57. வலை வீசின படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் வலை வீசின படலம் ஐம்பத்தி ஏழாவது படலமாகும்.

ஒரு சமயம் கையாலத்தில் சிவபெருமான் உமையம்மைக்கு வேதத்தின் உட்பொருளை விவரித்துக் கொண்டிருந்தார். இறைவனாரின் பாடத்தைக் கவனிக்காமல் வினாயகரையும் முருகனையும் கொஞ்சிக் கொண்டு உமையம்மை கனவக் குறைவாக இருந்தார். இதனை அறிந்ததும் சிவபெருமான் கோபம் கொண்டு உமையே நான் சொல்லிக் கொண்டிருக்கும் வேதத்தினை தெரிந்து கொள்ள ஆர்வமின்றி கவனக்குறைவாக இருந்ததால் நீ படிப்பறிவு இல்லாத மீனவப் பெண்ணாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். இதனைக் கேட்டதும் ஐயனே தாங்கள் என்னுடைய பிழையைப் பொருந்தருளுங்கள். சாபத்திலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டினாள். இறைவனாரும் என்னுடைய பக்தனான பரதவன் என்னும் மீனவத் தலைவனின் விருப்பத்தை நிறைவேற்ற இத்திருவிளையாடலை நிகழ்த்தினோம். இறுதியில் உன்னை வந்து யாம் திருமணம் செய்து கொள்வோம். அஞ்ச வேண்டாம் என்று திருவாய் மலர்ந்தருளினார்.

இதனைப் பார்த்த முருகர் கோபம் கொண்டு உங்களது மாயையின் காரணத்தினால்தான் அன்னை கவனக்குறைவாய் இருந்தாள். இதற்கா சாபம் கொடுப்பீர்கள் என்று வெகுண்டு தந்தை கையிலிருந்த வேதப் புத்தகத்தை கிழித்தார். முருகனின் செயலைக் கண்ட சிவபெருமான் வேதப் புத்தகத்தைக் கிழித்ததினால் ஊமையாய்ப் பிறப்பாய் என்று சாபமிட்டார். முருகனும் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக் கொண்டு சாப விமோசனம் கேட்டார். எப்போது போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை எப்போது கேட்டு கண்ணீர் வடிக்கின்றாயோ அப்போது உன் சாபம் நீங்கி எம்மிடம் வருவாய் என்றார். (முருகர் சாபத்தின்படி தனபதி தருமசாலினி என்ற தம்பதியினருக்கு ஊமை மகனாய் பிறந்து போற்றுதற்குரிய சிறந்த தமிழ்ப் பாடல்களை கேட்டு கண்ணீர் வடித்து புலவர் வழக்கை தீர்த்து வைத்தார். 55ஆம் திருவிளையாடலில் இருக்கிறது.)

விநாயகர் ஓடிவந்து சாத்திரப் புத்தகங்கள் அனைத்தையும் துதிக்கையால் துக்கிக் கடலில் எறிந்து விட்டார்.  சிவன் சினமுற்று வினாயகருக்கு சாபம் கொடுக்கும் நேரம் நந்தி குறுக்கே வர நீ கடலில் மீனாய் பிறக்கக் கடவாய் என அவருக்குச் சாபமிட்டார். இதனைக் கேட்டதும் நந்திதேவர் ஐயனே உங்களையும் கையிலாயத்தையும் பிரிந்து என்னால் இருக்க இயலாது. தயவு கூர்ந்து என்னைக் காப்பாற்றி அருளுங்கள் என்றார். இறைவனார் நந்திதேவரிடம் மீனவப் பெண்ணான உமையம்மையை திருமணம் செய்ய யாம் வரும் போது உன்னுடைய சாபம் நீங்கும் என்று அருளினார்.

இறைவனாரின் சாபப்படி உமையம்மை மதுரைக்கு கீழ்த்திசையில் இருந்த பாக்கம் என்னும் மீனவ ஊரில் புன்னை மரத்துக்கு அடியில் குழந்தையாகக் கிடந்து அழுதார். அம்மையின் அழுகுரல் குழந்தைப் பாக்கியம் இல்லாத மீனவத் தலைவன் பரதவனின் காதில் விழுந்தது. மீனவத் தலைவன் அழுகுரலின் திசையில் சென்று குழந்தையைப் பார்த்ததும் இக்குழந்தை எனக்கு சொக்கநாதர் தந்த பரிசு என்று எண்ணி குழந்தையை எடுத்துக் கொண்டு தன்னுடைய மனைவியிடம் கொடுத்து வளர்த்தான். நந்திதேவரும் சுறாமீனாகப் பிறந்து கடலில் வீசி எறியப்பட்ட வேதங்களை மீட்டு இறைவனாரிடம் தந்து விட்டு கடலில் திரிந்து கொண்டிருந்தார். அம்மையும் நாளடைவில் திருமணப் பருவத்தை எட்டிய குமரிப் பெண்ணானாள். கடலில் இருந்த சுறாவானது அங்கு மீன்பிடிக்க வரும் மீனவர்களின் வலையைக் கிழித்து படகுகளைக் கவிழ்த்து தொந்தரவு செய்து வந்தது. நாளுக்கு நாள் சுறாவின் தொந்தரவு அதிகமாகவே மீனவத் தலைவன் சுறாவினை அடங்கும் வீரனுக்கு தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவதாக முரசு அறிவித்தான். தங்களுடைய உயிருக்குப் பயந்து யாரும் சுறாமீனை அடக்க முன்வரவில்லை.

இறைவனார் அழகான மீனவ இளைஞனாகத் தோன்றினார். மீனவத் தலைவன் முன் சென்று ஐயா எனது பெயர் சொக்கநாதன். என்னுடைய ஊர் மதுரையாகும். நான் வலை வீசி மீன்பிடிப்பதில் வல்லவன். நான் சுறாவினை அடக்கி தங்களுடைய மகளை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனைக் கேட்டதும் மீனவத் தலைவன் தம்பி நீங்கள் கூறுவது போல் அது ஒன்றும் சாதாரண மீன் இல்லை. பல வலைகளைக் கிழித்தும் பல படகுகளைக் கவிழ்த்தும் உள்ளது அது. ஆகையால் அதனைப் பிடிப்பது அத்தனை சுலபம் இல்லை உன்னால் இயலாது என்றார். அதற்கு சொக்கநாதர் நான் வலைவீசினால் அதில் சிக்காத உயிர்களே கிடையாது. என்னுடைய வாலையைத் தூக்கக் கூட உங்களால் முடியாது தூக்கிப் பாருங்கள் என்றார். வலையை தூக்க மீனவர்கள் முயற்சி செய்தார்கள். எவராலும் வலையை அசைக்கக் கூட முடியவில்லை. சரி என்று மீனவத்தலைவன் அனுமதி கொடுத்தார்.

இறைவனார் சுறாமீனைப் பிடிக்கச் சென்றார். இறைவனார் வலையை வீசி சுறா மீனைப் பிடித்தார். பின்னர் கரைக்கு அதனை இழுத்து வந்து மீவனத் தலைவனிடம் காண்பித்தார். மீனவத் தலைவனும் ஒப்பந்தம் செய்தபடி தன்னுடைய பெண்ணை மீனவனான இறைவனாருக்கு திருமணம் செய்வித்தார். பின்னர் மணமக்கள் பார்வதி பரமேஸ்வராக மீனவர்களுக்குக் காட்சியளித்தனர். இதனைக் கண்ட பரதவனுக்கும் அவன் மனைவிக்கும் மோட்சத்தைக் கொடுத்து கைலைக்கு அனுப்பினார் இறைவன். சுறா மீனாக இருந்த நந்திதேவரும் சுயரூபம் பெற்று கையிலையை அடைந்தார். இறைவனார் சொக்கநாதராக மாறி மீனாட்சி அம்மனுடன் மதுரையம்பதியில் இனிது வீற்றிருந்தார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

நாம் செய்யும் செயலில் கவனக் குறைவாக இருந்தால் அது துன்பத்தை விளைவிக்கும் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 480

கேள்வி: தைராய்டு மற்றும் வறட்டு இருமலுக்கு மருந்து அருள வேண்டும்:

இறைவனின் கருணையால் இதுபோல் கூறவருவது யாதென்றால் கசப்பும் துவர்ப்புமான உணவுப் பொருள்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் இரண்டு பிரச்சினைகளும் சமமாகும். அதைவிட மருந்தை ஏற்பதைவிட முறையான சுவாசப் பயிற்சியை உடற்பயிற்சியை கற்றுக் கொண்டு செய்வதும் முறையான யோகாசனங்களை சூரிய நமஸ்காரத்தை செய்வதுமாக இருந்தால் இந்த சுரப்பி மட்டுமல்லாமல் அனைத்து சுரப்பிகளுமே சீர்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 479

கேள்வி: மனோபலத்தை அதிகரிக்க எந்த ஆலயங்களில் வழிபாடு செய்வது?

பிரார்த்தனை ஆலய தரிசனம் தர்மம் ஒருபுறம். அடுத்ததாக இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது எனக்கு மனோபலம் அதிகரிக்க வேண்டும். என் மனோபலம் உறுதியாக இருக்கிறதா? என்று நான் பார்க்க வேண்டும். வெறும் சுகமான சந்தோஷமான அனுபவங்களும் நடந்து கொண்டே இருந்தால் எனக்கு மனோபலம் இருக்கிறதா? இல்லையா? என்றே தெரியாது. எனவே எனக்கு துக்கமான சோதனையான வேதனையான அனுபவங்களும் இன்னும் கூறப்போனால் ஏளனங்களும் அவமானங்களும் அதிகமாக வேண்டும் இறைவா அவை அதிகமாக வந்தாலும் நான் கோபப்படாமல் அவர்கள் மீது சினம் கொள்ளாமல் ஆத்திரம் கொண்டு கடுமையான நடவடிக்கை எடுக்காமல் பொறுமையோடும் புன்முறுவலோடும் அதனை ஏற்கக் கூடிய பக்குவத்தைக் கொடு என்று பிரார்த்தனை செய்து கொண்டே வந்தால் ஒரு மனிதன் நேர்மையான மனிதனாக இருந்தால் இறைவழியில் சத்திய வழியில் வருபவனாக இருந்தால் தர்மத்தை பின்பற்றக் கூடிய மனிதனாக இருந்தால் கட்டாயம் மேற்கூறிய துன்பங்கள் ஏளனங்கள் அவமானங்கள் அவனுக்கு மனோபலத்தை அதிகரிக்கும். இதைத் தாண்டி அவன் பஞ்சாக்ஷரத்தையோ அட்டாக்ஷரத்தையோ வேறு இஷ்ட தெய்வ நாமத்தையோ வடகிழக்கு திசைநோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து அதிகாலையில் அதிகமதிகம் உருவேற்றினால் கட்டாயம் மனோபலம் அதிகரிக்கும்.

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் ஐம்பத்தி ஆறாவது படலமாகும்.

செண்பகப் பாண்டியனுக்குப் பின் அவனுடைய வழியில் பதினாறாவது தலைமுறையாக குலேச பாண்டியன் என்பவன் தோன்றினான். அவன் தமிழின் இலக்கண இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன்னுடைய தமிழ் புலமையால் இறைவன் கொடுத்த சங்கப்பலகையில் அமரும் பாக்கியத்தைப் பெற்றான். குலேச பாண்டியனின் தமிழ் புலமையை கபிலரின் நண்பரான இடைக்காடன் அறிந்து தமிழ் பிரபந்தம் ஒன்றை இயற்றி குலேச பாண்டியனைக் காண விரைந்தார். குலேச பாண்டியனைச் சந்தித்து தாம் இயற்றிய பிரபந்தத்தை இடைக்காடன் பாடிக் காட்டினார். குலேச பாண்டியன் அப்பாடலின் சிறந்த பொருளையும் சொல் திறனையும் உணர்ந்தான். இருப்பினும் தன்னுடைய மனத்தில் உண்டான பொறாமைக் குணத்தால் இடைக்காடனின் பாடலுக்கு தலை அசைக்காமலும் முகத்தில் எந்தவித அசைவுகளை காண்பிக்காமலும் அவரை இகழ்ந்து பேசி அவருக்கு பரிசு ஒன்றும் கொடுக்காமல் அனுப்பி விட்டான். பாண்டியனின் செயலைக் கண்ட இடைக்காடன் வருத்தம் கொண்டு சொக்கநாதரை வழிபட திருக்கோவிலை அடைந்து அப்பனே தமிழை நன்கறிந்த குலேசபாண்டியன் நான் இயற்றிய பிரபந்தத்தை பாடும்போது அதனைக் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் எந்தவித அசைவின்றி இருந்து இகழ்ந்து பேசி விட்டான். பாண்டியனின் இச்செயல் தமிழின் சொல்லாகவும் பொருளாகவும் விளங்கும் உன்னையும் மீனாட்சி அம்மனையும் அவமதிப்பதாக உள்ளது. பாண்டியனின் பாடலை பிழை உள்ளதாக்கி அவனுக்கு சங்கப்பலகையில் இடம் கிடைக்காமல் செய்ய வேண்டும் என்று முறையிட்டுவிட்டு கோபத்துடன் வடக்கு நோக்கிச் சென்றார்.

சொக்கநாதர் இடைகாடனின் முறையீட்டினைக் கேட்டு பாண்டியனின் பொறாமை குணத்தை போக்க எண்ணினார். எனவே திருஆலவாய் கோவிலிலிருந்து தன்னுடைய லிங்க உருவத்தை மறைத்து திருஆலவாய் கோவிலுக்கு வடக்கே வைகை ஆற்றிற்கு தென்புறத்தில் அங்கையற்கண் அம்மையுடன் எழுந்தருளினார். சங்கப் புலவர்களும் சொக்கநாதரின் இருப்பிடத்தை அடைத்து அம்மையையும் அப்பனையும் வழிபட்டு அங்கேயே தங்கினர். மறுநாள் காலையில் கோவிலில் இறைவனையும் இறைவியையும் காணாமல் அனைவரும் திகைத்தனர். குலேச பாண்டியனிடம் இறைவன் திருக்கோவிலில் இல்லாத செய்தியை எடுத்துரைத்தனர். இறைவனைக் காணாத செய்தியைக் கேட்ட குலேசபாண்டியன் அதிர்ச்சியுற்றான். திருக்கோவிலை அடைந்து செய்வதறியாது திகைத்தான். அப்போது சிலர் பாண்டியனிடம் ஓடி வந்து அரசே வைகை ஆற்றங்கரையின் தென்கரையில் சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் எழுந்தருளி கோவில் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த சங்கப்புலவர்களும் அங்கே சென்று விட்டார்கள் என்றார்கள். அதனைக் கேட்டதும் குலேசபாண்டியன் விரைந்து சொக்கநாதர் எழுந்தருளிய இடத்திற்கு விரைந்தான். அங்கு இறைவனைக் கண்டு வழிபட்டு ஐயனே தாங்கள் இங்கு எழுந்தருளிருக்கும் காரணம் யாது? அடியேனுடைய தவறு ஏதும் உண்டா? அடியேன் நிகழ்ந்தது அறியேன் என்று விண்ணப்பம் செய்து அழுது புலம்பி வேண்டி எமது தவறைச் சுட்டிக் காட்டி என்னை தடுத்தாட் கொள்ளாவிட்டால் இங்கேயே உயிர் துறப்பேன் என வாளை உருவினான்.

சொக்கநாதர் வாளைத் தடுத்து பாண்டியா என் அன்பனான இடைக்காடருக்கு நீ செய்த அவமானம் தமிழுக்கு செய்ததாகும். தமிழுக்கு செய்த அவமானம் எனக்குச் செய்ததேயாகும். இடைக்காடனின் பாடல்களை நீ அவமதித்ததால் யாம் இங்கு எழுந்தருளியுள்ளோம். நான் எங்குமிருப்பவன். உன் கண்ணிலிருந்து லிங்கம் மறைந்ததே தவிர அதே இடத்தில் தான் நானிருக்கிறேன். இம்மதுரை நகரில் ஏராளமான சுயம்பு லிங்கங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும் ராட்சதர்களும் மனிதர்களும் வழிபட்டு நற்கதி அடைந்துள்ளனர். இவற்றில் 64 லிங்கங்கள் சிறந்தவை. அவற்றில் அட்டத்திக் பாலகர்கள் வழிபட்ட லிங்கங்கள் மேலானவை. வடகிழக்கு திசையின் அதிபதியான குபேரன் வழிபட்ட இந்த லிங்கத்துள் தற்போது எழுந்தருளியுள்ளேன். இன்று முதல் இது வடத்திருஆலவாய் என்று அழைக்கப்படும் என்று திருவாக்கு மலர்ந்தருளினார். உடனே குலேசபாண்டியன் ஐயனே என்னுடைய பிழையைப் பொறுத்தருளங்கள் எனது தவறை திருத்திக் கொள்கிறேன் என்று மனமுருகி வேண்டினான். இறைவனாரும் மனமிறங்கி மீனாட்சி அம்மனுடன் திருக்கோவிலில் எழுந்தருளினார். குலேசபாண்டியன் இடைக்காடனை அழைத்து வந்து பல உபசரணைகளும் மரியாதைகளும் செய்து அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுக் கொண்டு சிறப்புகள் பல செய்து அவருடைய பாடலை முறைப்படி கேட்டு மகிழ்ந்தான். இடைக்காடனும் அரசனை மன்னித்து ஆசி வழங்கினார். இறைவன் இடைக்காருக்காக கோயில் கொண்ட இடமே வட ஆலவாய். மன்னனும் அது முதல் அகந்தை ஒழித்து புலவர்களுக்கான தக்க மரியாதைகளை செய்து அரசாண்டான். சொக்கநாதரின் அருளால் அவனுக்கு அரிமர்த்தனன் என்ற புதல்வன் பிறந்தான். அவனுக்கு முடிசூடிவிட்டு சிவப்பேறு பெற்றான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

கல்வி கற்றவர்களையும் அறிவுடையோர்களையும் தகுதியுடையோர்களை இகழ்ந்தால் இறைவனின் அருள் கிடைக்காது என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் சங்கத்தார் கலகம் தீர்த்த படலம் ஐம்பத்தி ஐந்தாவது படலமாகும்.

அகத்தியரிடம் இலக்கணம் கற்ற நக்கீரரிடம் தமிழின் சந்தேகத்தை தீர்த்துக் கொண்ட சங்கப்புலவர்கள் பல்வேறு வகையான செந்தமிழ்ப் பாடல்களைப் பாடினர். நாளடைவில் புலவர்கள் ஒவ்வொருவரும் தாம் செய்த பாடல்களே சிறந்தவை என்று எண்ணி மனதில் பெருமிதம் கொண்டனர். இப்பெருமிதத்தால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. தங்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை நீக்க வல்லவர் சொக்கநாதர் ஒருவரே என்பதை அவர்கள் தீர்மானித்து திருக்கோவிலை அடைந்தனர். சொக்கநாதரை வணங்கி எம்பெருமானே எங்கள் பாடல்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவற்றில் சிறந்தவற்றை அடையாளம் காட்டி எங்களின் ஐயத்தை தீர்க்க வேண்டும் என்று கூறி வழிபட்டனர்.

இறைவனார் சங்கப்புலவர்களின் கலகத்தைத் தீர்க்க அருளுள்ளம் கொண்டார். அதனால் புலவரின் வடிவில் அவர்கள் முன்னர் தோன்றிய இறைவனார் புலவர்களே இம்மதுரை மாநகரில் தனபதி என்னும் வணிகர் ஒருவர் உள்ளார். அவருடைய மனைவி பெயர் தரும சாலினி என்பதாகும். இத்தம்பதியினருக்கு முருகக் கடவுளை ஒத்த மகன் ஒருவன் உள்ளான். அவனுடைய பெயர் உருத்திர சருமன் என்பதாகும். உங்களின் பாடல்களை சரியானவை எவை என்பதை அவனே அறிவிக்க வல்லவன். ஆனால் அவன் ஊமை. அவனிடம் சென்று உங்களுடைய பாடல்களைச் சொல்லுங்கள். அவனுடைய புத்திக்கு இசைந்த பாடல் எதுவோ? அதுவே சிறந்த பாடல் என்று கூறினார். அதற்கு அவர்கள் புலவரே ஊமையன் எவ்வாறு எங்களின் பாடலின் தரத்தை அறிந்து அதனை சரியானது இது என்று எப்படி அறிவிப்பான்? என்று கேட்டனர். அதற்கு புலவரான இறைவனார் அவன் உங்கள் பாடலின் சொல்லாழத்தையம் பொருளாழத்தையும் உணர்ந்து அதற்கு ஏற்ப தலையசைப்பான். தோளினை உயர்த்தி மனம் மகிழ்வான். இதனைக் கொண்டு சிறந்தவற்றை அறிந்து உங்களுக்குள் உண்டான கலகத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். (முருகனே இறைவனின் திருவிளையாடலில் உருத்திர சருமனாக பிறந்திருக்கிறார். இதனை 57 வது திருவிளையாடல் புராணத்தில் காணலாம்.)

சங்கப்புலவர்கள் அனைவரும் வணிககுலத்தைச் சார்ந்த ஊமையான உருத்திர சருமனை அவனுடைய வீட்டில் கண்டனர். பின்னர் அவனை அழைத்து வந்து தம் சங்கத்தில் இருத்தினர். அவனின் திருமுன்னர் அமர்ந்து தங்களுடைய பாடல்களைப் பாடினர். அதனைக் கேட்ட உருத்திர சருமன் சிலவற்றிற்கு தலையசைத்தான். பலவற்றிற்கு தோள்களை உலுக்கினான். நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்களைக் கேட்டதும் உடல் பூரித்து மெய்சிலிர்த்து கண்ணீர் பொழிந்து தலையசைத்து பெரும் மகிழ்ச்சி கொண்டான். ஊமைச் சிறுவனின் உணர்வினையே தராசாகக் கொண்டு புலவர்கள் அனைவரும் தமக்குள் உண்டான கலகத்தைப் போக்கி நட்புக் கொண்டனர். பின்னர் நக்கீரர் கபிலர் பரணர் ஆகியோரின் பாடல்கள் உலகில் பரவி சிறந்தோங்கியது. புலவர்கள் குற்றமற்ற நூல்களை ஆராய்ச்சி செய்து சிறப்புடன் விளங்கினர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

உடல் குறைபாடு இருந்தாலும் அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 478

கேள்வி: முக்கண்ணனின் திருவடிகளை தரிசிக்க ஆசிகள் தாருங்கள் :

இறைவனின் கருணையாலே பல்வேறு விதமான துன்பங்களையும் சோதனைகளையும் தாங்க மனதிலே வலிமையை வளர்த்துக் கொண்டால் முக்கண்ணனின் திருவடியை தரிசிக்கலாம். முக்கண்ணனும் சிக்கலாம்.

54. கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம் ஐம்பத்தி நான்காவது படலமாகும்.

இறைவனார் என்று தெரிந்தும் பாடல் பொருள் குற்றம் உடையது எனக் கூறிய நக்கீரரை இறைவனார் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். பின்னர் எல்லோருடைய வேண்டுதலின்படி நக்கீரர் மீது அருளுள்ளம் கொண்டு பொற்றாமரைக் குளத்திலிருந்து எழுந்தருளச் செய்தார். நக்கீரர் இறைவனின் மீது பேரன்பு கொண்டு தினமும் உள்ளம் உருக வழிபட்டு வந்தார். இறைவனாரும் நக்கீரருக்கு இலக்கணம் இன்னும் சரியாக விளங்கவில்லை. ஆகையால்தான் அவன் இருமுறை தனது பாட்டில் குற்றம் கண்டு பிடித்தான். சொல்லழகு பொருளழகு மிக்க பாக்களைப் பிரிக்கும் இலக்கண அறிவுவை நக்கீரருக்கு கொடுக்க வேண்டும். ஆகையால் புலமைமிக்க ஒருவரைக் கொண்டு இலக்கணம் போதிக்க வேண்டும். யாரைக் கொண்டு இலக்கணம் போதிக்கலாம்? என்று சிந்திக்கலானார். இதனைக் கண்ட மீனாட்சி அம்மன் ஐயனே தங்களுடைய சிந்தனைக்கு விடைகூற எண்ணுகிறேன். முன்னொரு காலம் உலகில் உள்ள எல்லோரும் தேவர்களும் திருமால் பிரம்மா உள்ளிட்ட அனைவரும் தங்களை வழிபட கயிலாயத்திற்கு வருகை தந்தனர். இதனால் பூமியின் வடகிழக்குப் பகுதி தாழ்ந்தது. தென்மேற்குப் பகுதி உயர்ந்தது. அப்போது அகத்திய முனிவருக்கு தாங்கள் தமிழையும் இலக்கணத்தையும் முறையாக கற்றுத் தந்து தென்மேற்கு பகுதிக்குச் செல்லச் செய்து புவியை சமன் செய்தீர்கள். தற்போது அகத்திய முனிவர் தனது மனைவியான உலோபமுத்திரையுடன் பொதிகை மலையில் உள்ளார். அகத்தியரைக் கொண்டு நக்கீரருக்கு தமிழ் இலக்கணத்தை கற்பிக்கச் செய்யலாம் என்று கூறினார்.

இறைவனாரும் உள்ளம் மகிழ்ந்து தம் உள்ளத்தில் அகத்தியரை நினைத்தருளினார். இறைவனின் உள்ளக் குறிப்பை அறிந்ததும் அகத்தியர் தன் மனைவியுடன் மதுரைக்கு விரைந்து இறைவனாரை வழிபாடு செய்தார். அகத்தியரைக் கண்ட இறைவனார் அருந்தவச் செல்வனே நக்கீரனுக்கு தமிழ் இலக்கணம் கற்பிப்பாய் என்று பணிந்தருளினார். அகத்தியர் இறைவனை வணங்கினார். அங்கு வந்து தம்மை வணங்கிய‌ நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் முழுவதையும் பிழையின்றிக் கற்பித்தார். நக்கீரனும் ஐயம் இன்றிக் கற்றார். அகத்தியரின் திறமை கண்டு மகிழ்ந்த இறைவர் அவருக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். தமிழ் இலக்கணத்தைக் குற்றமற்றுக் கற்ற நக்கீரர் இப்போது தன் குற்றங்களை உணர்ந்து மனம் நொந்தார். தன் பாடல் எவ்வளவு இலக்கண பிழை இருந்திருக்கிறது.  இறைவனது பாக்கள் எவ்வளவு உயர்ந்தது என்று இலக்கணம் கற்ற பிறகே நக்கீரருக்குப் புரிந்தது. முன்னர் தம்மால் பாடப்பட்ட நூல்களில் உள்ள குறைகளை எல்லாம் நீக்கிக் கொண்டார். இறைவனின் பெருங்கருணையை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்து நான் அறியாமையால் தங்கள் பாடலுக்குச் சொல்லிய குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன் என்று வேண்டினார். பின்னர் நக்கீரர் அகத்தியரிடம் கற்ற இலக்கணத்தை மற்றைய புலவர்களுக்கும் சொல்லிக் கொடுத்து சொக்கநாதரின் திருவடிகளில் முதிர்ந்த பக்தியோடு இருந்தார். இப்படி வழிவழியாக வந்ததே தமிழ் இலக்கணம். மீனாட்சி அம்மன் சொக்கநாதரிடம் அகத்தியருக்கு இலக்கணம் போதித்த தாங்கள் ஏன் நக்கீரருக்குப் போதிக்கவில்லை? அகத்தியரை ஆசிரியராக்கிய காரணம் என்ன? எனக்கேட்டாள். சொக்கநாதர் புன்சிரிப்புடன் அகத்தியன் நிறை குடம். தமிழை கற்றுக் கொள்ள தகுதி உள்ள பொறாமையற்ற கீழ்படிதலுள்ள சொல்வதை அப்படியே கேட்கும் மாணவர்களுக்கே என் நேரடிப் பாடங்கள் கிடைக்கும் என்றார்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

எந்த அறிவாக இருந்தாலும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஆசிரியரிடம் எதிர்த்து பேசாமல் அவர் சொல் கேட்க வேண்டும் என்பதையும் நமக்குத் தெரிந்த கல்வியை அறிவை தெரியாதவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 477

கேள்வி: எத்தனை முறை இராம நாமம் கூறினால் அனுமனின் தரிசனம் கிடைக்கும்?

இறைவனின் கருணையாலே இதுபோல் எத்தனை முறை கூறுகிறோம்? என்பதை விட முன்பே கூறியது போல எப்படிப்பட்ட மனோநிலையில் கூறுகிறோம்? என்பதே உண்மையாகும். எனவே எண்ணிக்கை பாராமல் நாள் பாராமல் எதனையும் சிந்திக்காமல் ஒருவன் தன் கடமைகளை தவறாமல் உள்ளார்ந்த அன்போடு செய்து கொண்டே உள்ளன்போடு ஸ்ரீ ராம நாமத்தை உதட்டில் மட்டுமல்லாது உள்ளத்தில் கூறிக்கொண்டே இருந்தால் கட்டாயம் ஆஞ்சனேய பகவானின் கருணை கிட்டும். மனிதர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். இறைவனை மகானை தரிசிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இறைவனை தரிசிப்பது மட்டுமே மிகப்பெரிய ஆன்மீக நிலை என்று எண்ணி விடக்கூடாது. இறைவனை தரிசித்த அசுரர்களின் கதி என்னவாயிற்று? என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனை தரிசிப்பது என்பது வேறு இறைவனிடம் அருளை பெறுவது என்பது வேறு இறைவனிடம் வரம் பெறுவது என்பது வேறு இறைவனாகவே மாற வேண்டும் என்று எண்ணி தவம் செய்வது என்பது வேறு. சாயுச்சம் சாரூபம் சாமீபம் சாலோகம் என்ற நிலைகளையெல்லாம் தாண்டிய நிலையும் இருக்கிறது என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோல் நிலையிலே நல்விதமாய் இதுபோல் ஆஞ்சனேயரின் கருணையை பெறுவதற்கு இந்த வழிபாடுகள் உதவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 476

கேள்வி: பல்வேறு பழமையான கோவில்களில் உள்ள தூண்களில் இருக்கும் ஜடாமுடி சித்தர் பற்றி:

இறைவனின் கருணையாலே ஒரு ஆலயம் கட்டப்படும் பொழுது பல நிகழ்ச்சிகள் அந்த காலகட்டத்தில் நடக்கும்பொழுது அதன் எதிரொலியாக அருள்வாக்கு சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. அந்த நாட்டை ஆளுகின்ற அரசனின் மனோநிலையை எதிர்பார்ப்பை பிரதிபலிக்கும் வண்ணமும் சிற்பங்கள் செதுக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் விட அந்த ஆலயம் கட்டப்படுவதற்கு காரணமாக இருக்கின்ற இருந்த சில மனிதர்களின் மனோபாவத்திற்கு ஏற்பவும் ஆலயத்திலே சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டன. அந்தவகையில்தான் அவ்வப்பொழுது அந்த ஆலயத்திற்கு வந்து ஆலோசனை சொன்ன சொல்லுகின்ற மனிதர்கள் அவர்கள் மனிதர்களில் உயர்ந்தவர்களாக இருக்கலாம். மகானாகவும் இருக்கலாம். சித்தர்களாகவும் இருக்கலாம். அவர்களையெல்லாம் கூட நினைவு வைத்திருந்து ஆலயத்திலே சிற்பமாக மாற்றுவது அக்காலத்தில் மரபாக இருந்திருக்கிறது. மகான்களும் மகா மனிதர்களும் அந்த சிற்பத்தில் அடங்குவார்கள்.

53. கீரனைக் கரையேற்றிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கீரனைக் கரையேற்றிய படலம் ஐம்பத்தி மூன்றாவது படலமாகும்.

இறைவனான புலவனார் நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டியபோதும் இறைவனே ஆயினும் உமது பாடல் குற்றமுடையதே என்று வாதிட்ட நக்கீரனை சொக்கநாதர் தன்னுடைய நெற்றிக்கண்ணால் எரித்தார். வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் சென்று அழுந்தினான். நக்கீரர் வெம்மை பொறுக்காமல் நீரில் மூழ்குவார். வெளியே வந்ததும் மீண்டும் எரிச்சல் தாளாமல் மறுபடி குளத்தில் மூழ்குவார். இப்படி இருந்தபடியால் தமிழ் சங்கத்துக்கு நக்கிரரால் வர இயலவில்லை. தமிழ் சங்கத்தில் நக்கீரர் இல்லாமல் ஏனைய சங்கப் புலவர்களும் செண்பகப் பாண்டியனும் துயரத்தில் ஆழ்ந்தனர். நக்கீரன் இல்லாத தமிழ் சபை அரசன் இல்லாத நாடு போன்றும் நடுநாயக மணி இல்லாத கண்டிகை போன்றும் ஞானம் இல்லாத கல்வி போன்றும் இருப்பதாக சங்கப் புலவர்கள் கருதினர். இறைவன் என்று தெரிந்தும் அவருடன் வாதிட்டதால் இந்நிகழ்வு நேர்ந்தோ? இதனை தீர்ப்பது எப்படி? என்று அவையோர் மனம் கலங்கினர். சொக்கநாதரைச் சரணடைந்தால் நக்கீரரை திரும்பப் பெறலாம் என்று எண்ணி அனைவரும் சொக்கநாதரை வழிபாடு செய்ய கோவிலுக்குச் சென்றனர்.

சொக்கநாதரை பலவாறு போற்றி வழிபாடு நடத்தினர். ஐயனே செருக்கினால் அறிவிழந்த நக்கீரனின் பிழையைப் பொறுத்தருளுக என்று வேண்டினர். சொக்கநாதர் மீனாட்சி அம்மனுடன் பொற்றாமரைக் குளத்தில் எழுந்தருளினார். முன்னர் நெருப்பு கண்ணால் பார்த்த இறைவனார் தற்போது அருட்கண்ணால் பார்க்க நீரில் அழுந்திக் கிடந்த நக்கீரன் மீண்டு எழுந்தான். பின்னர் நக்கீரர் இறைவனார் மீது கைலை பாதி காளத்தி பாதி என்ற அந்தாதி பாடலைப் பாடினார். கோபப்பிரசாதம் மற்றும் திருவெழு கூற்றிருக்கை ஆகிய பாமாலைகளை இறைவனார் மீது பாடினார். ஏனைய புலவர்களும் இறைவனார் மீது கவிதாஞ்சலி பாடினர். இவற்றை எல்லாம் செவிமடுத்த இறைவனார் நக்கீரனை கைபிடித்து பொற்றாமரைக் குளத்தில் இருந்து கரையேற்றினார். நீ முன் போலவே புலவர் கூட்டத்திற்கு நடுவிலே தங்குவாயாக என்று கூறி மறைந்தருளினார். இறைவனின் அருள் பெற்ற தருமிக்கு மேலும் பல பரிசுகளை பாண்டியனைக் கொண்டு கொடுக்கச் செய்தனர். செண்பகப் பாண்டியன் நாள்தோறும் சொக்கநாதரையும் மீனாட்சி அம்மனையும் வழிபட்டுப் பல திருப்பணிகள் செய்து சிவமே பொருள் எனத் துணிந்த உள்ளன்பினோடு இனிது வாழ்ந்து நல்லாட்சி செய்து வந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் சோதனை செய்து இருக்கும் குறைகளைப் போக்கி தகுதியை கொடுத்து இறுதியில் சாதனையாளனாக மிளிரச் செய்வார் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.