அனந்த பத்மநாபசாமி குடைவரைக் கோவில்

உண்டவல்லி என்பது இந்தியாவில் ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இங்கு ஒரே பாறையில் செதுக்கப்பட்ட 20 அடி நீளத்தில் விக்கிரகமாக அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார். இவர் கிரனைட் கல்லால் செதுக்கப்ட்டுள்ளார். இக் குடைவரை கோவில் கி.பி 4 முதல் 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும். இக்குடைவரைக் கோயில் 4 தளங்களை உடையது. அடித்தளம் முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது. கூரைகளைத் தூண்கள் தாங்குமாறு குடையப்பட்டுள்ளன. அடித்தளத்தின் மண்டபம் ஏழு தலைவாயில்களைக் கொண்டுள்ளது. அடித்தளத்திற்கும் மேல் உள்ள முதல்தளம் அடித்தளத்தைவிட பெரியது. இங்கு காணப்படும் சிற்பங்கள் விஷ்ணுவின் வரலாற்றைப் பற்றி உள்ளது. இரண்டாம் தளம் 9 மீட்டர் அகலமும் ஏறக்குறைய 17 மீட்டர் நீளமும் உள்ள மண்டபத்தையும் தென்முனையில் 4 மீட்டர் சதுரமான சிறிய அறையையும் வட கோடியில் ஒரு நீண்ட சதுரமான கருவறையையும் கொண்டு விளங்குகிறது. இங்கு மூலவரான அனந்த பத்மநாபசாமி காட்சி கொடுக்கிறார்.

மூன்றாம் தளம் முற்றுப்பெறாத நிலையில் உள்ளது. முற்றம் ஒன்று கூரையற்று காணப்படுகிறது. இந்த குன்றிலேயே வேறு சில குடைவரைகளும் காணப்படுகின்றன. அவை அனைத்தும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளன. இந்த குடைவரை கோயில்களிலிருந்து தக்காணத்தை ஆண்ட கொண்டவீடு அரசர்களின் கோட்டைக்கும் மங்களகிரி மலைக்கும் விஜயவாடா கனகதுர்கா கோவிலுக்கும் ரகசிய பாதைகள் இருந்ததற்கான சுவடுகள் தெரிகிறது. இந்த பாதைகளைப் பயன்படுத்தி அரசர்கள் எதிரிகள் அறியாவண்ணம் தமது படை வீரர்களை போர்க்களங்களுக்கு அனுப்பினார்கள். தற்போது இந்தச் சுரங்கப் பாதைகள் பாழடைந்து மூடப்பட்டுள்ளன. முதல் தளத்தின் அமைப்பிலிருந்து இத்தளம் பல்லவ அரசர் மகேந்திரவர்மன் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கிருஷ்ணார்ப்பணம்

ஒரு சிறிய கிராமம் மத்தியில் அழகான ஒரு கிருஷ்ணர் கோவில் அர்ச்சகரும் அவரிடம் வேலை பார்த்து வரும் சிறுவன் துளசிராமனும் காலை 4 மணிக்கே கோவிலுக்கு வந்து விடுவார்கள். துளசிராமனுக்கு கோவில் தோட்டத்து பூக்களையெல்லாம் பறித்து மாலையாகத் தொடுத்து தரவேண்டிய பணி. கிருஷ்ண பகவானே கதி என்று கிடக்கும் துளசி ராமனுக்கு அந்தப் பூப்பறிக்கும் நேரமும் கிருஷ்ணனின் நினைப்புதான். கிருஷ்ணார்ப்பணம் என்று மனதுள் சொல்லியபடியே பூக்களைப் பறித்து தொடுப்பான். பத்து பதினைந்து மாலைகள் கட்டி முடித்தவுடன் ஏதோ அவனே கிருஷ்ணருக்கு சூட்டிவிடுவது போன்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுவான். கிருஷ்ணரின் சிலைக்கு மாலை சூட்டப் போனால் ஏற்கனவே ஒரு புது மாலையுடன் கிருஷ்ணர் சிலை பொலிவு பெற்று இருக்கும். அதைப் பார்த்த அர்ச்சகருக்கு இது துளசிராமனின் குறும்பாக இருக்குமோ என்று சந்தேகம். அவனைக் கூப்பிட்டு துளசிராமா இதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம். நீ மாலை கட்டவேண்டுமே தவிர சூட்டக் கூடாது என்று கண்டித்தார். சுவாமி நான் சூட்டவில்லை கட்டிய மாலைகள் மொத்தம் 15. அத்தனையும் உங்களிடம் கொடுத்து விட்டேன் என்ற அவன் சொற்கள் அவர் காதில் விழவேயில்லை. நாளையிலிருந்து அண்டாக்களில் தண்ணீர் நிரப்பும் பணியைச் செய் பூ கட்டவேண்டாம் கட்டளையிட்டார்.

இறைவன் செயல் என்று துளசிராமன் நீரிறைக்கும் போதும் தொட்டிகளில் ஊற்றும் போதும் கிருஷ்ணார்ப்பணம் என்று மனம் நிறைய சொல்லிக் கொள்வான். மனமும் நிறைந்தது. இப்போதெல்லாம் சிலைக்கு அபிஷேகம் செய்ய அர்ச்சகர் வரும்முன்பே அபிஷேகம் நடந்து முடிந்து கருவறை ஈரமாகி இருக்கும். நனைந்து நீர் சொட்டச் சொட்ட கிருஷ்ணர் சிலை சிரிக்கும். அர்ச்சகருக்கு கடும் கோபம் துளசிராமா நீ அபிஷேகம் செய்யுமளவுக்கு துணிந்து விட்டாயா உன்னோடு பெரிய தொல்லையாகிவிட்டதே திட்ட ஆரம்பித்தார். துளசிராமன் கண்களில் கண்ணீர். சுவாமி நான் அண்டாக்களை மட்டும்தான் நிரப்பினேன் உண்மையிலேயே கிருஷ்ணனுக்கு எப்படி அபிஷேகம் ஆனது என்று எனக்கு தெரியாது என்றான். அர்ச்சகர் மறுநாளே மடப்பள்ளிக்கு மாற்றிவிட்டார். பிரசாதம் தயாரிப்பு பணிகளில் காய் நறுக்கும் போதும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்றே தன்னுடைய செய்கைகளை கடவுளுக்கே காணிக்கையாக்கினான். அன்று அர்ச்சகர் முன்னெச்சரிக் கையாக சன்னிதானத்தை பூட்டிச் சாவியை எடுத்துச் சென்று விட்டார். மறுநாள் அதிகாலையில் சந்நிதிக் கதவைத் திறக்கும் போதே கண்ணன் வாயில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் மடப்பள்ளியில் அப்போதுதான் தயாராகி நெய்விட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் எப்படி இங்கு வந்தது? நானும் கதவைப் பூட்டித் தானே சென்றேன் பூனை எலி கொண்டு வந்திருக்குமோ? துளசிராமனுக்கு எந்த வேலை தந்தாலும் அந்தப் பொருள் எப்படியோ எனக்கு முன்பே இங்கு வந்துவிடுகிறதே அவன் என்ன மந்திரவாதியா? என்று குழம்பினார் அர்ச்சகர். இன்று அர்ச்சகர் துளசிராமனை எதுவும் கண்ணடிக்காமல் துளசிராமா நாளை முதல் நீ வாசலில் பக்தர்களின் செருப்பை பாதுக்காக்கும் வேலையைச் செய் நீ என்று கூறினார்.

பூ நீர் பிரசாதம் என எல்லா பொருட்களும் இறைவன் சந்நிதிக்கு வந்துவிட்டன. இனி என்ன ஆகிறதென்று பார்ப்போம் என்று எண்ணியபடி இருந்தார் அர்ச்சகர். இதையும் கடவுள் விருப்பம் என்று ஏற்றுக் கொண்ட துளசிராமன். அன்று முதல் வாசலில் நின்றிருந்தான். அதே கிருஷ்ணார்ப்பணம் என்றே அந்த வேலையையும் செய்து கொண்டு இருந்தான். இன்றும் அர்ச்சகர் பூட்டி சாவி கொண்டு சென்றார். மறுநாள் காலை சந்நிதிக் கதவு திறந்ததும் அர்ச்சகர் கண்ட காட்சி உடலெல்லாம் அவருக்கு நடுங்கத் தொடங்கியது.
இதென்ன கிருஷ்ணா உன் பாதங்களில் ஒரு ஜோடி செருப்பு பாத கமலங்களின் பாதுகையின் பீடத்தில் சாதாரண தோல் செருப்பு எப்படி வந்தது? துளசிராமன் எப்படிப் பட்டவனானாலும் சந்நிதிப் பூட்டைத் திறந்து இப்படி செருப்பை வைக்க யாருக்குத்தான் மனம் வரும்? ஆச்சரியம் அச்சம் அர்ச்சகருக்கு வேர்த்துக் கொட்டியது. அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அர்ச்சகரே பயப்பட வேண்டாம் அந்த துளசிராமனுக்கு நீ எந்த வேலை தந்தாலும் அவன் கிருஷ்ணார்ப்பணம் என்று எனக்குக் காணிக்கையாக்கி விடுகிறான். அப்படி அன்போடு அவன் தரும் காணிக்கையை நான் மனமுவந்து ஏற்றுக்கொண்டேன். நினைவெல்லாம் எங்கோ இருக்க செய்யும் பூஜையை விட எதை செய்தாலும் எனக்குக் காணிக்கையாக்குபவனின் அன்பை நான் ஏற்றுக்கொண்டேன். துளசிராமன் ஒரு யோகி அவன் அன்பு எனக்குப் பிரியமானது என்றார் பகவான். கிருஷ்ண பகவானின் இந்தக் குரல் கேட்டு வாசல் பக்கம் ஓடிவந்து அந்த யோகி துளசிராமனின் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினார் அர்ச்சகர்

இந்தக் கதை கேரளா குருவாயூரப்பன் கோவிலில் நடந்த உண்மை சம்பவம்.

விஷ்ணு சிலை

பாந்தவ்கர் தேசிய பூங்காவில் உள்ள விஷ்ணு சிலை

மத்திய பிரதேசத்தின் உமாரியா பகுதியில் உள்ள பாந்தவ்கர் தேசிய பூங்கா புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேசிய பூங்காவின் காட்டுப்பகுதியில் விஷ்ணு கிழக்குப்பக்கம் தலை வைத்து மிகவும் அமைதியான முறையில் படுத்துக் கொண்டிருக்கிறார். விஷ்ணுவின் சிலை 12 மீட்டர் நீளத்துடன் ஒற்றை பாறையில் செதுக்கப்பட்டது. 1000 ஆண்டுகள் பழமையான இந்த விஷ்ணு படுத்த நிலையில் ஒரு காலை நீட்டிய படியும் ஒரு காலை மடக்கி வைத்தபடியும் இருக்கிறார். விஷ்ணுவின் தலைக்கு பின்புறம் சிவலிங்கம் ஒன்று உள்ளது.

ராமாயண இதிகாசத்தில் இந்தப் பகுதியைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. இலங்கை போருக்குப் பிறகு இந்த இடம் ராமரால் லட்சுமணனுக்கு பரிசளிக்கப்பட்டதாகக் குறிப்புகள் உள்ளது. புராண நூல்களின் படி திரேதா யுகம் காலத்திலிருந்தே இந்த இடத்தில் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மேலும் அந்தக் காலங்களில் உள்ள நாகரிகங்களின் எடுத்துக்காட்டுகளாக நிறைய குகை ஓவியங்கள் மற்றும் பிற அடையாளங்கள் உள்ளன. பூங்காவின் உள்ளே உள்ள கோவில் கட்டமைப்புகள் அக்காலத்தில் விஷ்ணு வழிபாடுகளும் சிவலிங்க வழிபாடுகளும் ஒன்றாகவே இருந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ராமாயண கதைகளின் சிற்பங்கள் மற்றும் பந்தாவதீஷ் கோவில் கருவூலம் விஷ்ணுவின் அவதாரமான வராக அவராதம் மீன் அவதாரம் ஆமை அவதாரம் ஆகிய மூர்த்திகள் உள்ளது. பூங்கா மற்றும் பூங்காவைச் சுற்றியுள்ள கிராமங்களில் பெரும்பாலும் ராமாயண காலத்திலிருக்கும் சிற்பங்களாக உள்ளது.