ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 446

கேள்வி: ஆஞ்சநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் இராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கத்தில் கூறப்பட்டது? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல் அனைத்தும் நீயாக இருக்கிறாய். யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்களும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த இராமபிரான் மீது மால்தூதனாகிய ஆஞ்சநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

இராமாயணம் நடந்த காலத்து எச்சங்கள் இப்பொழுது ஆங்காங்கே இருப்பது உண்மை. அவற்றை மனிதன் இன்னும் முழுமையாக கண்டு பிடிக்கவில்லை. அதில் இரணமண்டலம் என்கிற மலை ஒன்று இருக்கிறது. அது குறித்து முன்பே யாங்கள் கூறியிருக்கிறோம். இருந்தாலும் இன்னும் பல்வேறு விஷயங்கள் பூமியில் புதையுண்டுதான் இருக்கின்றன. அது தொடர்பாக சில கற்பனைக் கதைகள் கூறப்படுகின்றன. எப்படிக் கூறினாலும் எம்பிரான் இராமபிரானின் பெருமைகளைக் கூறுவதால் அதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

25. பழி அஞ்சின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் பழி அஞ்சின படலம் நூலின் இருபத்தி ஐந்தாவது படலமாகும்.

நடராஜரின் கால் மாறிய நடனத்திற்கு காரணமான இராசசேகரப் பாண்டியனுக்குப் பின் அவனது மகன் குலோத்துங்கப் பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தான். அப்போது மதுரையை அடுத்த திருப்பத்தூரில் வேதியன் ஒருவன் தனது மனைவி குழந்தையுடன் வாழ்ந்து வந்தான். ஒருநாள் அவன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மதுரையில் இருக்கும் தனது மாமன் வீட்டிற்கு காட்டின் வழியாக வந்து கொண்டிருந்தான். அவ்வாறு வரும்போது வேதியனின் மனைவிக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. எனவே வேதியன் தனது மனைவி மற்றும் குழந்தையை ஒரு ஆலமரத்தின் நிழலில் விட்டுவிட்டு தான் மட்டும் தண்ணீர் தேடிச் சென்றான். இலைகள் நிறைந்த ஆலமரத்தில் முன்னொரு நாளில் யாரோ ஒரு வேடன் விட்ட அம்பு சிக்கிக் கொண்டு இருந்தது. ஆலமர இலைகளில் அம்பு சிக்கி இருந்ததை அப்பெண் கவனிக்கவில்லை. வேதியனின் மனைவி தனது குழந்தையை அருகில் விட்டுவிட்டு ஆலமரத்தின் நிழலில் அயர்வுடன் படுத்தாள். காற்றினால் அசைந்து அக்கூரிய அம்பு கீழே படுத்திருந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் ஊடுருவியது. ஊழ்வினையால் வேதியனின் மனைவி மாண்டாள். அப்பொழுது ஆலமரத்தின் மற்றொரு புறத்தில் வேடன் ஒருவன் இளைபாறிக் கொண்டிருந்தான். அவ்வேடன் மரணமடைந்திருந்த வேதியனின் மனைவியைக் கவனிக்கவில்லை. தண்ணீர் தேடிச் சென்ற வேதியன் தண்ணீருடன் ஆலமரத்தடிக்கு திரும்பினான். அங்கே அவனுடைய மனைவி அம்பால் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்ததையும் அவனுடைய குழந்தை அருகில் விளையாடிக் கொண்டிருந்ததையும் கண்டான்.

வேதியன் மரத்தைச் சுற்றிப் பார்த்தபோது இளைப்பாறிய வேடனைக் கண்டான். அவ்வேடன்தான் தன்னுடைய மனைவியைக் கொன்றதாகக் கருதி அவனை அரசனிடம் முறையிட அழைத்தான். அவ்வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். ஆனால் வேதியனோ வேடனின் அம்பால்தான் தன்மனைவி இறந்தாகக் கருதி அவனை வலுக்கட்டாயமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அரண்மனையை அடைந்த வேதியன் குலோத்துங்கப் பாண்டியனிடம் நடந்தவைகளைக் கூறி தன்னுடைய மனைவியின் இறப்பிற்கு இவ்வேடனே காரணம் என்று கூறினான். குலோத்துங்கப் பாண்டியனும் வேடனிடம் விசாரித்தான். வேடனோ தனக்கும் வேதியன் மனைவியின் இறப்பிற்கும் சம்பந்தமில்லை என்று தெரிவித்தான். அரசனோ வேடனை சந்தேகப்பட்டு சிறையில் அடைத்து அவனை சித்திரவதை செய்த போதும் வேடன் வேதியனின் மனைவியைக் கொல்லவில்லை என்பதையே கூறினான். இதனை அறிந்த மன்னன் தன் நாட்டில் நடைபெற்ற ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் போய் விடுமோ என்று மிகவும் வேதனையடைந்து சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகத்தை தீர்த்தருள வேண்டினான். அப்போது இறைவன் பாண்டியா கவலை வேண்டாம். மதுரை நகரில் உள்ள வைசிய வீதியில் இன்று திருமணம் நடைபெற உள்ளது. நீ அங்கு வேதியனோடு வருவாயாக. அங்கே வேதியன் மனைவியின் இறப்பில் உள்ள சந்தேகம் தீரும் என்று திருவாக்கு அருளினார்.

இறைவனின் திருவாக்கின்படி குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் வைசிய வீதியில் நடைபெற இருந்த திருமண மண்டபத்தினை அடைந்தனர். திருமண வீட்டின் திண்ணையில்  அமர்ந்திருந்த பலருக்கு நடுவில் நிலக்கரி போல் கறுத்து பனைமரம் போல் உயர்ந்திருந்த இருவர் அரசனின் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் பேசுவதை உன்னிப்பாய் கவனித்தான் அரசன். அவர்கள் மெதுவாக உரையாடியதை குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் கவனத்துடன் கேட்டார்கள். இறைவனின் திருவருளால் அவர்கள் எமதூதர்கள் என்று இருவரும் புரிந்து கொண்டார்கள். எமதூதர்களில் ஒருவன் இங்கே மணமகனாக அமர்ந்திருப்பவனின் உயிரினை எடுத்து வர நமது தலைவர் கட்டளையிட்டுள்ளார். எவ்வாறு இவனுடைய உயிரினை எடுப்பது? என்று கேட்டான். அதற்கு மற்றவன் ஆலமரத்தில் சிக்கியிருந்த கூரிய அம்பினை காற்றால் அசைத்து கீழே படுத்திருந்த வேதியன் மனைவியின் வயிற்றினை கிழிக்கச் செய்து அவளுடைய உயிரினை எடுத்தோம் அல்லவா? அதுபோல திருமணம் முடிந்ததும் கோ தானம் செய்வதற்காக திருமண மண்டபத்திற்கு வெளியில் நிற்கும் கன்று ஈன்ற பசு நிற்கிறது. அதனை இவ்விழாவின் ஆரவாரத்தால் கோபம் மூட்டி மணமகனை முட்டச் செய்து அவனுடைய உயிரினைப் பறிப்போம் என்று கூறினான். எமதூதர்களின் பேச்சினைக் கேட்ட குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது வேதியன் அரசனிடம் இங்கு கூறியபடியே மணமகன் இறந்தால் என் மனைவியும் அவ்வாறு இறந்ததாக ஏற்றுக் கொள்வேன். ஆகையால் இங்கு நடக்கும் நிகழ்ச்சியைக் காண்போம் என்றான்.

குலோத்துங்கப் பாண்டியனும் வேதியனும் அங்கே நடப்பதை அறிய இருந்தனர். திருமண விழாவிற்காக எல்லோரும் கூடினர். அங்கே பலவித இசைக்கருவிகள் முழங்கின. இதனால் அவ்விடத்தில் பேரிரைச்சல் ஏற்பட்டது. பேரிரைச்சலால் கன்று ஈன்ற பசு கோபம் கொண்டு திருமணம் நடக்கும் இடத்திற்குள் புகுந்தது. மக்கள் எல்லோரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். பசுவானது மணமகனை கோபத்தில் முட்டியது. மணமகன் அவ்விடத்திலேயே இறந்தான். இதனைக் கண்ட வேதியன் பெரிதும் வருத்தம் கொண்டான். அரசன் அரண்மனையில் எல்லோருக்கும் நடந்தவைகளை விளக்கிக் சொல்லி வேடனை விடுதலை செய்து தன்னுடைய பிழையைப் பொறுத்துக் கொள்வாயாக என்று கூறி அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான். வேதியனுக்கு பொன்னும் பொருளும் அளித்து மறுமணம் செய்து கொள்ளச் சொன்னான். குலோத்துங்கப் பாண்டியன் திருக்கோவிலை அடைந்து எம்பெருமானே எனக்காக தாங்கள் பழி அஞ்சிய நாதராய் இருந்தீர் என்று கூறி பலவாறு போற்றி வழிபட்டான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தன் நாட்டில் நடந்த ஒரு மரணத்திற்கு நீதி கொடுக்க முடியாமல் கொடும்பழிக்கு ஆளாவோம் என்று அஞ்சிய குலோத்துங்க பாண்டியனுடைய தெளியாத மனத்தினைத் இறைவன் தெளிய வைத்தார். தர்ம வழியில் செல்லும் போது ஏதேனும் துன்பம் வந்தால் தன்னை நம்பியவர்களை இறைவன் கைவிட மாட்டார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 445

கேள்வி: இறைவன் அம்மையே என்று அழைத்த காரைக்கால் அம்மையார் வாழ்ந்த பூமியில் தற்சமயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கு என்ன பரிகாரம் செய்வது?

ஆஞ்சநேயர் வழிபாடு தொடர்ந்து ராம நாம ஜெபம் குறிப்பாக மாருதி கவசம் மாருதி காயத்ரியை பெண்கள் எப்பொழுதும் உச்சரித்துக் கொண்டே இருந்தால் இது போன்ற இடர்பாடுகள் இல்லாமல் இருக்கும். இது எல்லா காலத்திலும் எல்லா இடங்களிலும் நடந்து கொண்டு இருப்பதுதான். இறைவன் முன்னால் ஆலயத்திலேயே நடந்ததுதான். ஏன்? கிருஷ்ண பரமாத்மா வாழ்ந்த காலத்திலேயே என்ன நடந்தது என்பது பாரதம் படித்த அனைவருமே உணர்ந்ததுதான். எனவே அசுரர்கள் எக்காலத்திலும் தங்கள் கைவரிசையைக் காட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். அதற்கு எதிராக வாழ வேண்டும் என்றால் ஆன்ம பலத்தை பக்தியை தர்மத்தை புண்ணியத்தை ஒவ்வொரு மனிதனும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அசுரர்கள் சூழ்ச்சிக்கு இரையாக வேண்டியதுதான்.

24. கால் மாறி ஆடிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கால் மாறி ஆடிய படலம் நூலின் இருபத்தி நான்காதாவது படலமாகும்.

விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அவன் ஆயகலைகள் 64 இல் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான். வெள்ளி அம்பலத்தில் நடனம் புரியும் அம்பலவாணனின் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை என்று நடராஜரின் மீது கொண்ட அன்பால் பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.

இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64 இலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன். ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன். அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் எங்கள் அரசர் ஆயகலைகள் 64 யையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை உங்களுக்கு வராது. ஆகவே உனக்கு ஒரு  கலை குறைவு.  இதை நான் கூறவில்லை.  உன் மக்களும் சோழமன்னனும் கூறுகின்றனர் எனக் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான். பின் தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும் என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.

இராசசேகர பாண்டியன் பரதக் கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக் கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும் போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான். அப்போது அவன் நடராஜரை நினைத்து வெள்ளி அம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் அம்பலவாணனுக்கும் இதே போல் உடல் வலியும் கால் வலியும் சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான். அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் இறைவா தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும் ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும் என்று  பலவாறு பலமுறை வேண்டினான். நடராஜரின் விக்கிரகத்தில் தன் காலை மாற்றாமல் அப்படியே நின்றார். உடனே தன் உறையிலிருந்து கத்தியை எடுத்து இப்போது நீங்கள் காலை மாற்றி வைக்கா விட்டால் என்ற சிரத்தை அறுத்துக் கொள்வேன் என்று தன் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொள்ள முனைந்தான்.

இராசசேகர பாண்டியனின் கழுத்தில் தன் கத்தியை வைத்த அடுத்த நொடி நடராஜர் இடது காலை தூக்கியும் வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். நடராஜர் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும் என்று மனமுருக பிராத்தித்தான். அன்று முதல் இன்றைக்கும் மதுரையில் இருக்கும் வெள்ளி அம்பலத்தில் நடராஜ பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். கால்மாறி ஆடிய நடராஜரின் திருவருளால் ராஜசேகரனுக்கு குலோத்துங்கன் என்ற சத்புத்திரன் பிறந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் தன்மேல் எப்போதும் உறுதியான மனதுடன் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 444

கேள்வி: நவகிரகங்களை எத்தனை சுற்று சுற்ற வேண்டும்?

நவகிரகங்களை மனிதன் சுற்றுகிறானோ இல்லையோ நவகிரகங்கள் மனிதனை சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. நவகிரகங்களை ஏன் சுற்றவேண்டும்? என்று யாராவது சிந்தித்திருக்கிறார்களா? நவகிரகங்களை சுற்றினால் நவகிரகங்கள் நம்மை சுற்றுவதை விட்டுவிடுமா என்ன? குடம் குடமாய் பாலை கொட்டினாலும் சந்தனத்தை கொட்டினாலும் 1000 சுற்று சுற்றினாலும் கூட நவகிரகங்கள் தன் கடமையிலிருந்து ஒருபொழுதும் தவற மாட்டார்கள். பின் எதற்கு நவகிரகங்களை சுற்றவேண்டும்? பக்தி நம்பிக்கை நல்லது நடக்க வேண்டும் என்பதெல்லாம் ஒருபுறம். இன்னொரு அறிவு சார்ந்த உண்மை என்னவென்றால் பெரும்பாலும் ஆகம விதிப்படி வடகிழக்கு மூலையில்தான் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டும். சில ஆலயங்களில் மாறாக இருக்கலாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் வடகிழக்கிலே நவகிரகங்களை எப்படி வைக்கவேண்டும்? என்றால் அந்த வடகிழக்கு பகுதி ஒட்டு மொத்த ஆலயத்தின் பகுதியைவிட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். முன்னும் பின்னுமாக இல்லாமல் முறையாக நேர்கிழக்காக சுவாமி இருக்குமாறு கட்டப்பட்ட ஆலயத்திலே சற்றும் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு வடமேற்கு வடகிழக்கு தென்மேற்கு தென்கிழக்கு என்று எந்த திசையும் சிறிதளவு கூட கோணங்கள் மாறாமல் கட்டப்பட்ட ஆலயத்திலே வடகிழக்கிலே தாழ்வான பகுதியிலே அதுபோல் நவகிரகங்களை முறையாக பிரதிஷ்டை செய்து மந்திர உச்சாடனம் செய்து கலச விழா செய்தபிறகு அங்கு சென்று மனிதன் குறைந்த பட்சம் ஒன்பது அல்லது ஒன்பதின் மடங்கு என்று எத்தனை சுற்று வேண்டுமானாலும் சுற்றலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 443

கேள்வி: ஸ்ரீராம் என்பதற்கும் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று சொல்வதற்கும் உள்ள அதிர்வலைகள் வேறுபாடு என்ன?

எப்படி கூறுகிறோம் என்பதை விட என்ன சிந்தனையில் கூறுகிறோம் என்பதில்தான் கவனம் வேண்டும். தாய் அம்மா அன்னை என்று அழைத்தால் வார்த்தைகள் மாறினாலும் பொருள் ஒன்றுதான். உள்ளார்ந்த ஆத்மார்த்தமான அன்போடு அழைத்தால் அந்த தாய்க்கு திருப்தியாக இருக்கிறது. என் குழந்தை இப்படியெல்லாம் என்னை அழைக்கிறதே? என்று. அதைப்போல இறைவனை என்ன வார்த்தை வேண்டுமானாலும் (உச்சரிப்பில் பிழைகூட இருக்கலாம்) சொல்லி வணங்கலாம். உள்ளார்ந்த அன்பிலே பிழையில்லாமல் இருந்தால் போதும். அதைதான் இறைவன் எதிர்பார்க்கிறார்.

23. விருத்த குமார பாலாரன படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விருத்த குமார பாலாரன படலம் நூலின் இருபத்தி மூன்றாதாவது படலமாகும்.

விக்கிரம பாண்டியனின் ஆட்சியில் மதுரையில் விருபாக்கன் சுபவிரதை என்ற அந்தண தம்பதியினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இருவரும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் போற்றி சிவனை வழிபாடு செய்து வந்தார்கள். அவ்விருவருக்கும் குழந்தைப் பேறு நீண்ட நாட்கள் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை வேண்டி சிவனைக் குறித்துக் கடும் நோன்பு இருந்தார்கள். சொக்கநாதரின் திருவருளால் பெண் குழந்தை அவர்களுக்கு பிறந்தது. அவளுக்கு கௌரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குழந்தை கௌரி சிறுவயதிலேயே சொக்கநாதரிடமும் மீனாட்சி அம்மனிடமும் அன்பு பூண்டு இறைபக்தி மிக்கவளாய் விளங்கினாள். கௌரி தனது ஐந்தாவது வயதில் தனது தந்தையிடம் அப்பா பிறவித் துன்பங்களைத் தீர்க்கும் அறவழி எது என்று கேட்டாள். அதற்கு விருபாக்கன் பராசக்தியின் மந்திரம் வீடு பேற்றை அளிக்கும் என்று பராசக்தியின் மந்திரத்தை தனது மகளுக்கு உபதேசித்தார். கௌரியும் இடைவிடாது பராசக்தியின் மந்திரத்தை உச்சரித்து வந்தாள். அவளுக்கு மணப்பருவம் எட்டியது.

கௌரிக்கு விருபாக்கன் திருமணம் செய்ய முடிவு செய்து அவளுக்கு ஏற்ற வரனைத் தேடத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் அவர்கள் வீட்டுக்கு வைணவ சமயத்தைச் சார்ந்த இளைஞன் ஒருவன் பிச்சை கேட்டு வந்தான். அவனைப் பார்த்ததும் விருபாக்கன் இவனே தனது மகளுக்கு ஏற்ற வரன் என்று முடிவு செய்து கௌரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார் விருபாக்கன். வீடுபேற்றினை விருப்பிய கௌரி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு ஏற்ப தந்தையின் விருப்பத்திற்கு கட்டுப்பட்டாள். இதனைக் கண்ட விருபாக்கனின் மனைவியும் அவனுடைய சுற்றத்தாரும் இவன் யார்? ஊரும் பேரும் தெரியாத இவனுக்கு இப்பெண்ணை திருமணம் செய்து விட்டாரே. விதியின் வழியில் மதி செல்லும் என்பது இதுதானோ என்று எண்ணிக் கலங்கினர். பின் கௌரியை அவளது கணவனுடன் சீர்கொடுத்து அனுப்பி வைத்தனர். வைணவ இளைஞன் தன் மனைவியோடு தன் இல்லத்தை அடைந்தான். சிவநெறியைப் பின்பற்றி வாழும் கௌரியை அவளுடைய மாமனாருக்கும் மாமியாருக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவளை பெரிதும் துன்பப்படுத்தினர். ஒருநாள் கௌரியின் வீட்டார் உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக கௌரியை வீட்டிற்கு வெளியே திண்ணையில் தனியாக விட்டுவிட்டு வீட்டினைப் பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

கௌரி வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தனியாக இருந்தாள். அப்போது ஒரு சிவனடியாரையும் காணவில்லையே சிவனடியாரை பார்த்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள். அப்பொழுது சொக்கநாதர் முதிய சிவனடியாராக கௌரியின் முன் தோன்றினார். பல நாட்கள் உணவின்றி வருந்துபவர் போல் காணப்பட்டார். கௌரியும் அவரிடம் மிக்க அன்பு கொண்டு அவரை வரவேற்றாள். சிவனடியார் தான் பசியோடு வந்திருப்பதாக கௌரியிடம் தெரிவித்தார். அதனைக் கேட்ட கௌரி வீட்டைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்கள் நான் என்ன செய்வேன்? உங்களுக்கு ஒன்றும் சாப்பிட கொடுக்க முடியாமல் இருக்கிறேன் என்று கூறினாள். அதற்கு சிவனடியார் நீ உன் கையினை கதவின் பூட்டில் வை. கதவு திறந்து கொள்ளும் என்று கூறினார். அதனைக் கேட்ட கௌரி கதவின் பூட்டில் கைவைத்து கதவினைத் திறந்து உள்ளே சென்று சமைக்கத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் சமையலை முடித்து சிவனடியாரிடம் வந்து ஐயா திருவமுது செய்ய வாருங்கள் என்று கூறினாள். கௌரியின் வேண்டுகோளை ஏற்ற முதிய சினவடியாரும் கௌரி அளித்த உணவினை தேவாமிர்தம் போல் உண்டு மகிழ்ந்தார். பின் முதிய சிவனடியார் இளமையான காளைப் பருவத்தினரைப் போல் மாறி கௌரி முன் காட்சி அளித்தார். அதனைக் கண்ட கௌரி திகைத்து நின்றாள். அப்போது திருமணத்திற்கு சென்ற கௌரியின் வீட்டார் வந்தனர். எது நடந்தாலும் அது இறைவன் செயலே என்று உறுதியுடன் பிரார்த்தனை செய்தாள் கௌரி. உடனே இறைவனார் சிறுகுழந்தையாக மாறி தரையில் விரிக்கப்பட்டிருந்த விரிப்பில் அழுது கொண்டு கிடந்தார். குழந்தையின் நெற்றியில் திருநீறு பூசப்பட்டிருந்தது. வீட்டிற்குள் வந்த கௌரியின் மாமியார் இக்குழந்தை யார்? என்று கௌரியிடம் கேட்டாள். அதற்கு கௌரி தோழி தன்குழந்தையை சிறிது நேரம் பார்த்துக் கொள் என்று கூறிச் சென்றான் என இறைவனின் அருளினால் கூறினாள். இதனைக் கேட்ட கௌரியின் மாமனும் மாமியும் கோபம் கொண்டு சிவபெருமானிடம் அன்பு பூண்ட நீங்கள் இருவரும் வீட்டை விட்டுச் செல்லுங்கள் என்று கூறி வீட்டை விட்டு விரட்டி விட்டனர். வீட்டைவிட்டு குழந்தையுடன் வெளியேறிய கௌரி குழந்தையின் திருமுகத்தைப் பார்த்தவாறு சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் மனதில் வைத்து பராசக்தியின் திருமந்திரத்தை உச்சரித்தாள். உடனே குழந்தை மறைந்தது. சிவபெருமான் அவளுக்கு இடப வாகனத்தில் காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட கௌரி சிவானந்த கடலில் ஆழ்ந்தாள். சிவபெருமான் கௌரிக்கு வீடுபேற்றினை வழங்கினார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கௌரியை அவளது புகுந்த வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு துன்பத்தை கொடுத்த போதிலும் அவள் இறைவன் மீது செலுத்திய பக்தியும் அனைத்தும் நன்மைக்கே என்ற கௌரியின் எண்ணமும் வீடுபேற்றினை அடைய வேண்டும் என்ற அவளின் மன உறுதியும் நம்பிக்கையும் அவளுக்கு வீடுபேற்றை கிடைக்கச் செய்தது. அனைத்தும் இறைவன் செயல் என்ற நம்பிக்கையுடன் கடவுளை சரணடைந்தவர்களை இறைவன் கைவிட மாட்டார். என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

22. யானை எய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் யானை எய்த படலம் நூலின் இருபத்தியிரண்டாவது படலமாகும்.

அபிடேகப்பாண்டியனின் மகனான விக்கிரமபாண்டியன் பாண்டிய நாட்டினை நல்வழியில் ஆட்சி செய்து வந்தான். அவனுடைய ஆட்சியில் சைவம் செழித்தோங்கி இருந்தது. அவன் சொக்கநாதரின் சந்நிதிக்கு வடக்கே சித்தரின் திருவுருவத்தை நிறுத்தி நள்தோறும் வழிபட்டு வந்தான். இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் சொக்கநாதருக்கு அருகே எல்லாம் வல்ல சித்தரை நாம் தரிசிக்கலாம்.

விக்கிரமபாண்டியனிடம் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ அரசன் ஒருவன் நீண்ட நாள் பகைமை கொண்டிருந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை. அவனை எப்படி வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது. சமண சமயத்தை தழுவிய அவ்வரசன் விக்ரமபாண்டியனை நேரடியாக போரிட்டு வெல்ல இயலாததால் விக்கிரமபாண்டியனை சூழ்ச்சியால் வெல்ல எண்ணினான். அதன்படி சக்கியம் கோவர்த்தனம் கிரௌஞ்சம் திரிகூடம் அஞ்சனம் விந்தியம் ஹேமகூடம் காஞ்சி குஞ்சரம் என்ற எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தன்னை வந்து சந்திக்குமாறு தனித்தனியாக கடிதம் அனுப்பினார். அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர். பாண்டிய நாட்டை வெற்றி பெற விரும்புகிறேன். விக்கிரம பாண்டியனைப் போரில் வெல்லமுடியாது. அபிசார வேள்வியை (மரண வேள்வி) செய்து விக்கிரமனை வீழ்த்த வேண்டும். அவனை அழித்தால் உங்களுக்கு பாதி இராஜ்ஜியம் தருகிறேன் எனவும் ஆசை காட்டினான். சோழனின் உடன்படிக்கு ஒத்துக் கொண்ட சமணர்கள் பாலியாற்றங்கரையில் பெரிய யாக குண்டத்தை அமைத்தனர். அதில் எட்டி உள்ளிட்ட தீய மரத்தின் விறகுகளையும் நச்சு உயிரிகளின் உடம்பு மிளகுப்பொடி கலந்த எண்ணெயையும் ஊற்றி அபிசார வேள்வியைத் தொடங்கினர். அவ்வேள்வித் தீயினால் உண்டான நச்சானது அருகில் இருந்த காடுகள் சோலைகள் நந்தவனம் ஆகியவற்றை கருக்கி விட்டன.

சமணர்களின் அபிசார வேள்வித் தீயிலிருந்து ஒரு கொடிய யானை ஒன்று தோன்றியது. சமணர்கள் கொடிய யானையிடம் நீ விரைந்து சென்று விக்கிரம பாண்டியனையும் மதுரையையும் அழித்து விட்டு வா என்று கட்டளையிட்டனர். யானையின் உடலானது பெருத்தும் அதனுடைய கால்கள் மண்ணில் பதிந்தும் உடலானது விண்ணைத் தொட்டும் இருந்தது. அது தன்னுடைய பெரிய காதுகளினால் சூறாவளியை உருவாக்கியும் கண்களில் நெருப்புப் பொறி சிந்தவும் உலகத்தினை உலுக்கும் இடிபோல் பிளிறிக் கொண்டு மதுரையை நோக்கிப் புறப்பட்டது. சமணர்களும் சோழனுடைய படைகளும் யானையைப் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் மதுரையின் எல்லையை அடைந்த கொடிய யானை அங்கிருந்த காடுகள் வயல் வெளிகள் உயிரினங்கள் உள்ளிட்ட கண்ணில் பட்டவற்றை எல்லாம் அடித்து நாசமாக்கியது. யானையின் செயலை மதுரை மக்கள் விக்கிர பாண்டியனுக்குத் தெரிவித்தனர். கொடிய யானையின் செயல்களை அறிந்த விக்கிரம பாண்டியன் சொக்கநாதரைத் தவிர்த்து இவ்வுலகத்தில் இருந்து நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்கள். ஆதலால் வாருங்கள் நாம் அனைவரும் சென்று அவரை வழிபாடு செய்வோம் என்று கூறி மதுரை மக்களுடன் சொக்கநாதரை தரிசிக்கச் சென்றான்.

சொக்கநாதரின் சந்நிதியை அடைந்த விக்கிரபாண்டியன் கொடிய யானை மதுரையின் எல்லையில் நின்று கண்ணில் பட்டவற்றை நாசம் செய்தவாறே மதுரையை நோக்கி வருகிறது. இறைவா எங்களை இத்துன்பத்தில் இருந்து காப்பாற்றுங்கள் என்று மனமுருகி வழிபட்டான். அப்போது வானத்தில் இருந்து பாண்டியனே கவலைப்பட வேண்டாம். யாம் வேடுவர் வேடம் பூண்டு வில் ஏந்திய சேவகனாய் மதுரையை அழிக்க வந்த கொடிய யானையை அழிப்போம். நீ அதற்கு முன்பு மதுரைக்கு கிழக்கே ஓர் அட்டாலை மண்டபத்தை உண்டாக்கு என்ற திருவாக்கு கேட்டது. இறைவனின் திருவாக்கினைக் கேட்ட விக்கிரமபாண்டியன் மனதில் மகிழ்ச்சி கொண்டு மதுரையின் கீழ்திசை நோக்கி ஓடினான். கற்களையும் சாந்தினையும் கொண்டு பதினாறு கால் தூண்களுடன் கூடிய பெரிய அட்டாலை மண்டபத்தை உண்டாக்கினான். அதன் மேல் இரத்தினத்தினால் இழைத்த தங்க பீடத்தை நிறுவினான். பீடத்தின் மேல் சொக்கநாதர் சிவப்பு ஆடையைக் கட்டிக் கொண்டு தலையில் மயில் தோகை அணிந்து அம்புக்கூட்டினை முகிலே கட்டி பச்சை நிற மேனியராய் தோன்றினார். சிறிது நேரத்தில் கொடிய யானையானது அவ்விடத்திற்கு வந்தது. தமது வில்லை எடுத்து நாணினைப் பூட்டி வளைத்தார். பின் வில்லில் நரசிங்கக் கணையை வைத்து நாணினை இழுத்து விட்டார். அக்கணையானது யானையின் மத்தகத்தைக் கிழித்தது. கொடிய யானை நரசிங்க கணையின் தாக்குதலை சமாளிக்க இயலாமல் நிலத்தில் வீழ்ந்து மடிந்தது. யானை மடிந்ததைக் கண்ட சமணர்கள் மிகுந்த மனவருத்தம் கொண்டனர்.

இறைவனின் திருக்கையால் யானை மடிந்ததைக் கண்ட விக்கிரமபாண்டியன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். யானையின் பின்னால் வந்த சமணர்களையும் சோழனின் படைகளையும் பாண்டியனின் படைகள் அடித்து துரத்தினர். வேடுவ வடிவம் கொண்டு வந்த சொக்கநாதரின் திருவடிகளில் வீழ்ந்த விக்கிரமபாண்டியன் எங்களைக் காத்த இறைவரே தாங்கள் இத்திருக்கோலத்திலேயே இங்கேயே தங்கி இருக்க வேண்டும் என்று விண்ணபித்தான். இறைவனாரும் அவனுடைய வேண்டுகோளை ஏற்று அருளினார். மேலும் புத்திரப்பேறு கிடைக்கவும் அருளினார். சொக்கநாதரின் அருளால் விக்கிரமபாண்டியன் இராஜசேகரன் என்னும் புதல்வனைப் பெற்று பாண்டிய நாட்டில் நல்லாட்சி நடத்தினான். மதுரையை அழிக்க வந்த யானையானது சொக்கநாதரின் பாணம் பட்டு தரையில் வீழ்ந்த இடத்தில் மலையாக மாறியது. இதுவே யானை மலை ஆகும். இது பார்ப்பதற்கு யானை படுத்திருப்பதைப் போன்று தோற்றமளிக்கும். இது மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பார்த்தாலே தெரியும். சொக்கநாநர் யானையின் மீது விடுத்த நரசிங்கக்கணையானது உக்கிர நரசிங்க மூர்த்தியாக மலையின் அடிவாரத்தில் தோன்றினார். இந்த நரசிங்கமூர்த்தியை உரோமச முனிவர் வழிபாடு நடத்தி தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார். பிரகலாதனும் இவ்விடத்திற்கு வந்து தவம் செய்து சித்தி பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

மதுரையில் இருக்கும் நரசிங்க மூர்த்தி கோயிலை உலக நன்மைக்காக கொடுத்ததும் யானை மலை உருவாகிய விதமும் வஞ்சகர்களின் சூழ்ச்சி இறுதியில் இறைவனின் கருணையால் வீழ்த்தப்படும் என்பதேயும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 442

கேள்வி: அரச மரத்திற்கு நீர் ஊற்றி தீபமேற்றி வணங்கலாமா?

அரச மரத்திற்கு மட்டுமல்ல எல்லா மரங்களுக்கும் நீர் ஊற்றலாம். தீபம் ஏற்றுகிறேன் என்று மரத்தை சுட்டெரிக்க வேண்டாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 441

கேள்வி: நாங்கள் எங்கள் பெற்றோருக்கு செய்யும் கடமையைப் போல் எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு செய்வதில்லையே? இதற்கு காரணம் எங்கள் வளர்ப்பின் குறையா? அல்லது எங்கள் பாவமா?

இறைவனின் கருணையால் யாங்கள் கூறவருவது யாதென்றால் ஒரு மனிதனுக்கு நடக்கக் கூடிய துன்பமோ அல்லது அவன் பார்வையில் இன்பமோ அனைத்தும் கர்ம வினைகளின் எதிரொலிதான். அது ஒருபுறமிருக்கட்டும். எம் வழியில் வரவேண்டிய மனிதன் மனதிலே உறுதியாக தெளிவாக ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும். நல்லதை எல்லோருக்கும் எப்பொழுதும் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் காலம் தாழ்த்தாமல் செய்ய வேண்டும். தாய் தந்தையருக்கு செய்ய வேண்டிய கடமைகளை கடுகளவும் தவறாமல் செய்ய வேண்டும். உற்றாருக்கும் உடன் பிறந்தாருக்கும் நட்பு கொண்டோருக்கும் செய்ய வேண்டும். ஆனால் இதை பிறர் பாராட்ட வேண்டும் என்று எதிர் பார்க்கக் கூடாது. பிறர் நமக்கு அதைப் போல செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அப்படி எதிர் பார்த்து செய்யும் பொழுது மலையளவு புண்ணியம் கடுகளவாக மாறிவிடுகிறது. மற்றவர்கள் செய்யவில்லையே? என ஆதங்கம் வரலாம். ஆனால் கட்டாயம் இறைவன் கைவிட மாட்டார் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டால் எதிர்பார்ப்பு குறைந்துவிடும். பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லித் தரலாம். நடந்து கொண்டும் காட்டலாம். ஆனால் அந்த பிள்ளைகள் அதனை கட்டாயம் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்தால் சமயத்தில் ஏமாற்றமாகப் போகும். பிள்ளைகள் நல்லவற்றை பின்பற்ற வேண்டும் என்ற பிரார்த்தனையை வைத்துக் கொண்டால் போதுமானது.