத்தில் குளித்து விட்டு திருப்பதி வெங்கடேசப் பெருமாளை தரிசித்துவிட்டு தவம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். 12 ஆண்டுகள் கடந்தன. அவரது தவத்தின் பயனாக ஒருநான் பிரகாசமான ஒளி அவர் முன் தோன்றியது. அங்கே வெங்கடாஜலபதி காட்சியளித்தார். பத்மநாபா இந்த குளக்கரையில் தங்கியிருந்து தினமும் என்னை வழிபட்டு வா. உரிய காலத்தில் என்னை வந்து சேரும் பாக்கியம் பெறுவாய் என்று வரம் அளித்துவிட்டு மறைந்தார். ஒரு நாள் அவர் குளக்கரையில் தவம் செய்து கொண்டிருந்த போது மனிதர்களை பிடித்து தின்னும் ஒரு அரக்கன் அவரை பிடிக்க வந்தான். வெங்கடேச என்னைக் காப்பாற்று என்று பெருமாளை சரணடைந்தார் முனிவர். பெருமான் தன் சக்கரத்தை ஏவினார். அது அரக்களின் தலையைப் பறித்தது. சக்கரத்தின் மகிமையை அறிந்த முனிவர் என் உயிர் காத்த சக்கரமே இன்று முதல் இந்த குளத்தில் எழுந்தருளி இதில் நீராடுவோரின் துன்பம் தீர்க்க வேண்டும் என்று வேண்டினார். அதன்படியே அந்த குளத்திற்கு சக்கர தீர்த்தம் என்று பெயர் வந்தது. திருப்பதி மலையில் இந்த தீர்த்தம் இருக்கிறது. பத்மனாப முனிவரின் வரலாற்றைப் படிப்போருக்கு திருப்பதி போகாமலேயே சக்கர தீர்த்தத்தில் தீர்த்தமாடிய புண்ணியம் கிடைக்கும் என்று சொல்கிறது இத்தல புராண வரலாறு.

திருமலா பேருந்து நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் திருமலை திருப்பதி பாலாஜி கோயிலில் இருந்து 3 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது சக்ர தீர்த்தம். பிரம்மோத்ஸவ விழாவின் போது வெங்கடேஸ்வராவின் உற்சவர் சிலை இங்கு கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெறும். வராஹ புராணத்தின் படி ஷேஷாசல மலைத் தொடரில் உள்ள ஏழு முக்கிய முக்தி பிரதா தீர்த்தங்களில் சக்ர தீர்த்தம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தீர்த்தத்தின் அருகில் சிறிய சிவ லிங்கம் வினாயகர் உள்ளார்கள்.

பிரபஞ்சத்தில் உள்ள மூன்றரை கோடி புண்ணிய நீரோடைகளும் இந்நாளில் சக்கர தீர்த்தத்தில் வந்து வசிப்பதாக ஆகமங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே தமிழ் சூரிய மாதத்தின்படி துலா மாசத்தில் நிகழும் மார்கசிர்ஷ சுக்ல துவாதசியில் சக்ர தீர்த்த முக்கொடி என்ற திருவிழா நடைபெறுகிறது திருப்பதி கோயிலில் இருந்து பூசாரிகள் மற்றும் பிற ஊழியர்கள் புனித மேளம் மற்றும் பாரம்பரிய இசை முழங்க சக்கர தீர்த்தத்தை அடைவார்கள். பின் சக்ர தீர்த்தத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுதர்ஷன சக்ரத்தாழ்வாருக்கு அபிேஷகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். ஸ்ரீவாரி ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் மலர் அலங்காரம் மற்றும் ஆராதனை செய்வார்கள்.

நாராயணபால் விஷ்ணு கோயில்

இந்திராவதி ஆற்றின் மறுகரையில் நாராயணபால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புராதனமான அற்புதமான விஷ்ணு கோவில் உள்ளது. கோயில் நிறுவப்பட்ட பின்னர் நாராயண்பூர் என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நாராயணபால் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. சுமார் 70 அடி உயரம் கொண்ட சிவப்புக் கல்லால் ஆன இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆம்  நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியாளர் சிந்தக் நாக்வன்ஷ் மன்னர் ஜகதீஷ் பூஷனால் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோவிலுக்குள் சுமார் 8 அடி உயர கல்வெட்டு உள்ளது. கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களில் உள்ளன. இதில் கோயில் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம மக்கள் மன்னருக்கு உதவியதாக பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிவலிங்கம் சூரியன் சந்திரன் பசு மற்றும் கன்று வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

பண்டரிபுரம் விட்டலன் ருக்மணி தாயார்

கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.

ஏகாதசி பற்றி பத்ம புராணத்தில்

திரேதாயுகத்தில் முரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் தேவர்களையும் தவம் இயற்றும் முனிவர்களையும் மிகவும் கொடுமை படுத்தி வந்துள்ளான். அவனது தொல்லைகள் தாங்க முடியாத தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். மகாவிஷ்ணு அரக்கனை அழிக்க தன் சுதர்சன சக்கரத்துடன் போருக்கு புறப்பட்டு சென்றார். திருமாலை எதிர்க்க வந்த அரக்கன் சுதர்சன சக்கரம் தன்னை நோக்கி வருவதை கண்டு ஓடி ஒளிந்து கொண்டான். பின்னர் மாயா வடிவில் வந்து போரிடுவான். இப்படி மாறி மாறி ஒழிவதும் போரிடுவதுமாக இருந்த அரக்கன் பகவான் முன்பு எதிர்க்க முடியாமல் சோர்ந்து போனான்.

வத்திகிரி ஆஸ்ரமத்தில் பகவான் விஷ்ணு உறங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த அரக்கன் திருமாலை திடீரென்று தாக்க முற்பட்டான். ஆனால் அந்த நொடியில் லோக மாயன் மகாமாயன் மாயவண்ணன் என்ற பல பெயர்களைக் கொண்ட மாயக்காரன் மகாவிஷ்ணுவின் திருமேனியில் இருந்து ஒரு பெண் வடிவம் தோன்றி அவ்வரக்கனை கொன்றது. அந்த பெண் வடிவம் திருமாலின் மாயா சக்தியாகும். இதை கண்ட பகவான் மிகவும் மகிழ்ந்து யோகமாயாவிற்கு ஏகாதசி என்று பெயர் சூட்டினார். மாயாசக்திக்கு ஏகாதசி என்ற பெயர் ஏற்பட்ட அன்றைய நாள் மார்கழி மாதம் பதினோராவது நாளாகும். முக்கோடி தேவர்களும் முனிவர்களும் மகிழ்ந்து திருமாலை துதித்து போற்றினர் கொண்டாடினர். இதனால் இழந்த தங்கள் சக்தியை மீண்டும் பெற்றனர்.

இந்த ஏகாதசிதான் முக்கோடி வைகுண்ட ஏகாதசி யாகும். இந்நாளில் தேவர்களுக்கும் வெற்றியும் மகிழ்வும் தந்த மகாவிஷ்ணு வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து பெருமாளை வணங்கி பூஜை செய்தால் இறைவனை அடையத் தடையாக இருக்கின்ற அனைத்து தீய அரக்கனையும் அழித்து வெற்றியை நல்குவார்.

மலையடிப்பட்டி பள்ளிகொண்ட பெருமாள்

மலையடிப்பட்டி குகைக் கோயிலானது புதுக்கோட்டையிலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் மலையடிப்பட்டி என்ற இடத்தில் இரு குகைக்கோயில்கள் உள்ளன. இவற்றில் ஒன்று சிவனுக்கு உரிய மலையாகவும் மற்றொன்று திருமாலுக்கு உரிய மலையாகவும் உள்ளது. சிவன் கோயிலானது வைசுவரமுடையார் கோயில் என அழைக்கப்படுகிறது. சிவன் குகைக்கு மேற்குப் பகுதியில் உள்ள விஷ்ணு குகையில் உள்ள கோவில் திருமாலுக்குரிய கோயில் ஆகும். இவர் பள்ளிகொண்ட பெருமாள் எனவும் கண்திறந்த பெருமாள் எனவும் அழைக்கப்படுகிறார். இக்கோயில்கள் இரண்டும் குடவரைக் கோயிலாகும்.

சயன நிலையில் உள்ள பெருமாளின் பெயர் பள்ளிகொண்ட பெருமாள் தாயார் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி. மலையைக் குடைந்து பாறையிலே பள்ளிகொண்ட பெருமாள் ஆதிசேஷ சயனப்படுக்கையில் இருப்பது போல செதுக்கப்பட்டுள்ளது. குகைக்குள் ஐந்து கோலங்களில் பெருமாளையும் எட்டுக் கோலங்களில் லட்சுமியையும் தரிசனம் செய்யலாம். நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதனாத வடிவிலும் கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகவும் பெருமாள் காட்சி தருகிறார். ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளும் அரங்கனின் திருவடி அருகே பூதேவி நாபிக்கமலத்தில் பிரம்மா சுற்றிலும் அஸ்வினி தேவர்கள் கின்னரர் கிம்புருடர் அப்ஸரஸ்கள் சூழ இருக்கிறார். பெருமாளுக்கு அருகிலேயே திவாகர முனி அமர்ந்து அருளுகிறார். அரங்கர் திருமார்பில் ஒரு லட்சுமியும் புண்டரீகப் பெருமாள் மற்றும் வைகுண்ட நாதருக்கு அருகே ஸ்ரீதேவி பூதேவி என்னும் உபயதேவிகளாக இரண்டிரண்டு லட்சுமிகளும் லட்சுமி நாராயணர் மடியில் ஒரு லட்சுமியும் தனிக்கோயில் கமலவள்ளித் தாயாரும் தீப ஸ்தம்பத்துக்கு அருகில் ஒரு தீப லட்சுமியுமாக எட்டு லட்சுமிகள் ஒரே இடத்தில் தரிசனம் கொடுக்கிறார்கள்.

திவாகர முனிவருக்கு அரங்கன் திருக்கோலத்தின் மீது அபார அன்பு. நாளும் ஒரு அரங்கன் திருக்கோலத்தைத் தரிசிக்காமல் எந்த உணவையும் உண்ண மாட்டார். ஒரு நாள் கால் போன போக்கில் அரங்கனைத் தேடிப் போனார். பசி கண்ணை மறைக்கவே தள்ளாடித் தள்ளாடி நடந்தபோது ஒரு அழிஞ்சில் மரமும் அதன் அடியில் ஒரு மாடு மேய்க்கும் சிறுவனையும் கண்டார். அவனிடம் அருகில் இருக்கும் அரங்கன் கோயில் பற்றிய தகவல் கேட்டார். இதற்கு அந்த சிறுவன் பேர் தெரியாது சாமி அதோ அந்த மலைக்குக் கீழ ஒரு குகையில ஒரு சாமி படுத்துக் கெடக்குது. நாங்க அவரைப் போய் கும்புடுவோம். எங்க ஆடு மாடுகளைக் காப்பாத்தறதனால பட்டிசாமின்னு கும்புடுவோம். மலைக்குக் கீழ இருக்கறதனால மலையடிபட்டிசாமின்னு சொல்லுவோம். அதனால இந்த இடத்துக்கு மலையடிப்பட்டின்னு பேரு என்று வெகுளித்தனமாகச் சொல்லிவிட்டு ஆடு விரட்ட மலையைப் பார்த்து நகர்ந்தான்.

திவாகர முனிவர் சுட்டெரிக்கும் வெயிலில் அந்தக் குகைக்குச் சென்று உள்ளே பார்க்க அவருக்கு ஒன்றுமே புலப்படவில்லை. சிறிது சிறிதாக பாம்பணை மேல் அரங்கன் படுத்துக் கிடப்பதும் பூதேவி இருப்பதும் கின்னரர் கிம்புருடர் வானவர் வணங்குவதும் தெரியத் தொடங்கியது. ஆனந்தக் கூத்தாடி எதிர்ச் சுனையில் குளித்துவிட்டு வந்து காட்டுப் பூக்களைத் தொடுத்து மாலையாக்கி காய்கனிகளைப் பறித்து படைப்பதற்காக எடுத்து வந்தார். ஆனால் குகையில் சற்று முன் தான் கண்ட உருவங்கள் எதுவும் தெரியவில்லை. நீண்ட படுக்கைக் கல்லும் பாறையுமே தெரிந்தன. வெளியே இருந்த அந்த ஆடு மேய்க்கும் சிறுவனை அழைத்து இங்கே சாமியெல்லாம் இருந்துச்சே எங்கே என்றார்? இதுதான் நாங்க கும்படற சாமி என பாறையைக் காட்டினான் சிறுவன். பயந்து போய் அரங்கா இது என்ன சோதனை என அரற்றினார். எதிரில் நின்ற இடைச் சிறுவன் சிரித்தான். அவன் யார் என உணர்ந்த திவாகர முனிவர் மாலையையும் பழங்களையும் அவன் முன் சமர்ப்பித்து காலில் விழுந்தார். சிறுவனாக இருந்த பெருமாள் திவாகர முனிவரை எழுப்பி நின்ற கோலத்தில் புருஷோத்தமனாகவும் அமர்ந்த கோலத்தில் ஹயக்ரீவர் நரசிம்மர் மற்றும் பரமபதநாத கோலத்தையும் காட்டி கிடந்த கோலத்தில் ரங்கநாதனாகக் காட்சி தந்தார். பின்னர் பெரிய மலை உருவில் காட்சி தந்தார். பின்னர் திவாகர முனி வேண்டிக்கொண்டபடி அனைவர் கண்ணுக்கும் தொலைவில் இருந்தே தெரியும் வகையில் கண்ணிறைந்த பெருமாளாக மலை உருவில் காட்சி தரலானார்.

கோயிலின் முன்புறம் சற்று தள்ளி நின்று பார்க்கும் போதே பெருமாள் மலையாகப் படுத்து இருப்பது போன்ற தோற்றம் தெரியும். கோயிலில் உள்ள கல்வெட்டுகள் கூட கண்ணிறைந்த பெருமாள் என்றே குறிப்பிடுகின்றன. தொடக்கத்தில் மலையையே பெருமாளாக நினைத்து வணங்கிய நிலை மாறி மலையில் திவாகர முனிக்குக் காட்சி கொடுத்தது போலவே திருவுருவங்களும் அமைக்கப்பட்டு குடைவறைக் கோவிலாக்கப்பட்டு வழிபடப்பட்டுள்ளது. நுழைவாயிலருகே விநாயகர் மாடத்தில் உள்ளார். திருமங்கை ஆழ்வார் உடையவர் நாதமுனிகள் விஸ்வக்ஷேனர் ஆகியோர் தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ளனர். இக்கோவில் கல்வெட்டுகள் மூலமாக கிபி 7 – 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

கனகாம்பரம் கறிவேப்பிலை

மகாமுனிவரான துர்வாசர் ஒருமுறை வைகுண்டத்துக்குச் சென்ற போது திருமாலின் திருமார்பில் எட்டி உதைத்துவிட்டார். திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்யும் திருமகள் கோபித்துக் கொண்டு பூவுலகுக்கு வந்துவிட்டாள். திருமகளை இழந்த திருமகளை மீண்டும் அடைய ஸ்ரீநிவாஸமூர்த்தியாக பூமிக்கு வந்தார். வகுளாதேவியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் வேளையில் பத்மாவதி தேவியை ஸ்ரீநிவாஸர் சந்தித்தார். அவளையே மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார். ராமாவதாரத்தில் தோன்றி சீதாதேவியின் இன்னல்களையெல்லாம் தாங்கிக் கொண்ட வேதவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் கலியுகத்தில் தாம் ஶ்ரீநிவாஸனாக அவதரிக்கும் போது திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார் ராமபிரான். அந்த வேதவதிதான் ஆகாசராஜனின் மகளாக பத்மாவதி என்ற பெயரில் பிறந்திருந்தாள். தாம் முன்னர் அவளை மணந்து கொள்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவே ஶ்ரீநிவாஸர் பத்மாவதியை மணந்து கொள்ள விரும்பினார்.

மன்னரின் மகளை தான் மணந்துகொள்ள வேண்டும் என்பதால் திருமணத்தை விமர்சையாகச் செய்ய விரும்பிய ஶ்ரீநிவாஸர் குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் வராகன்களைக் கடனாகப் பெற்றார். தான் பெற்ற கடனுக்குக் கலியுகம் முடியும்வரை வட்டி செலுத்துவதாகவும் வாக்களித்தார். குபேரனிடம் பெற்ற நிதியைக் கொண்டு நாரதரும் வகுளாதேவியும் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருக்கல்யாணத்தை மிகவும் விமர்சையாக நடத்தினர். தேவர்களும் முனிவர்களும் சித்த புருஷர்களும் கலந்து கொண்ட திருமண விழாவில் மாப்பிளை வீட்டார் சார்பாகச் செய்யப்பட்டிருந்த அற்புதமான அலங்காரமும் அருமையான அறுசுவை விருந்தும் எல்லோரும் போற்றும்படி இருந்தன. எந்தக் குறையுமில்லாமல் ஶ்ரீநிவாஸர் பத்மாவதி திருமணம் நடைபெற்றாலும் கலகம் ஏற்படுத்தும் நாரதர் தன் பணியை ஆரம்பித்தார்.

தன் மகனுக்கு நடத்திய திருமணத்தில் எந்தக் குறையுமே இல்லை என்ற கர்வத்தில் இருந்த வகுளாதேவியாரின் கர்வத்தைப் போக்க நினைத்த நாரதர் பத்மாவதித் தாயாரிடம் சென்று திருமணத்தில் கறிவேப்பிலையும் கனகாம்பரப் பூவும் சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். அவ்வளவுதான் திருமணத்துக்குப் பின்னர் இது தொடர்பாகப் பெருமாளுக்கும் பத்மாவதி அன்னைக்கும் ஊடல் உண்டானது. இந்த ஊடலே பெரிதாகி பத்மாவதி தாயார் பிரிந்து சென்று திருச்சானூரை அடைந்து தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதனால்தான் திருமலை ஆலயத்தில் இன்றும் எந்த விதத்திலும் கனகாம்பர மலரையும் கறிவேப்பிலையையும் சேர்ப்பதில்லை என்கிறார்கள்.

இரு தேவியர்களை ஸ்ரீநிவாஸ பெருமாள் கொண்டிருந்தாலும் திருமலையில் மூலவராகத் தனித்தே நின்றிருக்கிறார். இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற ஊடலில் திருமகள் கரவீரபுரத்திலும் பெருமாளே தன்னை வந்து பார்க்கட்டும் என்ற ஊடலில் திருச்சானூரில் பத்மாவதியும் தனித்தனியே கோயில் கொண்டிருக்கிறார்கள்.

நெய்யாற்றங்கரை கிருஷ்ணன்

கேரளாவில் நெய்யாற்றின் கரையில் கேரளக் கட்டுமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலில் சதுர வடிவக் கருவறையில் பஞ்சலோகத்தால் செய்யப் பெற்ற சடைமுடியுடன் சிறுவன் வடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மேற்கு நோக்கிப் பார்த்தபடி நின்ற கோலத்தில் இருக்கும் இறைவன் தன்னுடைய இரு கரங்களிலும் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு இருக்கிறார். பால கிருஷ்ணனாக கையில் வெண்ணெய்யுடன் இருப்பதால் இந்த கிருஷ்ணர் நவநீதகிருஷ்ணன் என்று அழைக்கப்படுகிறார். கோவிலின் வளாகத்தில் கணபதி தர்மசாஸ்தா மற்றும் நாகராஜா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. கோயில் கிபி 1750 – கிபி 1755 க்கு இடையில் அப்போதைய சுதேச நாடான திருவிதாங்கூரின்  மன்னரான அனிஷம் திருநாள் மார்த்தாண்ட வர்மரால்  கட்டபட்டது.

இளவரசர் அனுசம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவர் திருவாங்கூர் சமஸ்தானத்தின் மன்னராகப் பதவியேற்க இருந்தார். அவர் மன்னராவதை விரும்பாத சிலரும் தாங்கள்தான் மன்னர் பதவிக்கு வர வேண்டும் என்று விரும்பிய சிலரும் ஒன்றாகச் சேர்ந்து மார்த்தாண்ட வர்மாவைக் கொல்வதற்குப் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வந்தனர். எதிரிகளின் அந்த சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொண்டிருந்த இளவரசர் ஒரு நாள் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேரிட்டது. பகைவர்களிடம் இருந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இளவரசர் மார்த்தாண்ட வர்மா அங்கிருந்து தப்பியோடினார். அவரைக் கொல்வதற்கு முயன்றவர்களும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிய இளவரசர் நெய்யாற்றின் கரையை வந்தடைந்தார். அங்கிருந்து அவருக்குத் தப்பிச் செல்ல வேறு வழி தெரியவில்லை. உடனே அவர் தான் மறைந்து கொள்வதற்கு நல்லதொரு இடத்தைத் தேடினார். அப்போது அங்கு புல்லாங்குழலுடன் வந்த ஒரு சிறுவன் அங்கிருந்த பலா மரப்பொந்து ஒன்றைக் காட்டி அதனுள் சென்று மறைந்து கொள்ளும்படிச் சொன்னான். பயத்துடன் இருந்த இளவரசரும் அந்தச் சிறுவன் சொன்ன பலாமரப் பொந்திற்குள் சென்று மறைந்து உயிர் தப்பினார். சிறிது காலம் பகைவர்களுக்குத் தெரியாமல் மறைந்து வாழ்ந்த இளவரசர் பின்னாளில் பகைவர்களை வென்று மன்னராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஒருநாள் அவர் கனவில் தோன்றிய கிருஷ்ணர் தானே நெய்யாற்றின் கரையில் சிறுவனாக வந்து பலா மரப்பொந்தில் மறைந்து கொள்ளச் செய்து காப்பாற்றியதாகவும் தனக்கு அங்கே கோவில் ஒன்றைக் கட்டி வழிபடும்படியும் சொல்லி மறைந்தார். மன்னரும் தன் உயிரைக் காப்பாற்றிய கிருஷ்ணனுக்கு, தான் கண்ட சிறுவன் வடிவிலேயேச் சிலை அமைத்து நெய்யாற்றின் கரையில் கிருஷ்ணருக்கு ஒரு கோவிலைக் கட்டினார்.

கோவிலின் ஒரு பகுதியில் மன்னர் மார்த்தாண்ட வர்மா மறைந்திருந்ததாகச் சொல்லப்படும் பலா மரம் வேலியிட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரத்தை அங்கிருப்பவர்கள் மலையாள மொழியில் அம்மாச்சி பிலாவு (தாய் மரம்) என்று அழைக்கின்றனர். இந்த ஆலயத்தில் சித்திரை விசு கிருஷ்ண ஜெயந்தி ஓணம் பண்டிகை நவராத்திரி மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான மண்டல பூஜை நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட் காட்டியின்படி மீனம் (பங்குனி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின்போது ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் நெய்யாற்றில் இறைவனுக்கு ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது. கோவிலின் பூஜைகள் நிறைவடைந்தவுடன் கிருஷ்ணரின் கைகளில் சிறு சிறு வெண்ணெய் உருண்டைகளை வைத்து வழிபட்டுப் பக்தர்களுக்குத் தருகின்றனர். இந்த வெண்ணெய் உருண்டைகள் பல்வேறு நோய்களுக்கு அருமையான மருந்தாக உள்ளது. கோவிலின் வடக்குத் திசையின் கீழ்ப் பகுதியில் நெய்யாறு ஓடுகிறது.

இக்கோவிலில் நிறுவுவதற்காக முதலில் மரத்தால் ஆன சிலை ஒன்றுதான் செய்யப் பட்டிருக்கிறது. அந்தச் சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக நெய்யாற்றின் வழியாக ஒரு படகு மூலம் கொண்டு வரப்பட்டது. அப்போது அந்தப் படகு ஆற்றுக்குள் ஓரிடத்தில் நகராமல் நின்று விட்டது. அங்கிருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் படகை சிறிது கூட நகர்த்த முடியாமல் போனது. குறிப்பிட்ட நாளில் கோவிலில் இறைவன் சிலையை நிறுவ விரும்பிய மன்னர் தற்போது ஆலயத்தில் இருக்கும் பஞ்சலோகத்தாலான கிருஷ்ணர் சிலையை உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தார்.

அகத்திய முனிவர் மலை உச்சியில் ஆசிரமம் அமைத்துத் தங்கியிருந்தார். அகத்தியக் கூடம் என்றழைக்கப்படும் அந்த இடத்தில் அகத்திய முனிவர் பல வேள்விகளைச் செய்து கொண்டிருந்தார். அவருடைய வேள்விக்காகக் கொண்டு வரப்பெற்ற நெய் அங்கிருந்த பெரிய பானைகளில் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அந்தப் பானைகளில் இருந்த நெய் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. நெய்யே ஆறாக ஓடியதால் இந்த ஆற்றுக்கு நெய்யாறு என்று பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அப்பகுதியில் ஏற்பட்டக் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இறைவன் கிருஷ்ணரை வேண்ட அவர் அகத்தியக் கூடத்தில் இருந்து வெளியேறி ஓடிக் கொண்டிருந்த நெய் ஆற்றினைத் தெளிந்த நீராக மாற்றி ஓடச் செய்தார்.