மகாபாரதம் 2. சபா பருவம் பகுதி -19

சபை அடுத்த நாள் கூடியது. திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனிடம் பன்னிரண்டு வருடம் காட்டிற்கு செல்ல வேண்டும் என்றும் ஒரு வருடம் யாருக்கும் தெரியாதபடி அக்ஞாத வாசம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இருந்தால் பாண்டவர்களுடைய நாடு செல்வம் அனைத்தும் அவர்ளுக்கு மீண்டும் திருப்பி அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்து காட்டிற்கு செல்ல உத்தரவிட்டார். மன்னர் திருதராஷ்டிரர் எங்களுக்கு எப்படி உத்தவு இடுகிறாரோ அப்படி அடிபணிந்து நடந்து கொள்ள நாங்கள் ஆயத்தமாய் இருக்கிறோம் என்று அமைதியாக யுதிஷ்டிரன் கூறினான். அப்போது விதுரர் வயது முதிர்ந்த காரணத்தால் குந்திதேவி காட்டில் இருக்க இயலாது ஆகையால் குந்தி தேவி செல்ல அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். திருதராஷ்டிரர் ஒப்புக்கொண்ட பிறகு விதுரர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க குந்திதேவி காட்டிற்கு செல்லவில்லை. காம்யக வனத்திற்கு செல்ல முடிவெடுத்து திரௌபதி மற்றும் சகோதரர்களுடன் காட்டிற்கு செல்ல யுதிஷ்டிரன் தயாரானான்.

ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி தலையைத் தொங்கப் போட்டு செல்வதையும் அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் பாண்டவர்களின் நண்பர்கள் கவலையுடன் நிற்பதையும் குந்திதேவி கண்டாள். குந்திதேவி கிருஷ்ணரிடம் பாண்டவர்களை காக்குமாறு கேட்டுக்கொண்டாள். மனித வாழ்க்கையில் கடினமான காலங்கள் வரும். அந்த கடினமான காலத்தை பாண்டவர்கள் தங்கள் மேன்மை அடைவதற்காக பன்னிரண்டு வருட காட்டு வாழ்க்கையையும் ஒரு வருட அக்ஞாத காலத்தையும் பயனுள்ளதாக நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள். யாம் எப்போதும் அவர்களுக்கு துணை இருப்பேன் என்று குந்திதேவியை கிருஷ்ணர் சமாதானம் செய்தார்.

அஸ்தினாபுரத்தின் முதன்மையானவர்கள் அங்கிருந்த சென்றதும் வானத்தில் மேகமில்லாது இருந்த போதே மின்னல் வெட்டியது. பூமி நடுங்கத் தொடங்கி பல அபசகுனங்கள் தென்பட்டது. அப்போது சபையில் அனைவருக்கும் முன்னால் தேவலோக முனிவர்களில் சிறந்த நாரதர் தோன்றி இன்றிலிருந்து பதினான்காவது வருடம் துரியோதனனின் பிழையின் காரணமாக பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று சொல்லிவிட்டு வானத்தில் கடந்து மறைந்தார். துரியோதனன் கர்ணன் சகுனி ஆகியோர் துரோணரைத் தங்கள் ஒரே தஞ்சமாகக் கருதி காப்பாற்றுமாறு கேட்டனர். அதற்கு துரோணர் பாண்டவர்கள் கொல்லப்பட முடியாதவர்கள் என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். இருப்பினும் திருதராஷ்டிரனின் மகன்கள் அனைத்து மன்னர்களுடன் சேர்ந்து மரியாதையுடன் என்னிடம் பாதுகாப்பு கோரியிருக்கின்றனர். என்னால் முடிந்ததில் சிறந்ததை செய்து நான் அவர்களைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.

சபாபருவம் முற்றியது அடுத்து வன பருவம்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.