கிருஷ்ணனை எதிர்த்து போர் புரிந்த அர்ஜுனன்

ஒருநாள் அதிகாலையில் காலவ முனிவர் ஒரு நதிக் கரையில் நின்று கொண்டு காலை சந்தியாவந்தனமும் நித்திய பூஜையும் செய்து கொண்டிருந்தார். அர்க்கியம் கொடுக்க கையில் நீரை எடுத்தபோது ஆகாயத்தில் இருந்து யாரோ உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கையில் இருந்த அர்க்கிய நீரில் விழுந்தது. அவர் திடுக்கிட்டு மேலே பார்த்தார். அப்போது கந்தர்வன் ஒருவன் விண்ணிலே உல்லாசமாகச் சென்று கொண்டிருந்தான். அவன் பெயர் சித்திரசேனன். அவன் சுவைத்து உமிழ்ந்த தாம்பூலம் முனிவர் கரத்தில் இருந்த புனித நீரில் விழுந்தது. நடந்த செயல் அவன் அறியாமல் செய்த பிழையாக இருக்கும் என ஒரு கணம் பொறுமையுடன் நின்றார் முனிவர். ஆகாயத்தில் சென்றுகொண்டிருந்த சித்திரசேனனோ தான் உமிழ்ந்த தாம்பூலம் முனிவரின் கரத்தில் விழுந்து களங்கப்படுத்திவிட்டது என்பதை அதே கண நேரத்தில் தெரிந்து கொண்டான். ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாமல் தெரியாமல் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்காமல் வேகமாகச் சென்றுவிட்டான். கோபமடைந்த காலவ முனிவர் நேராக கிருஷ்ணனிடம் சென்று தனக்கு கந்தர்வன் இழைத்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட அபசாரத்தையும் எடுத்துக் கூறினார்.

சித்திரசேனனின் சிரஸை தங்கள் பாதங்களில் சேர்த்து அவனுக்குத் தண்டனை வழங்குகிறேன் என்று சூளுரைத்தார் கிருஷ்ணன். சித்திர சேனனைப் போரில் சந்திப்பதாக அவனுக்குச் செய்தி அனுப்பியதோடு போருக்கும் ஆயத்தமானார். தன் இருப்பிடம் வந்த சித்திரசேனன் கிருஷ்ணன் தன் மீது போர்த்தொடுத்து வருகிறார் என்பதை அறிந்தான். கிருஷ்ணனுடன் நேரடியாகக் போரிடத் துணியவில்லை. செய்தது தவறு என்று ஒப்புக் கொண்டு முனிவரின் கால்களிலும் கிருஷ்ணனின் காலடியிலும் சரணாகதி என்று விழுந்துவிட்டால் அவர்கள் நிச்சயம் மன்னித்துவிடுவார்கள் என்று தெரிந்திருந்தும் ஆணவம் பிடித்த சிந்திரசேனன் அதைச் செய்யாமல் அவனது மனதில் சூழ்ச்சி ஒன்று பிறந்தது. அர்ஜுனனை தன் எண்ணம் நிறைவேற ஒரு கருவியாகப் பயன்படுத்த நினைத்தான். இதையடுத்து அர்ஜுனனைக் கண்டு அவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தான். அர்ஜுனா உயிர்ப் பிச்சை அளியுங்கள் என்று கூறி சரணடைந்தான். எழுந்திருங்கள். சரணாகதி என என் காலில் விழுந்துவிட்டீர்கள். தங்கள் குறை எதுவானாலும் தீர்த்து வைக்கிறேன் அதுதான் க்ஷத்திரிய தர்மம் என்று உறுதிமொழி கூறினான் அர்ஜுனன்.

சத்தியமாக என்னைக் காப்பாற்றுவீர்களா என்று கேட்டான் சித்திரசேனன். நான் வணங்கும் கிருஷ்ணன் மீது ஆணையாகக் கூறுகிறேன். தங்களுக்கு எந்த ஆபத்து இருப்பினும் என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுகிறேன் என்றான் அர்ஜுனன். என் பெயர் சித்திரசேனன் நான் கந்தர்வராஜன். அறியாமல் நான் செய்த பிழை ஒன்றுக்காக என் மீது போர் தொடுத்து என்னை அழிக்க வருகிறான் ஒருவன். தாங்கள் என் பக்கம் நின்று அவனோடு போரிட்டு அவனை வென்று எனக்கு உயிர்ப்பிச்சை தர வேண்டும் என்று கெஞ்சினான். உன் உயிரைப் போக்க வந்தவன் யார் என்று சொல் என்று கேட்டான் அர்ஜுனன். தங்கள் ஆத்ம நண்பன் துவாரகா அதிபதி கிருஷ்ணன் என்றான் சித்திரசேனன். அர்ஜுனன் திகிலாலும் பயத்தாலும் ஸ்தம்பித்து விட்டான். அவன் நாவினின்றும் பேச்சு வரவில்லை. இதனை கண்ட சித்திரசேனன் அர்ஜுனா அதிர்ச்சி அடைந்தவிட்டீர்களா உங்கள் ஆத்ம நண்பனும் வழிகாட்டியும் குருவுமான கிருஷ்ணன் மீது போர் தொடுக்க வேண்டுமே என்ற தயக்கமா அல்லது கண்ணனை ஜெயிக்கும் அளவுக்கு வீரம் தங்களுக்கு இல்லையே என்ற பயமா தங்களால் முடியவில்லை என்றால் இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுங்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நீங்கள் வருத்தப்பட வேண்டாம். எனக்கு அற்ப ஆயுள் என்று நான் சமாதானப்பட்டுக் கொள்கிறேன் என்றான் சித்திரசேனன்.

நான் சத்தியம் தவறமாட்டேன். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உயிர் துறக்கவும் தயங்கமாட்டேன். இந்த யுத்தத்தில் நான் மடிந்தாலும் நீ உயிர் பிழைப்பது நிச்சயம். சத்தியம் தவறிய குற்றத்தைச் செய்வதைவிட நண்பன் மீதே போர் தொடுத்து உன்னைக் காப்பாற்ற நான் தயார். இதோ புறப்படுகிறேன் என்று சூளுரைத்து போர்க்கோலம் பூண்டு யுத்த பூமியில் கிருஷ்ணனைச் சந்திக்கப் புறப்பட்டான் அர்ஜுனன். கிருஷ்ணன் கவசம் அணிந்து வாள், வில் ஏந்தி நின்ற போர்கோலம் கண்டு ஆச்சரியத்தால் உறைந்து போனான் அர்ஜுனன். கடமையைச் செய்யும் போதும் சத்தியத்தைக் காக்கும்போதும் பயத்தால் கலங்கக்கூடாது என்று கிருஷ்ணனிடம் ஏற்கனவே கேட்டுத் தெரிந்துகொண்டிருந்த அர்ஜுனன் பயத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டுப் போருக்குத் தயாரானான். கிருஷ்ணார் அர்ஜுனன் யுத்தம் ஆரம்பமானது. துரோணரிடம் தான் கற்ற வித்தை எல்லாம் தீர்ந்தது போல் தவித்தான் அர்ஜுனன். விண்ணிலே அஸ்திரங்கள் மழையாகப் பொழிந்துகொண்டிருந்தன. அவை மோதுகின்ற சப்தங்கள் இடி முழக்கம் செய்தன. பிரளயகாலம் போலவும் ஊழித்தீ பரவுவது போலவும் உலகம் நடுங்கியது.

யுதிஷ்டிரனும் பீமனும் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதிக் கொள்வதை அறிந்து கலங்கி யுத்தக் களத்தை வந்தடைந்தனர். இத்தனைக்கும் காரணமான சித்திரசேனனை ஒரு பூச்சியைப் பிடிப்பது போலப் பிடித்து களத்திலே கொண்டு வந்து நிறுத்தினான் பீமன். நாரதரும் தேவர்களும் அங்கே வந்து சித்திரசேனனுக்கு அறிவு புகட்டினர். அவன் ஆணவம் அழிந்தது. அறிவு தெளிந்தது. கிருஷ்ணரின் பாதங்களில் சரணாகதி என விழுந்தான் சித்திரசேனன். செய்த தவறுக்கு மன்னிப்புக்கோரி அவனை காலவ முனிவர் கால்களில் விழுந்து நமஸ்கரிக்கச் செய்தார் கிருஷ்ணன். சித்திரசேனன் முனிவர் கால்களில் விழுந்து சரணடைந்தான். அவனை மன்னித்தார் முனிவர். தன் ஆத்ம நண்பன் கிருஷ்ணனையே போரில் எதிர்க்கும் நிலை ஏற்பட்டதற்காக வருந்தி நின்றான் அர்ஜுனன். அவனும் கிருஷ்ணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பாண்டவ சகோதரர்களும் இந்தச் சம்பவத்துக்காக மனம் வருந்தி கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கேட்டனர். அதற்கு கிருஷ்ணன் இதில் உங்கள் தவறு ஏதுமில்லை. இது ஏன் நிகழ்ந்தது என்று நீங்கள் கலங்கி இருக்கிறீர்கள். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தர்மயுத்தம் நடக்கப்போகிறது. அதற்கெல்லாம் போதிய பலமும், திறமையும், வீரமும், துணிவும், சாதுர்யமும் அர்ஜுனனுக்கு இருக்கிறதா என்பதைப் பரீட்சித்துப் பார்க்க நினைத்தேன். அதற்காகவே இந்த நாடகத்தை நடத்தி இந்த யுத்தத்தை ஒரு பயிற்சிக் களமாக அமைத்தேன் என புன்முறுவலோடு கூறினார் கிருஷ்ணன்.

ஊதியூர் மலை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை ஊதியூர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கொங்கண சித்தர் 800 ஆண்டுகள் தவம் செய்திருக்கின்றார். இந்த மலையில் உத்தண்டவர் என்ற பெயரில் முருகரை கொங்கண சித்தர் பிரதிஷ்டை செய்துள்ளார். அருகில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது. இந்த குகைக்கு உள்ளே செல்வதற்கு ஒரு வழி வெளியே வருவதற்கு வேறு வழி உள்ளது. வெளியே வர படுத்து தவழ்ந்து தான் வரமுடியும். இந்தக் குகையிலிருந்து பழநி அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் அப்பரமேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல சுரங்கப்பாதை இருந்தது. கொங்கணர் தங்கம் பதுக்கி வைத்தருக்குன்றார் என்ற மக்களின் தேடுதலால் மக்களின் தொல்லை தாளாமல் பின்னர் இந்தப் பாதை அழிக்கப்பட்டு விட்டது. கொங்கணவர் உருவாக்கிய உத்தண்ட வேலாயுத ஸ்வாமி சிலையே தங்கத்தால் ஆனவர் என்று நினைத்த சிலரால் முருகப்பெருமானின் திருப்பாதங்கள் பின்னப்படுத்தப்பட்டது. அது தங்கமில்லை என்று அறிந்ததும் அந்தச் சிலையை காட்டுக்குள் வீசிவிட்டனர். முருகன் சிலை பின்னமானதும் அந்த ஊரே பாழ்பட்டுப் போனது. பிறகு சித்தரின் சீடர்கள் அறிவுரையால் அதே சிலையை காட்டில் இருந்து கொண்டு வந்து பாதங்களை மறைக்கும் அளவுக்கு மண்ணால் புதைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மலையில் சித்தரால் உபயோகிக்கப்பட்ட மண் குழல்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாழ்பட்டன. அதனால் சித்தர் உலாவிய அந்த இடங்கள் தற்போது வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

ஊதியூர் மலை ஏறும் போது முதலில் நாம் தரிசனம் செய்வது உத்தண்டர் முருகன் கோவில் பின்பு சற்று மேலே தம்பிரான் சித்தர் சமாதி அதற்கு மேல் இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் கொங்கணரின் ஜீவ ஐக்கிய தலம். அதற்கும் சற்று மேலே கொங்கணர் குகை உள்ளது. பொன்னுருக்கி சித்துகளைச் செய்த கொங்கணவர் தவமியற்றிய சந்திரகாந்தக் கல்லில் தாமே சுயம்புவாக ஊதி மலையில் காட்சியளிக்கிறார். இம்மலையின் புராணபெயர் பொன்ஊதிமாமலை என்பதாகும். வள்ளி, தெய்வானை ஒரே சன்னதியில் உள்ளனர். மலை மீது செல்ல 158 படிகள் உள்ளன. இம்மலையிலேயே கொங்கண சித்தருக்கும் தனிக்கோயில் உள்ளது. அருணகிரிநாதர் முருகபெருமானை தரிசித்த 120 வது தலம் ஊதிமலை. முருகனை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் பாடியுள்ளார். ஊதியூர் இம்மலை தாராபுரத்திலிருந்து ஈரோடு செல்லும் வழித்தடத்தில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோவையின் தாராபுரத்திலிருந்து காங்கேயம் போகும் வழியில் 10 மைல் தொலைவில் உள்ளது.

கோவிலின் முதலில் பாத விநாயகர் சன்னதியைக் கடந்து படிப்பாதையில் மேலே சென்றால் இடும்பன் சன்னதி உள்ளது, அடுத்துள்ள ஆஞ்சநேயர் சன்னதியைக் கடந்து சென்றால் மலைக் கோயிலை அடையலாம். 156 படிகளைக் கொண்ட மலைக்கோயிலின் நுழைவு வாயில் தெற்கு நோக்கி உள்ளது. தீபஸ்தம்பம் ராஜகோபுரத்தின் முன் அமைக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரத்தை அடுத்துள்ளது, குறட்டுவாசல். கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் மற்றும் வாத்திய மண்டபம் என நான்கு பகுதிகளைக் கொண்டது. உட்பிராகாரத்தில் கன்னிமூல கணபதி, முனியப்பன், கன்னிமார், கருப்பராயன், நவகிரகங்கள் மற்றும் பைரவர் தனிச் சன்னதிகளில் அருள்கின்றனர்.

கொங்கு மண்டல சதகம் எனும் நூலில் இம்மலையின் பெருமைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தோன்றிய சித்தர்களுள் முதன்மையானவர் அகத்தியர். அவரது சீடர்களான போகர், தேரையர், கொங்கணர் ஆகியோர் பசி, பட்டினி என வாடிய மக்களின் குறைகளை தங்கள் யோக ஆற்றலால் நிவர்த்தி செய்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் காங்கேய நாட்டு மக்களின் வறுமையைப் போக்கும் விதமாக மக்களை ஒன்று திரட்டி மூலிகைகள் கொண்ட இம்மலைக்கு தீவைத்து புகை மூட்டி ஊதினர். அப்போது முருகப்பெருமான் அங்கு எழுந்தருளி மக்களின் வறுமையை நீக்கி அவர்களின் வாழ்வில் வளமையை உண்டாக்கினார். புகை மூட்டி ஊதியதால் ஊதிமலை என்றும் கொங்கணச் சித்தர் தவம் செய்து நெருப்பு ஊதி பொன் தயாரித்ததால் பொன் ஊதிமலை என்றும் அனுமன் எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இது என்று கருதப்படுவதால் சஞ்சீவி மலை என்றும் பல பெயர்களில் இம்மலை அழைக்கப்படுவதாக தலபுராணம் கூறுகிறது.

இம்மலைக்கு அருகில் பொன்னுருக்கி குன்று ஒன்றுள்ளது. அம்மலையில் பொன்னை ஊதி தங்கத்தை பெற்றதால் பொனூதிமாமலை எனும் பெயரை பெற்றது. இங்கு கொங்கண சித்தர் பொன் செய்து மக்களுக்கு தானமாக தந்தார். சுயநலம் மிக்க மக்களை கண்டு மனம் வருந்தி அவர் எழுதிய பொன்னுருக்கும் குறிப்போலையை தனது சீடர் தம்பிரான் சித்தரிடம் கொடுத்து இவ்வித்தையை பிரயோகிக்க கூடாது என்றும் மறைத்து வைக்கும்மாறு சொல்லி தவத்தில் ஆழ்ந்தார். கொங்கணரின் பிரதான சீடன் தம்பிரான் சித்தர் தனது குருவின் கட்டளையை மீறி மறைத்து வைத்த குறிப்போலை கொண்டு தங்கம் செய்ய முற்பட்டு அதில் தோல்வியுற்றார். திப்பு சுல்தான் என்ற முகலாய மன்னன் கோவிலில் உள்ள வேலாயுத சுவாமி திருவுருவச்சிலையின் தலை, கை, கால்களில் வெட்டினான். இதனால் கோபமுற்ற சித்தர்கள் திப்புசுல்தானை நீ இந்த சிலையை எப்படி வெட்டினாயோ அதுபோலவே வெட்டுப்பட்டு இறப்பாய். எத்தை முறை வெட்டினாயோ அத்தனை மாதங்களில் இறப்பாய் என சாபம் கொடுத்தார்கள். அதுபோலவே திப்புசுல்தான் இறந்தார். இன்று இந்த கோயிலில் அந்த வெட்டுப்பட்ட சிலை உள்ளது. முருகப்பெருமான் தண்டாயுதபாணி கோலத்தில் கிழக்கு முகமாக காட்சி தருகிறார்.

தானத்தில் சிறந்தவர்

ஒரு முறை பாண்டவர்கள் தங்களில் மூத்தவரான யுதிஷ்டிரரையும் அவரது கொடைத் தன்மையையும் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர் கிருஷ்ணரும் உடனிருந்தார். அவர் அமைதியாகச் சொன்னார். யுதிஷ்டிரரை விட கர்ணனே கொடுப்பதில் சிறந்தவன் என்றார். என் மேல் வருத்தப் பட வேண்டாம் நாளை நிரூபிக்கிறேன் என்றார். பொழுது விடிந்தது. என்னுடன் வாருங்கள் என்று பாண்டவர்களை உடனழைத்துச் சென்று இரண்டு தங்க மலைகளை உருவாக்கினார். பாண்டவர்களிடம் ஒரு மலையை ஒப்படைத்து இன்று சூரிய அஸ்தமனத்துக்குள் இந்த மலையை நீங்கள் முழுவதுமாக தானமளித்து விட வேண்டும் என்றார்.

இவ்வளவுதானா என்று அனைவரும் சேர்ந்து சுற்றிலுமுள்ள கிராமங்களுக்கு ஆளனுப்பி அனைவரையும் வரச்செய்து அத்தனை பேருக்கும் சுமக்க முடியாத அளவு தங்கத்தை வெட்டி வெட்டி கொடுக்கத் துவங்கினார்கள். போவோர் வருவோர் என் எவருக்கும் பாகு பாடின்றி கூப்பிட்டு கூப்பிட்டு தங்க மலையை வெட்டிக் கொடுக்கின்றனர். பொழுதும் சாய்கிறது. மலை கால்வாசி கூட கரைந்த பாடில்லை. பொழுது சாய இன்னும் சில நிமிடங்களே பாக்கி. யுதிஷ்டிரர் சோர்ந்து போய்ச் சொன்னார். கிருஷ்ணா தோல்வியை ஒப்புக்கொள்கிறோம். எங்களால் ஒரு மலையில் கால்வாசி கூட கொடுக்க முடியவில்லை. அதுவரை அத்தனையும் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் அங்கு வந்த கர்னனை அழைத்துச் சொன்னார். கர்ணா இந்த இரண்டு தங்க மலைகளையும் பொழுது சாயவிருக்கும் இந்தச் சில நிமிடங்களில் உன்னால் எவருக்காவது கொடுக்க முடியுமா என்று கேட்டார். அதற்கென்ன கிருஷ்ணா என்று சொல்லி மலைகளின் அருகில் சென்றான் கர்ணன். காலை முதல் மாலை வரை ஓய்வின்றிக் கொடுத்தே கால்வாசிதான் கொடுக்க முடிந்திருக்கிறது. இவன் எப்படி சில நிமிடங்களில் தரப்போகிறான் என அனைவரும் நம்பிக்கையின்றி பார்த்துக்கொண்டிருக்க நேரம் நகர்கிறது. இன்னும் சூரியாஸ்தனமத்துக்கு ஒரே ஒரு நிமிடம்தான் மீதியிருக்கிது. அந்த வழியாய் வந்த வழிபோக்கனை கர்ணன் கைதட்டி அழைத்தான். இந்தா இந்த இரண்டு மலைகளையும் நீயே வைத்துக் கொள் என்று கொடுத்து விட்டுத் தன் அரண்மனை நோக்கிச் சென்றான். சூரியன் மறைந்தது. கிருஷ்ணர் பாண்டவர்களைப் பார்த்துப் புன்னகைத்தார்.

கிருஷ்ணன் பாண்டவர்களிடம் இந்த மலையை முழுவதும் தானமாக தரவேண்டும் என்றதும் இது நம்முடையது என்ற எண்ணமும் தங்களால் அவைகளை முழுமையாக தரமுடியும் என்ற மமதையில் அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து மலையை வெட்டி எடுத்து கொடுத்தார்கள். ஆனால் கர்ணனனிடம் மமதை இல்லை. மேலும் தானம் செய்ய வேண்டும் எண்ணம் மட்டுமே இருந்தது அதை எப்படி செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லை என்றார்.

பாதாள புவனேஷ்வர்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்று இருந்தபோது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்கு காவல் காக்க ஒருவர் வேண்டும் என்று நினைத்த அவர் குளிப்பதற்காக வைத்துயிருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது அந்த உருவத்தை தனது பிள்ளையாக பாவித்த பார்வதிதேவி எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்ககூடாது என்று பிள்ளையாருக்கு சொல்லி விட்டு நீராட சென்றுவிட்டார். அந்த சமயம் சிவன் பார்வதியை பார்க்க அங்கு வந்தார். உள்ளே செல்ல முயற்ச்சிக்கும் போது சிவனை விநாயகர் தடுத்தார். அதனால் சினம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை தனது சூலாயுதத்தால் வெட்டி வீழ்த்தினார். குளித்து முடித்து விட்டு வந்த பார்வதி நடந்து முடிந்தவற்றைக்கண்டு மனம் வருந்தினாள். இதைப்பார்த்த சிவபெருமான் பிரம்மனை அழைத்து விநாயகர் தலை இல்லாத உடம்பில் பொருத்துவதற்காக தலையை கொண்டு வரச்சொன்னார். அவர் வெளியில் செல்லும்போது எதிரே வந்த ஒரு யானையின் தலையை வெட்டிக்கொண்டு வந்து விநாயகரின் உடலில் பொருத்தினார். சிவபெருமான் விநாயகர் உடல் மேல் வைத்த யானை தலையை எட்டு இதழ்தாமரை மூலம் தண்ணீர் தெளித்து உயிர்பெறச்செய்தார். வெட்டப்பட்ட விநாயகரின் தலை இன்றும் இந்த குகையில் அப்படியே இருக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள குமாஊன் என்ற இடத்தில் உயர்ந்த மலை சுற்றிலும் பாய்ந்தோடி செல்லும் நதி அடர்ந்த மரங்கள் நிறைந்த சோலையில் பாதாள புவனேஷ்வர் கோவில் அமைந்துள்ளது. பாதாள புவனேஷ்வர் அருள்புரியும் இடம் சுண்ணாம்பு குகை ஆகும். இந்த குகை 100 அடி ஆழமும் 160 அடிநீளமும் கொண்டது. பாதாள புவனேஸ்வர் ஆலயத்தில் இயற்கையாக அமைந்துள்ள எட்டு இதழ்களுடன் பாரி ஜாதப்பூ மேலே இருக்கிறது. அதிலிருந்து நீர் சொட்டுகிறது. அந்த நீர் துண்டிக்கப்பட்ட வினாயகர் தலை மேல் விழுகிறது. இந்த குகைகோயில் இந்தியதொல்பொருள் ஆய்வுமையத்தால் பாதுகாக்கப்படுகிறது. பாதாள புவனேஸ்வர் கடல் மட்டத்திலிருந்து 1350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. குறுகலான குகையின் வாயில் வழியாக ஒவ்வொருவராக தவழ்ந்து பக்கவாட்டில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு சுமார் 80 படிகள் இறங்கவேண்டும். அனைவரும் ஆக்சிஜனை வைத்துக்கொண்டு தான் குகைக்குள் சென்று பார்க்கமுடியும். பண்டாரிகள் எனப்படும் குருமார்கள் இங்கே இன்றுவரை பூஜை செய்கிறார்கள். இந்தக்குகையில் சிவபெருமானுடன் 33 கோடி தேவர்களும் வீற்றியிருந்து அருள்பாலிக்கிறார்.

திரேதா யுகத்தில் ரித்தூபர்ணன் என்ற மன்னன் முதலில் பாதாள புவனேஸ்வர் குகைக்கோயிலை கண்டுபிடித்து வழிபட்டார். அப்போது நாகர்களின் ராஜாவான ஆதிசேஷனை அவர் சந்தித்தார் ஆதிசேஷன் ரிதுபர்ணனை குகையை சுற்றி அழைத்துச்சென்றார். அங்கு ரிதுபர்ணன் வெவ்வேறு கடவுள்களையும் பிரமிக்கவைக்கும் காட்சியைக் கண்டார். சிவபெருமானையும் தரிசித்தார். அதன் பின்னர் துவாபாரயுகத்தின் போது பாண்டவர்கள் சிவபெருமானை இங்கு பிராத்தனை செய்தார்கள். கலியுகத்தில் வாழ்ந்த ஆதிசங்கரர் இங்கு வந்து லிங்கத்திற்கு செப்பிலான காப்பு வைத்து பூஜை செய்தார். இந்தகுகைக்கு நான்கு கதவுகள் இருந்ததாகவும் அதில் இரண்டு கதவுகள் சென்ற யுகத்தில் மூடப்பட்டு விட்டதாகவும் கந்த புராணத்தில் குறிப்பு உள்ளது. படிகளின் நடுவே நரசிம்மனின் உருவம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. கிழே இறங்கியவுடன் முதலில் இருப்பவர் ஆதிஷேசன். பூமியை தாங்கி பிடித்திருப்பது போன்ற காட்சி கொடுக்கிறார். அதைதாண்டி ஒரு யாககுண்டம் உள்ளது. இங்கு தான் ஜனமேஜயன் தன் தந்தை பரிசித்தன் மரணத்துக்கு பழி வாங்குவதற்க்காக உல்லாங்க முனிவரின் கூற்றுப்படி சர்ப்பயாகம் செய்தான். காலபைரவர் நீண்ட நாக்கை நீட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கின்றது.

இந்த குகையில் இருந்து பிரியும் ஒரு கிளைகுகை கைலாயமலையை சென்று அடைகின்றது என்று புராணங்கள் கூறுகின்றது. அதன் முன்பாக சிவன் பாதாள சண்டியுடன் சிம்மத்தின் மேல் மண்டை ஒட்டுடன் காட்சி தருகிறார். சிவன் தன் சடா முடியை அவிழ்த்து விட்டது போல் குகைக்குள் சடாமுடியை போல் மலையின் ஒரு பகுதி தொங்குகிறது. அதிலிருந்து தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. கீழே பைரவர் முன்னால் முப்பது முக்கோடி தேவர்கள் வணங்கிக்கொண்டு இருக்கிறார்கள். மேலே அன்னப்பட்சி தலையை திருப்பிக்கொண்டு இருக்கும் காட்சி. கருவறையில் இயற்கையின் மூன்று சக்திகளான படைத்தல், காத்தல், அழித்தலை குறிக்கும் வண்ணம் மூன்று லிங்கங்கள் ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவையாகும். இதன் மேல் செப்பு கவசம் சாத்தப்பட்டுயிருந்தது. இந்த லிங்கங்கள் மேல் நீர் கொட்டிக்கொண்டே இருக்கின்றது. அடுத்து கழுத்தில் பாம்புயை சுற்றியப்படி ஜடாமுடியுடன் சிவன். சிவன் பார்வதியுடன் சொக்கட்டான் ஆடுவதுபோல் காட்சி கொடுக்கின்றார். மேலே அன்னாந்து பார்த்தால் ஆயிரம் கால்களுடன் ஜராவதம். குகையின் ஒரு பகுதியில் கலியுகத்தை குறிக்கும் சிவலிங்கம் உள்ளது. இதன் மேலிருக்கும் கூம்பு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அது லிங்கத்தின் மேலிருக்கும் மலையை எப்பொழுது தொடுகிறதோ அப்பொழுது கலியுகம் முடியும்.

தக்ஷகன் பாம்பு

பளிங்குத் தரைகள், கண்கவர் சிற்பங்கள், நவரத்தினங்கள் இழைத்த தூண்கள், சுவரெல்லாம் சித்திர வேலைப்பாடுகள், விருந்தினர் மாளிகை, கடை வீதிகள், யாக சாலைகள் என அற்புதமாக இந்திரப்பிரஸ்தத்தை தேவலோகமாக மாற்றியிருந்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணனின் அருளாசியுடன் பிரமாண்டமான ராஜசூய யாகத்துக்கும் ஏற்பாடுகள் செய்த பாண்டவர்கள் மன்னர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர். சகோதரர்களான துரியோதனாதிகளுக்கும் அவனைச் சார்ந்த தாயாதியருக்கும் சிறப்பு அழைப்பு விடுத்திருந்தான் யுதிஷ்டிரன். இத்தனைச் செல்வமும் பாண்டவர்களுக்கு எப்படி வந்தது அதனை எப்படி அழிப்பது என சிந்தித்தபடியே பரிவாரத்துடன் அங்கு வந்தான் துரியோதனன். அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சிறப்பு மாளிகையில் தங்கினான். ஒருநாள் காலையில் மயன் உருவாக்கியிருந்த மாளிகையைக் காணப் புறப்பட்டான் துரியோதனன். அதன் சிறப்பு துரியோதனனை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாளிகையின் ஓரிடத்தில் தண்ணீர் எனக் கருதி மெதுவாகக் காலை வைத்தான். ஆனால் அது வெறும் தரையாக இருந்தது. மற்றோர் இடத்திலோ தரையெனக் கருதி அலட்சியமாகக் காலை வைக்க அது தண்ணீர் நிறைந்த தடாகமாக இருந்தது. இதைச் சற்றும் எதிர்பாராததால் தவறி விழுந்தான் துரியோதனன். எனினும் ஒருவழியாகச் சமாளித்து எழுந்தான். அப்போது உப்பரிகையில் இருந்து சிரிப்பொலி கேட்டது. உயரே நோக்கினான். அங்கே பாண்டவர்களின் மனைவி திரௌபதி நின்றுகொண்டிருந்தாள். அவன் விழுந்ததைப் பார்த்து அவள் சிரித்தாள். சிரிப்பது தவறென உணர்ந்து சட்டென சிரிப்பை அடக்கிக் கொண்டாள். துரியோதனனோ அதை பெரும் அவமானமாக எடுத்துக் கொண்டான். பாஞ்சாலியை பதிலுக்குப் பதில் அன்றே அவமானப்படுத்த நினைத்தான்.

விழாவுக்கு வந்த உறவினர்களுக்குச் சிறப்பு விருந்து ஏற்பாடாகி இருந்தது. பாண்டவர்களும் திரௌபதியும் எல்லோரையும் பந்தியில் உபசரித்து உணவு பரிமாறினாள். துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி முதலானோர் வரிசையாக அமர்ந்திருந்தனர். திரௌபதி பரிமாறிக் கொண்டே துரியோதனன் இலைக்கு அருகில் வந்தாள். அவளை அவமானப்படுத்த எண்ணிய துரியோதனன் ஐவரின் பத்தினியே இன்று யாருடைய முறை என்று கேட்டான். திரௌபதிக்குத் தூக்கி வாரிப்போட்டது. நாடி நரம்புகளெல்லாம் தளர்ந்தன. அவளால் அந்தக் கேள்வியை ஏற்க முடியவில்லை. செய்வதறியாது பரிமாறுவதை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினாள். கண் கலங்கினாள். அதேநேரம் அங்கு தோன்றினார் கிருஷ்ணர். கலங்காதே திரௌபதி நடந்ததை நானும் கவனித்தேன். எல்லோர் முன்னிலையிலும் உன்னை அவமானப்படுத்தி அழவைக்க நினைத்திருக்கிறான் துரியோதனன் அவனுக்கு பாடம் கற்பிக்கலாம். நான் சொல்வது போல் செய். நீ மீண்டும் உணவு பரிமாறப் போ துரியோதனன் மீண்டும் உன்னிடம் அதே கேள்வியைக் கேட்டு ஏன் பதில் கூறவில்லை என்று கேட்பான். உடனே நீ தக்ஷகன் முறை என்று சொல் அதன் பிறகு துரியோதனன் அந்த இடத்திலேயே இருக்கமாட்டான் என்றார் கிருஷ்ணர்.

கிருஷ்ணனின் வார்த்தையைத் தட்டமுடியாமல் விருந்து மண்டபத்துக்குச் சென்றாள் திரௌபதி துரியோதனன் இலை அருகில் அவள் வந்ததும் விஷமத்துடன் அதே கேள்வியை மீண்டும் கேட்டான். எனக்குப் பதில் கூறவில்லையே இன்று யாருடைய முறை? ஸ்ரீகிருஷ்ணன் சொல்லியனுப்பியது போலவே இன்று தக்ஷகன் முறை என்று பளிச்சென பதில் தந்தாள் திரௌபதி. அதைக் கேட்டு விஷ நாகம் தீண்டியது போன்று அதிர்ந்தான் துரியோதனன். சட்டென எழுந்து அங்கிருந்து வெளியேறினான். திரௌபதிக்கு ஆச்சரியம். கண்ணனிடம் ஓடோடி வந்தாள். கிருஷ்ணா இதென்ன மாயம். யாரந்த தக்ஷகன். அவன் பெயரைக் கேட்டதும் துரியோதனன் ஏன் இப்படிப் பேயறைந்தாற்போல் பதறி பயந்து ஓடுகிறான் என்று கேட்டாள். கிருஷ்ணன் அதற்கான காரணத்தையும் கதையையும் சொன்னான்.

பானுமதி துரியோதனனின் மனைவி மகா பதிவிரதை. கணவனையே தெய்வமாகக் கருதும் உத்தமி. துரியோதனனோ பாண்டவர்களின் ராஜ்ஜியத்தை அடைவதில் குறியாக இருந்தான். மனைவியிடம் அன்புடன் பேசக்கூட அவனுக்கு நேரம் இல்லை. திருமணமாகி மாதங்கள் பல கடந்தும் மண வாழ்க்கையின் பயனை அடையும் பாக்கியம் பானுமதிக்குக் கிட்டவில்லை. அவனது அன்புக்காக ஏங்கினாள். தெய்வங்களை வேண்டினாள். அவள் தவம் பலிக்கும் வேளை வந்தது. ஒருமுறை முனிவர் ஒருவர் பானுமதியின் துயர் நீக்கும் வழி ஒன்றைக் கூறினார். மகிமை மிக்க மூலிகை வேர் ஒன்றை மந்திரித்து அவளிடம் கொடுத்து அதைப் பாலில் இட்டு கணவனுக்குக் கொடுக்கும்படி கூறினார் முனிவர். பானுமதியும் அதன்படியே பால் காய்ச்சி அதில் இனிப்பும் இன்சுவையும் சேர்த்து முனிவர் தந்த வேரையும் அதில் இட்டு கணவனின் வருகைக்காகக் காத்திருந்தாள். அன்று பௌர்ணமி. இரவின் இரண்டாம் சாமத்தில் அந்தப்புரம் வந்தான் துரியோதனன். அப்போது அவன் மது அருந்தியிருந்தான் பால் அருந்தும் மனநிலையில் அவன் இல்லை. ஆசையுடன் மனைவி நீட்டிய பால் கிண்ணத்தைப் புறங்கையால் ஒதுக்கினான். கை தவறிய கிண்ணத்தில் இருந்த பால் தரையில் சிந்தியது. அப்போது அங்கே சென்று கொண்டிருந்த தக்ஷகன் எனும் நாகம் அந்தப் பாலைச் சுவைத்தது.

தக்ஷகன் சர்ப்பங்களின் ராஜன். பாலைப் பருகியதும் அதிலிருந்த வேரின் வசிய சக்தியால் அவனுக்குப் பானுமதி மீது ஆசையும் நேசமும் பிறந்தது. உடனே அவன் மனித உருவில் அவள் முன் தோன்றித் தன் ஆவலை வெளியிட்டான். தன்னை வருந்தி அழைத்தது அவள்தான் என்றும் வாதாடினான். பதிவிரதையான பானுமதி பதறினாள் துடிதுடித்தாள். துரியோதனனுக்குத் தன் மனைவியின் உயர்ந்த கற்பு நெறி பற்றி நன்கு தெரியும். தான் அவளது அன்பையும் பிரேமையையும் புரிந்து நடக்காததால் விளைந்த விபரீதத்தை எண்ணித் தவித்தான். தக்ஷகன் கால்களில் விழுந்து தன் மனைவியின் கற்பைக் காக்க வேண்டினான். தக்ஷகன் பாம்பு பண்பு மிக்கவன். பாலில் கலந்திருந்த வேரின் சக்தியால் உந்தப் பெற்றதால்தான் அவன் உள்ளம் பானுமதியை விரும்பியது. எனினும் அவளுக்குக் களங்கம் விளைவிக்க அவன் விரும்பவில்லை. அதே நேரம் அவளின் வசியம் செய்த பாலை குடித்ததனால் பானுமதியின் அன்பை இழக்கவும் தயாராக இல்லை எனவே ஒரு நிபந்தனை விதித்தான். அந்தப்புரத்தில் அமைந்துள்ள அரச விருட்சத்தின் அடியில் உள்ள புற்றுக்கு பௌர்ணமி தோறும் பானுமதியைக் காண வருவேன். பானுமதி புற்றில் பால் ஊற்றி என்னை உபசரித்து வணங்கி அனுப்ப வேண்டும். அப்போது அவள் கற்புக்குக் களங்கம் இல்லை என்பதற்குச் சாட்சியாக அவளின் கணவனான துரியோதனனும் என்னை வணங்க வேண்டும் என்று கூறிவிட்டு மறைந்தான் தக்ஷகன். அன்று முதல் இன்றுவரை பௌர்ணமி தோறும் பாம்புக்குப் பாலூற்றி வருகிறாள் பானுமதி. துரியோதனனும் பயபக்தி யோடு பங்குகொள்கிறான். இந்தச் சம்பவம் துரியோதனனுக்கும் பானுமதிக்கும் தக்ஷகனுக்கும் மட்டுமே தெரியும். இதனை வெளியே யாரிடமும் சொல்வதில்லை என்பது அவர்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம். இதை நீ கூறியது தான் துரியோதனனின் அதிர்ச்சிக்குக் காரணம் என்றார் கிருஷ்ணர். துரியோதனனால் தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்து ஆறுதல் கூறிய கிருஷ்ணனுக்கு நன்றி கூறினாள் திரௌபதி.

துரோணாச்சார்யாரிடம் யாசகம் கேட்ட கிருஷ்ணர்

துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்று அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது. அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும். இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ணர் ஒருவர் தான். பாரதப்போரில் துரோணர் கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை அழிக்க வேண்டும். அவர் குரு தட்சணை என்ற தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது. தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது.

அதன்படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார். சுவாமி என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது. ஆனால் மாங்கல்யம் வாங்கக் கூட என்னிடம் பணம் இல்லை. நீங்கள்தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும். உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர் முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல் மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து ஐயா பெரியவரே இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து. இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை நடத்தி விடுங்கள் என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார். வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார். துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக்கொண்டார். அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும் குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார். அதன்பின் தனது யுக்தியால் துரோணரை அழித்தார்.

ஸ்ரீ வாதிராஜர்

ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலையில் உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன. எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த உரிமையாளர் அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது. வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில் ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து நியாயம் கேட்டார்.

மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே நிஜமாகத்தான் சொல்கிறாயா எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர். நானே என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் சுவாமி எதற்கும் இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு நாளை காலையில் வந்து சொல்கிறேன் என்ற உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார். அன்று இரவும் அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது. வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது. பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது. ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை. எனவே மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார். சுவாமி நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன். வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது. எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல் அது ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது என்றார் உரிமையாளர். நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்றார். தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர் சுவாமி ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது சுவாமி என்று மன்றாடினார். அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர் சரி உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல். இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வதால் அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன் என்றார். நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது என்ற ஆறுதலுடன் நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர். போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய சுவாமி என் கண்கள் கூசுகின்றன. எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது. சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன. சுவாமி தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல தெய்வீகமானது என்று ஆச்சரியத்துடன் கூறினார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர் பின்னர் தியானத்தில் அமர்ந்தார். வெள்ளை குதிரையாக வந்தது ஹயக்ரீவர் என்பதைப் புரிந்து கொண்டார். அவரது தியானம் கலைந்தது. சுவாமி தெரியாமல் வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன். அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் நில உரிமையாளர். இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால் உன் பார்வை போய்விடும் என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர். எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் சுவாமி என்ற நில உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.

தனது நிலத்தில் இரவு நேரத்தில் குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர். வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக குதிரையாக தினமும் வந்தது தெய்வமே என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார் அவரது உன்னதமான பக்தியை கண்ட ஸ்ரீ வாதிராஜர் நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார். சுவாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது. ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம் இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று சொல்லி தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம் தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கினார் ஸ்ரீ வாதிராஜர். சுவாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர். அவருக்குப் பின்புறமாக ஸ்ரீ ஹயக்ரீவர் வெண்மையான குதிரை வடிவில் வந்து தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார். அந்த மீதியை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். இது அன்றாட நிகழ்ச்சி. இவ்வாறு நடக்கும் போது கோயிலில் உள்ள அர்ச்சகர்களுக்கு நைவேத்தியத்தில் தினமும் ஒரு சிறு பாகம் குறைவது பற்றி சந்தேகம் உண்டாயிற்று. வாதிராஜரே அந்த பகுதியை உட்கொள்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர் ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர். வழக்கப்படி நைவேத்தியத்தை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும் என்று நம்பினர். வழக்கம்போல் நைவேத்தியத்தை வாதிராஜர் எடுத்துக்கொண்டு சந்நிதியினுள் சென்று கதவைத் தாழிட்டார். நைவேத்தியத்தை உட்கொள்ள ஹயக்ரீவரைப் பணிந்து துதித்தார். பிறகு பாத்திரத்தைத் தாழ்த்தியபோது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வெறும் பாத்திரம் மட்டுமே உள்ளதைக் கண்டு வியந்தார். இந்தப் புனிதப் பிரசாதத்தை உட்கொள்ள தகுதியற்றுப் போனோமோ என்று கடவுளை வேண்டினார்.

வெளியே அர்ச்சகர்கள் சந்நிதியினுள் என்ன நிகழ்கிறதோ என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். வாதிராஜர் திட்டமாக ஆனால் வாடிய முகத்துடன் வெளியே கால் பதித்தது கண்டு வியப்படைந்தார்கள். பகவான் சிறிதளவு பிரசாதத்தைக்கூட என்று நமக்கு வைக்கவில்லை என்று மெல்லிய குரலில் கூறினார். சந்நிதியினுள் சென்ற அர்ச்சகர்கள் நைவேத்தியத்தைப் படைக்கும் பாத்திரம் சுத்தமாக நக்கப்பெற்று வெறுமனே உள்ளதைக் கண்டார்கள். ஆனால் பகவானின் உருவம் நீல நிறமாக மாறியிருந்தது. உடனே சுவாமியே இவ்வளவு நாட்களாக பிரசாதத்தை உண்கிறார் என்றுணர்ந்து வாதிராஜரிடம் ஓடிவந்து உண்மையை உரைத்து அவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள். வாதிராஜரோ பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன் ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே என வருந்தினார். இவரை அறியாஅல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. பொழுது புலரும் வேளையில் வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து மட்டி என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் என்று அருளிச்செய்தார். விழித்தவுடன் வாதிராஜர் மட்டி என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.

கர்ணன்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற ரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் கிருஷ்ண பகவானின் லீலையால் அறிந்தான்.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. சஹஸ்ர கவசன் என்று பெயர் பெற்ற அசுரனாக இருந்தான். தேவர்களை தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை தேவர்களால் செய்ய இயலவில்லை. எனவே அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி சஹஸ்ர கவசனை ஒழிக்க உதவுமாறு வேண்டினர். இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழிக்க நர நாராயணர்களாக அவதரித்தார்.

சஹஸ்ர கவசனை அழிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். அதன் பிறகு நாராயணர் 12 வருடங்கள் தவம் புரிய நரன் 12 வருடங்கள் போர் புரிந்தான். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள பூர்வ ஜன்ம கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்படவேண்டிய காரியத்திற்காக பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும் நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் பிறப்பெடுத்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை கிருஷ்ணர் தன் லீலைகள் மூலம் இந்திரன் மூலம் கவசத்தை நீங்கினார். கவசம் நீங்கியதால் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது இல்லையென்றால் இருவருக்கும் 12 வருடகாலம் யுத்தம் நடந்திருக்கும்.

சுருட்டப்பள்ளி கொண்டீஸ்வரர்

துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார். திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் மந்திர மலையை மத்தாகவும் கொண்டு தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவபெருமானே இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள் என மன்றாடினர். தேவர்களும் அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர்.

சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் திரட்டி சிவனிடம் தந்தார். உடனே சிவன் விஷாபகரண மூர்த்தியாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் நீலகண்டன் ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்பாள் அமுதாம்பிகை ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் சுருட்டப்பள்ளி என பெயர் கொண்ட இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணமும் ஸ்கந்த புராணமும் கூறுகிறது. சிவன் பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த இந்த அருட்காட்சியை இக்கோவிலில் பார்க்கலாம். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால் பள்ளி கொண்டீஸ்வரர் எனப்படுகிறார். இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில் ஆலகால விஷம் உண்டபின்னர் பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.

சிவன் பள்ளி கொண்ட நிலையில் அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இக்கோவிலில் உள்ளனர். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி. சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி, பதுமநிதி. என்று அனைவரும் மனைவியருடன் உள்ளனர். மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும் பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும் கற்பகவிருட்சமும் உள்ளனர். பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

பப்ருவாகனனால் வீழ்த்தப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற அர்ஜூனன்

குருக்ஷேத்திர யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்று யுதிஷ்டிரர் அரசராக முடிசூட்டிக்கொண்டார். தேசம் முழுவதையும் தன் ஆட்சிக்கு உட்படுத்த விரும்பினார். அதன் பொருட்டு அசுவமேத யாகம் செய்ய முடிவுசெய்தார். யாகம் செய்வதற்கு உரிய வழிமுறைகளை வியாசரிடம் கேட்டறிந்தார். வியாசர் வழிகாட்டியபடி சித்ரா பௌர்ணமியன்று யுதிஷ்டிரருக்கு முறைப்படியாக தீட்சை கொடுக்கப்பட்டது. பின்னர் உத்தம லட்சணங்கள் பொருந்திய குதிரையை தேசம் முழுவதும் சுற்றிவர அனுப்பினார் யுதிஷ்டிரர். குதிரையை எதிர்ப்பவரை வெற்றி கொள்ள அர்ஜுனனை அனுப்பி வைத்தார். அர்ஜுனனும் தெய்விக அஸ்திரங்கள் வில் எடுக்கக் குறையாத அம்பறாத் தூளிகள் ஆகியவற்றுடன் புறப்பட்டான். சென்ற நாடுகளில் எல்லாம் யாகக் குதிரைக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அனைத்து நாட்டு மன்னர்களும் யாகக் குதிரையை வணங்கி மாலை மரியாதை செய்தனர். வட தேசம் முழுவதும் வெற்றிகொண்ட அர்ஜுனன் தென் தமிழகத்தில் மதுரைக்கு அருகில் இருந்த மணலூருபுரம் என்ற நாட்டை அடைந்தான்.

மதுரை அப்போது கடம்ப வனமாக இருந்தது. மணலூருபுரம்தான் அப்போதைய பாண்டிய நாட்டின் தலைநகரமாக இருந்தது. அப்போது அந்த நாட்டை பப்ருவாகனன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன் அர்ஜுனனுக்கும் பாண்டிய மன்னரின் மகளான சித்ராங்கதைக்கும் பிறந்தவன். யாகக் குதிரை வந்திருக்கும் தகவல் பப்ருவாகனனுக்கு வீரர்கள் மூலம் தெரியவந்தது. பெரியப்பா நடத்தும் யாகக் குதிரைக்கும் காவலாக வந்திருக்கும் தன் தந்தைக்கும் சகல மரியாதைகளையும் செய்ய வேண்டும் என்று பப்ருவாகனன் விரும்பினான். அதன்படி மாலை மற்றும் காணிக்கைகளுடன் அர்ஜுனனிடம் சென்றான். அப்போது அர்ஜுனனின் மற்றொரு மனைவியும் நாக கன்னிகையுமான உலூபி என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். பப்ருவாகனனைப் பார்த்து மகனே நான் உன் தந்தையின் மனைவியரில் ஒருத்தி. உனக்கு நானும் ஒரு தாய்தான். நான் சொல்வதைக் கேள். உன் தந்தையுடன் போர் செய். அதுதான் அவருக்கு மகிழ்ச்சி தரும் என்றாள்.

பப்ருவாகனன் போருக்குத் தயாரானான். குதிரையைப் பழக்கப்படுத்துவதில் தேர்ச்சிபெற்ற சில வீரர்களை அழைத்து குதிரையைப் பிடித்துக் கட்டும்படி உத்தரவிட்டான். அர்ஜுனன் பப்ருவாகனன் சிறந்த வீரன்தான் என்று பாராட்டிவிட்டு யுத்தத்துக்குத் தயாரானான். போர் கடுமையாக நடைபெற்றது. அர்ஜுனன் பப்ருவாகனனின் தேரில் பறந்த கொடியை அறுத்து தேர்க் குதிரைகளையும் கொன்றான். தேரைவிட்டு கீழே இறங்கிய பப்ருவாகனன் அர்ஜுனனைக் குறிவைத்து அம்புகளை மழையெனப் பொழிந்தான். மகனிடம் கொண்டிருந்த பாசத்தின் காரணமாக அர்ஜுனன் அந்த அம்புகளைத் தடுத்தானே தவிர மகனை அதிகம் தாக்கவில்லை. பப்ருவாகனன் அக்னிப் பிழம்புடன் சீறும் பாம்பாகச் சென்று பேரழிவை உண்டாக்கும் கணைகளை அர்ஜுனனின் மார்பைக் குறிவைத்து ஏவினான். சக்தி வாய்ந்த அந்த அம்புகள் அர்ஜுனனின் மார்பைப் பிளந்து அவனைக் கீழே சாய்த்தன. எதிர்க்க அவகாசமில்லாமல் அர்ஜுனன் யுத்தக் களத்தில் மடிந்து வீழ்ந்தான். தந்தை இறந்ததைக் கண்டதும் பப்ருவாகனனின் ஆவேசமெல்லாம் போன இடம் தெரியவில்லை. தந்தையின் மரணத்துக்கு தான் காரணமாகிவிட்டோமே என்று நினைத்து மயங்கிவிழுந்தான். தகவல் ஊரெங்கும் பரவியது. அர்ஜுனனின் மனைவி சித்ராங்கதை யுத்தகளத்துக்கு வந்து அழுது அரற்றினாள். தன் கணவனின் இறப்புக்குக் காரணமான உலூபியிடம் கோபம் கொண்டாள். மயக்கம் தெளிந்து எழுந்த பப்ருவாகனனும் உலூபியைப் பார்த்து நாக கன்னிகையே நீ சொன்னதைக் கேட்டு நான் என் தந்தையையே கொன்றுவிட்டேன். இனி நான் உயிருடன் இருந்து என்ன பயன் நானும் என் தாயுடன் அக்னிப் பிரவேசம் செய்து உயிர்விடப்போகிறேன் என்று கதறினான்.

அப்போது அங்கே வந்த பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனன் இறந்ததைக் கண்டு அழுவதுபோல் நடித்தார். கிருஷ்ணர் அழுவதைப் பார்த்த உலூபி மற்றவர்கள் அர்ஜுனன் இறந்ததற்காக அழலாம். ஆனால் நீங்களே அழலாமா நீங்கள் சொன்னால் நான் அர்ஜுனனை உயிர் பெறச் செய்கிறேன் என்று கூறினாள். கிருஷ்ணரும் சரியென்று கண்களாலேயே கூறினார். உடனே உலூபி தன் மனதில் இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்ஜீவன மணியை நினைத்தாள். உடனே தன் கையில் வந்து சேர்ந்த அந்த மணியை அர்ஜுனன் உடலில்வைத்து அவனை உயிர்த்தெழச் செய்தாள். உயிர்த்தெழுந்த அர்ஜுனன் தன்னைச் சுற்றி நின்றுகொண்டிருந்த சித்ராங்கதை, பப்ருவாகனன், கண்ணன், உலூபி ஆகியோரைப் பார்த்தான். பிறகு உலூபியிடம் தன் மகனைக்கொண்டே தன்னைக் கொல்லச் செய்து பிறகு தன்னை உயிர் பிழைக்கச் செய்ததற்கான காரணத்தைக் கேட்டான். கிருஷ்ணரின் உத்தரவுப்படி உலூபி நடந்த நிகழ்ச்சியைக் கூறினாள்.

தட்சனின் மகள் வசுவின் பிள்ளைகள் எட்டுப் பேர். இவர்களில் ஏழு பேர் சாந்தனுவின் பிள்ளைகளாகப் பிறந்து கங்கையில் விடப்பட்டவர்கள். இளையவர் பீஷ்மராகப் பிறந்தார். தங்களில் ஒருவரான பீஷ்மரை அர்ஜுனன் முறைதவறி கொன்றுவிட்டான் என்று அர்ஜுனன் மேல் கோபம் கொண்டு அவன் தன் மகனாலேயே மடிய வேண்டும் என்று சபித்துவிட்டனர். இதை அறிந்த என் தந்தை அவர்களிடம் போய் மன்னிப்புக் கேட்டார். மனமிறங்கிய அவர்கள் என் தந்தையிடம் அர்ஜுனனுக்கு மணலூருபுரத்தில் ஒரு மகன் இருக்கிறான். அவன் அர்ஜுனனை போர்க்களத்தில் வீழ்த்துவான். அப்போது உன்னிடம் இருக்கும் சஞ்ஜீவன மணியால் அர்ஜுனனை உயிர்த்தெழச் செய் என்று சாபவிமோசனம் கொடுத்தனர். அதனால்தான் இப்படி நடைபெற்றது. இல்லையென்றால் பீஷ்மரைக் கொன்ற பாவத்துக்காக நீங்கள் கொடிய நரகத்துக்குச் சென்றிருப்பீர்கள் என்றாள். உலூபி சொன்னதை ஆமோதித்தார் பகவான் கிருஷ்ணர். அனைவரும் மகிழ்ச்சியுடன் பப்ருவாகனனின் அரண்மனைக்குச் சென்று உபசாரங்களை ஏற்றுக்கொண்டனர். பின்னர் தன் மனைவி சித்ராங்கதை மகன் பப்ருவாகனன் ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு அர்ஜுனன் யாகக் குதிரையுடன் அஸ்தினாபுரம் புறப்பட்டான். அஸ்வமேத யாகம் இனிதே நிறைவுபெற்றது.